
“நான் எனது தையல் இயந்திரம், மேஜை, இயந்திரத்தை மூடும் துணி…. மற்றும் பிற உபகரணங்களை இந்த இடத்திற்கு தினமும் எடுத்துக்கொண்டு வருவேன். மழை பெய்தாலும் வந்துவிடுவேன்” என்று தவுலத் ராம் கூறுகிறார். பெரிய மரத்திற்கு அடியில் இருக்குமிடம்தான் அந்த தையல்காரரின் தற்போதைய பணியிடம். அவர் வழக்கமாக இருக்கும் இடம் குருகிராமின் 40வது பிரிவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையின் நடைபாதையில் மஞ்சள் நிற தற்காலிக டெண்ட் துணி போடப்பட்டுள்ளது. இந்த இடம் முக்கிய சந்தைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. “என்னிடம் நிலம் இல்லாவிட்டால், என்னால் கிராமத்தில் வேறு எந்த தொழிலும் செய்து வருமானம் ஈட்ட முடியாது. எனவேதான் நான் இங்கு (நகரத்திற்கு) வந்துவிட்டேன்“ என்று 50 வயதான, ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கார் தாலுகாவைச்சேர்ந்த தவுலத் ராம் கூறுகிறார்.


ரமேஷ் தவுலத் ராமுக்கு மிகத்தொலைவில் இல்லை. உத்தரப்பிரதேசத்தின் மஹாராஜ்கஞ் மாவட்டத்தில் இருந்து குருகிராமுக்கு 2011ம் ஆண்டில் வந்தவர் ரமேஷ். வீடுகள் முதல் வங்கிகள் வரை, உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகள் நிறைந்த ஹீடா சந்தையில் மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் கொடுத்து ஒரு இடத்தை அவரால் எடுக்க முடியாது. மாறாக 38 வயதான அவர் தனது தையல் இயந்திரத்தை பாதையில் உள்ள நாவல் மரத்தின் நிழலில் வைத்துக்கொள்கிறார். “கோவிட்டுக்கு முன்னர் என்னால் ஒரு நல்ல நாளில் ரூ.500 சம்பாதிக்க முடியும். தற்போது அது மிகக்கடுமையாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். மாலையில், ரமேஷ் (இந்த பெயரைத்தான் குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறார்) இரண்டு கிலோ மீட்ட தொலைவில் ஒரு வாடகை அறையில் தங்கியுள்ளார். தையல் இயந்திரம் வைக்கும் மேடையை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் சங்கிலியால் கட்டி பூட்டி வைத்துள்ளார். தவுலத் ராமை போல் அவரும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தையல் இயந்திரம் மற்றும் மற்ற பொருட்களையும் வைத்துள்ளார்.
“நான் எனது தையல் இயந்திரத்தை பொருத்தி காலை 9.30 மணியளவில் வேலையை துவக்குவேன். இரவு 7.30 வரை இங்கு இருப்பேன்.” என்று முகமது அன்சாரி (32) கூறுகிறார். இவரும் ஒரு புலம்பெயர் தையல் தொழிலாளர். பீகார் மாநிலத்தின் புர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2011ல் நல்ல வாழ்க்கையை தேடி முகமது குருகிராமுக்கு வந்தார். 2019 மார்ச்சில் முதல் ஊரடங்கு காலத்தில் அவரது வேலைகள் நின்றபோது, அவரது கிராமமான பன்மன்கிக்கு திரும்பிச் சென்றுவிட்டார். மீண்டும் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கு திரும்பி வரும்வரை ஒன்றரை ஆண்டுகள் அங்கு விவசாயம் செய்தார்.


இரண்டு ஆண்டுகள் அனுபவமிக்க தையல் கலைஞர்களிடம் இருந்து தையல் கற்றுக்கொண்ட பின்னர் கமால், ரூ.6 ஆயிரத்திற்கு சொந்தமாக ஒரு தையல் இயந்திரத்தை வாங்கி வேப்ப மரத்தின் கீழ் வைத்து தொழில் செய்துகொண்டிருக்கிறார். இந்த இடமும் தவுலத் ராம் மற்றும் ரமேஷ் இருக்கும் இடத்திற்கு வெகு தொலைவில் இல்லை. இவர் பிகாரின் அராரியா மாவட்டத்தில் இருந்து 2006ம் ஆண்டு குருகிராமுக்கு இடம்பெயர்ந்தவர்.
