நினைவு உள்ளவரை தன்னை ஆணாக அடையாளப்படுத்தவே விரும்புகிறார் கபிர் மான். இப்புகைப்படங்களை அவரது தந்தை யஷ்வந்த் எடுத்துள்ளார். இக்கட்டுரைக்காக வந்தனா பன்சால் தொகுத்துள்ளார்

என் பெண் அடையாளத்தை பிறந்தது முதலே மாற்றி ஒரு ஆணாக அடையாளப்படுத்தவே நான் விரும்பினேன். 15ஆம் நூற்றாண்டின் ஆன்மிக கவிஞர் கபிர் தாசின் நினைவாக எனது பெயரை ‘கபிர்’ என்று 2014ஆம் ஆண்டு எனது 24ஆவது வயதில் மாற்றிக் கொண்டேன். பெற்றோர் வைத்த ‘மணிஷா’ என்ற பெயரை இனி யாரும் அழைக்க முடியாது. நான் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பலாய் சமூகத்தின் துணைப் பெயரை துறந்து, எனது செல்லப் பெயரான ‘மானி’ என்பதைக் கொண்டு ‘மான்‘ என்று மாற்றிக் கொண்டேன்.

மாற்றுப்பாலினத்தோருக்கான தேசிய இணையதளத்தில் [சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் வரும் தளம்] அதிகாரப்பூர்வ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நான் அண்மையில் கண்டுபிடித்தேன். 2020 செப்டம்பர் 29ஆம் தேதி இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது. இது என்னைப் போன்ற மக்களுக்கு அடையாள அட்டையை [ஐ- கார்ட்] அளிக்கிறது. எனது விண்ணப்பம் இப்போதும் நிலுவையில் உள்ளது. இந்த தளத்தில் சென்று ஒவ்வொரு முறை நிலவரம் அறிய முயன்றாலும், பதில் கிடைப்பதில்லை. அதுவாக நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருக்கிறேன்.

‘மணிஷா’ என்று வளர்வது எனக்கு சரியாக படவில்லை. இளம் வயதில் சிறுமிகளின் உடை எனக்கு அசவுகரியத்தை அளித்ததால் நான் கால்சட்டைகள், சட்டைகளையே விரும்பினேன். நான் ஒருபோதும் பிற பெண்களைப் போன்று கூந்தல் வளர்த்தது கிடையாது. குட்டையாக வைத்துக் கொள்ளவே விரும்பினேன். பதின் பருவத்தில் எனக்கு மாதவிடாய் சுழற்சி நிகழவில்லை. இதனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் எனது தாய் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று மாதவிடாயை தூண்டும் மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தார்.

17 வயதில் பள்ளி முடிந்து வந்ததும் என் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இணைய மையத்துக்கு வாடகை சைக்கிளில் சென்று ‘பாலின மாற்று அறுவை சிகிச்சை’ குறித்து இணையதளத்தில் தேடியது நினைவிருக்கிறது. என்னால் வாக்கியம் அமைத்து தேட முடியாவிட்டாலும் தேடுபொறி அதற்கான விடைகளை பல தளங்களில் கொண்டு வந்து அளிக்கும்.

பதின்பருவத்தில் எனது அன்றாடம் என்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை. உதாரணத்திற்கு பள்ளியில் பெண்கள் கழிப்பறைக்கு செல்வதை தண்டனையாக உணர்வேன். வீட்டிற்கு வரும் வரை அடக்கிக் கொள்வேன். இதனால் இருமுறை சிறுநீர் தொற்று ஏற்பட்டு மொத்தமாக 40,000 ரூபாய் மருத்துவத்துக்கு செலவானது. இப்போதும் நான் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை. வீடு வரும் வரை கட்டுப்படுத்திக் கொள்வேன். ஆணாக மாறிவிட்டால் இப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என நான் உணர்ந்தேன்.

பெண்ணாக பிறந்தது அவருக்கு கடினமாகவே இருந்தது, ஒரு திருநம்பியாக பல சங்கடங்கள் தொடர்கின்றன. வந்தனா பன்சால் எடுத்த புகைப்படம்

குடும்ப வாழ்க்கை

பிரிவினையின் போது என் தாத்தா, பாட்டி ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்திலிருந்து டெல்லி வந்து கிஷன் கஞ்ச் பகுதியில் குடியேறினர். அவர்கள் அங்கு விவசாயம் செய்தனர். ஆனால் நகருக்கு வந்த பிறகு எனது தாத்தா டெல்லி ஆடை ஆலையில் வேலைக்கு சேர்ந்தார். என் தந்தை யஷ்வந்த் புகைப்படக்காரராக இருந்தார். அவ்வப்போது திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலான நேரம் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருப்பார்.

