பெங்களூரில் வேகமெடுத்து வரும் கட்டுமானத் தொழில், புலம்பெயர் தொழிலாளர்கள் பலரையும் ஈர்க்கிறது. பெங்களூரில் உள்ள புனித ஜோசப் ஆண்கள் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 2019-2020 பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணியாளர்களிடம் நேர்காணல் செய்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள், கொத்தனார்கள், டைல்ஸ் பதிப்பவர்கள் எனப் பலவகை கட்டுமானப் பணிகளைத் தேடி இந்தியா முழுவதிலும் உள்ள கிராமங்களை கடந்து வந்துள்ள ஆண்கள், பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை பாரி கல்வியுடன் இணைந்து மாணவர்களும் ஆவணப்படுத்தினர்.

இக்கட்டுரைத் தொகுப்பில், நாம் தமிழ்நாட்டின் விழுப்புரம் முதல் மேற்குவங்கத்தின் கூச் பெஹார் வரையிலான தொலைவில் இருந்து பெங்களூருக்கு புலம்பெயர்ந்த ஐந்து தொழிலாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைக் காண்கிறோம். சிலர் கடந்தகால மனிதர்களையும், இடங்களையும் நினைத்து ஏங்குகின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக அவற்றைக் கடந்து செல்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 5

‘நான் பிளாஸ்டிக் ஷீட் போட்ட கூடாரத்தில் வசிக்கிறேன்’  மேற்குவங்கத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு குடும்பத்திற்கு உணவளிக்க புலம்பெயர்ந்த ஷியாம் கன்ஷியாமின் கதை இது; தனக்கு கிடைக்காத கல்வி வாய்ப்பு தனது குழந்தைக்கு கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

‘என் கைகள் கடுக்கின்றன, தொண்டை வலிக்கிறது, கண்கள் எரிகின்றன’ இது விழுப்புரத்தில் தனது கிராமத்திலிருந்து வந்த 57 வயது சுலையின் கதை இது. அவர் தனது வயோதிக தாயை நினைத்து கவலை கொள்வதோடு கிராமத்தின் கோலாகல பொங்கல் கொண்டாட்டத்தை நினைத்து ஏங்குகிறார்.

‘என் குடும்பத்தை பார்க்க விரும்புகிறேன், என்கிறார் மேற்குவங்கம் கூச் பெஹார் மாவட்டத்தில் தனது குழந்தைப் பருவத்தை நினைத்து ஏங்கும் நாராயண் சந்திர மண்டல். அவர் பெங்களூரின் எஜிபூராவில் தனியாக வசிக்கிறார்.

‘நான் கடந்த காலத்திற்குச் செல்ல விரும்புகிறேன்’    இது இனிப்பு செய்வதில் ஆர்வத்துடன் இருந்தும், நல்ல வருமானத்திற்காக கட்டுமானப் பணிகளுக்கு தள்ளப்பட்ட ஸ்ரீமல் வர்மனின் கதை.

‘எனது கடன்கள் அனைத்தும் அடைபட்டுவிட்டன’ என்கிறார் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் ராகவன். தனது பேரப்பிள்ளைகள் வளர்ந்து, மகிழ்ச்சியாக இருப்பதைக் காணவே அவர் காத்திருக்கிறார்.


‘நான் பிளாஸ்டிக் ஷீட் போட்ட கூடாரத்தில் வசிக்கிறேன்’

என் பெயர் ஷியாம் கன்ஷியாம். எனக்கு 29 வயதாகிறது. நான் மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பிறந்தவன். என் தந்தையின் சேமிப்பில் கட்டிய வீட்டில் வசிக்கிறேன். ஆனால் 2008ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் எங்கள் வீடும், நிலத்தின் பெரும் பகுதியும் அடித்துச் செல்லப்பட்டன. இப்போது எங்களிடம் உள்ள கால் ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை விளைவித்துக் கொள்கிறோம். ஆனால் விளைச்சல் குறைவாகவே இருப்பதால் லாபம் கிடைப்பதில்லை, வீட்டு உபயோகத்திற்கு அவற்றை வைத்துக் கொள்கிறோம். எங்களின் புதிய வீடு மிகவும் சிறியது. ஆனால் வெள்ள நிவாரண நிதியாக கொடுக்கப்பட்ட 14,000 ரூபாயில் அது கட்டப்பட்டது.

