பெங்களூரில் வேகமெடுத்து வரும் கட்டுமானத் தொழில், புலம்பெயர் தொழிலாளர்கள் பலரையும் ஈர்க்கிறது. பெங்களூரில் உள்ள புனித ஜோசப் ஆண்கள் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 2019-2020 பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணியாளர்களிடம் நேர்காணல் செய்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள், கொத்தனார்கள், டைல்ஸ் பதிப்பவர்கள் எனப் பலவகை கட்டுமானப் பணிகளைத் தேடி இந்தியா முழுவதிலும் உள்ள கிராமங்களைக் கடந்து வந்துள்ள ஆண்கள், பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை பாரி கல்வியுடன் இணைந்து மாணவர்களும் ஆவணப்படுத்தினர்.

இக்கட்டுரைத் தொகுப்பில், சொந்த ஊரில் முதன்மை தொழிலான விவசாயம் கைவிட்டதை அடுத்து பெங்களூரின் கட்டுமானத் தொழிலில் பணியாற்ற வடக்கு கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வந்துள்ள மக்களை நாம் சந்திக்கிறோம்.

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 6

‘அரசின் திட்டங்கள் எல்லாம் காகித அளவில்தான் உள்ளன’, கர்நாடகாவின் யத்கிர் மாவட்டம் ஷிவனூரைச் சேர்ந்த பிரபு படிகாரும், சுந்தரம்மாவும் பாலியல் தொந்தரவு, பாதுகாப்பற்ற பணிச்சூழல், போதிய சுகாதாரமற்ற பணியிடம் என நகரத்தில் வேலை செய்யும்போது உள்ள ஆபத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

‘என் கிராமத்தில் வட்டிக்கடைக்காரிடம் கடனை திரும்ப செலுத்த வேண்டும்’ என தொடங்குகிறது ராய்ச்சூர் தினக்கூலி தொழிலாளர்களான ஹனுமந்து, அவரது மனைவி நாகம்மாவின் கதை. இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்திற்காக சொந்த ஊரான ஹொசஹள்ளியிலிருந்து 12 மணி நேரம் பயணம் செய்து இங்கு வந்துள்ளனர்.

‘எங்கள் வயிற்றை நிரப்ப தினமும் வேலை செய்ய வேண்டும்’, என்கிறார் கர்நாடகாவின் யத்கிரிலிருந்து மனைவியுடன் இங்கு வந்துள்ள ஹனுமந்தா ஏலஹார். அவர்களின் இளைய மகள்கள் சொந்த ஊரில் பெரியவர்களுடன் உள்ளனர்.

‘என் விளைநிலம் தரிசாகிவிட்டது’, என்பது ஆந்திர பிரதேசம் கொனுகூர் கிராமத்திலிருந்து வந்துள்ள ரேராஜூவின் கதை. 14 வயது முதல் வேலை செய்யும் அவர், தனது பிள்ளைகளுக்கு வேறு எதிர்காலத்தை கட்டமைக்க தீர்மானம் கொண்டுள்ளார்.


‘அரசின் திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன’

நான் ஒரேநேரத்தில் எட்டு முதல் ஒன்பது செங்கற்களை சுமந்துகொண்டு படிகளில் ஏறுவேன். தினமும் கிட்டதட்ட 100-120 முறை எடுத்துச் சென்றுவிடுவேன்; என் மனைவி ஒரே நேரத்தில் ஆறு செங்கற்களை சுமப்பதால் ஒரு நாளுக்கு 30-35 முறை எடுத்துச் செல்வார். நான் பிரபு படிகார். இவர் என் மனைவி சுந்தரம்மா. நாங்கள் கட்டுமானப் பணியிடம், சிமெண்ட், கற்கள், மண், செங்கற்கள் சுமந்துசெல்லும் பணிகளைச் செய்கிறோம். எனக்கு 55 வயதாகிறது. நான் கர்நாடகாவின் யத்கிர் மாவட்டம் ஷாபுர் தாலுக்கா ஜோல்தக்தி கிராமம் அருகே உள்ள ஷிவனூரிலிருந்து வந்துள்ளேன்.

