பாட்சிங் மல்கெய்ங், தனது 14 வயதில் முதல் கிஷிங் கின்தேய் என்ற தாள இசைக்கருவியை செய்தார். அக்கருவி மேகாலயாவின் காசி சமுதாய மக்கள் பயன்படுத்தும் கருவியாகும். தற்போது தனது 60 வயதில் அவர் முதன்மை கைவினைஞராக உள்ளார். அவர் காற்று, கயிறு மற்றும் நான்கு வகை தாள இசைக்கருவிகளை செய்வதில் வல்லவர். அவற்றை உள்ளூரில் கிடைக்கும் பலா மரம், பட்டு நூல் மற்றும் ஆடு, மாடுகளின் தோல் ஆகியவற்றை பயன்படுத்தி செய்கிறார்.

வீடியோவைப்பாருங்கள் : பா போட்டின் மேளம், மேகாலயாவின் காசி தாளத்துடன் சேர்ந்து ஒலிக்கிறது

பாட்சிங்கை அவரது கிராமமான நொங்பிலாயில் மக்கள் பா போட் என்று அழைக்கிறார்கள். அவரது கிராமம் மேகாலயாவின் பினுர்ஸ்லா வட்டத்தில் உள்ளது. அவர் 8 வயதாக இருந்தபோது, அவரின் தாய் இறந்துவிட்டார். இறந்துவிட்ட அவரது தந்தை ஒரு விவசாயி. அவர் ஆரஞ்சு பயிரிட்டார். துடைப்பம் செய்தார். பா போட் தான் முதன்முதலில் அவரது குடும்பத்தில் கைவினைப்பொருட்கள் செய்யக்கற்றுக்கொண்டவர். அவர் முதலில் மற்ற கைவினைஞர்கள் செய்வதை நன்றாக கவனித்து, பின்னர் தானாக செய்வதற்கு கற்றுக்கொண்டார். நன்றாக செய்வதற்கு அவர் சிறிது காலம் எடுத்துக்கொண்டார். அப்போது முதல் அவர் செய்வதை நிறுத்தவே இல்லை. “ஏனெனில், என்னைப் பொருத்தவரை, இந்த இசையை உயிர்ப்புடன் வைத்திருப்பதை எனது கடமை என்று எண்ணியிருந்தேன்“ என்று அவர் கூறுகிறார். 

பா போட் ஒரு கிஷிங் கின்தேய் கருவியை அவரது பணியிடத்தில் செய்துகொண்டே நம்மிடம் பேசுகிறார். அவரது வீட்டிற்கு முன்புறம் உள்ள ஒரு திறந்தவெளியே அவர் அமர்ந்து பணி செய்யும் இடமாக உள்ளது. அவரைச்சுற்றி, சுத்தம் செய்யப்பட்ட விலங்குகளின் தோல், அவரது கருவிகள், பலா மரத்துண்டுகள், கயிறுபோல் கத்தரிக்கப்பட்ட விலங்குகளின் தோல், மற்றும் மரப்பட்டைகள் காய்ந்த புல்லுடன் சேர்த்து வைக்கப்பட்டு உள்ளது. “இக்கருவியை வாசிப்பதற்கு எனக்கு முறையாக கற்றுக்கொடுக்கப்படவில்லை. உண்மையில், இவற்றில் பெரும்பாலானவற்றை கிராம திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் தவிர மற்ற இடங்களில் அரிதாகவே பார்த்துள்ளேன். எனக்கு இருந்த ஆர்வத்தால், நான் தானாகவே செய்வதற்கு கற்றுக்கொண்டேன்“ என்று அவர் கூறுகிறார்.

பா போட்டின் இளைய மகன் பினாபிளாங்க் கொங்சினி (29), இந்த வேலையில் அவருக்கு உதவி செய்கிறார். அவருக்கு அதிகளவில் கருவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் வரும்போது அவர் உதவியாளர்களை கூலி கொடுத்து அமர்த்திக்கொள்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மாநில அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையிடம் இருந்து அவருக்கு 200 தாள இசைக்கருவிகள் செய்யக்கூடிய அளவிற்கு ஆர்டர்கள் வந்திருந்தது. அப்போது 11 உதவியாளர்களை அவர் கூலிகொடுத்து வைத்துக்கொண்டு அனைத்து கருவிகளையும் மூன்று மாதத்தில் செய்து கொடுத்தார்.

தானாவே இசைக்கருவிகள் இசைக்க கற்றுக்கொண்ட ஒரு இசை கலைஞர், அவரால் அவர் தயாரிக்கும் மேளத்தை வாசிக்க முடியும். அவரது குழுவில் உள்ள 5 முதல் 6 கலைஞர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த முடியும். ஆண்டுக்கு 4 நிகழ்ச்சிகளில் வாசிப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் அழைப்பு விடுப்பார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் வரை வழங்குவார்கள். “நிறைய பேர் இந்த பாரம்பரிய இசைக்கருவியை வாசிப்பதில்லை. எனவே எங்கள் குழுவை மக்கள் அழைப்பார்கள்“ என்று பா போட் கூறுகிறார்.

