ஆசிரியர் தினத்தில் மஹாராஷ்ட்ராவில் உள்ள பால்கர் மற்றும் தானே மாவட்டத்தில் உள்ள ஷிலா பரிஷத் அரசு பள்ளி ஆசிரியர்கள் நால்வரின் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறோம். ஊரடங்கிலும், அவர்கள் தொடர்ந்து அவர்களின் மாணவர்களுக்கு கற்பித்தார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறை மாணவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் நிலமில்லா விவசாயிகளின் குழந்தைகளாவார்கள்.

மஹாராஷ்ட்ராவில் 18.5 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. இது 2017-18ம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல். ஆனால், இந்த ஆசிரியர்கள் தொற்று ஊரடங்கு காலத்திலும், தங்கள் மாணவர்கள் பாடத்தை படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக கற்பித்தல் தங்கள் கடமை மட்டுமே என்பதையும் கடந்து அவர்கள் பாடங்கள் கற்பதை உறுதி செய்தார்கள். அவர்கள் சதுரா ராவிடம் பேசினார்கள். அவர் ஒரு குழந்தையின் ஆசிரியர் மற்றும் இந்த விவரங்களை எழுதியவர்.

ரோஹினி டாங்கே இரவு 8 மணிக்கு தனது வகுப்பை துவக்கினார். அப்போதுதான் அவர்களின் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த நேரம் கிடைக்கும். 

ரேகா ஸ்வாமி, அவரிடம் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்களை எப்போதும் ஏதாவது செய்ய வைத்துக்கொண்டே இருப்பார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளை, தொற்று காலத்தில் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் பயணித்து வந்தவர்கள்.

ராஜன் கருட், அவர்களின் மாணவர்களை மகிழ்விப்பதற்காக பேப்பரில் பொம்மைகளை செய்கிறார். 

மிதிலா போசலே, நவி மும்பையில் உள்ள குடிசை பகுதி மாணவர்களின் பெற்றோருக்கு இணையதளம் தவறாக பயன்படுத்துவது குறித்து சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார். 

ஷிலா பரிஷத் பள்ளி, அரசு நடத்தும் 1,06,237 பள்ளிகளில் ஒன்று. மஹாராஷ்ட்ராவில் 15 மில்லியன் குழந்தைகளுக்கு துவக்க கல்வியை வழங்குகிறது. மாநில அரசின் பொருளாதார கணக்கெடுப்பில் இங்கு படிக்கும் 77 சதவீதம் குழந்தைகள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள்.


‘நீல ஒளியில் நான் அவர்களின் சிறிய முகத்தில் வெளிச்சத்தை பார்க்கிறேன்’

இது இரவு 8.30 மணி, நான் எனது ஆன்லைன் வகுப்பிற்குள் நுழைந்தேன். 

மஹாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் ஷஹாஹபுர் தாலுகாவில் பாரா பங்களாவில் ஒரு ஆரம்ப பள்ளியில் ரோஹினி ஆசிரியராக உள்ளார்

15 மாணவர்கள் கொண்ட எனது வகுப்பில் மூன்று மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த நேரத்தில் பாரா பங்களா கிராமத்தில் மின்சாரம் இல்லை. எனவே அவர்கள் இருட்டு அறையில் இருந்து என்னை பாரத்தார்கள். மாணவரின் உடன் பிறந்தவர்களோ அல்லது பெற்றோரோ அவர்கள் மீது டார்ச் லைட் வெளிச்சம் பாய்ச்சினார்கள். நான் அவர்களுக்கு வணக்கம் சொன்னபோது, அந்த ஊதா வெளிச்சத்தில் நான் அவர்களின் சிறிய முகத்தை பார்த்தேன்.

இது எனது இரவுப்பள்ளி, இதன் மூலம் பள்ளியில் உள்ள 2 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் படிக்க முடியும். இன்னும் பள்ளியில் சேர்ந்துகொள்ள முடியாதவர்களும், புலம்பெயர் பெற்றோருடன் சென்றுவிட்டு ஊர் திரும்பி வந்துவிட்ட குழந்தைகளும் எங்கள் சிலா பரிஷத் பள்ளியில் சேர்ந்துகொள்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

7 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் மஹர் மற்றும் தக்கர் ஆதிவாசி குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள். அவர்களின் பெற்றோர் அனைவரும், நெல் வயல்களில் கூலித்தொழில் செய்பவர்களாகவோ அல்லது கட்டுமானப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது ஷஹாப்பூரில் உள்ள சிறிய பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்பவர்களாகவோ உள்ளனர். சிலர் குப்பை சுத்தம் செய்பவர்களாகவும் (பெரும்பாலும் பெண்கள்), சிலர் காஸ் சிலிண்டரை தூக்கிச்சென்று கசாரா பிளாக்கில் நிரப்பிக்கொடுத்து சிறு வருமானம் ஈட்டுகிறார்கள். அது இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு நகரமாக உள்ளது.

