எனது உயர் நிலை தேர்வு முடிவுகள் வெளியான அந்த நாளில் எனது நிலை கிரிக்கெட் பந்தைப்போல இருந்தது. பந்து எல்லைக்கோட்டை தொட்டதும் அது 4 ரன்கள் ஓட்டமா அல்லது 6 ரன்கள் ஓட்டமா? என எல்லோரும் அந்த பந்தைப்போலவே பார்த்தனர். நான் தோல்வியடைந்திருந்தால் என்னவாகியிருக்கும்? எனது தந்தை எனக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்திருப்பார்.

2020ம் ஆண்டு ஜீலை 29ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நான் 79.06 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ஒரு புள்ளியில் எனது பள்ளியின் மூன்றாவது இடத்தை தவற விட்டிருந்தேன். எங்கள் நாத்ஜோகி நாடோடி குழுவில் ஒரு பெண் கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதில்லை. எனது குழுவில் மேலும் மூன்று பெண்கள் கூட இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தனர்.

நான் நவ்கேவில் வசிக்கிறேன். (ஜல்கோன் ஜமோத் செடசில், புல்தானா மாவட்டம்) அது ஒரு சிறிய கிராமம். அங்கு எங்கள் சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் மட்டும் வசிக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலானோர் புனே, மும்பை மற்றும் நாக்பூருக்கு பிச்சை எடுக்கச் செல்கின்றனர். எஞ்சிய எனது தந்தையைப்போன்ற ஒரு சிலர் இங்கு கூலித்தொழிலாளர்களாக எங்கள் கிராமத்தைச் சுற்றி பணியாற்றுகின்றனர்.

எனது பெற்றோர், பாபுலால் சஹேப்ராவோ சோலாங்கி (45) மற்றும் திரவுபதா சோலாங்கி (36) ஆவார்கள். அவர்கள் கோதுமை, சோளம், மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி வயல்களில் கூலி வேலை செய்வார்கள். நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு அவர்கள் தலா ரூ.200 கூலி பெறுவார்கள். அவர்களுக்கு மாதத்தில் 10 முதல் 12 நாட்களுக்கு தொடர் வேலை கிடைப்பதே அரிதான ஒன்றாகும். பெரும்பாலானோருக்கு வேலை தேவையிருக்கிறது. ஆனால் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை.

எனது தந்தை ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி சென்று, பின்னர் நின்று விட்டு, வேலைகள் செய்ய துவங்கிவிட்டார். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். அதில் 24 வயதான ருக்மா பள்ளி சென்றதில்லை. 22 வயதான நினா ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். எனது இரு சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் பள்ளியைவிட்டு நின்றதில் இருந்து கூலி வேலைக்கு செல்கின்றனர். எனது சகோதரர் தேவ்லால் (20). அவரும் கூலித்தொழிலாளர். அவர் 9ம் வகுப்பில் பள்ளிப்படிப்பை விட்டார்.

“எனக்கு 10 வயதானபோது எனது தந்தை என்னை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும், இனிமேல் படிக்கத்தேவையில்லை“ என்றும் கூறினார். அவர் மட்டுமல்ல, நான் பள்ளி செல்லும் வழியில் எப்போதும் சந்திக்கும் மூதாட்டி ஒருவரும், “உனது சகோதரிகள் பள்ளி செல்லவில்லை, நீ மட்டும் ஏன் படிக்கிறாய்? படித்தால் வேலை கிடைக்கும் என்று நீ நினைத்தாயோ?“ என்று என்னை திட்டினார். எனது மாமா கூட, எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி எனது பெற்றோரிடம் வலியுறுத்துவார். அவருடன் எனது தந்தையும் சேர்ந்துகொள்வார். “எனது திருமணம் குறித்து மற்றவரிடமோ என்னிடமோ பேச வேண்டாம். நான் படிக்க வேண்டும் என்று நான் அம்மாவிடம் கூறிவிடுவேன்.“

நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர், ஒரு பத்திரிக்கையாளர் என்னை பேட்டி எடுக்க வந்தபோது எனது தந்தை அழுதுவிட்டார். “நல்லவேலை எனது மகள் என் பேச்சை கேட்கவில்லை. அவள் படிக்க வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருந்தார்“ என்று கூறினார்.

‘உங்களுக்கு கல்வி ஏன் தேவை?

எனக்கு 7 வயதாக இருந்தபோது எனது பள்ளிக்கல்வியை துவங்கினேன். அருகில் உள்ள பால்ஷி சுப்போவில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் எனது கிராமத்திற்கு வந்து பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் பெயர்களை சேர்த்தனர். யாரோ அதில் எனது பெயரை கொடுத்துவிட்டனர். எனவே அங்குள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன்.

