அவருக்கு 14 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு இருக்கின்றது 7 இந்த மருத்துவமனையிலும், நான்கு ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையிலும் மற்றும் இன்னும் மூன்று அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையிலும் நடைபெற்றது.

ஆனால் முப்பது வயதாகும் சிறுநீரக நோயாளியான விரம்பாயின் சோதனையானது இன்னும் முடிவடையவில்லை.

ராஜ்கோட்டில் உள்ள பி.டி சவானி சிறுநீரக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் விரம்பாய் அதார்யாவிடம் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துவிட்டனர். அறுவை சிகிச்சைக்கு 4.5 லட்சம் ரூபாய் தேவைப்படும். 28 வயதாகும் அவரது மனைவி மனிஷாபென்னிடமிருந்து அவருக்கான சிறுநீரகம் பெறப்படுகிறது. இந்தத் தீர்விலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.

குடும்பத்தில் உள்ள ஒரே நலமான பெரியவரான மனிஷாபென் அவரது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருக்கு வாழ்வாதாரத்தை கொண்டு வருபவராக இருக்கிறார். “எனக்கு இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் குறைந்தது 6 மாதங்களாவது நான் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும்”, என்று அவர் கூறுகிறார். எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள் இதை பார்க்கும் போது வானம் தொலைவிலும், பூமியும் கீழே வெகு தூரத்தில் இருப்பதாக தோன்றுகிறது நாங்கள் எந்த பகுதியையும் சேர்ந்தவர்களாக இல்லை”, என்று கூறுகிறார்.

ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முடிந்த பிறகு மாலை வேளையில் மனிஷாபென் விரம்பாய்க்கு பி. டி. சவானி மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையில் உணவு பரிமாறிக் கொண்டு இருக்கிறார்.புகைப்படம்: மீட் ககாதியா

ஒவ்வொரு முறை விரம்பாய் மருத்துவமனைக்குச் செல்லும் போதும் அவசர காலத்தில் தான் சேர்க்க வேண்டியிருக்கிறது மனிஷாபென் ஒவ்வொரு முறையும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க 20,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவு செய்கிறார். ஒருமுறை இத்தம்பதியினர் அவ்வளவு பணத்தை சம்பாதிப்பதற்கு ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது, அதற்குள் விரம்பாயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. அவர்கள் வீடு இருக்கும் துரூல் நகரத்திலிரந்து இரண்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கும் ராஜ்கோட்டில் இருக்கும் மருத்துவமனைக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது, மோசமடைந்திருக்கும் அவருக்கு சிகிச்சை வழங்க அவர்கள் கொண்டு வந்திருந்த பணம் போதவில்லை என்பதை காரணம் காட்டி அவசர சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் அவர்கள் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அஹமதாபாத் சென்றுள்ளனர். சிவில் மருத்துவமனையில் அவர்களுக்கு முன்பு மிகப்பெரிய காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் இரண்டு மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் ராஜ்கோட்டிற்கு திரும்பிய பிறகு மீண்டும் அதிக பணம் கடன் வாங்கினார். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் எவ்வளவு பணம் நான் செலவு செய்தேன் என்று என்னிடம் கணக்கு இல்லை. நான் ஒரு படிக்காதவள். அவர்கள் என்னை எப்போது வந்து எவ்வளவு பணம் செலுத்த சொல்கிறார்களே அதை அப்போது செலுத்திவிட்டேன். கிராம மக்களிடம், உறவினர்களிடம் மற்றும் யாரெல்லாம் எங்களுக்கு உதவுவார்களோ அவர்களிடம் இருந்து கடன் வாங்கி அந்த பணத்தை நான் செலுத்தியிருக்கிறேன், என்று மனிஷாபென் கூறினார், அவரே பெரும்பாலும் பேசினார் ஏனெனில் விரம்பாய்க்கு சில வரிகள் பேசியதுமே களைப்பு ஏற்பட்டுவிடுகிறது. “எங்களிடம் மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் மற்றும் கோப்புகள் நிறைந்து கிடக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காட்சியே வேறு மாதிரி இருந்தது. இந்த தம்பதியினர் ஜாம்நகர் மாவட்டத்தின் கேசியா கிராமத்தில் 12 ஏக்கர் நிலத்திற்கு குத்தகை விவசாயிகளாக இருந்தனர்; ஜோடியா தாலுகாவில் உள்ள நிலம் பார்வத் சமூகத்தை சேர்ந்த ஒரு நில உரிமையாளருக்கு சொந்தமானது. “ஒவ்வொரு பருவத்திலும் பருத்தி விளைவித்து 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்தோம்” என்று மனிஷாபென் கூறுகிறார். அதே நிலத்தில் அவர்களுக்க சொந்த தேவைக்காக அவர்கள் கோதுமையையும் விளைவித்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விரம்பாயின் உடல்நிலை சரியில்லாமல் போன பின்பு, குத்தகை விவசாயத்தை விட்டுவிட்டு கேசியாவில் இருந்து துரூல் நகரத்திற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர், அங்கு அவர்கள் ஒரு பத்துக்கு பத்து இருக்கும் சிறிய அறையில் தங்கினார் அது அவர்களுக்கு மனிஷாபென்னின் மாமாவால் தானமாக வழங்கப்பட்டது.

