ஒரு ஜோடி செருப்புகள் மட்டும் போட்டுக் கொண்டு ஹரிச்சந்திரகாட் மலைக் கோட்டையின் பாறைகள் நிறைந்த பாதையில் வழிகாட்டுகிறார் 72 வயது அனுசுயாபாய்/ மேற்கு தொடர்ச்சி மலையில் 4,710 அடி உயரத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கோட்டைக்கு கடந்த பத்து வருடங்களாக ஏறி வந்து கொண்டிருக்கிறார் அவர். 2012ம் ஆண்டில் மலை உச்சியில் ஓர் உணவகம் வைக்க அவரது குடும்பம் தீர்மானித்ததிலிருந்து அவரின் மலையேற்றம் தொடங்குகிறது. மேலே செல்லும் ஒரே வழி நடைதான். கிட்டத்தட்ட 60-80 டிகிரி கோணத்தில் சரிந்திருக்கும் அப்பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரம் ஏறவும் இறங்கவும் மூன்று மணி நேரங்கள் ஆகும். 

பிற்பாடு அதிகரித்த சுற்றுலா பயணி வரத்துக் காரணமாக, கீழே இருக்கும் சமவெளியில் ஒரு வசிப்பிடத்தையும் ஏற்பாடு செய்து வருமானம் ஈட்டியது அனுசுயாபாயின் குடும்பம். எழுபது வயதுகளில் இருக்கும் அவர், மலையேறும் திறனாலும் வீட்டு உணவு அளிப்பதாலும் மலையேறும் சமூகத்தின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

“எனக்கு ஷூக்கள் வேண்டுமா எனப் பலர் கேட்கின்றனர். எனக்கு செருப்புகள்தான் வசதியாக இருக்கின்றன,” என்கிறார் பாரம்பரிய மகாராஷ்டிரப் புடவை உடுத்தியிருக்கும் அனுசுயா பதாத். வழக்கமாக அவர் ஓர் உதவியாளரையும் அழைத்துச் செல்வார். மலையுச்சியில் அவர் நடத்தும் உணவகத்துக்கான உணவுப் பொருட்களை இருவரும் கொண்டு செல்வார்கள். மலையுச்சியில் உணவளிக்கும் ஒரே இடம் அதுதான். மலையேற்றக்காரர்கள் விரும்பும் இடமாக அது இருக்கிறது.

பிரபல உணவகம் மண் மற்றும் மரக் கட்டைகளால் உருவாக்கப்பட்ட ஒரு குடில் ஆகும். ஒவ்வொரு முறை கனமழை பொழிந்து முடிந்த பிறகும் அட்ந்த இடம் மீண்டும் கட்டப்பட வேண்டியிருக்கிறது. “மழைகள் எப்போது கடுமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். முன்பே உணவகத்தை மூடிவிடுவதால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பர்,” என்கிறார் அனுசுயாபாய். மீண்டும் கட்டுவதற்கு இரண்டு வாரங்கள் பிடிக்கும்.

ஹரிச்சந்திரகாட் மலையடிவாரத்தில் குடும்பம் ஒரு வசிப்பிடத்தையும் கட்டியிருக்கிறது. அகமது நகர் மாவட்டத்தின் அகோலா ஒன்றியத்திலுள்ள பச்சனை கிராமத்தில் அமைந்திருக்கும் வசிப்பிடத்தின் ஒரு பக்கத்தில் கோட்டையும் மறுபக்கத்தில் காடும் இடம்பெற்றிருக்கிறது. 

ஹரிச்சந்திரகாட் கோட்டை ஆறாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். அப்பகுதியின் முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. “ஜூலை தொடங்கி டிசம்பர் வரையிலான சீசன் காலத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் 100-150 சுற்றுலாப் பயணிகள் உணவுக்கு வருவதுண்டு. விளையாட்டுகளுக்காகவும் பலர் வருவார்கள். பிறகு அருவிக் காலம் (மழைக்குப் பின்) தொடங்கும்,” என்கிறார் மலையுச்சியில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு பணி செய்ய வார இறுதியில் மலையேறும் அனுசுயாபாய். “கோட்டைக்கு வர மார்ச் மாதம் வரை நல்ல காலம். அதற்குப் பிறகு பயணிகள் வருவது கிடையாது,” என்கிறார் அவர்.

