மும்பை ஆசாத் மைதானத்தில் மஹாராஷ்டிரா முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் ஜனவரி 24 – 25 தேதிகளில் சம்யுக்தா செத்காரி காம்கர் மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்த தில்லி விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. மும்பையில் உள்ள விக்ரோலி மற்றும் அந்தேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 16 வயது ஓம்பிரகாஷ் மற்றும் 18 வயது கிருஷ்ணா குப்தா ஆகியோர் தாங்கள் அங்கு சந்தித்த மக்களின் குரல்களை ஆவணப் படுத்துவதற்கும் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புகைப்படம் எடுப்பதற்கும் போராட்ட களத்தில் தங்களது நேரத்தை செலவிட்டனர். அவ்வாறு செய்கையில் அவர்கள் நமது உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் அதை உருவாக்கும் மக்களின் வாழ்க்கையை பற்றியும் கொஞ்சம் கற்றுக் கொண்டனர்.
ஓம் பிரகாஷ்
ஆசாத் மைதானத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து நான் இறங்கியபோது விவசாயிகளின் கோஷங்களை நான் கேட்க நேர்ந்தது: “கருப்புச் சட்டங்களை திரும்ப பெறுங்கள்”, “அதானி அம்பானி ஹை ஹை”. போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் சிவப்பு கொடிகள் ஏந்தி இருப்பதை கண்டு நான் அவர்களை மைதானத்திற்கு பின் தொடர்ந்து சென்றேன். 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மொத்த மைதானமும் விவசாயிகள் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வந்த மக்களால் நிரம்பி இருப்பதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதுவரை வேளாண் சட்டங்களின் எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் விவசாயிகள் தில்லிக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தான்.


அன்று நான் ஆசாத் மைதானத்திற்கு வருவதற்கு முன்புவரை விவசாயிகள் தங்களது விளைச்சலை மண்டியில் விற்பார்கள் என்பது எனக்குத் தெரியும் அங்கிருந்து நமது உணவை நாம் வாங்கிக் கொள்வோம். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றியோ அத்தியாவசிய பொருட்களின் பட்டியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையில் இருந்து நானும் எனது நண்பர்களும் எவ்வளவு தள்ளி இருக்கிறோம் என்பதை நான் மெதுவாக உணர ஆரம்பித்தேன்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒவ்வொரு முறையும் நான் மைதானத்தில் மக்களை சந்தித்த போது நம் நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமை குறித்து இன்னமும் கொஞ்சம் கூடுதலாக புரிந்து கொண்டேன்.



எனது குடும்பம் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தது. ஜான்பூரின் பார்சதி வட்டத்திலுள்ள எங்கள் கிராமமான கோரா பட்டில் எங்களுக்கு சொந்தமாக ஒரு பைகா (அரை ஏக்கருக்கும் குறைவான) நிலம் இருக்கிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக எங்களது பெரும்பாலான நிலங்களை ஏற்கனவே விற்றுவிட்டோம் இது மட்டும் தான் மிச்சம்.
விவசாயத்தின் மூலம் வந்த வருமானம் எங்களது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை அவர்களது நிலத்தில் விளைந்த விளைச்சல் அவர்களது வாழ்க்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. அதனால் எனது தாத்தா வேலை தேடி மும்பைக்கு வந்தார். இங்கு வந்து மில்லில் வேலைக்கு சேர்ந்தார் அவருடன் எனது தந்தையும் வந்து அச்சகத்தில் வேலை தேடிக் கொண்டார். அப்போது இருந்து எங்கள் குடும்பம் இங்கேயே தங்கிவிட்டது.
மும்பையில் பள்ளியில் விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் எங்களுக்கு உணவை எவ்வாறு உருவாக்குகின்றனர் என்பதை பற்றியும் கற்றுக் கொண்டோம். எங்களது புத்தகத்தில் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மட்டுமே உள்ளது. சில பயிர்களை பற்றியும் அவை எவ்வாறு வளர்க்கப்படுகின்றன என்பதை பற்றியும் கற்று இருக்கிறோம். அவர்கள் சாகுபடியில் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன, அவர்கள் வாழும் நிலை என்ன, அவர்கள் எவ்வளவு கடன் பெறுகிறார்கள் மற்றும் பலவற்றை நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை, அதை பற்றி ஒருபோதும் சிந்தித்ததும் இல்லை. கிராமத்தில் வாழும் மக்கள் நமது உணவை தயாரிப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.


