
இக்கட்டுரை முதலில் இந்தியில் எழுதப்பட்டது. இந்தியா முழுவதும் தங்களின் விருப்ப மொழியில் செய்தி சேகரித்து எழுதி, சித்திரம் தீட்டும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்களுடன் இணைந்து பாரி கல்வி பணியாற்றுகிறது.
“[மூங்கில்] கூடைகளை செய்து விற்பது எங்களது செலவுக்கு போதுமானதாக இருக்கிறது,” என்கிறார் தனது வீட்டைச் சுற்றி பார்த்தபடி நிர்மலா தேவி. வீட்டின் இரண்டு அறைகளிலும் நீண்ட மற்றும் கட்டையான மூங்கில் குச்சிகளுடன் பாதி முடையப்பட்ட கூடைகள் நிறைந்து காணப்படுகின்றன. “கரோனா வந்தது முதல், மக்கள் கூடைகள் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் முடைவதையும் நிறுத்திவிட்டோம்,” என்கிறார் அவர்.
திருமண காலமான 2021 பிப்ரவரியில்தான் அவர்களுக்கு கடைசியாக விற்பனையானது. 2020ஆம் ஆண்டு விற்பனை முற்றிலுமாக நின்றுவிட்டது. “கரோனாவிற்கு முன், எங்கள் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று [கூடைகளை] விற்போம்,” என்கிறார் நிர்மலாவின் கணவர் குல்வன்ஷ். “ஆர்டர் கொடுக்கும் மக்கள் தாங்களே வந்து வாங்கிச் செல்வார்கள்,” என்கிறார் அவர்.


50 வயதாகும் நிர்மலா, அவரது 58 வயது கணவர் குல்வன்ஷ் சிங் பாலாம்பூர் வருவாய் கோட்டத்தில் உள்ள ரச்சியாரா கிராமத்தில் வசிக்கின்றனர். முற்றிலும் கிராமப்புறமான இப்பகுதியில் 1,89,276 மக்கள்தொகையில் 98 சதவீதம் பேர் சிறிய குக்கிராமங்கள் மற்றும் 156 கிராமங்களில் வசிக்கின்றனர். ரச்சியாராவின் அருகமையில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள டிரம்மனில் 662 பேர் வசிக்கின்றனர் (கணக்கெடுப்பு 2011).
அவர்களின் கூரை வீட்டைச் சுற்றி தேவதாரு, ஆரஞ்சு, பேரிக்காய் மரங்கள் என இமாச்சலப் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தின் அம்சங்களுடன் உள்ளது. இத்தம்பதி (மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள) டூம்னா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நினைவுதெரிந்த காலம் முதல் மூங்கில் கூடைகளை முடைந்து வருகின்றனர்.
இமயமலையின் தௌலதார் மலைத்தொடர்கள் காங்ரா மாவட்டத்தின் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தௌலதர் சரணாலயம் 95,769 ஹெக்டேர் வனப்பகுதியில் பரவியுள்ளது. அவர்களின் கிராமம் உள்ள பாலாம்பூர் பகுதியில் தேயிலைதான் முதன்மை பயிர். தேயிலை பறிப்போர் முதுகில் மூங்கில் கூடைகளை சுமந்தபடி தேயிலைகளை புதர்களில் இருந்து பறித்து நிரப்புகின்றனர். அரிசி போன்ற தானியங்களை வைக்கவும், குப்பைகள் போடவும், குழந்தைகளுக்கு தொட்டிலாகவும் இக்கூடைகள் பயன்படுகின்றன.
“என் பெற்றோர் இக்கைவினையை செய்வார்கள், நான் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்,” என்கிறார், பெற்றோர் படிக்க வைக்காததால் பள்ளிக்கு செல்லாத நிர்மலா. 16 வயதில் குல்வன்ஷூடன் திருமணம் ஆனது முதல் அவர் கூடை முடைவதை தொடர்கிறார். அவரது கணவர் வீட்டார் மூங்கில் கைவினைகள் செய்பவர்கள். அவர்களுடன் இளம் தம்பதியும் இணைந்து கொண்டனர். “நாங்கள் ஒன்றாக சேர்ந்து வேலை செய்து ஒரு நாளுக்கு இரண்டு கூடைகள் செய்வோம்,” என்கிறார் குல்வன்ஷ். தங்களின் திறனை இரு மகன்களான அமர்ஜீத், ரஞ்ஜீத் ஆகியோருக்கு இத்தம்பதி கடத்தியுள்ளனர். இவர்களின் மனைவிகளும் கூடை முடைவதற்கு உதவுகின்றனர்.

