“என்னுடைய கடைசி சேமிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் உள்ள 12 பேருக்கு நான் சாப்பாடு போட வேண்டும். சில நாட்கள் வீட்டிற்கு வண்ணம் அடிக்கும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். தினமும் 300-350 ரூபாய் சம்பாதித்தேன். ஆனால் அந்த வேலையும் சில நாளில் முடிந்துவிட்டது” எனக் கூறும் 40 வயதான அஸ்வின் பிஸ்வாஸ், அசோக் நகர் சாலை ரயில் நிலையத்தில் வியாபாரியாக இருந்தார்.

மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மேற்கு வங்காள வடக்கு 24 பராக்னாஸ் மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் சாலை ரயில் நிலையம் போல், எல்லா ரயில் நிலைய நடைமேடைகளும் வெறிச்சோடியது; உடனடியாக வியாபாரிகளின் வேலை பறிபோனது.

“12,000-15,000 வரை சம்பாதித்து வந்தேன். ஆனால் ஊரடங்கிற்குப் பிறகு எனக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை” எனக் கூறும் ஜாய் பிஸ்வாஸ், 26, சீல்டா-பாங்கயான் புறநகர் ரயில் எண்.33851-ல் வியாபாரம் செய்கிறார். அசோக் நகர், ஹாப்ரா, கோபர்தங்கா, குமா, பிரா, மஸ்லாண்ட்பூர், பாங்கயான் மற்றும் தாக்கூர்நகர் போன்ற புறநகர் பகுதிகளிலிருந்து கொல்கத்தாவிற்கு வரும் தினக்கூலிகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் பெரும்பாலும் இந்த ரயிலில்தான் வருகிறார்கள். ஜாயின் தந்தை ஜதிஷ் பிஸ்வாஸ், 53, இதே வழியில் வியாபாரியாக இருக்கிறார்.

வீட்டு உபயோகப் பொருட்களான சீப்பு, டீ வடிகட்டிகள், கிண்ணங்கள் போன்ற பொருட்களை இதே வழியில் விற்பனை செய்து வருகிறார் பூஜா சிங்கா, 35. வழிபோக்கர்கள் பொருட்களை வாங்குவார்கள் என எதிர்பார்த்து ரயில் நிலையத்திற்கு வெளியே தற்போது நிற்கிறார். அவர் கூறுகையில், “எங்களால் சரியாக சாப்பிட கூட முடியாது. பல நேரங்களில் சாப்பிடாமல் இருந்துவிடுவோம். இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.”

ஜாய், ஜதிஷ் மற்றும் பூஜா போன்ற வியாபாரிகள் உள்ளூர் மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்து கடலை, பருப்பு மற்றும் பழங்கள் முதல் சீப்பு, சோப், மலிவான நகைகள், புத்தகம் வரை விற்பனை செய்கிறார்கள். இவர்களின் சங்கம் அறிவுறித்தியபடி வேறு ரயிலில் மாறாமல் ஒரே வழியில் செல்கிறார்கள். காலை 8.55 மணிக்கு கிளம்பும் ஹாப்ரா லோக்கல் ரயிலில் ஏறும் ஜாய், அடுத்த ஒரு மணி நேரத்தில் வரும் டம் டம் கண்டோன்மண்ட் நிறுத்தத்தில் இறங்கி, அதே ரயிலில் பாங்கயான் செல்கிறார். ஒவ்வொரு பயணமும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இருக்கும். அதற்குள் ரயிலுக்குள் கொய்யா, சாத்துக்குடி பழங்களை விற்பனை செய்கிறார்.

பூஜா சிங்கா, வியாபாரியான இவர், அசோக் நகர் சாலை ரயில் நிலையத்தின் வெளியே பல பொருட்களை விற்பனை செய்கிறார். புகைப்படம்: சுமந்தா ராய்

‘எங்கள் குரல்களை யாரும் ஒருபோதும் காது கொடுத்து கேட்பதில்லை’

