காஷ்மீரில் ஊரடங்கு கற்பதற்கு தடையை கொண்டுவரவில்லை. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபோது 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டன. கலவரங்களை தடுப்பதற்காக எங்களுக்குள் ஒருவரையொருவர் தொடர்புகொள்வது தடுத்து வைக்கப்பட்டது. இணையதளம் முடக்கப்பட்டது. அதனால், படிக்கத் தேவையானவற்றை மாணவர்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியவில்லை. அப்போது ஆன்லைன் கல்வி வசதியும் இல்லை. 

எனது பெயர் தன்வீர் அகமது பட். எனக்கு 49 வயதாகிறது. நான் 17 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக உள்ளேன். எனக்கு தெரிந்த வேலை இது மட்டுமே. பந்திப்பூரேவின் சும்பல் வட்டத்தில் 4 பள்ளிகளில் நான் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன். அதில் ஒன்று துவக்கப்பள்ளி, மற்றொன்று நடுநிலைப்பள்ளி மற்றும் எஞ்சிய இரண்டும் உயர்நிலைப்பள்ளி.

தன்வீர் (49), 17 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். பந்திப்பூரேவின் சும்பல் வட்டத்தில் 4 பள்ளிகளில் அவர் ஆசிரியராக இருந்துள்ளார். புகைப்படங்கள் எடுத்தவர் மேநாசா தன்வீர்

நான் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கணக்கு கற்றுக்கொடுக்கிறேன். எனது மாணவர்கள் விவசாயிகள், வேளாண் கூலித்தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் குழந்தைகள். எனது மாணவர்களில் சிலர் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் கூட வாங்க வசதியில்லாதவர்கள்.

காஷ்மீரில் ஆசிரியராக இருப்பது மிகச்சவாலான ஒன்று, அதுவும் கடந்த சில வருடங்களாகவே நிலை மிக மோசமாக உள்ளது. தொடர் ஊரடங்கு, கல்வி நிறுவனங்கள் மற்றும் மற்ற பணியிடங்கள் மூடல் என்று நாங்கள் தொடர்ந்து பாதிக்கபடுகிறோம். நான் சில நேரங்களில் ஆசிரியர் ஆகியிருக்கக் கூடாது என்று நினைத்துள்ளேன். ஏனெனில் ஒரு ஆசிரியராக நான் எனது கடமையை முழுவதுமாக செய்ய முடியாது.

நான் வேடிக்கையான செயல்பாடுகள் மூலம் பாடம் நடத்துவேன். நான் எனது மாணவர்களுடன் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவேன். அட்டை தந்திரங்கள் கற்றுக்கொடுப்பேன். அவர்கள் சரியாக வாய்ப்பாடு ஒப்புவித்தால் அவர்களுக்கு பேனா போன்ற சிறு, சிறு பரிசு பொருட்கள் கொடுத்து உற்சாகப்படுத்துவேன். நான் அவர்களுக்கு நிகழ்தகவு கணக்கு நடத்தும்போது, கொஞ்சம் கூழாங்கற்கள், வண்ண பந்துகள், அட்டைகள் பயன்படுத்தி அவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி கற்றுக்கொடுப்பேன். நான் வண்ண பந்துகளை பையில் போட்டுவிட்டு, மாணவர்களை அதிலிருந்து ஒன்றை எடுக்கச்சொல்லி, மீண்டும் வரும் அந்த பந்தின் நிகழ்தகவு என்ன என்று பார்ப்பேன்.

காஷ்மீரில் சட்டத்திருத்தம் 370 அகற்றப்பட்டபின்னர், பள்ளிகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன. நான் மற்றும் என்னுடன் பணிபுரிந்த சிலரும் சேர்ந்து மீண்டும் பாடம் நடத்த துவங்குவதென்று முடிவெடுத்தோம். எனவே எனது கிராமத்தில் சமுதாய வகுப்புகள் நடத்த திட்டமிட்டோம். அது சும்பல் வட்டத்தில் உள்ள திர்கம் கிராமமாகும். இங்கு 4,485 பேர் உள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் படிப்பறிவில்லாதவர்கள். நாங்கள் உள்ளூரில் உள்ள மைதானத்தை பயன்படுத்தினோம். அங்குதான் எங்கள் ஊரில் உள்ள கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள். 

