இது 2020 ஆம் ஆண்டின் கோடை காலம். பதினொரு வயதாகும் அருண், நாக்பூர் நகருக்கு வெளியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 44ல் தனது குடும்பத்திற்கு சொந்தமான டீக்கடைக்கு பின்னால் உள்ள வயல்களில் 17 அந்நியர்கள் உறங்குவதை கண்டான். பயணிகள் மிகவும் களைப்படைந்து, கால்களில் கொப்புளங்கள் மற்றும் வீக்கத்துடன் மிகவும் சோர்வாக, அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் அருண், கர்ப்பிணி பெண்கள், சோர்வான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்ற நூற்றுக்கணக்கானோர் பாதசாரிகளாக நடந்து செல்வதைக் கண்டான். அவருடைய குடும்பம் அவர்களுக்கு உதவ முடிவு செய்தது; இதன் மூலம் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடங்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை குறித்து அருண் நன்கு அறிய முடிந்தது. இவர் சந்தித்த ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான கதை இருந்தது, இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று – அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முற்பட்டனர்.

இந்திய தொழிலாளர்களின் இந்தப் பெரிய புலம்பெயர்வு ஓர் இரவு எட்டு மணிக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்புடன் துவங்கியது.

பாத்திரத்தின் விளிம்பிற்கு பழுப்பு நிற நீர் ஏறுவதை அருண் பார்த்தார். “அனைவரையும் எங்கே?” என்று அவர் கேட்டார் அவரது பாபா (மராத்தியில் அப்பா) வெப்பத்தை குறைத்தார். அவரது அப்பா நாக்கைச் சொடுகிக்கொண்டு கோவிட் என்ற புதிய பயங்கரமான நோய் உலகம் முழுவதும் காற்றில் பரவி வருவதாக கூறினார். “யாருக்கும் எங்கேயும் செல்வதற்கு அனுமதி இல்லை”, என்று அவர் தந்தை விளக்கினார். அதனால் தான் வழக்கமாக தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக தங்களது கடையில் நிற்கும் நெடுஞ்சாலை பயணிகளை எங்கும் காண முடியவில்லை. தேசிய நெடுஞ்சாலை 44ல் உள்ள அவர்களின் இந்த கடை இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு பிரபலமான நிறுத்தமாக இருந்து வந்தது. போதுமான வாடிக்கையாளர்கள் இல்லாததால் தந்தை கவலைப்படுகிறார் என்று அருண் சிந்தித்தான், ஆனால் கேட்பதற்கு முன்பாகவே அவனுக்குத் தெரிந்தது ஏனென்றால் அவனது தந்தை தனது பிரச்சனைகளைப் பற்றி பேச விரும்ப மாட்டார்.

அது ஏப்ரல் நடுப்பகுதியில் உள்ள ஒரு வெப்பமான பிற்பகல். தெலுங்கானாவின் காகாஸ் நகரிலுள்ள தனது குடிசைக்கு வெளியே அமர்ந்திருந்தார் திலீப் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள் நாடு முழுவதும் நான்கு மணிநேரத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதை அறிவித்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். இது பல நாட்களுக்கு முன்பே நடந்து விட்டது.

இதன் பொருள் பல நாட்களுக்கு வேலை இல்லை, உணவு இல்லை என்பதாகும். அவர் வேலை செய்து வந்த பருத்தி ஆலை மூடப்பட்டது. அவரது முதலாளி திலீப்பிற்கும் மற்ற தொழிலாளிகளுக்கும் சில நாட்களுக்கான உணவு பொருட்களை வழங்கினார்.

அவர் தனது குடிசையை திரும்பிப் பார்த்தார். நேற்று இரவு அடித்த புயலில் மேற்கூரை பறந்து கிடந்தது.

தெலுங்கானாவின் காகாஸ் நகரிலுள்ள தனது குடிசைக்கு வெளியே அமர்ந்திருந்தார் திலீப் (மஞ்சள் சட்டை அணிந்திருப்பவர்) தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள் நாடு முழுவதும் நான்கு மணிநேரத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதை அறிவித்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார்

பருத்தி ஆலையில் இருந்த மற்றொரு தொழிலாளி வந்து அவருக்கு அருகில் அமர்ந்தார். “திலீப் அண்ணா, உணவுப் பொருட்களும் குறைந்து போய்விட்டது, குடிசைகளும் சேதம் அடைந்துவிட்டன. ஹன்ஸ்ராஜும் நானும் வீட்டிற்குத் திரும்ப விரும்புகிறோம். நாங்கள் திரும்பவில்லை என்றால் உணவும், தங்குவதற்கு இடமும் இல்லாமல் இங்கு சிக்கிக் கொள்வோம்.”

“நீங்கள் திரும்புவதற்கு எப்படி திட்டமிட்டு இருக்கிறீர்கள்? முயன்றவர்களை போலீசார் அடித்து திருப்பி அனுப்பி இருக்கின்றனர். ரயில் மற்றும் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை ஏனெனில் இது முழு ஊரடங்கு. இங்கிருந்து வெளியேறுவதற்கு வழியே இல்லை,” என்று திலீப் கவலையுடன் பதிலளித்தார்.

“அண்ணா, நாங்கள் கால்நடையாகவே வீடு திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறோம்,” என்று அந்த தொழிலாளி பதிலளித்தார்.

திலீப் அமைதியாகிவிட்டார் அவரது இதயம் பலமாக துடிக்கத் துவங்கியது. வீட்டிற்கு திரும்புவதற்கு நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது அவருக்கும் தெரியும்.

அவர்கள் ஏழு நாட்கள் நடந்தார்கள்.

ஆலையில் இருந்து திலீப்பும் மற்ற 16 தொழிலாளர்களும், ஒரு செட்டு துணியையும் சில கிலோ அரிசியும் எடுத்துக் கொண்டு நடக்கத் துவங்கினர். அவர்கள் தங்களது உடைமைகளை தலை மற்றும் முதுகில் சுமந்து சென்றனர், அவர்களின் உடமையின் எடையால் முதுகு வலித்தது அதனால் அவர்கள் ஆரம்பத்திலேயே சில விஷயங்களை விட்டுவிட்டனர். அவர்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை மிகவும் கடினமானது – மகாராஷ்டிராவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தை அடைய அவர்கள் 700 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

அவர்கள் யாரும் வீட்டுக்கு திரும்புவதற்கு வழியை காட்டுவதற்கு வரைபடங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் இல்லை. எனவே, அவர்கள் நாக்பூர் – ஹைதரபாத் ரயில் பாதையில் நடக்க முடிவு செய்தனர். அவர்கள் இரவில் நடந்தார்கள் மற்றும் பகலில் முடிந்த வரை ஓய்வு எடுக்க முயன்றனர் இதன்மூலம் அவர்கள் தீயாக தகிக்கும் சூரியனை தவிர்க்க முயன்றனர்.