ஷியாம் கன்ஷியாம், 29, மேற்குவங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்
தொழில்: கட்டுமானப் பணியாளர்

நான் மத்திய பெங்களூரின் எட்வர்ட் சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் வேலை செய்கிறேன். ஃபைல் ஃபார்மிங்தான் என் வேலை – ஒட்டுமொத்த கட்டடத்திற்கும் அடித்தளத்தை அமைத்துவிடுவேன். நான் ஃபைல் ஃபார்மிங் செய்யும் பெரிய வாகனத்தில் அமர்ந்து கொள்வேன்.

மேற்குவங்கத்தில் வீட்டில்தான் என் பதின் பருவம் கழிந்தது. எனக்கு 21 வயதான போது நண்பர் மூலம் ஃபைல் ஃபார்மிங் பற்றி அறிந்தேன். ஆனால் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதுபற்றி கவனம் செலுத்தவில்லை. என் குடும்பம் ஒரு நாளுக்கு இருவேளை உணவிற்கு கஷ்டப்படுவதை பார்த்தவுடன் வேலைக்குச் செல்ல முடிவு செய்துவிட்டேன். என் சகோதரிக்கும் திருமண ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. எனக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது. மூத்த மகனாக எல்லா வகையிலும் நான் உதவ நினைத்தேன். என் வருமானத்தையே குடும்பம் சார்ந்துள்ளது.

எனக்கு 23 வயதான போது மேற்குவங்கத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது ஃபைல் ஃபார்மிங்கைப் பார்த்து கற்றுக் கொண்டேன். அப்போது ஒரு நாளுக்கு 200 ரூபாய்தான் கிடைக்கும். பிறகு ஒடிசா சென்று ஒரு நாளுக்கு 350 ரூபாய் ஈட்டினேன். பெங்களூரில் ஒரு நாளுக்கு 600 ரூபாய் என இருமடங்கு பணம் கிடைப்பதால் என் வாழ்க்கை இப்போது எளிதாகிவிட்டது.

சக தொழிலாளர்களுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கூரை போட்ட கூடாரத்தில் வசிக்கிறேன். எங்களில் ஒருவர் சமைத்துவிடுவார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் எங்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

என் மனைவியும், மூன்று வயது குழந்தையும் மிட்னாபூரில் வசிக்கின்றனர். 59 வயதாகும் என் தந்தை எங்கள் நிலத்தை கவனித்துக் கொள்கிறார். ஆண்டிற்கு இருமுறை வீட்டிற்கு செல்வேன். அவசரத் தேவை என்றால் அடிக்கடி போய்வருவேன். இரு மாதங்களுக்கு முன்பு என் மகளுக்கு உடல்நலம் குன்றியதால் பார்க்கச் சென்றிருந்தேன். பெங்களூரில் இருந்து 1780 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் வீடு இருக்கிறது. நான் இங்கிருந்து ரயிலில் கொல்கத்தா சென்று அங்கிருந்து பேருந்தில் மிட்னாபூருக்கு நான்கு மணி நேர பயணமாக செல்வேன். வீட்டிற்குச் சென்றடைய 3,000 முதல் 3,500 ரூபாய் வரை எனக்கு செலவாகும்.

என் மகள் நன்கு படித்து பொறியாளராக வேண்டும் என விரும்புகிறேன். என்னால் பெற முடியாத கல்விக் கனவை என் மகள் நிறைவேற்ற விரும்புகிறேன். என் வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், என் குடும்பத்தை ஒருபோதும் பாதிக்க விடமாட்டேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.

