“எனது குடும்பத்தினர் இந்தக்கலையை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்“ என்று சதீஷ் பானுபாய் சித்தாரா கூறுகிறார். பருத்தியாலான துணிகளில், இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டப்படும் ஓவிய கைவினை கலையான மட்டா நீ பச்சேடி குறித்து கூறுகிறார். “நாங்கள் தற்போது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, எங்கள் முன்னோர்கள் வரைந்த ஓவியத்தை கண்டுபிடித்தோம். அதை நாங்கள் பத்திரமாக பாதுகாக்கிறோம். நவராத்திரி, லட்சுமி பூஜை போன்ற நாட்களில் மட்டுமே அவற்றை வெளியே எடுக்கிறோம். அவற்றை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தால், நீண்ட காலம் அப்படியே இருக்கும். பல தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

29 வயதான சதீஷ் இந்த கலையை தனது தந்தை பானுபாய் சுன்னிலால் சித்தாராவிடம் இருந்து, தன் இளம் வயதிலே கற்றுக்கொண்டார். அவர் காலஞ்சென்ற அவரது தந்தை சுன்னிலால் சோட்டாலால் சித்தாராவிடம் இருந்து கற்றிருந்தார். இந்தக்கலையை பெரும்பாலும் ஆண்களே செய்கின்றனர். குடும்பத்தில் உள்ள பெண்கள் குடும்பப்பாராமரிப்பு பணிகளிடையே இதற்கும் உதவி செய்கின்றனர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்கின்றனர். இந்தக்கலையை பானுபாய் சுன்னிலாலுக்கு முன்னர் இருந்து செய்துவரும் 6 தலைமுறையின் பெயர்களை சித்தாராக்களால் கூற முடியும். அவர்களின் பெயர், பிறந்த மற்றும் இறந்த ஆண்டுகளை குறிப்பிட்டு, அவர்கள் முன்னோர்களின் விவரங்களை கல்வெட்டுகளில் நினைவுச்சின்னம் பதிக்கும் பாரம்பரியம் அவர்களிடம் உள்ளது. அதில், அவர்கள் குடும்பத்தினரின் மொத்த விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

சித்தாரா குடும்பத்தினர், அவர்களின் குடும்பம், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விராகம் தாலுகாவில் இருந்து வந்தது என்கிறார்கள். முகலாயர்கள் ஆட்சி, ஆங்கிலேயர்கள் ஆட்சி எதுவுமே அவர்களின் கலையை பாதிக்கவில்லை என்கிறார்கள். “எங்களது முன்னோர்கள் இந்த பகுதிகளில் பல தலைமுறைகளாக இக்கலையை செய்து வந்தனர். வறட்சி எங்களை அங்கிருந்து அருகில் உள்ள சிறு நகரங்களுக்கு புலம்பெயர வைத்தது. அதனால், நாங்கள் அகமதாபாத்தில் உள்ள கான்பூருக்கு வந்தோம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இங்கே வசித்து, எங்கள் கலையை தொடர்ந்து செய்துவருகிறோம். பாரம்பரியம் மாறாமல் இருப்பதால், மக்கள் எங்கள் கலையின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்“ என்று சதீஷ் விவரிக்கிறார். அவரது தந்தை பானுபாய் சித்தாரா 2012ம் ஆண்டில் தேசிய விருது பெற்றார். டெல்லி சென்று, மறைந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதை வாங்கினார்.

ஒவ்வொரு வகை ஓவியத்திற்கும் ஒரு பெயர் உண்டு. எடுத்துக்காட்டாக பனிஹரி என்ற ஓவியத்தில் புராண காவியங்களான ராமாயாணம் மற்றும் மகாபாரத கதைகள் இடம் பெற்றிருக்கும். இந்த ஓவியங்களில் உள்ள படங்கள், இசை வாசிப்பவர்கள், இந்து மத தெய்வங்கள், விறகு சேகரிப்பவர்கள், ஜோதிடர்கள், மத குருமார்கள் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். புராண கதைகள் மற்றும் நாட்டுப்புறக்கதைகள் இந்த ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும். “புதிய படங்கள் இவர்களது ஒவியங்களில் வரையப்படுமா“ என்ற கேள்விக்கு, “இக்கலையைப்போன்ற பாரம்பரிய கலைகளில் அதிக மாற்றங்களை செய்யாமல் இருப்பது மிக முக்கியமான ஒன்று“ என்று சதீஷ் பதிலளிக்கிறார். கலைஞர்கள் வரையப்போகும் ஓவியத்தில் தாளில் மாதிரிகள் வரைந்துகொள்வதில்லை. மாறாக அவர்கள் துணியில் வரைய செல்வதற்கு முன் கற்பனை செய்துகொள்கிறார்கள். மூங்கில் கிளைகளை வைத்து வெளிக்கோடுகள் போடப்படுகின்றன. இரும்புத்துரு, வெல்லம், புளியங்கொட்டை, அவுரி அல்லது மருதாணி போன்றவற்றைக்கொண்டு செய்யப்படும் இயற்கை வண்ணங்கள் தீட்டப்படும்.