பிகார், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இந்த நான்கு தையல் கலைஞர்களும், குருகிராமில் இந்த இடத்தில் ஒவ்வொரு மரத்தின் நிழலையும் தங்களுக்கென்று தேர்ந்தெடுத்துக்கொண்டு, அங்கு அவர்களின் கடைகளை அமைத்துக்கொண்டார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு கிழிந்த துணிகளை தைத்துக் கொடுப்பது, மாற்றங்களை செய்வது, சில நேரங்களில் முழுதாகவே தைத்துக்கொடுப்பது முதலிய வேலைகள் செய்கிறார்கள். ஒரு கால் சட்டையின் உயரத்தை குறைப்பதற்கு, அவர்களுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை துணியை பொறுத்து கிடைக்கிறது. கையில் செய்யக்கூடிய வேலையென்றால், இன்னும் சிறிது அதிகம் கிடைக்கும்.


“பல நாட்கள் நான் இங்கு 10 மணி வரை இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் நாளுக்கு 5 பேர் அதிகரிக்கிறார்கள். அவர்கள் அனைவரின் துணியையும் தைத்து முடிக்கும் வரை நான் இங்கிருந்து கிளம்ப விரும்புவதில்லை“ என்று கமால் கூறுகிறார். அவர் பணத்தை சேமித்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்புகிறார்
ஊரடங்கு அவர்களின் தினசரி வருமானத்தில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தியது. “முதல் ஊரடங்கு காலத்தில் எனக்கு இங்கு எந்த வேலையும் இருக்கவில்லை. எனக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை” என்று கமால் கூறுகிறார். அவர் தனது கிராமத்திற்கு சென்றுவிட்டு, 9 மாதங்களுக்கு பின்னரே திரும்பினார். “நான் திரும்பி வந்த பின்னரும், எனக்கு அரிதாகவே வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். தற்போது நான் எட்டரை மணிக்கு கிளம்பி சைக்கிளில் ஒன்பது மணிக்கு இங்கு வருகிறேன். பல நாட்கள் நான் இங்கு 10 மணி வரை இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் நாளுக்கு 5 பேர் அதிகரிக்கிறார்கள். அவர்கள் அனைவரின் துணிகளையும் தைத்து முடிக்கும் வரை நான் இங்கிருந்து கிளம்ப நினைப்பதில்லை” என்று கமால் மேலும் கூறுகிறார்.
கமாலுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 5 வயதான அவரது மூத்த குழந்தை இப்போதுதான் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் பால்வாடியில் சேர்ந்துள்ளார். துபா என்ற இரண்டு வயது குழந்தையும் உள்ளது. இங்கு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து கிராமத்தில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு அவர் அனுப்புகிறார். அவ்வப்போது சென்று சந்தித்தும் வருகிறார்.
ரமேஷும் அவரது வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதைக் கண்டார். அதனால், அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர் தனது கிராமமான சைன்பூருக்கு திரும்பிச்சென்றார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் குருகிராமிற்கு திரும்பினார். “வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தினமும் இங்கு வருவேன். நான் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்வேன். மழை நாட்களில் மட்டும் நான் வேலை செய்வதில்லை. ஏனெனில் இங்கு போதிய நிழல் வசதி இல்லாததால், அந்த நாட்களில் வேலை செய்ய முடியாது” என்று கூறுகிறார். அவரின் 16 மற்றும் 13 வயது குழந்தைகள் (பெயரை குறிப்பிட அவர் விரும்பவில்லை) ஒரு சிறிய தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். ஊரடங்கு நாட்களில் அவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் வசதியின்மையால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் வகுப்புகளுக்கு செல்லவில்லை. முதல் ஊரடங்கு காலம் துவங்கியது முதல் கோவிட் தொற்று மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக அவர் இடையிடையே மட்டும் வேலை செய்தார். “எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் நான் பணம் அனுப்புவேன் என்று காத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.