மாணவ செய்தியாளர்கள்: தினா பர்வேஸ், அனன்யா ரவி, வம்ஷிகா ஹெக்டே

Go to top


‘என் கைகள் கடுக்கின்றன, என் தொண்டை வலிக்கிறது, கண்கள் எரிகின்றன’

என் வாழ்வாதாரத்திற்காக மணல் சுமக்கிறேன். மண்ணைத் தோண்டும் போது என் கைகளில் வலி, தொண்டையில் தூசு புகுந்து கண் எரிச்சலையும் ஏற்படுத்தும். மணலை சுமந்துகொண்டு போய் மற்றொரு மூலையில் உள்ள தொழிலாளரிடம் கொடுப்பேன். நாங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் என தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்கிறோம்.

சுலை, 57, தமிழ்நாடு மாநிலம் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுக்காவில் உள்ள விழுப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்
தொழில்: கட்டுமானப் பணியாளர்

என் பெயர் சுலை. 57 வயதாகும் நான் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஆதர்ஷா நகர கட்டுமானத் தளத்தில் வேலை செய்கிறேன். இங்கிருந்து 10 நிமிடம் நடக்கும் தொலைவில் என் மனைவி, சகோதரன், அவரது மனைவி ஆகியோருடன் இணைந்து வசித்து வருகிறேன். நான் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இங்கு வந்துள்ளேன். எனக்கு 18, 22 வயதுகளில் இரண்டு ஆண் பிள்ளைகள், 12, 15 வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள். அவர்களும் ஆர்.டி. நகரில் உள்ள கட்டுமான தளத்தில் வேலை செய்கின்றனர். என் மூத்த மகன் 2ஆம் வகுப்பு வரை படித்தான். எனது மற்ற பிள்ளைகள் பள்ளிக்கு சென்றதே இல்லை. அவர்களை நல்ல பள்ளிக்கு அனுப்ப விரும்பினேன். ஆனால் அவர்களின் கல்விக் கட்டணத்திற்கு என்னிடம் பணமில்லை. அதற்கு கூடுதல் வருவாய் தேவைப்படுகிறது.

நானும், என் மனைவியும் தினமும் தலா 230 ரூபாய் சம்பாதிக்கிறோம். நாங்கள் உணவிற்கும், பயணத்திற்கும் அதிகம் செலவிடுகிறோம். என் கிராமத்தைப் போன்றில்லை, இந்த நகரத்தில் விலைவாசி அதிகம். என் கூலியில் ஒரு பகுதியை கிராமத்தில் வசிக்கும் அம்மாவிற்கு அனுப்பிவிடுவேன். எங்களுக்கு சேமிப்பு எதுவும் கிடையாது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் தாலுக்காவில் என் கிராமம் உள்ளது. அங்குதான் பிறந்து 40 ஆண்டுகள் வரை வாழ்ந்தேன். தமிழ்நாட்டில் உள்ள என் கிராமத்தில் கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். என் பெற்றோர் பண்ணைகளில் தினக்கூலியாக வேலை செய்தனர். என் சகோதரியின் திருமணத்திற்காக பண்ணையாரிடம் நான் கடன் வாங்கினேன்.

“உள்ளூர் மருத்துவரை அணுகியபோது அவர், தொற்று மற்ற விரல்களுக்கும் பரவிட்டது, மூன்று விரல்களையும் அகற்ற வேண்டும் என்றார்“

