காட்டுப் புல் துடைப்பம், இரு வகை களிமண்ணில் செய்யப்படும் பானைகள், உள்ளூர் வாத்துகள், உள்ளூரில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மசாலாக்கள், வேப்பெண்ணெய் மற்றும் பிற எண்ணெய்கள், இலுப்பை மது, வாசனை எறும்புகள் மற்றும் பிற காட்டுப் பொருட்கள், தையற்காரர்கள் முடிதிருத்துபவர்கள் உணவுக் கடைகளுக்கு மத்தியில் சந்தையில் விற்கப்படும்

ஜுருடியில் இருக்கும் இந்த வாரச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அமைக்கப்படும். 1940களிலிருந்து எந்த இடையூருமின்றி சந்தை நடப்பதாக கிராமத்தின் மூத்தவர்கள் சொல்கின்றனர்.

“குழந்தையாக இருக்கும்போது என் பெற்றோருடன் சந்தைக்கு நான் செல்வேன். எனக்கு திருமணம் நிச்சயமானபோது, என் தந்தை பாத்திரங்களையும் உடைகளையும் பிற பொருட்களையும் இங்கிருந்து வாங்கியது நினைவில் இருக்கிறது. என் மகளின் திருமணத்துக்கும் இங்கிருந்துதான் நான் பொருட்களை வாங்கினேன்,” என்கிறார் லலிதா நாயக். 75 வயதான அவர், வீட்டுப் பொருட்கள் வாங்க ஜலஹரி கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்.

அவரைப் போல, ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். கெந்துஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோடா ஒன்றியத்திலிருக்கும் இச்சந்தை விடியற்காலை முதல் இரவு வரை இயங்கும். “பலவித பொருட்கள் இங்குக் கிடைக்கும். தாய், தந்தை தவிர இங்கு எல்லாவற்றையும் வாங்க முடியும்,” என்கிறார் லலிதா சிரித்தபடி. 

நடுநிலைப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் இப்பகுதியிலேயே பெரிய சந்தையான ஜுருடி சந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கிறோம். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜஜாங்காவிலிருந்து இங்கு அதிகாலை 5 மணிக்கு வந்துவிட்டோம். கடைகளை போட்டுக் கொண்டிருந்த வியாபாரிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சந்தையின் கடைசி ஐந்து கிலோமீட்டரும் மண் சாலைதான். “நிறைய குண்டும் குழியுமாக இருக்கும். மழைக்காலத்தில் யாரேனும் பைக்கில் இருந்து விழுந்தால் திரும்ப எழ முடியாது,” என எங்கள் ஆசிரியர் நடந்தபடி நகைச்சுவையாக சொன்னார்.

மேலே: சந்தையில் ஒருநாள். கீழே: துடைப்பங்கள் செய்வதற்கான மூலப் பொருட்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல, என்கிறார் முகமது ஆசாத். “எனவே ஒரு துடைப்பத்தின் விலையை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கு உயர்த்தி விட்டேன்”

விற்பவர்களும் வாங்குபவர்களும் 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நடந்தும் சைக்கிளிலும் மோட்டார் சைக்கிளிலும் டெம்போக்களிலும் பேருந்திலும் பக்கத்து ஒன்றியங்களான பன்ஸ்பால், ஜும்புரா மற்றும் சம்புவா ஆகிய இடங்களிலிருந்து வருவார்கள்.

ஒடிசாவின் பெரிய கிராம மாவட்டமான இங்கு 86 சதவிகித மக்கள்தொகையான 18,01,733 பேர் (கணக்கெடுப்பு 2011) கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். இங்குள்ள வியாபாரிகளில் பலரும் ஆதிவாசிகளாகவும் நிலமற்றவர்களாகவும் விளிம்புநிலை விவசாயிகளாகவும் தலித்களாகவும் வார வருமானத்தை சார்ந்திருக்கும் முதியவர்களாகவும் இருக்கின்றனர்.

சிமிலாவைச் சேர்ந்த விவசாயியும் தையற்காரருமான கிருஷ்ணா முண்டா, தான் தூக்கி வந்த தையல் இயந்திரத்தின் பகுதிகளை தோளில் மாட்டிக் கொண்டிருக்கிறார். 60 வயதுகளில் இருக்கும் அவர், சம்புவா ஒன்றியத்திலிருக்கும் கிராமத்திலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அவரால் நினைவுகூர முடிவது அந்த கால அளவு மட்டும்தான்.  “துணி தைத்துக் கொடுத்து 200லிருந்து 250 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறேன். தையற்கடை என எதுவும் நிரந்தரமாக எனக்கில்லை,” என்கிறார் அவர்.