“ரயில் நிலைய வியாபாரிகள் குறித்த எந்த தரவுகளும் அரசாங்கத்திடம் இல்லை” எனக் கூறுகிறார் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் வியாபாரிகள் சங்கராம் கமிட்டியின் கூடுதல் செயலாளருமான முராத் ஹூஸைன். ரயில்வே பயணிகளை நம்பி ஒரு கோடிக்கும் மேலான வியாபாரிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். உணவு மற்றும் பொருட்களை நடைமேடைகளிலும் ரயிலும் விற்பனை செய்தே இவர்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் ஊரடங்கு தடம்புரளச் செய்துவிட்டது. “வருமானம் இல்லாத காரணத்தால் மேற்கு வங்காளத்தில் இரண்டு ரயில் நிலைய வியாபாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். நோய்தொற்று எங்கள் சமுதாயத்தை அழித்துவிட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மற்றும் ரயிலில் விற்பனை செய்யும் வியாபாரிகளே. படிப்படியாக தொழில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தெரு வியாபாரிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். ஆனால் கடந்த ஏழு மாதங்களாக எந்த ரயிலும் ஓடாததால், ரயில் நிலைய வியாபாரிகளின் நிலை மட்டும் சபிக்கப்பட்டதாகவே உள்ளது” என்கிறார் முராத்.

கோயல் ராய் சவுத்ரி வயிற்றுப் பிழைப்பிற்காக ரயிலில் பாடி வருகிறார். தன்னுடைய இளம் மகளோடு தனியாக வாழ்ந்து வரும் இவர், கணவர் பிரிந்துச் சென்றதும் வியாபாரம் செய்யத் தொடங்கினார். “எனது திறமையை அங்கீகரித்து மக்கள் எனக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போது வேறு வழியின்றி உள்ளூர் சந்தையில் தினமும் டீ விற்று வருகிறேன். வீட்டில் டீ தயாரித்து அதை எனது சைக்கிளில் வைத்து தினமும் இரண்டு வேளை ஒவ்வொரு சந்தையாக விற்பனை செய்கிறேன்.”

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான வியாபாரிகள் நாமசூத்ரா தலித் வகுப்பைச் சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வடக்கு 24 பராக்னாஸில் உள்ள ஹாப்ரா-1 மற்றும் ஹாப்ரா-2 பிளாக்கை சேர்ந்தவர்கள். ரயிலுக்குள் வியாபாரம் செய்பவர்கள் மாதத்திற்கு எப்படியும் ரூ. 8,000-10,000 வருமானம் ஈட்டி விடுவார்கள். அதே சமயத்தில் ரயில் நிலைய வியாபாரிகள் மாதத்திற்கு ரூ. 8,000-10,000 சம்பாதிப்பார்கள். குளிர்காலத்தில்தான் தங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என இரு வியாபாரிகளும் எங்களிடம் கூறினர். வானிலை நன்றாக இருப்பதால் அந்த சமயத்தில் மக்கள் அதிக உணவு பண்டங்களை வாங்குவார்கள். “கோடை காலத்தில் வெயில் அதிகமாக அடிக்கும்போது, கூட்ட நெரிசலில் ஒவ்வொரு பெட்டியாக வேர்க்கடலையை கொண்டு செல்ல முடியாது” எனக் கூறும் 24 வயதான சுபா ஹால்தர், பருப்பு மற்றும் வேர்க்கடலை விற்பனை செய்கிறார்.

ஜாய் போன்ற பல வியாபாரிகள் தினசரி கூலி வேலைக்கு செல்ல தொடங்கினர். ஆனால் அங்கும் அவர்கள் போட்டியைச் சந்தித்தனர். ஏற்கனவே வேலை இல்லாமல் இருக்கும் தினசரி கூலி தொழிலாளர்களும் இந்த ஊதியம் குறைவான, அதிகம் பயிற்சி தேவைப்படாத வேலைக்கு வரத் தொடங்கினர். “சில நாட்கள் கல் உடைக்கும் வேலைக்குச் சென்று தினமும் 30 ரூபாய் சம்பாதித்தேன். அந்த வேலையும் முடிந்து விட்டது. தற்போது, என்னுடைய பகுதியில் பழங்கள் விற்பனை செய்து வருகிறேன்; என்னிடம் சைக்கிள் இல்லாததால், தலையில் சுமந்து செல்கிறேன்” என்கிறார் ஜாய்.

