அவள் பசுவின் அகலத்தையும், கோழியின் உயரத்தையும் அளப்பாள், பல வகை இலைகளின் வடிவங்களை வரைவாள். அவளுக்குப் பல வகை விதைகளையும் வகைப்படுத்தத் தெரியும். முக்கியமாக, இந்த 13 வயது சிறுமி தனது வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து, “தங்கள் கிராம வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.” இதற்காக “என் கிராமத்தில், அக்கம்பக்க பகுதியில், எங்கள் வட்டாரத்தில், மாவட்டத்தில் என நான் பல விஷயங்களை ஆராய வேண்டும். பிறகு அவற்றை முறையாக வரைய வேண்டும்.”
பொதுமுடக்கத்தினால் சஞ்ஜனா மஜி பல மாதங்களாக பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால் அவள் கற்பதை நிறுத்தவில்லை. ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இப்பழங்குடியின சிறுமி மார்க் ட்வைனின் புகழ்மிக்க வார்த்தைகளுக்கு புதிய அர்த்தத்தை கொடுக்கிறாள்: “உங்கள் கல்விக்கு பள்ளி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. “சஞ்சனாவிற்கு ஆசிரியர் ஒருவர் உள்ளார். அவர் பள்ளி இல்லாதபோதும் பணியாற்றுகிறார்.
பதின்பருவத்தை சமீபத்தில் எட்டிய ஒருவர் உட்பட, 53 கிசான் ஆதிவாசி சமூக பிள்ளைகளுக்கு 26 வயதாகும் ராஷ்மி ஜெய்புரியா பள்ளிக்கு வெளியே கற்பிக்கிறார். பழங்குடியினர், தலித்துகள் அதிகளவில் வசிக்கும் இம்மாவட்டத்தின் துன்முரா கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பகுதிகளுக்குச் சென்று பாடம் எடுப்பதற்கு சமம் என்கிறார் ராஷ்மி. “குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி தெரிந்துள்ளது,” என்கிறார் அவர். “அவர்களின் பெற்றோர் தினக் கூலித் தொழிலும், விவசாயமும் செய்கின்றனர். உற்றுநோக்குவது, கண்டறிந்தவற்றை குறிப்பெடுப்பது, கேட்டு தெரிந்துகொள்வது [சுற்றியுள்ள விஷயங்களை] பற்றி அவர் கற்பிக்கிறார். செயல்முறை கற்றலை அவர்கள் விரும்புகின்றனர்.” ராஷ்மியைப் போன்று வேறு ஆசிரியர்களும் ஏழைக் குடும்பங்களுக்கு பள்ளிகளை நகர்த்தும் சவால் நிறைந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



“என்னால் இந்த வகுப்பில் தேர்ச்சி அடைந்து, முன்னேறிச் செல்ல முடியும்,“ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஷக்திமாய் பெஹிரா. “என் வீட்டிற்கு [ஒடிசாவின் ஜஜாப்பூர் மாவட்டம்] வந்து ராக்கி [திரிபாதி] டீச்சர் கற்பிக்கிறார். இதனால் ஊரடங்கில் என் எழுத்து பணிகளும், பிற படிப்புகளும் பாதிக்கவில்லை.” மதோபூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 வயது ஷக்திமாய் மருத்துவராக விரும்புகிறார்.
“பெரிய விஷயங்கள் எப்படி சிறியதாக காட்சியளிக்கின்றன என்பதை விளக்க மாணவர்களிடம் பள்ளியை புகைப்படம் எடுத்துக் காட்டினேன்” என்று குத்ரா தாலுக்கா சுந்தர்கரில் பேசிய 24 வயது ஆசிரியர் நுதப் பெஹிரா சொல்கிறார். புத்தகத்திற்குள் சிறைபடாமல் பல விஷயங்களை கற்றுத் தருவதற்கான காலமாக பொதுமுடக்க காலத்தை அவர் கருதுகிறார். கங்காஜல் கிராம நீர்நிலைகளில் நடந்தபடி மாணவர்களுக்கு அவர் உயிரியல் குறித்து சொல்லித் தருகிறார். இடஞ்சார்ந்த நுண்ணறிவை உருவாக்குதல், புவியியலை கற்பித்தல் என்பது படைப்பூக்கம் மிக்கதாகவும், வலுவானதாகவும் ஆனது. தங்கள் வசிப்பிடம், கிராமம், ஊராட்சி, வட்டாரம் என தொடங்கி உலக வரைபடத்தையும் அவர்கள் வரையத் தொடங்கிவிட்டனர்.
மாணவர்கள் வரைந்த கிராம வரைபடங்களை காண அம்புகுறிகளை சொடுக்கவும்
நீங்கள் தாகமாக இருந்தால், ஜமுகாசி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஆசிஷ் குமார் வரைந்த வரைபடத்தின் மூலம் கை பம்பு உள்ள இடங்களை அறியலாம். கிராமத்தின் குளம், தனது பள்ளி, மாந்தோப்பு, வேளாண் விளைநிலங்கள், திறந்தவெளி, வனம் என ஜஜாபூர் மாவட்டம் சுகிந்தா வட்டார வனப் பகுதிகள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டிற்கே பள்ளி வந்துவிட்டதால் சஞ்ஜனா, ஷக்திமாய், ஆசிஷ் ஆகியோர் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் இந்திய கல்விமுறையில் உள்ள டிஜிட்டல் மயம் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 11,02,783 அரசுப் பள்ளிகளை வகுப்பறைக்கு வெளியே அனுப்பியுள்ளது. முதல் தலைமுறையாக கற்பவர்களுக்கு பள்ளிப் படிப்பில் இடைவேளை என்பது ஆபத்தானது. கிராமப்புற ஒடிசாவில் ஐந்து குழந்தைகளில் ஒருவர் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். ஜார்க்கண்டில் 22 சதவீத கிராமப்புற இளைஞர்கள் மட்டுமே பள்ளிப் படிப்பை முடிக்கின்றனர்.