வீடுகளுக்குச் சென்று தங்களது குடும்பங்களை பார்க்க ஆசைப்பட்டு முதலில் சில இரவுகளில் புலம்பெயர்ந்தவர்கள் பேசிக்கொண்டும், ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டும் நடந்து சென்றனர். ஆனால் பின்னர் அனைவரும் அமைதியாக இருந்ததை திலீப் கவனித்தார், அதன்பிறகு யாரும் பேசவே இல்லை. அவர்களிடம் விரைவில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் போனது மேலும் அவர்களின் தொண்டை உலர்ந்து போயிருந்தது. சில நேரங்களில் அவர்கள் தங்கள் பாட்டில்களை நிரப்ப ஒரு கிணற்றை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் கூட ஆனது.

அவர்கள் தங்களது சுமையை வெகுவாக குறைத்திருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு இந்த உடைமையும் பாறை போல கணக்க துவங்கியது. ரயில் தண்டவாளத்தின் ஓரங்களில் சில மக்கள் தங்களது உடைமைகளை கீழே எறிந்து விட்டுச் சென்றனர் ஏனென்றால் அதை தூக்கி செல்வதற்கு அவர்களுக்கு வலிமை இல்லை.

பல நாட்களாக நடந்து அவர்களது செருப்புகள் தேய்ந்ததால் ரோட்டின் சூட்டினை அவர்களின் பாதங்களில் உணர முடிந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு திலீப்பின் செருப்பு அறுந்தே போனது. முதலில் அவர் தனது கட்டைவிரலின் உதவியால் செருப்பினை இருக்க பிடிக்க முயன்றார், ஆனால் அது அவரின் வேகத்தை குறைத்தது அதனால் அவர் செருப்பினை தூர எறிந்துவிட்டு வெறும் கால்களிலேயே மீதி தூரத்தை நடக்கத் துவங்கினார்.

திலீப்பை உந்திச் செலுத்திய ஒரு விஷயம் என்னவென்றால் அது அவரது மகளை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே. கடந்த ஐந்து மாதங்களாக அவர் பருத்தி ஆலையில் வேலை செய்து கொண்டிருந்ததால் அவரது மகளை சந்திக்கவே இல்லை. அவர் அங்கு சென்று சேர்ந்த பிறகு இரண்டு வாரங்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பது அவர் அறிந்ததே மேலும் அதன்பிறகே அவரது மகளை சந்திக்க முடியும் என்பதும் தெரியும். அவரது மகள் அவரை நோக்கி ஓடி வருவதற்கு ஏங்கினார்; மகளை தூக்கி சுற்றி அவரது மகள் சிரித்துக்கொண்டே அப்பா போதும் தலை சுற்றுகிறது என்று கெஞ்ச வேண்டும் என்று எண்ணினார். அவர் இறக்கி விட்டவுடன் சமநிலைக்கு வருவதற்கு எவ்வாறு அவரது மகள் அவரது கால்களை கட்டிக் கொள்வாள் என்பதை அவர் அன்புடன் நினைவுகூர்ந்தார். இந்த நினைவுகளே திலீப்பிற்கு இந்த இரவு நேர பயணத்தில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதற்கான வலிமையை தந்தது.

பல நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் ஊக்கமும் நாளுக்கு நாள் குறையத்துவங்கியது, மராத்தியில் முதல் அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சியில் அழுகையே வந்தது. “மகாராஷ்டிரா!” என்று யாரோ ஒருவர் மகிழ்ச்சியுடன் கத்துவதை அவர் கேட்டார். அவர்களது வீடுகள் வெகு தொலைவில் இருந்தாலும் தங்களது மாநிலத்திற்கு வந்து சேர்ந்ததற்கே அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாக்பூர் நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலை எண் 44யை சுற்றியுள்ள வயல்வெளிகளில் தூங்குவதற்கு முன்பு வந்து சேர்ந்தனர்.

திலீப் கண்களைத் திறந்து பார்த்தபோது குவளையில் பாலை வைத்துக் கொண்டு ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

பல நாட்களாக நடந்து அவர்களது செருப்புகள் தேய்ந்ததால் ரோட்டின் சூட்டினை அவர்களின் பாதங்களில் உணர முடிந்தது

அருண் அவர் எழுந்திருக்கும் வரை பொறுமையாக காத்திருந்தான். அவரை தொந்தரவு செய்ய அவன் விரும்பவில்லை. அருணின் தாய் அருணின் கையில் சிறிய வாளியில் பாலுடன் சில கண்ணாடி குவளைகளை போட்டு வயலில் உறங்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு கொடுக்கும்படி கொடுத்து அனுப்பியிருந்தார்.

அன்று காலை அவரது தந்தை டீக்கடைக்கு அருகில் 17 ஆண்கள் உறங்கிக் கிடப்பதை கண்டார். அருணின் பெற்றோர் காரிப் பருவத்தில் கோண்டியாவில் உள்ள வயல்களில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் பருவம் முடிந்து விவசாய வேலைகள் இல்லாமல் போகும்போது வருடத்தின் மீதி நாட்களில் அவர்கள் நாக்பூரில் தங்கியிருக்கின்றனர் மேலும் அங்கு பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் பயணிகளுக்காக ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து வியாபாரம் மிகவும் மெதுவாக செல்வதை அருண் கவனித்து வந்தான். அவனின் தாய் செய்யும் டீயுடன், ஜவ்வரிசி வடை மற்றும் உப்புமாவை ருசிப்பதற்கு பேருந்தில் இருந்து வரும் பயணிகள் மற்றும் காரில் செல்பவர்களும் நிறுத்தி சாப்பிட்டு செல்வதை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கண்டிருக்கிறான். ஆனால் இப்போது இந்த வழியாகச் செல்வது போலீசின் வாகனம் அல்லது காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் மட்டுமே.

இருப்பினும் இன்று காலை சற்று வித்தியாசமானது. இத்தனை ஆண்டுகளில் அருண் தங்களது கடைக்கு அருகில் இருக்கும் வயலில் அந்நியர்கள் யாரும் உறங்கி கண்டதில்லை. அவர்கள் ஒவ்வொருவராக விழிக்க துவங்கினார். அருண் சுற்றுமுற்றும் பார்த்தான் அந்த நபர்களின் ஆடைகள் கரை பட்டு சேறும் சகதியுமாக இருப்பதையும் அவர்களின் கால்கள் வீங்கி இருப்பதையும் அவர்கள் பாதத்தில் தூசி படிந்திருப்பதையும் அவன் கண்டான். அவர்களது செருப்புகளும் அறுந்து போனதால் அவர்களில் பலருக்கு பாதங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு பார்ப்பதற்கே மிகவும் ரணமாக இருந்தது.