பிரபு படிகார், 55, சுந்தரம்மா, 35 கர்நாடகாவின் யத்கிர் மாவட்டம் ஷாபுர் தாலுக்கா ஷிவநூர் கிராமத்திலிருந்து வந்துள்ளனர்.
தொழில்: கட்டுமானப் பணியாளர்கள்

நாங்கள் அஸ்பெஸ்டாஸ், தார்பாய் கூரை போட்ட வீட்டில்தான் வசிக்கிறோம். மழைக் காலங்களில் கூரை எங்கும் ஒழுகும். மருத்துவச் செலவு போன்ற திடீர் செலவுகள் பெரும் பாரமாகிவிடும். ஒரு பணி முடிந்து அடுத்த பணி கிடைக்கும் வரை வேறு வருமானம் கிடையாது. மழைக் காலங்களில் விடுமுறை அல்லது கட்டுமானப் பொருட்கள் வராவிட்டால் எங்களுக்கு வேலை கிடையாது [கூலியும் கிடைக்காது].

முன்பெல்லாம் கட்டுமானப் பணி அவ்வப்போது வேலைவாய்ப்பை அளிக்கும். இப்போது விவசாயம் என்பது அவ்வப்போது கிடைக்கும் வேலையாகிவிட்டது. இந்த வேலையை நான் திட்டமிடவில்லை. எங்கள் நிலத்தில் கிடைக்காத  நிலையான வருவாயை இதில் பெறலாம் என்று தந்தை சொன்னார். நான் முதலில் பெங்களூருவிற்கு கட்டுமானப் பணிகளைச் செய்து வருவாய் பெற்று வந்தேன். திருமணமான பிறகு என் மனைவியும் இப்பணியில் சேர்ந்து கொண்டார். தினக்கூலியில் ஒப்பந்தக்காரராக இருக்கும் என் மாமா இந்த வேலையை எங்களுக்கு வாங்கி கொடுத்தார்.

நான் முதலில் வேலைக்கு வந்தபோது தினமும் 25-30 ரூபாய்தான் கிடைத்தது. பிறகு ஒரு நாளுக்கு 60 ரூபாய் கிடைக்க தொடங்கியது. என் மனைவிக்கு தினமும் 40 ரூபாய் வரை கிடைத்தது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போதெல்லாம் ஒருநாளுக்கு 500 ரூபாய் பெறுகிறேன். என் மனைவிக்கு ஒரு நாளுக்கு 350 ரூபாய் பெறுகிறார். தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்கிறோம். மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் தருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை கிடையாது.

எனது மாத வருவாய் 13,000 ரூபாய் வரையிலும், என் மனைவி 9,000 ரூபாய் வரையிலும் ஈட்டுகிறார். பெங்களூரில் விலைவாசியும் அதிகம் என்பதால் எங்களால் எதையும் சேமிக்க முடிவதில்லை. நாங்கள் மாதந்தோறும் 8,000 ரூபாய் வரை அடிப்படை தேவைகளுக்கு செலவிடுகிறோம்.

எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் [தந்தை, தாய், மனைவி] வயலில் வேலை செய்வோம். கோடைக் காலத்தில் சோளமும், ஆண்டின் இறுதியில் துவரையும் பயிரிடுவோம். எங்கள் பகுதியில் சோளம் என்பது நிலையான உணவு. நாங்கள் அறுவடைக்கு செல்வோம்.

ஒன்று அதிகமாக மழை பெய்யும் அல்லது குறைவாக பெய்யும். இதனால் அறுவடை உடனடியாக பாதிக்கப்படும். டோகரி என்னி எனும் உரத்துடன் கூடிய பூச்சிக்கொல்லியை அடிக்கடி பயன்படுத்துவோம். அது லிட்டர் 400-500 ரூபாய் வரை செலவாகும். சந்தை வியாபாரிகள் எங்களிடம் முன்கூட்டியே கொடுத்துவிட்டு உற்பத்தியை விற்கும்போது பிடித்தம் செய்து கொள்வார்கள். எங்கள் லாபம் மெல்ல சரிவதை கண்டோம். அரசின் திட்டங்கள் யாவும் காகிதத்தில்தான் இருக்கின்றன. தீவிர இழப்பு ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் இழப்பீடு தருகின்றனர். எங்களுக்கு இழப்பு என்பது இழப்பே. கஷ்டமான காலத்தில் எங்களுக்கு போதிய உதவி கிடைப்பதில்லை.