ஓராண்டு கழித்து எனது கிராமத்திலேயே துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் நான் இங்கு மாறிவிட்டேன். 5ம் வகுப்பில் நான், 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டாட்சி தலைமையகத்தில் உள்ள ஜல்கான் ஜமோத், மகாத்மா புலே நகர் பரிஷித் வித்யாலாவுக்கு சென்று படித்தேன். இங்கிருந்து 2 கிலோ மீட்டர் நடந்து சென்று, பின்னர் ஷேர் ஆட்டோவில் நகர பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வேன். ஆட்டோ பயணத்திற்கு அரை மணிநேரமாகும். ஒரு வழிக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும். அதே பள்ளிக்கு எனது கிராமத்தில் இருந்து 6 பெண்கள் சென்றோம். நாங்கள் அனைவரும் எப்போதும் ஒன்றாகவே செல்வோம்.

மழைக்காலத்தில் ஒருநாள் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஓடையில் தண்ணீரின் அளவு கூடிவிட்டது. நாங்கள் அந்த ஓடையை கடந்துதான் முக்கிய சாலையை அடைய வேண்டும். வழக்கமாக நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் கால்கள் மட்டுமே நனைந்துவிடும். எங்கள் செருப்புகளை கையில் எடுத்துக்கொண்டு, சுடிதாரின் பேன்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு கடந்துவிடுவோம். ஆனால், அன்று தண்ணீர் எங்கள் இடுப்பு வரை இருந்தது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் கரையை கடப்பதற்கு உதவுமாறு கேட்டேன். அவர் எங்களை கடுமையாக திட்டி, “அனைவரும் வீட்டிற்கு செல்லுங்கள். நீங்கள் ஏன் பள்ளி செல்ல வேண்டும்? வெள்ளம் வெரும்போது உங்களுக்கு படிப்பு முக்கியமா? பெண்ணுங்க எல்லாம் வீட்ல இருக்க வேண்டிதானே, எதுக்கு படிக்கனும்?“ என்று கூறினார். நாங்கள் அன்று பள்ளி செல்லவில்லை. அடுத்த நாள், நாங்கள் பொய் சொல்வதாக எண்ணிய எங்கள் பள்ளி ஆசிரியை எங்களை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்தார்.

அதேபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டபோது, நான் எனது தாயை அழைத்து, ஆசிரியரிடம் பேசுமாறு கூறினேன். பின்னர் அவர் எங்களை நம்பினார். பின்னர் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்த ஆசிரியர் எங்கள் நிலையை புரிந்துகொண்டார்.

ஆட்டோவிலே தினமும் சென்று வருவது செலவு அதிகமாக தெரிந்தது. எனவே, 9ம் வகுப்பு படித்தபோது, ஜல்கான் ஜமோத் மாநில போக்குவரத்து அலுவலகத்தில் எங்கள் ஊருக்கு காலை 9 மணிக்கு பேருந்து வசதி செய்து தருமாறு விண்ணப்பித்திருந்தேன். பெண்களுக்கான மாணவ் விகாஸ் பேருந்தில் இலவச பயணம் செய்ய முடியும். ஆனால், அந்த பேருந்து எங்கள் ஊருக்கு 11.30 மணிக்குத்தான் வரும். அதில் சென்றால் நாங்கள் பள்ளிக்கு தாமதமாகச் செல்ல நேரிடும்.

அந்த விண்ணப்பத்தில், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தில் வசிக்கும் 2 பெண்கள் உள்பட பேருந்தில் பயணம் செய்யும் 16 பெண்களும் கையெழுத்திட்டிருந்தோம்.

விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட அலுவலர் பேருந்து அடுத்த நாள் முதல் 9 மணிக்கு வரும் என்று எங்களுக்கு வாக்களித்திருந்தார். உண்மையிலேயே பேருந்தும் வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், ஒரு நாள் மட்டுமே அந்த நேரத்திற்கு வந்தது. அடுத்த நாள் முதல் பேருந்து வராததால், நான் அந்த அலுவலரிடம் சென்று விசாரித்தேன். அதற்கு அவர், “அந்த பேருந்து வேறு ஒரு கிராமத்தில் இருந்து வருகிறது. அக்கிராம மக்கள் நேர மாற்றத்தை விரும்பவில்லை. உங்களுக்கு மட்டுமே உபயோகமுள்ள ஒரு பேருந்தை என்னால் அனுப்ப முடியாது. எனவே நீங்கள் உங்கள் வகுப்பு நேரத்தை மாற்றிக்கொள்ளுங்கள்“ என்று அறிவுறுத்தினார். ஆனால் அது எப்படி முடியும்?