அருண் (ஊதா நிற சட்டையில் இருப்பவர்) மற்றும் அவரது அண்ணன் தங்களது அம்மா அப்பாவிற்கு டீக்கடையில் உதவியாக இருந்தனர். இந்த பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் பயணிகளுக்கு ஜவ்வரிசி வடை, உப்புமா மற்றும் டீ ஆகியவற்றை இவர்கள் செய்து வழங்கி வந்தனர்

அருண் தனக்கு எதிரில் இருக்கும் மனிதரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “என் பெயர் அருண். எனக்கு 11 வயதாகிறது. நீங்கள் யார்?”

“நான் திலீப்,” என்று அந்த நபர் சோர்வாக கூறினார்.

“திலீப் மாமா, அம்மா உங்கள் அனைவருக்கும் கொஞ்சம் பால் கொடுத்து அனுப்பியுள்ளார். நீங்கள் தயாராக இருக்கும்போது கடைக்கு வரலாம் அல்லது என்னை அழைக்கலாம். நான், அம்மா உங்கள் அனைவருக்கும் டீ மற்றும் வடை செய்வதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு எங்களது கடைக்கு நிறைய பேர் வரவே இல்லை.”

திலீப் அந்தப் பையனை நோக்கி தலையசைத்து மெதுவாக சிரித்தார்.

அருண் மீண்டும் கடைக்குச் சென்று மங்கேஷ் அண்ணனின் சட்டையை இழுத்தான். அவன் அவரிடம் இவர்கள் அனைவரும் எங்கிருந்து வருகிறார்கள் ஏன் இவ்வளவு களைப்பாக இருக்கிறார்கள்? என்று கேட்டான்.

நமது அம்மா அப்பா விவசாய பருவத்திற்கு பிறகு கோண்டியாவை விட்டு
நாக்பூர் நகருக்கு டீக்கடை வைப்பதற்கு வருவதை போல நாடு முழுவதும் இதுபோன்ற பலர் வேலை தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பணி செய்ய வேண்டியுள்ளது. இன்று நாம் பார்த்த அந்த நபர்கள் அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கின் காரணமாக அவர்கள் தங்களது வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இனி வரவிருக்கும் நாட்களில் இவர்களைப் போன்ற பலரை நாம் எதிர்பார்க்கலாம் என்று அவனது அண்ணன் கூறினார்.

“இன்னும் பல நபர்களா? உனக்கு எப்படி தெரியும், அண்ணா?”

“ஆண், பெண் மற்றும் சிறு குழந்தைகள் கூட! நான் அதை என் தொலைபேசியில் வந்த செய்திகளில் பார்த்தேன்,” என்று மங்கேஷ் பதிலளித்தார்.

அருண் தனது அண்ணனிடம் மேலும் கேள்விகள் கேட்பதற்கு முன் அவர்களது அம்மா அவரை அழைத்தார் மேலும் அவர் டீ தயாரிப்பு மற்றும் வடையை பொட்டலம் போடுவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

மறுநாள் மக்கள் தொடர்ந்து நடந்து வருவதை அருண் தனது கண்களால் வியந்து பார்த்தான். அவன் சிறு குழந்தைகள் தங்களது தாய் மற்றும் தந்தையின் தோளில் அமர்ந்து கொண்டும், வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் சிரமப்பட்டு நடந்துவருவதையும் மேலும் பலர் லாரியின் பின்புறத்தில் இடித்துக் கொண்டு பல மணி நேரம் நின்று கொண்டு வருவதையும் பார்த்தான். அருண் பார்க்கும் திசையெல்லாம் துயரமும் சோர்வும் தான் நிறைந்து கிடந்தது.

அவர்கள் தங்களது சுமையை வெகுவாக குறைத்திருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு இந்த உடைமையும் பாறை போல கணக்க துவங்கியது. ரயில் தண்டவாளத்தின் ஓரங்களில் சில மக்கள் தங்களது உடைமைகளை கீழே எறிந்து விட்டுச் சென்றனர் ஏனென்றால் அதை தூக்கி செல்வதற்கு அவர்களுக்கு வலிமை இல்லை

இரண்டு இளைஞர்கள் தங்கள் சைக்கிளில் வந்தபோது அம்மா அவர்கள் மீது பிரியமாக இருந்தார் ஏனென்றால் அவர்கள் மங்கேஷ் அண்ணாவின் வயதை ஒத்திருந்தனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்புவதற்கு ஏதேனும் போக்குவரத்து வசதி கிடைக்குமா என்று பார்ப்பதற்காக சில நாட்கள் எங்களது கடைக்கு அருகில் இருக்கும் வயலிலேயே தங்கி காத்திருப்பதாக என் அம்மா அப்பாவிடம் தெரிவித்தனர். அவர்களது பெயர் ஈஸ்வரன் மற்றும் ஆஷீஸ். அவர்களுடன் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த அருண் தனது அண்ணனை போலவே அவர்களும் இளவயதில் கடுமையாக உழைத்து படித்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டான். ஈஸ்வரன் பொறியியல் படிப்பு படித்திருந்தார், ஆஷிஷ் எம் பி ஏ பட்டம் பெற்றிருந்தார். “இதை நாங்கள் படித்ததற்கு காரணமே எங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், எங்களது பெற்றோரை பார்த்துக் கொள்ள முடியும்,” என்பதுதான் என்று கூறினார் ஈஸ்வரன். ஆனாலும் கோவிட் பெருந்தொற்று வந்ததால் நாங்கள் எங்களது வேலையை இழந்துவிட்டோம். எங்களை விட்டு தொலை தூரத்தில் இருப்பதால் எங்களது பெற்றோர் கவலைப்படுவதால் எங்களை வீடு (பந்த்ரா, மஹாராஷ்டிரா) திரும்பும் படி அவர்கள் கூறினர்”.

அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அருண், பிறகு அவர்களிடம் அவர்களது சைக்கிளில் தான் ஒரு சவாரி செய்ய முடியுமா என்று கேட்டான். இதற்கு முன்பு அவன் பெரிய சைக்கிள் ஓட்டியதில்லை ஏனென்றால் அவனுக்கு கால்கள் எட்டாது. ஆஷிஷ் சைக்கிளை பிடித்துக்கொள்ள அருண் சைக்கிளை மிதித்தான். அதன்பிறகு ஒரு சிறிய சறுக்கில் அருண் இருக்கையில் அமர்ந்தபடி சைக்கிள் ஓட்டுவதற்கு விட்டுவிட்டார் ஆஷிஷ். பள்ளியிலிருந்து திரும்பும்போது சிலர் சைக்கிளில் செல்வதையும், சிலர் நடந்து செல்லும்போது விளையாட்டுத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிளிலேயே பின்சட்டில் ஏறி அமர முயற்சிப்பதையும் நினைத்து அருண் சிரித்தான்.

“ஆஷிஷ் அண்ணா, நான் பள்ளியில் இருந்து எனது நண்பர்களுடன் நடந்தே வீட்டிற்கு செல்வதை தான் விரும்பினேன். வீட்டில் இருந்து பள்ளி வெகு தொலைவில் தான் இருக்கிறது ஆனால் நண்பர்களுடன் இருக்கும்போது நேரம் செல்வதே தெரியாது. திரைப்படங்களில் வருவதைப்போல உங்களது பயணம் மிகவும் சாகசமாக இருந்திருக்கும் இல்லையா?” என்று அருண் பொறாமையுடன் கேட்டான்.

“அப்படி இருந்திருக்கலாம் என்று தான் நானும் விரும்பினேன், அருண்,” ஆஷிஷ் அண்ணா மெதுவாக கூறினார். “ஆனால் உண்மை என்னவென்றால் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் நாங்கள் சோர்வடைந்து விட்டோம். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு கூட எங்களிடம் தெம்பு இல்லை. எங்களுக்கு இந்த சாலைகளும் சரியாக தெரியாது இரவு நேரத்தில் இந்த சாலைகளில் வெளிச்சமும் கிடையாது. ஒவ்வொரு இரவும், நாங்கள் இருளில் சைக்கிள் ஓட்டும் போது, நினைத்ததெல்லாம் நாங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்று எங்களது பெற்றோரை மீண்டும் சந்திப்போமா என்பதைப் பற்றித்தான்.”

அவர்கள் மீண்டும் டீக்கடைக்கு நடந்து சென்றபோது அருண் தனது பள்ளியில் விளையாட்டுபாட வேளையைப் பற்றி நினைத்துக்கொண்டான். அந்த நாட்களில் வீடு திரும்புவதற்கே அவனுக்கு சோர்வாக இருக்கும். அவன் வீட்டிற்கு திரும்பி வந்த பிறகு மணிக்கணக்கில் தூங்கும் அளவிற்கு அவனது கால்கள் எப்படி கனமாக இருக்கும் என்பதை அவன் நினைவு கூர்ந்தான். சில நேரங்களில் அவனது அம்மா அவனுக்கு கால்களை பிடித்து விடுவார், ஈஸ்வரன் மற்றும் ஆஷிஷ் தனியாக இவ்வளவு தூரம் தொடர்ந்து சைக்கிளில் பயணம் செய்வது எத்தனை தனிமையாகவும், பயமாகவும் இருந்திருக்கும் அதுவும் ஆற்றுப்படுத்த பெற்றோரும் கூட இல்லாத சமயத்தில் என்பதை எண்ணி வியந்தான் அருண்.

ஒரு நாள் மாலை வேளை, அனைவருக்கும் உணவு பரிமாறிய பிறகு அம்மா தனது இரவு உணவுடன் வந்து மங்கேஷ் அண்ணா மற்றும் இந்த இரண்டு அண்ணாக்களுடன் அமர்ந்துகொண்டார்.

“ஈஸ்வரன், நீ எந்தப் பெரிய நகரத்தில் இருந்து திரும்பி கொண்டு இருக்கிறாய்?” என்று அம்மா அவரிடம் கேட்டார்.

ஈஸ்வரன் சிரித்துக்கொண்டே “பெரிய நகரம் எதுவும் இல்லை அம்மா,” என்று பதிலளித்தார். நாங்கள் பந்த்ராவில் இருந்து இங்கு வந்திருக்கிறோம். பெரிய நகரங்களில் பட்டப் படிப்பு படித்திருந்தால் கூட நமக்கு கடை பணியாளர் அல்லது காவலாளி வேலை தான் கிடைக்கும். எனது அம்மாவும் அப்பாவும் சிரமப்பட்டதைப்போல நானும் சிரமப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் எனது அம்மா நான் பொறியியல் படிக்க வேண்டும் என்று விரும்பினார்.”

அம்மா கவலையுடன் காணப்பட்டார். “அவர்களும் எங்களை போலவே வயல்களில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத் தான், நான் மங்கேஷ் மற்றும் அருண் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் கூட எனக்கு கிடைக்கக் கூடிய அதிகபட்ச கூலி 250 – 300 ரூபாய் தான். இது போதாது,” என்று அவர் பெருமூச்சுடன் கூறினார்.

“அம்மா, நாங்கள் இருவரும் பந்த்ரா நகரில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தோம் இப்போது கர்நாடகாவில் உள்ள பிதாரின் தொழிற்பேட்டையில் தங்கிருக்கிறோம். திட்ட மேலாளர் மற்றும் தொழிற்சாலை கணக்காளர் என்று நல்ல வேலையில் தான் இருக்கிறோம்,” என்று ஆஷிஷ் அண்ணா பதிலளித்தார்.

ஈஸ்வரன் தலையைத் தாழ்த்தியபடி, “ஊரடங்கில் நாங்கள் வேலையை இழந்ததால் வீட்டிற்கு பணம் அனுப்புவதற்கு ஏரி மற்றும் கால்வாய்களில் இருந்து மணலை அப்புறப்படுத்தும் வேலையை கூட செய்தோம்,” என்று கூறினார்.

அம்மா தலையை ஆட்டியபடியே தனது தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தார். ஒரு பதட்டமான புன்னகையுடன், “உங்களது பெற்றோர் உங்களை மகன்களாக பெற்றதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பு மங்கேஷிற்கு படிப்பதற்கு வழிகாட்டுங்கள். அவன் விரைவில் பள்ளி இறுதி ஆண்டிற்கு செல்ல இருக்கிறான் மேலும் உங்கள் இருவரை போலவே அவனும் ஒரு நாள் பட்டதாரி ஆகிவடுவான் என்று நம்புகிறேன். உங்களுக்கும் இனி வரும் காலம் நல்லதாக இருக்கும்,” என்று கூறினார்.