எங்கள் விளைப்பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். ஆனால் முன்கூட்டியே டோகரி என்னி தேவைப்படுவதால் அறுவடைக்கும் முன்பு அதற்கு செலவு செய்ய முடிவதில்லை. மூன்று முதல் நான்கு சதவீத வட்டிக்கு வட்டிகடைக்காரரிடம் நாங்கள் கடன் வாங்குவோம். என் தந்தை இதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இதுவே பாரமாக மாறியதால் கடன் வாங்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம்.

கடைசியாக அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எங்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டதால் விவசாயத்தை கைவிட முடிவு செய்தோம். பெங்களூருக்கு வேலை தேடி வந்தோம். இந்த வேலையைக் கொண்டு எங்கள் பிள்ளைகளான 5ஆம் வகுப்பு படிக்கும் ஆகாஷ், 8ஆம் வகுப்பு படிக்கும் சபுபாக்யாவை நன்றாக படிக்க வைக்க முடிகிறது.

ஆரம்பத்தில் வேலையில்லாதபோது [விவசாயத்தில்] ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் பெங்களூருக்கு வந்து வேலைசெய்வேன். என் மனைவியும் என்னுடன் வருவார். ஆனால் திரும்பிச் செல்ல முடியாத நிலையும் வந்துவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் சகோதரரும், நானும் எங்கள் 2.5 ஏக்கர் நிலத்தை அருகில் உள்ள நிலத்துகாரரிடம் குத்தகைக்கு விட்டோம். அவர் ஒவ்வொரு உகாதிக்கும் [அறுவடைத் திருவிழா] 15,000 ரூபாய் தருவார். நானும், என் சகோதரரும் அதை சமமாக பகிர்ந்து கொள்வோம். அறுவடை, மழை, லாபத்தை பொறுத்து இத்தொகை அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.

‘ஒரே நேரத்தில் எட்டு முதல் ஒன்பது செங்கற்களை சுமந்து படிகளில் ஏறிச் செல்வேன். இப்படி கிட்டதட்ட 100-120 முறை செய்வேன்; என் மனைவியும் ஒரே நேரத்தில் ஆறு செங்கற்கள் வரை சுமப்பார், தினமும் சுமார் 30-35 முறை எடுத்துச் செல்வார்’

ஒருகாலத்தில் எங்கள் கிராமத்தில் அரசு ஒதுக்கிய சிறிய வீட்டில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். இப்போது அனைவரும் வெளியேறிவிட்டோம். என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தாய் மட்டும் அங்கு வசிக்கிறார். எங்கள் கிராமத்தில் சொந்தமாக இருந்த வீடும் புயல், கடும் மழையில் சேதமடைந்துவிட்டது.

திருமணங்கள், மரணங்கள், கிராம திருவிழாக்கள், சிலசமயம் எங்கள் குழந்தைகளுக்கு விடுமுறை போன்ற காரணங்களுக்காக ஆண்டிற்கு மூன்று முதல் நான்கு முறை கிராமத்திற்கு நாங்கள் பயணம் செய்வோம். பெங்களூரிலிருந்து யத்கிர் பேருந்தில் செல்வதற்கு கிட்டதட்ட ஐந்து மணி நேரம் ஆகும். பயணச் செலவு ஒருவருக்கு 500 ரூபாய் வரை ஆகும்.

எங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, திருமணமாகி பெங்களூரில் வசிப்பார்கள் என நம்புகிறேன். எங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயத்தை தொடர விரும்புகிறேன். எங்கள் கிராமத்தில் மீண்டும் ஒரு நல்ல வீட்டை சொந்தமாக வாங்க விரும்புகிறோம்.

சுந்தரம்மா சொல்கிறார்:

எங்கள் கிராமத்தில் எங்கு நடந்து சென்றாலும் சோர்வு ஏற்படாது. பசி குறித்த அச்சம் இருக்காது. எங்களுக்கு என உணவுகளை விளைவித்துக் கொள்வோம். கால்நடைகளை வளர்த்துக் கொள்வோம். இங்கு [பெங்களூரில் கட்டுமான தளத்தில்] ஒருநாள் வேலையைக்கூட தவறவிட முடியாது. அப்படிச் செய்தால் அன்று பட்டினியுடன்தான் உறங்கச் செல்ல வேண்டும். விலைவாசியும் மிக அதிகம்.