“என் கிராமத்தில் [படாஜம்டா] பல குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளதை காண்கிறேன். நோட்டுப்புத்தகம் அல்லது எழுதுகோல் வாங்க முடியாமல் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட மாணவர்களும் உள்ளனர்,” என்று கவலையுடன் சொல்கிறார் ராஷ்மி கோப். பதின் பருவத்திற்குள் நுழையும் அவர் ஜார்க்கண்டின் நோமுண்டி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் தொடர ஆர்வமாக உள்ளார். ஆசிரியராக விரும்புகிறார். அவரது ஆசிரியரான 24 வயதாகும் சந்தியா ராணி தண்டி பல மாணவர்களை இந்த ஊரடங்கு இழக்கச் செய்துவிட்டது என்கிறார். அவர்கள் தினக்கூலிகளாக மீண்டும் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

சந்தியா, ராஷ்மி ஜெய்புரியா, நுதாப் போன்ற ஒடிசா, ஜார்க்கண்டின் 700 ஆசிரியர்கள் மிதிவண்டிகள், இருசக்கர வாகனங்கள், சில சமயம் நடந்துகூட சென்று மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். “ஆசிரியராக என் பணியை தொடங்கியபோது, மிதிவண்டி ஓட்டக் கூட தெரியாது, இப்போது இருசக்கர வாகனத்தை நன்றாகவே ஓட்டுகிறேன்!” என்கிறார் 27 வயதாகும் பிங்கி சாஹூ. அவர் தனது ஓட்டும் திறனால், ஒடிசாவின் கெந்துஜார் மாவட்டம் (கியோஞ்சார் என்றும் அறியப்படுகிறது) ஹரிச்சந்தன்பூர் வட்டாரத்தை பொதுமுடக்க காலத்திலும் சுற்றிச் வருகிறார்.
ஒடிசாவின் ஜஜாபூர், கெந்துஜார், தென்கனால், சுந்தர்கர், ஜார்க்கண்டின் சிங்பும், பஷ்சிமி மாவட்டங்களின் கிராமப்புற பகுதிகளுக்கு இந்த ஆசிரியர்கள் ஜூன் முதல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்துவிட்டனர். வீட்டுக் கல்விமுறையில் இது புது வகை என்கின்றனர். வீடு வீடாகச் சென்று மாணவர்களை சிறு குழுக்களாக சந்திக்கின்றனர் (ஒரே நேரத்தில் ஒன்று முதல் ஐந்து பேர் வரை) மரங்களின் அடியில், வீட்டின் நிழலில், திறந்த வெளிகளில் உரையாடுகின்றனர்.
“தொடக்கத்தில் ஒளிந்து, பிடிக்கும் விளையாட்டுப் போல இருந்தது,” என்கிறார் சிரித்தபடி நிபேதிதா மோஹந்தா. கெந்துஜார் மாவட்டம் பந்தா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதாகும் அவர் மாணவர்களை தேடி வயல்கள், ஆறுகள் அருகே சென்றுள்ளார்.
இணைய வழிக் கற்றல் என்பது மாயாஜால கதை என்பது போன்ற மிக ஏழ்மையான மாணவர்கள் 31,000 பேரை இவர்கள் தேடி அலைந்து பிடித்துள்ளனர்: கிராமப்புற ஒடிசாவில் 5.8 சதவீதம் பேரிடமும், கிராமப்புற ஜார்க்கண்டில் 11.9 சதவீதம் பேரிடமும் மட்டுமே இணையதள வசதி உள்ளது.

“இந்த வகுப்புகள் இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாமல் நாள் முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பேன்,” என தானாகவே ஒப்புக் கொள்கிறார் அனில் சம்பியா. தினக்கூலியின் மகனான 13 வயது அனில் ஜார்க்கண்டின் நோமுண்டி பசாரில் அரசுப் பள்ளியில் தோழர்களுடன் விளையாடிய நாட்களை எண்ணிப் பார்க்கிறார். குடும்பத்தில் யாரிடமும் ஸ்மார்ட் ஃபோன் இல்லாததால் பொறியாளர் ஆக வேண்டும் என்ற அவரது லட்சியம் தடைபடும் நிலை ஏற்பட்டது. ‘தீதியின்‘ முயற்சியால் இது தடுக்கப்பட்டது. தனது லகன்சாய் கிராமத்திற்கு வந்து மாணவர்கள் குழுவிடம் பாடம் கற்பிக்கும் ஆசிரியை நந்தினி பஹிராவை ‘தீதி‘ என்று அவர் குறிப்பிடுகிறார்.
3.22 கோடி மாணவர்கள் தற்போது பள்ளியிலிருந்து இடைநின்றுவிட்டதாக புதிய கல்வி கொள்கை 2020 கண்டறிந்துள்ளது. அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் ‘மாணவர்களுடன் உரையாடி’, ‘எப்படி கற்பது என்பதை கற்பிக்குமாறு’ கூறுகிறது.
