எனது சஹத்வார் கிராமத்தில் கூன் விழுந்தபடி வீடு வீடாக நகர்ந்துச் செல்லும் சுமித்ரா பாட்டியை எங்கும் காணலாம். மெலிந்து வளைந்த அவளது உடலின் கோணலான நிழல் அவளுக்கு முன் வாசலில் தோன்றுகிறது. கைகளை விரித்து, உணவுக்காக கெஞ்சுகிறார். 12 ஆண்டுகளாக அவர் இப்படி தான் வாழ்ந்து வருகிறார். அவரது உடல்நலம் பாதிக்க தொடங்கியதும் குடும்பம் அவரை கைவிட்டுச் சென்றது.

இப்போது 60 வயதை தாண்டியிருக்கும் அவர் உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் எங்கள் கிராமத்தை போன்று பல இடங்களுக்கு கால்களால் மெதுவாக நடந்து செல்கிறார். அண்டை மாவட்டங்களான மாவ், ஃபதேப்பூர் போன்றவற்றிற்கும் சென்று உணவு, மருந்திற்காக அவர் பணம் கேட்கிறார்.

இலவச ரேஷன் பொருட்களால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை, “நான் எங்கு சென்று சமைப்பது” என கேட்கிறார்.

இதற்கு பதிலாக சுமித்ரா (இப்பெயரை தான் அவர் பயன்படுத்துகிறார்) சமைத்த உணவு அல்லது பணத்தை விரும்புகிறார். அதை கொண்டு அவர் மருந்துகளை வாங்கிக் கொள்கிறார். அவர் சொல்கையில், “எனக்கு வயிற்றில் வலி தரும் கட்டி [வீக்கம்] உள்ளது. வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் [100 கிலோமீட்டர் தொலைவில்] எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். ஆனால் சில கோப்புகளில் உறவினர்களின் கையெழுத்து தேவைப்பட்டது. நான் எங்கு செல்வது? அதனால் எனக்கு அறுவை சிகிச்சையும் செய்ய முடியவில்லை,” என்கிறார்.

எனது குடும்பம் மும்பையிலிருந்து அண்மையில் தான் எங்கள் சொந்த கிராமமான சஹாத்வாருக்கு திரும்பியது. தேசிய ஊரடங்கு எங்களைப் போன்ற புலம்பெயர் குடும்பங்களை வீடு திரும்ப வைத்ததற்கு முன்பு, எனது தந்தை கோபால் குப்தா அங்கு வேலை செய்து கொண்டிருந்தார். நாங்கள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தோம். எனது குடும்பம் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் போராடியாதை இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது: கோவிட் உதவி கோரும் கல்யாண்வாசிகள்: கடனில் தத்தளிப்பு.

‘…எனது நெருங்கிய உறவினர் கையெழுத்திட வேண்டும் என்கின்றனர். எனக்கு அப்படி யாருமில்லை என்பதால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியவில்லை,’ என்கிறார் சுமித்ரா பாட்டி. ஜோதி குப்தா, குஷ்பூ குப்தா ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்

இப்போது வெருவார்வாரி வட்டாரத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் அன்றாடம் சுமித்ராவை காண்கிறோம். இப்போது அவர் பாதுகாப்பான இடத்தில் ஓய்வெடுக்க இடம் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பை உள்ளது. அதில் இரண்டு புடவைகள், அவரது மருந்துகள், மருத்துவ அறிக்கைகைள், சாப்பிட அவர் பயன்படுத்தும் சிறிய ஸ்டீல் தட்டு ஆகியவை உள்ளன. “மருத்துவம் சார்ந்த கோப்புகளை கிழியாமல், நனையாமல் பார்த்துக் கொள்வது எனக்குக் கஷ்டமாக உள்ளது,” என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.

முதியோருக்கான மாநில, மத்திய அரசு திட்டங்களுக்கு தகுதிப் பெற்றும் சுமித்ராவிடம் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றுகள் எதுவுமில்லை. “ஆதார் அட்டைப் பெறுவதற்கு நான் முயற்சி செய்தும், என்னால் பெற முடியவில்லை,” என்கிறார் அவர்.

ஆன்லைன் பதிவை கட்டாயப்படுத்துவது எல்லோரையும் சென்றடைவதற்கு இடையூறாக இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஷா பணியாளரான சுரங்கா வர்மா சொல்கிறார்,“இணைய வழி பதிவின் முலம் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டம் கிடைக்க நாங்கள் உதவுகிறோம். ஆனால் சுமித்ரா இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருக்கிறார். மேலும் அவரிடம் வங்கிக் கணக்கு அல்லது எவ்வித அடையாள அட்டைகளும் இல்லை என்பதால் பதிவு செய்வது கடினமாக உள்ளது.”

இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேல் 73 மில்லியன் (கணக்கெடுப்பு 2011) மக்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் சுமித்ராவைப் போன்ற முதியவர்களின் சூழல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, அவர்களில் 71 சதவீதம் பேர் (2017-2018ஆம் ஆண்டுகளில்) வாழ்வாதாரத்திற்கு பிறரையே சார்ந்துள்ளனர் என்கிறது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்படுத்தல் அமைச்சகம் வெளியிட்ட இந்தியாவில் முதியோர் எனும் 2021ஆம் ஆண்டு அறிக்கை.