எங்கள் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒரே நபர் என் தாய் சரளா மட்டும்தான். அவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து மாதம் 30,000 ரூபாய் சம்பாதித்தார். அவர் தினமும் எங்கள் பூர்விக வீடு இருக்கும் கிஷன் கஞ்சிலிருந்து பள்ளி இருந்த ஓக்லாவிற்கு பேருந்தில் சென்று வர தலா மூன்று மணி நேரம் பயணம் செய்வார்.

எங்கள் குடும்பத்தின் எதிரியே என் அப்பா தான். வீட்டில் நடந்த ஏராளமான குடும்ப வன்முறை சம்பவங்கள் இப்போதும் என் நினைவில் உள்ளன. எனினும் அவரது கலை சார்ந்த பக்கத்தை நான் ரகசியமாக ரசிக்கவே செய்தேன். அவர் எனக்கு கற்பனைக்கலை, இசை மற்றும் திரைப்படங்களை அறிமுகம் செய்து வைத்தார். தனது கேமராவில் படச்சுருளை அவர் மாற்றியது கூட நினைவில் உள்ளது. என்னை நிறைய புகைப்படங்கள் பிடித்திருக்கிறார். ஒரு மகளாக அவர் என்னை நடத்தியது கிடையாது. முதல் குழந்தை மகனாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

‘டாம் பாய்’

நான் ஐந்தாண்டுகள் (6 முதல் 10ஆம் வகுப்பு வரை) மகளிர் பள்ளியில் பயின்றதால் மிகவும் இறுக்கமாக உணர்ந்தேன். 11ஆம் வகுப்பில் இருபாலர் பள்ளிக்கு சென்றதும் எல்லாம் மாறியது. வீட்டிலிருந்து தப்பிக்கும் புகலிடமாக பள்ளி விளங்கியது. நான் மகளிர் அணியின் அங்கமாக இருந்தேன். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளித்தது. அடையாளத்தை வைத்து என்னை எவரும் எடை போட்டதாக நான் உணரவில்லை.

கபிர் தனது ஹார்மோன் சிகிச்சையை கடந்தாண்டு தொடங்கினார். முகத்தில் அவருக்கு ரோமங்கள் வளரத் தொடங்கியது. அடுத்த ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சையை தொடங்க அவர் திட்டமிடுகிறார். வந்தனா பன்சால் எடுத்த புகைப்படங்கள்

என் வகுப்பில் ஒரு பெண்ணுடன் காதல் மலர்ந்தது. அவளை நான் சோனாக்ஷி என்று அழைப்பேன். அவள் ஒருநாள் என் காதலை மறுத்துவிட்டாள், “நாம் எங்கே செல்கிறோம்? நமக்கு திருமணம் நடக்குமா?” என்றாள். இதனால் என் பாலின அடையாளத்தால் பாதுகாப்பற்றவனாக உணர்ந்து மனஅழுத்தத்திற்கு ஆளானேன்.

பள்ளி முடித்த பிறகு ஊடகவியலில் பட்டம் பெறுவதற்காக நான் டெல்லி கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் நான் திருநம்பியாக என்னை காட்டிக் கொள்ளவில்லை. நான் ஓர் ஆண் தோற்றத்தில் ‘மணிஷா’ என்றிருக்க முடிவு செய்தேன். வாழ்க்கை எளிதாகிப் போனது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. என்னைப் பற்றி வதந்திகள் பரவின. நான் கல்லூரிக்கு நண்பனின் இருசக்கர வாகனத்தில் செல்வேன். அவன் எனது ஆண் நண்பன் என்று மக்கள் பேசத் தொடங்கினர். நிறைய பெண்களுடன் நான் சுற்றுவதாக சிலர் கூறினர். நான் ஓரினச் சேர்க்கையாளரும் அல்ல, எதிர் இன சேர்க்கையாளரும் அல்ல. இதுபோன்ற பேச்சுகள் என்னை தொந்தரவு செய்தன. சமூக அழுத்தம் காரணமாக கடந்த ஆண்டு [2015] கல்லூரியிலிருந்து நான் நின்றுவிட்டேன்.

வீட்டிலும் சூழல் சரியாக இல்லை. என் தந்தைக்கு கணையப் புற்றுநோய் வந்தது. அவரது சிகிச்சைக்கு எனது தாய் அனைத்து சேமிப்புகளையும் செலவிட்டார். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உறவினர்களிடம் பணம் கடன் வாங்கியது, மருத்துவமனைகள், சிகிச்சைகள் என சுமார் 35 லட்சம் ரூபாய் செலவிட்டோம். அரசுப் பள்ளி ஆசிரியையான என் தாயின் வருங்கால வைப்பு நிதியும் மருத்துவப் பலன்களும் இதற்கு உதவின. இருப்பினும் கடன்களை அடைக்க ஆறுஆண்டுகள் தேவைப்பட்டது.