கிராமத்தின் பெரும்பாலான வீடுகள் ஓலை வேயப்பட்டு செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. மண்வீடான பதாதின் வீட்டில் ஒரு மின் விளக்கு சமையலறைக்கும் கழுவும் அறைக்கும் வெளிச்சம் தருகிறது. அவர்கள் உணவு பரிமாற நீண்ட ஒரு சிமெண்ட் பலகை உண்டு. இரவு நேரத்தில் விருந்தினர்கள் குட்டி தூக்கம் அதில் போட்டுக் கொள்ளலாம். மதிய உணவின் விலை ரூ.150. காய்கறிகள், சோறு, பருப்பு மற்றும் ஊறுகாய் ஆகியவற்றுடன் எத்தனை சப்பாத்திகளும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். செலவுகள் போக, அக்குடும்பம் வாரத்துக்கு 5,000-லிருந்து 8.000 ரூபாய் வரை பணம் ஈட்டுகிறது.

அது ஆகஸ்ட் மாதம். உற்சாகம் மிகுந்த மலையேற்றக்காரர்களைக் கொண்ட ஒரு பேருந்து மலையடிவாரத்திலுள்ள வசிப்பிடத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் பின்னிரவில் வந்து நிற்கிறது. மூத்த மகனான பாஸ்கர் பதாத், அவர்களை வரவேற்று இரவு நேரத்தில் வழி காட்ட ஓடுகிறார். எங்கே வாகனம் நிறுத்த வேண்டுமென அவர்களுக்குச் சொல்கிறார். வசிப்பிடத்துக்குள் நுழைவதற்கு முன் ஷூக்களை எங்கு விட வேண்டுமெனவும் அவர் கூறுகிறார். அவரது இளைய மருமகளான ஆஷா, ஆயிக்கு – அனுசுயபாயை அப்படித்தான் அழைக்கின்றனர் – மலையேற்றக்காரரர்கள் அமர பாய்கள் விரிக்கவும், ஒரு பானையின் குடிநீர் ஏற்பாடு செய்யவும், குழுவுக்கு சுடச்சுட தேநீர் தயார் செய்யவும் உதவுகிறார். அனுசுயாவின் கணவரான நாது பதாத், மலையேற்றக்காரர்களுடன் உரையாடத் தொடங்க காலை உணவான அவலை பாஸ்கர் பரிமாறுகிறார். “2011-12 -லிருந்து சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்கிறார் பாஸ்கர். 

வார இறுதிகள், இரு உணவகங்களை நடத்துவதிலேயே சென்றுவிடும். வாரநாட்களில் அனுசுயாபாயும் அவரது குடும்பமும் அவர்களின் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்கின்றனர். “முன்பு, வெறும் நான்கு அல்லது ஐந்து மூட்டைகள் அரிசிதான் கிடைக்கும். இப்போது கூடுதல் தொழிலாளர்களுடனும் மரபணு மாற்ற விதைகளுடனும் 20-30 மூட்டைகள் அறுவடை கிடைக்கிறது. இதில் பெரும்பாலும் மலையேற்றக்காரர்களுக்கு அளிக்கவே பயன்படுகிறது,” என்கிறார் 40 வயது பாஸ்கர். மிச்சத்தை குடும்பம் தன் பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்கிறது.

வார இறுதி விருந்தினருக்கான பொருட்களை வாங்கி வைக்க, அனுசுயாபாய் ராஜூருக்கு திங்கட்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் செல்கிறார். ராஜூர், பச்சனைக்கு அருகே இருக்கும் ஊராகும். சாலை குண்டும் குழியுமாக இருக்கும். “இரண்டுக்கும் இடையிலான தூரம் 25 கிலோமீட்டர். மோட்டார்பைக்கில் அங்கு செல்லவே எங்களுக்கு ஒன்றரை மணி நேரம் பிடிக்கும்,” என்கிறார் பாஸ்கர்.