ஆசிரியர்கள் அருகில் வந்து கற்பிப்பதால் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களுடன் நான் நல்லுறவை கட்டமைத்துள்ளதால் அவர்கள் வீட்டின் கூடங்களில் பாடம் கற்பிக்க என்னை அனுமதிக்கின்றனர்,” என்கிறார் நிவேதிதா.

இந்த ஒன்றுகூடலால் தனிப்பட்ட கவனம், வசதிக்கேற்ப நேரத்தை ஒதுக்குவது, விரிவான பாடத்திட்டம் என அனைத்து வகையான கற்றல் முறைகளும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. கிராம வரைப்படத்தை கட்டமைப்பது, பூச்சிகளை நுட்பமாக வரைவது, வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு அறிவியல் பரிசோதனைகளைச் செய்வது, சிறிய அளவிலான வேளாண் – அறிவியல் என இந்த ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றலை உறுதி செய்வதோடு, இடைநிற்றலையும் தடுக்கின்றனர். டாடா ஸ்டீல் அறக்கட்டளை மற்றும் அரசு சாரா அமைப்பான அஸ்பையரின் முயற்சியின் அங்கமாக இந்த கிராமப்புற கல்வியாளர்கள் உள்ளனர்.
ஒடிசா, ஜார்க்கண்டைச் சேர்ந்த இந்த ஆசிரியர்களின் குரல்களை 2020 குழந்தைகள் தினத்தையொட்டி பாரி கல்வி ஒன்றிணைத்துள்ளது. ஊரடங்கின் போது அவர்களின் மாணவர்கள் உருவாக்கிய வரைபடத்தின் மாதிரிகள்.
ஏன் வரைபடம்? கெந்துஜார் மாவட்டம் திம்போ கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆசிரியை மோனாலிசா சாஹூ விளக்குகிறார்: “நம் குழந்தைகள் இந்திய வரைபடத்தை அறிந்திருக்கலாம், ஆனால் சொந்த கிராமத்தைப் பற்றி அறிவதில்லை. அவர்களின் கவனிப்பு திறன் மேம்பட்டுள்ளதைக் கண்டேன் – தங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள விஷயங்களை அவர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். வரைபடங்கள் மூலம் இவற்றை அவர்கள் கற்கின்றனர்.”
குத்ரா தாலுக்காவில் உள்ள கோந்த் பழங்குடியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் பிராச்சி பரிஹா தான் வரைந்த வரைபடத்தை தொகுத்துள்ளான்: “உலகம் இவ்வளவு பெரியது என்று எனக்குத் தெரியாது. இதற்கு முன்பு எனக்கு இது தெரியாது.”
தம்பாரு தார் நியால்
வயது: 39
இடம்: குத்ரா வட்டாரம், சுந்தர்கர் மாவட்டம், ஒடிசா
ஒடிசாவில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரையும், தந்தையின் பெயரையும் எழுதும் தேர்வு ஒன்று உள்ளது. பலராலும் அதை எழுத முடிவதில்லை. அவ்வப்போது ஒரு சம்பிரதாயமாகவே இத்தேர்வை அவர்கள் எழுதுகின்றனர். ஆதார் அட்டையில் உள்ள பெயர்களை அப்படியே பார்த்து எழுதுகின்றனர். பள்ளியில் தொடர்வதே மாணவர்களுக்கு கடினமாக உள்ளது. 8ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்று விடுகின்றனர்.
நான் ஒரு தலித். என் சொந்த ஊரான நுவபதாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றேன். இப்போது நான் 400 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து இங்கு சுந்தர்கர் மாவட்டத்தில் 47 ஆசிரியர்களை மேற்பார்வையிடுவதோடு, கற்பிக்கவும் செய்கிறேன்.
அரசுப் பள்ளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுகிறோம். ஆசிரியர்கள் தங்களது சொந்த கற்பித்தலிலும், மாணவர்களுக்கு கற்றலிலும் குறைவான ஆர்வத்தைக் காட்டுவதை காண்கிறேன். அவர்கள் கல்வியை வெறும் புத்தக அறிவாகவே பார்க்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையும் கவனிக்கிறேன்!
நாங்கள் வேறு வழியில் கற்பிக்கின்றோம். பெரும்பாலான ஆசிரியர்கள் அறியாத செயல்முறை சார்ந்த கற்றலை நாங்கள் செய்கிறோம். எங்கள் பயிற்சியில், தொடக்கத்தில் ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. ஒருமுறை பங்கேற்கத் தொடங்கியதும் அவர்களும் அவற்றின் பயன்பாட்டை புரிந்துகொண்டனர்.
சூரிய மண்டலம் குறித்து கற்பிப்பதை உதாரணமாக கொள்வோம். பொதுவாக இப்பாடத்திற்கு அறிவியல் ஆசிரியர் பலகையில் அதை வரைவார். அறிவியலை கற்பிக்க நாங்கள் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் செல்கிறோம், சூரிய மண்டலத்தின் மாதிரிகளை காண்பிக்கிறோம். மாணவர்களின் கோணத்தில் அவற்றை படைக்கவும் ஊக்கமளிக்கிறோம். அறிவியல் கற்பிப்பதற்கு கவனித்தல் என்பது முக்கியமான அம்சம். குழந்தைகளின் பங்கேற்பு ஆர்வமும், சிந்தனை திறனும் இன்னும் மேம்படுகிறது.
