
நியாஸ் ஹுசைன் தனது படுக்கையறைச் சுவரில் புதிதாகப் பிறந்த குழந்தையின் முழுமையற்ற ஓவியத்தை ஒட்டுகிறார்.
அவர் இதைச் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய மனைவி சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெயிண்ட் பிரஷ்களையும் தட்டுகளையும் கொண்டு வரச் செல்கிறார். இந்த 29 வயதான இளைஞன், அவரது அன்பான மனைவியை விட அதிகமான ஆதரவை துணை கொண்டிருக்கிறார். அவர் ரப்பர் காலிப்பர்கள் மற்றும் முழங்கை ஊன்றுகோல் உதவியுடன் நின்று நடக்கிறார்; பிந்தையதை அவர் மெதுவாக நீக்குகிறார். அதனால் அவர் எளிதாக வண்ணம் தீட்ட முடியும். நியாஸ் சௌகரியமானவுடன், சமீரா அறையை விட்டு வெளியேறுகிறார்.
வாழ்நாள் முழுவதும் போலியோவுடன் வாழ்ந்து வருவதால் அவருக்கு இந்த வகையான ஆதரவு தேவைப்படுகிறது.
நியாஸ் தில்லியில் உள்ள ஜாமியா நகரைச் சேர்ந்த ஒரு கலைஞர், இயலாமை இருந்தபோதிலும், சால்வடார் டாலி மற்றும் மதுபானி ஓவியர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு பெரிய ஓவியங்களை அவர் வரைகிறார்.

“ஒருமுறை 15 அடி உயர ஓவியம் வரைந்தேன். கேன்வாஸின் உச்சியை அடைய, நான் என் காலிப்பர்களை அகற்றிவிட்டு, ஒரு நாற்காலியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்தேன். விழுந்துவிடுவோமோ என்று நான் பயப்படவில்லை,” என்று நியாஸ் நினைவு கூர்ந்தார். “காலிப்பர்கள் என் முழங்கால்களை காயப்படுத்தும் நேரங்கள் இருந்தாலும், நான் வண்ணம் தீட்டும்போது காயங்களை மறந்து விடுகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
1993-ம் ஆண்டில், இரண்டு வயது குழந்தை நியாஸுக்கு காய்ச்சல் வந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அவரது இடது கால் உள்நோக்கி வளையத் தொடங்கியது. சரியான நேரத்தில் முறையான மருத்துவப் பராமரிப்பு இல்லாததால், நியாஸ் பகுதியளவு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். போலியோ வைரஸால் பாதிக்கப்படும் 5 வயதுக்குட்பட்ட 200 குழந்தைகளில் ஒருவர் மீள முடியாத பக்கவாதத்தைக் கொள்வார் என்பதால் இது அசாதாரணமானது அல்ல என்று 2021 உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கை கூறுகிறது.
1995-ம் ஆண்டில், உலகின் 60 சதவிகித போலியோ நோயாளிகள் இந்தியாவில் இருந்தனர். அறுபதுகளில் வாய்வழி தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அந்தத் தடுப்பு மருந்துகளின் குறைந்த செயல்திறன் காரணமாக பாதிப்புகள் அதிகமாக இருந்தன என இந்த அறிக்கை கூறுகிறது. வாய்வழி தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, 2014-ல் தான், இந்தியாவால் நோயை ஒழிக்க முடிந்தது.


நியாஸ் பிறந்து, பின்னர் வாழ்ந்த உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நகரில், ஒன்றிய அரசின் பல்ஸ் போலியோ தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரது தாயார் ஷெஹ்னாஸ் பேகம் தனது கணவர் ஜாபர் கான் மற்றும் கணவர் வீட்டார் ஆகியோர், நியாஸுக்கு தடுப்பூசி போட சம்மதிக்க பலமுறை முயற்சித்தார். “அவரது தந்தை என்னைப் புறக்கணித்தார். ஏனென்றால் பக்கத்துவீட்டில் இருந்த ஒரு குழந்தை [வாய்வழி] தடுப்பூசி போட்ட சில நாட்களில் இறந்துவிட்டது. அப்போது, ஜான்பூரில், பெண்கள் தனியாகப் பயணம் செய்ய யாரும் அனுமதிக்கவில்லை, ”என்று அவர் விளக்குகிறார்.
நியாஸுக்கு காய்ச்சல் ஏற்பட்ட இரவில் (1993), ஷெஹ்னாஸும் அவரது கணவரும் அவரைத் தங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜான்பூரின் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். “மருத்துவர்கள் அதைப் போலியோ என்று கண்டறிந்து, ‘அவருக்கு இங்கு சிகிச்சை அளிக்க எதுவும் செய்ய முடியாது, தயவுசெய்து அவரை தில்லிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள்,” என்று ஷெஹ்னாஸ் நினைவு கூர்ந்தார். எனவே சிறந்த சிகிச்சையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் 1993-ல் ஜான்பூரிலிருந்து குடும்பம் தில்லிக்கு குடிபெயர்ந்தது.
தில்லியில், நியாஸ் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் எதுவும் உதவவில்லை. அதற்குள், திட்டமிட்டபடி ஜான்பூருக்குத் திரும்ப குடும்பத்திற்கு பணம் இல்லை, எனவே அவர்கள் தில்லியில் தங்கி அங்கேயே வேலை பார்த்தனர். “நானும் என் கணவரும் தில்லி கோவிந்த்புரியில் உள்ள தையல் கடையில் வேலை செய்தோம். தைக்கும் துணி அளவின் அடிப்படையில் சம்பளம் பெற்றோம். நாங்கள் இருவரும் சேர்ந்து மாதம் 2,500 ரூபாய் சம்பாதிப்போம்,” என்கிறார் ஷெஹ்னாஸ்.