பாரா பங்களா குடியிருப்பு ஷாஹாஹபூரில் காடு மற்றும் மலைப்பகுதியில் உள்ளது. வடகிழக்கு மும்பையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புறநகர் ரயில் இணைப்பின் மூலம் மும்பையுடன் அது இணைக்கப்படுகிறது. எனது பள்ளிக்கு நடந்தே சென்றுவிட முடியும். கசரா ரயில் நிலையத்தில் இருந்து 20 நிமிட நடை தொலைவில் உள்ளது. ஆறு ஆண்டுகள் நான், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவாலாவில் உள்ள எனது வீட்டில் இருந்து ரயிலில் கசராவுக்கு வந்தேன். பின்னர் பாரா பங்களாவுக்கு ரயில் டிராக்குகளின் பாதையில் நடந்து செல்வேன். அப்போது அந்த வழியாக ரயில் ஏதும் வந்தால், ரயில் பாலத்திற்கு எதிரில் என் கண்களை மூடிக்கொண்டு நிற்பேன். ரயில் சென்ற வேகத்திலிருந்து வரும் புகை, தூசி ஆகியவை குறையும் வரை காத்திருப்பேன்.

மார்ச் 2020ம் ஆண்டு ஊரடங்கு துவங்கியபோது நான் இதை நிறுத்திவிட்டேன். மாறாக, நான் இரவு பள்ளியை துவக்கிவிட்டேன்.

எனது மாணவர்களின் பெற்றோர்கள் பகலில் வேலைக்காக வெளியில் சென்றுவிடுவார்கள். அப்போது உடன் தங்களின் போனையும் எடுத்துச்செல்வார்கள். எனது மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதில்லை. உண்மையில் சில தந்தைகள் தங்களின் போனை ஆன்லைன் வகுப்புகளுக்கு கொடுப்பதற்கே தயங்குகிறார்கள். நான் அவர்களை சாமாதனப்படுத்தி, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நாட்களில் எனது காரிலே அவர்கள் வீடுகளுக்குச் சென்று ஜீம் மற்றும் திக்ஷா ஆப்புகளை பதிவிறக்கம் செய்து, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். [திக்ஷா அரசு வழங்கும் ஒரு வசதியாகும். அதில் கற்றலுக்கு தேவையான வீடியோக்கள், பாடல்கள், விளையாட்டுகள் மற்றும் கவிதைகள் இருக்கும்.]

கிராமத்தில் இருந்த இளைய நபர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவை துவங்கினேன். அதில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரையும் இணைத்தேன். அவர்களை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அதை செய்வதாக பெரும்பாலானோர் உறுதியளித்தனர்.

நீண்ட நேரம் எனது வகுப்பில் கற்றுக்கொடுப்பதற்கு நான் நிறைய விஷயங்களை பயன்படுத்துவேன். நான் தேவையான பாடங்களை பிரதி எடுத்து, அதை ஸ்கேன் செய்து வகுப்பு வாட்சப் குழுவில் அனுப்பி விடுவேன். மஹாராஷ்ட்ரா ஆசிரியர்கள் குழு மற்றும் ஷஹாப்பூர் ஆசிரியர்கள் கல்வி வளர்ச்சி டெலிகிராம் குழு ஆகியவற்றில் இருந்து வரும் கற்றல் பிரதிகளையும் நான் மாணவர்களுக்கு அனுப்பிவிடுவேன்.

வாட்சப்பில் நான் செய்திகளை அனுப்புவதுடன், சிலருக்கு நான் போனில் அழைத்தும் பேசுவேன். மாணவர்களுக்கு புரியும் வகையில், நான் பாடல் மற்றும் வீடியோக்களையும் அவர்களுக்காக திரையிடுவேன். இதன் மூலம் மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்பார்கள். நான் வர்லி ஓவியங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர்களுக்கு சிறுசிறு வீடியோ காண்பிப்பேன்.

பத்து நிமிடத்தில் எனது மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புக்கு வந்துவிடுவார்கள். சிலர் சேர்ந்து போனை பகிர்ந்துகொள்வார்கள். சிலர் கிராம சமுதாய கூடமான சமாஜ் மந்திரில் குழுமியிருப்பார்கள். அதில் மூத்த பையனும், பெண்ணும் அவர்களின் போனை மாணவர்களின் வகுப்புக்கு கொடுப்பார்கள்.

5ம் வகுப்பு மாணவர்களை அரசு ஸ்காலர்ஷிப் தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகங்களில் உள்ள பயிற்சி பாடங்களை செய்து பார்க்கும்படி கூறுவேன். நான்காம் வகுப்பு மாணவர்களை ஒரு ஆங்கில கவிதை படிக்க சொல்வேன். 20 நிமிடம் கழித்து வகுப்பிற்கு வந்து அவர்கள் அதை கூறவேண்டும்.