பிங்கி சாஹூ
வயது: 27
இடம்: ஹரிச்சந்தன்பூர் வட்டாரம், கெந்துஜார் மாவட்டம், ஒடிசா
என் தாய்க்கு கையெழுத்திடத் தெரியாது. கைநாட்டு வைப்பவர் அவர். நாம் வித்தியாசமாக செய்ய வேண்டும்.
2015ஆம் ஆண்டு ஆசிரியரான போது எனக்கு மிதிவண்டி ஓட்டக் கூடத் தெரியாது. எனவே காட்டின் வழியாக நடந்தே பள்ளிக்குச் செல்வேன். 2017ஆம் ஆண்டு பழைய ஸ்கூட்டி ஒன்றை வாங்கினேன். மக்கள் சொல்வார்கள் [கேட்பார்கள்], “மிதிவண்டி ஓட்டத் தெரியாமல், எப்படி அவள் ஸ்கூட்டி ஓட்டுவாள்?” இதை சவாலாக எடுத்துக் கொண்டு இப்போது மற்றொரு ஸ்கூட்டி வாங்கியுள்ளேன். இப்போது நன்றாகவே ஓட்டுகிறேன்!

இங்குள்ள ஆசிரியர்களுக்கு மொழி என்பது மிகப்பெரும் சவால். எங்கள் பகுதியில் உள்ள பிள்ளைகள் அனைவரும் பழங்குடியினர், தலித்துகள்; அவர்கள் பெரும்பாலும் சண்டாலி, ஹோ மொழிகளை பேசுகின்றனர், இதை வேறு சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பேசுவதில்லை. சாதி கோணத்தில் சிலர் குழந்தைகளிடம் நெருங்கிக் கூட செல்வதில்லை, இதை வெளிப்படையாகவும் செய்கின்றனர். இதனால் குழந்தைகள் அமைதியாக இருப்பதோடு, அஞ்சுகின்றனர். இதுபோன்ற சூழலில் யார் தான் கற்க முடியும்?
கூலித் தொழில் தேடி அவர்களின் பெற்றோர் அதிகாலையில் எழுந்து சென்றுவிடுவார்கள். பள்ளிக்குச் சென்று பிள்ளைகள் படிக்கின்றனரா என்று யாரும் கவலை கொள்வதில்லை. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றாலும் மீன் பிடிப்பது அல்லது விறகு சேகரிப்பது என ஓடிவிடுகின்றனர்.
பெற்றோர்களும் ஒரியா பேசுவதில்லை என்பதால் ஆசிரியர்களுக்கு அவர்களுடன் உரையாடுவதில் சிக்கல் உள்ளது. இது எனக்கே நடந்தது: ஒரு குழந்தையை பள்ளிக்கு கொண்டு வருவதற்காக பெற்றோரிடம் பேசியபோது அவர்களுக்கு ஒரு வார்த்தைக் கூட புரியவில்லை. அத்தருணம் எனக்கு அழுகையே வந்தது. என் பள்ளியை மாற்றிக் கொள்ளுமாறு அம்மா கூட கூறினார். நான் பின்வாங்கவில்லை; 1 மற்றும் 2ஆம் வகுப்பு எடுக்கும் சந்தால் ஆசிரியரை கவனித்து அவரிடமிருந்து ஹோவில் சில வார்த்தைகளை கற்க தொடங்கினேன்.
நாங்கள் வரைபட பயிற்சி கொடுத்தபோது, வரைபடங்களைக் கொண்டு எளிதாக விஷயங்களைக் காணவும் கண்டறியவும் முடியும் என்பதை விளக்கினோம். கிராமத்தை வரைபடமாக்குவதற்கு ஆசிரியர்கள் குழுவாக பணியாற்றினோம். அடையாளங்கள் குறித்த அறிவு எங்களிடம் இருந்தது. ஆனால் குழந்தைகள் புதிய சிந்தனைகளுடன் வந்தனர். உதாரணத்திற்கு, ‘இளைஞர் மன்றத்திற்கு‘ அவர்கள் சிறுவர், சிறுமியரின் உருவத்தை அடையாளமாக பயன்படுத்தினர்.
பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். எங்களுக்கு சளி அல்லது காய்ச்சல் இருந்தால், செல்ல மாட்டோம். உடல்நலம் சரியில்லாவிட்டால் வர வேண்டாம் என பிள்ளைகளிடமும் சொல்லிவிடுவோம். அவர்களின் எழுதுகோள் அல்லது காகிதத்தை கூட தொடுவதில்லை. பிற குழந்தைகளின் எழுதுகோள், காகிதங்களை தொடுவதற்கு அனுமதிப்பதில்லை. பிள்ளைகளை இடைவெளி விட்டு அமர வைப்பதோடு, கைகளை கழுவ வைக்கிறோம். சோப்புகளுக்கான பங்களிப்பை [பணம்] அவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர்.