ஜனதன் ஹால்தர், 52, கடந்த 20 வருடங்களாக பங்கயான்-சீல்தா ரயிலில் பழம் விற்பனை செய்து வருகிறார். “ஊரடங்கிற்கு முன்பு தினமும் 250 ரூபாய் சம்பாதித்து வந்தேன். தற்போது ஹாப்ரா நகரிலிருந்து சாத்துக்குடி,யை வாங்கி ஒவ்வொரு காலனியாக எனது சைக்கிளில் விற்பனை செய்கிறேன்.” அம்பன் புயலில் ஹால்தாரின் வீடு இடிந்துபோனது. அரசாங்கம் தரும் இழப்பீடு தொகைக்காக காத்திருக்கிறார். அரசாங்கத்திடம் உங்களுக்கு ஏதாவது கோரிக்கை உள்ளதா என அவரிடம் கேட்டால், “எங்கள் குரல்களை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. கோரிக்கை வைப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது” என்கிறார்.

ரயில்வே வியாபாரிகள் விடுபட்டுள்ளனர்

பயணிகள் ரயில் சேவை மே 12, 2020 அன்று ஆரம்பமானது. ஆனால் வியாபாரிகள் யாரையும் ரயிலில் ஏறவிடவில்லை. சில பாதைகளில் நீண்டதூர ரயில்கள் இயக்கப்பட்டாலும், புறநகர் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை; அதிலும் வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை. பாங்கயான் உள்ளூர் ரயிலில் கடலை விற்றுவந்த ஜாய்தேவ் பிஸ்வாஸ், 45, ஊரடங்கிற்குப் பிறகு நடைபாதையில் காய்கறி விற்று வருகிறார். தனது சைக்கிளில் சென்று காலைச் சந்தையில் வியாபாரம் செய்கிறார். அவர் கூறுகையில், “நான் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளேன். ஆகையால் தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளுக்கு காய்கனிகள் விநியோகம் செய்து வருகிறேன்.”

இடமிருந்து: ஜாய்தீப் பிஸ்வாஸ், பூஜா சிங்கா, மிலன் ஹல்தர், அமர் சென்குப்தா, திபங்கர் தேப்நாத், ககோலி ஜாய்தோர் மற்றும் பிங்கி சஹா. புகைப்படம்: சுமந்தா ராய்

நகரப்புற தெரு வியாபாரிகளை பாதுகாக்கவும் தெரு வியாபார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தை மிக சமீபத்தில் 2014-ம் ஆண்டு நிறைவேற்றியது மத்திய அரசு. எனினும், ‘ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் எந்தவொரு நிலம், இடம் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான ரயில்களில் இது செல்லுபடியாகாது’ என்றும் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் தங்களையும் இணைக்கும்படி வியாபாரிகள் சங்கத்தினர் போராடி வந்தாலும் அவர்களுக்கு வேறு சில பிரச்சனைகளும் உள்ளன. “ரயில்வே பாதுகாப்பு படையினர் எங்களை மனிததன்மையற்ற வகையில் நடத்துகின்றனர். அதோடு ரயில்வே வியாபாரிகள் இரண்டு வகையினர் உள்ளார்கள்: ரயில் நிர்வாகத்திடமிருந்து கடை நடத்துவதற்கு முறைப்படி அனுமதி பெற்றவர்கள் மற்றும் அனுமதி பெறாதவர்கள். வியாபாரிகள் சங்கத்தின் உதவியோடுதான் பெரும்பாலான ரயில் நிலைய வியாபாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்” என்கிறார் முராத்.

ஜகதீஷ் கெயின், 68, பரஸத் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பழங்கள் விற்பனை செய்கிறார். இந்த நிலையம் வடக்கு 24 பராக்னாஸிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் வழியில் உள்ளது. “என் வயதிற்கு வேறு வேலை செய்ய முடியாது; இப்போது எந்த உதவியும் இல்லாமல் இருக்கிறேன். ஊரடங்கிற்கு முன்பு தினமும் ரூ. 300-400 வரை சம்பாதித்து வந்தேன். தற்போது கையில் பணமும் இல்லை. ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை நம்பிதான் என் குடும்பம் உள்ளது” என அவர் கூறுகிறார்.