என் குழந்தைகள் தவிர என் சகோதரர் சிதானந்த், அவரது மனைவி என பிற உறுப்பினர்களும் குடும்பத்தில் உள்ளனர். எங்கள் அருகில் அவர்கள் வசிக்கின்றனர். அவர் பெயின்டராகவும் [தினக்கூலி பணியாளர்], அவரது மனைவி அருகில் உள்ள உணவகத்தில் சமையல்காரராகவும் வேலை செய்கின்றனர்.

எங்கள் கிராமத்தை நினைத்து ஏங்குகிறோம்: எங்கள் அண்டைவீட்டினருக்கு குடும்பத்துடன் அமைதியான சூழல், அழகான வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. நாங்கள் வசிக்கும் குப்பத்திலும், கட்டுமான தளத்திலும் உள்ள அசுத்தமான கழிப்பறைகள் எனக்கு கவலை அளிக்கின்றன. எங்களைச் சுற்றியுள்ள சூழல் தூய்மையாக இல்லை. அடிக்கடி நாங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவு செய்கிறோம். அது கூடுதல் பாரமாகிவிடுகிறது. எங்கள் குடும்பத்திற்கு சுத்தமான குடிநீர் அல்லது மின்வசதி எதுவும் கிடையாது. கட்டுமான தளத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முதலுதவிகள் இல்லாததும் கவலை அளிக்கிறது. ஒரு பெண்ணாக என்னிடம் தவறாக நடக்கும் ஆண்கள் அல்லது வேண்டுமென்றே வேலையின்போது தொல்லைகள் கொடுப்பவர்களை நினைத்து கவலையாக இருக்கிறது.

நாள் முழுவதும் வேலைசெய்து முடித்தபிறகு, என் குடும்பத்திற்கு உணவு சமைத்து, வீட்டை தூய்மைப்படுத்திவிட்டு பிள்ளைகள் அடுத்தநாள் பள்ளிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன்.

எங்கள் பிள்ளைகளுக்காக தான் இங்கு நாங்கள் வேலை செய்கிறோம். அவர்கள் நன்றாக படித்து எங்களைவிட நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும். என் மாமாவின் மகள்கள் செவிலியருக்கு படித்துவிட்டு வேலை செய்கின்றனர். செளபாக்யாவும் அவர்களால் உந்தப்பட்டு மருத்துவர் ஆவாள் என நம்புகிறேன். இதற்காக இன்னும் வேலை செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மாணவச் செய்தியாளர்: தீப்தி மகேஷ் குமார்

Go to top


‘கிராம வட்டிக்கடைக்காரரிடம் பணத்தை நான் திரும்ப செலுத்த வேண்டும்’

என் பெயர் ஹனுமந்து. என் மனைவியின் பெயர் நாகம்மா. எனக்கு 30களிலும், அவளுக்கு 20களிலும் வயது இருக்கும். எங்கள் வயது பற்றி சரியாக தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் பெங்களூர் கட்டுமான தளங்களில் தினக்கூலியாக வேலைசெய்து வருகிறோம். நாங்கள் உத்தர கன்னடத்தின் ராய்ச்சூர் மாவட்டம் சிந்துநுர் தாலுக்கா ஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹொசஹள்ளியில் நான் வசித்தபோது என் மாமன்கள், சகோதரர் அவர்களின் குடும்பத்துடன் இருந்தேன். மொத்தம் எட்டு பெரியவர்கள், 10 சிறியவர்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் 1200 சதுர அடியில் நான்கு படுக்கையறை கொண்ட வீட்டில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். வீடும், நிலமும் என் மாமன்களின் பெயரில் இருந்தது. எனக்கு என்று சொந்தமாக எந்த சொத்தும் கிடையாது. ஆனால் ஒருநாள் எனக்கு என சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

30களில் உள்ள ஹனுமந்து, 20களில் உள்ள நாகம்மா ஆகியோர் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் சிந்துநுர் தாலுக்கா ஹொசஹள்ளியைச் சேர்ந்தவர்கள். தொழில்: கட்டுமானப் பணியாளர்கள்

எங்கள் கிராமத்தில் நெல்தான் முதன்மை பயிர், 15 வயதில் நான் பெரிய நிலச்சுவான்தாரின் நெல் வயலில் வேலைசெய்ய தொடங்கினேன்.

