
“இது இன்று என்னுடைய முதல் கூடை. நான் நாள் முழுவதும் வேலை செய்வேன்,” என்று கூறியபடி தன்னைச் சுற்றி குவிந்துள்ள ‘நிலக்கரி கழிவு’ குவியலில் இருந்து பயன்தரும் நிலக்கரிகளை பிரித்தெடுக்கும் வேலையை அவர் தொடங்குகிறார்.
அரசு நடத்தும் தம்லாபஸ்தி பழங்குடியின தொடக்கப் பள்ளியில் படிக்கும் பிரியங்கா ஹெம்பிராமிற்கு 12 வயதே ஆகிறது. அவர் அரிதாகவே பள்ளிக்குச் செல்வதாக ஆசிரியர் சொல்கிறார். மேற்குவங்கத்தின் பர்த்தாமன் மாவட்டத்தில் உள்ள துர்காபுர் ஒருங்கிணைந்த எஃகு ஆலையில் தினக்கூலியாக வேலை செய்யும் அத்தையுடன் பெற்றோரை இழந்த பிரியங்கா தங்கியுள்ளார். நிலக்கரியை பிரித்தெடுத்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு அத்தை வீட்டில் சமாளித்துக் கொள்கிறார்.
பண்டகசாலைகளில் வேலை செய்பவர்களின் மிகவும் வயதான தொழிலாளியான அறுபதுகளில் உள்ள சேப்பி ரே. “என் இளம் வயதில், தினமும் 10-12 கூடைகள் எளிதில் சேகரித்துவிடுவேன். இப்போது நீண்ட நேரம் வேலை செய்ய முடியவில்லை. என் முதுகு வலிக்கிறது. கண்களும் எரிகிறது,” என்கிறார் அவர்.
பல பெண்களைப் போல கடினமான, தீங்கு தரும் இப்பணியை செய்து வரும் நாற்பதுகளில் உள்ள மோமினா பிபி பேசுகையில், “நான் கருவுற்ற காலத்திலும், பல பெண்களைப் போன்று இங்கு வேலையை செய்தேன். சில வசதிகளுக்காக என் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் இந்த வேலையை செய்த காலம் இருந்தது.” பண்டகசாலையில் நிலக்கரி ஏற்றும் வேலையை அவ்வப்போது அவரது கணவர் பெறுகிறார். வாரத்திற்கு ரூ.200-300 என கிடைக்கும் கணவரின் வருமானத்தை சார்ந்திருப்பதில்லை என்கிறார் அவர். அவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் பள்ளியில் நன்றாக படிப்பதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார் மோமினா. “என் கணவரின் வருமானத்தையே நாங்கள் சார்ந்திருந்தால் என் பிள்ளைகள் யாரும் பள்ளிக்குச் சென்றிருக்க முடியாது. என் மகள்கள் வளர்ந்து, நல்ல வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே நான் காத்திருக்கிறேன்.”

துர்காபுர் ஆலையைச் சுற்றியுள்ள தொழிற்சாலை கழிவுகளில் நிலக்கரி சலிக்கும் வேலைக்கு இளம் வயதினர், கர்ப்பிணிகள் அல்லது மோசமான உடல்நிலையில் உள்ளவர்கள் என அனைவருக்கும் அனுமதி உண்டு. அண்டை மாநிலமான பீகாரின் மறுசுழற்சி சக்தி குறித்த பி. சாய்நாத்தின் கட்டுரையில், பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘மிகவும் ஏழைகள் பெரும்பாலும் பெண்களால் கழிவுகளில் இருந்து நிலக்கரி சலிக்கும் வேலையே “தேசிய சேமிப்பு” என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.’
சுமார் 10 மணி நேர பணியில் சிறுமிகளும், பெண்களும் ரூ.150 வரை ஈட்டுகின்றனர். ஒவ்வொரு கூடையும் தோராயமாக 20 கிலோ எடை கொண்டிருப்பதால் ரூ.25 வரை அவர்களுக்கு கிடைக்கும். பெரும்பாலானோர் ஐந்து கூடைகள் வரை சலித்துவிடுகின்றனர்.
பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம் லிமிடெட்டிற்கு (செயில்) சொந்தமானது துர்காபுர் எஃகு ஆலை. சுரங்கங்களில் இருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்படும் கச்சா நிலக்கரியை எஃகு ஆலையை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. கழிவு நிலக்கரி அல்லது ஹார்ட் கோக் என்பது கழிவு நிலக்கரியை கார்பனைசிங் செய்த பிறகு தோன்றுவது. இந்த மிச்சமுள்ள கழிவு நிலக்கரியை சேகரித்து கொய்லா பண்டகசாலைகளில் பிற தொழிற்சாலை கழிவுகளான மங்கனீஸ், இரும்பு தாது, சின்டரிங் போன்றவற்றுடன் கொட்டப்படுகிறது. இவை பல்வேறு முதலாளிகளுக்கு (உரிமையாளர்கள்) ஏலம் விடப்பட்டு குறிப்பிட்ட பண்டகசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
“முதலாளிகள் அவ்வப்போது பண்டகசாலைகளுக்கு வருவார்கள். அப்போது கூட எங்களின் துன்பங்கள், துயரங்களை காதுகொடுத்து கேட்கமாட்டார்கள்,” என்கிறார் மோமினா.
பிற தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நிலக்கரியை பிரித்தெடுக்கும் வேலையை சன்டல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள், பெண்களே பெரும்பாலும் செய்கின்றனர். அவர்கள் பல மணி நேரம் அமர்ந்தபடி வெறும் கைகளால் நிலக்கரிகளை சலிக்கின்றனர். வாயிலும், மூக்கிலும் நிலக்கரி தூசு செல்லாமல் இருக்க புடவை அல்லது துப்பட்டா கொண்டு மூடிக் கொள்கின்றனர். அருகில் கழிப்பறைகள் எதுவும் கிடையாது என்பதால் இடைவேளையின்றி 10 மணி நேரம் வேலை செய்கின்றனர்.



கொய்லா பண்டகசாலைகள் உள்ள பகுதிகளை மஹாஜன்கள் கட்டுப்படுத்துகின்றனர். ஒவ்வொரு பண்டகசாலையையும் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் கண்க்காணிப்பாளர்கள் கவனித்துக் கொள்கின்றனர் – வேலையில் ஈடுபடுத்துவது, கண்காணிப்பது, அவர்களின் பங்களிப்பை கண்டறிவது, அதற்கேற்ப சம்பளம் தருவது போன்றவற்றை அவர்கள் செய்வார்கள்.
“கழிவுகளில் இருந்து பெண்கள் சேகரிக்கும் நிலக்கரிகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சமையலுக்கு மர அடுப்பை இப்போதும் பயன்படுத்தும் சாலையோர தாபாக்கள், பிஸ்கட் ஆலைகள், சில சமயம் வீடுகளுக்கும் விற்கப்படும்,” என்கிறார் தம்லாபஸ்தியை சுற்றியுள்ள பண்டகசாலைகளில் ஒன்றை கண்காணிக்கும் அனில் குமார் ஷா சொல்கிறார். பெண்கள் நிலக்கரிக்கு அதிக கூலி கேட்க மாட்டார்கள் என்பதால் அவர்களை வேலையில் வைப்பதாகவும், நாள் முடிவில் விற்க கூடிய நிலக்கரியை அவர்கள் உறுதியாக கொண்டுவருவார்கள் என்கிறார். இக்கட்டுரையில் நேர்காணல் செய்யப்பட்ட அனைத்து பெண்களுமே வேறு வேலை எதுவும் கிடைக்காததால் வேறு வழியின்றி இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளனர்.
தம்லாபஸ்தி போன்ற நகரின் புறநகரங்களில் நிலக்கரி பண்டகசாலைகள் அமைந்துள்ளன. தம்லா ஒட்டகம் அருகில் உள்ள பகுதியில் தோன்றியதால் இப்பகுதிக்கு தம்லாபஸ்தி என பெயர் வந்துள்ளது. துர்காபுரின் தென்-மேற்கான இப்பகுதி முழுவதும் 6-7 அடி உயர நிலக்கரி கழிவுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு வேலை செய்பவர்கள் அருகில் மண், தார்பாய் கொண்டு குடிசை அமைத்து வாழ்கின்றனர். ஆண்களுக்கு அவ்வப்போது லாரிகளில் ஏற்றுவது, இறக்குவது போன்ற வேலை கிடைக்கும்.


இதுபோன்ற தொழிலாளர்களில் ஒருவர் பிரபோத் மாலிக். அவரது மனைவி துலிகா மாலிக் அருகில் நிலக்கரி சலிக்கிறார். 36 வயதாகும் பிரபோத் சொல்கிறார், இங்கு கிடைக்கும் ஒரே வேலை இதுதான். அதுவும் எப்போதும் கிடைப்பதில்லை. “எங்கள் குடும்பத்தில் நான்கு பேர்: என் மனைவி, ஒரு மகன் மற்றும் என் தாய். மாதத்திற்கு 450 முதல் 500 ரூபாய் வரை நான் வருவாய் ஈட்டுவேன்,” என்கிறார் அவர். நிலக்கரி சலித்து துலிகா கொண்டுவரும் ரூ.4000 தான் குடும்ப செலவுகளை சமாளிக்கிறது.