கொல்ஹா ஆதிவாசியான முண்டாவுக்கு சொந்தமாக ஒரு பிகா  நிலம் (ஒரு ஏக்கருக்கும் குறைவு) இருக்கிறது. அதில் நெல், உளுந்து. பாசிப்பயறு மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறார். “உண்பதற்காக நான் நெல் விளைவிக்கிறேன். மிச்சமுள்ளதை விற்கிறேன்,” என்கிறார் அவர்.

எறும்பு விற்கும் கினாரி தெகுரியும் இங்கு தொடர்ந்து வருபவர்தான். பல வருடங்களாக பன்ஸ்பால் ஒன்றியத்தின் புல்ஜார் கிராமத்திலிருந்து இங்கு அவர் வருகிறார். 56 வயதான அவர் 200 ரூபாய் பேருந்துக் கட்டணம் செலுத்தி சில நூறு கிராம் தையல் எறும்புகளையும் குல்ஹாரி பூக்களையும் சாமை இலைகளையும் காபி வாரை இலைகளையும் விற்க வந்திருக்கிறார். “தையல் எறும்புகளையும் குல்ஹாரி பூக்களையும் ஒரு கொத்துக்கு 20 ரூபாய் என விற்கிறேன்,” என்கிறார் அவர். 

தலித் விவசாயியான தெகுரியின் குடும்பத்திடம் 24 செண்ட் நிலம் சொந்தமாக இருக்கிறது. அதில் அவர்கள் அரிசியும் காய்கறிகளும் விளைவிக்கின்றனர். “எங்களின் கடைசி அரிசி விளைச்சல், மோசமாக இருந்ததாலும் நாங்கள் சாப்பிட முடியாததாலும் அதை விற்று விட்டோம். அந்தப் பணத்தைக் கொண்டு சந்தையில் அரிசி வாங்கினோம்,” என்கிறார் அவர். 

இடது: சம்புரா ஒன்றியத்தின் சிமிலாவைச் சேர்ந்த விவசாயியும் தையற்காரருமான கிருஷ்ணா முண்டா இங்கு துணி தைத்து 200லிருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். அரிசி, உளுந்து பாசிப்பயறு மற்றும் காய்கறிகளை அவர் விளைவிக்கிறார். வலது: மினாட்டி முண்டைஸ் புங்கை, வேம்பு மற்றும் குசும்பா விதை எண்ணெய்களை விற்கின்றனர். மர வேர் மற்றும் அரிசியைக் கொண்டு அவர் காய்ச்சும் ‘ஹண்டியா’ என்ற உள்ளூர் மதுவை கால் கிலோ 50 ரூபாய் என விற்கிறார்

சில கடைகள் தள்ளி 55 வயது மினாட்டி முண்டா வேம்பு, புங்கை, குசும்பா விதை எண்ணெய்களை விற்றுக் கொண்டிருக்கிறார். ஜலஹரி கிராமத்தருகே இருக்கும் ருகுதி சாஹி என்கிற கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற கோஹ்லா ஆதிவாசியான மினாட்டி, ‘ஹந்தியா’ என்ற உள்ளூர் மதுவை காய்ச்சி கால் லிட்டர் 50 ரூபாயென விற்கிறார். ‘வயிற்றுப் புழு மற்றும் தோல் பிரச்சினையை தீர்க்கும் இலுப்பை விதைகளை குழம்பை நான் செய்வேன்,” என்கிறார் அவர்.

எல்லா கடைகளும் திறந்துவிட்டன. சிலக் கடைகள் தார்பாய்க்கு கீழ் அமைக்கப்பட்டிருந்தன. சிலவற்றுக்கு மர நிழல்தான் கூரை. தேன், இலுப்பைப் பூக்கள், எண்ணெய்கள், காட்டுக் காளான்கள், கத்திரிக்காய், தக்காளி, கோஸ், உருளைக் கிழங்கு, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளும் இன்னும் பலவும் விற்கப்பட்டன. 

புயான் பழங்குடியான கார்த்திக் நாயக் பொருள் வாங்க வந்தார். அவர் சொல்கையில், “கியோஞ்சார் மாவட்டத்தின் 40 கிராமங்களின் மக்கள் பொருட்கள் வாங்க இங்கு வருகின்றனர். தூரத்து கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வசிப்பவர்களுக்கு உப்பு, மசாலா, எண்ணெய் போன்ற பொருட்களை வாங்க இருக்கும் இடம் இது மட்டும்தான்,” என்கிறார்.