மனிஷாபென்னின் நிலைமை என்னவென்றால், அவரால் வேலைக்கு செல்ல முடியாது, ஒருநாள் விட்டு ஒருநாள் அவரது கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.புகைப்படம்: மீட் ககாதியா

அவர்கள் அவர்களது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் பத்து வயதாகும் மகள் அஷ்மிதா, எட்டு வயதாகும் மகன் அமித் மற்றும் ஆறு வயதாகும் மகன் ரோஹித். விரம்பாயின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் அவரால் தனியாக இருக்க முடியாது அதனால் மனிஷாபென்னால்  வெளியே வேலைக்குச் செல்லவும் முடியவில்லை. “நான் நலமாகத்தான் இருக்கிறேன் கேசியாவில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்றால் குறைந்தது 200 ரூபாய் நாள் ஒன்றுக்கு என்னால் சம்பாதிக்க முடியும். ஆனால் நான் இருப்பதோ ராஜ்கோட்டில் எப்படி வேலைக்குச் செல்ல முடியும் மறுநாள் துரூல் நகரில் இருக்கிறோம். எனக்கு யார் வேலை கொடுப்பார்? அப்படியே கொடுத்தாலும் என்ன வேலை கொடுப்பார்கள்?” என்று அவர் கேட்கிறார்.

அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நாட்களில் அவர்களது குழந்தைகளை வீட்டில் தனியாக தான் இருக்கின்றனர். இந்த தம்பதியினர் காலை 7 மணிக்கு துரூல் நகரம் செல்ல கிளம்புகின்றனர் அங்கிருந்து ராஜ்கோட்டிற்கு 9 மணிக்கு சென்று சேர்கின்றனர். பதினான்கு மணி நேரத்திற்குப் பின்னரே அவர்கள் வீடு திரும்புகின்றனர். அதுவரை குழந்தைகள் பசியுடனே காத்திருக்கின்றனர். “எங்களுக்கு வேறு வழி இல்லை. அனாதைகளைப் போல அவர்களை விட்டுவிட்டு செல்வதைத் தவிர வேறு வழி இல்லை அவர்களை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த 14 மாதங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் அவர்களது வீடு இருக்கும் துரூல் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராஜ்கோட் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். எனது இரண்டு சிறுநீரகங்களும் வேலை செய்வதில்லை அதனால் நீர் என்னுடைய உடம்பில் இருந்து வெளியேரும் இல்லை மருத்துவமனையில் எனது கைகளில் மூலம் கழிவுகளை வெளியே எடுக்கின்றனர் என்று தனது வலது கரத்தை காமித்தபடி விரம்பாய் கூறுகிறார். நடைபாதையில் அமர்ந்துகொண்டு அமைதியாக பேசுகிறார் அவரது குரல் பலகீனமாக இருக்கிறது போக்குவரத்து சத்தத்திற்கு மேலே அதை கேட்கவே முடியவில்லை.

