

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் துவக்கத்தில், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் பணிபுரிந்த அனைவரும் ஒரு பெரும் மருத்துவ அவசரத்திற்கு தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டோம். அதிகளவிலான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிறிது நாட்களிலே கோவிட்-19ன் முதல் அலை தாக்கியது.
நான் கோவிட் அவசர சிகிச்சை பிரிவில் வேலை செய்வதற்கு முன்வந்தேன். முதல் 2 மாதங்களுக்கு, 10 மணி நேரத்திற்கும் மேல் நாள்தோறும் வேலை செய்தேன். பணியாட்களில் பாதிபேர் வேலைக்கு வரவில்லை. புதிய வைரஸ், அது ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் மற்றும் தொற்றுப் பரவலின் அபாயம் ஆகியவை குறித்த அச்சத்தின் காரணமாக பெரும்பாலானோர் கோவிட் பணியை தவிர்த்தனர்.
வீட்டிலிருந்த எனது கணவர், எனது இரு மகன்கள் (வயது 18 மற்றும் 22) மற்றும் 80 வயதான மாமியார் ஆகியோர் கவலைபட்டனர். கொரோனா வைரஸ் தொற்று குறையும் வரை அவர்கள் என்னை விடுப்பு எடுப்பது குறித்து யோசிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், நான் செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கூறிவிட்டேன். அது எனது கடமை.
நான் சுஜாதா காவ்லே. எனக்கு 50 வயதாகிறது. நான் ஒரு செவிலியர். கொரோனா தொற்றுக் காலத்தில் மஹாராஷ்ட்ராவில் முன்களப்பணியாளராக வேலை செய்தேன். நான் குழந்தையிலிருந்தே செவிலியராக வேண்டும் என்று எண்ணினேன். நான் நகராட்சிப் பள்ளியில் படித்தேன். எனது குடும்பத்தில் ஒருவர் கூட மருத்துவப் பின்னணியைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனாலும் எனக்கு அதில் ஆர்வம் இருந்தது.
மும்பை பரேலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை கல்லூரியில் மூன்று ஆண்டுகள் செவிலியர் பட்டயப்படிப்பை 1997ம் ஆண்டு முடித்த பின்னர், நான் உடனடியாக ஜஸ்லோக் மருத்துவமனை பணியில் சேர்ந்துவிட்டேன். நான் முதலில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினேன். பின்னர் கேத் ஆய்வகத்திற்கு மாறினேன். கடந்தாண்டு கோவிட் பிரிவுக்கு மாறுவதற்கு முன்னர் 17 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தேன்.
எங்கள் முதலாளிகள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டார்கள். (எங்கள் பாதுகாப்பில் சிறந்த கவனம் செலுத்தினார்கள்). எங்களுக்கு போதியளவு பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கினார்கள். பணியாளர்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அவர்கள் தங்குவதற்கு போதிய அறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் ஊரடங்கு ஆரம்பித்தபோது, ரயில்கள் இயங்கவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் பேருந்து வசதிகள் செய்துகொடுத்தது. ஆனால், அவை உடனடியாகவே நிரம்பிவிடும். எனவே எனது கணவர் என்னை தினமும் சாண்டா குரூசில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து மருத்துவனைக்கும், பின்னர் வீட்டிற்கும் அழைத்துச் செல்வார். கிட்டத்தட்ட இவ்வாறு ஓராண்டு எனக்கு உதவினார். அதற்காக நான் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது கணவர் ஒரு மின்சார நிறுவனத்தில் மீட்டர் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.

