நான் படிக்க விரும்புகிறேன். ஆனால் என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது என புரிந்து கொள்ள முடியவில்லை. ஆறு வருட இடைவெளிக்கு பிறகு பள்ளி சென்றிருக்கிறேன். நான் ஹன்னான் அன்சாரி. 14 வயது ஆகிறது. பெற்றொர் மற்றும் தம்பி ஆகியோருடன் பெனிபூரின் சிறு கிராமம் ஒன்றில் வாழ்கிறேன்.

வீட்டுக்கு வெளியே நிற்கும் ஹன்னான் மற்றும் அவரின் தாய் சகிரா பானு. புகைப்படம்: ஷைஸ்தா நாஸ்

எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது (2012-ல்), ஒரு விபத்து நேர்ந்து என் இடது கண் காயமடைந்தது. காயம் சரியாகிவிட்டது. ஆனால் பார்வை போய்விட்டது. கவனம் செலுத்த முயன்றால் இன்னொரு கண் வலிக்கத் தொடங்கி தலைவலி வந்துவிடுகிறது.

விபத்துக்கு பிறகான சில வருடங்களுக்கு, கண் குணமாக வேண்டி வீட்டிலேயே இருந்து விட்டேன். ஆறு வயதிலிருந்து 12 வயது வரை பள்ளிக்கு நான் செல்லவில்லை. பதிலாக, வாகனங்களுக்கு சாயம் பூசும் வேலை செய்யும் என் தந்தை முகமது பிஸ்மில்லா அன்சாரிக்கு உதவத் தொடங்கினேன். அந்த காலகட்டத்தில் என் நண்பர்கள் பள்ளிக்கு செல்வதை பார்ப்பேன். நான் மட்டும் தனியாகிவிட்டதை போல் உணர்வேன். எனவே ஆறு வருடங்கள் கழித்து 2019ம் ஆண்டில் என்னை பள்ளிக்கு மீண்டும் அனுப்ப என் தந்தை முடிவெடுத்தார். என்னை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்களுக்கு விருப்பமில்லை. ஆரம்பப் பள்ளி சேர்வதற்கான வயதை கடந்து விட்டதாக சொன்னார்கள். அச்சமயத்தில் எனக்கு 12 வயதாகி இருந்ததால் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பில் சேர்த்தார்கள். தற்போது நான் 8ம் வகுப்பு முடித்துவிட்டேன். எனக்கு 14 வயதாகிறது. 9ம் வகுப்பில் இன்னும் சேரவில்லை. என்னுடைய ஒன்பது வயது தம்பியான லுக்மன் அன்சாரி ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். 

‘நான் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டேன். எனக்கு 14 வயதாகிறது,’ என்னும் ஹன்னான் விபத்து நேர்ந்து ஒரு கண்ணில் பார்வை போன பிறகு  ஆறு வருடங்களாக பள்ளிக்கு செல்லவே இல்லை. புகைப்படம்: ஷைஸ்தா நாஸ்

என்னுடைய குடும்பம் பெனிப்பூரில் 80 வருடங்களாக வசிக்கிறது. என்னுடைய பாட்டனார் ஜார்கண்டிலிருந்து இங்கு இடம்பெயர்ந்தார். என் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் தினக்கூலிகளாகவும் மெக்கானிக்குகளாகவும் தையற்காரர்களாகவும் இங்கும் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அம்பிகாப்பூரிலும் பணிபுரிகின்றனர்.

மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கியதும் இணைய வழிக் கல்விக்கு வருமாறு பள்ளி அழைத்தது. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. ஸ்மார்ட்ஃபோன்கள் வைத்திருக்கும் மாணவர்களுடன் இணைந்து இணைய வழி வகுப்பில் பங்கு பெறலாம் என நினைத்தேன். ஆனால் குடும்பத்துக்காக நான் தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே குழுக்கள் உருவாக்கி விட்டனர். ஏப்ரல் தொடங்கி ஜூன் 2020 வரை ஒரு இணைய வழி வகுப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை.