அம்மா சென்ற பிறகு அந்த மூன்று அண்ணன்களும் பொறியியல் பற்றி ஏதோ விவாதிக்க ஆரம்பித்தனர், அருணின் மனது அவனது பள்ளி குறித்த சிந்தனையில் சென்றது. அவன் விரைவில் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்பினான் , சென்று அவர்களிடம் தான் மங்கேஷ், ஈஸ்வரன் மற்றும் ஆஷிஷ் அண்ணா ஆகியோரை போல புத்திசாலி என்று காட்ட விரும்பினான்.

மறுநாள் அதிகாலையில், கவோலி என்கிற பால் விற்பனை செய்யும் சமூகத்தைச் சேர்ந்த பரம் மாமாவிடம் பெற்ற பால் கேனை அருணும் மங்கேஷும் உருட்டிக்கொண்டிருந்தனர். ஊரடங்கின் காரணமாக சந்தைகள் மூடப்பட்டதால் பால் வாங்குவதற்கு யாரும் இல்லை அதனால் மாட்டிலிருந்து கரந்த பாலை அவர் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அவர் இந்தப் பால் தங்களது வீடுகளுக்கு திரும்பும் மக்களுக்காக பயன்படட்டும் என்று யோசித்து அப்பாவிடம் சில கேன் பாலை நடந்து செல்லும் நபர்களுக்கு டீ தயாரிப்பதற்காக தினமும் கொடுத்து வருகிறார்.

அருண் சுற்றிப் பார்த்த போது, சுமார் 40 செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் மேய்வதை
கண்டான். அவன் தன் அண்ணனிடம் அவர்கள் ஆடுகளை முந்த முடியுமா என்று கேட்டபடி பால்கேனை வேகமாக உருட்ட ஆரம்பித்தான். அருண் அருகில் வந்ததும்தான் அவர்களிடம் இரண்டு குதிரைகளை உடைமைகளை தூக்குவதற்கு வைத்திருக்கிறனர் என்பதை அறிந்தான். அருண் இதற்கு முன்பு குதிரைகளை பார்த்ததே இல்லை.

கவோலி என்கிற பால் விற்பனை செய்யும் சமூகத்தைச் சேர்ந்த பரம் மாமாவிடம் பெற்ற பால் கேனை அருணும் மங்கேஷும் உருட்டிக்கொண்டிருந்தனர்

அவன் அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் மேலும் அவர்களிடம் தங்களது கடையில் நின்று இளைப்பாறி செல்லும்படியும் கூறினான். அவர்களில் ஒருவர் தன்னை பரமேஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“நீங்களும் புலம்பெயர்ந்து வீட்டிற்குத் திரும்பும் நபரா?” என்று அருண் கேட்டான். அவனின் அண்ணன் வேலைக்காக வேறு இடத்திற்குச் சென்று தங்கியிருக்கும் நபர்களைக் குறிக்கும் இந்த புதிய வார்த்தையை கற்றுக்கொடுத்தார்.

பரமேஷ் சிரித்துக்கொண்டே “எங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு வீடு இல்லை,” என்று கூறினார்.

அருண் வியந்து, “எப்படி வீடு இல்லாமல் இருக்கும்?” என்று கேட்டான்.

பரமேஷும் அவர்களுடன் வந்திருக்கும் மற்ற குடும்பத்தினரும் தங்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நாடு முழுவதும் சுற்றித் திரிந்து செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை விற்கும் சமூகத்தினர் என்றும் கூறினார்.

“நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள் அல்ல, நாடோடிகள்,” என்று சிரித்துக்கொண்டே பரமேஷ் கூறினார்.

இன்னொரு புதிய வார்த்தை என்று அருண் தனக்குள்ளே நினைத்துக்கொண்டான்.

“ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் நாங்கள் நாக்பூர் வழியாக தான் செல்வோம் ஆனால் இந்த ஆண்டு சில கிராமவாசிகள் இந்த புதிய நோய்க்கு பயந்து எங்களை உள்ளே நுழைந்து ஆடுகளை விற்க அனுமதிக்கவில்லை.”

“ஆனால் நீங்கள் உங்களது கால்நடைகளை விற்கவில்லை என்றால், உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்?” என்று அருண் கேட்டான்.

“எங்கள் பயணங்களில் நாங்கள் சந்திக்கும், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் போன்ற எங்கள் கஷ்ட காலங்களில் எங்களை கவனித்துக் கொள்ளும் நபர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வருடம் பசியுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படாதபடி நாங்கள் விற்பனை செய்வோம்,” என்று நம்புகிறோம் என்றார் பரமேஷ்.

அவர்கள் மீண்டும் டீக்கடைக்கு திரும்பினர், அங்கு டீ மற்றும் காலை உணவு சாப்பிடுவதற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மங்கேஷ் மற்றும் ஈஸ்வரன் அண்ணா கடையில் இருக்கும் ட்ரான்சிஸ்டரை சரி செய்வதில் மும்முரமாக இருப்பதை அருண் பார்த்தான். அப்பா தினமும் காலையில் அதைக் கேட்டுக் கொண்டிருப்பார், ஆனால் சமீப காலமாக அது சரியாக வேலை செய்வதில்லை. ஈஸ்வரன் அண்ணா பொறியாளர் என்பதால் உதவ முன்வந்தார்.

அருண் தனது கைகளில் நான்கு உணவு தட்டுகளை ஏந்தியபடி தன் அண்ணனைப் போல தனக்கும் இங்கு வரும் மக்களில், ஒரு நண்பர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினான். பின்னர் அதுவே நடக்கவும் செய்தது.

முதலில் அங்கு வந்து சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களில் பலர் அன்று மாலை புறப்பட்டனர். திலீப் மாமா கடைக்கு வந்து அருணின் தலையில் தடவிக் கொடுத்து அவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் தாங்கள் ஓய்வெடுக்கும் போது தங்களை நன்கு கவனித்துக் கொண்டதற்கு நன்றி கூறினார். அவர்கள் அங்கு சில நாட்கள் தங்கியிருந்து ஏதேனும் பேருந்தோ அல்லது வாகனமுமோ தங்களது கிராமத்தை நோக்கிச் செல்கிறதா என்று பார்த்தனர் ஆனால் அவர்களுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் தங்களது வீடுகளை நோக்கி மீண்டும் நடக்கத் துவங்கினர். அருண் திலீப் மாமா மற்றும் பிறரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு, இப்போது புதியதாக வந்திருப்பவர்களுக்கு தட்டுகளை எடுத்து வைத்தான்.