பிறகு என் சகோதரரும், அவரது மனைவியும் என்னுடன் இணைந்து கொண்டனர். உழுதல், விதைத்தல், களை பறித்தல், அறுவடை செய்தல் என காலை 8.30 மணிக்கு வேலையைத் தொடங்குவோம். மதியம் 2 மணிக்கு வேலையை முடிப்போம். அறுவடைக் காலத்தில், அதிக நேரம் வேலை செய்வோம். ஒரு நாளுக்கு நூற்று ஐம்பது ரூபாய் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் பருவமழை நன்றாக இருக்கும் என்பதால் ஆண்டிற்கு இருமுறை விளைவிப்போம். விளைச்சல் இல்லாத காலங்களில் வேலையின்றி இருப்போம் அல்லது சொந்த நிலத்தை கவனிப்போம்.

எங்கள் சொந்த வயலில் இருந்து கிடைக்கும் வருமானமும், கூலியும் எங்களுக்கு போதுமானதாக இருக்கும். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அதிலிருந்து ஆண்டிற்கு ஒருபோகம் தான் அரிசி விளைவிக்க முடிந்தது. ஆண்டின் எஞ்சிய நாட்களில் நிலங்கள் வெறுமனே கிடந்தன. 70 கிலோ கொண்ட சுமார் 30 மூட்டை அரிசிதான் கிடைத்தது. இதனால் நிலஉரிமையாளர்களுக்கு நிறைய தொழிலாளர்கள் தேவைப்படவில்லை.

எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோது என் மனைவி வேலையை விட்டுவிட்டாள். வேலைக்கு திரும்ப நினைத்தபோது, நில உரிமையாளர்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்படவில்லை. மனைவிக்கு வேலையில்லை, எனக்கும் வேலைநாட்கள் குறைந்ததால் குடும்ப வருமானம் வீழ்ச்சி அடைந்தது. அப்போதும் இரண்டு ஆண்டுகள் இப்பணியை தொடர்ந்தேன். ஆனால் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் வாழ்வாதாரத்திற்கு வேறு வேலைதேட நான் முடிவு செய்தேன். நான் ஏற்கனவே மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டேன். அவற்றை திரும்ப செலுத்தவும் தொடங்கினேன்.

அப்போது சில மாதங்களுக்கு முன்பே என் சகோதரர் வேலையை விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு வேலை தேடி சென்றுவிட்டார். பெங்களூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டுமான கண்காணிப்பாளர் மணி என்பவர் கட்டுமான தளத்தில் தனக்கு வேலை கொடுத்துள்ளதாக என்னிடம் அவர் தெரிவித்தார். மணியை நான் தொடர்புகொண்ட போது பெங்களூரில் கட்டுமான தளத்தில் எங்களுக்கும் வேலை தர முடியும் என்றார்.

நாங்கள் கிராமத்தை விட்டுச் செல்வதற்கு தயங்கினோம். ஆனால் முடிந்தது முடிந்துவிட்டது. எங்கள் உடைமைகளை கட்டி கொண்டு பெங்களூருக்கு செல்ல கேஎஸ்ஆர்டிசி பேருந்து பிடித்தோம். ஒரு பெரியவருக்கு பயணச் சீட்டின் செலவு 400 ரூபாய். 380 கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு முழுவதும் 12 மணி நேரம் வரை பயணம் செய்தோம்.

நிலத்தை தோண்டுவது, மண், கற்கள், செங்கல், மணல் அள்ளுவது என பல்வேறு வேலைகளை இங்கு நான் செய்கிறேன். நான் சிறிது கொத்தனார் வேலையும் செய்வேன். என் மனைவியும் இதேபோன்ற வேலைகளை செய்கிறார். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு வேலையைத் தொடங்கினால் மாலை ஆறு மணிக்குத் தான் நிறுத்துவோம். மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் கிடைக்கும். ஞாயிறுகளில் வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் அன்று வேலை செய்தால் கூடுதல் தொகை பெறலாம். நான் ஞாயிறுகளிலும் வேலை செய்வேன். கடைசி பிள்ளையை பார்த்துக் கொள்வதால் என் மனைவி ஞாயிறுகளில் வேலைக்கு வருவதில்லை. என் மூத்த மகள் லக்ஷ்மி சிந்துநுர் அரசுப் பள்ளியில் படிக்கிறாள். அவளை என் 50 வயது தாயார் கவனித்துக் கொள்கிறார். மூன்று வயது மகள் பூஜா, இரண்டு வயது மகன் முல்லேஷ் எங்களுடன் வசிக்கின்றனர்.