உ.பி.யின் பல்லியா மாவட்டம் ரேவாதி வட்டாரம் மூன் சுப்ரா கிராமத்தின் நிலமற்ற தலித் தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர் சுமித்ரா.

“எனது குழந்தைப்பருவத்தில் சுல்லாவிற்கு [அடுப்பு] விறகு சேகரிப்பேன், எனது இளைய சகோதரியை கவனித்துக் கொள்வேன்” என்கிறார் சுமித்ரா. திருமணமான வயது அவருக்கு நினைவிலில்லை இல்லை. அவர் கூறுகையில், “எனக்கு இதுபற்றி [திருமணம்] குறைவாகவே நினைவு உள்ளது. திருமணத்தால் எனக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கும், என்னை கவனித்துக் கொள்வார்கள் என என் தாத்தா நினைத்தார்,” என்கிறார். குடும்பத்தில் சிகிச்சைக்கு பணமின்றி தனது இளைய சகோதரி உடல்நலம் குன்றி உயிரிழந்ததை சுமித்ரா குறிப்பிடுகிறார்.

திருமணமாகி மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஷம்பு குப்தாவிற்கு மிக இளம் வயது சுமித்ராவை திருமணம் செய்துள்ளனர். அரிதாக விவசாய கூலிவேலைக்கு சென்ற குடிகார கணவரிடம் உடல் ரீதியாக வன்முறைகளை அனுபவித்தது மட்டும் அவரது நினைவில் உள்ளன. ஷம்புவின் தந்தை விவசாய தொழில் செய்துப் பெற்ற ரூ.100 முதல் 200 வரையிலான தினக் கூலியை அவர்கள் சார்ந்திருந்தனர். ஒரு ஏக்கர் நிலத்தை அக்குடும்பம் குத்தகைக்கு எடுத்தது, ஆனால் வீட்டை விட்டு வெளியேறி நிலத்தில் கால் வைக்க அனுமதிக்கப்பட்டதில்லை என சுமித்ரா நினைவுக்கூர்கிறார். “நான் வேலை செய்ய விரும்பினேன். ஆனால் அவர் [அவளது கணவர்] வீட்டை விட்டு காலடி வைக்க என்னை அனுதித்தது கிடையாது.”

திருமணமான ஓராண்டில் சுமித்ராவிற்கு ஒரு மகன் பிறந்தான், ஆனால் சில மாதங்களில் அவன் இறந்துவிட்டான். “என் குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இறந்துவிட்டது. பிறகு எங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை,” என அவர் சொல்லிவிட்டு அமைதி அடைகிறார்.

தனது கணவரின் முதல் மனைவி குழந்தைகள் தன்னிடம் நன்றாக நடந்துக் கொண்டதை சுமித்ரா நினைவுக்கூர்கிறாள். “ஆனால் அவர்கள் வளரத் தொடங்கியதும் அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் நான் அவர்களின் தாய் கிடையாது என்பதை நினைவுப்படுத்தியதுடன், அனைத்தையும் அவர்களிடமிருந்து பறித்துவிடுவேன் என்றும் கூறினர். இதனால் அவர்கள் என்னிடமிருந்து விலகத் தொடங்கினர்.” பத்தாண்டு வரை கணவருடன் வாழ்ந்த அவர், கடுமையாக அடி வாங்கியதால் விலகிச் சென்றார்.

அவரது உறவுக்கார பெண் மீரா, தங்க இடம் கொடுத்ததால் 15 ஆண்டுகளுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். மீராவின் மூன்று குழந்தைகளை கவனித்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் சுமித்ரா செய்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் புதிததல்ல- கிராமப்புற இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மூதாட்டிகள் சம்பளம் பெறாமல் வீட்டு வேலைகளை செய்கின்றனர் என்கிறது அறிக்கை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சுமித்ராவின் கணவர் இறந்துவிட்டார். ஆனால் வளர்ப்பு மகனும் தன்னை அடிப்பான் என்றும் வன்முறை மீண்டும் தொடரும் எனவும் அஞ்சிய சுமித்ரா வீட்டிற்கு திரும்பச் செல்லவே இல்லை.

ஒரு மதிய நேரம் சுமித்ராவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் துடித்த போது, உறவுக்காரப் பெண் உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். “மருத்துவர் என்ன சொன்னார் என்பது எனக்கு சரியாக தெரியாது. எனக்கு மருத்துவ சிகிச்சையும், சிறிய அறுவை சிகிச்சையும் தேவை என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். அடுத்த 10 நாட்களுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.”