நாங்கள் (மாணவர்கள்) யாரும் விவசாயியாக விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது நாங்கள் மருத்துவராக வேண்டும் என்றால் அதற்கு எங்களை வழிநடத்த ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால் விவசாயத்தை எதிர்கால வாழ்க்கையாக தேர்வு செய்வது என்பது ஒரு வாய்ப்பாக இல்லை.
ஆசாத் மைதானத்தில், காஞ்சன் என்னும் பட்டதாரியை சந்தித்தேன் அவர் வயலில் தினக்கூலியாக வேலை செய்து நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். நான் இன்னும் மூன்று பெண்களை சந்தித்தேன் அவர்களது கதையால் ஈர்க்கப்பட்டேன். அந்நியர்களுடன் பேசுவதற்கு எனக்கிருந்த கூச்சத்தையும் நான் இழந்தேன். அவர்கள் அனைவரும் 60 வயது மதிக்கத்தக்க கைம்பெண்களாக இருந்தனர். கௌராபாய் தாய் மஞ்சுளா தாய் மற்றும் திரௌபதி தாய் பிறர் வயலில் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர் என்று கூறினார். அவர்கள் தனியாக வாழ்வதற்குப் போதுமான அளவு சம்பாதிக்கின்றனர்.
இது நான் நினைத்ததில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக இருந்தது கைம்பெண்கள் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை கணவர்கள் இறந்தபிறகு அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வது கூட இல்லை. ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் போகும் வரை நிதி ரீதியாக தங்களால் தங்களை கவனித்துக் கொள்ள முடிந்தது என்று கூறினர்.


ஊரடங்கு அவர்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை என்னால் நன்கு உணர முடிகிறது ஏனென்றால் எனது தந்தையும் ஒரு ரிக்ஷா டிரைவர் தான் மேலும் எனது சகோதரர் எங்களது காலனியில் சிறப்பு வகுப்பு எடுத்து வருகிறார். அவர்களது வருமானத்தின் மூலம் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் ஆனால் ஊரடங்கின் போது அவர்கள் இருவருக்குமே வேலை இல்லாமல் போனது.
போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகள் தங்களது குழந்தைகள் எவ்வித சிரமத்திற்கும் உள்ளாகக் கூடாது என்பதற்காகத்தான் தாங்கள் கேட்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இதே நிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு வேலை தேடி வெளியே செல்ல நேரிடும். விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டால், நமது உணவு எவ்வாறு தயாரிக்கப்படும்?
அன்று நான் வீட்டிற்கு சென்ற பிறகு அங்கு நடந்ததை பற்றி எனது குடும்பத்தினரிடம் சொன்னேன், நான் விவசாயிகளை சந்தித்ததில் எனது சகோதரர் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களிடமிருந்து இந்தப் பிரச்சினைகளைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்.



நடுவில்: கோவிட் 19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப போராட்டக் கூடாரம் அடிக்கடி தூய்மை படுத்தப்பட்டது.
வலது: மைதானத்தை கூட்டிய படி இருந்தனர் போராட்டக்காரர்கள் அனைவருக்கும் மேடையிலிருந்து அறிவிப்புகள் மூலம் தாங்கள் இருக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும்படி மற்றவர்களுக்கு பாதுகாப்பானதாக ஏற்படுத்திக் கொடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. புகைப்படங்கள்: ஓம் பிரகாஷ்
கிருஷ்ண குப்தா
அந்த நாள் ஆசாத் மைதானம் ஒரு சிறிய கிராமத்தை போல தோற்றமளித்தது. விவசாய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் வந்தேன் அங்கு மகாராஷ்டிரா முழுவதிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர். எனது பெற்றோருக்கு நான் அங்கு செல்வது தெரியும் ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி தெரியாது. மேலும் அறிய எனக்கு ஆர்வமாக இருந்தது. பலருக்கு இது பற்றி தெரியாது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