ஜாவித் அஹமது, தக்வீரின் உடன் பணிபுரிபவர் (இடது), திர்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள மைதானத்தில் சமுதாய வகுப்புகள் நடத்துகிறார்கள். அவரும் கணிதம் கற்பிக்கிறார்

நாங்கள் அனைத்து ஆசிரியர்களையும் எங்களுடன் சேர்ந்துகொள்ள அழைக்கிறோம்.  மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ற நேரத்தில் வரலாம். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை அல்லது தங்களது நண்பர்களை சந்திப்பதற்காகவே வருகிறார்கள். சிலர் வீட்டு வேலைகளை செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். இறுதியாக, எனது 60 மாணவர்களில் 10 முதல் 20 மாணவர்களே எங்கள் சமுதாய வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். நடந்துகொண்டிருக்கும் ஊரடங்கு எங்களுக்கு கூடுதல் பிரச்னைதான். எங்களுக்கு இந்த வகுப்புகளை தொடர்வதில் சிக்கல் ஏற்படுத்துகிறது. ஆனால், நாங்கள் தொடர்ந்து எங்கள் மாணவர்களுக்கு 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் குளிர்கால விடுமுறை வரை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தோம்.

2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு அரசு அனுமதித்தது. நான் எனது மாணவர்களை சந்திப்பதற்கு மிகுந்த ஆவலாக இருந்தேன். ஷேயா ரவோப் என்ற 9ம்  வகுப்பு மாணவி என்னிடம் கூறியது நன்றாக எனது நினைவில் உள்ளது. அவர் பள்ளிக்கு வந்தபோது, இப்போதுதான் முதல் முறையாக பள்ளிக்கு வருவதுபோல் உணர்கிறேன் என்று ஆச்சர்யத்துடன் என்னிடம் கூறினார். பள்ளி திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அவரது காலனிகளை சுத்தம் செய்து, பள்ளி சீருடைகளை துவைத்து, அயர்ன் செய்து வைத்தார். நாங்கள் அனைவருமே எங்கள் திர்கம் அரசு பள்ளியில் நுழைந்தபோது உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருந்தோம். ஆனால், ஒரு மாதத்திற்குள்ளாகவே கோவிட் – 19 தொற்றை தொடர்ந்து 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

இடது : ஷேயா ரவோப் (13), திர்கம் அரசு பள்ளிக்கு வெளியே நிற்கிறார். அவர் நடந்து வந்தால் 10 நிமிடத்தில் பள்ளிக்கு வந்துவிடுவார். அவர் வழக்கமாக (வலது) இந்த வழியில்தான் தனது தோழிகளுடன் நடந்து வருவார். ஊரடங்குக்கு முன்னர், மற்ற கட்டுப்பாடுகள் அதை தற்காலிகமாக மூடுவதற்கு வழிவகுத்தது. புகைப்படங்களை எடுத்தவர் பௌசியா பயாஸ்

நேரடி வகுப்புகள் கிடையாது என்பது தெளிவாக தெரிந்த பின்னர், நான் எனது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கினேன். 2ஜி வேகத்தில் நாம் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. மாணவர்களால் திரையை முழுமையாக பார்க்க முடிவதில்லை. எங்களின் குரலையும் அவர்களால் நன்றாக கேட்க முடியவில்லை. நாங்கள் அனுப்பும் வீடியோக்களையும் அவர்களால் முழுமையாக பதிவிறக்கம் செய்து பார்க்க முடிவதில்லை.

