புல்டோசர் இடிக்கும் சத்தம் கேட்டவுடன் பழைய உஸ்மான்பூரின் குடியிருப்பு வாசிகள் அங்கிருந்து வேகமாக கிளம்புகின்றனர். குப்பை சேகரிப்பவர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், பழைய இரும்பு வியாபாரிகள், யாசகம் பெறுபவர்கள் வசிக்கும் இக்காலனியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், அவர்களின் தற்காலிக குடியிருப்புகள் அகற்றப்படுவதால் தொடர் அச்சத்தில் உள்ளனர். கடந்த தசாப்தத்தில் இதுவரை தங்களின் வீடுகளை எண்ணற்ற முறை இழந்துவிட்டதாக அவர்கள் சொல்கின்றனர். 

“குடிசைகளை இடம் மாற்றுவதே வாழ்க்கை போக்கு என மாறிவிட்டது,” என்கிறார் இங்குள்ள சபேரா சமூகத்தின் உறுப்பினர் ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சபேரா சமூகம் சீர்மரபினர். ஆனால் எவ்வித நலத்திட்டங்களையும் அவர்களால் பெற முடிவதில்லை.

யமுனை ஆற்றங்கரையின் சில மீட்டர் தொலைவில் பழைய உஸ்மான்பூர் கிராமம் அமைந்துள்ளது.  2010 ஆம் ஆண்டு, அதிக மாசடைந்த யமுனை ஆறு புத்துயிர் பெறுவதற்கு டெல்லி மேம்பாட்டு ஆணையம் இந்த கிராமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை ‘O’ மண்டலம் என குறிப்பிட்டது. இந்த ஆறு டெல்லி வழியாக 22 கிலோமீட்டர் பயணிக்கிறது. இங்குள்ள நீர்முனையில் பொழுதுபோக்கு பகுதிகளை உருவாக்க DDA திட்டமிட்டது.

2014ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) நீர்முனையில் வளர்ச்சி செயல்பாடுகள், கட்டுமானங்களை தடை செய்தது. அதிலிருந்து மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆக்கிரமிப்பு அகற்றங்கள், இடிப்புகளை செய்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் விடுப்பதில்லை. “அவர்கள் [மாநகராட்சி அதிகாரிகள்] எதுவும் சொல்வதில்லை. எந்த பேச்சுவார்த்தையோ, உரையாடலோ கிடையாது. அவர்கள் வருவார்கள், இடிப்பார்கள், இது அரசு நிலம் என்று எங்களிடம் சொல்வார்கள்,” என்கிறார் அடிக்கடி இடிக்கப்படுவது குறித்து பேசிய ரகு.

வீடுகள், உடைமைகள் அழிக்கப்படுவதால் அவர்களுக்கு பல நாட்கள், மாதங்கள் இருப்பிடம் இல்லாமல் கழிகிறது. “2020ஆம் ஆண்டு எங்கள் குடிசைகளை அவர்கள் இடித்த போது, பல மாதங்கள் குளிர் நடுக்கத்தில் கழிந்தன. குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கதகதப்பிற்கு ஐந்து குடும்பங்கள் ஓரிடத்தில் தீமூட்டின,” என்கிறார் ரூபினா(தனது முதல் பெயரை மட்டும் பயன்படுத்துகிறார்).

பழைய உஸ்மான்பூர் குடியிருப்பு வாசியான அவர், வங்காள மக்கள் குடியேற்றப் பகுதியில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். மேற்கு வங்கத்திலிருந்து ஒரு வயதில் தனது பெற்றோருடன் இங்கு புலம் பெயர்ந்தவர். ஒவ்வொரு முறை ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போதும், “நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், எங்கள் வீட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.”

இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புவாசிகள் தினக்கூலி வேலை செய்பவர்கள் என்பதால் தங்கள் உடைமைகளை நாள் முழுவதும் பாதுகாக்க வேண்டும், சுத்தம் செய்யும் வரை காலவரையின்றி காத்திருப்பது வருமான இழப்பை ஏற்படுத்தும். “எங்கள் மக்களின் முதன்மை தொழில் கபாடி [குப்பை சேகரித்தல்], யாசகம் பெறுதல், ரிக்ஷா இழுத்தல். பல நாட்கள் வருமானம் ஏதுமின்றி தான் நாங்கள் இருக்கிறோம். எங்களால் எப்படி வாடகை கொடுக்க முடியும்?” என கேட்கிறார் ரூபினா. இப்பகுதியில் மிக அதிக வாடகையாக ரூ.4000 கொடுக்க வேண்டும், குடியிருப்பு வாசிகளுக்கு என மாநில அரசின் குடிசை மாற்று ஏற்பாடுகள் எதுவும் கிடையாது என்கிறார் அவர்.

உஸ்மான்பூரில் வீடுகள், சொத்துகளை இடிப்பது எவ்வித எச்சரிக்கையுமின்றி திடீரென்று நடக்கிறது.  வங்காள குடிசைவாசியான ரூபினா தொடர்ந்து வீடுகளை இடம் மாற்றிக் கொண்டே இருப்பதால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கும் என கவலை கொள்கிறார். ஈஷ்னா குப்தா எடுத்த புகைப்படங்கள்

ஜூன் 6,7 தேதிகளில் பெரியளவில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்க உள்ளதாக 2022 மே மாதம் பழைய உஸ்மான்பூர் குடியிருப்புவாசிகளுக்கு தகவல் வந்துள்ளது. எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்கின்றனர் அவர்கள்.