நான் அந்தேரியில் உள்ள எனது வீட்டில் இருந்து காலை 10 மணி அளவில் கிளம்பினேன் மைதானத்தை வந்தடைய மதியம் ஒன்றரை மணி ஆனது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பேருந்தினை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் திரும்பிப் போகவேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு வரவில்லை.
மகாராஷ்டிராவின் பழந்தூர் கிராமத்தில் எனது தாய் வழி தாத்தாக்கள் விவசாயிகளாக இருந்தனர். அவர்களுக்கு பணத் தேவை ஏற்பட்டதால் நிலத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோண்டியா மாவட்டத்தில் உள்ள எனது தாயின் கிராமத்திற்கு அறுவடை காலத்தில் நான் சென்றது எனக்கு நினைவு இருக்கிறது. எல்லோரும் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணங்களை பூசிக் கொண்டனர் அது ஹோலி போல தோற்றமளித்தது. அவர்களுக்கு நல்ல விளைச்சல் எவ்வளவு முக்கியம் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். காடுகளின் விளிம்பில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதற்கு வன அதிகாரிகளுகடன் விவசாயிகள் சில நேரங்களில் போராட வேண்டியிருக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன். உணவை தயாரிப்பதற்கே விவசாயிகள் போராட வேண்டியிருக்கிறது.

நந்தூர் பார் மாவட்டத்திலிருந்து விவசாயிகள் மைதானத்திற்குள் நுழையும் அதே சமயத்தில் தான் நானும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தேன். வைத்திருக்கும் கரகமானது மூங்கில் கம்பால் ஆனது உள்ளே பந்து போன்று அமைக்கப்பட்டு பல வர்ண நூல்கள் சுத்தப்பட்டு பூ போன்று அமைக்கப்பட்டுள்ளது. கரகத்தை சுற்றியிருந்தவர்கள் டோலக்கு இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடினர். இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அவர்களிடம் கேட்டு நான் இதை கற்றுக் கொண்டேன்.


மகாராஷ்டிராவின் நந்தூர் பார் மாவட்டத்திலுள்ள செட்காரி காம்கர் சங்காதனாவில் உறுப்பினராக இருக்கும் பில் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த விவசாயி மண்டி முறை பற்றியும் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றியும் எனக்கு விளக்கிக் கூறினார். எனக்கு அவற்றைப் பற்றி தெரியவில்லை இருந்தாலும் புரியும்படி சுலபமாக விளக்கிக் கூறினார். நவபூர் தாலூகாவில் உள்ள நிம்தார்தே கிராமத்தைச் சேர்ந்த பள்ளியில் அவர் கணக்கு மற்றும் மராத்தி கற்றுக் கொடுப்பதாக கூறினார்.
நான் மைதானத்தை சுற்றி நடந்து வந்து அங்கு நடப்பவற்றை கவனித்தேன். சில விவசாயிகள் நடந்துவந்த களைப்பில் கூடாரத்தில் உறங்கினர், சிலர் மேடை நிகழ்ச்சிகளை கண்டும் கேட்டும் கொண்டிருந்தனர், இன்னும் சிலர் உணவகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
Editor's note
மும்பையில் உள்ள ராம்னிரஞ்சன் ஜுன்ஜுன்வாலா கல்லூரியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார் ஓம் பிரகாஷ் (இந்தப் பெயரை மட்டுமே அவர் பயன்படுத்த விரும்புகிறார்).
கிருஷ்ண குப்தா 2020ல் 12 வகுப்பு முடித்துவிட்டார் பின்னர் தனது வீட்டிற்கு உதவுவதற்காக வேலைகள் செய்து வருகிறார் .
தமிழில்: சோனியா போஸ்
சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.