இ.பின்டப்போர் கொஞ்சிரம் (36), ஷில்லாங் மார்டின் லூதர் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் தங்முரி வாசிப்பவர் மற்றும் உதவி பேராசிரியர். அவர் கூறுகையில், “பாரம்பரிய காசி இசைக்கருவிகள் காட்டில் கேட்கும் இசையை செய்து காட்டுவதுபோல் இருக்கும். நமது முன்னோர்கள் காடுகளில் வசித்தபோது, அவர்கள் அனைத்து விதமான பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் எழுப்பும் ஒலியை உள்வாங்கி, அவற்றைப்போல் செய்ய முயன்றிருக்கிறார்கள். பின்னர் சமூகம் வளர, வளர இந்த இசைக்கருவிகளும் வளர்ந்தன“ என்று அவர் கூறுகிறார்.

காசி, பட்டியல் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள். ஆண்டு முழுவதும் விழாக்கள் கொண்டாடுவார்கள். பா போட்டின் கருவிகளை இசைப்பதற்கு அழைப்பார்கள். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் நன்றி நவிழல் விழாவில் மக்கள் ஒன்றுகூடி, கா பாம், கா சிங் ஷைன்ரங், கா சிங் கின்தேய், கா தங்முரி மற்றும் ஜோடியான சிம்பல்ஸ் ஆகிய தாள இசைக்கருவிகளின் இசைக்கு ஏற்ப ஷாட் நடனமாடி மகிழ்வார்கள்.

நவம்பரில், ஷாட் நொங்க்ரேம் எனப்படும் 5 நாள் விழா நடைபெறும். கிராமமக்கள் நல்ல விளைச்சல் மற்றும் செல்வம் பெருக வேண்டியும் பெண் தெய்வமான கா பிளேய் சின்ஷாரிடம் வேண்டிக்கொள்வார்கள். அப்போது மேள தாளங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒலிப்பது காசியில் ஸ்கிட் எனப்படும் என்று பா போட் கூறுகிறார்.

பா போட் நமக்கு நோங்பிளாய் கிராமத்தை காட்டுகிறார். பள்ளத்தாக்கில் 4,000 அடிகள் கீழே இறங்கி செல்லவேண்டும். சாலை வசதி கிடையாது. புகைப்படங்கள் எடுத்தவர் எம்.வி.ஸ்ரீகாந்த்

அவரின் வழக்கமான வாடிக்கையாளர்களுள் டோர்பார் ஷனாங் எனப்படும் கிராம குழுவினரும் அடங்குவர். அவர்கள் இசைக்கருவிகளை கொள்முதல் செய்து விழாக்களின்போது வாசிப்பார்கள். சில இசைக்கல்லூரிகள் மற்றும் மேகாலயா அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையிடமிருந்து பா போடுக்கு இசைக்கருவிகளுக்கான ஆர்டர் அவ்வப்போது கிடைக்கும். கா பாமுக்கு ரூ.12 ஆயிரம், கா பண்டியாவுக்கு ரூ.2,500 என விலை நிர்ணயிக்கப்படும். 4 ஆயிரம் அடி கீழே பள்ளத்தாக்கில் உள்ள அவரது கிராமமான நொங்பிளாயை அடைவதில் அவரது வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் இருந்தது. அதனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிழக்கு காசி மலை மாவட்டம் பினுர்ஸ்லா வட்டத்தில் உள்ள வலிங்காட் கிராமத்தில் வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார். அங்கு போக்குவரத்து வசதிகள் உள்ளது. “வேலையைப் பொருத்து நான் இங்குமங்கும் மாறி, மாறி வசிப்பேன். எனக்கு வயல்களில் வேலையிருந்தால், நான் நொங்பிளாய்க்கு சென்றுவிடுவேன். எனக்கு இசைக்கருவிகள் செய்யும் வேலை இருந்தால், நான் வாலிங்காடில் தங்குவேன்“ என்று அவர் விளக்கமளிக்கிறார்.

பா போட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்களும் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கிறார்கள். அவரது மனைலி ஷிபோன் கொங்சினி (56), அவர்களின் ஒரு குழந்தையின் வீட்டில் வசிக்கிறார். அவருக்கு 4 மகன்கள். பினேலாங் கொங்சினி (38), பிர்னாய்லாங் கொங்சினி (34), பின்டாப்லாங் கொங்சினி (32), பினாப்லாங் கொங்சினி (29) மற்றும் மகள் ஸ்னேகவ்பாலாங் (36) ஆகியோர் ஆவர்.