“நாங்கள் செல்லாவிட்டால், அவர்கள்[அதிகாரிகள்] அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டோம்,”என்கிறார் ரூபினா. நகர் நிகாம் பிரதிபா வித்யாலா எனும் அருகாமை அரசுப் பள்ளியில் படிக்கும் தனது பள்ளிச் செல்லும் பிள்ளைகள் குறித்து அவர் கவலை கொள்கிறார். இடத்தை மாற்றுவதுடன், கல்வி ஆண்டின்போது மற்றொரு பள்ளியில் சேர்ப்பது கடினமானது, இதனால் பள்ளியிலிருந்து இடைநிற்க நேரிடும். “எங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?” என்று அவர் கேட்கிறார்.

பழைய உஸ்மான்பூர் கிராமத்தில் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் கழித்துவிட்டவர் நான்னி தேவி. அவர் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு தேவைப்படும் பணம் தங்களிடம் இல்லை என்கிறார். “உணவிற்கே வழியில்லாதபோது, வாடகைக்கு எப்படி இடம் பெறுவது? வாடகைக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு எங்கு செல்வது? உணவிற்காக மக்கள் யாசகம் பெறுகின்றனர் அல்லது குப்பை சேகரிக்கின்றனர்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

68 வயதாகும் அவர் ஒருகாலத்தில் வயல்வெளிகள் எங்கும் கோதுமை பெருமளவு விளைச்சல் செய்யப்பட்டதை நினைவுக்கூர்கிறார். இங்கு விளைந்த காய்கறிகளை விவசாயிகள் விற்றனர். “முன்பு நிலம் இப்படி இருக்கவில்லை. எங்கும் பயிர்களை காணலாம்,” என்கிறார் அவர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிகரித்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையை தொடர்ந்து விவசாயத்திற்கு NGT தடை விதித்தது. “வெவ்வேறு காலகட்டத்தில் ஒவ்வொருவரது நிலமும் பறிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு எங்கள் பகுதி அகற்றப்பட்டது,” என்றார் அவர்.

கவனமாக வளர்க்கப்பட்ட மரங்களை இழந்தது குறித்தும் நான்னி தேவி வருத்தம் தெரிவித்தார். “ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது மரங்களையும் அவர்கள் அழித்தனர். அவர்கள் [அகற்றுபவர்கள்] எதையும் விட்டுவைக்கவில்லை. எங்களிடம் மாமரம், வாழைமரம், நாவல் மரம் என பல வகை மரங்கள் இருந்தன.  அவற்றை நான் கடின உழைப்பை செலுத்தி வளர்த்தேன். ”

ரகு சொல்கிறார், தனது சபேரா சமூகத்தில் பெருமளவில் தொழிலாளர்களும், பழைய இரும்பு வியாபாரிகளும் உள்ளனர் என்று. “எங்கள் முன்னோர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்து கொண்டே இருந்தனர். எங்களுக்கு என முன்னோர்களின் நிலங்கள் கிடையாது.” அரசு சிறிது நிலம் கொடுத்தால் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும் என்று மற்றவர்களைப் போன்று அவரும் சொல்கிறார். நான்னி தேவி பேசுகையில், “அவர்கள்[அரசு] எங்களுக்கு கொஞ்சம் நிலம் கொடுத்தால், குழந்தைகளுக்கு அதை நாங்கள் விட்டுச் செல்ல முடியும். வாழ்வதற்கும் நிரந்தரமாக ஓர் இடம் கிடைக்கும்.” “எங்களுக்கு தேவைப்படும் உதவி கிடைப்பதில்லை. எங்களிடமிருந்து முன்பு விவசாயத்தை அவர்கள் பறித்தனர், இப்போது குறைந்தது வாழ விட்டால் கூட போதும்.”

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

ஈஷ்னா குப்தா ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீ நகரில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் இளநிலை சமூகவியல் அண்மையில் முடித்துள்ளார். குடிசைப்பகுதிகள், ஆக்கிரமிப்பு காலனிகள்ஜுக்கி ஜோப்ரி மக்களின் அன்றாட நிதர்சனங்கள் டெல்லி போன்ற பெருநகர சூழலில் முக்கிய ஊடகங்களில் இடம்பெறுவதில்லை என்பதால் இக்கதையில் இவர் பணியாற்ற விரும்பினார்

அவர் சொல்கிறார்: “குடிமக்களின் வெவ்வேறு கோணங்களை அறிய முடிந்ததே பாரி உடனான எனது கற்றல். இருப்பினும், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் ஒரு கதை அமையும் போது, ​​அதைச் சுற்றியுள்ள தொழில்நுட்பங்களில் சிக்கி மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட ஒரு குரலுக்கு கவனம் கிடைக்கிறது. பணியின் களத்தைப் பொருட்படுத்தாமல், மீண்டும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.