பி.டி. சவானி சிறுநீரக மருத்துவமனைக்கு வெளியே மரங்கள் நிறைந்த நடைபாதை இருக்கிறது அங்கு விரம்பாய் போன்ற பல நோயாளிகள் தங்களது குடும்பத்துடன் இருக்கின்றனர். அங்கேயே உண்டு, உறங்கி, ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சைக்கு தங்கள் முறை வரும் வரை காத்திருக்கின்றனர். நாங்கள் வயதானவர்களைப் போல தோற்றமளிக்க துவங்கிவிட்டோம் என்று மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையில் தனது கணவருக்கு உணவு பரிமாறியபடியே மனிஷாபென் கூறுகிறார். “நாங்கள் இன்னும் இளமையாகத் தான் இருக்கிறோம், ஆனால் இந்த சிகிச்சைக்காக நாங்கள் பயணம் செய்வது எங்களை சோர்வடையச் செய்கிறது. நாங்கள் இப்போது மிகவும் சோர்ந்துபோய் உள்ளோம்”, என்று கூறினார்.

மருத்துவமனை செலவிற்கும் குடும்பத்தினை நடத்துவதற்கும் தங்களது சேமிப்பிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இத்தம்பதியினர் செலவழித்தனர் அதற்காக அவர்கள் மனிஷாபென்னின் தங்கத்தோட்டையும் விற்றுள்ளனர், மேலும் சுற்றத்தாரிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கியுள்ளனர். “ஆரம்ப காலத்தில் உறவினர்களும் சுற்றி இருப்பவர்களும் எங்களுக்கு பண உதவி செய்தனர் ஆனால் இப்போது யாரும் செய்வதில்லை. அவர்கள் அனைவரும் எனது கணவரின் உடல் நிலை இன்னும் மோசமாகி கொண்டேதான் போகும் அதனால் எங்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற முடியாது என்று எண்ணுகின்றனர்”, என்று கூறினார் மனிஷாபென். உறவினர்களிடம் இருந்து வாங்கிய 2 லட்சம் ரூபாய் கடன் மருத்துவ செலவிற்கு பயன்பட்டது. “நாங்கள் எங்களது கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்துவோம் என்று எங்களுக்கு தெரியாது,” என்று கூறினார்.

விரம்பாயின் குடும்பமும் அவரின் பெற்றோரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நபர்களுக்கான அட்டையை வைத்திருக்கின்றனர். மனிஷாபென் அவர்களுக்கான ரேஷன் அட்டையில் கிடைக்கும் பொருட்களையும் அவரது மாமனார் மாமியாரிடம் கொடுத்து விடுகிறார். “எனது மாமனாருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருக்கிறது, மேலும் எனது மாமியாருக்குஇப்போது தான் மாரடைப்பு ஏற்பட்டது. அவர்கள் மிகவும் வயதானவர்கள். நாங்கள் இளமையாக இருப்பதால் எப்படியாவது சமாளித்துக் கொள்வோம்”, என்று கூறுகிறார் மனிஷாபென்.

‘எப்படியோ சமாளிப்பது’ என்பது அவரது கணவர் தனது முறை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது, ராஜ்கோட்டில் தெருக்களிலும் வீடுகளிலும் பிச்சை எடுப்பதையும் உள்ளடக்குகிறது.

விரம்பாயின் சிகிச்சைக்கான முறை மதிய வேளையில் வரும் அதன் பின்னர் 4 முதல் 5 மணி நேரம் ஆகும் சிகிச்சை முடிவடைய. ஆனால் இத்தம்பதியினர் சீக்கிரமாகவே வந்துவிடுகின்றனர் அப்பொழுதுதான் மனிஷாபென் சென்று உணவு பிச்சை எடுக்க முடியும். விரம்பாயை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு நடந்து சென்று வீடு வீடாக உணவோ அல்லது பணமோ பிச்சை பெறுவார். இன்றைய நாள் 70 ரூபாய் தான் பெற முடிந்தது குழந்தைகளுக்கு சில துணியும் கொஞ்சம் மீதமுள்ள உணவும் கிடைத்திருக்கிறது. இதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்களுக்கு பயன்படும்”, என்று அவர் கூறினார். திருவிழா வரும் சமயத்தில் மக்கள் இன்னமும் தாராளமாக தருவார் அன்று 300 ரூபாய் வரை கிடைக்கும், ஆனால் பெரும்பாலான நாட்களில் 50 முதல் 100 ரூபாய் தான் என்னால் பெற முடியும் சில நேரங்களில் அது பத்து ரூபாய் வரைகூட குறையும்.