நான் கரும்பலகையை பயன்படுத்தும்போது, அடுக்கி வைத்துள்ள புத்தகத்தில் எனது செல்போனை சாய்த்து வைத்துவிட்டு, பலகையில் எண்கள் மற்றும் இடத்தின் மதிப்பு ஆகியவற்றை விளக்குகிறேன். நான் பயந்து அமர்ந்திருக்கும் குழந்தைகளின் பெயரை கூறி அழைத்து, கேள்வி கேட்டும்படி கூறுவேன். மற்றவர்கள் ஏதாவது கூறுவார்கள் அல்லது கேட்பார்கள். எளிமையாக கலந்துரையாடி என்று ஒரு மணி நேரம் வகுப்பை நேரடி வகுப்புபோன்று கொண்டு செல்ல வேண்டும்.

மாணவர்கள் மீண்டும் திரும்பி வந்து அவர்கள் படித்த ஆங்கில கவிதையை ஒப்புவித்துக்காட்டும்போது, மற்ற மாணவர்களை நான் அவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தும்பட கூறுவேன். அப்போது மணி இரவு 9 இருக்கும். எனக்கும் மிக சோர்வாக இருக்கும். ஆனாலும், மகிழ்ச்சியாக இருக்கும். அனைவருக்கும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு, அன்றைய வகுப்பை முடிப்பேன்.

பாரா பங்களா போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு பாடம் கற்பிப்பது என்பது சுலபமான விஷயமல்ல. இந்த கிராமத்தில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வரும். எனவே பள்ளியில் கழிவறை, தண்ணீர் வசதி மற்றும் குடிநீர் வசதி கூட கிடையாது. காசாரா ரயில் நிலையத்தில்தான் கழிவறை உள்ளது. எனவே நான் பள்ளி வரும்போது கொஞ்சம் தண்ணீர் மட்டுமே குடிப்பேன்.

2014ல் நான் இங்கு ஆசிரியர் பணியை துவக்கினேன், அப்போது வகுப்பறை 8க்கு 8 வாடகை அறையில் இருந்தது. 14 மாணவர்கள் (1 முதல் 5ம் வகுப்பு வரை) உடன் பணிபுரியும் நபர் மற்றும் நான் இந்த அறையை புத்தகம், எழுதுபொருட்கள், அறிச்சுவடி, எண்கள் சார்ட், பாடத்திற்கு தேவைப்படும் மாதிரி பொம்மைகள் கொண்டு நிரப்பி வைத்துள்ளோம். 

இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் எங்கள் பள்ளியை தவிர்த்துவிட்டு, காசாரா வட்டத்தில் உள்ள வேறு பள்ளிக்கு செல்வார்கள். நாங்கள் சில சுவாரஸ்யமான விஷயங்களை செய்து பள்ளியை அழகாக்கியவுடன் கூடுதலாக 15 மாணவர்கள் சேர்ந்தார்கள். அதற்கு எங்களுக்கு கூடுதல் இடம் தேவைப்படுகிறது.

இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பணம், உபகரணங்கள் மற்றும் இலவச தொழிலாளர்கள் வழங்கினார்கள். நாங்கள் பணம் கொடுத்தோம். ஒருங்கிணைத்தோம். வேலியற்ற நிலத்தில் ஒரு கட்டிடம் கட்டினோம். அது ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான பள்ளியானது. இது வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. மொகாவனே கிராம பஞ்சாயத்து, வனத்துறை அதினாரிகளுடன் போடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது.  எளிதாக பணம் வசூலித்து கழிவறை கட்ட முடியும். ஆனால், இந்த நிலம் வனத்துறையிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.


‘அவர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்’

பால்கரில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலைய காலனயில் உள்ள சிலா பரிஷத் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான் பாடம் நடத்துகிறேன். 7 வயதான பெரும்பாலான குழந்தைகள் ஆதிவாசி, அஹிர் மற்றும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வீட்டில் பல்வேறு மொழிகள் பேசுபவர்கள். எனது மாணவர்களின் பெற்றோர் பாய்சர் பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளில் கூலித்தொழில் செய்பவர்கள்.

ரேகா, மஹாராஷ்ட்ரா மாநிலம் பால்கர் மாவட்டம் பால்கர் தாலுகாவில் உள்ள பாஸ்தல் கிராமத்தில் தாராபூர் அணுமின் நிலைய காலனியில் சிலா பரிஷத் பள்ளியில் ஆசிரியராகப்பணிபுரிகிறார்

2020ம் ஆண்டு மார்சில், நாடு முழுவதும் ஊரடங்கில் சென்றபோது, சிலர் தங்கள் பெற்றோருடன் அவர்களின் கிராமங்களுக்கு திரும்பிவிட்டனர். அவர்களின் ஆசிரியர்கள் அவர்களை குறித்து எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று மாணவர்களுக்கு தெரியும், மாணவர்களுடன் தொடர்பில் இருப்பது மிக முக்கியமானது. பெற்றோரும் ஆசிரியர்களின் நிலை குறித்து சிறிது எண்ணிப்பார்க்க வேண்டும். அதுதான் மாணவர்களை பள்ளி செல்வதற்கு ஊக்கப்படுத்தும்.