நாங்கள் பேருந்தில் செல்லும்போது மற்ற பிரச்னைகளும் வரும். ஒருமுறை நானும், எனது தோழிகளும் மாநில போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு பையன் எனது தோழியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, “நீங்க எல்லாம் மோஹிந்திப்பூர் பொண்ணுங்களா? வெளிய போங்க“ என்று கத்தினான். அவனுடன் மற்றொரு பையனும் சேர்ந்து கொண்டதால் அங்கு பெரிய சண்டையே ஏற்பட்டுவிட்டது. மோஹிந்திப்பூரில்தான் நத்தோஜி குழுவினர் வசிக்கின்றனர். அந்த பையன்கள் நத்தோஜி பெண்களை பேருந்தில் செல்ல அனுமதிக்கவில்லை. எனக்கு கோபம் வந்தது, ஜல்கோன் ஜமோதை பேருந்து அடைந்தவுடன், நான் அந்தப்பையனை மாநில போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றேன். “நடத்துனர் தலையிட்டு, பேருந்து அனைவருக்கும் பொதுவான ஒன்று“ என்று அந்த பையன்களிடம் கூறினார். ஆனால், அதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவேதான் நாங்கள் ஆட்டோவில் செல்வதை தேர்ந்தெடுக்கிறோம்.

இடது : ஐமுனா வீட்டில் உணவு சமைக்கிறார். வயலில் தனது பெற்றோருடன் சேர்ந்து வேலை செய்வார். வலது : நல்ல வீட்டில் வசிப்பதற்கான மாநில நிதியை அவர்கள் பெற இயலாது. அதனால் அவர்கள் சேதமடைந்ம இந்த வீட்டில் வசிக்கின்றனர்

அரசுப்பள்ளியில், 8ம் வகுப்பு வரை புத்தகங்களை பள்ளியே இலவசமாக வழங்கியது. பள்ளிக்கு சீருடையும் இல்லை. ஆனால், 9ம் வகுப்பு முதல் பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வாங்க வேண்டும். அதற்கே ஆயிரம் ரூபாய் செலவாகும். பள்ளிச்சீருடை ஒன்றுக்கு ரூ.550 செலவாகும். என்னிடம் ஒரு செட் சீருடை வாங்கவே பணம் இருந்தது. தனியார் டியூசன் செல்ல வேண்டுமெனில் அதற்கு ஒரு பருவத்திற்கு ரூ.3 ஆயிரம் செலவாகும். என்னால் ஒரு பருவத்திற்கு மட்டுமே செலவு செய்ய முடியும். நான் எனது பள்ளி ஆசிரியையிடம் எனது படிப்புக்கு உதவுமாறு கோரினேன்.

இந்த செலவுகளை சமாளிக்க, ஒன்பதாம் வகுப்பு செல்வதற்கு முன்னர், எனது பெற்றோருடன் வயல்களில் வேலைக்குச் சென்றேன். நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் படிப்பேன். அந்த நேரத்தில்தான் எனது பெற்றோரும், சகோதரரும் வேலைக்கு கிளம்புவார்கள். நான் ரொட்டியும், காய்கறி குருமாவும் செய்து வயலுக்கு எடுத்துச்செல்வேன்.

நானும் அவர்களுடன் வேலையில் இணைந்துகொள்வேன். 7 மணி முதல் 9 மணி வரை வேலை செய்வேன். எனக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 வழங்கப்படும். ஒன்பதரை மணிக்கு பள்ளி செல்ல தயாராகிவிடுவேன். பள்ளியில் இருந்து வந்தவுடன் மீண்டும் கூலி வேலைக்குச் செல்வேன். விடுமுறை நாட்களிலும் வேலை செய்வேன்.

‘நான் வெற்றி பெற விரும்புகிறேன்’

மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஜல் சக்தி அபியான், கடந்தாண்டு (2019) நடத்திய ஒருங்கிணைத்த, வட்டார அளவிலான கட்டுரைப்போட்டியில் நான் வெற்றிபெற்றேன். பல்தானாவில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கரிம உரம் தயாரிக்கும் எனது செயல்திட்டம் இரண்டாவது பரிசை பெற்றது. எனது பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசைப் பெற்றேன். நான் வெற்றி பெற விரும்புகிறேன். நதோஜி குழுப்பெண்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே கிடைப்பதில்லை.