சோனு முண்டாவை சுற்றி நடந்து கொண்டிருக்கும் வாத்துகளும் விற்பனைக்குத்தான். 55 வயது முண்டா பழங்குடி விவசாயியும் வாத்து வளர்ப்பவருமான அவர் எட்டு வாத்துகளை இன்று கொண்டு வந்திருக்கிறார். மிச்ச 60 வாத்துகளை சொந்த ஊரான தெல்கோய் ஒன்றியத்தின் கந்தாபந்தா கிராமத்தில் விட்டு வந்திருக்கிறார். ஒரு வாத்து 650 ரூபாய்க்கு விலை போகும்.

“வாத்து விற்று வரும் பணத்தில்தான் என் குடும்பம் நடக்கிறது. 30 செண்ட் நிலம் என்னிடம் இருக்கிறது. அதில் பாதியில்தான் நடவு செய்ய முடிகிறது. மிச்சப் பாதியை மேய்ச்சலுக்கு விட்டு விடுகிறேன்,” என அவர் விளக்குகிறார்.

மேலே: 55 வயது சோனு முண்டா ஒரு பழங்குடி விவசாயியும் வாத்து வளர்ப்பாளரும் ஆவார். ஒரு வாத்தின் விலை ரூ.650. கீழே: ரிமுலியைச் சேர்ந்த சித்தரஞ்சன் தாஸ் கோழிகளையும் வாத்துகளையும் விற்கிறார். ஒரு பறவைக்கு 450 ரூபாயிலிருந்து 500 ரூபாய் விலை. தலித் விவசாயியான அவரிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் நெல்லும் காய்கறியும் விளைவிக்கிறார்

கோழிகளும் வாத்துகளும் வேண்டுமானால் ரிமுலியின் சித்தரஞ்சன் தாஸிடம் செல்லலாம். ஒரு பறவைக்கு 450லிருந்து 500 ரூபாய் விலை. அவர் கந்தாரா, பிலெய்படா மற்றும் ரிமுலி கிராமச் சந்தைகளிலும் விற்கிறார்.

தலித் விவசாயியான அவருக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. “உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, கோஸ், இஞ்சி போன்றவற்றை பருவத்துக்கு ஏற்றார்போல் விளைவிக்கிறோம். நாங்கள் விளைவிக்கும் அரிசியை விற்கிறோம். உண்பதற்கான அரிசியை ரேஷன் கடைகளில் வாங்குகிறோம்.”

ரிமுலியின் சம்புவா ஒன்றியத்தைச் சேர்ந்த பாரதி கைபர்டா, இலைகளில் வரிசையாக மீன் குவித்து வைத்திருக்கிறார். ரவாலா, இறால், எலிஷி, கோகிலா, ஷிலா மற்றும் பிடா கராண்டி மீன்கள் அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கின்றன.

60 வயதுகளில் இருக்கும் சுதர்ஷன் கைபர்டா பர்பில் டவுனருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த முப்பது வருடங்களாக இங்கு வந்து கொண்டிருக்கிறார். சமையலுக்கான பலவித மசாலாக்களை சிறு பொட்டலங்களாக அவர் வைத்திருக்கிறார். சுதர்ஷனுக்கு சொந்தமாக நிலம் இல்லை. மனைவியுடன் தனியே வாழ்வதாகச் சொல்கிறார். மகனும் மருமகளும் பார்த்துக் கொள்ளவில்லை எனக் கூறுகிறார். “எனக்கும் மனைவிக்குமான உணவுக்கு இதைத் தொடர்ந்து செய்ய யோசித்திருக்கிறேன். ஆனால் நான் நிச்சயமாக பிச்சை எடுக்க மாட்டேன்,” என்கிறார் அவர்.

சுதர்ஷன் போலவே, இங்குள்ள பல வியாபாரிகள், ஆதாரமாக சிறு துண்டு நிலம் கூட இல்லாத முதியவர்கள்தான். உதாரணமாக 74 வயது ஹோ முண்டா ஆதிவாசி. இவர் ஜும்பாரா ஒன்றியத்தைச் சேர்ந்த கனகனா கிராமத்தைச் சேர்ந்தவர். மூங்கிலால் செய்யப்பட்ட கூடைகள், மீன் பிடிக்கும் பொறிகள் போன்றவற்றைக் கொண்டு வந்திருக்கிறார். “அரசின் ஓய்வூதியத் திட்டம் இந்த வயதில் கிடைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். கிடைத்தால் என் குடும்பத்துக்கான உணவுக்கென கூடைகள் நான் விற்க வேண்டியிருக்காது,” என்கிறார் அவர்.