எனது மாணவர்களுக்கு ஆர்வம் குறைய துவங்கிவிட்டது. எங்கள் வகுப்பில் தொற்றுக்கு முன்னர் 60 மாணவர்கள் இருந்தார்கள். டிஜிட்டல் சாதனங்களை 9 முதல் 10 மாணவர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியும் என்பதால், 10 மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கிறார்கள். [காஷ்மீரில், கிராமப்புறத்தில் 3.5 சதவீத வீடுகளிலே கணினி வசதி உள்ளது. அதில் 2.87 சதவீத வீடுகளிலே இணையதள வசதி உள்ளது. 2018 தேசிய மாதிரி கணக்கெடுப்பு 75ல் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மாநிலம் மோசமான இணையதள முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ஜநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் 2019ம் ஆண்டு கொடுத்தது.]

[ஷேயா போன்ற மாணவிகளுக்கு] திரையை நன்றாக பார்க்க முடிவதில்லை, அவரால் எங்கள் குரலை முழுமையாக கேட்க முடியவில்லை. அவர்களுக்கு நாங்கள் அனுப்பும் வீடியோக்களையும் முழுமையாக பார்க்க முடியவில்லை.’ புகைப்படங்களை எடுத்தவர் பௌசியா பயாஸ்.

2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோவிட் – 19 தொற்று குறைய துவங்கியது. நாங்கள் எங்கள் சமுதாய வகுப்பறையை துவக்கினோம். பந்திபோராவின் முதன்மை கல்வி அலுவலரின் அலுவலகம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இதை சிறந்த வழியாக கருதியது. எனவே எங்களை தொடர்ந்து செய்யும்படி கூறியது. நான் அரசு பள்ளி அருகிலேயே சமுதாய வகுப்பை நடத்தியதால், என்னால் எளிதாக பள்ளியின் வெள்ளை பலகையை 10 நிமிடம் நடந்து மைதானத்திற்கு எடுத்துச்செல்வது மிக சுலபமாக இருந்தது. எங்கள் வகுப்பு நடப்பதை ஒவ்வொரு வகுப்பையும் புகைப்படம் எடுத்து, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்னரும் நாங்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினோம். அந்த புகைப்படங்களின் வழியாக அங்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் வருகை பதிவு செய்துகொள்ளப்பட்டது.

தேர்வு காலம் வந்தபோது, நாங்கள் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும். எனது 6 ஆசிரியர்கள் மற்றும் நானும், போன் வசதி இல்லாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து எங்கள் போன்களை கொடுத்து அவர்களை தேர்வெழுத செய்தோம்.

கோவிட் அலை அதிகரித்து வருவதன் காரணமாக சமுதாய வகுப்பறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசு ஆசிரியராக பள்ளியில் வகுப்பெடுப்பதை கடந்து எங்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. இடர்பாடு காலங்களில் நாங்கள் பாதுகாவலராக இருக்க வேண்டும். கணக்கெடுப்பு காலங்களில் அரசு அலுவலராக இருக்க வேண்டும். தேர்தல் காலங்களில் காவல்துறையினர். தற்போது கோவிட் தொற்று காலங்களில் ஆசிரியர்கள் மருத்துவ அலுவலர்களாக இயங்கவேண்டிய நிலை உள்ளது. இவையனைத்திற்கும் எவ்வித நிதி உதவியும் கிடையாது. நாங்கள் நினைத்த விஷயங்களை எங்களால் செய்ய முடியாது. மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல விரும்பினால் கூட எங்கள் விருப்பத்திற்கு செயல்பட முடியாது. நாங்கள் எங்கள் பள்ளி என்ற நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டவர்கள்.

இந்த ஊரடங்கு, தொற்று காலம் முழுவதும் நான் என் குடும்பத்தினரைவிட்டு விலகியே இருக்க வேண்டிய நிலை இருந்தது. எனது மனைவி மெக்நாசா (45), மகன்கள் உமர் (12), தஹா (8). பள்ளி மூடப்பட்டதாலும், சுற்றிலும் இருந்த மற்ற பிரச்னைகளாலும் அச்சத்திலும், மன அழுத்தத்திலும் இருந்த எனது மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதிலே நான் நிறைய நேரத்தை செலவிட்டேன். அதனால், என்னால் என் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. சில நேரங்களில் எனது அறிவுரைகள் உதவியது. ஆனால் அது எப்போதும் கிடையாது.

