மூங்கில் கூடை முடைவதற்கு 48 வயதாகும் அஜிதாவிற்குத் தேவைப்படும் ஒரே பொருள் கத்தி. சில கொத்து மூங்கில் துண்டுகளை செங்கோணமாக அடுக்கி ஒற்றை மூங்கில் துண்டைக் கொண்டு முடைகிறார். தேவைப்படும் வட்டத்தின் விட்டத்தை அடையும் வரை அவர் முடைகிறார்.

“நான் இதை [இக்கைவினைக் கலையை] 16 வயதில் கற்றேன்,” என்கிறார் அஜிதா. திருச்சூர் மாவட்ட சாலக்குடி வட்டத்தின் குட்டிச்சிரா கிராமத்தில் வாழ்ந்த விவசாயத் தொழிலாளியான அவரது தந்தையின் வருவாய், குடும்பம் நடத்தவே போதாத காரணத்தால் அவர் 10-ம் வகுப்பிற்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை.

கூடை முடைவதற்கு 48 வயதாகும் அஜிதாவிற்கு தேவைப்படுவது கத்தி மட்டுமே. டான் பிலிப் எடுத்த புகைப்படம்

கணவரின் உதவியோடு விளக்குகள், பேனா ஸ்டேண்டுகள், மூங்கிலில் செய்த பூக்களை கண்ணாடி குடுவையில் வைத்து முடையப்பட்ட மூங்கில், விசிறிகள், அனைத்து வடிவங்களிலும் அளவுகளிலும் கூடைகள் என பல்வேறு வகையான மூங்கில் பொருட்களை அஜிதா வடிவமைக்கிறார்.

“ஒரு கூடை முடைவதற்கு ஒன்றரை நாட்கள் ஆகும். ஒரு நாளில் முடித்துவிடுவேன். பிறகு நீட்டிக் கொண்டிருக்கும் மூங்கில் இழைகளை நறுக்கி மென்மையாக்க அரை நாள் ஆகும். அதிகக் கொத்துகளை அகற்றும்போது அதிகளவு பளபளப்பான மேற்பரப்பு கிடைக்கும்,” என்று அவர் விளக்கினார். விளக்கு மறைப்பு செய்வதற்கு இரண்டு நாட்களும், 8 முதல் 10 பூக்கள் அல்லது ஐந்து பேனா ஸ்டேண்ட் செய்வதற்கு ஒரு நாள் போதும். குடுவையைச் சுற்றி மூங்கில் முடைவது மிகவும் நுட்பமான பணி என்பதால் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

சுற்றி சிதறிக் கிடக்கும் அவரது மூங்கில் தயாரிப்புகள் ஒளிர்கின்றன. “மூங்கில் ஏற்கனவே பளபளப்பாக இருக்கும். எவ்வளவு உலர்ந்து உள்ளதோ அந்தளவு பளபளப்பு கொள்ளும்” என்றார் அவர். அரிதாகவே அஜிதா தனது தயாரிப்புகளின் மீது வார்னிஷ் பூசுகிறார். இது மூங்கிலை நீண்ட காலம் உழைக்காமல் பாதிக்கும் என அவர் நினைக்கிறார்.

அவரது வீடு இருக்கும் அதே பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலக்குடி மூங்கில் கார்ப்பரேஷன் பணிமனையில் மூங்கில் கிடைக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை சென்று அஜிதா அவற்றை வாங்கி வருகிறார் அல்லது அவரது வீட்டை கடந்து செல்லும்போது அவர்களே கொண்டு வந்து இறக்கி விடுகின்றனர். சுமார் 10 மீட்டர் நீளமுள்ள ஒவ்வொரு மூங்கில் கழியையும் ரூ.30 என 100 கழிகளை அவர் வாங்குகிறார். கழிகளை இறக்க வருபவர்களே மழையிலிருந்து அவற்றைக் காக்க அவரது சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சேர்த்துவிடுகின்றனர்.

2015ஆம் ஆண்டு அஜிதா தனது நிறுவனத்தை ஸ்ரீதீபம் கைவினைக் குழுமத்தில் பதிவு செய்தார். அவரது கணவரும், மகனும் (ஸ்கூட்டர் பழுது நீக்குபவர்) செய்து முடித்தப் பொருட்களைக் கொண்டு சேர்க்க உதவுகின்றனர். அவரது மகள் வேறு இடத்தில் வேலை செய்தாலும், அவ்வப்போது உதவுகிறார்.