எனது மாணவர்களுக்கு பாடம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே எனது முதன்மை சவாலாகும். ஏனெனில், அவர்கள் அனைவரும் முதலாவது தலைமுறையாக படிக்க வருபவர்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வசதி இல்லாதவர்கள் குறித்துதான் குறிப்பாக நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் உத்ரபிரதேசம் மற்றும் பீகாருக்கு சென்றுவிட்டனர். அவர்களின் பெற்றோராலும் அவர்களின் கல்வியில் அவர்களுக்கு உதவ முடியாது. அவர்கள் திரும்பி வரும்போது கல்வி கற்பதில் ஆர்வத்தை இழந்திருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் மூன்றாம் வகுப்பு வரும்போது அனைத்தும் எளிதாக இருக்கும்.

தொற்றுக்கு முன்பிருந்தே நான் 14 மாணவர்கள் அடங்கிய வாட்சப் குழு வைத்திருந்தேன். 6 பேருடன் எஸ்எம்எஸ்சில் தொடர்பில் இருந்தேன். இவையனைத்தும் இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் படிப்பது அவர்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும். வீட்டில் உள்ள ஒரு ஸ்மார்ட்போனும் பெரிய வகுப்பு படிக்கும் மூத்த குழந்தைக்காக ஒதுக்கப்படும். இதில் சில குடும்பத்தினரால் மட்டுமே நிலையான இணையதள வசதியும் செய்து கொடுக்க முடியும்.

நான் எனது மாணவர்கள் படிக்கக்கூடிய வகையில் ஒரு பக்கத்தை பிரதி எடுத்து புகைப்படமாக அனுப்பினேன். அதில் கேள்விகளும் இருக்கும். அவர்கள் அதில் விடை எழுதி, புகைப்படம் எடுத்து, எனக்கு அதை திருப்பி அனுப்புவார்கள். பின்னர் நான் கூகுள் பார்ம் மற்றும் டெஸ்ட் மாஸ் என்ற ஆப்களில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதும் வகையிலான கேள்வி தாள்களை உருவாக்கி அந்த ஆப்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன். அவர்கள் தேர்வை முடித்து வழங்கியவுடனே அவர்களின் மதிப்பெண்கள் திரையில் தெரிந்துவிடும். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வியப்பாகவும் இருக்கும்.

நான் யூடிபில் உள்ள கல்வி மற்றும் கற்றல் தொடர்பான வீடியோக்களையும் மாணவர்களுக்கு அனுப்பிவிடுவேன். ஆனால், 20 குழந்தைகள் கொண்ட எனது வகுப்பில் அதை 10க்கும் குறைவானவர்களே முழுதாக பார்த்திருப்பார்கள். ஏனெனில் அவர்களிடம் போதிய இணைய வசதியும் இருக்காது. அவர்களின் கணக்கு பணமின்றி காலாவதியாகி இருக்கும். அந்த வீடியோக்களை கொடுப்பதில் மேலும் ஒரு சிக்கல் உள்ளது. ஏனெனில், அவர்கள் வேறு ஒருவர் பாடம் நடத்துவதை பார்த்து அஞ்சுகிறார்கள். மேலும் அதில் அவர்களுக்கு நிறைய கவனச்சிதறல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் கற்றுக்கொள்வது அனைத்தும் என்னிடம் இருந்து வரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பேன். எனது முகம் மற்றும் குரலுக்குத்தான் அவர்கள் பழக்கப்பட்டவர்கள். எனவே நான் எனது குழந்தைகளின் பழைய கரும்பலகையை எடுத்து வந்து ஒரிடத்தில் நிறுத்திவைத்து எக்ஸ் ரெக்கார்டர் என்ற ஆப்பை பயன்படுத்தி, பலகையில் எழுதி கணக்கு பாடம் நடத்தி சில வீடியோக்களை எடுப்பேன்.

எனது மொழி வீடியோக்கள் சிறிது மாறுபட்டதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நான் சோட்டி ‘ரங்கரி‘ அல்லது ‘தி ஸ்மால் பெயின்டர்ஸ்‘ பாடங்களை கதை புத்தகத்தில் இருந்து எடுத்தால், நான் நன்றாக விளக்கிவிட்டு, கதையில் உள்ளதற்கு ஏற்றதுபோல் கேள்விகள் கேட்பேன். நான் 2ம் வகுப்பு மராத்தி பாட புத்தகத்தில் இருந்து 1 முதல் 2 நிமிட வண்ணத்துப்பூச்சி பாடல் வீடியோவை எடுத்துள்ளேன். அதில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் வீடியோவும், கூடவே சேர்ந்து குழந்தை பாடுவது போலவும் இருக்கும். உண்மையில் அது எனது குரல். கின்மாஸ்டர் என்ற ஆப்பை பயன்படுத்தி குழந்தையின் குரலை வரவழைத்தேன். பின்னர் எனது குரலில் நான், அழகான பூக்களின் வண்ணங்கள் ஆகியவற்றை விளக்கிக்கூறுவேன்.

