“எலிகளைப் போன்ற பெரிய திருடர்கள் கிடையாது!”

இதை சொல்லும்போதே அவர் சிரிக்கிறார். அவர் காஞ்சிபுரம் மாவட்டம் சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் பயிர்கள் நிமிர்ந்து நிற்கின்றன. அங்குள்ள நெல் வயல்களின் எலிப்  பாதைகள், மூலிகை மருந்துகள் எனப் பல விஷயங்களை அந்த விவசாயத் தொழிலாளி அறிந்துள்ளார்.

இருளர் பழங்குடியின (இருளா என்றும் குறிப்பிடப்படுகின்றனர்) உறுப்பினரான சுசிலா குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு(PVTG) என்று தமிழ்நாட்டில் பட்டியிலிடப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்.“எலிகளை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம்,” என்கிறார் அந்த 46 வயது பெண்மணி. “எங்களுக்கு உணவை சம்பாதித்து தரும் அந்த எலிகளை கொல்ல மாட்டோம். அவற்றை வயல்களில் இருந்து வலைகளில் பிடித்துச் சென்று தொலைவில் உள்ள ஏரி படுகைகளில் விட்டுவிடுவோம்.” இக்கிராமத்தில் வசிக்கும் 110 இருளர் குடும்பங்களுக்கு வயல்களில் உள்ள எலிகள், பாம்புகளை பிடிப்பது கூடுதல் வருவாய் ஆதாரம்.

“அவற்றை பிடிக்க [எலிகள், பாம்புகள்] இனிமேல் யாரும் எங்களை அழைக்கப்போவதில்லை, ” என்றார் அவர். “நெல் வயல்களில் இப்போதெல்லாம் மின் கம்பிகள் உள்ளதால் மின்சாரம் தாக்கி எலிகள் இறக்கின்றன.” சுசிலாவும், அவரது சமூகத்தைச் சேர்ந்த பிற பெண்களும் இப்போது விவசாய தொழிலாளர்களாக உழுதல், களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்கின்றனர். அவர்கள் MNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட சட்டம் 2005) திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலையும் பெறுகின்றனர். 2022 மே மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் MNREGA பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் சராசரி கூலி ரூ.246.

சுசிலா (இடது), அவரது அத்தை, உறவுக்காரப் பெண் செல்வி, செல்வியின் அம்மா(வலது தொலைவில்) ஆகியோர் அன்றைய நாளுக்கான வேலை முடிந்தவுடன் சுசிலாவின் வீட்டருகே சந்திக்கின்றனர். வலது: நிலத்தடியில் எலிகள் சேகரிக்கும் தானியங்களை தோண்டி எடுக்க பயன்படுத்தும் அரிவாளுடன் சுசிலா. பிரித்விஸ்ரீ எடுத்த புகைப்படங்கள்

2013 அறிக்கை-படி தமிழ்நாட்டில் 1,89,661 இருளர்கள் வசிக்கின்றனர். இச்சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் எலி பிடிப்பதை விரும்புவதில்லை. ஆனால் சுசிலா சொல்கிறார், “எலிகளை பிடிக்க அழைத்தால் மட்டும் புது சக்தி வந்துவிடுகிறது.”

வயல் வெளிகளில் எலிகள் எவ்வாறு திட்டமிட்டு பாதையை உருவாக்குகின்றன என்பதை அவர் விளக்கினார். இவ்வகையில் ஐந்து முதல் ஆறு கிலோகிராம் தானியங்களை நிலத்தடியில் அவை சேமிக்கின்றன. வரிசை, நெடுவரிசையாக அவை தானியங்களை சேமித்து வைக்கின்றன. “உங்களால் நுழைவாயில், வெளியேறும் பாதைக்கான இரண்டு துளைகளை மட்டுமே காண முடியும். வயல்களில் மற்ற துளைகளை கண்டறிவது சவாலானது. நாங்கள் வலைகள், உலோகக் கம்பிகள், பிற கருவிகளை எடுத்துச் சென்று அவற்றை பிடிக்கிறோம்,” என்கிறார் அவர்.