சில நேரங்களில் என் இளைய மகனை என்னுடன் அழைத்துச் செல்வேன் நாங்கள் இருவரும் பிச்சை கேட்டு செல்வோம். அவனை பார்த்த பின்பு மக்கள் பிஸ்கட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவினை எங்களுக்கு தருவார்கள். ஆனால் நான் அவனை அடிக்கடி என்னுடன் அழைத்து வருவதில்லை ஏன் ஏனென்றால் பல மணி நேரம் நடந்தால் அவன் சோர்ந்து போய் விடுவான் என்று மனிஷாபென் கூறுகிறார். மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் ஜலராம் உணவகம் மற்றும் அருகில் உள்ள வீடுகளை சேர்ந்தவர்கள் எங்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். “அது எங்களுக்கும் எங்களது வீட்டில் இருக்கும் மூன்று குழந்தைகளுக்கும் போதுமானதாக இருக்கிறது”, என்று அவர் கூறுகிறார். கேசியா கிராமத்தைச் சேர்ந்த பார்வத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தானமாக வழங்கிய ஒரு குவிண்டால் (100 கிலோ) கோதுமை அவர்களுக்கு உணவிற்கு உதவி வருகிறது.

டயாலிசிஸ் ஆரம்பித்ததும் மனிஷாபென் காத்திருப்போருக்கான  அறையில் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்னரும் அவர்கள் மனிஷாபென்னின் கை நாட்டை பெறுகின்றனர் மேலும் அவருக்கு தெரியும் மருத்துவமனை இதை ஏன் செய்கிறது என்றால் சிகிச்சையின் போது நோயாளிக்கு ஏதாவது ஏற்பட்டால் மருத்துவமனை பொறுப்பல்ல என்பதற்காகத்தான் கேட்கிறார்கள்  என்று. “சில நேரங்களில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டியிருக்கும் மேலும் அதற்கு மருத்துவமனை நிர்வாகிகள் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே கட்டச் சொல்வார்கள்”, என்று அவர் கூறினார்.

ஒரு சிறுநீரக நோயாளியாக விரம்பாய்க்கு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த பிரதான் மந்திரி ஜன் அரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும். விரம்பாய்க்கு ஒரு வருடம் கழித்து 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அதற்கான அட்டை கிடைத்தது. மேலும் அதை இப்போது அவர் தினசரி டயாலிசிஸ் செலவிற்கு பயன்படுத்தி வருகிறார் அது ஒரு முறை சிகிச்சை செய்வதற்கு 650 ரூபாய் பணமில்லா பரிவர்த்தனை நடைபெறுகிறது . விரம்பாய் அண்மையில் 2012ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசால் தொடங்கப்பட்ட முக்கிய மந்திரி அம்ருதா அட்டை குறித்து அறிந்தார். அதற்கும் விண்ணப்பித்து ஒரு வருடத்திற்கு முன்பு அதையும் பெற்றுவிட்டார். PMJAY மற்றும் அமிர்தம் ஆகிய திட்டங்கள் இரண்டும் இணைந்து செயல்பட்டு ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் 300 ரூபாய் வரை ஒரு நாளைக்கு பயணப்படியும் கொடுத்து வருகிறது. “இரத்தப் பரிசோதனைக்காக ஒவ்வொருமுறையும் ஆயிரம் ரூபாய் செலவு செய்வது இதில் அடங்காது, மேலும் கடந்த சில மாதங்களாக பயணப்படி தருவதையும் நிறுத்திவிட்டனர். ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை”, என்று மனிஷாபென் கூறுகிறார்.