அந்த வீடியோக்களை குழந்தைகளுடன் சேர்ந்து நிறைய பெற்றோர்களும் பார்த்துள்ளனர். சிலர் என்னிடம், அவர்களின் டியூசன் டீச்சரும் இந்த வீடியோக்களை பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டனர். எனவே எனது வாட்சப் குரூப்பில் அவர்களையும் இணைத்தேன். இப்போதும் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். இவ்வாறு நான் எனது மாணவர்களை சென்றடைவதற்கு இது சிறந்த வழியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

நான் ஹரிஜன் படாவில் ஆசிரியராக உள்ளேன். பெரும்பாலான மாணவர்கள் அருகில் உள்ள வயல் மற்றும் பழத்தோட்டங்களில் காலை வேளையில் வேலைக்கு சென்றுவிடுவார்கள். அவர்களின் ஓய்வு நேரமான மதிய நேரத்தில் மட்டும்தான் பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் சில நேரங்களில் தங்கள் தம்பி, தங்கைகளையும் அழைத்து வருவார்கள். அவர்களை பார்த்துக்கொள்வதும் என் பொறுப்பாகும். ஒரே அறையில்தான் ஒன்று முதல் 5 வகுப்புகள் இருக்கும். நான் வர்லி மற்றும் மராத்தியை கலந்து கற்றுக்கொடுக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிவாசி படாவில் உள்ள சிலா பரிஷதில் முதன்முதலில் நான் சேர்ந்தபோது இருந்தது போலவே உள்ளது. அது தாஹானுவில் உள்ள ஒரு பழங்குடியினர் குடியிருப்பு. நான் வீடு வீடாகச் சென்று குழந்தைகளை அழைத்து வருவேன். இல்லாவிட்டால் அவர்கள் பள்ளிக்கே வரமாட்டார்கள். அதை நான் தற்போது நினைவு கூறுகிறேன். ஒரு ஆசிரியராக மேலும் உயர்ந்து செல்ல அது எனக்கு எவ்வளவு முக்கியமானது.


பொம்மலாட்டம், விடுகதைகள், படக்கேள்விகள். வினாடிவினாக்கள் மற்றும் நாடகங்கள்

நான் சபாலே மாவட்ட துவக்கப்பள்ளியில் மூன்று மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன்.

60 சதவீதத்திற்கு மேற்பட்ட எனது மாணவர்கள் இந்த வேளாண் நகரத்தில் உள்ள விவசாய குடும்பத்தைச்சேர்ந்த மாணவர்கள். அதில் பெரும்பாலான பெற்றோர் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்பவர்களாக இருப்பார்கள். சிலர் வேலைக்காக மும்பை செல்பவர்களாக இருப்பார்கள்.

மஹாராஷ்ட்ராவின் பால்கர் மாவட்டம் உம்பர் படா நந்தடேவில் உள்ள ஷிலா பரிஷத் பள்ளியில் ராஜன் ஆசிரியராக உள்ளார்

ஊரடங்கின் தொடக்க காலத்தில், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிக அவசியமானது என்று நான் உணர்ந்தேன். நான் பெற்றோர்களை தொடர்புகொண்டு, ஜீம் ஆப்பை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்றும், அதன் அவசியம் குறித்தும் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தினேன். 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, ஊரடங்கு துவங்கி ஒரு வாரத்திற்கு பின்னர் நாங்கள் ஆன்லைன் வகுப்புகளை துவங்கினோம்.

துவக்க காலத்தில் தொற்று குறித்த அச்சுறுத்தலால் ஒருவித இறுக்கமான சூழலே நிலவியது. எனவே நாங்கள் சந்தித்துக்கொள்வதற்கான ஒரு இடமாக அவற்றை பயன்படுத்தினோம். பாடத்திட்டம் தொடர்பாக நான் எதையுமே துவங்வில்லை. நான் பொம்மலாட்ட கலைஞர்களை எங்கள் ஆன்லைன் வகுப்பிற்கு அழைத்து வந்து மாணவர்களை சந்திக்க வைத்தேன். இதுபோன்ற நடவடிக்கைகளால் நான் அவர்களை அச்சத்திலிருந்து விடுவித்து, கொஞ்ம்கொஞ்சமாக அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தேன். நான் திரையில் காட்டும் படங்கள் மற்றும் கருத்துக்களை கொண்டு உரையாடல்களை துவக்குவேன். குழந்தைகளும் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம் பங்குகொள்வார்கள். (பள்ளி வளாகத்தில் விளையாட்டில் ஒரு மணி நேரத்தை செலவிட்ட பின்னர் படத்தில் உள்ளதுபோல் என்று கூறலாம்).