அருண் அப்படி ஒரு குடும்பத்தினருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது தன் வயது ஒத்த சிறுமி புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்தான். அவர்களுக்கு தட்டை வைத்து விட்டு வெட்கத்துடன், அந்தச் சிறுமி இவனை கவனிப்பாள் என்று அவன் அங்கேயே நின்றான். அவள் அவனை கடைசியாக பார்த்து, தன் அருகில் வந்து அமரும்படி அழைத்தாள். ஒருவேளை அந்தச் சிறுமியும் இவனைப் போல ஒரு நண்பனை தேடிக் கொண்டிருக்கலாம் என்று அருண் நினைத்தான். அவர்கள் பேச ஆரம்பித்தனர், அச்சிறுமி தன்னை சஷ்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

அருண் அப்படி ஒரு குடும்பத்தினருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது தன் வயது ஒத்த சிறுமி புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்தான்

தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் தனது 9 வயது மகளை எப்படி தனது தாயின் தோழி இழந்தார் என்பதை கூறிக்கொண்டிருந்தாள். வெயிலில் நீர்ச்சத்து குறைந்து மயங்கி விழுந்த குழந்தை திரும்பி எழுந்திருக்கவே இல்லை. அருண் அமைதியாக இருந்தான். தன்னை விட வயதில் இளைய குழந்தை இறந்து போய்விட்டாள், இனி அவளால் விளையாடவோ பள்ளிக்குச் செல்லவோ முடியாது என்பது அருணை பயமுறுத்தியது.

“மக்களுக்கு ஊரடங்கிற்கு தங்களை தயார் செய்துகொள்வதற்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் அச்சிறுமி உயிருடன் இருந்திருப்பாள் என்று என் அம்மா கூறினார்,” என்று சஷ்டி கூறினாள்.

அருண் தலையசைத்தபடியே, “ஏன் அவர்களுக்கு தயார் செய்வதற்கு நேரம் வழங்கப்படவில்லை? ஏன் அன்று இரவு தான் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது?” என்று கேட்டான்.

“எனக்குத் தெரியாது,” என்று சஷ்டி கூறினாள். “நம்மைப் போன்ற பெருநகரங்களில் வசிக்காத மக்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை என்று என் அம்மா கூறினார்”.

தான் வரைந்த வரைபடத்தில் வர்ணம் பூச சஷ்டி தனது புத்தகத்தை எடுப்பதை அருண் கவனித்தான். அவனுக்கு வர்ணம்பூச ஆசையாக இருக்கிறதா என்று கேட்டாள், அவனும் அவளுடன் சேர்ந்து வர்ணம் பூச இருக்கையில் அவனது அம்மா அவனை தனக்கு உதவி செய்ய அழைத்தார்.

“பிறகு வா,” என்று சஷ்டி புன்னகையுடன் கூறினாள். “உனக்காக நான் மஞ்சள் வர்ணப் பகுதியை மீதி வைத்திருக்கிறேன் என்று கூறினாள்,”

அருண் டீக்கடைக்கு திரும்பிய போது தனது அண்ணன் தனது ஆசிரியரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான்.

“சார், நான் இங்கு டீயையும் சிற்றுண்டியையும் கொடுக்க வேண்டும், ஆனால் என்னிடம் இயர்போன் இருக்கிறது வேலை செய்து கொண்டே உங்களது பாடங்களையும் கவனிக்கிறேன்,” என்று அவனது அண்ணன் கூறிக்கொண்டிருந்தார்.

அருணுக்கு தெரியும் தனது அண்ணன் பகல் முழுதும் வேலையும் பார்த்துக்கொண்டு படிக்கவும் செய்வதால் சோர்வாக இருக்கிறான் என்று, ஆனால் அவனது பெற்றோர் பள்ளியுடனான அவனது தொடர்பு முக்கியம் என்று கூறினர். அவன் தனது நண்பர்களுடன் ஓடித்திரிவதையும், ஒவ்வொரு நாளும் புதியதாக எதாவது கற்றுக்கொள்வதையும் தவறவிட்டதை எண்ணி வருந்தினான். இவனது ஆசிரியர்களும் ஆன்லைன் வகுப்பு நடத்துகின்றனர் ஆனால் வீட்டில் ஒரே ஒரு ஸ்மார்ட் போன் மட்டுமே இருப்பதால் அண்ணன் மூத்தவன் என்பதால் அவனுக்கே அதிகம் தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அருண் மற்ற நாட்களை விட அன்று விரைவாக வேலை செய்து முடித்தான். அவன் விரைந்து சென்று சஷ்டியுடன் வரைபடத்தில் வர்ணம் பூசுவதில் ஆர்வமாக இருந்தான், இறுதியாக அவனுடன் பேசுவதற்கு அவன் வயதை ஒத்த ஒரு தோழி கிடைத்ததில் அவன் உற்சாகமாக இருந்தான். அவன் கடையை சுத்தம் செய்து முடித்துவிட்டு, தனது தோழியைப் பார்க்க வயலுக்கு விரைந்து சென்றான்.

“ஏன் நீ வரைபடத்தில் வர்ணம் பூசுகிறாய்?” என்று அருண் கேட்டான்.

சஷ்டி தனது பையைத் திறந்து அதிலிருந்து பல வகையான புத்தகங்களை எடுத்தாள். ” எனது ஆசிரியர் எனக்கு நான் பள்ளியில் படிக்க முடியாத காலத்தில் வாசிக்க பல்வேறு வகையான வேடிக்கையான புத்தகங்களைக் கொண்ட ‘ஹேப்பி பாக்சை’ எனக்கு கொடுத்தார். அதில் ஒரு புத்தகத்தில் வரைப்படம் வரைவது ஒரு செயல்பாடாக கொடுக்கப்படிருக்கிறது,” என்றாள்.

அவளுடைய ஆசிரியர் சுற்றுப்புறத்தின் வரைபடத்தை வரையும் படி கேட்டிருக்கிறார், அதனால் அவள்
பெற்றோர் வேலை செய்யும் பகுதியின் வரைபடத்தை வரைந்ததாக அவனிடம் கூறினாள். அவள் நிறைய காட்டுவிலங்குகள் சூழப்பட்ட பகுதியில் வேலைசெய்ததை எண்ணி அருண் ஆச்சரியப்பட்டான். சஷ்டி தனது பெற்றோர் மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் வேலை செய்ததாக கூறினாள். அவள் ஒரு முறை சிறுத்தையை பார்த்திருப்பதாகவும் அவளைப் பார்த்ததும் அது ஓடி விட்டதாகவும் கூறினாள். அருண் பெருமூச்சுடன் சிறிது நாட்களுக்கு முன்புதான் தான் குதிரையை பார்த்ததாகக் கூறினான்.

