செப்டம்பர் 2020ல் கிராமத்திலேயே முதல் பெண்ணாக ஷசெயா அக்தர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். “‘நான் செய்து காட்டுவேன்’ என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.”

சிறுவர்களுக்கென ஷுகாமாவில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். டிக்னிபாலில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வர 10 கிலோமீட்டர் செங்குத்தாக பகுதியில் நடக்க வேண்டும். கடுமையாக இருக்கும். “பெரும்பாலும் நான் சோர்வாகி விடுவேன். பள்ளி முடிந்து திரும்பிய பிறகு கவனம் செலுத்திப் படிக்க முடியாது. புத்தகங்களை மூடிவிடுவேன்,” என்கிறார் 19 வயது நிறைந்தவர்.

ஷசெயாவின் பெற்றோரான 65 வயது அப்துல் கனி ஹஜமும் 60 வயது தாஜா பேகமும் பள்ளிக்கு சென்றதில்லை. அவர்களின் உடன்பிறந்தார் எவரும் கூட பள்ளிக்குச் சென்றதில்லை. அவரின் இரு சகோதரர்களான 30 வயது தாரிக் மற்றும் 27 வயது முஷ்டாக் ஆகியோர் அப்பாவைப் போல தினக்கூலிகளாகி விட்டனர். குடும்பப் பொருளாதாரத்துக்கு உதவ “அவர்கள் சம்பாதிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

ஷசெயாவின் மூத்த சகோதரர்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது அருகே இருந்த ஆரம்பப் பள்ளி நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. செங்குத்தான மலையில் ஏறிச் செல்ல வேண்டும். ஆனால் அந்த கிராமத்தைச் சேர்ந்தோர், கிராமத்துக்கு அருகே பள்ளியைக் கொண்டு வர முயற்சி செய்தனர். “இந்தப் பள்ளியைத் தொடங்க நாங்கள் நிறைய முயற்சிகள் எடுத்தோம். 2001ம் ஆண்டில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு சென்று, இங்கு பள்ளிக் கட்டிக் கொடுக்கக் கேட்டோம்,” என்கிறார் தினக்கூலிக்காக சால்வைகளில் பூத்தையல் தைக்கும் தாரிக். அவர்களின் முயற்சிகளுக்கு பலன் கிட்டியது. 2002ம் ஆண்டில் டிக்னிபாலில் அரசு ஆண்கள் ஆரம்பப் பள்ளி நிறுவப்பட்டது. “ஆசிரியர்கள் கண்டுபிடிப்பது அடுத்த சவாலானது,” என்கிறார் அவர்.

முதல் சில வருடங்களுக்கு மொத்தப் பள்ளிக்கும் ஒரே ஒரு ஆண் ஆசிரியர்தான் வகுப்பு எடுத்தார். டிக்னிபாலுக்கு பயணிக்க வேண்டிய செங்குத்தான பாதை பலர் பள்ளியில் சேருவதைத் தடுத்தது. குக்கிராமத்திலேயே மூத்தவரான மன்சூர் அகமது மிர், டிக்னிபாலில் 350 பேருக்கு மேல் இருப்பதாக சொல்கிறார். பள்ளியின் இரு மஞ்சள் கட்டங்களும் கவிஞர் இக்பால், நெல்சன் மண்டேலா மற்றும் பிறரின் மேற்கோள்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. கல்விக்கான இல்லம் என அர்த்தம் தொனிக்கும் ‘இல்முக் அகுர்’ என்ற வார்த்தை பிரதானக் கட்டடத்தின் வாசலில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு படித்து முடித்த மாணவர்களில் சிலரால்தான் கல்வியை தொடர முடிந்தது. 

2008ம் ஆண்டில் பள்ளியில் சேர்ந்த முதல் மாணவிகளில் ஷசெயாவும் ஒருவர். பள்ளி மேம்படுத்தப்பட்டு அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியாக மாற்றப்பட்டு 8ம் வகுப்பு வரை உயர்ந்தபோது அவர் மழலையர் பள்ளியில் சேர்ந்தார். பிலால் வானிதான் ஷசெயாவின் ஆசிரியராக இருந்தார். நல்ல மாணவி என நினைவுகூருகிறார்.

காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டத்தின் டிக்னிபால் குக்கிராமம் ஒற்றை தளம் கொண்ட தகரக் கொட்டகை வீடுகள் கொண்ட ஊர். பக்கத்து நகரமான மாநிலத் தலைநகரம் ஸ்ரீநகருக்கு செல்லும் சுற்றுவட்டச் சாலை பெரும்பாலும் ஆளரவமின்றி இருக்கும். மலிக் மொகல்லாவின் எல்லையில் ஷசெயா ஆறு பேர் கொண்ட அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். அவர்களின் இரண்டு படுக்கையறை வீட்டைச் சுற்றி உடைந்த தகரப்பாய்களால் வேலி அடைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் வாதுமைக் கொட்டை மரங்களும் கருவேல மரங்களும் இருக்கின்றன.