ஒருநாள் வேளாண் உபகரணங்களில் இருந்து துரு பிடித்த இரும்பு ஆணி என் விரலை சேதப்படுத்திவிட்டது. வலி இருந்தபோதும் என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை. அறுவடை காலங்களில் எங்களுக்கு நிறைய வேலை இருக்கும். நாங்கள் வேலையை முடிக்காவிட்டால் பண்ணையார் பணம் கொடுக்க மாட்டார். அது ஆழமான காயமாகி தொற்றாகிவிட்டது. உள்ளூர் மருத்துவரை சந்தித்தபோது, தொற்று மற்ற இரு விரல்களுக்கும் பரவிவிட்டது, மூன்று விரல்களையும் எடுக்க வேண்டும் என்றார். நான் இடைவெளியின்றி வேலை செய்ய வேண்டும். என் வருமானமின்றி என் மனைவி, நான்கு பிள்ளைகள் என என் குடும்பத்தின் செலவை சமாளிக்க முடியவில்லை. எங்கள் வீட்டை விற்று கடன்களை செலுத்தினோம். எனது கிராமத்தில் சொந்தமாக வீடோ, நிலமோ இப்போது இல்லை. என் குடும்பத்திற்காகவும், உணவு, மருத்துவச் செலவுகளை சமாளிக்கவும் வேலை தேடினேன். எனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர் மூலம் இந்த கட்டுமானப் பணியை கண்டறிந்தேன். அவர் இங்கு தோட்டக்காரராக இருக்கிறார். அவரது முதலாளி புதிய வீடு கட்டுவதற்கு தொழிலாளர்களை தேடிக் கொண்டிருந்தார். அப்போது என கைகளும் குணமடைந்திருந்தது. எனவே நானும், என் மனைவியும் இந்த வேலையில் சேர்ந்துவிட்டோம்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எனது கிராமத்திற்குச் செல்வேன். பேருந்தில் சென்றால் ஏழு மணி நேரமாகும். 78 வயதாகும் என் தாய் ரங்கம்மா, என் அத்தையுடன் கிராமத்தில் வசிக்கிறார்; அவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்து கொள்கின்றனர். எனது தந்தை 81 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பொங்கல் காலத்தில் எனது கிராமத்தின் நினைவுகள் வரும். நாங்கள் ஒன்றிணைந்து திருவிழாவைக் கொண்டாடுவோம். எங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வோம். ஆனால், என் பிள்ளைகள் கிராமத்தில் இருக்கும் உறவுக்கார பிள்ளைகள், நண்பர்களுடன் விளையாட முடியாமல் போய்விட்டது. எனக்கு பெங்களூரு என்பது புதிய மனிதர்கள் கொண்ட வேற்றுகிரகம். என் தாயையும் பார்க்க ஏங்குகிறேன். இப்போதெல்லாம் அவருக்கு உடல்நிலை சரியாக இருப்பதில்லை. ஒருநாள் எங்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என நம்புகிறேன்.

மாணவச் செய்தியாளர்: ஷேகா நாயர்

Go to top


‘என் குடும்பத்தைப் பார்க்க விரும்புகிறேன்’

நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தேர்வுநாள் நெருங்கிவிட்டது. தேர்வின் முதல் நாளில் என் மிதிவண்டி, கைப்பேசியை விற்று பிற்பகல் 11.30 மணி ரயிலை பிடித்தேன். நான் வீட்டிலிருந்து ஓடிவிட்டேன். நான் பிறகு தேர்வு எழுதவே இல்லை.

நாராயண் சந்திரா மண்டல், 26, மேற்குவங்கம் மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்
தொழில்: கட்டுமான ஒப்பந்ததாரர்

என் பெயர் நாராயண் சந்திரா மண்டல். பல்ராம் என்றும் அழைப்பார்கள். மேற்குவங்க மாநிலம், கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி என் தந்தை. அவருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு உதவினேன். இளம் வயது முதலே என் சகோதரர்களுடன் இங்கு வேலைசெய்தேன். எல்லோருக்கும் வேலை கிடைக்கவில்லை; எங்கள் வருமானத்தை அதிகரிக்க கூடுதல் வேலைகளையும் செய்தேன். ஆனால் நாங்கள் ஈட்டிய வருவாயில் குடும்பத்தை நடத்த முடியவில்லை. எனவே 2009ஆம் ஆண்டு நான் பெங்களூருக்கு ஓடி வந்துவிட்டேன்.

