‘இந்த  அரசாங்கம்  எங்களுக்கு எதாவது  நன்மை  செய்ய விரும்பினால், என்னைப் போன்ற விவசாயிகள் பெற்றுள்ள கடனை  திரும்ப  செலுத்துவதிலிருந்து விலக்களிக்குமாறு  கூறுங்கள்’ என்று 80 வயதான  ஜஸ்பால்  கவுர்  கூறுகிறார். பட உதவி: தஞ்சல் கபூர்

வட இந்தியாவில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கு குறைந்துக் கடும்குளிர் நிலவிய போது, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக முகாம்களிலும், குடில்களிலும் தங்கிப் போராடி வந்த 83 வயதான ஹர்புல் சிங் நோய்வாய்ப்பட்டார். இதன்காரணமாக அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், மார்புப்பகுதியில் வலியும் ஏற்பட்டிருந்தது.

அவரும் அவரது மனைவியான 80 வயதான  ஜஸ்பால் கவுர் ஆகிய  இருவரும்,அகில இந்திய கிரந்திகரி கிஷன் சபாவின்  உறுப்பினர்கள் ஆவர்.  இவர்கள்  இருவரும்  கடந்த நவம்பர் 26 அன்று, டிராக்டர்  பேரணியாக   11-12 விவசாயிகளுடன்  இணைந்து ஹரியானா- டெல்லி எல்லையில் உள்ள  சிங்கு போராட்டக்களத்திற்கு வந்து  சேர்ந்தனர். இந்நிலையில், கடந்த  டிசம்பர் 21 அன்று,ஹர்புல் சிங்கிற்கு  உடல்நிலை  மோசமடைந்த நிலையில்,  பஞ்சாப் மாநிலம் பாதேஹ்கார் சாஹிப் மாவட்டத்தில் உள்ள அவர்களின்  சொந்த  ஊரான   சோஹாக் கிராமத்திற்கு  திரும்பினர், போராட்டக்களத்தில் இருந்து அவர்களது கிராமம் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் ஊருக்கு திரும்பிய மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் 24 அன்று ,ஹர்புல் சிங் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், ஹர்புல் சிங்  இறந்த  பத்து நாட்கள் மட்டுமே கடந்த நிலையில்,  அவரது மனைவி ஜஸ்பால் கவுர் மீண்டும்  சிங்கு போராட்டக்களத்திற்கு  திரும்பியுள்ளார். இதுகுறித்து  தெரிவித்துள்ள  ஜஸ்பால் கவுர்,”எனது கணவர் எனக்காகவும்  பிள்ளைகளுக்காகவும் எங்களது நிலத்திற்காகவும்   தன் வாழ்வையே அர்ப்பணித்திருந்தார்.எனவே நாங்கள்  தொடங்கியப்  போராட்டத்தை  தொடர்வதற்காக  மீண்டும்  போராட்டக்களத்திற்கு  திரும்பியிருக்கிறேன்” என்று  கூறிய அவர், மேலும், “எங்களது கிராமத்தில்  இருந்து  தினந்தோறும் எண்ணற்ற வண்டிகள்  வந்து  போய்க்கொண்டிருந்தது. அதில்  ஒன்றில்  ஏறி  இங்கு திரும்பி வந்தேன்” என்று  தெரிவித்துள்ளார். 

நாங்கள்  ஜனவரி மாதம் ஜஸ்பால்  கவுரை சந்தித்த  போது, முகாமில்  ஒன்றிணைந்த சமூக சமையலறையின் வழியாக  மதிய உணவு  தயாரித்துக் கொண்டிருந்த பெண்கள்  சூழ கூடாரத்தில்  அமர்ந்திருந்தார்.அந்த   தற்காலிக சமையலறையின்  சலசலப்புக்கு  மத்தியிலும்   அவர்களது  வேலை அமைதியாகவே   நடந்துகொண்டிருந்தது. தரையில் அமர்ந்தபடி அடுப்பில்  வெந்து கொண்டிருந்த  ரொட்டிகளில் நெய் தடவி  ஜஸ்பால் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது  அங்கு நிலவிய  குளிர்காலம்  குறித்து  தெரிவித்த அவர்,”சிலநேரங்களில் அதிக குளிராக (இரவுகளில்)உள்ளது.அதுமட்டுமல்லாது, என் கால் மூட்டுகளில் கடுமையான  வலி நிலவுகிறது. ஆனால் நாங்கள் விவசாயிகள், எனவே  எங்களுக்கு  வலிகளும்  இழப்புகளும்    ஒன்றும்  புதிதில்லை ” என்று  கூறியிருந்தார்.