ஊரடங்கு காலத்தில் என் தந்தைக்கு வேலை இல்லை. எனவே தினக்கூலி வேலை செய்யத் தொடங்கினார். நானும் அவருக்கு உதவ தொடங்கினேன். அம்பிகாப்பூரின் கட்டுமான தளம் ஒன்றில் வேலை பார்த்தோம். கனமான செங்கற்களையும் மண்ணையும் சுமக்கும் வேலை. என் தலையிலும் தோள்களிலும் சுமை தூக்குவது என் கண்களுக்கு கடுமையான வலி கொடுத்து தலைவலிகளை உருவாக்குகிறது. படிப்பதற்கு கவனம் செலுத்தும்போது ஏற்படுவதை போன்ற தலைவலிகள்.

தலையிலும் தோள்களிலும் சுமை தூக்குவது ஹன்னானின் கண்களுக்கு கடுமையான வலியையும் தலைவலிகளையும் ஏற்படுத்துகிறது. படிப்பதற்கு கவனம் செலுத்தும்போது ஏற்படுவதை போன்ற தலைவலிகள். புகைப்படம்: ஷைஸ்தா நாஸ்
மெக்கானிக் கடையில் தந்தைக்கு உதவ வேண்டியிருந்ததால் திறந்த வெளியில் நடத்தப்பட்ட வகுப்புகளுக்கு வாரம் இரு முறை மட்டும்தான் ஹன்னானால் செல்ல முடிந்தது புகைப்படம்: ஷைஸ்தா நாஸ்

அக்டோபர் மாதம் பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு ஆசிரியர்கள் வட்டார வகுப்புகள் நடத்தினர். வாரத்தின் ஐந்து நாட்களுக்கு அருகே இருந்த ஊர் மசூதியின் மைதானத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் தூரமாக அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. கிராமத்திலிருந்து 25 மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்தனர். மைதானத்துக்கு நாங்கள் பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களுடன் வர வேண்டும். அதே மாதத்தில் என் தந்தை வேலை பார்த்த மெக்கானிக் கடை திறக்கப்பட்டதாலும் அவருக்கு நான் உதவ வேண்டியிருந்ததாலும், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் இந்த வகுப்புகளுக்கு நான் செல்ல முடிந்தது.   

இரண்டாம் வருட ஊரடங்கு

மார்ச் 2021-ல் என் தாய் 30 வயது சகிரா பானோவின் உடல்நலம் குன்றியது. முதுகில் வலி ஏற்பட்டது. மருந்துகள் தேவைப்பட்டன. அவரின் சிகிச்சைக்காக எங்களின் சேமிப்பின் பெரும்பகுதி கரைந்துபோனது. அவர் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்து, சமைத்துவிட்டு, எங்களின் எட்டு ஆடுகளை மேய்க்க அழைத்து செல்வார். அவருக்கு உடல்நலம் குன்றியதும் இவற்றில் எதையும் செய்ய முடியவில்லை.

இரண்டாம் ஊரடங்கு ஏப்ரல் 2021ல் அறிவிக்கப்பட்டது. இம்முறை தினக்கூலி வேலைக்கு பதிலாக நானும் என் தந்தையும் காய்கறி விற்க முடிவெடுத்தோம். அதிகாலை 5 மணிக்கு விழிப்போம். அவருடைய இரு சக்கர வாகனத்தில் 15 மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பர்சா மற்றும் பரியோன் கிராமங்களுக்கு காய்கறி வாங்கச் செல்வோம். அங்கிருந்து இன்னொரு 10-20 கிலோமீட்டர்களுக்கு பயணித்து அம்பிகாப்பூர் டவுனில் அவற்றை விற்பனை செய்வோம்.

நாளொன்றுக்கு 80 ரூபாய் சம்பாதிக்க முடியும். சில நாட்கள் எங்களால் அதிகம் விற்க முடியும். விற்பதற்கு பல வகைகளும் இருக்கும். அந்த நேரங்களில் 150 ரூபாய் வரை கிடைக்கும். ஆரம்பத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து ஒரு தள்ளுவண்டியை 30 ரூபாய் தின வாடகைக்கு எடுத்தோம். வாடகை மிகவும் அதிகமாக இருந்தது. எனவே நடைபாதையில் கடை போட்டு விற்கத் தொடங்கினோம். இன்று ஐந்து கிலோ கடலையும் ஐந்து கிலோ பாகற்காயும் விற்க கிராமத்தில் வாங்கியிருக்கிறோம்.

