அதிகாலை நான்கு மணிக்கு, சூரியன் உதயமாவதற்கு வெகுமுன்னரே, செபஸ்தியன் க்ராஸ்டோ துயில் விழித்துத் தன் பேக்கரியின் பணியில் ஈடுபடுகிறார். இருள் கவ்விய பெனாலிம் நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அன்றைய தினத்தின் முதல் விற்பனைக்குத் தேவையான ரொட்டி தயாரிப்பதற்கு வேண்டிய மைதா, ஈஸ்ட், உப்பு, சுத்தமான நீர் முதலியவற்றைச் சேகரித்துக் கொள்கிறார்.

பேக்கரியின் ஒற்றை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் பரபரப்புடன் ஒரு கட்டி ஈஸ்டை எடுத்து, இரு பாதிகளாக உடைத்து, ஒரு பெரிய இயந்திரக் கலவையில் எரிகிறார். அதன்பின் பல அடுக்குகளாக அள்ளி அள்ளி மைதாமாவும் கையளவு உப்பும் கலவையில் சேர்க்கிறார்.

55 வயதான செபஸ்தியன், அறையின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் ஏந்தலான கல் உருளியைச் சுட்டிக்காட்டி “நான் பல வருடங்கள் என் கையால்தான் மாவு பிசைந்து கொண்டிருந்தேன். ஆனால் வயதாக ஆக எனக்கு இது கடினமாக இருக்க ஆரம்பித்தது. இந்த இயந்திரக் கலவையை வாங்கி, தற்போது இதைத்தான் பயன்படுத்துகிறேன்” என்று கூறுகிறார்.

கலவையின் அகன்ற ஆழமான அடுக்கு சுழல ஆரம்பிக்க, மேகமூட்டமாக மைதாமாவு காற்றில் மேலே எழுகிறது. செபஸ்தியன் கவனத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர், அவ்வப்போது சிறிதளவு மாவு என மாறி மாறி, கலவையில் இடுகிறார். இவர் தயாரிப்பது ‘பாவ்’ என்று சொல்லப்படும் ஒரு ரொட்டி வகை. கோவா மக்களில் பெரும்பாலானோர் காலைச்சிற்றுண்டிக்கு அன்றாடம் உட்கொள்வது இதுதான். செபஸ்தியனின் பேக்கரி நூறு வருடங்களுக்கும் மேலாக இதைத் தயார் செய்து வருகிறது. பேக்கரியின் வெளிப்புறத்தில் ஒருவித அடையாளமும் இல்லை; ஏன், செபஸ்தியன் என்று பெயர் போட்ட ஒரு தகடு கூட காணப்படவில்லை. ஆனால் 11,919 மக்கள் எண்ணிக்கையே கொண்ட இந்த சிறிய நகரத்திற்கு இது தேவையில்லை என்பது பேக்கரிக்கு வெளியில் தினந்தோறும் திரளும் மக்கள் கூட்டத்தை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.

செபஸ்தியன் தன் 11வது வயதிலிருந்து இந்த பேக்கரி தொழிலில் இருப்பவர். அவரை அளவுகள் பற்றி விசாரித்தபோது அவர் புன்சிரிப்புடன் “அளவு என்று ஒன்றுமில்லை, வெறும் கண்ணளவு தான். நான் வெகு காலமாக இதைச் செய்து வருவதால், எனக்கு எது, எவ்வளவு போடவேண்டும் என்று தெரியும்” என்று சொல்கிறார். “என் தந்தை இந்த பேக்கரி நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டபோது இதில் எங்கள் குடும்பத்தாரின் பங்கேற்பு சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருந்தது” என்று பகிர்ந்துகொண்ட செபஸ்தியன், தன் 25வது வயதில் இதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். “எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இந்த பேக்கரியை என் தந்தைக்கு பரிசாக அளித்தார். அந்த நண்பருக்கு திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆகியும் குழந்தைச்செல்வம் இல்லை. என் தந்தையின் அறிமுகம் ஏற்பட்டு, என் தந்தை அவரைத் தன் ‘ஞானப்பிதா” (‘காட்பாதர்’) ஆக ஏற்றுக் கொண்ட பிறகு தான், அவருக்குக் குழந்தை பிறந்தது. அதற்கு நன்றி செலுத்துவது போல் இந்த பேக்கரியை என் தந்தைக்கும் அவர் சகோதரருக்கும் பரிசாக அளித்தார்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்துகொள்கிறார் செபஸ்தியன்.