நான் கட்டுமானப் பணியிடங்களில் முதலில் வேலை செய்யத் தொடங்கியபோது ஒரு நாளுக்கு 200 ரூபாய் சம்பாதிப்பேன். என் மனைவிக்கு ஒரு நாளுக்கு 150 ரூபாய் கிடைக்கும். அப்போதிலிருந்து கூலி உயர்ந்து வருகிறது. இப்போது எனக்கு ஒரு நாள் சம்பளம் 400 ரூபாய், என் மனைவிக்கு 300 ரூபாய்.

தினக்கூலி தொழிலாளர்கள் என்பதால் விரும்பும்போது எங்கள் கிராமத்திற்குச் சென்று வருவோம். இந்த வேலைக்கென தனியாக தகுதி தேவைப்படுவதில்லை என்பதால் எங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை ஒப்பந்தகாரர் எளிதில் கண்டறிந்துவிடுவார். நாங்கள் வேலைக்கு வராவிட்டால், எங்களுக்கு கூலி கிடைக்காது. வேலையில்லாதபோது அல்லது வேறு இடங்களில் வேலை இருக்கும்போது பொதுவாக நாங்கள் எங்கள் கிராமத்திற்குச் செல்வோம்.

நான் பெங்களூரில் சிறப்பாகவே உணர்கிறேன். ஹொசஹள்ளியைவிட இங்கு அதிகம் சம்பாதிக்கிறோம். தற்போதைய வருவாயைக் கொண்டு கிராமத்தில் வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்து வருகிறேன். என்னால் வாரத்திற்கு கிட்டதட்ட 200 ரூபாய் சேமிக்க முடிகிறது. பெங்களூருக்கு வருவதற்கு நாங்கள் எடுத்தது நல்ல முடிவு. வீட்டை விட்டு வந்துவிட்டோம் என நான் வருந்துவதில்லை.

மாணவச் செய்தியாளர்: ஒஹானா சர்வோதம்

Go to top

‘எங்கள் வயிற்றை நிரப்ப தினமும் வேலை செய்ய வேண்டும்’

32 வயதாகும் ஹனுமந்தா கர்நாடகாவின் யத்கிர் மாவட்டம் ஷோராப்புர் தாலுக்கா, ஹன்ஸ்கி கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்: கட்டுமானப் பணியாளர்

நான் ஹனுமந்தா எலஹார். செங்கற்கள், கற்கள், சிமெண்ட் எடுத்துச் செல்வது முதல் கட்டுமானப் பணியிடத்தை சுத்தம் செய்தல், ஏற்பாடுகளை செய்தல் என பலவகை வேலைகளை நான் செய்கிறேன். எனக்கு 32 வயதாகிறது. நான் கர்நாடகாவின் யத்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரின் கஸ்தூரி நகரில் வசிக்கிறேன். என் மனைவி பொம்மம்மாவும் என்னுடன் அதே இடத்தில் வேலைசெய்கிறார்.

எங்களுக்கு 9 வயதில் நிர்மலா, ஏழு வயதில் ஐஸ்வர்யா என இரு மகள்களும், இரண்டு வயதில் சந்தீபா எனும் மகனும் இருக்கின்றனர். இரு மகள்களும் கிராமத்தில் எங்கள் தாயுடன் இருந்துகொண்டு அங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். மகன் மட்டும் எங்களுடன் இருக்கிறான்.

வீட்டில் எங்களுக்குச் சொந்தமாக இரண்டு பசுக்கள் உள்ளன. இரண்டு ஏக்கர் நிலத்தில் பருப்பு வகைகளை விளைவிக்கிறோம். என் தாய்க்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் எங்கள் மகள்களும் வசிக்கின்றனர். நான் 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னால் கன்னடத்தில் எழுத, பேச முடியும், ஆங்கில எழுத்துகளை அறிவேன். என் தந்தை இறந்தபோது படிப்பை கைவிட்டு விவசாயத் தொழிலாளி ஆனேன். வேலை கடினமாக இருந்தாலும் எனக்கு வேறு வாய்ப்பில்லை. மழை பொய்த்தபோது பயிர்களில் நான் பணத்தை இழந்தேன். வேலை தேடி பெங்களூர் வந்தேன்.