மேளங்கள் தயாரிப்பு

பா போட், ஆடு மற்றும் மாட்டின் தோலை சுத்தம் செய்வதில் துவங்கி, பின்னர் அவற்றை ஓரிரவு ஊறவைப்பார். இதற்கிடையில் காசியில் அவர் தரி என்றழைக்கப்படும் ஒரு பிரத்யேக கத்தி கொண்டு மரத்தை வடிவமைக்கிறார்.

மேளம் வடிவம் பெற துவங்கும்போது, அதில் பொருத்துவதற்கு வட்ட வடிவத்தில் மூங்கில் கொண்டு செய்த சட்டத்தை பொருத்தி, ஒருபுற மேளத்தின் தோலை அது பிடித்துக்கொள்ளும் வகையில் செய்கிறார். உளி கொண்டு மேளத்தின் அனைத்து புறங்களிலும் தோலை பொருத்துகிறார். கடைசியாக, நீண்ட பிளாஸ்டிக் நூலில் இரும்பு வளையத்தை இருபுறத்தின் தோலையும் சேர்த்து பொருத்த வேண்டும். இந்த வளைங்கள் மேளம் ஒத்திசைந்து இசைப்பதற்கு உதவுகிறது. அவர் மரத்தில் துளையிடும் கருவி கொண்டு சிறிய துவாரங்களை இடுகிறார். மணற்துகள்கள் கொண்ட காகிதம் கொண்டு மரத்தை மிருதுவாக்கி, தேவையான வடிவத்தை கொண்டு வருகிறார்.

தங்முரி, 7 துளைகளையுடைய காற்று இசைக்கருவி. இதை செய்வதற்கு நிறைய படிகள் தேவைப்படுவதுடன், மிகச்சரியாக செய்ய வேண்டும். இங்கு அவர் ஒரு சுடவைத்த இரும்பு கம்பியை துளையிடுவதற்கு பயன்படுத்துகிறார். அவர் ஏழு துளைகளையும் சரியான அளவு இடைவெளியிட்டு இடுகிறார். இரண்டு நாள் முதல் 15 நாள் வரை அவர் செய்யும் கருவியைப்பொருத்து, இந்த கருவிகள் செய்வதற்கு நீண்ட நேரம் செலவாகிறது.

இந்த கருவிகளுக்கான தேவை குறைந்து வருகிறது. ஓராண்டு 4 முதல் 5 செட்டுகள் செய்வதற்கு மட்டுமே பா போட்டுக்கு ஆர்டர் கிடைக்கிறது. மாநில அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் பயிற்சி பட்டறைகள் மற்றும் திட்டங்கள் மூலம் காசி இசையை வளர்க்கிறது. அதன் விளைவாக பாடத்திட்டங்களும், செயின்ட் அந்தோணி கல்லூரி, மார்ட்டின் லூதர் கிறிஸ்டியன் பல்கலைக்கழகம் மற்றும் மேகலயா கிழக்கு மலை பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அவர் தயாரிக்கும் கருவிகள் கலாச்சார முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், பா போட் அவரின் வாழ்வாதாரத்திற்கு அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை சார்ந்திருக்க முடியாது. அவர் காடுகளிலிருந்து சேகரிக்கும் பாக்கு, துடைப்பம் தயாரிப்பது (ஆண்டுக்கு 20 முதல் 25 குவிண்டால்), அவருக்கு சொந்தமான 3 ஆயிரம் மரங்களிலிருந்த ஆரஞ்சு பழங்கள் அறுவடை செய்வது, பன்றிகள் மற்றும் கோழிகள் வளர்ப்பது என்று அவர் வருமானம் ஈட்டுகிறார். “என்னால் மாதத்தில் ரூ.16 ஆயிரம் இவற்றின் மூலம் இருந்து சம்பாதிக்க முடியும்“ என்று பா போட் கூறுகிறார்.

தினமும் மாலையில், கிராமத்தில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் இளம் நாட்டுப்புற இசைஞர்கள் அவர்கள் வேலை முடிந்தவுடன் பா போட்டின் வீட்டிற்கு வருவார்கள். அவர் வீட்டில் அமர்ந்து காசி கலாச்சாரம் மற்றும் இசை குறித்து பேசுவார்கள். அப்போது பா போட்டு பாடுவார். “அவர் காடு சார்ந்த பாடல்களை பாடுவார். அவை அவரைவிட பழமையானவையாக இருக்கும். அவற்றில் பெரிய அர்த்தமெல்லாம் இருக்காது“ என்று ஷிபூர் மாவ்கான் கூறுகிறார். இவர் பா போட்டின் நண்பர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு நாட்டுப்புற பாடல் கலைஞராவார்.

