
சத்தி மணி இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தனது வீட்டை சுற்றி ஒருமுறை பார்க்கிறார், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சோதனை செய்கிறார் : தனது முக்கியமான ஆவணங்கள், நல்ல துணிமணிகள் ஆகியவற்றை பிளாஸ்டிக் பையில் வைத்து அதை சுவற்றில் தொங்க விட்டிருக்கிறார்; தரையிலிருந்து 2 அடி உயரத்தில் இருக்கும் சிமென்ட் சிலாபில் சமைக்கும் பாத்திரங்களை வைத்து இருக்கிறார்.
எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பல நாள் அதிகாலை 2 மணிக்கு எழுந்திருக்கிறேன். துவைத்த பிறகும் போகாத கருப்பு கரைகள் மற்றும் துர்நாற்றத்தின் காரணமாக பல தலையணைகள் மற்றும் போர்வைகளை நான் இழந்திருக்கிறேன்”, என்று கேரளாவின கொச்சியில் உள்ள தேவார பெரந்தூர் கால்வாயின் ஒரு பக்கம் இருக்கும் காந்தி நகரில் பி & டி காலனியில் வசித்து வரும் 65 வயதாகும் சத்தி கூறினார்.
டிபி கால்வாய் வடக்கில் பெரந்தூர் புழாவில் இருந்து தெற்கில் தேவாரா வரை பாய்கிறது. இது நகரின் கழிமுகத்தில் சேர்வதற்கு முன்பு சுமார் 9.84 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. கொச்சி வழியாக செல்லும் ஆறு முக்கிய நீர் வழிகளில் இந்த கால்வாயும் ஒன்றாகும். மற்றவை எடப்பள்ளி கால்வாய், சிலவனூர் கால்வாய், தேவார கால்வாய் மற்றும் சந்தை கால்வாய்; எர்ணாகுளத்திலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இவற்றை நீர்வழிகளாக மாற்றி ஊக்குவிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களாக கொச்சி நகரம் அதன் மக்கள் தொகையை இரட்டிப்பாக்கி 2.1 மில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது, ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழம் கொண்ட டிபி கால்வாய் திறந்தவெளி சாக்கடையாக மாறியுள்ளது; இரண்டு இடங்களில் மெட்ரோ கட்டுமான பணிகளுக்காக அது தடுக்கப்படுகிறது, அதனால் தண்ணீர் வரத்து பாதிக்கப்படுகிறது. கால்வாய் கரையில் இருக்கும் மருத்துவமனைகள், உள்ளூர் சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதில் நேரடியாக கலக்கின்றன. சுமார் 632 குழாய்கள் மற்றும் 216 தெருவின் வடிகால்கள் நேரடியாக சாக்கடை, தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மழைநீர் ஆகியவற்றை கால்வாயில் சேர்கிறது. சில இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் கால்வாயின் அகலம் 8 மீட்டர் அளவிற்கு குறுகியுள்ளது.
சத்தியின் வீடு காந்திநகரில் உள்ள பி & டி காலனியில் இருக்கும் மற்ற வீடுகளை போலவே கால்வாய் கரையில் அமைந்திருக்கிறது – இந்த மொத்த இடமும் எர்ணாகுளம் ரயில்வே நிலையத்திற்கு பின்புறம் இருக்கிறது. இந்தக் காலனி சுமார் 250 மீட்டர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. புறம்போக்கு நிலத்தில் தற்காலிக வீட்டைக் கட்டுவது வாடகை வீட்டை விட மலிவானது என்று குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். காலப்போக்கில் அவர்கள் கூரையும் தார்ப்பாய் போட்ட வீடுகளும் கட்டுமான வீடுகளாக மாற்றப்பட்டன, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உள்ளூர் திருச்சபையால் நன்கொடையாக வழங்கப்பட்டதை வைத்து அவ்வாறு மாற்றி அமைத்துள்ளனர்.