வாரத்திற்கு ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டுமான இடத்தில் வேலை இருக்கும். ஞாயிறு வார விடுமுறை. எனக்கு ஒரு நாளுக்கு 500 ரூபாயும், என் மனைவிக்கு 350 ரூபாயும் கூலி கிடைக்கும். எங்கள் வருமானத்திலிருந்து அம்மாவிற்கு பணம் அனுப்புவேன். என் அம்மா வீட்டின் மின் கட்டணம் 500 ரூபாயை செலுத்துவேன்.

‘செங்கற்கள், கற்கள், சிமெண்ட் எடுத்துச் செல்வது முதல் சுத்தம் செய்தல், ஏற்பாடு செய்தல் என பலவகை கட்டுமானப் பணிகளை நான் செய்வேன்’

கிராமத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உறவினர் ஒருவரிடம் கடன் வாங்கி 6 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டியுள்ளேன். அதில் இன்னும் 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. என் கடனுக்கு ஆண்டு வட்டியாக 36,000 ரூபாய் செலுத்த வேண்டும். இப்போது நான் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளேன். என்னால் எங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது. அங்கு கட்டடங்கள் அல்லது கட்டுமானப் பணியிடங்கள் என்று எதுவும் கிடையாது. வேறு வேலைவாய்ப்பும் கிடையாது. என் கிராமமே மலைகள், வனங்களால் நிறைந்தது.

எங்கள் வயிற்றை நிரப்புவதற்கே நகரத்தில் தினமும் வேலை செய்ய வேண்டும். சகோதரர், அவரது குடும்பத்தை தவிர வேறு நட்போ, உறவுகளோ கிடையாது. அவர் ஏலஹங்காவில் வசிக்கிறார். கல்லூரியில் பாதுகாவலராக வேலை செய்கிறார். பயிர்கள் நாசமடைந்தபோது தான் அவரும் நகரத்திற்கு புலம் பெயர்ந்தார்.

பெங்களூரில் வாடகை வீட்டில் நாங்கள் வசிக்கிறோம். மாத வாடகையாக 2,500 ரூபாய் கொடுக்கிறோம். இந்த வீட்டில் முறையான குடிநீர் அல்லது மின் விநியோகம் கிடையாது. எனவே அக்கம்பக்கத்தில் தான் தண்ணீர் கடன் வாங்குகிறோம். வாரத்திற்கு உணவிற்கு 1500 ரூபாய் செலவிடுகிறோம். மருத்துவச் செலவு, பயணம், கடன் அடைப்பது என பல செலவுகள் உள்ளன. எல்லா செலவுகளும் போக எதிர்காலத்திற்கு சேமிக்க எதுவும் இருப்பதில்லை. தினக்கூலி என்பதால் விடுப்பு எடுக்க முடியாது. இதனால் கூலியை இழக்க நேரிடும்.

மாணவச் செய்தியாளர்: தேஜஸ் ஆதித்யா

Go to top

‘எங்கள் நிலம் தரிசாகிவிட்டது’

என் பெயர் ரேராஜூ. எனக்கு 49 வயதாகிறது. நான் தெற்கு பெங்களூரின் உத்தரஹள்ளியில் வசிக்கிறேன். நான் சிவில், சிமெண்டிங் வேலையை செய்கிறேன். சாலைகள் அமைப்பது, கட்டடங்கள் கட்டுவது, ஆழ்துணை கிணறு துளையிடுதல் போன்ற வேலைகளை செய்கிறேன். சிமெண்ட் சாலைகள் அமைப்பது, மழைநீர் சேமிப்பு தொட்டிகள் தோண்டுவது, வீடுகளுக்கு அடித்தளமிடுவது போன்ற வேலைகளையும் செய்கிறேன். ஒரு நாளுக்கு எட்டு முதல் ஒன்பது மணி நேரம் வரை வேலை செய்கிறேன். ஞாயிறு வார விடுமுறை. என் குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்கிறேன்.