ஜமுனா தனது துவக்கப்பள்ளி ஆசிரியருடன். அவரே ஜமுனா படிப்பதற்கு ஊக்குவித்தார்

ஜல்கான் ஜமோதில் உள்ள நியூ இரா உயர்நிலைப்பள்ளியில், ஆகஸ்ட் மாதம், பதினொன்றாம் வகுப்பில் சேர்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு தனியார் பள்ளி, அங்கு ஆண்டுக்கட்டணம் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் கொண்ட அறிவியல் புலத்தை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். வரலாறு எனக்கு குடிமைப்பணிகள் நுழைவு தேர்விற்கு தயாரவதற்கு உதவும் என அறிந்திருந்ததால், நான் அதில் வரலாற்றையும் சேர்ந்திருந்தேன். படிப்பை தொடர்வதற்கு என்னை ஊக்குவித்தவர், எனது துவக்கப்பள்ளி ஆசிரியர் பாவுலால் பார்பர் ஆவார். அவர் எனது குழுவைச்சேர்ந்த, எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். எனக்கு இப்போது 18 வயதாகிறது. இந்திய ஆட்சிப்பணிகளில் சேர வேண்டும் என்பது எனது கனவாகும்.

கல்லூரிப்படிப்பிற்கு நான், புனே அல்லது புல்தானா செல்ல வேண்டும். அங்குதான் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அனைவரும் என்னை பேருந்து நடத்துனர் அல்லது அங்கன்வாடி பணியாளராக வேண்டும் என்று கூறுகின்றனர். அப்போதுதான் வேலை விரைவில் கிடைக்கும் என்பதற்காக, ஆனால் நான் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறேனோ அதுவே ஆவேன்.

நான் படித்து ஒரு நாள் பெரிய அதிகாரியாவேன். அப்போது எங்களைப்போன்ற ஏழைகள் தங்கள் வேலை நடைபெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது. எனக்கு 15 வயதாக இருந்தபோது, எனது தாத்தாவின் பெயரில் இருந்த எங்கள் வீட்டு நிலத்தை, எனது தந்தை அவர் பெயருக்கு மாற்றினார். அதற்காக எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.5 ஆயிரத்தைப்பெற்றுக்கொண்டார். எனது தந்தையிடம் அவ்வளவு பணம் இல்லை. நாங்கள் கெஞ்சிக்கேட்டபோதும், அவர் பணமின்றி அதை செய்வதற்கு முன்வரவில்லை. வீட்டு நிலம் எங்கள் பெயரில் இல்லாவிட்டால், எங்களால் புது வீடு கட்டுவதற்கான மாநில அரசின் நிதியை பெறமுடியாது.

யாருக்கும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுவிடக்கூடாது. நான் எனது குழுவினருக்கு அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து விளக்குவேன். சக்தி வாய்ந்தவர்களிடம் அச்சம் கொள்ளாமல் இருக்கவும் வைப்பேன். எங்கள் குழுவினரின் யாசிக்கும் பழக்கத்தை மாற்றுவேன். பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்யும் பழக்கத்தையும் மாற்றுவேன். யாசிப்பது மட்டும் நமக்கு உணவு வழங்கும் வேலை கிடையாது. கல்வியும் உங்களுக்கு உணவு வழங்கும் என்று அறிவுறுத்துவேன்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் கிராமத்திற்கு வந்துள்ளனர். அனைவரும் கூலி வேலையை எதிர்பார்க்கின்றனர். எங்கள் குடும்பத்தினரும் வீட்டில் உள்ளனர். எங்களுக்கும் எந்த வேலையும் கிடைப்பதில்லை. எனது தந்தை கிராமத்தில் உள்ள ஒரு பெரியவரிடம், என்னை பள்ளியில் சேர்க்க கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பிச்செலுத்துவது மிக சிரமமாக இருக்கப்போகிறது. நாங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் யாசிக்க மட்டும் மாட்டோம் என்று ஜமுனா கூறி முடித்தார்.

பிரசாந்த் குந்தே, மராத்தி சுதந்திர பத்திரிக்கையாளர். புனேவைச் சேர்ந்தவர். அவர் இந்த செய்திக்கு உதவினார்.

தமிழில்: பிரியதர்சினி.R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Editor's note

மகராஷ்டிராவின் ஜல்கோன் ஜமொத் தாசிலில் உள்ள தி நியூ இரா உயர்நிலை பள்ளியில் 11வது வகுப்பில் படிக்கிறார் ஜமுனா சொலன்கே. மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள நவ் கஹ் கிராமத்தில் வசிக்கிறார்