
“இந்தப் போராட்டத்தில் மிகுந்த உற்சாகத்தை காட்டவும், உங்களது பாட்டிமார்கள் எங்களது தலைமுறைகளை பற்றி பெருமிதம் கொள்ளவும் என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை நான் ஊக்குவிக்கிறேன். விவசாயிகள் ஒற்றுமை சிந்தாபாத்! நாங்கள் இங்கு அமர்ந்திருந்து – ஒற்றுமையாகவும் அமைதியாகவும் போராடியே இச்சட்டங்களை திரும்பப் பெறுவோம்”. சோனியா மான் ஒலிப்பெருக்கியில் இருந்து நகர்கிறார், அடுத்த பேச்சாளர் பேச வருகிறார்.
30 வயதாகும் நடிகையும் சமூக ஆர்வலருமான சோனியா தில்லி ஹரியானா எல்லையில் உள்ள முக்கியமான போராட்ட தளமான திக்ரியில் பலமுறை பேசியுள்ளார். சோனியா ஒரு விவசாயியின் மகள் மேலும் அவர் 2020 டிசம்பர் ஆரம்பத்திலேயே இந்த இயக்கத்தில் இணைந்து விட்டார். கீர்த்தி கிசான் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த தனது மறைந்த தந்தையால் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
தேசிய தலைநகர் பிரதேசமான தில்லிக்கு வெளியே திக்ரியில் இரண்டு மேடைகள் போடப்பட்டுள்ளன 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நவம்பர் 26 2020 முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சோனியா, சம்யுக்தா கிஷான் மோர்சா அமைத்திருந்த திக்ரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த மேடையில் பேசினார். பாரதிய கிசான் யூனியனால் (ஏக்தா உக்கரன்) அமைக்கப்பட்ட மற்றொரு மேடை ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகோடா சௌவுக்கில் இருந்தது. இந்த இரண்டு மேடைகளும் காலை பதினோரு மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகின்றன மேலும் இவை தான் போராட்டத்தின் ஆன்மாவாக இருக்கின்றன.


அனைத்து அறிவிப்புகளும் இந்த இரண்டு மேடைகளிலிருந்து செய்யப்படுகின்றன: சங்கத்தின் எதிர்கால திட்டங்கள், தலைவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகள், போராட்டத்தில் இறந்தவர்களின் பெயர்கள் அவர்களின் தந்தை பெயர், வயது மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றுடன் இங்கு அறிவிக்கப்படும்.
திக்ரி மெட்ரோ நிலையத்தில் அமைந்திருந்த சம்யுக்தா கிசான் மோர்சவால் அமைக்கப்பட்ட மேடை தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் தள்ளு வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த மேடை ஏறக்குறைய 10 அடிக்கு 4 அடி அளவில் உள்ளது, முழுவதும் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. மழை மற்றும் சூரியனின் நேரடியான தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தார்ப்பாயால் வேயப்பட்ட கூரையும் இருந்தது. மேடை தரையிலிருந்து உயரமாக இருப்பதால் ஏழு படிகள் கொண்ட படிக்கட்டு வலது ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏறுவதற்கு முன்னர் மக்கள் தங்களது காலணிகளைக் கழற்றி விடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஒலிபெருக்கிகள் மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கின்றன அதன் மூலம் மக்கள் தடுக்கி விழுவது தடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மேடைகளும் தினமும் காலை 11 மணிக்கு விவசாயிகள் அதைச்சுற்றி கூடத்துவங்குவதுடன் செயல்படத் துவங்குகின்றன. இந்த மேடை உயிர்ப்புடன் இருக்கிறது நடிகை சோனியா மான், நடிகை ஸ்வரா பாஸ்கர், பாடகர் ராபி ஷேர்கில் மற்றும் நடிகர் ஹர்பஜன் மான் ஆகிய பிரபலங்கள் அறிவிப்புகளுக்கு இடையில் தங்களது நிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனர்.
“ஒவ்வொரு பேச்சாளர் மற்றும் கலைஞரின் அடையாளத்தை நாங்கள் சரி பார்க்கிறோம். அவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் அங்கமாக இருக்கக்கூடாது. நாங்கள் (விவசாய) சங்கத்துடன் தொடர்பில் இருப்பவர்களை அனுமதிக்கிறோம் ஆனால் அவர்கள் பேசும்போது நாங்கள் அவர்களை கூடுதலாக கண்காணிக்கின்றோம்”, என்று பஞ்சாப் கிஷான் யூனியனின் உறுப்பினரான 60 வயதாகும் ஜஸ்பிர் கவூர் நாத் கூறுகிறார். அவர் சம்யுக்தா கிசான் மோர்சாவின் பிரதான மேடையில் பேசக்கூடிய பேச்சாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்கிறார். “விவசாய சங்கங்களின் தலைவர்கள் அடுத்த நாள் பிரதான மேடையில் பேசும் நபர்களின் பெயர்களை முந்தைய இரவே சமர்ப்பிக்கவேண்டும்”, என்று அவர் எங்களிடம் கூறினார்.
