பல்ஸ்வா என்பது டெல்லியின் பெரும் குப்பை கிடங்கு. வீடற்ற புலம்பெயர் தூய்மை தொழிலாளிகளின் வீடும் அதுவே. 2022ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் போது இந்த இடம் மீடியா கவனத்திற்கு வந்தது. ஆனால் அங்கிருந்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை

பல்ஸ்வா குப்பைக்கிடங்கு குதூப் மினார் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இரண்டுமே இந்தியாவின் தலைநகரத்தில் அமைந்துள்ளன. இரண்டுக்கும் அது மட்டும்தான் ஒற்றுமை.

கட்டடக்கலையின் அடையாளமான வடக்கு டெல்லியில் அமைந்துள்ள குதூப் மினாருக்கும், இந்த சிறு குப்பை மலைக்கும் வேறு ஒற்றுமைகள் இல்லை. தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) அளித்த அறிக்கையின்படி, பல்ஸ்வாவில் குப்பை மலை 62 மீட்டர் உயரத்தில் 78 ஏக்கர் நிலப்பரப்பில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டே இது அளவுக்கு அதிகமான குப்பைகள் நிறைந்த கிடங்காக அறிவிக்கப்பட்டு விட்டது. அரிதாகவே அரசு அதிகாரிகளும் இந்த இடத்தை ஆய்வு செய்கின்றனர்.

ஏப்ரல் 25,2022 அன்று திடீரென்று இந்த குப்பைக்கிடங்கு தீக்கிரையான போது அங்கிருந்த காகிதம் சேகரிப்பவர்கள், குப்பை வண்டி ஓட்டுனர்கள் எனப் பலரும் பிளாஸ்டிக் எரியும் நச்சுப்புகையால் பாதிக்கப்பட்டனர்.

இதே இடத்தில 25 வருடமாக குப்பைகள் சேகரித்து பிழைத்து வரும் சுனிதா தேவி கூறும்போது, “நாங்கள் அந்த புகையில்தான் வாழ்ந்தோம். அதே புகையில்தான் சாப்பிட்டோம். எங்கள் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர்” என்று சொன்னார். 45 வயது மிக்க அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்கள், பேரப்பிள்ளைகளோடு இங்கு வசித்து வருகிறார். செய்திகளில் நான்கு நாட்களில் தீயை அணைத்து விட்டதாக கூறினார்கள் என்றும் ஆனால் தீயை அணைக்க ஒரு மாதம் ஆனது என்றும் அவர் கூறுகிறார்.

சுனிதாவின் பேரக்குழந்தைகள் புகையால் உடல்நல பாதிப்புக்குள்ளான பிறகு அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம்  மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றார். மருத்துவர்களோ இந்த பிரச்சனைக்கு நீண்ட கால மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார்கள். ஆனால், சுனிதாவின் குடும்பத்தால் அதற்கான செலவுகளை செய்ய முடியாது. எனவே  அந்த குழந்தைகள் தாமாகவே சரியாகி கொள்வது மட்டுமே வழி.

*****

இங்கு பரவி வந்த புகையால் என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இங்கே குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அல்குன் பீபி. குப்பைகளை எரிப்பதால் உண்டாகும் நச்சு புகையாலும், சுற்றுசூழல் மாசுபாட்டாலும் அவரது பார்வை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

அல்குன் தனது மூத்த மகளின் ஆலோசனைப்படி கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தவர். இங்கே கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று அவர் நம்பினார். குப்பைக்கிடங்கில் உள்ள பாதாள சாக்கடைக்கு மேல் அமைக்கப்பட்ட சிறிய குடிசையில் வாழ்ந்து வருகிறார் அவர். “நீங்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வந்திருந்தாலும் சரி, எல்லாமே ஒன்றுதான். எல்லாரும் ஏழைதான்” என்று இங்கு வந்த பிறகுதான் அல்குன் புரிந்து கொண்டுள்ளார். அவரின் பார்வை திறன் குறைபாடு மற்றும் உடல் நல பிரச்சனைகளால் சமீபத்தில் வேலைக்கு போவதை நிறுத்தியுள்ளார் அல்குன்.

கேசவ்பூர் மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீட்டு உபயோக மற்றும் நிறுவனக் கழிவுகள் எல்லாமும் இங்குதான் கொட்டப்படுகின்றன. “தினந்தோறும் இங்கு 4 முதல் 5 மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்படுகிறது. 2006ம் ஆண்டு நிரம்பிவிட்ட குப்பை கிடங்காக இது அறிவிக்கப்பட்ட போதும் கூட அரசால் எந்த பணியும் இன்னும் இங்கு நிறுத்தப்படவில்லை” என்று கூறுகிறார் வேத் என்டர்ப்ரைஸஸ் ஓனர் ராஜேந்திர குமார். இவரின் நிறுவனம்தான் பல்ஸ்வாவில் குப்பை சேகரிப்பவர்களையும் வாகன ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்துகிறது.