32 வயதாகும் ரஞ்ஜீத் தனது தந்தையுடன் சென்று தங்களின் கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து மூங்கில் சேகரிக்கின்றனர். ரச்சியாராவைச் சுற்றி அடர்ந்து புல் போன்று மரம் வளர்ந்துள்ளதால் “இதைக் கண்டறிவது எளிது,” என்கிறார் நிர்மலா. இமாச்சலப் பிரதேசத்தில் 66 சதவீத நிலப்பகுதி வனப்பகுதியாக உள்ளது. ஆண்கள் தோள்களில் மூங்கிலை சுமந்தபடி நீண்ட கம்புகளை சமநிலையாக வைத்தபடி வீட்டிற்கு நடந்து செல்கின்றனர்.
சில சமயங்களில் கிராம சந்தையிலிருந்து மூங்கில் வாங்குகின்றனர். ஒரு கம்பு/தண்டு ரூ.250. மூன்று சிறிய கூடைகள் அல்லது ஒரு தொட்டில் (கிர்டா) செய்வதற்கு இந்த மூலப்பொருள் போதுமானது. கூடைகளுக்கு ஆர்டர் கொடுப்பவர்களே மூங்கிலும் கொடுப்பதுண்டு.


“ஒரு தொட்டில், பெரிய கூடை 500 ரூபாய்க்கு விற்கிறது. அதில் எங்களுக்கு 150 ரூபாய் கிடைக்கும்,” என்கிறார் நிர்மலா. அவரது இளம் பருவத்தில் பெற்றோர் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்கு இதேப் பொருட்களை விற்றதை அவர் நினைவுகூர்கிறார்.
ஜனவரி முதல் மே வரையிலான திருமண காலங்கள் தான் விற்பனைக்கு பொதுவாக உகந்த காலம். திருமணங்களில் பங்கேற்கும் உறவினர்கள் தங்களது பரிசுகளை கூடைகளில் வைத்து கொடுப்பது வழக்கம். கொண்டாட்டங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கூடைகளுக்கு ஆர்டர் கொடுத்துவிடுவார்கள். 2020 மார்ச்சிற்குப் பிறகு திருமணங்கள், பெருந்திரள் கூடுவது நின்றுவிட்டதால் அவர்களது வீட்டில் கூடைகள் விற்பதும் நின்றுவிட்டது.
மூங்கில் கம்புகள் வீட்டிற்கு வந்தவுடன், நிர்மலாவும், குல்வன்ஷூம் அவற்றைக் காய வைத்து மெல்லிய குச்சிகளாக வெட்டுவார்கள். கத்தியால் தோலை நீக்கி, உள் இழையை வெளியே எடுப்பது குல்வன்ஷின் வேலை. சிலசமயங்களில் இது மிகவும் ஆபத்தானது. “சிறிய காயங்கள் கூட ஏற்படும், காயம் ஏற்படுவது எங்களுக்கு சகஜம்தான்,” என்கிறார் அவர்.
மஞ்சுவும், ராணியும் மூங்கில் இலைகளை அகற்றி தண்டுகளை கடைகளில் வாங்கிய வெளிர் சிவப்பு, பச்சை, நீள நிற வண்ண பூச்சுகளைக் கொண்டு பூசுகின்றனர். ரூ.100க்கு வாங்கும் வண்ண பூச்சில் எட்டு கூடைகளுக்கு அவர்கள் வண்ணம் பூசுகின்றனர். “முன்பெல்லாம் நாங்கள் வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து [கூடைகள்] செய்வோம். இப்போது வயதாகிவிட்து, எங்களால் இரண்டு முதல் மூன்றுதான் செய்ய முடிகிறது,” என்கிறார் நிர்மலா.





மூங்கில் கம்புகள் வீட்டிற்கு வந்தவுடன், நிர்மலாவும், குல்வன்ஷூம் அவற்றைக் காய வைத்து மெல்லிய குச்சிகளாக வெட்டுவார்கள். “சிலசமயங்களில் சிறிய காயங்கள் கூட ஏற்படும், வெட்டுப்படுவது எங்களுக்கு சகஜம் தான்,” என்கிறார் குல்வன்ஷ். அம்ரிதா ராஜ்புட் எடுத்த புகைப்படங்கள்
ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக் காலத்தில் மூங்கிலைக் கண்டறிந்து தண்டுகளை வெட்டி, இரண்டு அறை வீட்டில் உலர்த்துவது என்பது கடினம். “மூங்கிலை வீட்டிற்குள் சேமித்து வைக்க போதிய இடமில்லை என்பதால் வெளியே வைப்போம், ஆனால் அங்கும் போதிய இடமில்லை,” என்கிறார் குல்வன்ஷ்.
இப்பிரச்சனையை சமாளிக்க, மழை வருவதற்கு முன்பே மூங்கிலை வெட்டி கொண்டு வந்துவிடுவோம்.
நெகிழியின் வருகைக்கு பிறகு கூடைகளின் விற்பனை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவிட்டது. எனவே குடும்ப உறுப்பினர்கள் பிற வேலைகளையும் செய்யத் தொடங்கினர். 2015ஆம் ஆண்டு முதல் அறுவடை காலத்தில் (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தேயிலை தோட்டத்தில் நிர்மலா வேலை செய்து ஒரு நாளுக்கு ரூ.200 சம்பாதிக்கிறார். “ஆனால் தேயிலை தோட்டங்களில் ஊரடங்கின் போது அதிகளவில் மக்கள் சேர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவருக்கு அதிக வேலை கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.
குல்வன்ஷ் கட்டுமானப் பணிகளைப் பெற்று ஒரு நாளுக்கு ரூ.500 வரை சம்பாதித்து வந்தார். “எனக்கு வேலை கிடைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. ஊரடங்கிற்கு முன் கடைசியாக வேலை கிடைத்தது. அதிலிருந்து யாரும் வீடுகள் கட்டுவதில்லை. நாங்கள் வேலைக்கு எங்கு செல்வது?” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அமர்ஜீத்தும், மஞ்சுவும் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து துணிகள் தைக்கும் வேலையைச் செய்கின்றனர். “தையல்காரராக நாங்கள் மாதத்திற்கு ரூ.4000 முதல் 5000 வரை சம்பாதிப்போம். ஆனால் ஊரடங்கு தையல் தொழிலையும் பாதித்துவிட்டது, எங்களின் வருவாயும் குறைந்துவிட்டது,” என்கிறார் அமர்ஜீத்.


