நூற்றுக்கணக்கான காய்கறி செடிகளை இந்த வருடத்தில் பெய்த பருவம் தப்பிய மழைக்கு இழந்திருக்கிறேன்

மழையுடன் புதுவித புழுக்கள் வந்து சேர்ந்தன. என் காய்கறி செடிகளை அவை தாக்கி அழித்தன. எனவே நான் உறுதியாக இருக்கும் மிளகாய்களையே தற்போது அதிகம் வளர்க்கிறேன். முன்பெல்லாம் பூசணி, மிளகாய், தக்காளி, வெங்காயம், கீரை, பப்பாளி, முருங்கை எனப் பல காய்கறிகளை வளர்த்தோம்.

என் பெயர் காளி. ஊர் மக்கள் என்னை காளி பாட்டி எனச் சொல்வார்கள். என்னுடைய வயது என்னவென எனக்கு தெரியாது. நான் பிறந்த தேதியையும் நேரத்தையும் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. ஆனால் என் கணவர் ராமனும் நானும் அறுபது வயதுகளில் இருக்கிறோம். எங்கள் வீடு இருக்கும் அட்டடி கிராமத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மல்கூப்பில் தினக்கூலியாக அவர் பணிபுரிகிறார். நாங்கள் பட்டியல் பழங்குடியான இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். நீலகிரி மாவட்டத்தின் கோனக்கரை பகுதியிலுள்ள காட்டின் விளிம்பில் வாழ்கிறோம். எங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அருகே இருக்கும் கோத்தகிரி அல்லது மமரம் டவுனில் இருந்து வாங்குகிறோம். 

2017ம் ஆண்டிலிருந்து நானும் என் கணவரும் இந்த துண்டு நிலத்தில் விவசாயம் செய்கிறோம். இது எங்களுக்கு சொந்தமான நிலமில்லை. ஆனால் இதில் விளையும் களைகளை வெட்டி, பயிர்களை விளைவிக்க நிலவுரிமையாளர் எங்களை அனுமதித்திருக்கிறார். நிலம் வேறொருவருக்கு சொந்தமானது. அவரை நாங்கள் பார்த்தது கூட இல்லை. எனினும் இங்கு தொடர்ந்து விவசாயம் செய்கிறோம். இதிலிருந்து வரும் வருமானமும் என் கணவரது தினக்கூலியான 300 ரூபாயும் எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

எங்களின் காய்கறிகளை சந்தையில் விற்க முடிந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலைமை வேறாக இருந்தது. ஒருமுறை பீன்ஸ் விதைத்திருந்தேன். கிட்டத்தட்ட 50 கிலோ அறுவடையானது. கோத்தகிரி சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்றேன். சந்தைக்கு சென்று விற்க ஒரு டெம்போ வாகனத்தை வரவழைத்து கோனக்கரைக்கு சென்றோம்.

இப்போதெல்லாம் விவசாயத்தை சார்ந்திருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. முன்பு இயற்கை முறையில் 200 கிலோ காய்கறிகள் அறுவடை செய்திருக்கிறேன். இப்போது அது 20 கிலோவாக குறைந்துவிட்டது. விளைச்சல் அதிகரிக்க ரசாயனங்களை பயன்படுத்த அறிவுரை சொல்கின்றனர். ஆனால் நான் அப்படி செய்ய விரும்பவில்லை.

ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, மரத்திலிருந்தும் மாட்டுச்சாணத்தில் இருந்தும் கிடைக்கும் கரியை பயன்படுத்துகிறேன். மாடுகள் கொண்டிருக்கும் விவசாயிகளிடமிருந்து சாணத்தைப் பெறுகிறோம். கிடைக்கவில்லை என்றால் ஒரு டிராக்டர் லோடு சாணத்தை சந்தையிலிருந்து 6,000 ரூபாய்க்கு வாங்க வேண்டும். அதிக அளவிலான கரியை பயன்படுத்தினால் 50 கிலோ வரை காய்கறிகள் விளைவிக்கலாம் என என் கணவர் ராமன் சொல்கிறார்.

காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை நான் வயலில் வேலை பார்த்திருக்கிறேன். 2019ம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பிறகு, என்னால் வயலில் வேலை பார்க்க முடியவில்லை. மீண்டும் நிலத்துக்கு 2021ம் ஆண்டு சென்றேன். முன்னேற்றம் ஒன்றும் இல்லை. இப்போது எங்கள் குடும்பத்துக்கு மட்டும் காய்கறிகள் விளைவித்துக் கொள்கிறோம். எனக்கு உடல்நலம் நன்றாக இல்லாத சமயங்களில் ராமன் வேலை பார்த்துக் கொள்கிறார். அச்சூழலில் அவரால் தினக்கூலி வேலைக்கு செல்ல முடியாது. எங்கள் வருமானம் சரியும்.

அட்டடியிலுள்ள எங்கள் கிராமத்தில் சிமெண்ட் ரோடு போடப்பட்டிருக்கிறது. விளைச்சலை சேகரிக்கும் வாகனங்கள் வந்து செல்ல அது பயன்படுகிறது. வாகனங்கள் எங்கள் வீட்டுக்கு வர முடியாது. ஏனெனில் காட்டினூடாக எங்களின் வீட்டுக்கு வரும் பாதை வாகனம் வர முடியாதளவு குறுகலானது. எனவே நாங்கள் காயகறிகளை மூட்டைகளாகக் கட்டி தலையில் சுமந்து மலைக்காடுகளுள் நடந்து அட்டடியை அடைய வேண்டும். அட்டடி 500 மீட்டர் தொலைவில் உள்ளது. மமரத்துக்கு நடந்து சென்று அங்கிருந்தும் கோத்தகிரிக்கு வாகனம் எடுத்து செல்லலாம். எங்களின் வயதில் நீண்டு தூரம் நடப்பது கஷ்டமாக இருக்கிறது.

என் மருமகனான 48 வயது சிவமணியும் அவரது குடும்பமும் எங்களுடன்தான் வசிக்கிறது. அவரது மனைவி ராஜம்மா. இரண்டு மகன்களான சிவாவும் மதனும் தினக்கூலி வேலை செய்கின்றனர். பள்ளிக்கு சென்றிருந்த அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டனர். 5ம் வகுப்பில் சிவாவும் 9ம் வகுப்பில் மதனும் படிப்பை நிறுத்தினர். சிவமணியின் நிலம் எங்களின் நிலத்தருகே இருக்கிறது. முள்ளங்கி, பீன்ஸ் போன்ற காய்கறிகளை அவர் விளைவித்து கோத்தகிரி சந்தையில் விற்கிறார். தினக்கூலி வேலைக்கும் செல்கிறார்.

காலநிலை மாற்றம் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் பருவம் தப்பிய மழை விவசாயத்தைக் கடினமாக்கி விட்டது உண்மை.

கனமழை பெய்யத் துவங்கினால், குறிப்பாக மாலை நேரங்களில், செடிகள் நாசமாகி விடுமே என வருத்தப்படுவேன். மீண்டும் விதைக்க வேண்டியிருக்கும்.

இக்கட்டுரை, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் இருக்கும் குழுக்கள் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களால் திரட்டப்படும் அச்சமூகங்கள் பற்றிய செய்திகள் கொண்ட தொடரின் ஒரு பகுதி ஆகும். அவர்களைச் சுற்றி நேரும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அவர்கள் ஆவணப்படுத்துகிறார்கள். இக்கட்டுரைகள், எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க்கின் ஆதரவில், பாரியுடன் இணைந்து  கீஸ்டோன் அறக்கட்டளை முன்னெடுக்கும் பணியின் ஒரு பகுதி ஆகும்.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

ஃப்ராங்க்ளின் சாமுவேல் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர். இதழியலில் ஆர்வம் கொண்ட அவர், எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க் மற்றும் பாரியுடன் இணைந்து கீஸ்டோன் அறக்கட்டளை வழங்கிய சூழலியல் இதழியல் பயிற்சியில் 2022ம் ஆண்டு சேர்ந்தார்.

சூழலியல் மற்றும் இயற்கையுடன் சம்பந்தப்பட்டிருந்ததால் காளியின் கதையால் அவர் ஈர்க்கப்பட்டார். அவர் சொல்கிறார்: “சிறு அளவிலான இயற்கை விவசாயத்துக்கு காளி பாட்டியின் கட்டுரை என்னை அறிமுகப்படுத்தியது. உணவு பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டுமென எண்ணுகிறேன்.”

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்