கிராமத்தில் அவர் எட்டாம் வகுப்பு முடித்தார். பிறகு இரு சிறுமிகளுடன் சேர்ந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஷுகாமாவின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு முடித்தார். ஒழுங்கான மாணவருக்கான பரிசு பெற்றதை சந்தோஷமாக நினைவுகூருகிறார் அவர்.

பள்ளியில் பெற்ற ஒழுங்கான மாணவர் பரிசை ஷசெயா காட்டுகிறார். புகைப்படம் சப்சரா அலி

அதிகாலை 6 மணிக்கு ஷசெயா எழுவார். வீட்டை சுத்தப்படுத்தி சமையல் செய்துவிட்டு பள்ளிக்குக் கிளம்புவார். அவரின் தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதால் வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவரையும் சகோதரர் தாரிக்கின் மனைவியான ஹஜ்ராவையும் சார்ந்திருக்கிறது. “சில நேரங்களில் எங்கள் வீட்டு மாடுகளையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். அண்ணி வெளியே சென்றால், நானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பள்ளியின் காலை கூடுகையை சில நேரங்களில் நான் தவற விட்டு விடுவதுண்டு,” என மேல்நிலைப் பள்ளி நாட்களை நினைவுகூர்ந்து அவர் சொல்கிறார். வீட்டைப் பார்த்துக் கொள்ள அவ்வப்போது அவர் விடுமுறை எடுப்பதும் கூட உண்டு.

பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் உதவியது. “8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்கும் ஆசிரியை ஒருவரை நான் பார்த்ததில்லை. ஆனால் இப்பள்ளியில் அது போல் பலர் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்,” என்கிறார் அவர். பள்ளியில் வழங்கப்படுபவற்றுக்குக் கொடுக்க வேண்டிய 150 ரூபாய் கட்ட முடியாமல், படிப்பை நிறுத்தும் நிலையில் இருப்பவர்களுக்காக, “எங்கள் ஆசிரியர் வகுப்பு நோட்டுப் புத்தகங்களை உள்ளூர் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டுச் செல்வார். அங்கு நாங்கள் நகல்கள் எடுத்துக் கொள்வோம்,” என்கிறார் அவர்.

ஷசெயா 10ம் வகுப்பு தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது, கோவிட் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டன. இணையவழிக் கல்விக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவரது கிராமத்தில் இணைய வசதி கிடையாது (அந்த வருடத்தின் பிற்பகுதியில்தான் அந்த வசதி வந்தது). “இணைய வழி வகுப்புகள் எதிலும் என்னால் பங்கெடுக்க முடியவில்லை,” என்கிறார் அவர். தேர்ச்சி அடைய வேண்டும் என்ற தீர்மானத்தில், அண்டை வீட்டுக்காரர் ஷவுகத் அகமதுவின் உதவியை அவர் நாடினார். ஊரிலேயே பள்ளிப்படிப்பு முடித்த மூன்று ஆண்களில் ஷவுகத்தும் ஒருவர். பெருந்தன்மையுடன் அவர் உதவினார். அருகே இருந்த ஒரு கட்டுமான தளத்தில் தினக்கூலி வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய பிறகு தினமும் அவர் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

“2020ல் முடிவுகள் வெளியாகின. நான் தேர்ச்சி அடைந்துவிட்டேன். என் சந்தோஷம் கரைபுரண்டது. தேர்ச்சி பெறாமல் போயிருந்தால், மீண்டும் முயன்றிருப்பேன்,” என்கிறார் அவர், பெற்றோரும் ஆசிரியர்களும் அண்டை வீட்டாரும் வாழ்த்து தெரிவித்ததை நினைவுகூர்ந்து புன்னகையுடன். தேர்ச்சி அடைந்ததில் அவர் மட்டும்தான் பெண்.

“அவள் எதையோ சாதித்து விட்டதைப் போல் உணர்ந்தோம். எங்களுக்கு மரியாதை கிடைத்ததாக உணர்ந்தோம்,” என்கிறார் தாரிக்.

தூரத்தில் இருக்கும் பாலம்

எனினும் தேர்ச்சி அடைந்த ஒரே பெண் என்பதற்கு ஒரு விலையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிம்பரின் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கச் செல்ல ஷசெயாவுக்கு துணை யாருமில்லை. 