இப்போது எனக்கு 26 வயதாகிறது. என் மனைவி பிங்கி மண்டலுக்கு 23 வயதாகிறது. எனக்கு 4 வயதில் பிரிதம், 2 வயதில் ஆதி என இரண்டு மகன்கள் உள்ளனர். என் மனைவியும், பிள்ளைகளும் கிராமத்தில் வசிக்கின்றனர். பெங்களூரின் எஜிபுராவில் அறை எடுத்து வசிக்கிறேன். நான் கட்டுமானத் தொழிலாளி. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை இருக்கும். பிளாஸ்டரிங் வேலையை பார்த்து, கற்றுக் கொண்டு செய்கிறேன்; கோவிந்தா எனும் கட்டுமானப் பணியாளர்தான் கற்றுத் தந்தார்.

“நான் ஒரு கட்டுமான தொழிலாளி. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்கிறேன்.”

நான் வேலைக்கு வந்தபோது தினமும் 97 ரூபாய் கிடைக்கும். எனக்கு பொறுப்புகள் அதிகம். தொடக்கத்தைவிட இப்போது சிறப்பாக உள்ளது. இப்போதெல்லாம் ஒரு நாளுக்கு 900 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். வார இறுதியில் எனக்கு பணம் தருவார்கள். எங்களுக்கு எப்போதும் சரியாக பணம் கிடைப்பதில்லை. இதனால் கஷ்டம் ஏற்படுகிறது. நான் ஒரு ஒப்பந்தக்காரர் என்பதால், உரிய நேரத்தில் பிற தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உறுதி செய்யும் பொறுப்பை பெற்றுள்ளேன். அவர்களின் அன்றாட உணவு, அவர்கள் செய்யும் வேலைகள், நேரத்திற்கு வேலை முடிகிறதா என அனைத்திற்கும் பொறுப்பேற்கிறேன். ஒரு ஞாயிறு விட்டு மறு ஞாயிறு எனக்கு விடுமுறை கிடைக்கும் – அப்போது ஓய்வெடுப்பேன் அல்லது நண்பர்களைச் சந்திப்பேன்.

என் பெற்றோரை பார்க்க வேண்டுமெனத் தோன்றுவதால் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவேன். எட்டு மாதங்களுக்கு ஒருமுறை 10-15 நாட்கள் வீட்டிற்குச் சென்று வருவேன். அப்போது அங்கு நிலத்தில் தந்தைக்கு உதவியாக இருப்பேன். என் குடும்பத்தைப் பார்க்க விரும்புகிறேன். என் தாயும், மனைவியும் சமைக்கும் உணவை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு இருந்த ஓய்வான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். என் சிறு குழந்தையுடன் விளையாட முடியவில்லை. என் வீடு சார்ந்த அனைத்தும் நினைவுக்கு வருகின்றன.

மாணவச் செய்தியாளர்கள்: இனாரா செயின், த்வீப் கதாரியா

Go to top


‘நான் கடந்த காலத்திற்கு செல்ல விரும்புகிறேன்’

என் பெயர் ஸ்ரீமல் வர்மன். எனக்கு 26 வயதாகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். நான் மேற்குவங்க மாநிலம், கூச்பெஹார் மாவட்டம் துதேர் குதிடிவன்பாசில் பிறந்து வளர்ந்தேன். அரசுப் பள்ளியில் ஆறு ஆண்டுகள் படித்த பிறகு குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.