நிர்மலா, குல்வன்ஷின் மூன்று பேரப்பிள்ளைகளும் தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் பயில்கின்றனர். தனது பிள்ளைகளை 5 மற்றும் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்ததாக நிர்மலா சொல்கிறார். அவரது பேரப்பிள்ளைகள் மேலும் படித்து சிறந்த வாழ்க்கைக்கான லட்சியத்தை கொள்ள வேண்டும் என அவர் கவனமாக இருக்கிறார். குடும்பத்தின் கூடை முடையும் தொழில் நிச்சயமற்று இருப்பதால், இக்கைவினையின் எதிர்காலம் என்னவாகும் எனும் சந்தேகத்தில் இருக்கின்றனர். “எங்கள் கிராம மக்கள் தான் எங்களிடம் வாங்குகின்றனர். எங்களது கூடைகளை இரண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்கள் நெகிழியை தேர்வு செய்தால் அடுத்து என்னவாகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது,” என்றார் அவர்.
இக்கட்டுரையின் முதல் இந்தி வடிவத்தை வடிவமைத்து, சுருக்கி உதவிய பாரியின் இந்தி ஆசிரியர் தேவேஷிற்கு எங்களின் நன்றி.
ஆங்கில மொழிப்பெயர்ப்புக்கு உதவிய பாரியின் முன்னாள் பயிற்சி மாணவி ஸ்வதேஷா ஷர்மாவிற்கு எங்கள் நன்றிகள்.
Editor's note
ரீத்து யாதவ் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள ஸ்ரீ விஷ்வநாத் பி.ஜி. கல்லூரியில் வணிக மேலாண்மை பிரிவில் இளநிலை இறுதியாண்டு படிக்கிறார். இவர் இளம் பெண்களுக்கு அதிகாரமளிக்க பணியாற்றும் துணை மாவட்ட பாலாம்பூரில் உள்ள டிரம்மன் கிராமம் கண்டுபாரி குக்கிராமத்தைச் சேர்ந்த என்ஜிஓவான சாஜி சப்னியுடன் இணைந்து பாரியின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேலாண்மை எனும் ஓராண்டு படிப்பை முடித்தவர்.அவர் சொல்கிறார்: “பாரியில் பயிற்சி மாணவராகச் சேர்வதற்கு முன், ஒரு நல்ல கட்டுரை எழுத பெரிய கற்பனை சக்தி வேண்டும் என நான் நினைத்திருந்தேன். நிர்மலாஜி, குல்வன்ஷ்ஜியுடன் பேசும்போது, உண்மைக் கதையை சொல்வதற்குத் தான் அதிகம் தேவை என்பதை உணர்ந்தேன். கற்பனையிலிருந்து எனது கவனம் பயன்படுத்தும் மொழி மற்றும் வார்த்தைகளின் பக்கம் திரும்பியது. தாக்கம் நிறைந்த கட்டுரைகள் என்பது அதை வாழும் மக்களிடமிருந்து தான் வருகிறது என்பதை நான் கற்றேன்.
எனது பலத்தைக் கண்டறிந்தேன். என்னால் கவனித்து, உரையாடி, ஒரு கதையை தெளிவாக சொல்ல முடியும். மக்கள் எரிச்சலடையாமல் நேர்காணல் செய்து களப்பணியாற்றுவது எப்படி என்பதையும் நான் புரிந்துகொண்டேன். என் முதல் வரைவு கட்டுரை மூன்றாவது ஆகி பிறகு இறுதியில் ஐந்தாவது என மாறியது. என் கட்டுரையில் உள்ள குறைகளை கண்டறியவும் நான் கற்றுக் கொண்டேன்.”
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.