“பள்ளி தூரமாக இருந்ததாலும் நான் தனியாக செல்ல வேண்டியிருந்ததாலும் குடும்பத்தினர் படிப்பை நிறுத்தும்படி என்னிடம் கூறினர்,” என்கிறார் அவர். 2019லிருந்து 2020 வரை 15.1 சதவிகிதம் பெண் குழந்தைகள் இந்தியாவில் பள்ளிப்படிப்பை இடை நிறுத்தியதாக கல்வித்துறை அமைச்சகம் கண்டறிந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அந்த விகிதம் 16.7.டிக்னிபால் போல் தூரத்தில் இருக்கும் பகுதிகளில் கல்வி பெறுவதென்பது இன்னுமே ஒரு சவாலாகத்தான் இருக்கிறது. 

அவரை தூரத்துப் பள்ளிக்கு படிக்க அனுப்ப குடும்பத்துக்கு இருந்தத் தயக்கத்தைப் பற்றி சொல்கையில் தாரிக், “அதிக தூரம். போக்குவரத்தும் கிடையாது. எனவே எங்களுக்கு பயமாக இருந்தது. பொதுப் போக்குவரத்து இருந்திருந்தால் பிரச்சினை கிடையாது,” என விளக்குகிறார். படிப்பை இடைநிறுத்த வேண்டிய சூழல் கொடுத்த கடும் அதிருப்தியை ஷசெயா நினைவுகூருகிறார்.

அச்சூழல் தற்காலிமாகத்தான் இருக்கும் என்றும் அவரது நண்பர்கள் அடுத்த வருடத்தில் 11ம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தால் ஒன்றாக செல்லலாம் என்றும் அவர் நம்பினார். காத்திருக்கும் காலத்தில் அவர் காஷ்மீரத்து கைவினைக் கலையான பூத்தையலை சகோதரர் தாரிக்கிடமிருந்து கற்றுக் கொண்டார். தினக்கூலிக்காக சால்வைகளில் பூத்தையல் போட அவர் தொடங்கினார்.

அடுத்த வருடமான 2021-ல் அவரின் நண்பர் தேர்ச்சியடையவில்லை. எனினும் பள்ளிக்கு அனுப்பும்படி ஷசெயா வலியுறுத்தினார். “என் நண்பர்களுக்கு என்னைப் போல் லட்சியங்கள் இல்லை. வீட்டிலேயே இருக்க வேண்டுமெனதான் அவர்களுக்கு தெரியும். வேறு வழியிருப்பது தெரியாது. நான் அழுதேன். பள்ளியில் சேர்க்கும்படி குடும்பத்தினரிடம் கேட்டேன். படிப்பதற்கான வலுவான விருப்பம் எனக்கு இருந்தது,” என்கிறார் ஷசெயா.

ஷசெயாவின் சூழல் புதியதொன்றுமல்ல என்றும் தன் சொந்த மகளும் 8ம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது என்றும் மன்சூர் அகமது மிர் கூறுகிறார். “என் மகளை கிம்பெர் அல்லது பகூரா பள்ளியில் விட்டுவிட்டு நான் வேலைக்கு தினமும் சென்றிருக்க முடியும். ஆனால் பள்ளி முடியும்போது நான் பணியில் இருப்பேன். மீண்டும் அழைத்துச் செல்லும் வாய்ப்பு இருக்காது. அதனால்தான் அவள் வீட்டிலேயே இருக்க வேண்டி வந்தது,” என்கிறார் அவர்.  

மார்ச் 2021-ல் கிம்பெரின் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பில் ஒருவழியாக ஷசெயா சேர்ந்தார். சகோதரர்களில் ஒருவரோ அல்லது தந்தையோ நான்கு கிலோமீட்டர் தூரம் அவருடன் நடந்து சென்று பகூராவிலிருந்து பள்ளிக்கு செல்லும் பிற மாணவிகளுடன் விடுவார். அவர்கள் பேருந்திலோ அல்லது மீதமுள்ள மூன்று கிலோமீட்டர் தூரத்தை நடந்தோ கடந்து பள்ளியை அடைவார்கள். “எங்கள் வேலையை விட்டுவிட்டு அவளுடன் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது,” என்கிறார் தாரிக்.

உடற்கல்வி, அரசியல் அறிவியல், உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை தேர்ந்தெடுத்தார் ஷசெயா. “விளையாட்டு பிடிக்கும் என்பதால் உடற்கல்வியை நான் தேர்ந்தெடுத்தேன்,” என்கிறார் அவர். முதன்முறையாக அவர் விளையாடினார். “என் கிராமத்திலிருந்து வந்த ஒரே நபர் நான் என்பது மட்டும்தான் எனக்கு சற்று வருத்தமளிக்கும் விஷயமாக இருந்தது,” என்கிறார் அவர்.

