
பரூக் மொண்டல் காளிபிளவர் செடிகளை காண்பித்து, “ஒரு காளிபிளவருக்கு ரூ.2 மட்டுமே எனக்கு கிடைக்கிறது. அதை வளர்ப்பதற்கு நான் இரண்டு ரூபாய் செலவு செய்துள்ளேன். எனில் இதில் என்ன அர்த்தம் உள்ளது?“ என்று அவர் கேட்கிறார். அவர் 47 வயதான மதுராப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி ஆவார். அவர் மேற்கு வங்காளம் வடக்கு 24 பாரகன்சில் தனக்குச் சொந்தமான 4 பிகா (0.33 ஏக்கர்) நிலத்திலும், 1.5 பிகா குத்தகை நிலத்திலும் உருளைக்கிழங்கு, கடுகு, அரிசி, கத்தரிக்காய், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை பயிரிட்டு வருகிறார்.

கடுகுக்கும் அதே நிலை உள்ளதாகவே அவர் கூறுகிறார். ஒரு கிலோ கடுகு விதைகளின் விலை ரூ.50. ஒரு பிகாவில் பயிரிடப்பட்டுள்ளதில் 2.5 குவிண்டால் (250 கிலோ கிராம்) விளைச்சல் கிடைக்கும். அவர் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிக்கு ரூ.3 ஆயிரம் செலவிட்டுள்ளதாக கூறுகிறார். கடந்தாண்டைப்போல் கடுகு கிலோ ரூ.45க்கு விற்றால் மட்டுமே அவர் செலவு செய்த தொகையைவிட இரண்டு மடங்கு சம்பாதிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
விவசாயத்தில் இருந்து அவரது குடும்பத்துக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.30 ஆயிரம். அது 4 பேர் கொண்ட அவரது குடும்ப செலவுகளுக்கு போதுமானதாக உள்ளது. அவரது இரண்டு மகன்கள் பள்ளிப்படிப்பை 8 மற்றும் 11ம் வகுப்போடு நிறுத்திவிட்டு மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் மற்றும் இறைச்சிக்கடையிலும் வேலைக்கு சேர்ந்துவிட்டனர். அவர்கள் இருவரும் தனித்தனியாக மாதம் ரூ. 4 ஆயிரம் கொடுக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் பயிரிடத் துவங்கியபோது, உரங்கள் மற்றும் ஏனைய முக்கியமான பொருட்களின் விலை உயர்வாக இருந்தது. ஆனால், நாங்கள் விளைச்சலை விற்க சென்றபோது நல்ல விலை கிடைக்கவில்லை. விவசாயம் செய்வதில் இனி அர்த்தமில்லை“ என்று அவரது மனைவி கூறுகிறார். அவரை பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை.
அருகில் உள்ள ஜியோல்டங்கா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப்குமார், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டம் குறித்து விளக்கி கூறுகையில், “உள்ளூர் சந்தையில் எங்கு, என்ன விலையில் விளைச்சலை விற்க முடியும் என்ற தகவல் அரிதாகவே கிடைக்கிறது“ என்கிறார். அவர் கத்தரிக்காய், பீன்ஸ், கீரை மற்றும் சுரைக்காய், புடலங்காய், சுண்டக்காய் போன்ற காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.
“கத்தரிக்காய், ஒரு நாள் விலை ரூ.50 அல்லது ரூ.100ம், அடுத்த நாள் ரூ.5 என்றும் விலை குறைந்தும்விட வேண்டாம். ஒரே நிலையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது கத்தரிக்காய் கிலோ ரூ.15க்கு விற்கப்படுகிறது. நாங்கள் ஒரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டால், என்ன (குறைந்த) விலை அவர்கள் நிர்ணயிப்பார்கள் என்பது தெரியவில்லை. முறையான குறைந்தளவு விலை கூட இல்லையென்றால், நாங்கள் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம்“ என்று கூறுகிறார் வடக்கு 24 பாரகன்சின் ஹர்பா வட்டத்தைச் சேர்ந்த விவசாயி.
அவர் வீட்டின் அருகில் வசிப்பவர் சுகுமார் தாஸ் (50), தனது 1.5 பிகா நிலத்தில் கத்தரிக்காய், காளிபிளவர், வாழைப்பழம் மற்றும் சுரைக்காய் ஆகியவை பயிரிட்டுள்ளார். அவர் அருகில் உள்ள ஹப்ரா பல்பொருள் அங்காடி, அல்லது குமா, போடோர் மற்றும் பிராவில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்வதற்காக செல்கிறார். “இன்று எனது காளிபிளவர் அனைத்தையும் ஒன்று ரூ.1க்கு விற்றேன். கத்தரிக்காய் கிலோ ரூ.14க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20 க்கும் விற்றுத்தீர்த்தேன். நாங்கள் நஷ்டத்தில் உள்ளோம்“ என்று அவர் கூறினார். “எனக்கு வேறு வழியும் இல்லை. எனக்கு விவசாயம் மட்டுமே தெரியும். இடைத்தரகர் வந்தார் என்றால், எனக்கு இதைவிட குறைவாகவே வருமானம் கிடைக்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அரசின் புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துடன் மேற்கு வங்காளத்தில், மாநில அரசு நெல்லுக்கு குறைந்தளவு ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் வேண்டுகோளாகும். பிரதீப் குமார் கூறியதுபோல், “வெளிச்சந்தையில் நெல்லின் விலை ரூ.950 ரூபாய். குறைந்தளவு ஆதார விலையான ரூ.1,868ல் பாதியாகும். நிறைய சிறு விவசாயிகள், மண்டியிலிருந்து வெளியேற விரும்புகின்றனர்.
