நான் இஸ்திரி போடும் வேலை செய்கிறேன். நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் கான்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். படிக்க பிடித்திருந்ததால் கல்லூரி சென்று பட்டம் பெற்றேன். படித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். பி.ஏ பட்டம் பெற்ற பிறகு உள்ளூர் வங்கிகளில் மேலாளர் வேலை, எழுத்தர் வேலை (அரசு குமாஸ்தா) மற்றும் ரயில்வே துறைக்கும் நான் விண்ணப்பித்தேன். குடும்பம், பணம், தொடர்புகளின்றி படிப்பு ஒருபோதும் வேலையை உறுதி செய்யாது என்பதை விரைவாக நான் உணர்ந்தேன்.

என் பெயர் ஃபகீர் லால் கன்னாவுஜியா. எனக்கு 55 வயதாகிறது. நான் சண்டி வட்டாரம் ஹர்தோய் மாவட்டம் பில்கிராம் தாலுக்காவில் உள்ள பாகியாரி கிராமத்தில் பிறந்தேன். உத்தர பிரதேசத்தின் கான்பூரிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டெல்லியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவு.

நான் மாணவனாக கான்பூரில் இருந்தபோது, எனது நண்பர்களுடன் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தோ, மிதிவண்டியிலோ வகுப்பிற்கு செல்வோம். பேசிக் கொண்டே செல்வதால் பயணக் களைப்பே தெரியாது. நண்பர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்வேன். கல்லூரியில் புவியியல், பொருளாதாரம், குடிமையியல், சமஸ்கிருதம், இந்தி எனக்குப் பிடித்த பாடங்கள். நீங்கள் கல்விக் கற்றது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பட்டதாரியான பிறகு கான்பூரில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. என் சகோதரனுடன் நான் டெல்லிக்கு வந்தேன். 1988ஆம் ஆண்டு முதல் இங்கு இருக்கிறேன். துணிகளுக்கு இஸ்திரி போட்டு ஜீவனம் செய்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கு கிடைக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். இந்தியா கேட்டை பார்க்கிறேன், ரயில்வே அருங்காட்சியகத்தையும் [டெல்லியில்] நான் பார்க்கிறேன்!

நான் முதலில் இங்கு வந்தபோது தெற்கு டெல்லியில் என் மாமாவுடன் வசித்தேன். அவர் ஒரு இஸ்திரிக்காரர். அவர் நான் இருக்கும் இடத்தில் வேலை செய்யவில்லை. தெற்கு டெல்லியில் குடியிருப்பு காலனியில் வேலை செய்தார். 1991ஆம் ஆண்டு என் மகள் ரூபி பிறந்தபோது, நானும் என் மனைவி குட்டியும் அவரது வீட்டிலிருந்து வெளியேறி ஜூக்கியில் [குறைந்த வருவாய் கொண்டவர்களின் தற்காலிக வீடுகளை கொண்ட குடியிருப்பு] வசிக்க தொடங்கினோம். தெற்கு டெல்லியின் ஜசோலா அருகே எங்கள் ஜூக்கிஸ் தொகுப்புகள் முற்றிலுமாக இடிக்கப்படும் வரை 12 ஆண்டுகள் நாங்கள் அங்கு வசித்தோம். பிறகு வேலை செய்யும் இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிதாப்பூருக்கு நாங்கள் நகர்ந்தோம்.

பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்திலேயே இஸ்திரியிலிருந்து கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்தும் அளவிற்கு போதுமானதாக இல்லை. கூடுதல் பணத்திற்காக கார்களை கழுவுவேன். முதல் ஊரடங்கு அறிவித்தவுடன், இரண்டு மாதங்கள் என்னால் வெளியே வர முடியவில்லை. எனக்கு முறையாக இஸ்திரி வேலை கொடுத்து வந்த 13 குடும்பங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாதந்தோறும் எனது ரேஷன் பொருட்களான 16 கிலோ கோதுமை, நான்கு கிலோ அரிசி வாங்குவதற்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வருவேன்.

இப்போது இந்த வயதில் என்னால் அதிகம் [வேலை] செய்ய முடியாது. ஆனால் குடும்பச் செலவுகளுக்கு இப்போதும் பணத் தேவையில் நாங்கள் இருக்கிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட உடன், எனது வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் மட்டுமே திரும்பினர். இப்போது இரண்டாவது அலை, [கோவிட்-19] காலனியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே என்னை வந்து செல்ல அனுமதிப்பது உதவுகிறது. காலனியை அடைவதற்கு ஒரு மணி நேரம் மிதிவண்டியில் நான் செல்ல வேண்டும்.

நான் இஸ்திரி வேலைக்கு வந்தபோது ஒரு கிலோ கரி இரண்டு ரூபாய்க்கு விற்றது[1991ஆம் ஆண்டில்]. இப்போது கிட்டதட்ட 40 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் இஸ்திரி துணிக்கான விலை மட்டும் மாறவில்லை. ஒரு துணிக்கு எனக்கு ஐந்து ரூபாய் தான் கிடைக்கிறது, முன்பு [ஒரு தசாப்தத்திற்கு முன்பு] எனக்கு நான்கு ரூபாய் கிடைக்கும். உண்மையில் என் வருமானம் உயரவே இல்லை, ஆனால் இந்த வருமானத்தில் நாங்கள் வசிக்கும் [மிதாபூரில்] இந்த வீட்டை வாங்க முடிந்தது.