20 வருடத்திற்கு முன்பு உத்திரபிரதேசத்தில் இருந்து பல்ஸ்வாவுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளார் சுந்தர் குமார். குப்பைக்கிடங்கில் வாகன ஓட்டுநராக இவர் பணிபுரிகிறார். “இந்த பகுதி காற்றில் உலவும் மோசமான துர்நாற்றத்தால் தினந்தோறும் நான் தூங்க போகும்போது, எனக்கு தலை வலிக்கும். எனக்கு சுவாசப் பிரச்சனைகள் இருப்பதால் அதுவும் தூங்க விடாமல் என்னை தொந்தரவு செய்யும்,” என்றும் தனது உடல்நலத்திற்காக என்னால் செலவு செய்ய முடியாது என்றும் கூறுகிறார் சுந்தர்.

இங்கு வசிக்கும் பலரும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு எங்கும் போவதற்கு நிலம் அற்றவர்கள். அருகில் தன்னால் எந்த வேலையையும் கண்டுபிடிக்க முடியாததால்தான் குப்பை சேகரிப்பவராக பணிபுரிய வேண்டியுள்ளது என்கிறார் சுனிதா. அவரது இறந்து போன கணவர் மட்டுமே குடும்பத்தில் ஆதார் கார்டு வைத்திருந்தவர். சில வருடங்களுக்கு முன்பு அவரும் மாரடைப்பால் இறந்துவிட இவர்களுக்கு ரேஷன் கிடைப்பதும் நின்று விட்டது. எந்த விதமான சட்டபூர்வ அடையாள அட்டையும் இல்லாமல், சுனிதாவால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ஆதார் அல்லது ரேஷன் கார்டு கூட வாங்க முடியவில்லை.

”இந்தப் பகுதியில் ரேஷன் கடைகளே கிடையாது. எங்களுக்கு தண்ணீர் கூட கிடைக்காது என்று சொல்கிறார் சுந்தர். சுகாதாரமான தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுவதால் இங்கிருப்பவர்கள் வெளியிலிருந்துதான் தண்ணீர் பெற வேண்டியுள்ளது. எப்போதாவது தண்ணீர் லாரி வரும். அதுவும் தொடர்ந்து வராது. தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் எங்களிடம் அதிக பணம் கேட்பார்கள். எங்களிடம் சேமிக்கக் கூட பணம் இருக்காது,” என்று கூறுகிறார் மாதம் 7000 முதல் 10,000 வரை சம்பாதிக்கும் சுந்தர். அதுவும் அவர் சேகரிக்கும் குப்பையின் அளவை பொறுத்ததே ஆகும்.

“இது என்னுடைய இயலாமை, வேறு எங்கு சென்று நான் வாழ்வது?,” என்று கேட்கிறார் அவர்.

சுனிதாவின் பேரக்குழந்தைகள் பல்ஸ்வாவில் உள்ள ஒரே பள்ளியான தீப்தி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனப் பள்ளியில் படிக்கிறார். இந்த பகுதியை சேர்ந்த பல குழந்தைகளும் அங்குதான் படிக்கிறார்கள். அப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பாடம் சொல்லி தரப்படும். அதற்கு மேல் படிக்க விரும்புபவர்கள் இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நவ் ஜோதி பப்ளிக் பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். தனியார் பள்ளிகள் எல்லாம் பொருளாதார ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் எங்களை விட்டு தொலைவில் தான் இருக்கின்றன என்று கூறுகிறார் சுனிதா.

“எங்களுக்கு இங்குள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். படிக்க வேண்டும். இந்த வேலையையே தொடர்ந்து செய்யக் கூடாது. எங்களுக்கு ஒரு நம்பிக்கை வேண்டும்” என்று கூறுகிறார் சுனிதா.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

நவ்யா அஸோபா அசோகா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் படித்து வருகிறார். இந்த கட்டுரை பற்றி அவர் கூறும்போது, ”ஒவ்வொரு முறை இந்த இடத்தை பேருந்தில் கடந்து செல்லும்போதும், என்னுடைய சக பயணிகள் ஜன்னலை மூடி கொள்வார்கள் அல்லது தலையை திருப்பிக் கொள்வார்கள். விளைவாக, எப்படி மக்கள் இது போன்ற குப்பைக்கிடங்குகளில் பணிபுரிகிறார்கள், எதற்காக இது போன்ற குப்பை கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஏன் யாரும் இதை பற்றி பேசவே மறுக்கிறார்கள் என்ற சிந்தனை எனக்குள் தோன்றியது?”

தமிழாக்கம்: சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திர போஸ் சென்னையை சேர்ந்த பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.