ஸ்ரீமன் வர்மன், 26, மேற்குவங்க மாநிலம், கூச் பெஹார் மாவட்டம் கூச்பெஹார் தாலுக்காவின் துதேர் குதிதேவன்பாசைச் சேர்ந்தவர்
தொழில்: கட்டுமானப் தொழிலாளர்

நான் பெங்களூரின் பலேபெட் கட்டுமான தளத்தில் வேலை செய்கிறேன். நான் ஒரு நாளுக்கு காலை 9 மணி முதல் 6 மணி வரை வேலை செய்து தினமும் 725 ரூபாய் சம்பாதிக்கிறேன். தினக்கூலி என்பதால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் சம்பளம் கிடைக்காது. என் குடும்பத்திற்கு பொருளாதாரமாக உதவுவதற்கு மாதம் 10,000 ரூபாய் அனுப்புகிறேன்.

மரத்துண்டு, அலுமினியம், பிளாஸ்டிக் கூரை வேயப்பட்ட சிறிய குடிலில் தொழிலாளர்கள் நாங்கள் 10 பேர் தங்கியுள்ளோம். மழை பெய்யும்போதெல்லாம் குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்துவிடும். அவற்றை வெளியேற்ற வேண்டும். குடியிருப்பில் புகுந்த தண்ணீரை மோட்டார் கொண்டு உறிஞ்சி வெளியேற்றுவோம். வாளிகள் கொண்டும் அள்ளி வெளியில் கொட்டுவோம். மழைக் காலங்களில் எங்கள் துணிகள், உணவு மற்றும் உடைமைகள் சேதமாகிவிடும்.

கூச் பெஹாரில் எனது வீட்டின் அருகே நடைபெற்ற கட்டுமானப் பணியில் நண்பர்களுடன் முதலில் சேர்ந்தேன். அங்கு வேலைக்கு அனைவரும் சேர்க்கப்பட்டோம். அந்த வேலை கிடைப்பதற்கும், இப்போது வரை பல்வேறு கட்டுமானப் பணிகள் கிடைப்பதற்கும் குரு எனும் கட்டுநர்தான் உதவி வருகிறார். நான் இப்போது சிறிய நிறுவனத்திற்கு வேலை செய்கிறேன். நிறுவனத்தின் பெயர் தெரியவில்லை.

என் குடும்பத்திற்கு என சொந்தமாக அரை ஏக்கர் நிலமும், இரண்டு படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை கொண்ட சிறிய வீடும் உள்ளது. எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு உறுப்பினர்கள்: 90 வயது தாய் மாலதி, மூத்த சகோதரர்கள் நித்யானந்தா (44), பரிமல் (28), அண்ணி திரிமலா, அவர்களின் இரு பிள்ளைகள் திரிவன், ராப்போன். என் மூத்த சகோதரரும், நானும் திருமணம் செய்ய உள்ளதால் வீட்டை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம்.

என் சகோதரர்கள் வயலில் காய்கறிகள், பணப் பயிர்களை விளைவிக்கின்றனர். நல்ல அறுவடை நடந்தால் ஆண்டிற்கு 20,000 ரூபாய் வரை அவர்கள் ஈட்டுவார்கள். இதில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவர்களுக்கு வருமானம் எதுவும் கிடைக்காது.

ஆண்டிற்கு ஒருமுறை அல்லது ஏதேனும் அவசரத்தின்போது என் குடும்பத்தைக் காணச் செல்வேன். ரயிலில் பயணம் செய்தால் எனக்கு சுமார் 1,500 ரூபாய் செலவாகும். பெங்களூரில் இருந்து என் சொந்த ஊருக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ரயில் நிலையத்திலிருந்து பேருந்து பிடித்து எனது கிராமத்திற்கு செல்வேன். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள என் வீட்டிற்கு நடந்தே செல்வேன்.

நான் பெங்களூரின் பலேபெட்டில் உள்ள கட்டுமான தளத்தில் வேலை செய்கிறேன். நான் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்து தினமும் 725 ரூபாய் சம்பாதிக்கிறேன்.”

