இக்கட்டுரை முதலில் இந்தியில் வெளிவந்தது. இந்தியா முழுவதும் தங்கள் மொழித் தேர்வில் கட்டுரை எழுதி வரும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்களுடன் பாரி கல்வி பணியாற்றுகிறது.

நானக்மட்டா கிராமத்தில் அது ஒரு சுட்டெரிக்கும் மதியவேளை. மனேந்தர் மஜூம்தார் தனது கடையில் பரபரப்பாக உருளைக்கிழங்கு பஜ்ஜி பொறித்துக் கொண்டிருக்கிறார். “பல ஆண்டுகளாக இது தான் என் வருவாய் ஆதாரம். இதுவே அன்றாட வயிற்றுக்கு உதவுகிறது. இல்லாவிட்டால் அன்றைய உணவே கிடையாது,” என்கிறார் உத்தராகண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டம் பெங்காலி காலனியைச் சேர்ந்த இந்த 60 வயது தெருவோர வியாபாரி.

அதிகாலை 5 மணிக்கு மனேந்தரின் வேலை தொடங்குகிறது. வீட்டு வேலைகளை முடித்தபிறகு மனேந்தர் கடைக்கு சென்று புளி, கடலை மாவு, அன்றாட மளிகைப் பொருட்களை வாங்குகிறார். “ஏழு தட்டு முட்டையின் விலை ரூ.1,200. சீரகம், கொத்தமல்லி, கடலைமாவும் வாங்குகிறேன்.” வீட்டிற்கு திரும்பியதும் மனேந்தர் சட்னி அரைப்பது உள்ளிட்ட விற்பனைக்கான உணவை தயார் செய்யத் தொடங்குகிறார். மதிய நேரத்தில் தனது கடைக்கு செல்லும் அவர் இரவு 8 மணி வரை வேலை செய்கிறார்.

மனேந்தர் எட்டு ஆண்டுகளாக இக்கடையை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனு மஜூம்தார் வீட்டு வேலைகளை செய்தபடி கடைக்கு தேவைப்படும் உதவிகளையும் செய்கிறார். “என் மனைவியின் உதவியின்றி என்னால் இக்கடையை நடத்த முடியாது,” என்றார் அவர். அவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். இரண்டு மகன்கள் குறித்து அவர் பேச விரும்பவில்லை. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்.


வரலாற்றுப்புத்தகத்தில்நிலைத்தஇடம்

மனேந்தர் தற்போது வாழும் நானக்மட்டா கிராமத்தில் உள்ள பெங்காலி காலனிக்கு வரலாற்று புத்தகங்களில் இடமுண்டு. ஆனால் அவர் குடும்பத்துடன் அங்கு தொடர்ந்து வசித்தது கிடையாது. அவருக்கு 11 வயதிருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானின் (இப்போது வங்கதேசம்)குல்னா மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்தார். கிராமத்தின் பெயர் அவருக்கு நினைவில் இல்லை. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிக்கப்படாத நேரத்தில்,1964ஆம் ஆண்டு தனி நாடு கோரி நடைபெற்ற சுதந்திர போராட்ட சம்பவத்தை அவர் நினைவுக்கூர்கிறார். அந்த ஆண்டில் போராட்டக்காரர்கள் மனேந்தரை தாக்கியதுடன், மனேந்தர் உள்ளிட்டோரது வீடுகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். 

“நான் அப்போது வீட்டிலிருந்தேன், மாலை நான்கு மணி இருக்கும். உடைகள், உடைமைகள், உணவுகளை பெற்றோர் எடுத்துக் கொண்டனர். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம்,” என்கிறார் மனேந்தர். குளிர் நிறைந்த அந்த செப்டம்பர் மாலையில், மஜூம்தார் குடும்பம் போன்று நூற்றுக்கணக்கானோர் அக்கிராமத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஐந்து தசாப்தங்களை கடந்தும் இக்காட்சியை மனேந்தர் விவரிக்கிறார், “சில இடங்களில் தீ வைக்கப்பட்டன, எங்கும் போராட்டம் நடந்தது. மக்கள் கதறியபடி வீடுகளை விட்டு வெளியேறினர். சிலர் உறவினர்களின் வீடுகள், தெரிந்தவர் வீடுகள் என சென்றனர். நாங்கள் இந்தியா வந்துவிட்டோம்.”