நுதப் பெஹிரா
வயது: 24
இடம்: கங்காஜல் கிராமம், குத்ரா வட்டாரம், சுந்தர்கர் மாவட்டம், ஒடிசா
பொதுமுடக்கத்திற்கு முன் நாங்கள் புத்தகம் வழியாக பள்ளியில் பாடம் நடத்துவோம். இப்போது எல்லைகள் இல்லை. இயற்கையுடன் மிகவும் நெருக்கமானது என் கற்பித்தல் முறை. நீர்வாழ் உயிரினங்கள் பற்றி கற்பிக்க அவர்களை நான் ஆறுகளுக்கு அழைத்துச் செல்வேன். நான் கற்பிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பழங்குடியினர். அவர்களுக்கு விவசாயம் பற்றி தெரிந்திருந்தாலும், முழுமையான செயல்பாட்டை அறிந்திருக்கவில்லை.

வயல்களில் வேலை செய்யும் மக்களைச் சந்தித்து நாங்கள் பேசினோம். விதைகளை சொந்தமாக விதைத்து வளர்க்க வேண்டியது தான் அந்த நாளுக்கான வீட்டுப்பாடம். விதைகள் எப்படி முளைத்தன என்பதை கவனித்துவிட்டு வகுப்பிற்கு வருமாறு கூறினோம். அப்படி முளைக்காவிட்டாலும் ஏன் என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும். இந்த உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. குழந்தைகளும் ஆழ்ந்த டிஜிட்டல் அறிவை பெற்றுவிட்டனர். தங்களின் பாரம்பரிய புரிதலை இழந்துவிட்டனர்.
உலகம் எவ்வளவு பெரியது, சிறிய தரைதளத்தில் எப்படி அவற்றை குறிப்பிடுவது? என வரைபட செயல்பாட்டின்போது மாணவர்களுக்கு காட்ட விரும்பினோம். அவர்களால் வரைபடத்தில் எதையும் விளக்க முடியவில்லை, அல்லது எப்படி இது உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. தூரங்களை எப்படி கணக்கிடுவது என்பதும் தெரியவில்லை. அவர்களுக்கு அவற்றை புரியவைக்க அவர்களின் பள்ளியை புகைப்படம் எடுத்தேன். எப்படி பெரிய கட்டடம் சிறிய புகைப்படத்திற்குள் அடங்கியது என்பதை புரிந்துகொண்டனர். இந்த கோணத்தில் அவர்களை வரைபடங்களை வரைய வைத்தோம். அவற்றின் மூலம் தங்கள் வரைபடங்களின் அடையாளங்களையும் வரைந்தனர். அவற்றை முடித்தவுடன் தங்களின் ஊராட்சி, மாவட்டம், மாநிலம், நாடு, கண்டங்கள் இறுதியாக உலக வரைபடங்களை வரைந்தனர். எங்கள் மாணவர்கள் யாரிடமாவது ஆஸ்திரேலியா எங்குள்ளது, எதற்காக அறியப்படுகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லிவிடுவார்கள்!
பள்ளிகள் மூடப்பட்ட காலத்தில் பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் நேரத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை மாணவர்கள் கற்றனர். படிப்பதற்காக மட்டுமின்றி தாங்களாகவே அமர்ந்து ஏதேனும் ஒன்றில் கவனம் குவிக்கின்றனர். இதைக் காணும்போது நன்றாக உள்ளது. தாங்களாகவே படிக்கவும், விளையாடவும் நேரம் ஒதுக்குவதற்கு கால அட்டவணையை நான் தயார் செய்துள்ளேன்.
படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தான் ஆசிரியராக என் கவனம் எப்போதும் இருக்கும். வகுப்பறை அமைப்பில் அதுபோன்ற மாணவர்களுக்காக மீண்டும் மீண்டும் சொல்லி மெதுவாக பாடத்தை நடத்தும்போது பிற மாணவர்கள் எரிச்சல் அல்லது அலுத்து போகக்கூடும். சிறிய வகுப்புகளில் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை. நாங்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் அமர்ந்து மெதுவாக பணியாற்றி தனிப்பட்ட மாணவர்களின் கற்றலில் கவனம் செலுத்தி வருகிறோம். அதிக நேரத்தை வீணடிக்கும் வகுப்பறை சத்தம், இரைச்சல் ஏதுமில்லை.
அறுவடைக் காலம் என்பதால் பெற்றோருடன் குழந்தைகள் சென்று விடுவது தான் இதுபோன்ற மாதிரி வகுப்புகளின் மிகப்பெரும் சவால். அல்லது [புலம்பெயர்] வேலையை தொடங்கி விடுகின்றனர். நான் தனியாக வசிக்கிறேன். இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கூட என் வகுப்புகள் சிலசமயம் நடக்கும். வகுப்புகளை முடித்து சமைத்து, இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்ல நள்ளிரவு ஆகிவிடுகிறது. ஆனால் இது என் கடமை.
ஊரடங்கு வந்தவுடன் பெரும்பாலான பள்ளிகள் மெய்நிகர் கற்பித்தலுக்கு மாறிவிட்டன. மிக கஷ்டப்பட்டு என் மாணவர்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அன்ட்ராய்ட் கைப்பேசிகள் வைத்துள்ளனர். அதையும் பெற்றோர் வேலைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றனர். அப்படியே மாணவர்கள் கையில் இருந்தாலும் [ஸ்மார்ட் ஃபோன்] அல்லது பெற்றோர் உதவினாலும் எப்படி பயன்படுத்துவது என்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.