பொழுது புலர்ந்திருக்கும் நேரம். இயந்திரக் கலவையின் தொடர்ந்த சத்தம் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர்தம் மூன்று மகள்களையும் எழுப்பவில்லை. ஏறக்குறைய இதே நேரத்தில்தான் அவர் மனைவி சேஜியாவும் துயிலெழுந்து வீட்டின் அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்குகிறார்.

கலவைச்சட்டியில் இருந்து மாவை எடுத்து செபஸ்தியன் கையினால் பிசைந்து கிரானைட் மேடையில் உலர வைக்கிறார். உள்ளேயிருந்து மற்றொரு பங்கு மாவை எடுத்து, துரிதமாகவும் திறமையாகவும் சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய தகரத்தட்டுகளில் அழகாக வரிசைப்படுத்தி அடுக்குகிறார். “இது நான் நேற்றிரவு பேக்கரியை மூடிய பிறகு தயாரித்த மாவு. இரவு நான் தூங்கும் பொழுது, மாவு பதம் எய்தி, காலையில் ரொட்டி சுடுவதற்குத் தயாராக இருக்கும். இவ்வாறு நான் காலைமாலையாக மாறி மாறி வேலை செய்வதால், என்னால் நாளில் மூன்று பங்குகளாக ரொட்டி தயார் செய்து இடைவிடாமல் விற்பனைக்கு வைக்க முடிகிறது” என்று விளக்குகிறார்.

தட்டுகள் நிரம்பியதும் ஒரு ஆழமான, தரை முதல் மேற்கூரை வரை உயரம் கொண்ட விறகடுப்புச் சூளையில் அவற்றை ஒவ்வொன்றாக நகர்த்துகிறார்.”சூளையின் துவாரம் சிறிதாக இருப்பதால் என்னால் தட்டுகளை ஒவ்வொன்றாகத்தான் உள்ளே வைக்க முடிகிறது. பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அடுப்பு இது என்பதால் அப்போதைய புரிதல் மற்றும் வழக்கத்தின்படி வெப்பம் அதிகம் வெளியேறாமல் இருப்பதையே நோக்கமாகக் கொண்டு, சிறிய துவாரம் அமைக்கப்பட்டது. இப்போதைய நவீன பேக்கரிகளில் உள்ள சூளைகள் 4 அல்லது 5 தட்டுகளை ஒரே சமயத்தில் உள்ளே வைக்கும் அளவிற்கு துவார அளவுடன் செய்யப்படுகின்றன” என்று கூறுகிறார்.

அடுப்பில் சுட்டுக் கொண்டிருக்கும் ரொட்டியின் நறுமணம் கம்மென்று அறையைச் சூழ, சேஜியா முன் அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து, ரொட்டி வாங்க வந்திருப்பவர்களைக் கவனிக்கத் தொடங்குகிறார். மென்மையான, தங்க நிறங்கொண்ட அப்பொழுதே செய்யப்பட்ட வெதுவெதுப்பான ரொட்டிகள், கிழிக்கப்பட்ட செய்தித்தாள் துண்டுகளில் சுற்றப்பட்டு வெளியே காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கைகளில் வைக்கப்படுகின்றன. செபஸ்தியன் ஒரு பாவ் அல்லது பாயீ ரூபாய் 5 என்று விற்கிறார்.

“கொரோனா ஊரடங்கு முதன் முதலாக அமலுக்கு வந்த போது பேக்கரியை ஐந்து நாட்கள் தொடர்ந்து மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆயினும் எங்கள் தொழில் அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதால், விரைவில் கடை திறந்து வேலையைத் தொடரலானோம். விற்பனை உயர்ந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மக்கள் இப்பொழுது அதிகமாக வெளியே உணவு உட்கொள்வதில்லை. வீட்டில் உண்பதையே விரும்புகின்றனர்” என்று மேலும் விவரித்தார், சேஜியா.

குழந்தைகள் -சிபானி, ரோஷா, சுவிஜல் 8 மணி அளவில் எழுந்து பின் விற்பனைக்கவுண்டரை மாறிமாறிப் பார்த்துக் கொள்கின்றனர். சூளை அறையிலிருந்து சுடச்சுட வெளியே வரும் ரொட்டிகளை விற்பனைக்குக் கொண்டு செல்வதும், வாடிக்கையாளர்களைக் கவனிப்பதும், புது மாவு உருண்டைகளை சூளையினுள் வைப்பதுமாக பரபரப்புடன் வேலை செய்கின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு செபஸ்தியன் திடீர் மழையில் நனைந்துவிடாமல் நீலநிற தார்பாலின் விரிப்பினால் மூடப்பட்ட ஒரு மூங்கில் கூடையைத் தன் சைக்கிளின் பின் இருக்கையில் கட்டி எடுத்துக்கொண்டு, பெனாலிமின் தெருக்களில் செல்கிறார். அவரின் ‘டூட்டூட்’ ஹாரன் சத்தம் தெற்கு கோவாவின் அங்குள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அறிந்த ஒன்று. அவர்கள் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் ‘போதேர் ஏட்டா’ ‘ரொட்டிக்காரர் வருகிறார்’ என்று ஒருவருக்கொருவர் கூவிக்கொண்டு வீட்டின் வெளியே ஓடி வருகின்றனர்.