ஒவ்வொரு ஓவியத்தின் அளவும், விகிதமும் துணியின் அளவைப்பொறுத்து வடிவமைக்கப்படும். முற்காலத்தில் ஓவியங்கள் பெரிய, பெரிய துணிகளில் மட்டுமே வரையப்பட்டன. அவற்றை சேகரிப்பவர்கள் பழங்கால ஓவியங்களை தேடி அலைகின்றனர். அவை காணக்கிடைப்பது இப்போது அறிதாகவே உள்ளது. ஏனெனில் அவர்கள் அவற்றை கோயில்களுக்கு பரிசளித்துவிட்டனர். இந்தக்கலை அவர்கள் வீட்டு அருகில் உள்ள மா செட்ரோஜியா கோயிலில் உள்ள குல்தேவி எனப்படும் வீட்டு தெய்வத்திற்கு படைப்பதற்காக துவங்கப்பட்டது. இந்த ஓவியத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், அது கோயிலுக்கு படைக்கப்பட்டால், உயர் குருமார்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சதீஷ் கூறுகிறார். இந்த ஓவியம் மிகப்பழமையாகிவிட்டால், அது ஆற்றில் போடப்படும்.

இந்த கலையில் கடந்த நூற்றாண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. சித்தாரா குடும்பத்தினர், மலிவாக்குவதற்காக இந்தக்கலை மண் மற்றும் மரக்கட்டையால் செய்யப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி செய்த காலத்தை நினைவு கூறுகின்றனர். சட்டத்தை பயன்படுத்தும்போதும், வண்ணங்களை கைமுறையாகத்தான் நிரப்ப வேண்டும். 

“கையால் செய்யப்படும் பொருட்களுக்கான மதிப்பு கூடியுள்ளதால், இக்கலையை மக்கள் பாராட்டுகின்றனர். அதனால், இதற்கான தேவை கூடியுள்ளது“ என்று சதீஷ் கூறுகிறார். “மக்கள் கையால் வரையப்படும் ஓவியங்களுக்கு எடுக்கும் முயற்சிகளுக்கான தொகையை கொடுப்பதற்கு தயாராகவே உள்ளனர். எனவே கலைஞர்கள் மீண்டும் முழுமையாக கையில் செய்கின்றனர்.“ என்று மேலும் அவர் கூறுகிறார்.

மற்றொரு மாற்றம் என்னவெனில், புனிதமான விஷயங்கள் மட்டுமின்றி அன்றாட நிகழ்வுகளுக்கும் இக்கலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக்கலை புடவை, துப்பட்டா, மெத்தை விரிப்புகள் மற்றும் மற்ற துணிகளிலும் செய்யப்படுகிறது. சுவரோவியங்களுக்கான தேவை குறைவாக உள்ளது. இந்த ஓவியங்கள் ஆடைகளிலும், நாம் உபயோக்கப்படுத்தும் பொருட்களிலும் செய்யப்படும்போது, தெய்வங்களின் வடிவங்களுக்கு பதிலாக, இயற்கை மற்றம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்படுகிறது. ‘வாழ்க்கை மரம்‘ விளக்கப்படங்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என்று சதீஷ் கூறுகிறார்.

அவரது பொருட்களை கண்காட்சிகளில் விற்பனை செய்கிறார். மலிவான விலை கொடுப்பதற்காக செய்யப்படும் சட்ட அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மற்றும் மெத்தைவிரிப்புகளுக்கான தேவை அதிகம் உள்ளது. இந்த சட்டங்கள் காந்திநகருக்கு அருகில் உள்ள பதேப்பூரில் செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்பவே சதீஷ் ஓவியங்களை தயாரிக்கிறார். எதிர்பாராமல் வாங்குபவர்களுக்காக சிலவற்றை கூடுதலாக செய்து வைத்துக்கொள்கிறார்.

மருத மரத்தின் இலைகளை பயன்படுத்தி துணியை சாயமேற்றுவதில் தொடங்குகிறது இந்த ஓவியத்திற்கான பணிகள். “இயற்கை கருப்பு வண்ணத்தைப்பெறுவதற்கு, இரும்புத்துரு மற்றும் வெல்லம் ஆகியவற்றை கலந்து 15 முதல் 20 நாட்கள் வரை நொதிக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. புளியங்ககொட்டை தூள் சேர்ந்து இந்தக்கலவை கொதிக்க வைக்கப்படுகிறது. இந்த கரைசல் பிசுபிசுத்தன்மையுடன் வைக்கப்படுகிறது. இதனால், துணியில் ஒழுகாது. இரும்புத்துருவால் உருவாக்கப்படும் கருப்பு நிறம், நூறாண்டுகளுக்கு பின்னரே சிதைய துவங்குகிறது. அப்போதும் ஓவியம் உடையத்துவமேயொழிய வண்ணங்கள் மாறாமல் இருக்கும்“ என்று சதீஷ் கூறுகிறார்.