அகில இந்திய கிரன்திகரி கிரிஷாக் சபா போன்ற விவசாய சங்கங்கள் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மையங்களை துவக்க விரும்புகிறார்கள். 5 முதல் 10 கிலோ மீட்டருக்கு மேல் அவர்களது விளைச்சலை எடுத்துச்செல்வதற்கு விவசாயிகளுக்கு விருப்பமில்லை.
“எனது இடத்தில் இல்லாத மண்டிக்கு நான் செல்ல முடியாது. மண்டியில் வர்த்தகம் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் என்னிடம் இல்லை. எனது நெல்லை நான் உள்ளூர் சந்தையில் விற்றுக்கொள்கிறேன்“என்று பரூக் கூறுகிறார். “விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் நடைபெறுவது குறித்து நான் தொலைக்காட்சிப்பெட்டியில் பார்த்தேன். நான் அதனை ஆதரிக்கிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

“இடைத்தரகர்களால் சிறு விவசாயிகள் மண்டியைக்கூட சென்றடைவதில்லை. மேற்கு வங்காளத்தில் நிறைய மண்டிகள் இல்லை. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு மண்டி மட்டுமே உள்ளது“ என்று பிரதீப் சிங் தாகூர் கூறுகிறார். இவர் சங்க பொதுச்செயலாளர் ஆவார். மாநில வேளாண் சந்தை துறையைப்பொருத்தவரை மேற்கு வங்காளத்தில் 186 மண்டிகள் உள்ளன.
நாடு முழுவதும் வெறும் 6 சதவீதம் விவசாயிகள் மட்டுமே மண்டிகளை சென்றடைகிறார்கள். எஞ்சியுள்ள 94 சதவீத விவசாயிகள் அவர்களின் விளைச்சலை திறந்தவெளி சந்தையில் விற்கிறார்கள் என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் 2012-13ன் 70வது சுற்று தகவலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு ஆதார விலை நிர்ணயிக்கும் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு விற்கிறார்கள்.
புதிய வேளாண் திருத்த சட்டங்கள் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது முதல், அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மற்ற சங்கங்கள் பேரணிகள், கூட்டங்கள், தர்ணா போராட்டங்களை நடத்துகின்றன.
புதிய வேளாண் திருத்த சட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்னைகளை எதிர்த்து போராடுவதற்காக, மேற்கு வங்காளத்தில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி, அகில இந்திய விவசாயிகள் மகா சபை, பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தொடர்ந்து டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து அச்சபையின் செயலாளர் கூறுகையில், “எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. நகர வீதிகளில் கூட மக்கள் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார்கள். விவசாயிகள் இந்த பிரச்னைகள் குறித்து தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் உரங்களின் விலை உயர்வு மற்றும் விளைச்சலுக்கு குறைந்த விலை, பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு ஆகியவற்றால் விரக்தியில் இருந்தார்கள்.
விவசாயிகள் எதிர்த்து போராடி வரும் அந்த மூன்று திருத்தச்சட்டங்கள்: விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் (Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm Services Act, 2020), வேளாண்மை உற்பத்தி மற்றும் வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020 (Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020) மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் (the Essential Commodities (Amendment) Act2020), ஆகியவையாகும். 2020ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி அவசர சட்டமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, பின்னர் செப்டம்பர் 14ம் தேதி வேளாண் சட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த அரசால் 20ம் தேதி சட்டமாக்கப்பட்டது.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள். இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்து இந்தியரையும் பாதிக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும் disable the right to legal recourse இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 32 ஆன சட்ட உதவிபெறும் உரிமையை முடக்கி முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறது.
துலாலி தாஸ், 47, 2021 சட்டமன்ற தேர்தலில் அவரது எதிர்பார்ப்புகள் குறித்து கூறுகையில், “எங்களை அரசு கவனிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையில் உள்ள அன்றாட பிரச்னைகளை கவனிக்க வேண்டும். அதை முந்தைய அரசால் செய்ய முடியவில்லை. புதிய அரசு விவசாயிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும்“ என்றார்.
அதே கேள்விக்கு சுபர்ணா தாஸ் பதிலளிக்கையில், “நாங்கள் ஏழைகள், அரசின் திட்டங்கள் இலவசமாகவும், நியாயமாகவும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுக்கு விவசாயிகள் படித்தொகை வழங்கப்படவேண்டும்“ என்றார்.
Editor's note
சுமந்தா ராய், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவர் மற்றும் சமுதாய ஆரோக்கியம் மையத்தின் ஆராய்ச்சி மாணவர். பாரி-கல்விக்கு இது அவரது இரண்டாவது கட்டுரை. அவரது முதல் கட்டுரை-தடம்புரண்ட ரயில் வணிகர்களின் வாழ்க்கை என்ற கட்டுரை 2020ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிரசுரிக்கப்பட்டது.
சுமந்தா மேற்கு வங்க விவசாயிகள் குறித்து எழுதவேண்டும் என்று எண்ணினார். புதிய வேளாண் சட்டங்களுக்கு உள்ளூரில் உள்ள நிலை குறித்து, அவர் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் கூறுகையில், “பாரி விவசாயிகள் போராட்ட செய்திகளை முதல் நாளில் இருந்து சேகரித்து வருகிறது. அது என்னை ஈர்த்தது. மேற்குவங்கத்தின் நிலை குறித்து கட்டுரை எழுத தூண்டியது. அதை விளக்கமாக ஆராய்ந்தது மற்றும் இந்த விவசாயிகள் போராட்டம் குறித்து கற்றுக்கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது“ என்றார்.
தமிழில்: பிரியதர்சினி. R.
மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.