ஒரு பேச்சாளர் பதிவு செய்யப்பட்டதும் அவருக்கு எண் எழுதப்பட்ட ஒரு சீட்டு வழங்கப்படும் அவர்களது எண் அறிவிக்கப்படும் போது அவர்கள் மேடைக்கு வர வேண்டும். மேடைக்கு வந்த பிறகு 10 நிமிடங்கள் பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இரண்டு மேடைகளை சுற்றியும் பார்வையாளர்களின் கண்ணில் தெரியும்படி போஸ்டர்கள், பதாகைகள், கொடிகள் ஆகியவை வைக்கப்பட்டு இருக்கின்றன. பெண்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டு இருக்கின்றனர், ஆண்கள் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து இருக்கின்றனர் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு கயிறு கட்டி இருவருக்குமான இடத்தை அது பிரிக்கிறது. நெடுஞ்சாலையில் டிராக்டரில் அமர்ந்திருக்கும் போராட்டக்காரர்களும் அறிவிப்புகள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கிலோமீட்டருக்கு பின்னரும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. “இந்த மேடை இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கும் அவர்களது எழுச்சிக்கும் ஒரு சான்றாக இருக்கிறது”, என்று ஹரியானாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்த பாரதிய கிசான் சங்கத்தின் உறுப்பினரான 50 வயதாகும் வேத்பால் நயின் கூறுகிறார். 4 மணிக்கு பிரதான மேடையில் நடவடிக்கைகள் முடிந்ததும் போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் குழுக்கள் இந்த பகுதியை சுற்றிலும் அமைதியாக பேரணிகள் செல்கின்றனர்.
நாங்கள் எங்கள் சகோதரர்களால் இயக்கப்பட்ட இந்த தள்ளுவண்டியில் பகோடா சௌவுக் மேடைக்கு வந்தோம். மதியம் 12 மணி போல் சமைப்பதற்கு சென்றுவிட்டு, சாப்பிட்ட பிறகு மூன்று மணியைப் போல் இதே தள்ளுவண்டியில் திரும்பி வருவோம் என்று பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காடியாலில் இருந்து வரும் 50 வயதாகும் பல்ஜீத் கவூர் கூறுகிறார். அவர் திக்ரியில் முகாமிட்டுள்ள தனது கிராமத்தை சேர்ந்த மற்ற பெண்களுடன் தங்கியுள்ளார்.
மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு புதியதாக பிழிந்த கரும்புச்சாறு கொடுக்கப்படுகிறது. “ரோஹ்தக்கில் இருந்து புதியதாக மூன்று இயந்திரங்களைக் கொண்டு வந்துள்ளோம். கோடை காலம் துவங்க இருப்பதால் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதான மேடைக்கு வரும் அனைவருக்கும் நாங்கள் புதியதாக பிழியப்பட்ட கரும்புச்சாறு வழங்குகின்றோம்”, என்று இளம் ராணுவ ஆர்வலரான சுமித் பதக் கூறுகிறார். 21 வயதாகும் அவர் பாதுகாப்பு சேவைகளில் பணியாற்ற நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார். போராட்டக்காரர்களுக்கு கரும்புச்சாறு வழங்குவதற்காக ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தைச் சேர்ந்த குரவுதி கிராமத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட தனது நண்பர்களுடன் பிப்ரவரி மாதம் அவர் திக்ரி போராட்டக் களத்திற்கு வந்து சேர்ந்தார்.


பி கே யு ஏக்தா உக்கரனின் தலைவர்களில் ஒருவர் ஹரிந்தர் பிந்து. பி கே யு மேடையில் பேசும்போது அவர்: “பெண்களும் ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று இந்தப் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். நாம் தான் இந்த போராட்டத்தின் முதுகெலும்பு. பெண்களின் குரல் கேட்காவிட்டால் இவை எதுவுமே நடக்காது”, என்று கூறினார்.