அவர்கள் இருவரும் தாங்கள் பள்ளிக்குச் செல்லாமல் எவ்வாறு வருந்துகின்றனர் என்று பேசிக் கொண்டனர். ஏனென்றால் அவர்களின் பெற்றோர் வேலைக்காக ஒவ்வொரு இடமாக மாறி கொண்டிருந்தனர் அதனால் இருவராலும் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கு மற்றும் இந்த வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக்கு செல்வது தொலைதூரக் கனவாகிவிட்டது.

“நான் எனது புத்தகத்தில் பதில்களை அழித்து சில நாட்களுக்குள் அவற்றை மறக்க முயற்சித்து பிறகு மீண்டும் பதிலளிக்க முயற்சிக்கிறேன் இதன் மூலம் என்னை நானே சோதனை செய்துகொள்கிறேன்”, என்று தான் எவ்வாறு படிப்புடன் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறான் என்பதை அருண் அவளிடம் கூறினான்.

அருண் மற்றும் சஷ்டி இருவரும் இணைந்து புதிருக்கு விடை கண்டனர், அதன்பிறகு சஷ்டி ஒரு கதையை சத்தமாக வாசித்தாள் அவன் அவள் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து கதையைக் கேட்டுக் கொண்டிருந்தான். “சுவையான உணவை சமைப்பவரை குறிக்கும் நான்கு எழுத்து வார்த்தை என்ன?” என்று குறுக்கெழுத்து பகுதி வினாவை சஷ்டி வினவினாள்.

அருண் மற்றும் சஷ்டி இருவரும் இணைந்து புதிருக்கு விடை கண்டனர், அதன்பிறகு சஷ்டி ஒரு கதையை சத்தமாக வாசித்தாள் அவன் அவள் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து கதையைக் கேட்டுக் கொண்டிருந்தான். சுவையான உணவை சமைப்பவரை குறிக்கும் நான்கு எழுத்து வார்த்தை என்ன? என்று குறுக்கெழுத்து பகுதி வினாவை சஷ்டி வினவினாள்.

“அப்பா,” என்று அருண் நம்பிக்கையுடன் பதிலளித்தான்.

சஷ்டி சிரித்துகண்டே ‘சமையல்காரர்’ என்று கூறினாள்.

ஒருமுறை ஓய்வெடுத்த பிறகு, சஷ்டியும் அவளது தாயும் கிளம்பும் நேரம் வந்தது மேலும் அவர்களின் அதிர்ஷ்டம் அவர்களது கிராமத்திற்கு திரும்புவதற்கு ஒரு பேருந்து அவர்களுக்கு கிடைத்தது. வீடு திரும்பும் புலம்பெயர்ந்தோர் பற்றிய செய்தி இறுதியாக அரசாங்கத்தின் கவனத்தை பெற்றது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு பேருந்து மற்றும் ரயில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் பந்த்ராவில் இருக்கும் தங்களது வீட்டிற்கு தங்களது சைக்கிளில் பயணத்தை ஏற்கனவே துவங்கிவிட்டனர். பரமேஷ் மாமா தனது குதிரைகளுக்கு சுற்றுப்புறத்தில் தீவனங்கள் குறைந்ததால் அவரும் தனது குதிரைகளுடன் கிளம்பிவிட்டார்.

அம்மா அருணை அடுத்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு சாப்பிடுவதற்கு தட்டினை வைக்கும் படி கூறினார், ட்ரான்சிஸ்டரும் அதிர்ந்தது.

அப்பா ஆவி பறக்கும் டீயை குவளையில் ஊற்றியபடி டிரான்ஸிஸ்டரின் ஒலியை அதிகரித்தார். துலே என்கிற இளைஞன் ஒரு ராப் பாடலை இசைப்பதை கேட்க முடிந்தது. துலையின் காணொலியை தனது போனில் அருணுக்கு அவனது அண்ணன் காட்டினான். அந்தப் பாடல் சமீபத்தில் இணையதளத்தில் வைரல் ஆனது என்று அருண் கூறினான். “அதாவது அவர் இப்போது பிரபலமாகிவிட்டார் நிறைய மக்களுக்கும் அவரது பாடல்கள் தெரிகின்றன,” என்று அண்ணன் விளக்கினார்.

அப்பா ஆவி பறக்கும் டீயை குவளையில் ஊற்றியபடி டிரான்ஸிஸ்டரின் ஒலியை அதிகரித்தார். துலே என்கிற இளைஞன் ஒரு ராப் பாடலை இசைப்பதை கேட்க முடிந்தது

துலே, டியூசன் ஆசிரியர், கட்டுமான தொழிலாளி மற்றும் ஒடிசாவின் கலகண்டியைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர், வீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் வலியைப் பற்றி கோபமாக அவரது பாடல் இருந்தது.

அரசாங்கமே, தயவுசெய்து பதில் கூறு !

அரசாங்கமே, பதில் கூறு!

ஓ அரசாங்கமே! பதில் கூறு!

பதில் கூறு!

கர்பிணி பெண்கள் ஏன் திரும்புகின்றனர்,

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடக்கின்றனர்

அடி மேல் அடி வைத்து வெறுங்காலுடன்

ஒரு குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு?

அருண் அந்த பாடலை கேட்ட போது, லாரியில் ஏறி வந்த ஒரு கர்ப்பிணி பெண்ணின் நினைவு அவனுக்கு வந்தது. அவருக்கு தனியாக நிற்க கூட முடியவில்லை மிகவும் பலவீனமாக இருந்தார்.

வீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் டீயும் வழங்கி கடந்த ஒரு வாரத்தை போக்கினான் அருண். அண்ணன் கூறியது சரிதான் ஒவ்வொரு காலையும் எழுந்திருக்கும்போது
நள்ளிரவில் நாக்பூருக்கு வந்து சேர்ந்த புதுமுகங்கள் பலவற்றை நாங்கள் பார்க்கிறோம். ஒருநாள் வானலியில் மாலை செய்திகள் வந்தபோது அருணின் அண்ணன் அவனுக்கு எப்படி எல்லா பெரிய நகரங்களும் முதல் முறையாக காலியாகவும் அமைதியாகவும் இருக்கிறது என்று கூறினார். தேசிய நெடுஞ்சாலை 44ல் இரவு கவிழ்கிறது தெருவிளக்குகள் எரியத் தொடங்கியது. இது எல்லாம் எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்று அருண் யோசித்தான். பெருநகரங்களில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருக்கின்றனர், நாக்பூரில் இருக்கும் இவர்களது டீக்கடைக்கு வெளியேயும் நாட்டிலும் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை முடிவில்லா தூரத்திற்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது மொத்த வாழ்வையும் தங்களது முதுகில் சுமந்தபடி நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு ஊரடங்கு, ஆனால் மொத்த நாடும் நடந்து கொண்டிருக்கிறது.