நான் பாடபுத்தகத்தில் உள்ள படங்களை பயன்படுத்துவேன். சில வார்த்தைகள் படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் அதை மாணவர்கள் கற்க வேண்டும். ஆனால், நான் அவர்களை நேரடியாக எழுதிக்கொள்ளும்படி கூற மாட்டேன். அவர்களை பார்த்ததை கூறும்படி நான் கேட்டுக்கொள்வேன். சரியான பொருட்களுக்கு சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், பல வழிகளில் அந்த பொருள் குறித்து நான் விளக்குவேன். எடுத்துக்காட்டாக ‘கடிகாரம்‘ குறித்து நான் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமெனில், நான் அவர்களிடம் எந்த நேரத்தில் நமது ஆன்லைன் வகுப்புகள் துவங்கும்? நமது பள்ளி நேரம் என்ன என்பது போன்ற கேள்விகளை கேட்பேன். அதை நாம் பெரும்பாலும் இந்த காலங்களில் நாம் பயன்படுத்துவதில்லை? கேள்விகள் மற்றும் விடுகதைகள் மூலம் நேரம் மற்றும் கடிகாரம் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன், நேரம் மற்றும் கடிகாரம் குறித்து மாணவர்களுக்கு ஒரு பார்வை கிடைக்கும். பின்னர் கடிகாரம் மற்றும் அதன் பயன்கள் குறித்து அதிகம் கூறுவேன். கணிதப்பார்வையில் கடிகாரம் குறித்து, ஒரு மணி நேரத்தை நிமிடங்கள் மற்றும் வினாடிகளாக பிரிப்பது எப்படி என்று கூறுவேன்.

நான் பயன்படுத்தும் புத்தகத்தில் உள்ள அறிவியல் விடுகதைகளையும் பயன்படுத்துவேன். அவர்கள் பார்த்தது குறித்து அவர்கள் கலந்துரையாடி தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து கண்டுபிடிப்பார்கள். பின்னர் அவர்களுக்கு நான் குறிப்பிட்ட தலைப்பில் அதிக தகவல்களை கொடுப்பேன்.

ஊரடங்குக்கு முன்னர், நான் பேசி அவர்களுக்கு பாடம் நடத்துவேன். அவர்களுக்கு விளையாடுகிறேனா அல்லது பாடம் நடத்துகிறேனா என்பது அவர்களுக்கு தெரியாது. உரையாடல் மூலம், குழந்தைகள் ஒருவருடன் சேர்ந்து ஒருவர் நன்றாக படித்துக்கொள்வார்கள். என்னுடனான கலந்துரையாடலிலே கற்றுக்கொள்வார்கள்.

இதற்கு ஒரு வரலாறு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர், உயர்கல்வி முடித்தவுடன், ஒரு நண்பரின் துணையுடன் டி.இடி நுழைவு தேர்வு எழுதினேன். பின்னர் நடிப்பது எனது வாழ்வாதாரத்திற்கு உதவாது என்பதை தெரிந்துகொண்டேன். நான் நாடகம் மற்றும் நடிப்பது குறித்த எனது கனவுகளை ஒருபுறத்தில் வைத்துவிட்டு, ஒரு நல்ல ஆசிரியராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பின்னர் சென்று டி.இடி படிப்பை முடித்தேன்.

எனக்கு முதலில் பால்கர் தாலுகாவில் உள்ள கொரிச்சபடா என்ற கிராமத்தில்தான் ஆசிரியர் பணி கிடைத்தது. அங்கு எனது மாணவர்கள் வர்லி மொழியை பேசுவார்கள்.

2009ம் ஆண்டின் அது ஒரு மழைக்காலம், பள்ளி மலைக்காடுகள், பசுமையான வயல்கள் சூழ்ந்தது. நீண்ட வைதர்னா நீர்த்தேக்கத்திற்கு எதிரே உள்ளது. அப்போது எனக்கு 21 வயதுதான். நான் மும்பையில் பிறந்து வளர்ந்ததால், திரைப்படங்களைத்தவிர நான் வேறு எங்கும் அவற்றை பார்த்ததில்லை.

கொரச்சிபடா மிகத்தொலைவில் உள்ளது. எனக்கு கிடைத்த வருமானமோ மாதம் ரூ.3 ஆயிரம். பள்ளி வளாகத்திலே வீட்டை அமைத்துக்கொண்டேன். பள்ளி காலை 8 மணிக்கு துவங்கும். எத்தனை மணிக்கு முடியும் என்று தெரியாது. இரவு உணவிற்குப்பின்னர் கூட மாணவர்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

நான் ஒரு பயிற்சி பெற்ற கலைஞன் என்பதால், அனைத்து மொழிகளையும் என்னால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும். இரண்டு வாரங்களில் குழந்தைகளின் வர்லி மொழியை நான் கற்றுக்கொண்டேன். அடுத்த 12 ஆண்டுகளில் நான் மராத்தி மற்றும் வர்லி என்ற இரண்டு மொழிகளும் கலந்த கதைகளை உருவாக்கியுள்ளேன், வர்லி – மராத்தி அகராதியையும் உருவாக்கியுள்ளேன். அதில் ‘’a’’ என்பது மராத்தியின் அன்னனசா(மாதுளை பழம்) கிடையாது.  ஆனால் வர்லியின் அனுவா (சீதாப்பழம்). இது இளம் ஆதிவாசி கல்வி கற்பவர்களுக்கு உள்ள மொழி இடைவெளியை எளிதாக கடக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