நம் சமூகத்தில் இறுதிச் சடங்குகளை மகன்கள் செய்வது வழக்கம், ஆனால் என் தந்தை இறந்தபோது அவரது சவப்பெட்டியை மூன்று ஆண்களுடன் சேர்ந்து நானும் சுமந்தேன். தகன மேடையில் என் மாமா எதிர்ப்புத் தெரிவித்து பேசினார், “மணிஷா இதை செய்யக் கூடாது”. ஆனால் என் உறவினர்கள் அதை ஏற்க மறுத்து கூறினர்,“லடுகி கஹின் அவுர் சே நஹி ஆத்தி ஹை (பெண்கள் எங்கிருந்தோ வித்தியாசமான இடத்திலிருந்து வரவில்லை).” சடங்குகளை நானே செய்தது சக்தி அளித்தது.

இங்கு இப்பொழுது

குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் எனது முதல் தேர்வை எழுத கர்னலுக்கு 2019ஆம் ஆண்டு உள்ளூர் ரயிலில் பயணம் செய்தேன். ரயிலில் ஏறியதும் சக பயணிகளில் சிலர் என் தோற்றத்தை பார்த்து கேலி செய்தனர். நான் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். நிலைமை மோசமடையத் தொடங்கியது. இறுதியில் அவர்கள் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளினர். நல்வாய்ப்பாக, ரயில் மெதுவாக சென்றதால் நான் நடைபாதையில் குதித்துவிட்டேன். எனினும் என் தேர்வுகளை தவறவிட்டதுடன் மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பையும் இழந்தேன். சிறுகாயங்களுடன் நான் தப்பினேன். அதன் பிறகு அதே பாதையில் பயணம் செய்யும் துணிவு எனக்கு வரவே இல்லை.

கபிர் தனது அன்றாட பயணத்திற்கு மெட்ரோவில் செல்லாமல் பாலின அடையாளம் தொடர்பான வாக்குவாதங்களை தவிர்க்க சேமிப்பிலிருந்து மிதிவண்டி வாங்கியுள்ளார். வந்தனா பன்சால் எடுத்த புகைப்படம்

டெல்லி மெட்ரோவில் பயணிப்பதை நான் அண்மையில் நிறுத்தினேன். நுழைவு வாயிலில் மகளிர் பிரிவிற்கு சென்றபோது எனக்கு அனுமதி மறுத்தனர். ஆண்கள் வரிசைக்கு சென்றால், “ஆப் யஹான் சே நஹி ஜா சக்தே(இந்த வரிசையில் நீ செல்ல முடியாது),” என சொல்கின்றனர்.

பல சமயங்களில் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் வந்ததுண்டு. ஒரு முறை முயற்சி செய்து உடனடியாக அதற்காக நான் வருந்தினேன். எனக்கு 27 வயதான போது, பாலியல் கல்வி குறித்து வேலை செய்யும் என்ஜிஓ ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்டது. நான் யார் என்பதை அங்கு என்னால் சுதந்திரமாக பேச முடியும். திருநம்பியான எனது அடையாளம் மெல்ல வளரத் தொடங்கியது. அவர்கள் என் மனநலனில் கவனம் செலுத்த உதவினர். [இக்கட்டுரையின் இறுதியில் தற்கொலை தடுப்பு உதவி எண்கள் குறித்த விவரங்களை தயவு செய்து பார்க்கவும்.]

அன்றாடம் எதிர்கொள்ளும் இதுபோன்ற இன்னல்களை போக்க, மேற்கு டெல்லியின் துவாரகாவில் ஒரு சிகிச்சை மையத்தில் ஹார்மோன் சிகிச்சை செய்ய கடந்தாண்டு முடிவு செய்தேன். பொதுவெளிகளில் தவறாக அடையாளம் காணப்படுவது, மெட்ரோவில் பயணிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய இது உதவும் என நம்புகிறேன்.

கடந்தாண்டு ஹார்மோன் சிகிச்சையை தொடங்கினேன். பல வகை மோசமான பக்க விளைவுகளையும் அது தருகிறது. வாழ்க்கை முழுவதும் அந்த வலி தொடரும். நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனை சென்று டெஸ்டோஸ்டிரோன் அன்டிகனோட் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊசியும் 360 ரூபாய். அதோடு வாய் வழி மருந்து, முறையான ரத்தப் பரிசோதனைகள், அடிவயிற்றில் புறஒலிச் சோதனை என ஒவ்வொரு முறையும் 4000 ரூபாய் செலவாகும். மனம் அலைபாய்வது, பதற்றம், ரத்த சர்க்கரையில் ஸ்திரமின்மை போன்ற பக்க விளைவுகளோடு கல்லீரல், சிறுநீரகங்களும் பாதிக்கப்படும்.