இவரும் மற்ற விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர், இவ்வேளாண் சட்டங்கள் முதலில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டது, பின்னர் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த மாதம் 20-ஆம் தேதிக்குளாகவே அது சட்டமாக்கப்பட்டது. அந்த மூன்று வேளாண் சட்டங்கள் – வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020; விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020; அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது பெரு நிறுவனங்களுக்கான அதிகார பரப்பை மேலும் இச்சட்டங்கள் அதிகப்படுத்தும், அது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் அனைவரும் பார்க்கின்றனர். மேலும் இச்சட்டங்கள் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, மாநில கொள்முதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கியமான ஆதரவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.இந்திய அரசியலமைப்பின் 32வது பிரிவை குறை மதிப்பிற்கு உட்படுத்தி அனைத்து குடிமக்களுக்கும் சட்டரீதியான உதவிக்கான உரிமையை முடக்குகிறது என்பதால் ஒவ்வொரு இந்தியருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 12 பேர் (பஞ்சாபைச் சேர்ந்த 12 விவசாயிகள் மற்றும் ஹரியானாவை சேர்ந்த மூன்று விவசாயிகள் திக்ரியில் பிரதிநிதிகளாக இருந்தனர்) அவர்கள் எஸ் கே எம் மேடையில்
உண்ணாவிரதத்தை கடைபிடித்தனர். 24 மணி நேரத்துக்குப் பின்னர் தான் அவர்கள் உணவு உட்கொள்வார்கள் இதனை ‘சுக் ஹர்த்தால்’ என்று அழைக்கின்றனர். “நாங்கள் காலை 11 மணி முதல் இங்கு அமர்ந்திருக்கிறோம் மறுநாள் காலை வரை இந்த உண்ணாவிரதத்தில் தொடர்ந்து பங்கேற்போம அதன் பின்னர் அடுத்த இரண்டு பேர் கொண்ட குழு எங்களை மாற்றி அமரும்”, என்று பஞ்சாபின் பிரோஸ்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜீரா தாலுகாவினைச் சேர்ந்த பாரதிய கிசான் சங்கத்தின் உறுப்பினருமான 60 வயதாகும் விவசாயி பிரீதம் சிங் கூறுகிறார். இச்சட்டங்கள் நீக்கப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் கூறுகிறார்.
மேடை பாதுகாப்பு
ஒவ்வொரு சங்கமும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு தன்னார்வ தொண்டு செய்ய சுமார் 50 உறுப்பினர்களின் பட்டியலை வழங்கி இருக்கிறது எனவே திக்ரியில் உள்ள போராட்டக்களத்தில் சுமார் 300 முதல் 500 தன்னார்வலர்கள் பாதுகாப்பு பொறுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது அவர்களின் பணி நேரம் முடிந்த பின்னர் அவர்கள் அதை திரும்பவும் ஒப்படைத்து சென்று விடுவர். இந்த பாதுகாப்பு தன்னார்வலர்கள் காவல்துறையினரால் கடும் தடுப்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மேடையின் பின்னாலும் மேடையினையும் பாதுகாப்பர். எஸ் கே எம் மேடையின் பின்புறத்தை பாதுகாப்பதற்கு 8 பேர் கொண்ட குழு தினமும் 12 மணி நேரம் பணியில் இருக்கிறது என்று ஷகில் கூறுகிறார். அவர் என்னுடன் பேசிய போது மற்ற தன்னார்வலர்களுடன் தேனீர் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்தார். 25 வயதாகும் விவசாயியான இவர் பிரோஸ்பூர் மாவடத்தைச் சேர்ந்த ஃபசில்காவிலிருந்து வருகிறார், ஆறு ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் அரிசி விளைவிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரவுநேர ரோந்துப் பணியில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். பகல் வேளையில் மேடையிலும் அதை சுற்றி அமர்ந்திருக்கும் போராட்டக்காரர்களுக்கும் அவர்கள் தேனீர் வழங்கும்படி பணிக்கப்பட்டு இருக்கின்றனர்.
“போராட்டக் களத்தில் யாரும் அமைதிக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். நீதி கேட்டு விவசாயிகள் இங்கு வந்துள்ளனர். இங்கு யாரும் வன்முறையை விரும்பவில்லை”, என்று கீர்த்தி கிசான் யூனியனில் உறுப்பினராக இருக்கும் மோகன் சிங் ஔலாக் கூறுகிறார். 25 வயதாகும் இவர் நவம்பர் மாதம் முதல் திக்ரியில் இருக்கிறார் மேலும் எஸ் கே எம் மேடையில் பாதுகாப்பு தன்னார்வலராகவும் பணியாற்றி வருகிறார். மோகன் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். புதிய வேளாண் சட்டங்கள் இச்சமூகத்தினரைத்தான் மிகவும் பாதிக்கும் என்று அவர் நம்புகிறார். “சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மண்டிகளை நம்பியுள்ளனர். மண்டிகள் மூடப்பட்டால் இவர்கள் அனைவரும் தங்களது வேலையினை இழப்பர்”, என்று மோகன் கூறுகிறார்.