“நான் முதல் முறை இங்கு வந்த போது தண்ணீர் தெளிவாக ஓடியது சில நேரங்களில் எங்களுக்கு நல்ல மீன் பிடிப்பும் கிடைக்கும். சில நேரங்களில் மக்கள் அந்த மீன்களை விற்கவும் செய்தனர். ஆனால் இன்று மீன்கள் இல்லை சாக்கடை குழாய்கள் தான் இருக்கிறது”, என்று தனது வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கால்வாயில் ஓடும் சாக்கடை நீரை காண்பித்து சத்தி கூறுகிறார். கால்வாய் கரையில் இருக்கும் வீடுகளில் சமையல் அறை மற்றும் கழிவறை கழிவுகள் நேரடியாக கால்வாயில் கலக்கின்றது. “நான் ஒவ்வொரு முறை இந்த கழிவு நீரில் காலை வைக்கும்போதும் எனது காலில் தடிப்புகள் ஏற்படுகின்றன”, என்று அவர் கூறுகிறார்.
சத்தி வீட்டு வேலை செய்பவராக இருந்தார். இரண்டு வீடுகளில் வேலை செய்து மாதமொன்றுக்கு 4,500 ரூபாய் சம்பாதித்து வந்தார். கால்வாயில் தண்ணீர் பெருகி ஓடும் போது என்னால் வீட்டை விட்டு போக முடியாது, அந்த நேரத்தில் என்னுடைய தினக்கூலியை நான் இழக்க நேரிடுகிறது. இதை சுத்தப்படுத்தி அந்த தண்ணீர் அடித்துக் கொண்டு வந்த பிளாஸ்டிக் குப்பைகள், சாக்கடை, அருகிலிருக்கும் பஸ் பணிமனையில் இருந்து வெளியேறும் கிரீஸ் கழிவுகள் ஆகியவற்றை சுத்தப்படுத்துவதற்கே அந்த நாள் முழுவதும் ஆகிவிடும்”, என்று அவர் கூறினார். அவரது கணவர் 69 வயதாகும் மணி தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். சபரிமலை யாத்திரை காலத்தில் இங்கிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டணம்திட்டா மாவட்டத்தில் ஒரு தற்காலிகத் தேநீர் மற்றும் சிற்றுண்டி கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவார். அவரது வழக்கமான சம்பளமான ரூபாய் 3,000 அந்த சில மாத சபரிமலை யாத்திரை காலத்தில் – நவம்பர் முதல் பிப்ரவரி வரை 20,000 ரூபாயாக உயரும்.
மணி இப்போது சில ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. ஒரு தொற்றுக்கு ஏற்பட்டதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இடது காலின் கீழ்பகுதி துண்டிக்கப்பட வேண்டியிருந்தது. இத்தம்பதியினர் அவர்களது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு சிகிச்சை மருந்துகளுக்காக மாதம் 2000 ரூபாய் செலவு செய்து வருகின்றனர். நாங்கள் இருவரும் மாநிலத்தின் முதியோர் ஓய்வூதியத்திற்கு தலா 1,400 ரூபாய் பெற தகுதியானவர்கள். மணியால் கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியத்தை பெற முடியவில்லை. “அவரது கை ஒருங்கிணைப்பு பலவீனமாக இருப்பதால் அவரால் அவரது பெயரை ஒழுங்காக கையெழுத்திட முடிவதில்லை”, என்று அவர் மனைவி கூறினார். சத்தியின் ஓய்வூதியம் அவரது யூனியன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடுகிறது, அந்த வங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
முதலில் கொச்சியின் வடக்கே உள்ள பரவூரில் வசித்து வந்த சத்தி 46 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மணியை மணந்த போது பி&டி காலனிக்கு வந்தார். அவர்கள் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதற்கு காரணமாக: “இந்த இடம் எங்களுக்கு நகரத்திற்கு எளிதான அணுகலை வழங்கியது அதனால் எங்களது பயணச் செலவு மிச்சப்பட்டது”, என்று கூறினார் சத்தி.
