நானக்மாட்டா நகர சந்தைக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலமான பவோலி சாஹிப்பில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கைவண்டியில் கடை நடத்தி வருகிறார் பிஜௌலி. உப்பு கடலை, சிப்ஸ், பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்று வருகிறார். இந்த இடம் சுற்றுலா வரும் வாடிக்கையளர்களை ஈர்க்கும் இடமாக இருப்பதால் ஐந்து ஆண்டுகளாக தினசரி இங்கே கடை போட்டு வருகிறார் இவர்.

பிஜௌலிக்கு தற்போது 60 வயது ஆகிறது. உடல்நலம் சரியில்லாமல் போகும்போதும் கூட, காலையில் தனது தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு வியாபாரத்திற்கு வந்து விடுவார். நானக்மாட்டாவில் உள்ள குருத்வார் சீக்கிய மக்களுக்கு புனிதத்தலம் ஆகும். அருகிலுள்ள நந்தோர் பகுதியில் ஓர் அணை உண்டு. தியோஹா நதியும் மக்களை இங்கு வர ஈர்க்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று பிஜௌலிக்கு வயிற்று வலி. உடனே, குரு ராம்தாஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பை தொற்று நோய் இருப்பதாக கூறிவிட்டனர். பின்னர் அதற்காக 12,000 செலவு செய்து கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிஜௌலியால், அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

பிஜௌலி தன்னுடைய 65 வயதான கணவர் விரேந்தர் ஹல்தார் மற்றும் தன்னுடைய மகள் சீமாவின் மகனும், பேரனுமான 15 வயது நவீனோடு வாழ்ந்து வருகிறார். இவர்களின் குடும்பம் உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள பெங்காலி காலனியில் வசித்து வருகிறது. இந்த காலனியில் பெரும்பாலான மக்கள் தினக்கூலிகளாக பணிபுரிபவர்கள்தான்.

“சில நேரங்களில் எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு மோசமான வலி ஏற்படும்,” என்று நான்கு வருடங்கள் கழித்தும் தொடரும் மோசமான வலியை பற்றி கம்மிய குரலில் கூறுகிறார் பிஜௌலி. ஆனால், அதற்காக அடிக்கடி மருத்துவரை சந்திப்பது என்பது இவரை போன்ற தினக்கூலி குடும்ப உறுப்பினருக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது. எனவேதான், அந்த வலியையையும் தாங்கி கொண்டு ஒருநாள் விடாமல் வேலைக்கு போகிறார் பிஜௌலி. “நான் வேலை செய்யும்போது எண்ணற்ற வலி மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன். நான் வேலை செய்யவில்லை என்றால் வாழ்வதற்கான காசு எங்கிருந்து வரும்? எனக் கேட்கிறார் பிஜௌலி.

இடது: பிஜெளலியும் பேரன் நவீனும் நானக்மட்டாவின் சுற்றுலாத்தலம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது வண்டியின் அருகே. புகைப்படம் எடுத்தவர் ரியா சந்த். வலது: விரேந்தர் ஓர் இரும்புக் கொல்லர். வாழ்வாதாரத்துக்காக அரிவாள்கள் செய்யும் வேலை செய்கிறார். புகைப்படம் எடுத்தவர் பிரகாஷ் சந்த்

அரசால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவ செலவினங்களுக்காக 5 லட்சம் வரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

பிஜௌலி குடும்பத்திற்கு இந்த திட்டத்தை பற்றி தெரியாததால் எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்து கொள்கின்றனர். பிஜௌலி கூறும்போது கூட, “எங்களுடைய அனைத்து சேமிப்புகளையும் என்னுடைய சிகிச்சைக்காகவே செலவு செய்து விட்டோம்” என்கிறார்.


காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்த பிறகு, வேக வேகமாக 8 மணிக்கெல்லாம் தனது கடைக்குக் கிளம்பி விடுவார் பிஜௌலி.

பிரதானச் சந்தையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிதர்கஞ்ச் சந்தையில் ஒரு கிலோ 80 ரூபாய் என்ற விலையில் கடலைகளை வாங்கிக் கொள்வார். பிறகு அதை ஒரு கிலோ 120 ரூபாய் என விற்று விடுவார். அவர் விற்க கூடிய மற்ற தின்பண்டங்கள் எல்லாம் நானக்மாட்டா சந்தையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிச்சா சந்தையில் இருந்து வருகிறது. அதை அவ்வப்போது மொத்தமாக வாங்கி வைத்து கொள்வார்.

பிஜெளலி கடலைகளையும் அவரின் வண்டியிலிருந்து விற்கிறார். 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிதர்கஞ்ச் சந்தையிலிருந்து அவற்றை அவர் வாங்குகிறார். புகைப்படங்களை எடுத்தவர் ரியா சந்த்

ஒரு நாளைக்கு சராசரியாக 200 முதல் 300 ரூபாய் வரை பிஜௌலி சம்பாதிக்கிறார். கடலை வறுக்க தேவையான விறகுகட்டைகள் வாங்குவது மற்றும் குடும்ப செலவுகளை பார்த்து கொள்வது என அனைத்தையும் அந்த வருமானத்தில்தான் செய்கின்றனர் விரேந்தர் மற்றும் பிஜௌலி தம்பதியினர்.