ஆரம்பத்தில் உறவுக்காரப் பெண் அவரது செலவுகளை ஏற்றுக் கொண்டார். ஆனால் சுமித்ராவின் உடலில் கெட்ட ஆவி புகுந்துவிட்டது என குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் நம்பத் தொடங்கினர். “நாள் முழுவதும் வலியால் முனகிக் கொண்டு, கஷ்டப்பட்டு நடந்தேன். எனது உறவுக்காரப் பெண் கெட்ட ஆவி[ஆன்மா] என் உடலை விட்டு நீங்கவில்லை என்றுக் கூறி வீட்டை விட்டு விரட்டிவிட்டாள்.”

தங்க வைக்கவும் வேறு எவ்வித உதவிகள் செய்வதற்கும் உறவினர்கள் யாரும் தயாராக இல்லை. குடும்பத்தில் அவரைப் பார்த்துக் கொள்ள யாரும் முன்வராத காரணத்தால் கிராமங்கள் தோறும் அவர் நடந்து சென்று கோயில்களுக்கு வெளியே, வீடுகளில் யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். திறந்தவெளிகளில் அவர் உறங்கிக் கொள்கிறார்.

சில நல்லுள்ளம் படைத்தவர்கள் அவருக்கு உதவுகின்றனர். “சில மாதங்களில் 200 ரூபாய் வரை சேகரித்துவிட்டேன், இதைக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு என்னால் செல்ல முடியும்,” என்கிறார் சுமித்ரா. ஆனால் குடும்பத்தின் ஆதரவின்றி, சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பதால் அதுவும் பலனளிக்கவில்லை.

வலி தாங்க முடியாதபோது, மருத்துவமனைக்குச் செல்ல பணம் இல்லாதபோது, அவர்ஆயுர்வேதம் அல்லது உள்ளூர் வைத்தியர்களை அணுகி வலி நிவாரணம் பெறுகிறார். “வலி திரும்பவும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அது இன்னும் மோசமடைகிறது,” என்கிறார் அவர்.

அரசு திட்டங்கள் பற்றி எதுவும் சுமித்ராவிற்கு தெரியவில்லை. ”எப்படி உதவிப் பெறுவது என்றும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் ஆதாரத்திற்கு என்னிடம் ஆவணங்கள் இல்லை,” என குறிப்பிடுகிறார். ஜோதி குப்தா, குஷ்பூ குப்தா எடுத்த புகைப்படங்கள்

தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ், வயதானோருக்கு அளிக்கப்பட்ட பல நலத் திட்டங்களுக்கு சுமித்ரா தகுதிப் பெற்றிருக்கிறார். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் இத்திட்டங்கள் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயது கடந்து வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் பெண்களுக்கு ‘79 வயது வரை மாத ஓய்வூதியமாக ரூ.200 வழங்கப்படுகிறது, பிறகு ரூ.500 ஆக அளிக்கப்படுகிறது.’ கைம்பெண்ணான சுமித்ராவும் இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தகுதி பெற்றிருக்கிறார். அத்திட்டத்தின்படி’40-59 வயது வரையிலான வறுமை கோட்டிற்கு கீழுள்ள கைம்பெண்கள் மாதம் ரூ.200 ஓய்வூதியம் பெற தகுதி பெறுகின்றனர். ’

சுமித்ராவிற்கு இத்திட்டங்கள் குறித்துத் தெரியவில்லை. “எப்படி உதவிப் பெறுவது என எனக்குத் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் என்னிடம் காட்டுவதற்கு எவ்வித ஆவணங்களும் கிடையாது,” என அவர் குறிப்பிடுகிறார்.

கோவிட் பெருந்தொற்று சூழலால் கடந்த ஓராண்டாக சுமித்ரா வாழ்வாதாரத்திற்கு போராடி வருகிறார். மக்கள் அவரை தங்கள் வீட்டிற்கு அருகே அனுமதிப்பதில்லை. “நான் சுற்றித் திரிவதால் என்னால் அவர்களுக்கு கோவிட் வந்துவிடும் என அஞ்சுகின்றனர்.”

ஊருக்கு புறப்பட நாங்கள் தயாரான போது சுமித்ரா எங்களிடம் கூறினார், “உதவி செய்வதாக சிலர் கூறியுள்ளனர். இம்முறை நான் லக்னோ மருத்துவமனைக்கு செல்ல நினைத்திருக்கிறேன். இந்த தாங்க முடியாத வலி போக வேண்டும் என நான் விரும்புகிறேன்.” அவள் கிராம கோயிலுக்கு சென்று யாசகம் கேட்க அமர்ந்து கொண்டார்.

நாங்கள் கிராமத்தைவிட்டு மும்பைக்கு திரும்புகிறோம். மீண்டும் அவரை எப்போது பார்ப்போம் என்று தெரியாது.

Editor's note

ஜோதி குப்தா மும்பை மஞ்சுநாத் வணிகவியல் கல்லூரி மாணவர் மற்றும் குஷ்பூ குப்தா தொலைநிலைக் கல்வியில் தனது 10ஆம் வகுப்பு படிப்பதற்கு ஜிஆர்சி இந்தி உயர் நிலைப் பள்ளி மும்பையில் பதிவு செய்திருந்தார். ஊரடங்கில் வீடு திரும்பியபோது அவர்கள் இக்கட்டுரையை எழுதியுள்ளனர்.

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.