நான் அடுத்த ஆண்டு [2022] ‘பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு’ திட்டமிட்டுள்ளேன். இது வெறும் தோற்ற மாற்றத்திற்கான அறுவை சிகிச்சை மட்டுமல்ல. எனது ஆதார் அட்டையில் ‘ஆண்’ பால் என்று குறிப்பிட முடியும். நான் உண்மையாக, யதார்த்தத்துடன் ஒரு திருநம்பியாக வாழ விரும்புகிறேன். இதற்கு 7-10 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும். மார்பகங்களை அகற்றுவது, ஆணுறுப்பை உருவாக்குவது மற்றும் ஹார்மோன் சிகிச்சை. நான் முதலாவது அறுவை சிகிச்சைக்கு ஏற்கனவே சேமித்து வருகிறேன்.

ஆதரவான குடும்பம்: கபிர் தனது சகோதரர் 26 வயது முகுல் ( இடது கடைசியில்), தாய் சரளா, 24 வயது சகோதரி நம்ரதா (வலது கடைசியில்) ஆகியோருடன். வந்தனா பன்சால் எடுத்த புகைப்படம்

தனியார் மருத்துவமனையில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நான் ஒருபோதும் மாநில அரசின் மருத்துவமனையை தேர்வு செய்ய மாட்டேன். அங்குள்ள மக்கள் தீர்ப்பிடுபவர்கள். என் பிரச்சனைகளை ‘தொல்லையாக’ மட்டுமே பார்ப்பார்கள். ஒருமுறை ஒரு அரசு மருத்துவரிடம் என்னைப் பற்றி கூறியபோது, அவர் சொன்னார் ,“உனக்கு ஆண் நண்பர் இருக்கிறாரா? உறவு கொண்டதுண்டா? முயற்சித்துப் பார், பலன் கிடைக்கும்,” என.

ஆதரவான குடும்பத்திற்கு எனது நன்றி. என் தாய் பதற்றமாவது புரிகிறது. அவர் பெண் உடலில் ஆண் ஆடைகளில் நான் வாழ வேண்டும் என நினைக்கிறார். விளம்பரத்துறையில் என் இளைய சகோதரன் வேலை செய்கிறான். என் சகோதரி போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறாள். அவர்கள் என் முடிவிற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

நான் இப்போது நாளொன்றுக்கு 10 மணி நேரம், பிரபல மின் வணிக நிறுவனக் கிடங்கில் வேலை செய்து மாதம் சுமார் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அனைவரையும் வரவேற்கும் வகையில் ஒரு காபி கடை திறக்க ஆசை கொண்டுள்ளேன். மக்கள் தங்களின் குழப்பமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அமைதியாக இருப்பதற்கான ஒரு இடத்தை நான் அளிக்க விரும்புகிறேன். நான் தேடும் அந்த அமைதியை ஒருபோதும் கண்டதில்லை.

உங்களுக்கு தற்கொலை எண்ணம் உள்ளதா, உங்களுக்கு தெரிந்த யாராவது துயரத்தில் இருக்கிறார்களா, கிரணை அழையுங்கள், 1800-599-0019 (24/7 இலவச டோல்), என்ற தேசிய உதவிஎண். அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதேனும் உதவி எண்களையும் அழைக்கலாம். மனநல வல்லுநர்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களுக்கு தயவு செய்து SPIFன் மனநல அடைவுக்குச் சென்று பாருங்கள்.

Editor's note

வந்தனா பன்சால் புதுடெல்லியில் உள்ள விவேகானந்தா தொழில்முறை படிப்புகளுக்கான நிறுவனத்தில் பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறை இறுதியாண்டு மாணவி. பாரி கல்வியில் பயிற்சி மாணவராக இருந்தபோது இவர் இக்கட்டுரையை எழுதினார். அவர் சொல்கிறார், “குடும்ப அமைப்பு அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதால் நாம் அரிதாகவே திருநம்பிகள் குறித்த கதைகளை கேட்கிறோம். கபிருடன் அமைந்த உரையாடல், நம் சமூகத்தில் வேரூன்றியுள்ள பாலின குறைபாடு மீதான வெறுப்பு குறித்தும் சாதி, இனம், குறித்த விஷயங்களிலும் என்னை ஆராய வைத்தது.”

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.