அவரது மகன்கள் அவரை போராட்டக்களத்தில் வந்து பார்த்துவிட்டு  செல்கின்றனர். ஜஸ்பாலின் குடும்பத்திற்கு சொந்தமாக நெல்  விலையக்கூடிய  1 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த  நிலத்தை   ஹர்புல் சிங் உயிரோடு  இருந்த  போதே  தனது மகன்கள்  இருவருக்கும்  பகிர்ந்தளித்திருந்தார்.

விவசாயிகள் பெற்றுள்ள   கடன் குறித்து  தெரிவித்த   ஜஸ்பால் கவுர் , “நான் எனது கணவரை இழந்துள்ளேன்,ஆனால் என் நிலத்தை  இழக்க  முடியாது. அரசாங்கம்  எங்களுக்கு எதாவது  நன்மை  செய்ய விரும்பினால், என்னைப் போன்ற விவசாயிகள் பெற்றுள்ளக்  கடனை  திரும்பச்   செலுத்துவதிலிருந்து விலக்களிக்குமாறு கூறுங்கள், நான்  என்னுடைய  மொத்த வாழ்க்கையையும் விவசாயத்திற்காக  செலவிட்டிருக்கிறேன்.  இது நீங்கள்  ஓய்வூதியம் பெறும் மற்ற வேலைகளைப்  போல அல்ல , நான் படிக்கவில்லை, நான் எனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறேன். தற்போது நான் எனது  கணவரையும்  இழந்துள்ளேன். எனவே அரசை எங்களுக்குப்  நிதி உதவி  வழங்க (ஓய்வூதியமாக) சொல்லுங்கள், ” என்று தெரிவித்திருந்தார்.

ஜஸ்பால்  பெற்றுள்ள  கடன்  குறித்து அவரால் தெளிவாக குறிப்பிட இயலவில்லை. மேலும், ஜஸ்பால் கவுர் குடும்பத்தைப் போன்று   எண்ணற்ற விவசாயக் குடும்பத்தினரும்  கடன் பெற்றுள்ளனர்.   கடந்த 2018 ஆம் ஆண்டு  வேளாண்மை மற்றும்  ஊரகவளர்ச்சிக்கான தேசிய வங்கி நடத்திய  நிதி சேர்க்கை கணக்கெடுப்பில் பஞ்சாபில்  உள்ள குடும்பங்களில்   44 சதவீத  (விவசாயம்) குடும்பங்கள்  கடன் பெற்றுள்ளதாக தெரிய வந்தது ,  இது இந்தியாவின் விகிதமான 52.5 சதவீதத்தை விடக் குறைவாகும். சராசரி கடன் தொகை 104,602 ரூபாய் நிலுவையில் உள்ளது.

அரசு  ஓய்வூதியமாகவோ, கடன் தள்ளுபடியாகவோ எந்த நிதி  உதவியும் வழங்காதச்   சூழலில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள  புதிய  வேளாண் சட்டங்கள், அவரைப் போன்ற  எண்ணற்ற விவசாயிகளின்  வாழ்க்கையை  இன்னும்  மோசமடைய  செய்யும் என்று  ஜஸ்பால் கவுர் கூறுகிறார்.  இதுகுறித்து  தெரிவித்த அவர்,” இந்த  புதிய சட்டங்களால் , மண்டியானது பிரஜாபதிகளின்    (நிர்வாகிகள்/அதிகாரிகள்) கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்,அவர்களது விருப்பப்படி  விலை நிர்ணயிக்கப்படும்”என்றும்   கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 26 அன்று,  டெல்லி எல்லையில்  உள்ள  எண்ணற்ற  இடங்களில்   10,000 க்கும்  மேற்பட்ட  விவசாயிகள்,  ஒன்றிய அரசு அறிவித்த வேளாண்  சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய அரசு அறிவித்த புதிய வேளாண் சட்டங்களான,  விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020  ஆகிய சட்டங்கள் விவசாயிகளுக்கு  எதிராக உள்ளதாகவும்  எதிர்ப்புத்   தெரிவித்திருந்தனர். கடந்த 2020 , ஜூன் மாதம் 5 ஆம் தேதி அன்று,   முதன் முதலாக இதற்கான   மசோதா  கொண்டுவரப்பட்டு , செப்டம்பர்  14 அன்று நாடாளுமன்ற  ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு , அந்த மாதம் 20 ஆம் தேதி  சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 