மறைவிடங்களில் இருந்து எலிகளை வெளியேற்ற புகைபோடுகின்றனர் அல்லது நிலத்தடியில் அவற்றின் பாதையில் இடையூறு செய்ய குழி தோண்டுகின்றனர். “எங்கள் அய்யா[தாத்தா] வயல்களில் எலிகளை பிடித்த பிறகு பை நிறைய அரிசி கொண்டுவருவார், எனக்கு ஞாபகம் உள்ளது,” என்றார் அவர்.

சுசிலா சொல்கிறார், ஊர்வன, பச்சோந்தி, தேள், நத்தையை தங்களால் பிடிக்க முடியும் என்று. “எங்கள் ஐயா இறந்த பாம்பை வைத்து மற்ற பாம்புகளை பிடிக்கும் முறையை கற்றுத் தந்தார்.” கொக்கி கொண்டு எவ்வாறு பாம்பு பிடிப்பது என்பதை அவர் கைகளை நீட்டி நம்மிடம் விளக்குகிறார். “போதிய பயிற்சியும், ஆர்வமும் இல்லாத காரணத்தால் எல்லோராலும் பாம்பு பிடிக்க முடிவதில்லை,” என்கிறார்.

தனது கிராமத்திற்கு பின்னுள்ள குன்றை சுட்டிகாட்டி சுசிலா சொல்கிறார், “உண்ண தகுந்த பழங்கள், மூலிகைகளை சரியாக கண்டறிய அய்யா கற்று தந்துள்ளார்.” நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது வழியில் தென்பட்ட பல செடிகளின் மருத்துவப் பயன்கள் குறித்து அவர் விளக்கினார்: எலும்பொட்டிச் செடி (ஓர்மாகார்பம் கோச்சிசைனீஸ்) காயங்கள், சுளுக்கு, அடிபட்ட மூட்டுகள், உடைந்த எலும்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. மூட்டு வலி, மூல நோய், கீல்வாதம், ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நிவாரணியாக அது திகழ்கிறது.

இச்சமூகத்தின் முதன்மை வருவாய் ஆதாரமாக இச்செடிகள் உள்ளன. பொடி வடிவில் இவற்றை கிலோ ரூ.300க்கு அவர்கள் விற்கின்றனர். உள்ளூர் சந்தைகளிலும், அண்டை கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் பெண்கள் நேரடியாக சென்று அவற்றை விற்கின்றனர்.

“இச்செடி பாம்பு கடிக்கு[விஷம் முறிக்கும்] மருந்தாக பயன்படுகிறது, ” என்று கூறியபடி அருகில் உள்ள பாம்புகொல்லி செடியின் தண்டுகளை அவர் உடைக்கிறார். கைகளை வீசியபடி பக்கவாட்டில் அமைந்துள்ள செடிகளை தொட்டுக் கொண்டு லேசாக சிரித்தபடி அவர் சொல்கிறார், “இங்கு செடிகள் குறைவாக உள்ளன. என்னுடன் வனத்திற்கு வாருங்கள், அங்குள்ள ஒவ்வொரு செடியையும் உங்களுக்கு நான் அடையாளம் காட்டுவேன். எங்களால் [இருளர்கள்] இது முடியும்!”

சிறுமியாக இருந்தபோது பள்ளியில் சேர்ந்தும் சுசிலா கல்வியை தொடர முடியவில்லை. அவரின் பெற்றோரது பொருளாதாரம் மற்றும் உடல்நலம் சரியில்லை. “என் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் சித்தி [தாயின் தங்கை] தான் என்னை வளர்த்தார். ஆறு அல்லது ஏழு வயது வரை அவர்கள் தான் என்னை வளர்த்தனர்,” என்று அவர் நினைவுகூருகிறார்.