மணியின் சகோதரி 61 வயதாகும் துளசி கிருஷ்ணா அவர்களது பக்கத்து வீட்டுக்காரர். “நாங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தபோது சில வீடுகள் மட்டுமே இருந்தன, இப்போது 85 வீடுகளும் 81 குடும்பங்களும் இங்கு வசித்து வருகின்றன”, என்று அவர் கூறினார். உள்ளூர் தேர்தலுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு துளசி போன்ற அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் காலனியின் விவரங்களை வழங்கியுள்ளது.
துளசிக்கு ஆஸ்டியோபொரோசிஸ் இருப்பதால் அவரால் எழுந்து நின்று நடப்பது கூட கடினமாக இருக்கிறது. கன மழை பெய்யும் போதெல்லாம் உயரமாக இருக்கும் பிரதான சாலைக்கு இந்நீரின் வழியே செல்வது எனக்கு கடினமாக இருக்கிறது. அதனால், நானும் எனது கணவரும் எனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளோம். ஆனால், எத்தனை நாளுக்கு அங்கு தங்குவது?”,என்று அவர் கேட்கிறார். அவரது மகள் ரேகா சஜன் காந்தி நகரில் வசித்து வருகிறார் அது பி & டி காலணியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த காலனியின் நிலம் நகராட்சி அமைப்பிற்கு – கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமானது. குடியிருப்புவாசிகளின் கூற்றுப்படி பி & டி என்பது ஆற்றல் (பவர்) மற்றும் தொலைதொடர்பு (டெலிகம்யூனிகேசன்) ஆகும்; இங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பணிமனை இருக்கிறது.
72 வயதாகும் அஜிரா தனது இறந்த மகள் மற்றும் மருமகனுக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சாலையின் அருகே மளிகை பொருட்கள் விற்கும் கடையை வைத்திருந்ததாகவும் ஆனால் அரசாங்கம் அதை இடித்து விட்டதாகவும், இப்போது வீட்டில் இருந்தே சில பொருட்களை விற்று வருவதாகவும் அதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வரை சம்பாதித்து வருவதாகவும் கூறுகிறார். இங்குள்ள பலர் கடன் வாங்குகின்றனர் அதை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கிறது. முடங்கிப்போன எனது கால் மற்றும் எனது சுவாசப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அதிகமான பொருட்களை வாங்கி வருவதும் சிரமமாக இருக்கிறது”, என்று அவர் கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்கிழக்கு பருவமழை காலத்தில் கேரளாவிற்கு சராசரியாக 1997.4 மி மீ மழை பெய்கிறது. இந்த மழைக் கால வெள்ளம் கொச்சியின் கழிவு நீர் அமைப்பை மண் மற்றும் பிளாஸ்டிக் மூலம் அடைத்து விடுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் இருந்து மழைநீர் கால்வாயில் சென்று சேர்ந்து கால்வாயில் குப்பையும் சாக்கடையும் பெருகி அது பி&டி காலனியில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நீரின் அளவை அதிகரிக்கவும் கழிவுநீரை நீர்த்துப் போகவும் உயர் அலைகள் பயன்பட்டு வந்தது ஆனால் கால்வாயின் கரையில் கட்டுமானங்கள் அதிகரித்ததாலும் பாலங்கள் பல கட்டப்பட்டதாலும் கால்வாயில் பல இடங்களில் கடல் நீர் உள்ளே வருவது தடுக்கப்பட்டு விட்டது, இதனால் தண்ணீர் தேங்க கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
தேங்கி நிற்கும் நீர் ஆகாயத் தாமரை போன்ற ஆக்கிரமிப்பு களைகளின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது விரைவாக வளர்வதோடு மட்டுமல்லாமல் நீர் ஓட்டத்தையும் பாதிக்கிறது. இது கொசுக்கள் மற்றும் ஈக்களின் இனப்பெருக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. பாம்புகள் மற்றும் எலிகள் கழிவறை குழாய்கள் வழியாக சாதரணமாக வந்து செல்கின்றன. “எலிகள் எனது இரும்பு பீரோவிற்குள் புகுந்து எனது துணிகளை நாசம் செய்துவிட்டன”, என்று கூறுகிறார் சத்தி.