50களில் உள்ள நியோத்தி பஹதூர் கிட்டதட்ட நாற்பதாண்டுகளாக இப்பண்டகசாலைகளில் வேலைசெய்து வருகிறார். “அப்போதிலிருந்து [தொன்னூறுகளில் இருந்து] இந்த பண்டகசாலைகள் தான் என் ஒரே வாழ்வாதாரம்,” என்கிறார் அவர். “என்னால் தரையில் அமர்ந்தபடி அதிக நேரம் வேலைசெய்ய முடியவில்லை என்பதால் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டு சென்று அதில் அமர்ந்தபடி வேலை செய்கிறேன். ஒரு நாளுக்கு ஐந்து கூடைகள் மட்டுமே சேகரிக்கிறேன்.”
மூன்று மகன்கள், ஒரு மகளின் தாய் நியோதி. “மகன்களை போன்றில்லாமல் என் மகள் நன்றாக படிப்பாள். அவள் உயர்படிப்பு படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் எங்களால் படிப்பு செலவை செய்ய முடியவில்லை. மிகவும் இளம் வயதிலேயே அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டோம்,” என்கிறார் அவர். அவளது கணவருக்கு ஒருகாலத்தில் துர்காபுர் எஃகு ஆலையில் நிரந்தர வேலை இருந்தது. அவர் தனது முழு வருமானத்தையும் மதுவிற்கு செலவழித்துவிட்டு தான் தினமும் வீடு திரும்புவார். அவருக்கு வேலை போய்விட்டது. நியோதியும், அவரது கணவரும் எஃகு ஆலையில் தினக்கூலியாக வேலைசெய்து குடும்பத்துடன் வாழும் மூத்த மகனுடன் வசிக்கின்றனர்.

டிபி, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் பொதுவானவை என்கிறார் தம்லபஸ்தியிலிருந்து தோராயமாக 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுகாதார மையமான பலஷ்திஹா பரிசோதனை மையத்தில் பணியாற்றும் ஆஷா பணியாளரான அனிதா ரே. “நீண்ட காலத்திற்கு நிலக்கரி தூசு படிவதால் அவர்களிடம் தோல் நோய் காணப்படுகிறது. தாயுடன் செல்லும் பிள்ளைகளுக்கும் முடி தொடர்பான தொந்தரவுகள் ஏற்படுகின்றன,” என்கிறார் அவர். வயதான பெண்களுக்கு மாதவிடாய் போன்ற மகளிர் நோய்கள் (மாதவிடாய் காலத்தில் அதிக நேரம் துணி மாற்றாமல் இருப்பதால்), அதிக நேரம் கழிப்பறைக்கு செல்லாமல் இருப்பதால் சிறுநீரக பாதையில் தொற்று போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. சுகாதார நிலையத்திற்கு வரும் இளம்பெண்களை சானிடரி நாப்கின்கள் பயன்படுத்த அனிதா அறிவுறுத்துகிறார்.
ஊரடங்கு, பள்ளிகள் மூடல் போன்ற காரணங்களால் சோபி ராணி முர்மு போன்ற சிறுமிகள் மீண்டும் நாள் முழுவதும் பண்டகசாலையில் நிலக்கரி சலிக்கும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். 18 வயதான அவர் 2020ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். துர்காபுர் கல்லூரியில் படித்து, அரசு வேலைக்கு செல்ல நம்பிக்கை கொண்டிருந்தார். ஐந்து வயது முதல் பள்ளி பருவம் வரை சோபி பண்டகசாலைகளில் தனது தாய்க்கு உதவியாக வேலை செய்து வருகிறார். “வார நாட்களிலும், வார இறுதிகளிலும் என் தாய்க்கு உதவியாக பண்டகசாலைக்கு வந்துவிடுவேன். நான் தினமும் 10 கூடை வரை நிலக்கரி சேகரிப்பேன். தலைக்கு மேல் நிழலின்றி கோடை கால வெப்பத்தில் இங்கு வேலை செய்வது மிகவும் சிரமம்,” என்கிறார் அவர். சோபியும் அவளது தாயும் சேர்ந்து பணியிடத்தில் பெரிய குடைகளை நிழலுக்கு அமைக்க முயன்றனர். எனினும் அது நல்ல பலனை தரவில்லை. மழைக்காலங்களில் பண்டகசாலைகள் மூடப்படும். நிலக்கரி சேகரிப்பவர்கள் நாள் முழுவதும் வருவாய் இழக்க நேரிடும்.