 இந்த  வேளாண்மை சட்டம், விவசாயத்தில்  பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அதிகாரம்  அளிப்பதாலும் , அது போன்ற நிறுவனங்களுக்கே   அதிக  முக்கியத்துவம்  அளிப்பதாலும்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  சூறையாடும்  பேரழிவுச்  சட்டமென விவசாயிகள்  கருதுகின்றனர்.  மேலும், பயிரிடும் விவசாயிகளுக்கு  உதவ நினைத்தால் குறைந்தபட்ச ஆதாரவிலை(MSP) , விவசாய உற்பத்தி பொருட்கள்   சந்தைப்படுத்தல் குழு(APMCs), மாநில அரசே கொள்முதல்  செய்வது போன்ற  எண்ணற்றவைகளை அரசு   உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும்  கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது, இந்த சட்டம்  இந்தியா  அரசியல் சாசனம்  பிரிவு  32 ல்   வழங்கியுள்ள,  அனைத்து குடிமக்களின் சட்ட உதவிக்கான உரிமையை மீறுவதால் விவசாயிகள் மட்டுமல்லாது, ஒவ்வொரு  இந்தியக் குடிமகனும் பாதிப்படைவதாகவும் விமர்சனத்துக்கு  உள்ளாகியுள்ளது.

போராட்டக்களத்தில் தனது செயல்பாடு  குறித்து  தெரிவித்த  மூதாட்டி  ஜஸ்பால் கவுர், “இந்த அரசு கருப்பு சட்டங்களை கொண்டு வந்த போது , நீ என்ன  செய்து  கொண்டிருந்தேன் என்று,  என் பேரக்குழந்தைகள்  என்னை பார்த்து  கேட்டால், நான்  என்ன பதில் சொல்லுவேன்?  , என் கணவர்  எங்களது  எதிர்காலத்திற்காக  என்ன செய்தாரோ  அதையே தான் நானும் செய்வேன். இன்னும் கூடுதலாக ஆறு மாதம்  ஆனாலும்  நான்  திரும்பிச் செல்ல மாட்டேன் . என் கணவர் இப்போது  ஒரு தியாகி, என் கணவரின் தியாகம் வீண்போவதற்கு நான் விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Editor's note

ஸ்னிக்தா சோனி, PARI கல்விப்புலம்  வழியாக  பயிற்சி  பெற்று வரும் இவர், தற்போது  டெல்லி  பல்கலைக்கழக  இதழியல்  துறையில்  இளநிலை பட்டம் பயின்று வருகிறார். அவரை  பற்றி  கூறியுள்ளதாவது, "நான்  போராட்டங்கள்  குறித்து எழுதவே விரும்புகிறேன். குறிப்பாக  வேளாண்மையிலும்,போராட்டத்திலும்  முன்னிலையில்  இருக்கக்கூடிய  ஊடக வெளிச்சத்திற்கு வராத பெண்களை குறித்தே  எழுத விரும்புகிறேன். எனது பயிற்சியின்  போது, விளிம்புநிலை மக்கள் குறித்து எழுதும் போது, எவ்வாறு  தகவல்களை  கதைசொல்லல் வழியாக  இணைப்பது  என்பதையும் கற்றுக்கொண்டேன். மேலும் , செய்தியை   திருத்துவதற்கும், கூறுவதற்கும்  அப்பாற்பட்டப்    பல  பாடங்களையும்  இப்பயிற்சியில்  கற்றுக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா  குறித்த தேடலில்  பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல்  பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி  நிறுவனமொன்றில்  மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.