இதே சமயத்தில், பேக்கரியில் 22 வயது நிரம்பிய ரோஷா ஸ்மார்ட்போனில் தன் காலேஜ் வகுப்புகளை எடுத்துக்கொள்கிறார். “என்னிடம் லேப்டாப் இருந்தாலும் இங்கு இன்டர்நெட் சரியாக வேலை செய்யாதபடியால் என்னால் அதைப் பயன்படுத்த இயலவில்லை. செல்போனில் டேட்டா (data) மூலம் கனெக்ட் செய்வது தான் நிலையாகவும், எளிதாகவும் இருக்கிறது” என்று கூறுகிறார். செயின்ட் ஜோசப் வாஜ் கல்லூரி நிறுவனத்தில் இரண்டாவது வருடம் கல்வியியல் டிப்ளமா பயின்று வருகிறார் ரோஷா. இவர் ஏற்கெனவே அறிவியல் இளநிலைப்பட்டம் பெற்றவர். “D Ed’ பயில்வதற்குக் கட்டணம் அதிகம்; வருடத்திற்கு சுமார் 34,000 ரூபாய். நான் அதிகமென்று மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் என் அப்பா எப்படியாவது சமாளித்து விடலாம் என்று எனக்கு ஊக்கமளித்து என்னுடைய ஆசிரியை ஆகும் கனவை நனவாக்கப் பாடுபடுகிறார்” என்ற தயக்கத்துடனும் நன்றியுணர்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார்.

அவருடைய பெரிய சகோதரி ஷிபானி, வயது 23, வர்த்தகத்துறையில் இளநிலைப் பட்டம் பெற்று இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. வங்கியில் பணி புரிய வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் அவருக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை. “இப்போதைக்கு நான் பேக்கரியில் உதவி செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இருந்தே, வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. மனதிற்குப் பிடித்த வேலை கிட்டுவது மிகவும் கடினமாகவும் அசாத்தியமானதாகவும் இருக்கிறது” என்று மொழிகிறார்.

20 வயதான சுவிஜல் கடைக்குட்டி. இவர் தையல் வேலை கற்றுக் கொண்டுள்ளார். “நான் முறைப்படி தையல்வேலை பயின்று, சிறு குழந்தைகளுக்கான உடைகள் தைக்க ஆரம்பித்தேன். கொரோனா உக்கிரமாக தலைவிரித்தாடிய சமயத்தில், நான் துணியினாலான மாஸ்குகள் செய்து விற்றுக் கொண்டிருந்தேன்” என்று சொல்கிறார். அவர் கல்லூரிப்படிப்பு படித்துப் பட்டம் பெறவில்லை என்பது அவரது பெற்றோருக்கு மனவருத்தத்தை உண்டாக்கும் ஒரு விஷயம். “என் பெற்றோர் முதலில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. எங்களுக்குள் சிறிய வாக்குவாதம்கூட ஏற்பட்டது. ஆனால் எனக்கு விருப்பமில்லாத விஷயத்தில் நான் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவுடன் அவர்களுக்கு எடுத்துச் சொன்ன பிறகு அவர்கள் ஒப்புக்கொண்டனர்” என்கிறார்.

செபஸ்தியன் சைக்கிளில் தெருக்களைச் சுற்றி பாவ் விற்றுவிட்டு வந்த பின், இன்னொரு பங்கு மாவைக் கலவை இயந்திரத்தில் கலக்கிறார். இம்முறை அவர் தூளாக்கிய கோதுமைத்தவிட்டையும் சேர்த்துப்பிசைந்து சற்று அதிகமான ஊட்டச்சத்து மிகுந்ததாகக் கருதப்படும் ‘பாயீ’ ரொட்டிகளுக்கான மாவைத் தயார் செய்கிறார். இதை மாலை நேரத்தில் ரொட்டிகளாகச் சுட்டு, இரவு 11 மணிவரை வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார். “நான் எண்ணிக்கை எதுவும் வைத்துக் கொள்வதில்லை. ஒரு நாளுக்குக் குறைந்தது 3000 பாவ் ரொட்டிகளும் 1500 பாயீ ரொட்டிகளும் செய்து விற்கிறோம் என்பது என் ஊகம். பண்டம் வீணாகாமல் விற்றுப்போகும்வரை, இரவு எத்தனை மணியானாலும் கடை மூடாமல் திறந்து வைத்திருக்கிறோம்” என்று விளக்கிக்கூறுகிறார்.