தினமும் மாலையில், கிராமத்தில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் இளம் நாட்டுப்புற இசைஞர்கள் அவர்கள் வேலை முடிந்தவுடன் பா போட்டின் வீட்டிற்கு வருவார்கள். அவர் வீட்டில் அமர்ந்து காசி கலாச்சாரம் மற்றும் இசை குறித்து பேசுவார்கள். அப்போது பா போட்டு பாடுவார். படங்கள் எடுத்தவர் எம்.வி.ஸ்ரீகாந்த்

“இந்த கைவினைக்கலை எதிர்காலத்தில் என்னவாகும் என்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியாது. மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபோது, இந்த பாரம்பரிய இசையை ஒருபோதும் அவர்கள் மதிக்கவில்லை. ஆனால், தற்போது அவர்கள் இந்த இசையை மதிக்கவும், அவர்களின் வேர்களை ஆராயவும் துவங்கிவிட்டார்கள். அதனால், எனக்கு சிறிது நம்பிக்கை கிடைத்திருக்கிறது“ என்று பா போட் கூறுகிறார். அவர் கா பாமை எடுத்து அவரது நண்பருடன் இசைக்க துவங்கிவிட்டார்.


காசி கலாச்சாரத்தில் இசை

காசி கலாச்சாரத்தில் ஒவ்வொரு கருவிக்கும் ஓரிடம் உண்டு. வீட்டில் ஒரு நபரை அது பிரதிநிதித்துவப்படுத்தும். சிங் ஷைன்ராங் என்பது ஆண் மேளம் என்று அழைக்கப்படும். அது குடும்பத்தில் காசி ஆணின் தந்தை மற்றும் தாய் மாமன் உறவை குறிப்பதாகும். மேளத்தின் இடதுபுறம் தந்தையின் அன்பான குணத்தை குறிப்பதாகவும், வலது புறம் ஒரு குச்சியைக்கொண்டு இசைப்பதாக உள்ள பகுதி அவரின் கண்டிப்பான குணத்தை பறைசாற்றுவதாவும் உள்ளது. துய்தாராவில் 4 கயிறுகள் உள்ளது. முதல் கயிறு மாமாவையும், ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ள இரண்டு மற்றும் மூன்றாவது கயிறு தந்தையையும், தாயையும் குறிப்பதாகவும், நான்காவது கயிறு குடும்பத்தை குறிப்பதாகவும் உள்ளது.

காசி கலாச்சாரத்தில், சிங் கின்தேய் மற்றும் சிங் ஷைன்ராங் ஆகிய இரு கருவிகளும் ஒரே நேரத்தில் இசைக்கப்படமாட்டாது. ஏனெனில், அவை தந்தையையும், தாயையும் குறிக்கும். அவை ஒன்றாக இசைக்கப்பட்டால், அவர்கள் இருவருக்குமிடையே சண்டை  இருக்கும். எனவே, அவை தனித்தனியாகவே இசைக்கப்படும். ஒருவர் பேசும்போது மற்றவர் கவனிப்பதுபோல் சித்தரிக்க அவ்வாறு இசைப்பர்.

சிங் கின்தேய் (பெண் மேளம்), கா ஷாத் கின்தேய் நடனத்துடன் சேர்ந்து இசைக்கப்படும். சிங் ஷைன்ராங் (ஆண் மேளம்), கா ஷாத் ஷைன்ராங் நடனத்துடன் சேர்த்து இசைக்கப்படும். கா பாம் மற்றும் கா பாடியா தாளத்திற்கு ஏற்ற இசையை தொடர்வதற்கு இசைக்கப்படும். கா தங்முரி வெளிப்புற நிகழ்வுகளில் இசைக்கப்படும் இசைக்கருவி. திருவிழாக்களில் இசைக்கப்படும்.

ஷாட் நோக்ரேம் நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இசைக்கலைஞர் பான்ஷாய்லாங் முக்கிமால் எழுதப்பட்டது.

Editor's note

எம்.வி.ஸ்ரீகாந்த், தனது இளங்கலை இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் கல்வியை ஷில்லாங்கில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில்  முடித்துள்ளார். அவருக்கு இசைக்கருவிகள் மீது ஆர்வம் அதிமுள்ளது. கிராமப்புற இந்தியாவில் இசையின் பன்முகத்தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்புகிறார். ஷில்லாங்கில் படித்த மாணவர் என்பதால், அவர் காசி பாரம்பரிய இசை குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் கூறுகையில், “பாரியுடன் வேலை செய்தது எனக்கு புதிய கோணத்தை வழங்கியது. வெவ்வேறு பின்னணியில் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாடங்களை விளக்குவதில் முக்கியத்துவம் கொடுத்தது எனக்கு புதிய அனுபவமாகும்“ என்றார்.


தமிழில்: பிரியதர்சினி. R.

பிரியதர்சினி. R. மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.