மருத்துவமனைக்கு அவர்கள் செல்லாத நாட்களில் மனிஷாபென் அவரது கணவருடன் கூடவே இருக்கிறார். ஒரு 48 மணி நேரத்திற்கு ஒரு முறையும் டயாலிசிஸ் செய்வதால் அவரது ரத்த அழுத்தம் குறைந்து போயிருக்கிறது மேலும் அவர் அடிக்கடி கிறுகிறுப்பு வந்துவிடுகிறது நடக்கும்போது கூட சில சமயங்களில் கீழே விழுந்து விடுவார். முதல் ஊரடங்கின் பொழுது மனிஷாபென்னும் விரம்பாயும் அவர்களது சுற்றத்தாரிடமிருந்து மோட்டார் பைக்கை வாங்கி அதில் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். “ஒவ்வொரு பயணத்தின் போதும் 200 முதல் 300 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் அதை பெற்றுச் செல்வோம். போலீசாரின் சோதனையை தாண்டி செல்ல நாங்கள் அத்தனை விதமான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும. அது இன்னும் கூடுதல் சிரமமாக இருந்தது ஏனென்றால் அவருக்கு அடிக்கடி கிறுகிறுப்பு வரும்”, என்றார் மனிஷாபென்.

இரவில் இத்தம்பதியினர் வீட்டுக்கு திரும்பியதும் மனிஷாபென் பகலில் சேகரித்த உணவை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கிறார். புகைப்படம்: மீட் ககாதியா

ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள ஜோடியா தாலுகாவில் இருக்கும் கேசியா கிராமத்தில் மனிஷாபென்னின் பெற்றோருடன் அவரது குழந்தைகள் தங்கி இருந்தனர். அங்குள்ள கிராம பள்ளியில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடியிருப்பதால், வேலை வாய்ப்பும் குறைந்துள்ளதால் மனிஷாபெனின் தாயால் இவரது குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை மனிஷாபென்னிடமே அனுப்பிவிட்டார்.

இத்தம்பதியினர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு திரும்புகின்றனர் அவர்களால் சேகரிக்க முடிந்த உணவை குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். நாள் முழுவதும் குழந்தைகள் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் இருப்பது பற்றி அவர்கள் கவலை கொள்கின்றனர். அவர்கள் வாழும் இடத்தில் சமீப காலமாக குழந்தை திருட்டு வேறு அதிகரித்து வருவதாக கூறுகிறார் மனிஷாபென். சில நேரங்களில் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது நோய்க்கு சிகிச்சை அழைப்பது தாமதமாகும் அப்போது வீட்டில் தனியாக இருக்கும் எங்களது குழந்தைகளை குறித்து எங்களது கவலை இன்னும் அதிகமாகும்”, என்று கூறுகிறார்.

அத்தம்பதியினர் தங்களால் வேலை செய்து பணம் ஈட்டிய காலத்தை நினைவு கூறுகின்றனர் அப்போது அவர்கள் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. “ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த பொழுது இந்த வீட்டை விற்றுவிடலாம் என்று நாங்கள் எண்ணினோம், நல்லவேளையாக நாங்கள் அப்படிச் செய்யவில்லை. அதுதான் இன்று எங்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. என்ன நிலை வந்தாலும் இந்த வீட்டை விற்றுவிடக் கூடாது என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம் ஏனெனில் வேறு எங்கு எங்களது குழந்தைகள் தங்குவார்கள்?” என்று கேட்கிறார் விரம்பாய்.

Editor's note

மீத் கக்காடியா அகமதாபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற வடிவமைப்பு மாணவராக இருக்கிறார். ராஜ்கோட்டில் உள்ள அவரது வீட்டின் அருகில் மனிஷாபென் பணம் மற்றும் உணவினை பெற்றுவந்தார். அதனால் அவர் அவரிடமும் அவரது கணவரிடமும் இந்த கதையை கேட்டு பெற்றுள்ளார். இந்தக் கதையை எழுதும்போது தான் நாட்டில் குத்தகை விவசாயிகளின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. நகர்ப்புற வடிவமைப்பின் மாணவராக இருக்கும் என்னை நகர்புறத்திற்கு கிராமப்புறத்திற்கும் இடையிலான தொடர்பு மற்றும் சுகாதார வசதி போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அணுகல் குறித்து இது என்னை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது.  

தமிழில்: சோனியா போஸ்

சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.