எனது கிராமத்திற்குத் திரும்பி சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்யலாம் என்றால் அங்கு நிலையான வேலை எதுவும் கிடைக்காது. குடும்பத்தை விட்டு தொலைவாக இருந்து அவர்களின் நலனுக்காக வாழ்வதற்கு என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். என் பெற்றோரின் நினைவு அடிக்கடி வரும். சிலசமயம் இதனால் சோகமாகிவிடுவேன். அப்போது பிற விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். எனக்கு குறிப்பிட்ட இடத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை. இப்போது புதிய விஷயம் எதையும் முயற்சிக்க விரும்பவில்லை. எனக்கு இந்த நகரமும் புதிது, எனது சொந்த ஊரிலும் தொழில் எதுவும் செழிப்பதில்லை. நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன்.

நான் வளர்ந்தபோது போதிய உணவு, முறையான உடை அல்லது நல்ல வீடு என்று எதுவும் கிடையாது. இதுபோன்ற கடினமான காலத்தை என் குடும்பம் மீண்டும் சந்திக்க கூடாது என்றுதான் இப்போது நான் கடினமாக உழைக்கிறேன். என் அண்ணன் பிள்ளைகள் கிராமத்தில் படிக்கின்றனர்: இளையவன் 9ஆம் வகுப்பும், பெரியவன் கல்லூரியிலும் படிக்கின்றனர். அவர்கள் பள்ளிக்கு நடந்து செல்வார்கள். அவர்கள் எளிதாக எங்கும் சென்று வருவதற்கு இப்போது மிதிவண்டி வாங்கி கொடுத்துள்ளோம். அவர்களின் கனவுகளை நனவாக்க தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து தர நான் விரும்புகிறேன்.

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது இனிப்பு கடையில் வேலைசெய்து சிறிது சம்பாதித்தேன். ஆனால் வருமானம் குறைவாக இருந்ததால் சிறிது காலத்தில் அந்த வேலையை விட்டுவிட்டேன். கடந்த காலத்திற்குச் சென்று இனிப்பு கடை வைப்பது அல்லது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற நினைக்கிறேன். எனக்கென்று சொந்தமாக இலட்சியங்களோ, எதிர்கால இலக்குகளோ கிடையாது. அப்படி இருந்தாலும் பயன் தராது; எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் அவை ஒருபோதும் நடக்காது. நான் கிடைக்கும் வேலைகளைச் செய்து விதியை நம்பி வாழ்கிறேன்.

மாணவச் செய்தியாளர்: கார்த்திக் எம்.டி.

Go to top


‘என் கடன்கள் தீர்ந்தன’

என் பெயர் ராகவன். எனக்கு 49 வயதாகிறது. தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை அருகே இருளர் காலனியில் வசித்து வந்தேன். ஆண்டுதோறும் ஒரு பருவத்திற்கு சுமார் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மட்டும் கரும்பு, சோளம், வாழை, அரிசி ஆகியவற்றை விளைவிப்பேன். ஒரு பருவத்திற்கு சுமார் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை ஈட்டுவேன். வேளாண்மை பணிகளை நிறுத்துவது என முடிவு செய்தவுடன் என் நிலங்களை விற்றுவிட்டேன். கிராமத்தில் எனக்கு வீடு உள்ளது. அது இப்போது பூட்டியே கிடக்கிறது. ஊர் திரும்பும்போது மட்டும் பயன்படுத்துவோம்.

ராகவன், 49, தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம் அருகே இருளர் காலனியைச் சேர்ந்தவர்
தொழில்: கட்டுமான தொழிலாளர்

எனது கிராமத்தில் ஒரு இளைஞர் மூலம் பெங்களூரில் கட்டுமானப் பணியில் வேலை இருப்பது குறித்து அறிந்தேன். வீட்டில் விவசாயம் செய்து கிடைக்கும் வருவாயைவிட அதில் நல்ல வருமானம் கிடைக்கும் என அவர் எங்களிடம் சொன்னார். இதைக் கேட்டு நானும், மனைவி ராஜம்மாவும் இந்நகருக்கு வர முடிவு செய்தோம்.