நியாஸ் வளர்ந்தபோதும், அவரது தாயார் அவருக்கு சிகிச்சை அளிப்பதை கைவிடவில்லை. மேலும் அவரை குணமாக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டு வைத்தியத்திற்கு மாறினார். “அம்மா என் காலில் செங்கற்களை கயிற்றால் கட்டுவார். நான் உறங்கும் போது, என் படுக்கையின் ஓரத்தில் செங்கற்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார். செங்கற்களின் எடை இரவு முழுவதும் என் கால்களை நேராக வைத்திருந்தது,” என்று நியாஸ் கூறுகிறார். இப்போது கூட அதன் கடுமையான வலியை நினைவில் கொள்கிறார். பக்கவாதம் ஓரளவு சரியானபோதும், அவரது இடது காலின் நிலை மாறாமல் இருந்தது.
இன்று நியாஸ் இதே நிலைமையுடன் வாழ்கிறார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 90 சதவீத ஊனம் என்பதற்கு வழங்கப்பட்டச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
நியாஸ் தனது ஐந்து வயதிலேயே முதன்முறையாக ஒரு ஜோடி காலிப்பர்களை அணிந்தார். “அந்தக் காலத்தில், காலிப்பர்கள் மிகவும் கனமான இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்டன. அவை மொத்தம் இரண்டு கிலோ எடை. காலிப்பர்களில் உள்ள மூட்டுக் கோப்பைகள் அடிக்கடி என் ஆடைகளை கிழித்து, என் முழங்கால்களை காயப்படுத்தியது,” என்று அவர் கூறுகிறார்.

அவரது வேதனையான நிலை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற நேரம் காரணமாக, நியாஸ் இறுதியாக ஸ்ரீநிவாஸ்புரி அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்தபோது அவருக்கு ஏழு வயது. அப்போது, நடக்க முடியாத நிலையில், தாயாரால் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் பள்ளியின் கழிவறையைப் பிற குழந்தைகள் பயன்படுத்துவதைப் போல் பயன்படுத்தப் போராடினார். அடிக்கடி அவருக்கு உதவவென வீட்டிலிருந்து அவரது தாய் அழைக்கப்படுவார்.
இந்தச் சிரமங்கள் இருந்தபோதிலும், நியாஸ் ஓவியத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டது பள்ளியில்தான். அவரது பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்கும்போது, “நான் அடிக்கடி கடைசிப் பெஞ்சில் அமர்ந்து டூடுல் ஓவியம் வரைவேன்” என்கிறார். 4-ம் வகுப்பில் அவர் ஒரு ஓவியப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. “நான் என் கலையை மேம்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறுகிறார்.