மருத்துவர்கள் வருவார்கள் செல்வார்கள். ஆனால் செவிலியர்களாகிய நாங்கள் நோயாளிகளுடனே தங்கிவிடுவோம். சொல்லப்போனால், அவர்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல் அவர்களை பார்த்துக்கொள்வோம். மருத்துவ உதவிகள் செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு உறுதுணையாகவும் இருப்போம். வீடியோ கால்கள் மூலம் நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கு உதவுவோம். அவர்கள் மனஉறுதியுடன் தங்கள் நோயை எதிர்த்து போராடுவதற்கு உதவுவோம். அவர்களிடமும், அவர்களின் சொந்தக்காரர்களிடமும் “நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் கவலை கொள்ளாதீர்கள்“ என்று உறுதியளிப்போம்.
கோவிட் பணியின்போது, என்னை சுற்றித் தொடர்ந்து நோயாளிகள் படும் துன்பமும், மரணமும் இருந்துகொண்டே இருந்தன. அந்த காலங்கள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனக்கு 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்று ஏற்பட்டது. ஆனால், நல்லவேளையாக நான் குணமாகிவிட்டேன்.
இரண்டாவது அலையின்போது எங்கள் பணிகள் மிகக்கடினமாகிவிட்டது. தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்துகொண்டே இருந்தார்கள். தற்போது தடுப்பூசிகள் இருக்கின்றன (எங்கள் மருத்துவமனையிலே கிடைக்கிறது). மக்கள் அனைவரும் அவர்களின் சுற்று வரும்போது தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு ஒருநாள் செல்ல முடியும்.
காப்பீடு மற்றும் நிதி நிவாரணம் ஆகியவற்றுக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், ஏதாவது ஒன்றுதான் நிறைவேற்றப்படும். (செய்தித்தாள் செய்திகளின்படி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் காப்பீட்டு திட்டம் 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்கள் கோவிட் தொற்றால் இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் நிவாரணத்தொகை ரூ.50 லட்சம் காப்பீடாக வழங்கப்படும். 2021ம் ஆண்டு ஜீலை 1ம் தேதி வரை மஹாராஷ்ட்ரா அரசு 210 விண்ணப்பங்களை மட்டும் அனுப்பியுள்ளது. அதில் 58 குடும்பத்தினர் – 28 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது.)
நான் எனது பணியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், இந்தியாவில் செலிவியர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம், மரியாதை அல்லது ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், இப்பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து செவிலியர்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்தத் தொற்றுக்காலத்தில் அந்த உண்மை வெளிப்பட்டது. சேவை என்பது முக்கியமான ஒன்றுதான். நாங்கள் சேவை செய்வதற்கு எப்போதும் தயாராக உள்ளோம். ஆனால், செவிலியர்கள் அவர்கள் வேலையை செய்வதற்கு தேவையான உதவியும் கிடைக்கவேண்டும்.
Editor's note
ஜனினா ஷிவ்தாசாணி, மும்பை கத்தீட்ரல் மற்றும் ஜான் கொனான் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. அவர் சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் கூறுகையில், “இந்த தொற்று காலம் அனைவருக்குமே மிகக் கடுமையாகத்தான் இருந்தது. குறிப்பாக மருத்துவத்துறையினருக்கு கடும் சவாலாக இருந்தது. நான் செவிலியர் சுஜாதாவின் கதையை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். கோவிட் – 19 தொற்றுக் காலத்தில் செவிலியர்கள் எண்ணற்றக் கடுமையான பிரச்சனைகள் எதிர்கொண்டதாகவே நான் எண்ணுகிறேன். இந்தியாவில் செவிலியர்களின் எண்ணிக்கை 1:670 என்று இருக்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் படி 1:300 என்று இருக்க வேண்டும். இதுபோன்ற பேட்டிகள் எடுப்பது எனக்கு முதல்முறை. இந்தப் பேட்டி பல கட்டங்களாக நடைபெற்றது. தொடர்ந்து கேள்விகள் கேட்டு, தொகுத்து, திருத்தி இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.
பவானி நட்கொண்டே, பெங்களூரு சிருஷ்டி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நான்காம் ஆண்டு மாணவர்.
தமிழில்: பிரியதர்சினி. R.
பிரியதர்சினி. R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.