43 மாணவர்களுடன் நான் பணியாற்றுகிறேன். ஐந்துக்கும் மேற்பட்ட குழுவை நான் சந்திக்கிறேன். அவர்களுக்கு வீட்டில் கற்பிக்கிறேன்- வீட்டின் கூடம் இதற்கு ஏற்றது. ஒவ்வொரு மாணவர் குழுவிடமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவிடுகிறேன். வாரம் ஒருமுறையாவது எல்லா மாணவர்களையும் சென்றடைய வேண்டி உள்ளதால் நான் மிதிவண்டி கொண்டும், சில சமயம் நடந்தும் செல்கிறேன்.
சந்திரமணி மாஜி
வயது: 32
இடம்: கந்தா ஆதிவாசி, நவோமுண்டி வட்டாரம், பஷ்சிமி சிங்பும் மாவட்டம், ஜார்க்கண்ட்
எங்கள் பகுதியில் பல பிள்ளைகள் பள்ளியிலிருந்து இடைநின்றுவிட்டதை கவனித்தோம். பட்டியலில் அவர்கள் பெயர் இடம்பெற்றாலும் பள்ளியில் அவர்கள் இல்லை. அப்படியே பள்ளிக்கு வந்தாலும், அவர்கள் தங்களது வகுப்பு நிலைக்கேற்றவாறு செயலாற்றுவதில்லை. 5ஆம் வகுப்பு மாணவனால் எழுத, படிக்க முடிவதில்லை.

அவர்களின் கையில் புத்தகத்தை கொடுத்தால் ஓடிவிடுவார்கள்! மெதுவாக அவர்கள் சுயமாக கற்கத் தொடங்கினர். புதிய விஷயங்களைக் கற்றனர், அவர்களின் படிப்பும் முறையாக மாறியது.
பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கத் தொடங்கியபோது அவர்கள், ‘நான் ஆசிரியராக அல்லது போலீசாக அல்லது மருத்துவர் ஆவேன் என்பார்கள்’. இப்போது சிலர், ‘நான் கலைஞன் ஆவேன்’ என்கின்றனர், சிலர் மல்யுத்த வீரர் ஆவேன் என்கின்றனர்.
ஒடிசாவைச் சேர்ந்த நான் ஜார்கண்டில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். இப்பகுதிகளில் இருந்து தான் அனைத்து ஆசிரியர்களும் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் சண்டால், ஹோ சமூகங்களையும், பழங்குடியின சமூகங்களையும் சேர்ந்தவர்கள்.
நிபேதிதா மஹந்தா
வயது: 23
இடம்: பந்தா கிராமம், சம்புவா வட்டாரம், கெந்துஜார் மாவட்டம், ஒடிசா
முன்பெல்லாம் பெற்றோரும், பிள்ளைகளும் வீட்டில் இருக்க மாட்டார்கள். மாணவர்களை கிராமத்தில் தேட வேண்டியிருக்கும். மாணவர்களைத் தேடுவதில் எனக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவாகிவிடும். என்னைக் கண்டவுடன் அவர்கள் சொல்வார்கள், ‘அக்கா வருகிறாள்’ என்றுக் கூறி ஓடிவிடுவார்கள்! அவர்களைத் தேடி நான் வயல்கள் அல்லது ஆறுகள், அங்கு, இங்கு என்று அலைவேன். இப்போது பிள்ளைகள் எனக்கு முன் இங்கு வந்துவிடுகின்றனர். கிராம இளைஞர்கள், பெற்றோருடன் நான் நல்லுறவை கட்டமைத்துவிட்டேன். பெற்றோரும் நான் பாடம் எடுப்பதைக் காண்கின்றனர். குழந்தைகளும் ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என பொய் சொல்ல முடியாது!
பொதுமுடக்கத்திற்குப் பிறகு என் முதல் வகுப்பைத் தொடங்கியபோது, பெற்றோருடன் உரையாடி அவர்களின் பண்டிகைகள், அன்றாட வாழ்க்கை பணி, மொழி போன்றவை குறித்து அறிந்துகொண்டேன். அவர்களை அறிந்த பிறகு குழந்தைகளின் கல்வியில் பெற்றோரையும் ஈடுபாடு காட்ட வைத்தேன். சில நாட்களில் பெற்றோர் என்னுடன் வசதியாக உணர்ந்தனர். எங்கள் வகுப்புகளுக்கு ஆதரவுத் தர தொடங்கினர். மாணவர்களை சிறு குழுக்களாக அமைத்து பாடம் எடுப்பதற்கு பெற்றோர் தங்கள் வீட்டு முற்றத்தை எனக்குத் தருகின்றனர். ஒவ்வாரு குழந்தைக்கும் காலஅட்டவணை தயார் செய்து வாரம் இருமுறை என 67 பேரை சந்திக்கிறேன். கூட்டமில்லாத இடங்களில் வகுப்பறைகளை அமைக்கவே நான் முயல்கிறேன்.

அவர்கள் தங்கள் சொந்த கிராமத்தைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வரைபடம் உருவாக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். இந்திய வரைபடத்தை கற்பிக்கும் முன் இதை அவர்கள் கற்க வேண்டும். கிராமங்களை வரைபடம் செய்து திசைகளை அறிந்தனர் – அங்கன்வாடிகள் எங்குள்ளன, பல வகை பாதைகள் என்னென்ன, தங்களின் வீடுகள் எங்குள்ளன என்பதை அறிந்தனர்.