மேலே: பார்பில்லின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்ஷன் கைபர்டா ஆவார். கடந்த முப்பது வருடங்களாக அவர் இங்கு வந்து கொண்டிருக்கிறார். நடுவே: ஜும்புரா ஒன்றியத்தைச் சேர்ந்த கனகனா கிராமத்தைச் சேர்ந்த ஹோ முண்டா பழங்குடியான சிரா ஜான் கலந்த் மூங்கிலால் செய்யப்பட்ட கூடைகளையும் மீன் பொறிகளையும் இன்னும் பல பொருட்களையும் கொண்டு வந்திருக்கிறார். கீழே: மகாதேவ்பூரைச் சேர்ந்த பாரத் சந்திரா பெஹெரா பாரம்பரிய குயவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கறுப்பு மற்றும் சிகப்பு களிமண்ணை, மணலோடு சேர்த்து பானை செய்ய பயன்படுத்துகிறார். ஒரு பானையின் விலை 200 ரூபாய்

தலித் குயவரான பாரத் சந்திரா பெஹெரா 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகாதேவ்பூரிலிருந்து வருகிறார். அங்குதான் அவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக பானைகள் செய்து வருகிறது. பானைகள் செய்ய மணலுடன் கறுப்பு மற்றும் சிவப்பு களிமண்கள் தேவை என அவர் தெரிவிக்கிறார். “(மண் எடுக்க) நான் வனத்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். லஞ்சங்களும் கொடுக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

ஜுருடி மற்றும் உகுந்தா சந்தைகளிலும் ஜும்பாரா ஒன்றியத்தின் பிற சந்தைகள் சிலவற்றிலும் பாரத் விற்பனை செய்கிறார். ஒரு பானை 200 ரூபாய்க்கு விற்கிறது. நல்ல வியாபாரம் இருக்கும் நாளில் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும் என்கிறார் அவர்.

துடைப்பங்களுக்கான மூலப்பொருட்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல என்கிறார் முகமது ஆசாத். “எனவே ஒரு துடைப்பத்தின் விலையை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கு உயர்த்தி விட்டேன். சந்தையின் ஒவ்வொரு நாளும் 200லிருந்து 300 ரூபாய் வரை நான் லாபம் எடுக்க முடியும்,” என்கிறார் அவர்.

இருள் கவியத் தொடங்கியதும் விலைகளும் சரியத் தொடங்குகின்றன. வியாபாரிகள் அவர்களின் பொருட்களை வரும் விலைக்கு விற்கத் தயாராக இருக்கின்றனர். ஒரு கிலோ காய்கறிகளைக் கூட 10லிருந்து 20 ரூபாய்க்கு விற்கின்றனர். கடைகளருகே பிளாஸ்டிக்கும் தூர எறியப்பட்ட உணவும் காய்கறிகளும் குப்பைகளாக கிடக்கின்றன. குப்பை பொறுக்குபவர்கள் அவற்றில் பிளாஸ்டிக்குகளை தேடுகிறார்கள். மாடுகளும் எருமைகளும் காய்கறிகளுக்கான பின்னர் வரும்.

எங்களின் உடைமைகளை நாங்கள் எடுத்துக் கொண்டு கிராமத்திலுள்ள வீட்டுக்கு நடக்கத் தொடங்கினோம்.

இக்கட்டுரை எழுதிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் கற்பதற்கான ASPIRE என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முயற்சி மற்றும் டாடா ஸ்டீல் அறக்கட்டளையின் ஆயிரம் பள்ளிகள் திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இதைச் செய்தன. சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இதைச் செய்தனர்.  

பாரி கல்விக் குழு, சுதீபா சேனாபதி மற்றும் ஸ்மிதா அகர்வால் ஆகியோர் இக்கட்டுரைக்கு அளித்த உதவிக்காக தனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

Editor's note

அனன்யா டோப்னோ, ரோகித் கக்ராய் மற்றும் ஆகாஷ் ஏகா (6ம் வகுப்பு) மற்றும் பல்லபி லுகுன் (ஏழாம் வகுப்பு) ஆகியோர் ஜோதா ஒன்றியத்தைச் சேர்ந்த ஜஜாங்கா டவுனைச் சேர்ந்தவர்கள். பல்லபி சொல்கையில், “இந்த பாணியிலான (ஆய்வு) பணி செய்வது எங்களுக்கு புதிது. காய்கறி விற்பவர்களுடன் மக்கள் பேரம் பேசுவதை நாங்கள் பார்த்தோம். காய்கறி விளைவிப்பது எவ்வளவு கஷ்டம் என எங்களுக்குத் தெரியும். மக்கள் விலைகளுக்காக விவசாயிகளுடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபோது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்கிறார்.

இக்கட்டுரையில் இருக்கும் புகைப்படங்கள் அனன்யா டோப்னோ, ரோகித் கக்ராய், ஆகாஷ் ஏகா மற்றும் பல்லபி லுகுன் ஆகியோரால் எடுக்கப்பட்டவை.

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்