ஒரு நாளுக்கு நான்கு மூட்டை சிமெண்ட் கலவை செய்வது என் வேலை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். தொடக்கத்தில் தினக்கூலியாக ஒரு நாளுக்கு 200 ரூபாய் கிடைத்தது. இப்போது ஒருநாளுக்கு 500 ரூபாய் கிடைக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை இருக்கும். ஞாயிறுகளில் விடுமுறை. கட்டுமான முகாமில் பிற பணியாளர்களுடன் நாங்கள் தங்கியிருக்கிறோம். ஒப்பந்தக்காரர் எங்களுக்கு உணவளிக்கிறார்.

மாதம் ஒருமுறை வீட்டிற்கு சென்று வருவேன். இங்கு ஏதேனும் முடிக்க வேண்டிய அவசர வேலை இருந்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செல்வேன்.

திருவண்ணாமலை அருகே உள்ள எனது கிராமத்திற்கு பேருந்தில் செல்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஒருமுறை ஊருக்கு சென்றுவர ஒருவருக்கு 300 ரூபாய் செலவாகும்.

நான் விற்ற நிலத்தை தவிர கிராமத்தில் வேறு எதையும் நினைப்பதில்லை. இங்கு சிறிது நன்றாகவே உணர்கிறேன். எனது கடன்கள் யாவும் தீர்ந்துவிட்டன. கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து வருகிறேன்.

என் மனைவி ராஜம்மா எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பாள். எங்களுக்கு நிலம் இருந்தபோது விவசாயம் செய்ய உதவினாள். இப்போது என்னுடன் சேர்ந்து சிமெண்ட் கலவையை சுமப்பது, சுத்தம் செய்வது போன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறாள். எனக்கு அருமையான மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த இரு மகள்களுக்கு பிறந்த மூன்று பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

நான் அன்றாட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். என் பேரப்பிள்ளைகள் வளர்ந்து நன்றாக வாழவே விரும்புகிறேன்.

மாணவ செய்தியாளர்: மரியா ரீபா ரோல் கங்கபடான்

Go to top

Editor's note

செய்தியாளர்களைப் பற்றி

பாரியை பாடத்திட்டத்தில் சேர்த்த பள்ளிகளில் முதலாவது பெங்களூரின் புனித ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளி நகரின் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து பாரியுடன் இணைந்து ஆவணப்படுத்தி வருகிறது. கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் களத்திற்குச் சென்று புலம்பெயர் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, நேர்காணல் செய்து ஆவணப்படுத்துகின்றனர். மற்றவர்களை அணுகிப் பேசுவது ஜேசுட் பள்ளியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். செய்தி சேகரிப்பிற்கான வழிகாட்டல்கள், சரிபார்த்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கு பாரி உதவுகிறது.

ஓவியரைப் பற்றி

அந்தரா ராமன் பெங்களூரில் உள்ள சிருஷ்டி கலை, வடிவம் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டதாரி. விவசாயிகளின் தற்கொலை, வேளாண் வணிகத்தில் செல்வாக்கு வளர்ச்சி போன்ற உண்மைச் சம்பவங்களை கொண்டு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், உணவு உற்பத்தி உலகத்தின் மாயைகள், கற்பனைகள் குறித்தும் இவர் வெளிக்கொணர்கிறார். கதை சொல்லுதல், சித்திரங்களின் உலகம் என்பதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை என இவர் நம்புகிறார். இதையே பாரி கல்விக்கான இவரது பணியும் பிரதிபலிக்கிறது.

இத்தொடரில் மேலும் படிக்க,

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் - பகுதி 1

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் - பகுதி 2

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் - பகுதி 3

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் - பகுதி 4

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார்.