700 பேர் கொண்ட பச்சனை கிராமத்தில் 155 குடும்பங்கள் இருக்கின்றன. பல வசதிகள் இல்லை என கிராமத்தில் வசிப்பவர்கள் சொல்கின்றனர். பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. “அரசின் உணவுப் பொருட்கள் எங்கள் கிராமத்துக்கு வருவது நீண்ட காலத்துக்கு முன்பே நின்றுவிட்டது,” என்கிறார் அனுசுயாபாய். எனவே கிராமவாசிகள் பிரச்சினையை தங்களின் கைகளில் எடுத்துக் கொண்டனர். உள்ளூர் கிணற்றில் உள்ள நீர் குடிப்பதற்கு முடியாமல் ஆனபோது, “மலையேற்றத்துக்கென கிராமத்துக்குள் வரும் வாகனங்களிலிருந்து ஒன்றிரண்டு ரூபாய் வாங்கி சேகரித்து, அருகே இருக்கும் நீர்வீழ்ச்சியின் அடியில் குழாய்களும் மோட்டாரும் போட பயன்படுத்திக் கொண்டோம்,” என்கிறார் நாது. சமீபத்தில் வனத்துறையால பொது குளியலறைகள் கட்டப்பட்டன.

அனுசுயாபாய் அருகாமையிலிருக்கும் கொதாலேவில் பிறந்தவர். 16 வயதில் அவர் நாதுவை மணம் முடித்துக் கொண்டு பச்சனைக்கு இடம்பெயர்ந்தார். பத்தாண்டுகளுக்கு பிறகு, நல்ல வாய்ப்புகள் தேடி பலரும் வெளியூருக்கு சென்றதில் பெரிய குடும்பம் உடையத் தொடங்கியது. “ஆயி நிலத்தில் வேலை பார்ப்பார். பக்கத்து கிராமமான நாராயண்கோவனுக்கு சென்று தினக்கூலித் தொழிலாளராக வேலை செய்து 12 மணி நேர வேலைக்கு 40-50 ரூபாய் வருமானம் ஈட்டினார்,” என நினைவுகூர்கிறார் பாஸ்கர்.

மலை ஏறுபவர்களால் கூட கடினமாகக் கருதப்படும் மலையேற்றத்தைக் கொண்டது ஹரிச்சந்திரகாட் மலை. பெரும்பாறைகளை கொண்ட சரிவான ஏற்றம் அது. படிக்கட்டுகள் கிடையாது. நீர்வீழ்ச்சிக்குக் கீழ் இருக்கும் வழுக்கும் பகுதிகள் ஆபத்தைக் கூட்டுபவை. பாதையின் சில பகுதிகளில் மலையேறுபவர்கள் பைகளை கழற்றி நான்கு கால்களில் தவழ வேண்டும். ஆனால் தலையில் சுமைகளை சுமந்தபடி ஆயி இந்த மலையேற்றத்தை சமாளிக்கிறார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுசுயாபாய், கொகன்கதா சிகரத்திலிருந்து (1,800 அடி) 500 அடிக்குக் கீழ் கயிற்றில் தொங்கியிருக்கிறார். “பல காலமாக சிகரத்திலிருந்து கயிறு கட்டி தொங்கிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறேன். முதிய பெண்ணை யார் செய்ய விடுவார்கள்,” என்கிறார். 

இக்கட்டுரை எழுதுவதில் உதவிய கணேஷ் கீத் மற்றும் பாஸ்கர் பதாதுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

ருதுஜா கைதானி, மும்பையின் புனித சேவியர் கல்லூரியில் வெகுஜன ஊடகம் மற்றும் இதழியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர். ஷுபம் ரசல், புனேவின் சதிஷ் பிரதான் தியானசத்னா கல்லூரியில் 2021ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர். “அறிந்திருந்தாலும் ஏற்க மறுக்கும் ஓர் உலகத்துக்கு எங்களை இக்கட்டுரை அழைத்துச் சென்றது. கிராமவாசிகள் அவர்களின் பிரச்சினைகளை வேறொரு கோணத்தில் நாங்கள் பார்க்க உதவினர்,” என அவர்கள் கூறுகின்றனர்.

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்