ரமேஷுக்கு இங்கு வருமானம் குறைந்து வாழ்க்கை கடுமையானது. அதனால் அவர் தனது கிராமமான சைன்பூருக்கு திரும்பிச்சென்றார். ‘காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்வேன். மழை நாட்களில் மட்டும் நான் வேலை செய்வதில்லை. ஏனெனில் இங்கு போதிய நிழல் வசதி இல்லாததால், அந்த நாட்களில் வேலை செய்ய முடியாது“ என்று அவர் கூறுகிறார். புகைப்படங்கள் எடுத்தவர் அமையா பலோத்ரா
“எனக்கு இங்கு உணவு கிடைக்காததால், நான் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றேன். மூன்று மாதங்கள் கழித்து நான் திரும்பி வந்தேன்,” என்று தவுலத் ராம் கூறுகிறார். முதல் ஊரடங்கில் அவர் தனது சொந்த ஊரான ஆல்வாருக்கு சென்றுவிட்டார். அவர் குருகிராமுக்கு திரும்பி வந்த பின்னர் அவரின் வாடிக்கையாளர்கள் பாதியளவுக்கும் குறைவாக குறைந்துவிட்டதை கண்டார். அண்மையில்தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிடுக்கு முன்னர் அவர் மாதத்திற்கு எளிதாக ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டினார். தற்போது அவரால் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.7 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஈட்ட முடிகிறது. “சில நாட்கள் எனக்கு ரூ. 30 கிடைக்கும். சில நாட்கள் ரூ.50 கிடைக்கும். நேற்று எனக்கு ரூ.200 கிடைத்தது. என்னால் எப்படி எனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்? ,” என்று அவர் கேட்கிறார்.
தவுலத் ராம் 35 ஆண்டுகளுக்கு முன்னர் தைக்க துவங்கினார். “நான் இங்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன். இங்கு தினமும் அமர்ந்திருக்கிறேன்,” என்று அவர் தனது இடத்தை சுட்டிக்காட்டி கூறுகிறார். அவர் நல்ல வருமான வாய்ப்புகளும் தனக்கு, தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுக்கும் நிலையான வாழ்க்கை முறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தார். அவரது தையல் வேலைகளில் அவரது மனைவி சில நேரங்களில் உதவுகிறார். அவரது 18 மற்றும் 15 வயது மகன்கள் இருவரும் உள்ளூர் அரசுப் பள்ளியில் 11 மற்றும் 8ம் வகுப்பு படிக்கிறார்கள். 24 மற்றும் 22 வயதான அவரது மகள்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார்கள். தையல் தொழிலாளர்களுக்கு கிராமங்களில் அதிக வேலை இருக்காது என்று தவுலத் ராம் கூறுகிறார். “பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உடைகளை மாற்றி தைப்பதற்கு கொடுத்துவிடுவார்கள். ஆனால் உடனே அதற்கான பணத்தை கொடுக்க மாட்டார்கள். நாமாக கேட்டாலும், ‘நாங்கள் ஒன்றும் ஊரை விட்டு சென்றுவிடமாட்டோம்’ என்பார்கள். கிராமத்திற்கு திரும்பி செல்வதிலும் பிரச்சினை உள்ளது. இங்கேயே தங்கியிருப்பதிலும் பிரச்சினை உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
Editor's note
அமையா பலோத்ரா, ஹரியானா சோனிபாடில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு இதழியல் மற்றும் ஊடகவியல் படிக்கும் மாணவி. அவர் 2021ம் ஆண்டு பாரியின் பயிற்சியில் கலந்துகொண்டார். கடையின்றி, சாலையோரங்களில் தையல் இயந்திரம் வைத்து தொழில் செய்யும் நபர்கள் போன்ற சாலையோர வியாபாரிகள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து எழுத விரும்பினார். “நான் இதுபோன்ற தொழிலாளர்களை நகர் முழுவதும் அடிக்கடி பார்ப்பேன். நான் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருக்கிறேன். பாரியுடன் பணிபுரிந்ததில், அவர்களுக்காக பேசுவதைக் அவர்களின் பேச்சும் கேட்கப்படுவது முக்கியம் என்பதை தெரிந்துகொண்டேன்.”
தமிழில்: பிரியதர்சினி. R.
பிரியதர்சினி. R. ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.