மஸ்கானுக்கு 10 வயதுதான் ஆகிறது. ஆனால் சிங்கு போராட்டக் களம் பற்றி எல்லாமும் அவருக்கு தெரியும்.

“இந்த இடத்தில்தான் அவர்கள் (விவசாயிகள்) எங்களுக்கு உணவும் தேநீரும் தருவார்கள். வீட்டுக்கு கொண்டு செல்ல அவற்றை கட்டிக் கூட கொடுப்பார்கள். தேநீரை குடுவைகளில் ஊற்றிக் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர், இலவச உணவு வழங்கப்படும் கூடாரத்தை சுட்டிக் காட்டி. இன்னொரு திசையை சுட்டி, “இங்குதான் எங்களுக்கு காலணி கிடைத்தது. வெறும் கால்களில் நடந்து குப்பை சேகரிப்பதை பார்த்து அவர்கள் கொடுத்தார்கள்,” என்கிறார் அச்சிறுமி.

“இங்குதான் ஒரு அக்கா எங்களுக்கு பாடம் நடத்தி நோட்டு புத்தகங்களையும் பென்சில்களையும் கொடுப்பார்,” என்கிறார் ஒன்பது வயது சந்த்னி. மஸ்கானின் தங்கையான அவர் சாஞ்சி சாத்தையும் கூடாரங்களில் நிறுவப்பட்டிருக்கும் ஷாகீத் பகத் சிங் நூலகங்களையும் பற்றி சொல்கிறார். “புத்தகங்களில் படங்களுடன் இருக்கும் கதைகளை எங்களுக்கு அவர்கள் சொல்வார்கள். நாங்கள் படங்களும் வரைவோம்,” என்கிறார் அவர் சந்தோஷமாக. இரு குழந்தைகளின் படிப்பும் கோவிட் ஊரடங்கின் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருக்கிறது.    

தில்லி – ஹரியானா எல்லையில் விவசாயிகள் கூடி 2020ம் ஆண்டின் நவம்பர் 26ம் தேதி முதல் புதிய வேளாண் சட்டங்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். மஸ்கானும் சந்த்னியும் போராட்டக்களத்துக்கு காலை 8 மணிக்கு வந்து மாலை 4 மணி வரை அங்கேயே இருக்கின்றனர். காலியான குடுவைகள் மற்றும் பிற குப்பைகள் ஆகியவற்றை அவர்கள் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் சேகரிக்கின்றனர். பிறகு அக்குப்பைகளை அவர்களின் பெற்றோர் விற்று பணம் ஈட்டுகின்றனர். பெற்றோரும் குப்பை சேகரிப்பவர்கள்தான்.

திறந்த சாக்கடை பக்கமாக சுட்டிக்காட்டி, “நாங்கள் அருகாமையில்தான் வசிக்கிறோம்,” என்கின்றனர் இருவரும். “காட்டை நோக்கி செல்லும் கால்வாய் பக்கமாக செல்ல வேண்டும்,” என தங்களின் வசிப்பிடத்தை பற்றி கேட்டதற்கு சொல்கிறார் மஸ்கான். “எங்கள் வசிப்பிடம் தூரத்தில் இல்லை. வாருங்கள்! எங்கே இருக்கிறதென காட்டுகிறோம்,” என்கிறார் அவர். போராட்டக் களத்திலிருந்து அவர்களின் வசிப்பிடத்துக்கு இருக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமும் உற்சாகத்துடன் ஓடியும் நடந்தும் நம்மை அழைத்துச் செல்கின்றனர்.

மஸ்கானும் சந்த்னியும் ஓரறை குடிசையில் வசிக்கின்றனர். தகரத்திலான சுவர்களையும் பிளாஸ்டிக் பரப்புகளாலான  கூரையும்தான் அவர்களின் வசிப்பிடம். அவரின் குடும்பமும் சுற்றி இருக்கும் மக்களும் குப்பை பொறுக்கும் வேலை செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்திலிருந்து இடம்பெயர்ந்து தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள நரெலா தாலுகாவின் எல்லையில் குடிசைகள் போட்டு வாழ்கின்றனர்.

வசிப்பிடத்துக்குள் செல்கையில் அவ்வப்போது நின்று, எதிர்ப்படும் மக்களை எங்களுக்கு அவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் போராட்டக் களத்திலும் அதைச் சுற்றியும் இருக்கும் குப்பைகளை சேகரித்து விற்று வாழ்க்கை ஓட்டுகின்றனர். “இவர் எங்களின் நண்பர். இவரை நீங்கள் புகைப்படம் எடுக்க முடியுமா?” எனக் கேட்கின்றனர் அச்சிறுமிகள்.

சிங்கு போராட்டக் களத்தின் மத்தியில் போடப்பட்டிருக்கும் மேடையை காட்டி, “இரண்டு நாட்களுக்கு முன் ஒருவரை இங்கு போட்டு அடித்தார்கள். அவரின் தலைப்பாகை அவிழ்ந்து விழுந்து விட்டது. தலையில் ரத்தம் வந்தது,” என்கிறார் மஸ்கான். அதில் பயந்துபோன குழந்தைகள் மூன்று நாட்கள் போராட்டக் களத்துக்கு செல்லவில்லை.