“விலையுயர்ந்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அவற்றை பயன்படுத்துவதில்லை. படிகாரம் மூலம் சிவப்பு வண்ணம் உருவாக்கப்படுகிறது. ஆரஞ்ச் வண்ணம் பாக்கில் இருந்தும், பச்றை நிறத்திற்கு மருதாணி இலைகளில் இருந்தும், அவுரியிலிருந்து நீல வண்ணமும் பெறப்படுகிறது. வண்ணங்கள் தீட்டப்பட்டு முடிந்தவுடன், துணியை உள்ளூர் சபர்மதி ஆற்றில், அதிகப்படியான வண்ணங்களை நீக்குவதற்காக அலசுகின்றனர். பின்னர் வெள்ளை நாகை மலர்களுடன் சேர்த்து நிறங்கள் துணியில் ஒட்டுவதற்காக வேகவைக்கப்படுகிறது. பின்னர் எத்தனை முறை அலசினாலும் வண்ணங்கள் மங்கவே மங்காது“ என்று சதீஷ் கூறுகிறார். வண்ணங்கள் நிரப்பும்போது, கலைஞர்கள் மிக கவனமான இருக்க வேண்டும். அவற்றை நன்றாக பரப்பி, ஓவியங்களில் வழியச்செய்யவேண்டும்.

மூங்கில் கிளைகள் படங்கள் மற்றும் வெளிக்கோடுகள் வரைவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது வர்ணமடிக்கும் பிரசும் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்தில் பிரஸ்கள் பேரீச்சை மரத்தின் கிளைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. கிளைகளை மென்று, நாறாக்கி பின்னர் பிரஸ்சாக பயன்படுத்தப்படும்.

‘கைவினைப்பொருட்களுக்கான மதிப்பு கூடி வருவதால், தற்போது, இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது’

நூறாண்டுகளாக பருத்தி துணிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பருத்தி பட்டுத்துணியும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகை துணிகளும் அகமதாபாத்தின் உள்ளூர் சந்தையிலே வாங்கப்படுகிறது. பருத்தி துணி, அலசிய பின்னரும் வண்ணங்களை நன்றாக பிடித்துக்கொள்கிறது. நிறமிகள் நன்றாக ஒட்டிக்கொள்வதாக சதீஷ் கூறுகிறார்.

“அவரின் தந்தையைப்போல் இந்தக்கலையை பற்றிக்கொள்ளுமாறு எனது குழந்தைகளுக்கு வலியுறுத்துவேன்“ என்று சதீஷ் கூறுகிறார். அவருக்கு குடும்பத்தை நடத்துவதற்கு ஒரு நல்ல சம்பளத்தை இத்தொழில் கொடுப்பதாக எண்ணுகிறார். குஜராத்தில் உள்ள பல கோயில்களில் இவரின் வேலைபாடுகளை காணலாம். இந்த தேவை ஒருபோதும் குறையாது என்றே சதீஷ் எண்ணுகிறார். “இப்போதும் மக்கள் இந்த ஓவியங்களை வாங்குகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பின்னர் கூட இவற்றிகான தேவை இருக்கும். இந்த ஓவியங்கள் இல்லாமல் பூஜை ஒருநாளும் நிறைவடையாது“ என்று சதீஷ் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி.R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Editor's note

இந்த செய்தியை சேகரித்தவர்கள் காந்திநகர் தேசிய வடிவமைப்பு மையத்தின் மாணவர்கள். தேவாஷ் சாகர் புகைப்பட வடிவமைப்பு கலை பயில்கிறார் மற்றும் ஹிரிடே மிஸ்டிரி போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்கள் வடிவமைப்பு படிக்கும் மாணவர்கள். பாரம்பரிய கலை மற்றும் கைவினைஞர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் உள்ள ஆர்வம் மற்றும் கலைஞர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்கள் எவ்வாறு தங்களின் கருவிகள், வண்ணங்கள் மற்றும் திறமையை பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனித்து எழுவதில் இருந்து இந்த செய்தி வந்துள்ளது. அனுபவங்கள் குறித்து பேசும்போது இருவரும், பாரியின் மூலமே நாங்கள் எளிய மனிதர்கள் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள நாம் புறக்கணிக்கும் மனிதர்களை அங்கீகரிக்க துவங்கியுள்ளோம் என்று கூறினர். அவர்கள் மீது பரிவு கொள்கிறோம். நாங்கள் வசிக்கும் நகரில் உள்ள கவனிக்கப்படாதவர்களான உண்மை கதாநாயகர்களான நமது கலாச்சாரத்தை போற்றுபவர்களை சந்தித்து, இதில் முக்கியமான ஒன்று என்று கூறுகிறார்கள்.

அனைத்துப்படங்களும் புகைப்படக்கலை மாணவரான தேவாஷ் எடுத்தது.