எனது வகுப்பறை  எப்படி இருக்கும் என்றால், ஒவ்வொரு மாணவரையும் கண்காணிப்பதாக இருக்கும். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பின்னால் சென்றுவிடுவார்கள். படிக்கும் மாணவர்கள் மட்டுமே முன்னால் இருப்பார்கள். எனவே, நான் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்கள் கல்வி கற்க உதவுவேன். அவர்களும் மற்றவர்களைப்போல் கற்க துவங்கிவிட்டால், வகுப்பு மொத்தமும் மேம்படும். அனைவரும் முன்னேறி ஒரு நல்ல கற்றல் நிகழும்.

2020ம் ஆண்டு ஊரடங்கு துவங்கியது முதல் நான் எனது 58 மாணவர்களுடன் தொடர்பில் இருந்தேன். அடிக்கடி பெற்றோரை தொடர்புகொண்டு, நான் மாணவர்கள் குறித்து விசாரிப்பேன். அண்மையில், ஒரு ஆன்லைன் வகுப்பில் கூச்ச சுபாவம் கொண்ட மாணவர் வேதாந்த் என்னை அழைத்து “ஐயா எப்போது பள்ளி துவங்கும்? நாம் எப்போது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். நாள் முழுவதும் நாம் ஒன்றாக இருப்போம்?“ ஒரு குழந்தை தனது மனந்திறந்து இவ்வாறு கேட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவும், ஒரு ஆசிரியராக பெருமையாகவும் இருந்தது.


நவி மும்பையின் சேரி பகுதிகளில் கற்பிப்பது

நான், நவி மும்பையின் சேரி பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறேன். அவர்கள், அவர்களின் குடும்ப சூழல், வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சுற்றுச்சூழலில் வசிக்கிறார்கள். நான் இருபது ஆண்டுகளாக நவி மும்பை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்த நாடும் ஊரடங்கில் முடங்கியபோது, இந்த குழந்தைகளும், அவர்களின் குடும்பங்களும் திடீரென கடுந்துயரத்திற்கு ஆளானார்கள். அவர்களின் பெற்றோர், ஆட்டோ டிரைவர்களாகவும், வீட்டு உதவியாளர்களாகவும், காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்களாகவும், வசியில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தையில் கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஒரே இரவில் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், அனைவரும் அவர்களின் கிராமத்திற்கு திரும்பினர்.

அனைவரும் உணவு குறித்து கவலையடைந்தனர். அவர்களின் குழந்தைகள் ஆன்லைனில் கல்வி கற்பதற்கு இணைவசதிக்கு கட்டுவற்கு பணம் வசதி இல்லை.

மிதிலா என்எம்எம்சி பள்ளி, எண்.18, பிரிவு 5, சன்படா, நவி மும்பை, யூஆர்சி வட்டம், தானே மாவட்டம், மஹாராஷ்ட்ராவில் ஆசிரியையாக பணிபுரிந்தார்

ஜீலைக்குப்பின்னர், சில பெற்றோர் திரும்பி வந்து வேலை தேடினர். ஆனால், அவர்களும் அவர்களின் குழந்தைகள் தங்கள் கிராமத்திலேயே விட்டுவிட்டு வந்தனர். எனவே அவர்கள் குடும்பத்தில் உள்ள ஸ்மார்ட்போனும் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் பெற்றோர்கள் அவற்றை தங்கள் தேவைக்காக எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர். பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் அவர்களால் குழந்தைகளுக்கு தேவையான வசதியை செய்துகொடுக்க முடியவில்லை. நான் எனது சொந்த சாதனங்களை கொடுத்தேன். 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒரு டேப் ஆகியவற்றை கொடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கினேன். இதைபார்த்த என்னுடன் வேலை செய்யும் மற்றவர்களும் அவர்களின் சாதனங்களை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். அமேசான் ரீசார்ஜ் பில்களை அவர்களின் நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் வழங்கினார்கள்.

நான் 90 பேர் கொண்ட எனது 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்ளை பிடிஎப் மற்றும் வீடியோக்கள் வழியாக வழங்குகிறேன். கூகுள் விண்ணப்பத்தில் பதிலளிக்கும் அளவிற்கு அவர்கள் தற்போது முன்னேறி இருக்கிறார்கள். திக்ஷா என்ற அரசு வழங்கும் கற்றல் வீடியோக்களை நான் கூகுள் விண்ணப்பங்களில் வழங்குவேன். மாணவர்கள் அவற்றை பார்த்து, அதற்கான விடையை எனக்கு குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு தேவையான ஸ்மார்ட்போன்களை பெற்றோர்கள் கொடுத்ததும், அவர்கள் டிக்டாக்கில் வீடியோக்கள் செய்வதும், பேஸ்புக், யூடியூப் மற்றும் மற்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது உண்மையில் தெரியவில்லை. நான் அவர்களை அழைத்து அவர்களுக்கு ஜீம் ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு அறிவுறுத்தியிருந்தேன். அவர்களின் குழந்தைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன்.