மாணவர்கள் ஒருமுறை வரைபடத்தை உருவாக்கி அடையாளங்களை வரைவதற்குக் கற்றதும், இந்திய வரைபடத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். இது மிகவும் கடினமாகவே இருந்தது. பல்வேறு மாநிலங்களின் பெயர்களை உச்சரிப்பதிலும் கஷ்டம் இருந்தது. பெரிய அட்டையில் இந்திய வரைபடத்தை வரைந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு கொண்டுச் சென்றேன். பிறகு தரையில் இந்தியாவை வரைந்தேன். ஒவ்வொரு மாநிலமும் எங்குள்ளது என்பதை காட்ட அட்டைகளை கொண்டு நிரப்பினேன். இவ்வகையில் அவர்கள் வடக்கு-தெற்கு- கிழக்கு- மேற்கு என திசைகளை அறிந்தனர். அவர்கள் அறியும் வகையில் மாநிலத்தின் பெயரைச் சொல்லி வரைபடத்தில் உள்ள அதற்கான இடத்தில் அட்டையை வைக்குமாறு கூறினேன். அது வெற்றிகரமாக முடிந்ததால் இப்போது மாவட்ட வரைபடங்களுக்கு சென்றுள்ளோம்.
ராஷ்மி ஜெய்பூரியா
வயது: 26
இடம்: கோமர்தினி குக்கிராமம், துன்மா கிராமம், குத்ரா வட்டாரம், சுந்தர்கர் மாவட்டம், ஒடிசா
நாங்கள் முதலில் இந்திய வரைபடத்தை தரையில் வரையத் தொடங்கினோம். பிறகு மாநிலங்களைத் தேடி, அவற்றின் தலைநகரங்களை தேடினோம். இப்போது அவர்களால் [குழந்தைகளால்] எளிதில் கிழக்கில், மேற்கில் உள்ள மாநிலங்களின் பெயர்களைச் சொல்ல முடிகிறது.

முதலில் 29 மாநிலங்கள் இருந்தன. இப்போது லடாக் போன்ற இடங்கள் மாறியுள்ளன. இதையும் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆந்திராவின் பழைய தலைநகரம் ஹைதராபாத், இப்போது அமராவதி. எனவே புதிய விஷயங்களையும் இப்போது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டி உள்ளது.
கிராம வரைபடங்களை வரையும்போது, மோசமான சாலைகளுக்கும் நல்ல சாலைகளுக்கும் எப்படி வித்தியாசப்படுத்தி அடையாளச் சின்னங்களை தர வேண்டும் என்று அறிந்து கொண்டுள்ளனர். இப்போது அவர்கள் சாலைகளை கண்டறிய தொடங்கிவிட்டதால் எங்கு சென்றாலும் வரைபடத்தை அவர்களால் உருவாக்கி விட முடியும். அவற்றை கவனித்து நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுக்கச் சொல்வதால்; அவர்கள் பரபரப்பாகவே உள்ளனர்.
வயலுக்குச் சென்று விவசாயம் குறித்து நாங்கள் கற்பிப்போம். அவர்கள் வீடு திரும்பியதும் சொந்தமாக செடி வளர்க்கவும், உயரத்தை அளக்கவும், அறுவடை செய்யவும் கற்கின்றனர். நெல் விதைகளை எவ்வளவு இடைவெளியில் வளர்க்க வேண்டும் என்பதையும் அறிகின்றனர். விவசாய குடும்பங்களில் இருந்து வந்தாலும் இந்த பாடங்கள் அவர்களுக்கு புதிதாகவே உள்ளன. நாங்கள் பல வகை வேர்களை நட்டுள்ளோம். இதில் எங்களுடன் சமூகங்களும் இணைந்துள்ளன. இவ்வகையில் மாணவர்களுக்கு மண்ணுக்கு என்ன தேவை, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை புரிந்துகொண்டுள்ளனர். இப்போது மரமாக நிற்பதைக் கண்டு அவர்கள் மகிழ்கின்றனர். காரணம் அனைத்தையும் அவர்களே செய்துள்ளனர்.
கோழியின் உயரத்தையும், பசுவின் அகலத்தையும் அளப்பது எங்கள் செயல்பாடுகளில் ஒன்று. எங்கள் நோக்கத்தை உணர்ந்த பெற்றோரும் தங்கள் வீடுகளுக்கு அழைப்பதோடு மாணவர்களுக்கும் உதவுகின்றனர். அவர்களின் பெற்றோர் பெரும்பாலும் விவசாயிகள், தினக்கூலிகளாக உள்ளனர்; குழந்தைகளின் கல்வியில் அவர்கள் ஈடுபாடு காட்டுவதைக் கண்டு நான் மகிழ்கிறேன்.
தனிப்பட்ட முறையில் நானே நிறைய கற்றுள்ளேன். நான் செல்லும் குக்கிராமத்திற்கு ஏற்ப பாடங்களை தயார் செய்து கொள்கிறேன். பிற ஆசிரியர்களுடன் பணியாற்றும்போது ஒருவருக்கு ஒருவர் கற்கிறோம்.
மோனலிசா சாஹூ
வயது: 22
இடம்: திம்போ கிராமம், கெந்துஜர்கா வட்டாரம், கெந்துஜார் மாவட்டம், ஒடிசா
காலை 6 மணிக்கு தொடங்கும் என் அன்றாட பணிகள் மாலை 6 மணி அல்லது அதற்கு மேல் முடிகிறது. 41 மாணவர்களுக்கு மூன்று பிரிவாக பாடம் நடத்த நான் தினமும் சுமார் 15 கிலோமீட்டர் மிதிவண்டியில் செல்கிறேன்.