ஆரம்பத்தில் ஒரு தள்ளுவண்டியை 30 ரூபாய் தின வாடகைக்கு ஹன்னானும் அவரின் தந்தையும் எடுத்தனர். வாடகை அதிகமாக இருந்ததால், நடைபாதையில் கடை போட்டு விற்கத் தொடங்கிவிட்டார்கள். புகைப்படம்: ஷைஸ்தா நாஸ்

எங்களுக்கு இப்போது இருக்கும் ஒரே நிவாரணம் அரசிடமிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்தான். (சட்டீஸ்கரின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, அன்சாரியின் குடும்பம் போன்ற குடும்பங்கள் 35 கிலோ அரிசியையும் கோதுமையையும் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்கிற விலைக்கு ஒவ்வொரு மாதமும் பெற்றுக் கொள்ள முடியும்.) இந்த உணவுப் பொருட்கள் எங்களுக்கு போதவில்லை. மே 14, 2021 ஈத் விழாவின்போது என் தந்தை எங்களுக்கு சேமியா வாங்கிக் கொடுத்தார். என் தம்பி அசைவ உணவுக்காக கெஞ்சினான். எனவே என் தந்தை அருகே இருந்த கசாப்புக் கடைக்கு சென்று கொஞ்சம் கோழி இறைச்சி வாங்கி வந்தார். ஒரு நாளின் வருமானத்துக்கும் அதிகமாக அன்று செலவாகி விட்டது.

நிலைமை சரியான பிறகு, என்னுடைய படிப்பை முடித்துவிட்டு, துணி வணிகம் செய்ய விரும்புகிறேன். என் தந்தையும் எனக்கு உதவுவதாக சொல்லி இருக்கிறார். எனக்கு ஒரு ஸ்கூட்டரும் மொத்த விற்பனையில் துணிகளும் வாங்க விரும்புகிறோம். அப்போதுதான் அருகே இருக்கும் பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று என்னால் விற்பனை செய்ய முடியும். இந்த வேலை எனக்கு சரியாக இருக்குமென நினைக்கிறேன். அதிகமான வலியை என் கண்ணுக்கு அது கொடுக்காது என்றும் நினைக்கிறேன்.

விபத்தும் அதற்குப் பிறகும்

என்னுடைய கண் போன தேதி எனக்கு தெரியும். அக்டோபர் 10, 2012. அது நடக்கும்போது எனக்கு ஆறு வயதுதான் என்றபோதிலும் என்னுடைய ஆவணங்களில் அந்த தேதியை பல முறை பார்த்திருப்பதால் தேதி நினைவில் இருக்கிறது.

என்னுடைய அம்மா வழி பாட்டியின் கிராமமான பதாரில் இருந்தேன். குறுவைப் பருவ துவரைப் பயிர் அறுவடைக்கு உதவ சென்றிருந்தேன். குளித்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றேன். என்னுடைய மாமா, இளம் வெள்ளரிக்காய்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நானும் சாப்பிட விரும்பினேன். அவற்றை உறிக்க முயற்சித்தபோது கத்தி என்னுடைய இடது கண்ணில் குத்திவிட்டது. வலியில் அலறி கண்ணை தேய்த்தேன். ரத்தமும், திரவமும் வந்ததுதான் நினைவிலிருக்கிறது.