உள்ளூர் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என சீல்டா துணை ரயில்வே மேலாளர் மற்றும் பொது மேலாளரிடம் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் தேசிய வியாபாரிகள் சங்கம் இணைந்து மணு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை.

கணவரை இழந்த ககோலி ஜாய்தோர், 45, இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். அசோக் நகர் சாலை ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு அருகே பழங்கள் விற்பனை செய்கிறார். “விரைவில் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என நம்புகிறேன். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது சிரமமாக உள்ளதாக” அவர் கூறுகிறார்.

தனியார்மயமாக்கல் குறித்த பயம்

சில பயணிகள் ரயில் பாதைகளில் தனியார் பங்கேற்பைக் கோரி ஜூலை 1, 2020 அன்று இந்திய அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டால் தாங்கள் நிரந்தரமாக ரயில்களில் இருந்தும் நடைமேடையில் இருந்தும் வெளியேற்றப்படுவோம் என வியாபாரிகள் பயப்படுகின்றனர். முராத் கூறுகையில், “இந்த அரசாங்கம் பெரிய தொழிலதிபர்களுக்கானது; அவர்கள் நடைமேடையில் பெரிய மால்களை திறப்பார்கள். அங்கு எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு இடமிருக்காது. அதன்பிறகு 10 ரூபாய்க்கு விற்கப்படும் காஃபி 25 ரூபாய்க்கு விற்கப்படும்.”

அமர் சென்குப்தா, 53, கடந்த 42 வருடங்களாக அசோக் நகர் சாலை ரயில் நிலையத்தில் கைக்கடிகாரங்களை விற்பனை செய்தும் பழுதுபார்த்தும் வருகிறார். நடைமேடை தனியார் மயமாக்கப்பட்டால், தனது வாடிக்கையாளர்களை இழக்க வேண்டியிருக்கும் என அவர் பயப்படுகிறார். “இது எங்களுக்கு பெரிய இழப்பாக இருக்கும். என்னுடைய வாடிக்கையாளர்கள் பலரிடம் நான் தொடர்பில் இருக்கிறேன். ஆனால் நான் புது இடத்திற்கு சென்றுவிட்டால், எனக்கு எந்த வருமானமும் கிடைக்காது.” புறநகர் ரயிலில் ஜால்முரி விற்பனை செய்யும் ஷிபு தாஸ் இதை ஒத்துக்கொள்கிறார்: “தனியார்மயமாக்கல் லட்சக்கணக்கான வியாபாரிகளின் இறப்பிற்கு வித்திடும். பசியால் நாங்கள் இறக்க நேரிடும். அரசாங்கத்திடம் குறைந்தபட்சம் எங்கள் பிரச்சனைகளை எழுப்பவாது முடியும். ஆனால் தனியார் துறையை கேள்வி கேட்கவே முடியாது. அவர்கள் விருப்பம் போல் எதையும் செய்வார்கள்.”

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சிரஸ்ரீ தாஸ்குப்தா மற்றும் அவிஜித் அதிகாரி, பாசுதேப் பானர்ஜி, ஷாய்ரிக் சென்குப்தா, சுப்ரதா சர்கார் ஆகியோருக்கு இந்தக் கட்டுரையாளர் நன்றி கூறிக் கொள்கிறார்.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Editor's note

சுமந்தா ராய், டெல்லி, ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமுதாய ஆரோக்கியம் மையத்தில் ஆய்வாளராக இருக்கிறார். பொது சுகாதாரத்தில் முறைசாரா துறையை பின்தொடர்ந்து வரும் இவர், ஊரடங்கு மற்றும் அம்பன் புயல் சமயத்தில் வாழ்வாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். சுமந்தா கூறுகையில், “வகுப்பறையில் நாம் கற்கும் பாடத்தை களத்தில் செயல்படுத்தி பார்க்க வேண்டிய தேவையுள்ளது. எனது ஆரம்பகால வரைவுகள் ஆய்வு கட்டுரைகள் போன்று இருந்தது. இதை கதைகளாக எப்படி ஆவணப்படுத்துவது மற்றும் கட்டுரை எழுதுகையில் எப்படி நமது கருத்தை திணிக்காமல் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பின் கதையை எப்படி கூறுவது போன்றவற்றை பாரியில் கற்றுக் கொண்டேன்.”