முன்பெல்லாம் மாணவர்கள் காண்பதை விளக்க முடிந்தாலும், எழுதத் தெரியாது. வரையத் தெரியும், எழுதத் தெரியாது. இப்போது அவர்களால் 10 முதல் 12 வரிகள் வரை எழுத முடியும். இந்திய வரைபடத்தை அறியும் நம் குழந்தைகள் தங்கள் சொந்த கிராமத்தைப் பற்றி அறிவதில்லை. வரைபடங்கள் வழியாக அவற்றை அவர்கள் அறிய வேண்டும் என நினைத்தோம். அவர்களின் சிந்தனைத் திறன் வளர்வதையும் கண்டோம் – தங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள விஷயங்களை கவனித்து அறியாதவற்றை கேட்டும் அறியத் தொடங்கினர்.
ஊரடங்கின் தொடக்கத்தில் வசிப்பிடத்திற்கு வந்து கற்பிக்கும் முறையை நான் தொடங்கியபோது என் மாணவர்களில் பாதிபேர் எழுத்துக்களை மட்டுமே அறிந்திருந்தனர். ஒடியா, ஆங்கிலத்தில் பாதி எழுத்துக்கள் மட்டுமே தெரியும். இப்போது அவர்கள் ஒடியா மொழியில் 1 முதல் 100 வரை எழுதுகின்றனர்.
கல்வியின் மதிப்பை அறிந்தாலும், அவற்றின் முக்கியத்துவத்தை என்னால் காண முடியவில்லை. இப்போது அவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுவதை காண்கிறேன்.
ராக்கி திரிபாதி
வயது: 23
இடம்: அம்போலபா கிராமம், சுகினா வட்டாரம், ஜஜாபூர் மாவட்டம், ஒடிசா
என் மாணவர்களில் 70 சதவீத குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ஃபோன் பற்றியே தெரியாது. ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் ஒருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார். இப்போது அவர்கள் தேடுதல், டைப் செய்தல், ஸ்பீக்கர் வழியாக கேள்வி கேட்பது போன்றவற்றை தெரிந்து கொண்டனர். தேடிக் கற்கும் அறிவை அவர்கள் பெற்றுவிட்டனர்.
நான் 14 வசிப்பிடங்களுக்கு [வீடுகளின் தொகுப்பு] செல்கிறேன். இதற்காக தினமும் 10 கிலோ மீட்டர் மிதிவண்டியில் பயணிக்கிறேன். பிறரைவிட மிக தொலைவில் உள்ள ஐந்து பிள்ளைகளுக்கு ஒரு இணைய வழி வகுப்பை வாரம் ஒருமுறை நடத்துகிறேன். அருகருகே வசிக்கும் மற்ற 51 பேரையும் சிறு சிறு குழுக்களாக அமைத்து கற்கச் செய்கிறேன். இந்த ஐந்து குழந்தைகளுக்கும் குழுச் செயல்பாடு மூலம் கற்பிக்க முயற்சித்தேன். ஆனால், இவர்களை நீண்ட தூரம் பயணிக்கச் செய்வது சரியல்ல என்று உணர்ந்தேன்.
நான் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு காலை 6.30 மணிக்கு முதல் வகுப்பை தொடங்குவேன். 12 மணி நேரம் கழித்து வீடு திரும்புவேன். திங்கள் முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் எடுப்பேன். வார நாட்களில் ஏதேனும் ஒரு மாணவர் வராவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமை அவரைப் பார்க்கச் சென்றுவிடுவேன்.
எங்களுடன் நேரத்தையும், வேலைகளையும் பகிர்ந்து கொண்ட ஸ்மிதா அகர்வால், தப்ரேஜ் அன்சாரி மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம்.
Editor's note
ரியா பெஹ்ல் 2019-2020 வரை அஷோகா பல்கலைக்கழகத்தில் மதர் தெரசா ஃபெல்லோவாக இருந்தார். தற்போது பாரியில் பயிற்சிப் பெற்று வருகிறார். இக்கட்டுரைக்காக அவர் பல நேர்காணல்களையும், செய்திகளையும் சேகரித்துள்ளார். அவர் சொல்கிறார், “ஊரடங்கின்போது மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் நீண்ட தூரம் பயணிப்பது பற்றி எனக்கு முதல்கட்ட தகவல் கிடைத்தது. ஒரு ஆசிரியராக கடமையுணர்வு, துணிவுடன் பாடம் எடுப்பது குறித்த இக்கட்டுரைக்கான ஆய்வுகள் எனக்கும் அனுபவமாக அமைந்தது.”
அந்தரா ராமன் சித்திர கலைஞர். பெங்களூருவைச் சேர்ந்த கிராஃபிக் வடிவமைப்பாளர். அவரது படைப்புகளில் சமூக அறிவியல், சூழலியலுக்கான விருப்பம், அவற்றை பாதுகாப்பது குறித்த மிகப்பெரும் தாக்கத்தை காண முடியும். தீவிர வாசகரான அவர், PARI க்கான ஓவியங்களில் அவற்றின் விவரிப்புத் தரம் மற்றும் வண்ணத்தின் உருவகப் பயன்பாடு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.