நான் 15க்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கினேன். அதனால், மாணவர்களுக்கு நான் வகுப்பில் நடத்துவது போன்ற தோற்றம் ஏற்படும். நான் ஒவ்வொரு பாடத்திற்கும் 15 ஒரு வரி கேள்வி பதில்களை தயார் செய்வேன். அதை பிரதி எடுத்து, அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வரும்போது கொடுத்துவிடுவேன்.

எனது மாணவர்களின் பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். எனவே எனது ஆன்லைன் வகுப்புகள் இரவு 7 மணிக்கு மேல் தான் துவங்கும். அப்போதுதான் பெரும்பாலான மாணவர்களின் கையில் போன்கள் இருக்கும்.

பெரும்பாலான குழந்தைகளின் குடும்ப சிதறியிருக்கும். பெற்றோரில் ஒருவர் இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பெரியவர்களின் நிலைக்கு விரைவிலே தள்ளப்படுவார்கள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை நான் பார்த்துள்ளேன். பெரும்பாலானோருக்கு மும்பை சென்று நடிப்பதிலோ, நடனமாடுவதிலோ விருப்பம் இருக்கும். நான் அவர்களுக்கு நிலையான மற்றும் உண்மையான வேலையை தேர்ந்தெடுப்பதில் உதவுவேன். நான் எனது மாணவர்களை சிந்திக்கும் திறன் உள்ளவர்களாக வளர வேண்டும் என்று எண்ணுவேன்.

பெரும்பாலான எனது மாணவர்கள் வளர்ந்து பல்வேறு வேலைகளில் பணிபுரிகிறார்கள். கொரியர் மற்றும் பார்சல் சேவைகள், வங்கிகளில், செவிலியர்களாக மற்றும் கட்டுமான அலுவலகங்களில் என பல்வேறு இடங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் கணினி ஆசிரியர்களாக உள்ளார்கள். சிலர் பாவ்பாஜி, பழச்சாறு கடை என சிறு தொழில்முனைவோர்களாக இருக்கிறார்கள்.

ஆசிரியர் என்பது ஒரு தொழில் கிடையாது. அது ஒரு சேவை. “சிறந்த ஆசிரியராக இருப்பதைவிட, நேர்மையான ஆசிரியராக இருக்க வேண்டும்,” என்று எனது தாத்தா கூறுவார். நேர்மையான ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது எனது லட்சியம்.

குறிப்பு : இது மஹாராஷ்ட்ராவில் உள்ள மும்பை, தானே, நாசிக், பால்கர், காட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குறைவான வருமானமுள்ள பள்ளிகளில், அனைவருக்கும் சமமான மற்றும் தரமான உலகளாவிய கல்வி மையத்தின் ஆசிரியர்கள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் குறித்த பதிவு. பாரி கல்வி, இவற்றை பகிர்ந்து கொண்டதற்காக அனைவருக்கும் சமமான மற்றும் தரமான உலகளாவிய கல்வி மையத்திற்கு நன்றி கூறுகிறது.


Editor's note

சதுரா ராவ், பெங்களூருவில் உள்ள ஷிருஷ்டி – மணிப்பால் மையத்தின் கலை, வடிவம் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் கலை, வடிவ ஆசிரியர். அவர் கூறுகையில், “நான் சில அரசு ஆசிரியர்களை சந்தித்து பேட்டி எடுத்தேன். அவர்கள் என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கூட, அவர்களின் கவனம் எவ்வாறு மாணவர்கள் மீது இருந்தது என்பதை கண்கூடாக பார்த்தேன். அதற்கு மாணவர் பதிலளித்த விதம், அவர்கள் எச்சரிக்கை மற்றும் பொறுமையாக இருந்தது என ஒரே நேரத்தில் அவர்களுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்தது என்பதை நேரில் பார்த்தேன். பெரும்பாலானோர் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்கள், மாணவர்களின் நன்மதிப்பை பெற்றவர்கள். அவர்களுக்கு பணிமாற்றல் கிடைத்தபோது அழுதவர்கள். ஒரு எழுத்தாளர் மற்றும் ஆசிரியராக நான் அவர்களின் ஊரடங்கு கதைகளை கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்

அந்தாரா ராமன், கிராபிக் டிசைனர் மற்றும் படங்கள் வரைபவர். பெங்களூரைச் சேர்ந்தவர். சமூக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பின் மீதான ஆர்வமே அவரது வேலைக்கான பெரிய தூண்டுதல். பாரிக்கு அவர் வரைந்துகொடுக்கும் அனைத்தும் தரமானவை மற்றும் வண்ணங்களை  நன்றாக பயன்படுத்துவார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

பிரியதர்சினி. R. மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.