தினமும் 4 மணிநேரமே உறங்கி, வாரத்தின் 7 நாட்களும் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. செபஸ்தியன் இந்தத் தொழிலில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டிருக்கிறார். புனிதவெள்ளி ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை. கிறிஸ்துமஸ் தினத்தன்றுகூட ஊர் மக்கள் பலர் தங்கள் குடும்பத்திற்காகச் செய்யும் கிறிஸ்துமஸ் கேக்குகளை, பெரிய சூளை அடுப்பில் இட்டுச்சுட விரும்பிக் கேட்டு வருவதால் கடை திறந்துதான் இருக்கும்.

ஆயினும், க்ராஸ்டோ குடும்பத்தார் இந்த உழலையின் நடு நடுவில் சற்றே மீளத் தங்களுக்கென்று ஒரு வழி வகுத்துள்ளனர். “நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நாங்கள் பேக்கரியை விட்டு சேராலிம் என்று சொல்லப்படும் அண்டைக்கிராமத்தில் ஒரு வீட்டிற்குச் சென்று விடுவோம். அடுத்த நான்கு மாதங்களுக்கு என் ஒன்றுவிட்ட சகோதரர் இந்த பேக்கரியை நடத்துவார். என் தந்தையின் காலத்திலிருந்தே இதுதான் எங்கள் ஏற்பாடு. என் தந்தையும் அவர் சகோதரரும்கூட இவ்வாறு தான் பேக்கரியையும் மூடாமல், ஓய்வும் பெற்று நடத்திவந்தனர். இந்த ஓய்வு இல்லாமல் எங்களால் தொடர்ந்து இவ்வாறு உழைப்பது கடினம்” என்று விளக்குகிறார் செபஸ்தியன். “நாங்கள் நான்கு மாதங்களில் ஈட்டும் பொருளை வைத்துக் கொண்டு அடுத்த நான்கு மாதங்களைக் கடப்போம். இதுதான் எங்கள் இரு குடும்பங்களின் வழக்கமாக இருந்திருக்கிறது” என்று மொழிகிறார்.

இப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பேக்கரியின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு செபஸ்தியனிடம் இப்போது விடை இல்லை. “இது மிகவும் கடினமான தொழில். எங்கள் குடும்பங்களில் எவரும் இதில் முழுவிருப்பம் காண்பிக்கவில்லை. கடவுளுக்கே விட்டுவிட வேண்டியதுதான். எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று கூறுகிறார்.

Editor's note

சாரா டையஸ், மும்பையின் செயிண்ட் ஜேவியர் கல்லூரியில் இரண்டாவது வருடம் மக்கள் செய்தித்தொடர்பியல் (Mass Communication)/இதழியல் (Journalism) பயிலும் மாணவி. கோவா மக்களின் அன்றாட உணவான ரொட்டி, ரொட்டி வகைகள், அவை செய்யப்படும் விதங்கள், செய்வதில் உண்டான சிக்கல்கள், நன்மைகள், வரவு-செலவுகள் - இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டு, தன் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பேக்கரியில் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். இவர் சொன்னது- "பரி கல்வி அமைப்புடன் இணைந்து செயல்பட எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, என் மனக்கண்களைத் திறந்து விட்டது. என்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை நான் எவ்வளவு குறைவாக கவனித்திருக்கிறேன், கேள்விகள் எழுப்பாமல் ஊமையாக இருந்திருக்கிறேன், நான் பார்க்கும் பல விஷயங்களை மாற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதெல்லாம் இப்போதுதான் உணர்கிறேன். இந்தக் கட்டுரை எழுதுவதற்காக ஒவ்வொரு முறை நான் பேக்கரிக்குச் சென்றபோதும், கேள்வி கேட்கும் முறை, கவனிப்பு, உய்யச்சிந்தித்துச் சிக்கல்கள் சமாளிக்கும் தன்மை போன்ற பண்புகளை வளர்த்துக்கொண்டேன்".

சந்தியா கணேசன் காண்டெண்ட் ரைட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மாண்டிசரி ஆசிரியை. கார்பரேட் செக்டரிலும் பல வருட அனுபவம் கொண்டவர். தற்போது Enabled Content என்ற பெயரில், குழந்தைகளுக்கான காண்டெண்ட் உருவாக்கவதில் ஈடுபட்டுள்ளார்.