பாரி கல்விக்குழுவின் குறிப்பு:

2019 ஆம் ஆண்டின் இறுதியில் மனிதர்களுக்கு பரவும் சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற புதிய கொடிய நோய் கண்டறியப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு அந்த நோய் இந்தியாவிற்கும் வந்து சேர்ந்தது மேலும் மார்ச் 2020ல் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது

2020 மார்ச் 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தார். வெறும் நான்கு மணி நேர அறிவிப்பில் முன்களப் பணியாளர்களைத் தவிர அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

தோராயமாக மூன்றில் ஒரு இந்தியர் அல்லது மொத்த மக்கள் தொகையில் 45.36 கோடி மக்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் – தங்களது வீடுகளை விட்டு வேலைக்காக பிற இடங்களுக்கு செல்பவர்கள். பெரும்பாலான இந்தியர்கள் தங்களது நிலத்தில் வேலை செய்கின்றனர் ஆனால் கடந்த சில தசாப்தங்களாக விவசாயம் செய்வது விலை உயர்ந்ததாகி வருக்கிறது – விதை, உரம், பூச்சிக்கொல்லி, மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் விலை விவசாயி ஒருவர் தனது அறுவடையில் இருந்து சம்பாதிப்பதை விட அதிகம். அவர்கள் தங்களது வயல்களை விட்டுவிட்டு பிற வேலை தேடி அடுத்தவர்களின் வயலுக்கு அல்லது பெரு நகரங்களுக்கு புலம்பெயர வேண்டியுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள், கட்டிட பாதுகாவலர்கள், பழம் மற்றும் காய்கறி விற்பவர்கள், சமையல்காரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் – இத்தகைய மக்களாகத் தான் நம்மை சுற்றி அவர்களை பார்க்கிறோம்.

2020 மார்சிலிருந்து அவர்கள் தாங்கள் வேலை செய்த நகரங்களில் சிக்கி தவித்தனர் – அவர்களால் வேலைக்கும் வெளியே செல்ல முடியவில்லை தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியும் இல்லை. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் விரைவாக வெளியேற முயற்சித்தவர்கள் அல்லது தப்பிக்க முயற்சித்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்கள் வரை கால்நடையாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவது இந்தியாவின் நவீன வரலாற்றில் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக கூறப்படுகிறது. பலர் வழியிலேயே வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக இறந்தனர். முதலில் தங்களது கிராமங்களை அடைந்தவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்களது அண்டை வீட்டுக்காரர்கள் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருக்குமோ என்று எண்ணி பயந்தனர். வீட்டிற்கு சென்று சேர்ந்தவுடன் சம்பாதிப்பது எப்படி என்ற கவலை தொற்றிக் கொள்கிறது: கிராமத்தில் வேலை இல்லை – அதனால் தான் முதலில் அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலையே ஏற்பட்டது.

மேற்கண்ட சிறுகதை பாரியில் வெளியிடப்பட்ட பின்வரும் கதைகளை அடிப்படையாகக் கொண்டது :

‘It was as if the entire country was walking’
Labouring to a Degree in the fields of Bidar
Leaving farms in search of jobs that don’t exist
‘We don’t have a home to stay at home’
Online classes, offline class divisions
The ‘Happy Box’: learning delivered
With rhyme and reason – rap song for migrants
Homeward bound through the centre of India
Vidarbha’s pastoralists paying a pandemic price

ராப்பர் துலேஷ்வர் தண்டி மற்றும் அவரது படைப்புகள் பற்றிய குறிப்பைத் தவிர மற்ற அனைத்து பெயர்கள் இடங்கள் உரையாடல்கள் மற்றும் சம்பவங்கள் ஆகியவை ஆசிரியரின் கற்பனையின் விளைவாகும்.

அகராதி

ஆய் – மராத்தியில் அம்மா

பாபா – மராத்தியில் அப்பா

தாதா – மராத்தியில் மூத்த சகோதரர் அல்லது சகோதரர் போன்ற உருவத்தை குறிக்கும் அன்பான சொல்

பாகு – மராத்தியில் ஆண் சகோதரர் அல்லது ஆண் உடன் பிறப்பிறப்பினை குறிக்கும் அன்பான சொல்

காகா – மராத்தியில் மூத்தவர், அன்பானவர், மாமாவை போன்றவர்

காக்கி – மராத்தியில் வயதான பெண் அன்பான அத்தை போன்றவர்

பத்தல் – உலர்ந்த இலைகளால் செய்யப்பட்ட கிண்ணங்கள் மட்டும் தட்டுகள்

Editor's note

ஆயுஷி சர்மா மும்பையில் உள்ள SMDT பல்கலைகழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். பாரியின் விரிவான covid-19 கவரேஜ் மற்றும் 2020 மார்ச் - ஏப்ரல் மாத புலம்பெயர்ந்தோர்களின் கதைகளின் அடிப்படையில் இந்த சிறுகதையை எழுதிய போது அவர் பாரி கல்வி குழுவில் பயிற்சியாளராக இருந்தார். ஊரடங்கு நமக்கு ஒரு கூட்டு அனுபவம் - நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ஒரே வகையான சிரமத்தை எதிர்கொண்டனர் ஆனால் உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் மக்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சிலர் நினைத்துக் கூட பார்க்க முடியாத வேதனையுடன் வாழ்ந்து வந்தனர். ஊரடங்கின் போது மக்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு மற்றும் கைவிடப்பட்டதை கவனத்தில் கொண்டு அவர்களின் துயரத்தை நேரில் பார்த்து என்ன நடக்கிறது என்ற கேள்வி கேட்கும் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் கதைகளை தொகுக்க விரும்புகிறேன். "என்னைப் போலவே இந்த கதையைப் படிக்கும் குழந்தைகளுக்கும் கிராமப்புற இந்தியாவில் வாழும் மக்களின் அனுபவங்களைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உணர்திறனைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன்." உண்மை தரவுகளை புனைவு கதைகளுடன் இணைத்தால் அது நிஜவாழ்க்கை கதைகளை வலுப்படுத்துகிறது, அது குழந்தைகளுக்கான கதையாகவும் மாறுகிறது. பாரி கல்விக்குழு ஸ்ரீ நாராயணனுக்கு இந்த பதிப்பினை உறுவாக்குவதற்கும், எடிட் செய்வதற்கும் உதவியதற்கு நன்றி கூறுகிறது.