வீட்டில், அவரது ஓவியங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டன. இஸ்லாத்தில் அவை தடைசெய்யப்பட்டவை என்பதால் நியாஸை அவரது தந்தை அடித்திருக்கிறார்.
நான்கு குழந்தைகளில் மூத்தவனாக நியாஸ் இருப்பதால் நேரும் பொறுப்புகளிலிருந்து போலியோ அவரை விடுவித்துவிடவில்லை, பள்ளி முடிந்ததும், அவர் தனது குடும்பத்துக்காக வேலை செய்யத் தொடங்கினார். தனது மாமாவுடன் மண்டியில் காய்கறிகளை விற்று ஒரு நாளைக்கு ரூ.200-250 வருமானம் ஈட்டினார். மண்டியில் காலையில் சம்பாதித்த பணத்தை அவர் தனது குடும்பத்தினருக்கு கொடுத்தார். மீதமுள்ள நாள் சம்பாத்தியத்தை கலைப் பொருட்களுக்குச் செலவிட்டார். “மண்டியில் மதியம் தூங்கும் தொழிலாளர்களின் உருவப்படங்களை வரைந்து மகிழ்ந்தேன்” என்கிறார் நியாஸ். 19 வயதில், அவர் மெஹந்தி மற்றும் பச்சை குத்தும் கலைஞராக கொஞ்ச காலம் பணியாற்றினார். ஒரு மரச்சாமான் கடையில் வடிவவங்களை செதுக்கியும் கொடுத்திருக்கிறார்.மரச்சாமான் கடைக்காரர் அவருக்கு சில சிற்ப திறன்களைக் கற்றுக் கொடுத்தார். “நான் என்ன செய்தாலும், அது என் கலையுடன் தொடர்புடையது என்பதை நான் உறுதி செய்தேன்,” என்று அவர் விளக்குகிறார்.
2015-ம் ஆண்டில், நியாஸுக்கு 23 வயதாக இருந்தபோது, அவர் தில்லியின் புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நுண்கலை படிப்பிற்காக சேர்ந்தார். நான்காண்டு படிப்பை முடித்த பிறகு, அவர் இந்தியா கேட், பகதூர் ஷா ஜாபர் மார்க் மற்றும் தில்லி கோல்ஃப் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தனியார் நிறுவனத்திற்காக சுவரோவியங்கள் வரைந்தார்.
சமீராவின் சகோதரி மம்தாவுக்கு ஊனமுற்றோர் சான்றிதழைப் பெறுவதற்காக அவரது குடும்பத்திற்கு உதவியபோது சமீராவை நியாஸ் முதலில் சந்தித்தார். பக்கத்து குடிசைகளில் வசிக்கும் மக்களுக்காக அவர் அடிக்கடி இதைச் செய்வதுண்டு. “நான் ஸ்ரீநிவாஸ்புரியில் உள்ளவர்களுக்கு உதவி செய்தேன். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன்” என்கிறார் நியாஸ். ஏழு ஆண்டுகளாக ஒன்றாக இருந்த ஜோடி, 2020-ல் திருமணம் செய்ய முடிவு செய்தது. “அவர் என்னை விரும்புவதாகவும், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஒப்புக்கொண்டு, அன்சல் பிளாசாவில் பூக்களுடன் என்னிடம் சொன்னார்” என்கிறார் சமீரா.
இப்போது தனது மனைவி, பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் ஜாமியா நகரில் ஒரு வாடகைjக் குடியிருப்பில் நியாஸ் வசிக்கிறார். சராசரியாக, அவர் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு ஓவியங்களை விற்கிறார். மேலும் அவரது ஓவியங்களின் விலை ரூ.30,000 முதல் 2.8 லட்சம் ரூபாய் வரை இருக்கும். அவர் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் முழு நேர வேலையும் செய்கிறார் (அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை). அங்கு அவர் வரைகலை நிபுணராக பணிபுரிகிறார். கலை நிர்மாணங்களையும் செய்கிறார். “தொற்று பரவிய ஆண்டு வியக்கத்தக்க வகையில் எனது கலைக்கு நல்லபடியாக அமைந்தது. நான் வீட்டில் இருந்து வேலை செய்தேன். வரைவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. மூன்று மாதங்களில் ஆறு ஓவியங்களை விற்றேன்,” என்று அவர் கூறுகிறார். “எனது இலக்கு பணம் அல்ல. நான் பெயர் வாங்க வேண்டும். மக்கள் கண்டிப்பாக ‘நியாஸ் ஹுசைனை’ தெரிந்து கொள்ள வேண்டும்.”
PARI கல்வி, விளிம்புநிலைக் குழுக்களைப் பற்றி எழுத மாணவர்களை ஊக்குவிக்கிறது. ஊனமுற்றோர் பற்றிய இந்தத் தொடர் புனேவில் உள்ள ததாபி அறக்கட்டளையால் ஆதரவில் வெளியாகியிருக்கிறது. இந்தக் கட்டுரையை மீண்டும் வெளியிட விரும்பினால், தயவுசெய்து zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு எழுதவும்.
Editor's note
வந்தனா பன்சால், புது தில்லி விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் புரொபஷனல் ஸ்டடீஸில் பத்திரிகை மற்றும் வெகுஜனத் தொடர்பியல் இறுதியாண்டு படிக்கிறார். “நியாஸின் கதையை எழுதுவது சவாலாக இருந்தது. ஏனெனில் குடும்பம் பல வலிமிகுந்த நினைவுகளை அழித்துவிட்டதால் நான் நுணுக்கமாக அவதானிக்க வேண்டியிருந்தது. ஆசிரியர் குழுவின் செயல்முறை, பத்திரிகைச் செயல்பாடு கொண்டிருக்கும் நுட்பங்களை நான் புரிந்து கொள்ள உதவியது. குறைபாடுகள் உள்ளவர்களின் கதைகளை கண்ணியத்துடன் அணுகுவது எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன்," என்கிறார். அவரது முந்தைய கட்டுரை ‘I want to live my truth as a trans man’ நவம்பர் 27, 2021 அன்று PARI-ல் வெளியானது.
தமிழில்: ராஜசங்கீதன்
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்