பாதுகாப்பு தன்னார்வலரான சரப்ஜீத்தின் குடும்பம் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் இருக்கும் பிலாஸ்பூரில் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் நெல் பயிரிட்டு வருகின்றனர். இக்குடும்பத்தினருக்கு எட்டு லட்சம் ரூபாய் அளவிற்கு கடன் இருக்கிறது. “நாங்கள் எங்களது குடும்பத்திற்காக தான் இங்கு வந்திருக்கிறோம்”, என்று அவர் கூறுகிறார். சரப்ஜீத்தும் அவரது தோழி கமல்தீப் கவூரும் மேடையை சுற்றிய பணிகளுக்கு தன்னார்வலராக இருக்கின்றனர். கமல்தீப், மோகா மாவட்டத்தில் உள்ள பகபுராணா தாலுகாவினைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் மகள். தனது தந்தை ஒரு தலித் தொழிலாளி, அவர் வேலை தேடி வேலை கிடைத்தால் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பாதிப்பார் ஆனால் வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று கூறினார்.
ஊடக தன்னார்வலர்கள்: புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலி பொறியாளர்கள் மற்றும் சமூக ஊடகத்தை கையாளுபவர்கள் என 30 பேர் இருப்பர். பஞ்சாபின் பிரோஸ்பூர் மாவட்டத்தின் ஜலாலாபாத் தாலுகாவிலுள்ள பாகே கே உத்தர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதாகும் விகாஸ் கம்போஜ் அவர்களில் முக்கியமானவர். பி கே யு ஏக்தா உக்கரன் பிரதான மேடையில் அறிவிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் சமூக ஊடகத்தில் பதிவிடப்படுவதை அவர் உறுதி செய்கிறார்.

எஸ் கே எம் பிரதான மேடைக்குப் பின்னால் உள்ள பகுதியை கண்காணிப்பது 30 வயதாகும் பொறியாளரான ஹர்பீத் சிங்கின் பணி. பஞ்சாபின் ஃபரீத்கோட் மாவட்டத்தின் குஜ்ஜார் கிராமத்தினை சேர்ந்த இவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் நெல் பயிர் செய்து வருகின்றனர். “நான்கு வருடங்களுக்கு முன்னர் பண்ணை வேலைகளுக்காக 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறோம். இன்று வட்டியுடன் அது 11 லட்சம் ரூபாயாக உயர்ந்து நிற்கிறது. அதில் நான்கு லட்சம் ரூபாயை நாங்கள் திருப்பி செலுத்தி விட்டோம் மீதி இருக்கும் தொகை மிகவும் அதிகம், நாங்கள் விளைவிப்பது எங்களது வயிற்றுப் பாட்டுக்குதான் போதுமானதாக இருக்கிறது பைகளை நிரப்புவதற்கு அல்ல”, என்று அவர் கூறினார்.
ஜஸ்பீர் கவூர் நாத் ஒரு முக்கியமான அறிவிப்புடன் மீண்டும் ஒலிபெருக்கியின் அருகே வந்துள்ளார் : “டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகள் முறையாக நிறுத்தப்படவில்லை எனவே பயணிகள் கடும் நெரிசலை எதிர்கொள்கின்றனர். நாங்கள் டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகளை ஒழுங்கு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து இருக்கிறோம். தயவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்”, என்று கூறினார்.
அவர் ஒலிபெருக்கியில் இருந்து கீழே இறங்கி விட்டார் அடுத்த அறிவிப்புகள் தொடங்குகின்றன குளிரில் போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே அமைதியையும் ஒற்றுமையையும் அது பேணுகின்றது.
Editor's note
ஆசிரியர் குறிப்பு புது தில்லியில் உள்ள மஹராஜா அக்ரா சென் இன்ஸ்டிடியூட் ஆப் மேனெஜ்மெண்ட் ஸ்டடீஸ் என்கிற கல்லூரியில் ஊடகவியல் மற்றும் பொது தொடர்பியல் இளங்கலை படித்து வருகிறார் ஷிவாங்கி சக்சேனா. தில்லி ஹரியானா எல்லையில் திக்ரியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்கள் குறித்து பாரிக்காக அவர் எழுதும் மூன்றவது கட்டுரை இது. “இவ்வளவு மகத்தானதும் அற்புதமானதுமான இந்த இயக்கத்தை பற்றி எழுதுவது மிகப்பெரிய அனுபவம். இந்த போராட்டத்தை பல்வேறு பரிமாணங்களில் பார்ப்பதோடு, மனிதர்கள் பற்றிய கட்டுரைகளை தரவுகளோடு முன் வைக்கவும் பாரி கல்வி எனக்கு உதவுகிறது.”
தமிழில்: சோனியா போஸ்
சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.