‘இஸ்திரி வேலையை நான் தொடங்கிய போது கரி ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு[1991ஆம் ஆண்டில்] விற்றது. இப்போது 40 ரூபாய்க்கு வந்துவிட்டது.’ ரோஹன் சோப்ரா எடுத்த புகைப்படம்

நாள் முழுவதும் சூடான இரும்புடன் வேலை செய்வதால் நிறைய வியர்க்கும், நெருப்புக் கரிபட்டு காயங்கள் ஏற்படும். இரும்பிலிருந்து அதிகளவு வெப்பம் வெளியேறும். கடந்த 33 ஆண்டுகளில் டெல்லியின் கோடைக்காலங்கள் அதிக சூடாக மாறியுள்ளன. நான் இந்த வேலையை இப்போதும் செய்கிறேன். கோடைகளில் சிலசமயம் என்னால் தாங்க முடியாது. நிறைய தண்ணீர் குடிப்பேன். ஆனால் அதுவும் போதாது. நான் சோர்வடையும் போது என் மனைவி குட்டி இஸ்திரி வேலையை எடுத்துக் கொள்வாள். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இஸ்திரி செய்யப்பட்ட துணியை கொண்டு சேர்த்துவிடுவாள்.

எங்கள் 19 வயது மகன் வினய் டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை பி.ஏ படிக்கிறான். புவியியல், வரலாறு, அரசியல் அறிவியல், இந்தி ஆகியவை அவனது பாடங்கள். ஊரடங்கிற்கு முன் அவ்வப்போது அவன் எங்களுக்கு உதவி செய்வான். இப்போது யாருக்காவது துணியை கொண்டு கொடுக்கும் வேலையை மட்டும் அவன் செய்கிறான்.

ஃபகீரின் மகன் வினய் (வலது) ஊரடங்கிற்கு முன் அடிக்கடி உதவி செய்துள்ளான். இப்போது தேவைப்படுவோருக்கு துணியைக் கொண்டு சேர்க்கும் வேலையை மட்டும் செய்து தனது தந்தைக்கு உதவுகிறான். ரோஹன் சோப்ரா எடுத்த புகைப்படம்

எனது கிராமத்தில் எனக்கு நான்கு பிகாஸ் (சுமார் இரண்டு ஏக்கர்) நிலம் சொந்தமாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு எனது மாமா [தந்தை வழி மாமா] தேஸ்ராஜிடம் ஒப்பந்தம் செய்துவிட்டேன். அவர் நிலத்தை நிர்வகித்து அறுவடையில் கிடைக்கும் பாதியை எனக்குக் கொடுக்கிறார். எங்கள் நிலத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி உள்ளது. அங்கு வேம்பு, கருவேலம், எலந்தை போன்ற பல வகையான மரங்கள் இருக்கின்றன. காட்டிலிருந்து வரும் பசுக்களும், குரங்குகளும் எங்கள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. அங்கு மனிதர்களைவிட குரங்குகள் அதிகம் உள்ளதால் அவற்றை விரட்ட இரவு வரை விவசாயிகள் கண் விழித்திருக்க வேண்டும்.

நான் இளைஞனாக இருந்தபோது – கோதுமை, கம்பு, சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை எனப் பல வகையான பயிர்களை விளைவித்து நிறைய பணம் ஈட்டினேன். இன்று ஒரு பிகா நிலத்தில் கோதுமை பயிரிட சுமார் 5000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இப்போது நாங்கள் கோதுமை மட்டுமே விளைவிக்கிறோம். எங்களுக்கு அறுவடையில் இரண்டு குவிண்டால் கிடைப்பதால் எங்கள் தேவை போக மிச்சத்தை விற்கவும் செய்கிறோம்.

விவசாயம் என்பது மிகவும் கடினமான தொழிலாகிவிட்டது. விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே நிலத்தில் எது நன்றாக விளையும் என்பது தெரியும். மூன்று புதிய வேளாண் சட்டங்களும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்மை செய்பவை. விவசாயிகளுக்கு இதனால் எந்த பலனும் இல்லை என்பதால் அவர்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர்.

Editor's note

ரோஹன் சோப்ரா அஷோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவர். 2021 கோடையில் அவர் பாரி பயிற்சி மாணவராக இருந்தார். தனது வசிப்பிடத்தில் அன்றாடம் பிறருக்கு சேவை செய்யும்  மக்களின் வாழ்க்கையை அறிவதற்காக இத்தலைப்பை அவர் தேர்வு செய்தார். அவர் சொல்கிறார், என்னை சுற்றி சிறிதளவு மட்டுமே தெரிந்த மனிதர்களுடன் உரையாட பாரி உதவியது, நான் இப்போது கன்னாவுஜியாவுடன் நட்பாகிவிட்டேன். முடிந்த போதெல்லாம் அவரைச் சந்திக்கிறேன். இயற்கை, வாழ்க்கை பற்றி அவர் நிறைய கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார், புற்களில் வெறும் கால்களில் நடக்கும் இன்பத்தை அவர் எனக்கு கற்றுத் தந்தார்.

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.