ரேராஜூ (வலது), 49, ஆந்திர பிரதேசம், சித்தூர் மாவட்டம், குப்பம் தாலுக்கா, கொனுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்: கட்டுமானப் பணியாளர்

14 வயதில் இத்தொழிலுக்கு வந்தேன். இப்போது 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலைக்குச் சேர்ந்தபோது ஒரு நாளுக்கு 50 முதல் 100 ரூபாய் கிடைக்கும. இப்போது வேலையின் தன்மையை பொறுத்து ஒரு நாளுக்கு 800 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கிறது. எங்களுடன் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இருவரும் கொத்தனார் பணிகளை செய்கின்றனர். மாத சம்பளத்திற்கு பதிலாக நாங்கள் தினக்கூலி பெறுகிறோம்.

என் பெற்றோரும் இந்த வேலை செய்தனர். இத்துறைக்கு வருவதற்கு முன்பு நாங்கள் வயல்களில் அரிசி பயிரிடும் வேலை செய்வோம். போதிய மழையின்மையால் எங்கள் தரிசானது. நிலங்களை கைவிட்டு நகர்புறத்திற்கு வேலை தேடி வந்துவிட்டோம். விவசாயத்தில் எங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. யாரும் உதவ முன்வரவும் இல்லை. இங்கு வேலை என்பது முறை சாராதது. ஆனால் கிராமங்களைவிட நகர்புறங்களில் வேலை செய்வதால் நல்ல வருமானத்தைப் பெறலாம்.

நான் ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கொனுகூர் கிராமத்தைச் சேர்ந்தவன். பெங்களூரிலிருந்து 105 கிலோமீட்டர் தூரம். திருவிழாக்களில் பங்கேற்க அல்லது சிறப்பு விசேஷங்களுக்கு மட்டும் நான் கிராமத்திற்கு செல்வேன். நாங்கள் பொதுவாக குடும்பத்துடன் ரயிலில் ஊருக்குச் செல்வோம். பயணிகள் ரயிலில் செல்வதற்கு மூன்று மணி நேரம் ஆகும். ஒருவருக்கு 25 ரூபாய் செலவாகும். விரைவு ரயில் என்றால் அதில் பாதி நேரம்தான் ஆகும். ஆனால் ஒருவருக்கு 50 முதல் 65 ரூபாய் வரை செலவாகும்.

ஊரில் எனக்கென சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் போதிய மழையின்றி அவை தரிசாகிவிட்டன. யாரும் கவனித்துக் கொள்வதில்லை. அந்த நிலத்தால் பயனில்லை. என் பெற்றோர் இறந்துவிட்டனர். மனைவி, பிள்ளைகளுடன் நான் வசிக்கிறேன். என் மகனுக்கு 23 வயதாகிறது. ஹோட்டல் நிர்வாகம் படிக்கிறான். என் 14 வயது மகள் 10ஆம் வகுப்பு படிக்கிறாள். இத்துறையில் என் பிள்ளைகள் வருவதை நான் விரும்பவில்லை. வாழ்வில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைவிதி முடிவு செய்யும்.

மாணவச் செய்தியாளர்கள்: நித்யா ஆனந்த் ராஜ், அர்னவ் எஸ்.

Go to top

Editor's note

செய்தியாளர்களைப் பற்றி

பாரியை பாடத்திட்டத்தில் சேர்த்த பள்ளிகளில் முதலாவது பெங்களூரின் புனித ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளி மாணவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து பாரியுடன் இணைந்து ஆவணப்படுத்தி வருகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்கள் களத்திற்குச் சென்று புலம்பெயர் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, நேர்காணல் செய்து ஆவணப்படுத்துவதை இரண்டாவது ஆண்டாக செய்கின்றனர். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மற்றவர்களை அணுகிப் பேசுவது ஜேசுட் பள்ளியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். செய்தி சேகரிப்பிற்கான வழிகாட்டல்கள், சரிபார்த்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கு பாரி உதவுகிறது.

ஓவியரைப் பற்றி

அந்தரா ராமன் சித்திரங்கள் வரைபவர், இணைய பக்க வடிவமைப்பாளர். சமூக செயல்பாடுகள், சமய வரலாற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். பெங்களூரில் உள்ள சிருஷ்டி கலை, வடிவம் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டதாரி. கதை சொல்லுதல், சித்திரங்களின் உலகம் என்பதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை என இவர் நம்புகிறார்.

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார்.

இத்தொடரில் மேலும் படிக்க,

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 1

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 2

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 3

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 4

புலம்பெயர்வோரின் வாழ்க்கை குறிப்பு: நம்பிக்கையின் பயணம் – பகுதி 5