சகோதரர் தாரிக்குடன் (வலது) பூத்தையல் போடும் ஷசெயா. அவர்களின் தாயான தாஜாவின் (இடது) ஆரோக்கியம் சரியாக இல்லை. எனவே வீட்டைப் பார்த்துக் கொள்ளும் மொத்தப் பொறுப்பும் ஷசெயாவையும் அண்ணி ஹஜ்ராவையும் சார்ந்திருக்கிறது. புகைப்படம் சப்சரா அலி

பள்ளியில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே 2021-ல் ஷசெயாவின் அனுமதியைத் திரும்பப் பெற்றது பள்ளி. தாரிக்கும் அப்துல்லும் விசாரித்தபோது, ஒரு வருடம் படிக்காததால் ஷசெயா தொடந்து படிக்கும் வாய்ப்பு கிடையாது எனக் கூறினர். “ஒரு வருடம் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் இணைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவுகள் வந்தன,” என்கிறார் அப்துல். ஏன் அப்படி நேர்ந்தது என்பதும் தொடர்ந்து என்ன செய்வது என்றும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 

பள்ளியின் அதிகாரிகளால் அழைக்கப்பட்டபோது அனைவரும் இலையுதிர்காலப் பணியில் இருந்ததாக தாரிக் குறிப்பிடுகிறார். ஷசெயாவின் தந்தை உடன் சென்றார். பள்ளிக்குக் கட்டியிருந்த 1,500 ரூபாய் கட்டணத்தை திரும்பக் கொண்டு வந்தார்கள். “அது நடந்த பல மாதங்களுக்கு நான் மன அழுத்தத்தில் இருந்தேன்,” என்கிறார் ஷசெயா. அவருக்கான வெளியேற்றச் சான்றிதழும் சமீபத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது. 

ஷசெயா வீட்டிலேயே படித்து தனிமுறையில் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி பரிந்துரைத்தது. அதற்கு ஸ்ரீநகரில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வி ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இச்செய்தியாளர் ஜூன் 2022-ல் விசாரித்தார். குடும்பம் அந்த அலுவலகத்துக்கும் செல்லவில்லை. வேறு பள்ளியில் விண்ணப்பிக்க முயற்சிக்கவும் இல்லை.

இவற்றுக்கிடையில் ஷசெயா தையல் கற்பதில் தீவிரமாக இருந்தார். அதில் அவருக்கும் மாத வருமானம் 1500 ரூபாய் கிடைக்கிறது. “வழக்கமான அனுமதியை கிம்பெரின் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்திருந்தால் அவள் தொடர்ந்த் படித்திருப்பாள். 12ம் வகுப்பு வரை அவள் படிக்க நாங்கள் விரும்பினோம். அவள் வேலைக்கு செல்ல நாங்கள் விரும்பவில்லை,” என்கிறார் தாரிக்.

பின்னடைவுகள் நேர்ந்தபோதும் கனவுகளிலிருந்து ஷசெயா பின்வாங்கவில்லை. கலைப் பள்ளிக்கு சென்று படித்து ஆசிரியராகி அவருக்குத் தெரிந்த பிற பெண்குழந்தைகள் கல்வி பயில உதவ அவர் விரும்புகிறார். “எனக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது. ஆனாலும் எனக்கு கனவுகளும் இருக்கிறது,” என்கிறார் அவர். எனினும் அக்கனவுகள் நிறைவேற அவர் 12ம் வகுப்பு படித்து முடிக்க வேண்டுமெனவும் புரிந்தே இருக்கிறார்.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

சப்சரா அலி, ஸ்ரீநகரின் சவுராவிலுள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். PARI கல்வியில் பயிற்சிப் பணியில் இருந்தபோது ஏழு மாதங்கள் எடுத்து இக்கட்டுரைக்கான தகவல்களை சேகரித்தார்.

அவர் சொல்கையில்: “கூச்ச சுபாவம் கொண்டவராக, மக்களுடன் தொடர்பு கொள்ள முடியுமென்கிற நம்பிக்கையே எனக்கு இல்லை. கடந்த சில மாதங்கள் என்னை சிறப்பாக கவனிப்பவராக மாற்றியிருக்கிறது. பல ஊகங்களை மறு அவதானிப்பு செய்ய வைத்திருக்கிறது. உதாரணமாக, சமூகக் கட்டுப்பாட்டால்தான் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என நினைத்திருந்தேன். இச்செய்தியை சேகரித்தபோது நுட்பமாக தகவல்களை கேட்டறிந்தது என் பார்வையை மாற்றியது. என் பகுதியிலிருக்கும் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் எப்படி ‘ஆண்கள்’ பள்ளி என பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன போன்ற சிறு விஷயங்களை அவதானிக்கும் திறனை அது எனக்கு வழங்கியது,” என்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்