விரேந்தரும் வீட்டிலேயே அரிவாள்களை செய்வது மற்றும் கூர்மைப்படுத்தி விற்பனை செய்வது ஆகிய வேலைகளை செய்து வருகிறார். நானக்மாட்டா சந்தையில் உள்ள இரும்பு செய்யும் கொல்லர்களிடம் இத்தொழிலை கற்றுக் கொண்டதாக கூறினார்.

“இப்போதெல்லாம் கைகளால் அறுவடை செய்வதை விட இயந்திரங்களால் அறுவடை செய்வதையே மக்கள் விரும்புகின்றனர். அதனால், அரிவாளுக்கான தேவை குறைந்து விட்டது,” என்று கூறுகிறார் விரேந்தர். இதனால் விரேந்தர் போன்ற பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 பொதுமுடக்கத்திற்கு பிறகு விரேந்தர் தனது கடையை பிஜௌலியின் தள்ளு வண்டிக்கு அருகிலேயே வைத்து கொண்டார். பிஜௌலியும் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அரிவாள்களை கூர்படுத்த விரேந்தருக்கு உதவுவது வழக்கம்.

நானக்மாட்டாவுக்கு வருவதற்கு முன்பு விரேந்தரும், பிஜௌலியும் மேற்கு வங்கத்தில் உள்ள நாடியா என்ற மாவட்டத்தில் தினக்கூலிகளாக வாழ்ந்தார்கள். விரேந்தரை மணம் முடிக்கும்போது பிஜௌலிக்கு வயது 22. விரேந்தரோடு உத்தரகாண்ட் வந்து பெங்காலி காலனியில் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.

“திருமணத்திற்கு பிறகு, பல இடங்களில் சுற்றி திரிந்து இறுதியில் நானக்மாட்டாவுக்கு வந்தோம். என்னுடைய உறவினர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்ததால், நாங்களும் இங்கு வந்து விட்டோம்” எனப் புன்னகைத்து கொண்டே கூறினார் பிஜௌலி.

இங்கு வந்த காலக்கட்டத்தில் விவசாயக் கூலிகளாக அவர்கள் பணி புரிந்தனர். ”முன்பெல்லாம் சிலரின் விவசாய நிலங்களில் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். குருத்வாரின் நிலத்தில் நெல் மற்றும் கோதுமை ஆகிய பயிர்களை வளர்த்து வந்தோம். அதற்கு சம்பளமாக தினமும் 24 முதல் 25 ரூபாய் வரை தருவார்கள்,” என்று கூறினார் பிஜௌலி.

பிஜௌலி மற்றும் விரேந்தர் தம்பதிக்கு பீனா, சீமா, ஷீலா, ஸ்ரீதி மற்றும் இடி ஆகிய ஐந்து மகள்கள் உள்ளனர். குடும்பம் வளர வளர வருமானம் போதாததால் விவசாயத்திலிருந்து அரிவாள் செய்யும் தொழிலுக்கு மாறினார் விரேந்தர்.

தாங்கள் தான் படிக்கவில்லை, குழந்தைகளாவது படிக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருக்கின்றனர். “4 அல்லது 5ம் வகுப்பு வரை சித்த நபடியா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அவர்கள் படித்தனர். அந்த நேரத்தில் அதற்கு மேல் படிக்க வைக்க வசதி இல்லை. எனவே அவர்களை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப எங்களால் முடியவில்லை,” என விளக்குகின்றனர்.

நியாய விலைக்கடை மூலம் மாதம் 15 கிலோ அரிசி மற்றும் கோதுமை இவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அது முழு குடும்பத்திற்கும் போதுமானதாக இல்லை. அது தீர்ந்தவுடன் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கும், 5 கிலோ கோதுமையை 160 ரூபாய்க்கும் சந்தையில் வாங்குகின்றனர்.

“5 மகள்களும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்து விட்டால் 15 கிலோவும் ஒரே நேரத்தில் தீர்ந்து விடும்” என்கிறார் விரேந்தர்.

இதில் கொரோனா பொதுமுடக்கம் வேறு அவர்கள் வாழ்வை பதம் பார்த்து விட்டது. “பொதுமுடக்க சமயத்தில் கொரோனா பரவலால் நாங்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயேதான் இருந்தோம்,” என்று அந்த மோசமான நாட்களை நினைவு கூறுகிறார் பிஜௌலி. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜனா திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் கிடைத்தாலும், இதர வீட்டு தேவைகளுக்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்.

Editor's note

ரியா சந்த், நானக்மாட்டா அரசு பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவி. அவரது பள்ளியில் PARI-யின் பயிற்சி வகுப்புக்கு பிறகு பிஜௌலியின் வாழ்க்கையை ஆவணப்படுத்த முடிவெடுத்திருந்தார் ரியா.

இது குறித்த அனுபவத்தை பகிரும்போது,  "பிஜௌலியின் கதையில் வேலை செய்யும்போதுதான், நமது சமூகத்தின் பெரும்பகுதி மக்களால் அரசின் திட்டங்கள் மற்றும் வசதிகளை பயன்படுத்த முடியாமல் போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது" என்று கூறினார்.

தமிழில்: சுபாஷ்

சுபாஷ் சந்திர போஸ் சென்னையை சேர்ந்த பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.