அவர்களால் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சில நேரங்களில் எனது மாணவர்களுக்கான கட்டணத்தை நான் செலுத்தியிருக்கேன். நான் அவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் ஆகியவற்றையும் வாங்கிகொடுத்துள்ளேன். எனது சம்பளமும் தொற்று காலத்தில் தாமதமாகத்தான் கிடைத்தது. எனது சேமிப்பில் இருந்து எனது வாழ்க்கையை நடத்தினேன்.

‘ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும்போது, நான் ஏதோ படத்தில் நடிப்பதுபோல் இருக்கும். தனியாக ஒரு அறையில் இருந்துகொண்டு, ஒரு கேமராவின் முன் நடித்துக்காட்டுவதுபோல் இருக்கும்.’ படங்கள் எடுத்தவர் பௌசியா பயாஸ்

நான் வளர்ந்தபோது, நான் எனது பெற்றோர் மற்றும் நான்கு உடன் பிறந்தவர்களுடன் கூட்டுக்குடும்பத்தில் வசித்தேன். நால்வரில் நான்தான் இளையவன். மறைந்த எனது பெற்றோர் இருவரும் நன்றாக படித்தவர்கள். எனது தாய், திர்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. எனது தந்தை பந்திபோராவின் சும்பல் நகரில் காவல்துறை ஆய்வாளர். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சும்பலின் கல்வியறிவு விகிதம் 35 சதவீதம். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தில் நான் பிறந்தது எனது அதிர்ஷ்டம். நான் குழந்தையாக இருந்தபோது, எனது தாய் என்னை தனது பள்ளிக்கு அழைத்துச்செல்வார். எனது தாயை பார்த்து நானும் ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினேன்.

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வழக்கமான அளவு இணையதள வேகம் காஷ்மீரில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வம் இல்லை. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் ஓரிரு மாணவர்களும் தங்களுக்கு சோர்வாக உள்ளதாகவும், அழுத்தம் ஏற்படுவதாகவும், வகுப்புகள் நடக்கும்போது, திரையை பார்ப்பதால், கழுத்து வலி எற்படுவதாகவும் கூறுகிறார்கள். தொடர் ஊரடங்கு மற்றும் பிரச்னைகளால், பாடம் தவிர கூடுதலாக ஒன்றும் கற்க முடியவில்லையென்றும், தங்கள் நண்பர்களை பார்த்து விளையாட முடியவில்லையென்றும் கூறுகிறார்கள். அவர்கள் கைதிகள் போல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப்போல் உணர்கிறார்கள்.

மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் மனப்பிரச்னைகள் உள்ளது. நாங்கள் பாடம் நடத்துகிறோம், ஆனால், எங்களால் மாணவர்களை பார்க்வோ அல்லது சந்திக்கவோ முடியாது. ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது, நான் ஏதோ திரைப்பட உலகில் இருப்பதுபோல் உணர்கிறேன். தனியறையில் இருந்துகொண்டு திரையில் நடித்துக்காட்டுவதுபோல் தோன்றும்.

Editor's note

பௌசியா பயாஸ், காஷ்மீரின் பந்திபோரா வட்டம் சும்பலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். பாரி கல்விக்கு செய்தி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார். இதற்காக பல மாதங்களாக வேலை செய்தார். அவ்வப்போது ஏற்படும் இணையதள துண்டிப்பு மற்றும் நீக்கம் புகைப்படங்களை அனுப்புவதிலும், தகவல்களை சேகரிப்பதிலும் அவருக்கும் கடும் பிரச்னைகளை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில், “இந்த செய்தி குறித்து தகவல் சேகரிக்கும்போது, இதழியல் என்றால் என்ன என்பதை நான் நன்றாக தெரிந்துகொண்டேன். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்துக்கும் ஆதாரம் தேவை. இந்த செய்தி மூலம் காஷ்மீர் போன்ற பிரச்னை நிறைந்த இடங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குரலை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்த பள்ளத்தாக்கில் மாணவர்கள் தொடர் இணையதள முடக்கத்தால், என்னைப்போலவே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது.“


தமிழில்: பிரியதர்சினி. R. மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.