வழக்கமாக அச்சிறுமிகள் பக்கத்து வீட்டுக்காரரான 28 வயது அஸ்மினா பீவியுடன்தான் செல்வார்கள். அவர் இந்த வேலையை 17 வருடங்களாக செய்து வருகிறார். “குப்பை சேகரிக்கும் குடும்பத்தில் பிறந்தேன். ஒரு குப்பை சேகரிப்பவருக்கு மணம் முடிக்கப்பட்டேன்,” என்கிறார் அவர். “நாங்கள் அனைவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்; வங்க தேசம் அல்ல. ஆனால் இந்த உண்மையை எப்படி எங்களால் நிரூபிக்க முடியும்? எங்கள் முன்னோர்களின் ஆவணங்களை எப்படி காட்ட முடியும்?” எனக் கேட்கிறார். அவர் வசிக்கும் மொத்த பகுதியினரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்கிறார்.  “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது இங்கிருந்த பஞ்சாபி மக்கள் இலவச சமூக சமையலறைகள் வைத்து எங்களை ஆதரித்தனர். இப்போது நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். அவர்கள் இருக்கும் இடத்தை பெருக்கி, அங்கிருக்கும் குப்பைகளை சேகரித்து உதவி செய்கிறோம்,” என்கிறார் அஸ்மினா.

மேற்கு வங்க முர்ஷிதாபாத்தின் வங்க மொழி வழிக் கல்வி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார் அஸ்மினா. “மஸ்கானும் சந்த்னியும் முறையான கல்வி பயின்றதில்லை. அருகே இருக்கும் அரசு பள்ளிக்கு சில நாட்கள் சென்றனர். ஊரடங்குக்கு பிறகு நிறுத்திவிட்டனர்.” 

வீட்டருகே சென்றதும் பயன்படுத்தப்படாத ஓர் ஆட்டோவை காட்டி, “இதில்தான் நாங்கள் சேகரிக்கும் குப்பைகளை வைப்போம். அனைவரும் அவரவர் சேகரித்ததை இங்கு வைப்பார்கள். பிறகு சோனிப்பட்டிலிருந்து (ஹரியானா) ஒரு வேன் வந்து அவற்றை வாங்கிக் கொள்ளும்,” என்கிறார் மஸ்கான். அவர்களின் வீடுகளுக்கு முன் இருக்கும் இடத்தை பிளாஸ்டிக் துண்டுகள், குடுவைகள் முதலிய குப்பைகள் நிரப்பியிருக்கின்றன.

போராட்டக்களத்துக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான மக்கள் போடும் குப்பைகளை அஸ்மினா மற்றும் சிறுமிகள் போன்றோர் சேகரிக்கின்றனர். ஒவ்வொரு சமையற்கூடமாக சென்று ப்ளாஸ்டிக் குடுவைகள், அட்டை பெட்டிகள், தெர்மாகோல் தட்டுகள், அட்டைகள், பழைய தாள்கள் முதலிய குப்பைகளை தங்களின் பெரிய பைகளில் சேகரிக்கின்றனர். குப்பை சேகரிப்பவர்களில் சிலர் எல்லா குப்பைகளையும் சேகரிப்பதை நிறுத்திவிட்டு ப்ளாஸ்டிக் குடுவைகளை மட்டும் சேகரிக்கிறார்கள். அவற்றிலிருந்து ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் கிடைக்கும். “ப்ளாஸ்டிக் குடுவைகளை மட்டும் விற்று 600லிருந்து 800 ரூபாய் வரை ஒருநாளில் வருமானம் ஈட்ட முடிகிறது,” என்கிறார் அஸ்மினா. முன்பு அவர் ஈட்டிக் கொண்டிருந்த வருமானத்தை காட்டிலும் இத்தொகை மூன்று, நான்கு மடங்கு அதிகம்.

போராட்டக் களம் கொடுக்கும் லாபங்கள், விவசாயிகளின் பிரச்சினைகளை அவர்களின் பார்வையிலிருந்து மறைத்துவிடவில்லை. “அவர்களின் பிரச்சினைகள் விரைவிலேயே சரியாகி அவர்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறோம். நமக்கான உணவை விவசாயிகள்தான் விளைவிக்கிறார்கள். பணத்தை நாம் உண்ண முடியாது,” என்கிறார் அஸ்மினா. “எங்களிடம் நிலம் இருந்தால், தினசரி வெறும் 200 ரூபாய் கிடைக்கும் குப்பை சேகரிக்கும் வேலையை நாங்கள் செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லையெனில் அவர்களின் (விவசாயிகள்) நிலையும் எங்களின் நிலை போல் ஆகிவிடும்,” என்கிறார் அவர்.

Editor's note

சவுமியா தாகூர் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ-எல்எல்பி படிப்பின் நான்காம் வருட மாணவர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். மாணவ செயற்பாட்டாளராக பாலின புரிதலுக்கான தளங்களில் இயங்குபவர். “சட்டீஸ்கரிலுள்ள என் வீட்டிலிருந்து சிங்குவுக்கு போராட்டக் களத்தை பற்றி எழுத வந்தேன். பஞ்சாப் விவசாய சங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் இந்த குழந்தைகளை பார்த்துவிட்டு, இவர்களை பற்றி எழுத விரும்பினேன்,” என்கிறார் அவர்.

தமிழில்: ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்