இக்கட்டுரை முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டு வெளியானது. இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்ப மொழிகளில் கட்டுரைகளை எழுதி நமக்கு அனுப்பி வருகின்றனர்

“இவ்வகை துடைப்பம் அரிசியிலிருந்து தூசுகளை நன்கு அகற்றுகிறது,” என்கிறார் மணத்தாவடி தாலுக்கா எடவாக்கா கிராமத்தைச் சேர்ந்த 41 வயது ஆராய்ச்சியாளரான பிரதீஷ் கே. ஆர். குறுந்தொட்டி செடி எனும் புல் வகையிலிருந்து செய்யப்படும் குறுந்தொட்டி துடைப்பத்தைப் பற்றி அவர் மேற்கண்டவாறு கூறினார். அரிசியிலிருந்து புற்களையும், தூசுகளையும் அகற்ற பலமுறை இதைக் கொண்டு பெருக்குகின்றனர்.“வேறு வகை துடைப்பங்கள் இப்படி சுத்தம் செய்வதில்லை,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வயநாட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லை சுத்தம் செய்வதற்கு இந்த துடைப்பம் பிரசித்திப் பெற்றது. வீட்டுத் தேவைகளுக்கும் இதை பயன்படுத்துகின்றனர். ஏராளமான மரங்களுடன் பெரிய முற்றங்கள் இருப்பது வயநாட்டு வீடுகளின் பாரம்பரியம். “முற்றங்களில் விழும் சருகுகளை சுத்தம் செய்வதற்கு குறுந்தொட்டி துடைப்பத்தை பயன்படுத்தலாம்,” என்கிறார் திருநெல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்மி எம்.ஜே. ஆனால் கோடைக் காலங்களில் தான் இதற்கான தேவை அதிகமாக இருக்கும்.

“தென்னை ஓலைகளில் செய்யப்படும் துடைப்பங்களின் கூர் முனைகள் இருப்பதால் பயன்படுத்தும் போது மண்ணை சுரண்டிவிடும்,” என்று நம்மிடம் தெரிவித்தார் 24 வயது ஜோஸ்மி. ஆனால் இவ்வகை துடைப்பத்தின் மென்மையான முனைகள் பயன்பாட்டிற்கு சிறந்தது. அவர் மேலும் சொல்கிறார், “மழைக் காலங்களில் முற்றங்கள் ஈரத்துடன் சேறாகிவிடும். அப்போது இந்த துடைப்பத்தை பயன்படுத்த மாட்டோம்.” தரையில் தேங்கியுள்ள சேறு, சகதியை மென்மையான முனைகள் கொண்ட இத்துடைப்பத்தால் சுத்தம் செய்ய முடியாது.

வயநாட்டின் அஞ்சுக்குன்னு கிராமத்தைச் சேர்ந்த நிசார் கஞ்சாயி குறுந்தொட்டி செடியின் தண்டை பறித்து காய வைத்து துடைப்பம் செய்வதற்கு தயாராகிவிட்டதா என்று பரிசோதிக்கிறார். ஸ்வஃப்வனா என். எடுத்த புகைப்படம்

“இப்போது நிகழும் காலநிலை மாற்றங்களால் செடி வளர்ச்சியின் சுழற்சி முறையும் பாதிக்கப்படுகிறது,” என்கிறார் ஆதியான் பழங்குடியின சமூக உறுப்பினரான ஜோஸ்மி.

முன்பெல்லாம் குறுந்தொட்டி செடியை காட்டில் ஏராளமாக காண முடியும். இப்போது அவற்றின் அளவு குறைந்துவிட்டது. “செடியிலிருந்து விதைகள் விழுந்து புதிய செடி முளைப்பதற்குள் பிடுங்கப்படுகின்றன. இப்போது செடியுடன் விதைகளையும் மக்கள் சேகரிப்பதை காண முடிகிறது,” என்கிறார் அவர்.

அஞ்சுக்குன்னு கிராமத்தில், நிசார் கஞ்சாயி சேகரித்த குறுந்தொட்டி செடி தண்டுகளை தனது வீட்டிற்கு வெளியே காய வைத்துள்ளார். இந்த காய்ந்த தண்டுகளை கட்டாக கட்டி துடைப்பம் செய்கின்றனர். அவரது பண்ணையில் இந்த நீண்ட, மெலிந்த செடி வளர்கிறது. ஆண்டுதோறும் தண்டுகள் மட்டும் துடைப்பம் செய்ய அறுவடை செய்யப்படுகிறது.

38 வயதாகும் நிசார் கூறுகையில், “வயநாட்டில் குறுந்தொட்டி துடைப்பம் பயன்பாட்டில் உள்ளதை இப்போதும் காணலாம்.” அவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு, வாழை, இஞ்சி போன்ற பணப் பயிர்களை வேளாண் செய்து வருகிறார்.

மழைக் காலத்தில் குறுந்தொட்டி செடி வளர்கிறது. “தென்மேற்கு பருவக் காலத்தில் [செப்டம்பரில்] அறுவடை செய்யப்படுகிறது,” என்கிறார் அவர். இத்தண்டுகள் வெயிலில் காய வைத்து கட்டி துடைப்பம் செய்கின்றனர். “காய்ந்த தண்டுகள் ஏதும் மிஞ்சினால் கூட அடுப்பங்கறை அடுப்பின் மேலே வைத்து பாதுகாக்கின்றனர். அவற்றை பிறகு பயன்படுத்தலாம்,” என்றும் அவர் சொல்கிறார்.

அருகில் உள்ள சந்தையில் ஒரு குறுந்தொட்டி துடைப்பம் ரூ.80 என்கிற விலையில் நிசார் அண்மையில் விற்க தொடங்கினார். “என் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் போதிய அளவு விற்றுவிட்டேன். இப்போது அவற்றிற்கு அதிக தேவை உள்ளது,” என்கிறார் நிசார். முன்பு போல செடிகள் அதிகம் வளர்வதில்லை என்பதால் இத்துடைப்பத்திற்கான தேவை அதிகரித்துவிட்டது.

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் வசிக்கும உள்ளூர் மற்றும் பூர்வகுடிகளிடமிருந்து செய்தி சேகரித்து வெளியிடும் வகையில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் தங்களை சுற்றி ஏற்படும் தாக்கத்தை அவர்கள் ஆவணப்படுத்துகின்றனர். பாரியின் கூட்டு உதவியோடு எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க்கின் ஆதரவில் கீஸ்டோன் அறக்கட்டளையின் திட்டத்தின் கீழ் இக்கட்டுரைகள் வெளியாகின்றன.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்.

Editor's note

ஸ்வஃப்வனா என். மலையாள இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இவர் பாரி மற்றும் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க் ஆதரவோடு கீஸ்டோன் அறக்கட்டளை வழங்கிய குறுகிய கால சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பில் இணைந்தார் அவர் சொல்கிறார், “அடிப்படையில் மழையுடன் தொடர்புடைய வயநாட்டின் தனித்துவமான மரபாக கருதப்படும் குறுந்தொட்டி துடைப்பம் பற்றி நான் எழுத விரும்பினேன். வாசகர்களுக்கு இத்தகவல்களை கடத்த விரும்பினேன்.”

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.