இச்சமூகத்தினர் கருணைக் கிழங்கை அதிகம் விரும்பி உண்கின்றனர். கிழங்கு வகைகளையே இருளர்கள் உணவிற்கு அதிகம் சார்ந்துள்ளனர். சுசிலா  சமைப்பதற்காக வீட்டிற்கு வெளியே விறகு அடுப்பை(வலது) தயார் செய்கிறார். பிரித்விஸ்ரீ எடுத்த புகைப்படங்கள்

பள்ளியிலிருந்து இடைநின்ற பிறகு குடும்பத்திற்கு உதவியாக சுசிலா இருந்துள்ளார்: ஆடுகளை மேய்ப்பது, விறகு சேகரிப்பது, தரைக்கு சாணம் மெழுகுவது போன்ற வேலைகளுக்கு தலா ரூ.20 அவர் பெற்றுள்ளார்.

இச்சமூகத்தின் விருப்பமான உணவாக கருணைக் கிழங்கு உள்ளது. பண நெருக்கடி ஏற்படும் போது அவர்கள் கிழங்கு வகைகளையே உணவிற்கு அதிகம் நம்பியுள்ளனர். வெள்ளி- கொடி கிழங்கை தனக்கும் உறவுக்காரப் பெண் செல்விக்கும் (இப்பெயரை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார்) சுசிலா சமைக்கிறார். ஏரி படுகைகளில் இவ்வகை கிழங்குகள் அதிகம் விளைகின்றன. கொட்டி- கிழங்கு, ஷெட்டி கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்ற பிற வகை கிழங்குகளையும் இருளர் அதிகம் விரும்பி உண்கின்றனர்.

இந்த கிழங்குகள் எப்படி அறுவடை செய்யப்படுகின்றன என்பதை சுசிலா விளக்குகிறார்:” கொழுத்த வேர்கள் வெளியில் தெரியும் வரை கிராமத்து ஆண்கள் கவனமாக ஆழ குழி தோண்டுவர். கிழங்கின் மீது துருத்திக் கொண்டிருக்கும் புடைப்புப் பகுதியை தொடும்போது கவனமாக இருக்க வேண்டும். அது கடுமையான சிராய்ப்பை ஏற்படுத்தும். உண்ணத் தகுந்த அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு நிலத்தின் மேல் தெரியும் வேர் பகுதியை அப்படியே விட்டுவிடுவதால் அது மீண்டும் வளரும்.”

காட்டிலிருந்து சுசிலாவும், செல்வியும் சேகரிக்கும் செடிகளை மருந்து கலவைகளுக்கு பயன்படுத்தி உள்ளூர் சந்தைகளில் விற்கின்றனர். ஆனால் காட்டிலிருந்து இதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதற்கு எப்போதும் அனுமதி கிடைப்பதில்லை. “நாங்கள்  இருளர் என்பதை அரசு அதிகாரிகளிடம் உரிய ஆதாரங்களுடன் காட்டி நிரூபிக்க வாக்குவாதம் செய்திருக்கிறோம்,” என்கிறார் சுசிலா. அதிகாரப்பூர்வ சான்றுகளை கொடுத்தால் கூட, “எங்கள்  சமூகத்தின் பாரம்பரிய தலை முண்டாசு, பிற ஆபரணங்களை அணியாததால் அவர்கள் எங்களை நம்புவதில்லை. எங்கள் சமூக பாடல்களை பாடச் சொல்லி, கேட்ட பிறகே எங்களை இருளர்கள் என அவர்கள் ஏற்பார்கள்.”

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

பிரித்விஸ்ரீ (முதல் பெயரை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார்) மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பத்திரிகை துறையில் இறுதியாண்டு படித்த போது 2022ஆம் ஆண்டு பாரியில் பயிற்சி மாணவராக இருந்தார். “ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் தரப்படாத சுசிலா போன்ற இருளர் பெண்களின் வாழ்க்கை குறித்து அறிய பாரி எனக்கு உதவியது. அவர்களின் கலாச்சார நடைமுறைகளில் காணப்படும் சமூக அர்ப்பணிப்பை பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நான் உறுதியாக நினைத்தேன்.”

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.