பிலிபித்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள காபியா வந்தடைந்த மஜூம்தார் குடும்பம் அங்கு தினக்கூலி வேலைக்கு சேர்ந்தனர். 11 வயதில் மனேந்தர் விவசாயத் தொழிலாளியாக பணிபுரியத் தொடங்கி தினமும் இரண்டரை ரூபாய் சம்பாதித்தார்.


உருளைக்கிழங்கு பஜ்ஜி, முட்டை பஜ்ஜி ஆகியவை வங்காள உணவு பதார்த்தங்கள். இதில் முட்டை அல்லது உருளைக்கிழங்கை மசித்து கடலைமாவு, சோளமாவு, பேக்கிங் சோடா, கலவையான மசாலா ஆகியவற்றை கலந்து பக்கோடா போன்று பொறித்து எடுப்பார்கள். மனேந்தரின் உணவு வண்டியில் சுடச்சுட உருளைக்கிழங்கு பஜ்ஜி, பச்சை சட்னி, முட்டைகள் பரிமாறப்படுகின்றன.

பெருந்தொற்று மற்றும் ஊரடங்குகளால் தொழில்  மந்தமடைந்துள்ளது. “இப்போதெல்லாம் மிக குறைவான வாடிக்கையாளர்களே வருகின்றனர், ஒரு நாளுக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடிவதில்லை. நான் செய்யும் வேலைக்கு ஏற்ற பணம் கூட வருவதில்லை, இதனால் குடும்பம் நடத்துவதே கஷ்டமாக உள்ளது,” என்கிறார் மனேந்தர். “சில சமயம் இந்த தொழிலை விட்டுவிடலாம் என்று தோன்றும், ஆனால் இதுதவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. 60 வயதில் என் குடும்பத்திற்கு என்ன செய்து உணவளிப்பது?”

‘60 வயதில்என்குடும்பத்திற்குஎன்னசெய்துஉணவளிப்பது?’ எனகேட்கிறார்மனேந்தர். பிரகாஷ்சந்த்எடுத்தபுகைப்படம்

மனேந்தரின் குடும்பம் பல போராட்டங்கள் எதிர்கொண்டு, பல நூறு கிலோமீட்டர்களை கடந்து இந்திய எல்லைக்குள் ஏன் வந்தார்கள், இந்தியாவில் ஏன் குடியேறினார்கள் என்பது பற்றி அவருக்கு தெரியவில்லை. அவர்கள் சிறு படகில் மேற்கு வங்கத்தின் போங்கான் வந்தடைந்து அங்கிருந்து கொல்கத்தாவிற்கு சென்றுள்ளனர்.

மனேந்தர் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை. அவரது குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. “எல்லோருக்கும் பயம். அடையாளத்தை மறைத்து தான் கொல்கத்தாவிற்கு வந்தோம். காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்று நாங்கள் அஞ்சினோம்.” உத்தர பிரதேசம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள மாமா ஒருவர் வீட்டிற்கு செல்ல எங்கள் குடும்பம் முடிவு செய்தது. “பிலிபித்திற்கு நாங்கள் லாரியில் சென்றோம்,” என்கிறார் அவர்.

சில ஆண்டுகளில் அவரது குடும்பம் கிராமத்தில் இறுதியாக குடியமர்ந்தது. எனினும் 1972ஆம் ஆண்டு ஏற்பட்ட ஷர்தா வெள்ளம் அவரது குடும்பத்தை மீண்டும் புரட்டிப்போட்டது. வெள்ளத்தில் அவர்களின் வீடும், வயலும் பறிபோனது.