“பெருந்தொற்று வந்தவுடன், மூங்கில் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் மோசமாக பாதித்துவிட்டது. எங்களது வருவாய் கண்காட்சிகளையும் உணவகங்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு விநியோகிப்பதையும்தான் அதிகம் சார்ந்திருக்கிறது,” என்றார் அஜிதா. கேரளாவைச் சேர்ந்த மனோரமா ஃபீஸ்டா மற்றும் பாம்பூ மிஷன் நடத்தும் வருடாந்திர மூங்கில் திருவிழா ஆகியவை முறையாக ஆண்டு விற்பனையை வழங்கியது. ஆனால் அவையும் 2020ம் ஆண்டின் ஊரடங்குகளின்போது ரத்து செய்யப்பட்டன. “நான் மாதந்தோறும் [பெருந்தொற்றுக்கு முன்பு] 30,000 முதல் 35,000 ரூபாய் வரை லாபம் ஈட்டுவேன். இப்போது அதில் சுமார் 20-30 சதவீதம் குறைந்துவிட்டது,” என்கிறார் அவர்.

நிறுவனத்தைத் தொடங்கும் முன் அஜிதா, சாலக்குடி கூட்டுறவு சங்கமான செரஃபிக் கைவினைகள் எனும் மூங்கில் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.

இணைய வர்த்தகம் வளர்ந்துள்ள போதிலும், அஜிதாவுக்கு அதில் நம்பிக்கை இல்லை. தனது தயாரிப்புகளை அவர்களால் முறையாக கையாள முடியாது என நினைக்கிறார். “என் தயாரிப்புகள் யாவும் மெல்லிய, உடையும் தன்மை கொண்டவை”, எனும் அவர் மெல்லிய நீண்ட மூங்கில் துண்டை வளைத்து அது உடைவதை காட்டுகிறார். ”அடியில் இறுக்கமாக, வலுவாக இருந்தாலும் முறையாக கையாளாவிட்டால் உருமாறிவிடும், ” என அவர் விளக்குகிறார். “எனக்கு பெரிய வசதியோ, பெரிய ஆதரவோ கிடையாது. எனது பொருட்கள் சேதமடைந்தால் எனது வருமானம் பாதிக்கும். எனவே என் பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களை என்னால் தாங்க முடியாது,” என்கிறார் அவர்.

பல வகை அலங்கார விளக்குகள், கூடைகள் என தான் செய்வதற்றை பார்த்தபடி பேசும் அஜிதா, “இந்த வேலையை நான் செய்யும்போது, வேறு எங்கும் வேலைசெய்து இதைவிட கூடுதலாக வருவாய் ஈட்ட முடியும் என கருதவில்லை. இந்தக் கைவினை மீதான ஆசையாலும் அர்ப்பணிப்பாலும் இதைச் செய்கிறேன்.”

ஊரடங்கில் வாழ்க்கைகள் எனும் தொடரின் ஒரு பகுதியாக இக்கட்டுரை வெளிவந்துள்ளது. இக்கட்டுரைக்கு உதவிய  மும்பை, புனித சேவியர் (தன்னாட்சி) கல்லூரியின் பேராசிரியர்கள் அக்ஷரா பதக் – ஜாதவ், பெர்ரி சுப்ரமணியம் ஆகியோருக்கு பாரி கல்விக் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Editor's note

மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் (தன்னாட்சி) டான் பிலிப் ஊடகத்தொடர்பு மற்றும் பத்திரிகைத் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிப் படிப்பின் ஒரு பகுதியாக, பாரிக் கல்வியின்  ஊரடங்கில் வாழ்க்கை தொடருக்கான ஒருங்கிணைப்போடு  இவர் கேரளாவில் மூங்கில் கைவினைக் கலைஞர்களின் பாதிப்பை வெளிப்படுத்த விரும்பினார்.  சிறு தொழில்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலையும், பெருந்தொற்று காலத்தில் மக்களின் தொழில்பாதிப்பால் ஏற்பட்ட பிரச்னைகளையும் அறிவதற்கு பாரியின் இத்திட்டம் உதவியது. அஜிதாவின் கதையை ஆவணப்படுத்துவதற்கான எனது முயற்சி, இத்தகையப் பணியை முழுமையாகச் செய்து நேர்த்தியுடன் முடிக்கும் பத்திரிகையாளர்களின் பணி  மிகவும் பாராட்டுக்குரியது.” என்று அவர் சொல்கிறார்

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.