துர்காபுர் மகளிர் கல்லூரியில் சமஸ்கிருத இலக்கியத்தில் இரண்டாமாண்டு இளங்கலை பயிலும் சபிதா சரண், ஊரடங்கில் கல்லூரி மூடப்பட்டுள்ளதால் தனது தாய்க்கு உதவியாக பண்டகசாலைக்குத் திரும்பியுள்ளார். வெப்பத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சல்வாரின் துப்பட்டாவைக் கொண்டு தலையை மூடிக்கொண்டு அவர் பேசுகையில், “கழிவு குவியல்களில் இருந்து நிலக்கரி பிரித்தெடுத்தல் என்பது கடினமான உடலுழைப்பு. இங்கு வேலை செய்யும் பெண்கள் மிக கடினமாக உழைக்கின்றனர்.” பண்டகசாலையில் வேலை செய்து வரும் சபிதாவின் தாயார் தனது மகளின் படிப்பு ஒருநாள் கூட கெட்டுப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.


பேருந்து, ஆட்டோவில் கல்லூரிக்குச் செல்வதற்கு ஆகும் பயணச் செலவை ஈடுகட்ட ரிமா மாஜி அவ்வப்போது பண்டகசாலையில் வேலை செய்கிறார். அவர் தம்லாபஸ்தியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைக்கல் மதுசூதன் நினைவுக் கல்லூரியில் படிக்கிறார். இப்போது கல்லூரி மூடப்பட்டுள்ளதால், அவரது 4ஜி இணைப்பிற்கு இந்த வருவாய் உதவுகிறது. அவர் தனது மூத்த சகோதரி, தந்தையுடன் வசிக்கிறார். அவரது தந்தை துர்காபுர் எஃகு ஆலையில் தொழிலாளராக உள்ளார். திறன்மிக்க ஓட்டபந்தய வீரரான ரீமா பள்ளி அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். “என் மூத்த சகோதரி பண்டகசாலையில் வேலை செய்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு திருமணம். நான் பட்டப்படிப்பை முடித்து ரேகா தீதியைப் போன்று இராணுவத்தில் சேர வேண்டும்,” என்று அவர் நம்மிடம் புன்னகைத்தபடி சொல்கிறார்.
நிலக்கரி சேகரிக்கும் குந்தி ராஜ்பாரின் மகள் ரேகா. அவர் அசாம் ரைஃபில் இராணுவக் குழுவில் ஜவானா (வீரராக) சேர்ந்துள்ளார். தனது மகள் குறித்து பெருமை பொங்க பேசுகிறார் குந்தி, “எங்கள் வாழ்க்கை முழுவதும் அடைய முடியாதவற்றை எங்கள் பிள்ளை அடைய விரும்பினோம்.”
ரேகா வீட்டிற்கு வந்தபோது நம்மிடம் பேசுகையில், “இப்போது எனக்கு வேலை கிடைத்துவிட்டது, எங்கள் குடும்பத்தின் பொருளாதாரமும் மேம்பட்டுவிட்து. மண் வீடு சிமெண்ட் வீடாக மாறிவிட்டது. தடையற்ற கல்வியை உறுதி செய்த என் தாயினால் இவை யாவும் சாத்தியமானது.”
Editor's note
அத்யேதா மிஷ்ரா கொல்கத்தாவின் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத்தில் இளங்கலை மாணவர். இவர் துர்காபுர் எஃகு ஆலைகளின் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நிலக்கரி சலிக்கும் தொழிலாளர்களில் குறிப்பாக பெண்கள் குறித்து அதிகம் ஆர்வம் காட்டுகிறார். அவர் சொல்கிறார்: “நிலக்கரிச் சுரங்க பணியாளர்கள் பற்றி பல ஆய்வுகள் செய்யப்படுகின்றன. ஆனால் பெண்கள் அதிகளவில் செய்யும் இந்த துணை பணியை யாரும் அவ்வளவு கண்டுகொள்வதில்லை. அவர்களின் போராட்டம் குறித்து எழுதுவதற்கு பாரி எனக்கு வாய்ப்பளித்தது. அவர்களின் வாழ்க்கை குறிப்புகளை எப்படி தெளிவாக, ஆழமாக அளிப்பது என்பதற்கும் எனக்கு வழிகாட்டியது.”
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார்.