மனேந்தர் தனது சைக்கிளில் டிராலியை இணைத்துக் கொண்டார். அதுவே அவரது கடை ஆனது. இந்த டிராலியில் முட்டை டிரேக்கள், புளி சட்னி, கடலை மாவு, சமையல் எரிவாயு, அடுப்பு, பஜ்ஜிகள் இருக்கின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன் இத்தொழிலை தொடங்கியபோது இந்த டிராலியை தானே கட்டமைத்துவிட்டதாக அவர் சொல்கிறார். அப்போது அவருக்கு வருமானம் நன்றாக இருந்துள்ளது. வேலையின் போது விபத்து ஏற்பட்டு விலா எலும்பு உடைந்ததில் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அவர் சொல்கிறார், “நான் அனைத்தையும் இழந்தேன். என் உழைப்பும் பாழானது. சேமிப்புகள் யாவும் சிகிச்சைக்கு செலவானது.” நீண்ட காலத்திற்கு பிறகு உடல் நலமடைந்து  வேலையை மீண்டும் தொடங்க அவர் முடிவு செய்தார்.


மனேந்தர் தனது 24-வது வயதில் தினக்கூலி வேலையை தேடி பிற மாவட்டங்கள்,பிற மாநிலங்களுக்கு பயணிக்க தொடங்கினார். அவர் பிறரது வயல்களில் வேலை செய்ய நானக்மட்டா வந்தார். “அப்போதெல்லாம் பிலிபித்தில் இரண்டரை ரூபாய் தினக்கூலி தருவார்கள், அதுவே நானக்மட்டாவில் ஐந்து ரூபாய் கிடைக்கும். இங்கு வேலை செய்வது கூடுதல் லாபம்.”

நானக்மட்டாவில் வேலை செய்தபோது, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த சில வங்காளிகளுடன் மனேந்தருக்கு பழக்கம் ஏற்பட்டது. “எனது கிராமத்திலிருந்து வந்த சிலர் இங்கு தங்கியிருப்பதை அறிந்தேன், நானும் இங்கு தங்க விரும்பினேன். மேற்கொண்டு என் மாமாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இங்கு வந்துவிட்டோம். எங்கள் [கச்சா] வீட்டை கட்டினோம். பின்னர் இங்கு நிலம் வாங்கி கல் வீடு கட்டினோம்,” என்றார்.


இன்று மனேந்தரிடம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க ரேஷன் அட்டை போன்ற பிற அடையாள ஆவணங்கள் உள்ளன. பிறப்புச் சான்றிதழ் இல்லாதது பல சமயங்களில் அவருக்கு பிரச்சனை ஏற்படுத்தியதாக அவர் சொல்கிறார், “நான் [கிழக்கு] பாகிஸ்தானில் பிறந்தேன். இங்கு எப்படி என்னால் பிறப்புச் சான்றிதழை கொண்டு வர முடியும்? என்னிடம் இதுபோன்ற எந்த முக்கிய ஆவணங்களும் கைவசம் இல்லை. எனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்,” என.

ஒரு பஜ்ஜி ரூ.15-க்கு கொடுத்து மக்களை மகிழ்விக்கும் மனேந்தர், வாழ்க்கை குறித்து சொல்கிறார், “இந்த பரபரப்பு நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சியை எங்கு தேடுவது? வேலை தேடியே என் காலமே போகிறது.”

Editor's note

பிரகாஷ் சந்த், உத்தராகண்டின் நானக்மட்டா பொதுப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர். அவரது பள்ளியில் நடைபெற்ற பாரி பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பிறகு தன்னை சுற்றியுள்ள மக்களின் கதைகளை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அவர் சொல்கிறார், “பாரி கல்வியுடன் இக்கட்டுரைக்காக வேலை செய்தபோது தான் எனது கிராம மக்களை பற்றி எவ்வளவு குறைவாக அறிந்து வைத்துள்ளேன் என்பதை உணர முடிந்தது. ஒரு சமூகத்தின் கதைகளை பதிவு செய்வதால் அதன் வரலாறும் உயிர்ப்புடன் இருக்கிறது. மனேந்தரின் கதையை வார்த்தைகளில் கொண்டு வருவது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இக்கட்டுரையை எழுதியதன் வழியாக புலம்பெயர்ந்த மக்களை அறிய முடிந்ததுடன், அவர்களின் போராட்டங்கள், வலிகள் குறித்தும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.