என்னுடைய தந்தை 50 கிலோமீட்டர் தொலைவில் அம்பிகாப்பூர் மெக்கானிக் கடையில் இருந்தார். வீட்டுக்கு விரைந்து வந்தார். அருகே இருந்த டவுனான ராஜ்பூருக்கு என்னை கொண்டு சென்றார். அங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவர், ஆழமாக வெட்டுபட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தார். அடுத்து அம்பிகாப்பூரில் இருந்த ஒரு தனியார் மருத்துவ மையத்துக்கு சென்றோம். கண்ணுக்கு சொட்டு மருந்தை போடச் சொல்லி ஆலோசனை வழங்கி தலைநகர் ராய்பூருக்கு செல்ல சொன்னார்கள். என் தாத்தா, பெற்றோர் மற்றும் நான் என அனைவரும் பேருந்து பிடித்து ராய்ப்பூருக்கு சென்று பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவமனையை அடைந்தோம். சீக்கிரமாக அங்கு சென்றுவிட வேண்டும் என்கிற பதைபதைப்பில் இருந்தோம். என் பெற்றோர் அவர்களின் மொத்த சேமிப்பையும் என் சிகிச்சைக்காக செலவு செய்ததையும் என் உறவினர்கள் 30,000 ரூபாய் கொடுத்ததையும் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

விபத்துக்கு பிறகு ஆறேழு முறை மருத்துவரிடம் தொடர்ந்து பரிசோதனைக்காக சென்றோம். சில மாதங்களில் என் கண் குணமாகி விட்டது. ஆனால் பார்வை வரவில்லை. ராய்பூரின் தனியார் மருத்துவர்கள் என் கண்ணை எடுத்துவிட்டு அங்கு ஒரு கல்லை பதிக்க இரண்டு லட்சம் ரூபாய் கேட்டனர். கல் பதிப்பதால் ஒன்றும் பிரயோஜனம் கிடையாது என்பதால் என் தந்தை அதை செய்ய விரும்பவில்லை. அந்த கண்ணுக்கு பார்வை திரும்பும் என்கிற நம்பிக்கையே எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆறு மாத மருந்துகள் மற்றும் ராய்ப்பூருக்கு சென்று வர ஆன செலவு ஆகியவற்றை சேர்த்து எனக்கான சிகிச்சைக்கு மொத்தமாக 50,000 ரூபாய் செலவாகி விட்டது.

என் கண்ணில் காயம்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. என் இரு கண்களும் சரியாக இருந்த காலம் கூட என் நினைவை விட்டு அகன்றுவிட்டது. நாங்கள் வாழும்பகுதியில் மக்கள் எனக்கு பின்னால் புறம்பேசுவார்கள். என்னை குருடன் என குறிப்பிடுவார்கள். உலகை நான் ஒரு கண்ணில் பார்த்து பழகிவிட்டேன். எனவே என்னை யாராவது கிண்டல் செய்தாலும் எதற்காக அவர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.

என்னுடைய நண்பர்களும் எனக்கு நெருக்கமானோரும் என்னை கிண்டல் செய்வதில்லை. அவர்களுடன் நேரம் கழிப்பதை நான் விரும்புகிறேன். எங்கள் கிராமத்தின் நதியருகே பல மணி நேரங்கள் நாங்கள் அமர்ந்திருப்போம். கோவிட் மற்றும் ஊரடங்கினால் அவர்கள் அனைவரும் தாத்தா-பாட்டி வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நான் தனியாக இருக்கிறேன்.

Editor's note

ஷைஸ்தா நாஸ், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தற்போது Teach for India மானியப்பணியில் இருக்கிறார். தில்லி முனிர்காவின் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்கிறார். சட்டீஸ்கரின் அம்பிகாப்பூருக்கு சென்றபோது நடைபாதையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த ஹன்னானை அவர் சந்தித்திருக்கிறார். “வாழ்க்கையை பற்றி அவர் பேச விரும்பினேன். கல்வி சமத்துவத்தில் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. சமூக மாற்றம் இளம் மாணவர்களிடமிருந்து தொடங்க முடியும். அவர் ஏன் பள்ளிக்கு செல்வதில்லை என தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன். PARI கல்வியில் பணிபுரிவதால், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் பல்வேறு அம்சங்களை என்னால் ஆராய்ந்து புரிந்து கொள்ள முடிகிறது,” என்கிறார் அவர். 

தமிழில்: ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்