2017 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட கேரளா கப்பல் மற்றும் உள்ளூர் நீர் வழி சாலை போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் தூர்வாராமல் இருப்பது, தாழ்வான பாலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் ஆகியாவை கால்வாயினை பாதிக்கின்றன. மேலும் கால்வாயை அகலப்படுத்துவது நீரின் ஓட்டத்திற்கும் நீர் வழிப்பாதையை சாத்தியமான போக்குவரத்து முறையாக மாற்றுவதற்கும் அவசியமாகிறது என்று தெரிவிக்கிறது.
சத்தியின் பக்கத்து வீட்டுக்காரரான மேரி விஜயன் இந்த கால்வாயில் தனது தம்பிகள் நீந்திய காலத்தை நினைவு கூர்கிறார். அவரும் அவரது கணவர் விஜயனும் அருகிலுள்ள ரயில்வே நிலையத்தில் கூலியாக பணிபுரிந்து வருகின்றனர், இந்த காலனியில் 30 வருடங்களாக வசித்து வருகின்றனர். அவர்களது திருமணத்திற்குப்பின் அவர்கள் கொச்சிக்கு குடிபெயந்துள்ளனர். “இந்த கால்வாய் பெரந்தூர் புழாவிற்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. மக்கள் குளிக்கவும், துணிதுவைப்பதற்கும் அங்கு சென்றனர். ஒரு ரூபாய் நாணயம் விழுந்துகிடந்தால் கூட பார்க்கும் அளவுக்கு தண்ணீர் தெளிவாக இருந்தது. இப்போது சடலம் கிடந்தால் கூட கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று வருத்தமாக 62 வயதாகும் மேரி கூறினார்.
நாங்கள் அவரை சந்தித்தபோது மேரி தனது வீட்டின் தரையில் அமர்ந்து லாட்டரி சீட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தார். “இந்த லாட்டரி சீட்டுகளை ரயில்வே நிலையம் அருகில் விற்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 ரூபாய் சம்பாதித்து வந்தேன்”, என்று எழுந்து வந்து கதவின் அருகில் நின்று எங்களிடம் கூறினார். கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து லாட்டரி சீட்டு விற்ப்பது ஒழுங்கற்ற ஆகிவிட்டது என்று கூறினார்.

“இந்த காலனியில் வசித்து வரும் மக்களை (பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்) முண்டம்வேலிக்கு நிரந்தரமாக மறுவாழ்வு ஏற்படுத்தி தங்கவைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது”, என்று தினக்கூலியான அஜித் சுகுமாரன் கூறுகிறார். “எனக்கு பத்து வயதுக்கும் குறைவாக இருக்கும்போது இருந்து இந்த திட்டத்தை பற்றி நான் கேள்விப்பட்டு வருகிறேன், எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன ஆனால் எதுவும் நடக்கவில்லை”, என்று கூறுகிறார். அஜித்தின் மனைவி சௌமியா வீட்டு வேலை பார்த்து மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் சம்பாதித்து வருகிறார், அஜித் தினக்கூலியாக 800 ரூபாய் சம்பாதித்து வருகிறார் ஆனால் மாதத்தில் 15 நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் அவர்கள் வீட்டின் அருகில் வசித்து வரும் அஜித்தின் பெற்றோரான 54 வயதாகும் கீதா மற்றும் 60 வயதாகும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர் வருகின்றனர்.
“ஜூலை 31 ,2018 அன்று கவுன்சிலர் பூர்ணிமா நாராயண் (2015-2020 காந்திநகர் வார்டு கவுன்சிலர்) இங்குள்ள குடும்பத்தில் ஒரு நபரை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முண்டம்வேலிக்கு அழைத்துச் செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த போக்குவரத்துக்காக அவர்கள் எங்களிடம் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினரிடம் இருந்தும் 100 ரூபாய் வசூல் செய்தனர். பின்னர் அவர்கள் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டினர் (கேரள முதல்வர்) பினராயி விஜயன் அவர்கள் பத்து மாதத்துக்குள் அந்த பணி முடிவடைந்துவிடும் என்று எங்களுக்கு உறுதி அளித்தார்”, என்று சத்தி நினைவு கூர்ந்தார்.
அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன ஆனால் இப்போது எங்களுக்கு தேவை நிவாரண முகாம்கள் தான் என்று குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை எர்ணாகுளத்தில் 2375.9 மில்லி மீட்டர் மழை பெய்தது (இது சாதாரணமாக பெய்யும் 2038 மில்லி மீட்டர் வரை மழையை விட 17 சதவீதம் அதிகம்) தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களை மாநிலத்திற்கு வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மழையால் டிபி கால்வாய் வெள்ளத்தில் மூழ்கியது. “எங்களது பக்கத்து வீட்டுக்காரர்களும் நானும் மணியை தோளில் சுமந்து நிவாரண முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது”, என்று சத்தி விளக்கிக் கூறினார். நடந்து செல்வது மிகவும் கடினமாக இருந்தது ஏனென்றால் உயரமான வேலி (தொலைதொடர்பு நிறுவனத்தின் பணிமனை)மற்றும் எங்கள் வீடுகளுக்கு இடையில் இருக்கும் குறுகலான சந்துக்குள் இரண்டு பேர் அருகருகே நடந்து செல்லது சிரமமாக இருந்தது.
2020 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்கள் அந்த பத்து மாத கட்டமைப்பிற்குள் மறுவாழ்வு ஏற்படுத்தித் தரும் வாக்குறுதியை மீண்டும் கொண்டு வந்தனர். இதனையடுத்து கேரள அரசு லைப் மிஷன் திட்டத்தின் கீழ் நில மற்றவர்களுக்கும், வீடுகட்ட முடியாதவர்களுக்கும் முண்டம்வேலியில் 70 சென்ட் நிலத்தில் 88 குடியிருப்புகள் கட்ட ஜி சி டி ஏ திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இத்திட்டத்திற்கான பொருட்களை வழங்குவதற்கு பொறுப்பெடுத்துக் கொண்ட நிறுவனம் திவால் ஆகி விட்டதால் உற்பத்தி நடைபெறவில்லை அதனால் இத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. “இப்போது ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது, சோதனைகள் முடிந்துவிட்டது. கேரள அரசின் தொழில்நுட்ப குழுவின் அனுமதியை பெற நாங்கள் காத்திருக்கிறோம்”, என்று ஜி.சி. டி. ஏ வின் தலைவர் சலீம் கூறினார்.
இருப்பினும் காலனியில் வசிப்பவர்கள் சந்தேகத்துடன் தான் இருக்கின்றனர். “இங்கு எங்களை கவனிப்பதற்கு யாரும் வருவதில்லை. முண்டம்வேலிக்குச் சென்றது எப்படி எங்களது நினைவுகளில் இருந்து அழிந்ததோ அதே போல அதிகாரிகளும் மறைந்துவிட்டனர்”, என்று கூறினார் துளசி.
Editor's note
ஆதர்ஷ் பி பிரதீப் சென்னையில் உள்ள ஆசிய ஜர்னலிசம் கல்லூரியில் அச்சு பத்திரிக்கை குறித்து பயின்று வருகிறார். தனது சொந்த ஊரான கொச்சியில் எர்ணாகுளம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் அந்த கால்வாயை கடந்து சென்றுள்ளார். "கடந்த பருவமழையின் போது இங்குள்ள குடும்பங்கள் தங்களது வீட்டிற்குள் சாக்கடை புகுந்ததால் மேட்டு நிலத்திற்கு சென்றனர். எனக்கு அதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தது. பாரி கல்வியில் பணிபுரிவது எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது: அரசாங்க ஆதாரங்களிலிருந்து நம்பகத் தன்மையான தரவுகளைப் தேடுவது முதல் மிகச் சறிய விவரங்களில் கவனம் செலுத்துவது வரை கோர்வையாக ஒரு கட்டுரை எழுதுவது ஆகியவை எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது ஆனால் நான் ஆராய்ச்சி செய்ய விரும்பும் எனது சமூகத்துடன் அது என்னை மிகவும் நெருக்கமாக கொண்டு சேர்த்துள்ளது", என்று கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்
சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.