
“கடினமாக உழைத்தும் என்னிடம் பணம் இல்லை.”
டூஃபானி ராஜ்பார் விவசாய தொழிலாளியாகவும், ஆடு மேய்ப்பவராகவும் இருக்கிறார். “விவசாயத்தில் பணம் குறைவாகவே கிடைக்கிறது என்பதால் நான் தினக்கூலி வேலை செய்து பணம் சம்பாதிக்கிறேன்,” என்றார்.
அகார் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பார் குறிப்பிடும் ‘விவசாயம்’ என்பது கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் அவரைப் போன்ற நிலமற்ற பலர் பின்பற்றும் முறைசாரா ஏற்பாடாகும். லகான் என்று கூறப்படும் ஆண்டு குத்தகை முறையில் தோராயமாக அரை ஏக்கர் நிலம் என்று சொல்லப்படும் ஒரு பிகாவை குத்தகைக்கு எடுக்கிறார். “ஹோலி காலத்தில்[மார்ச்/ ஏப்ரல் மாதங்களில்], 10 சதவித மாத வட்டியில் பனியாவிடம் 14-15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். என்னிடம் நிலம் இல்லாததால் வங்கியில் கடன் பெற இயலாது,” என்று அவர் விளக்குகிறார். அருகில் தான் மேய்த்துக் கொண்டிருந்த ஆறு ஆடுகளை கவனித்தபடி, குத்தகை ஒப்பந்தத்திற்கு என எழுத்துப்பூர்வ சான்று எதுவுமில்லை என்று என்னிடம் கூறினார்.
நிலத்தை டிராக்டர் கொண்டு உழுவதற்கும், உரங்கள், விதைகள் வாங்குவதற்கும் கடன் தொகை செலவாகிவிட்டது. 2021 செப்டம்பரில் பல்லியா மாவட்டம் துபார் வட்டார கிராமத்தில் ராஜ்பாரை நான் சந்தித்தபோது நெற்பயிர் அறுவடை குறித்து பேசிக் கொண்டிருந்தார். “எனது ஒட்டுமொத்த வருமானமும், ஆண்டு சேமிப்பும் கடனை திருப்பி செலுத்தவும், குத்தகை தொகை எட்டாயிரம் ரூபாயை கொடுப்பதற்குமே செலவாகிவிட்டது,” என்றார். அவர் உத்தரப்பிரதேசத்தின் பட்டியலினமான ராஜ்பாரை சேர்ந்தவர்.

உ.பியின் கிழக்கு முனையான பல்லியா பிராந்தியத்தை அண்டை மாநிலமான பீகாரிடமிருந்து பிரிப்பது கங்கை ஆறு தான். இம்மாவட்டத்தின் 38 சதவிகித மக்கள் முதன்மை தொழிலாக வேளாண்மையை செய்கின்றனர். அவர்களில் பலரும் ராஜ்பார் போன்று நிலமற்றவர்கள். அவர் சொல்கிறார், “ஆண்டு முழுவதும் நாங்கள் வயல்களில் பாடுபடுகிறோம், ஆனால் எங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லாததால் விவசாயிகளாக எங்களை கருதுவதில்லை.”
சொந்தமாக நிலமும் கிடையாது, சட்டப்பூர்வ ஒப்பந்தங்களும் எதுவும் இல்லாதது போன்றவை அடுத்தடுத்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. விவசாயி என்று அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதால் அவரால் மண்டியில் விற்பனை செய்ய முடியாது. “மண்டியில் விற்கும் விலையில் பாதிக்கு அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு தான் நகரில் உள்ள கடைக்காரர்களிடம் விற்க வேண்டி உள்ளது. சில சமயங்களில் மிக குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டி இருக்கும் இல்லாவிட்டால் பயிர்கள் அழுக வேண்டியது தான்.” பல்லியா மண்டியில் கிட்டத்தட்ட இரட்டிப்பு விலையில் குவிண்டாலுக்கு ரூ.1,940க்கு விற்பனையாகிறது. ஆனால் அவரால் அந்த விலையை பெற முடியாது.
“மாதத்திற்கு சுமார் 15-20 நாட்களுக்கு கட்டுமான இடங்களில் எனக்கு வேலை கிடைக்கும், அதில் ஒரு நாளுக்கு 300-350 ரூபாய் கிடைக்கும். வயல்களில், கட்டுமான பணியிடங்களில் வேலை செய்து என் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு வருகிறேன். இப்போது என் இரு மகன்களும் அதையே செய்கின்றனர்,” என்கிறார் டூஃபானி ராஜ்பார்.
அகார் கிராமத்தில் ராம்சந்தர் யாதவ் என்பவரும் ஒரு பிகாஸ் ரூ.7000 என்று நான்கு பிகாஸ் நிலத்தை குத்தகை எடுத்துள்ளார். பருவம் தவறிய மழைகளும், வயல்களில் திரியும் நீலான்களும் பயிர்களை எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடும் என்று அவர் அஞ்சுகிறார். “கடந்த 8-10 ஆண்டுகளில் மழைக்கு என குறிப்பிட்ட நேரம் இருப்பதில்லை. குளிர் காலத்தில் கூட பலத்த மழை பெய்கிறது. மழையின் அளவையும் கணிக்க முடிவதில்லை. வளரும் நிலையில் இருக்கும் நெற் பயிர்களுக்கு மழை நல்லது. ஆனால் பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் பெய்தால் விளைச்சல் பாதிக்கும். ஏற்கனவே போதிய அளவு தண்ணீரை மண் உள்ளிழுத்திருக்கும் என்பதால் மேற்கொண்டு உறிஞ்சாது, ”என்கிறார் அந்த 60 வயதுக்காரர். சிலசமயம் குளிர் காலத்தில் கனமழை பொழிவதால் காலநிலையை கணிக்க முடியவில்லை என்கிறார் அவர்.


தோராயமாக இரண்டு ஏக்கர் எனப்படும் தனது நான்கு பிகாஸ் நிலத்தை உழுவதற்கு ரூ.10,000 செலவிடுவதாக யாதவ் சொல்கிறார். இதற்காக அவர் ஒரு டிராக்டரையும், ஓட்டுநரையும் வேலைக்கு வைக்கிறார். “விதைப்பதற்கு, அறுவடை கூலிக்கு, சாக்குகளில் நெல்லை கட்டுவதற்கு என சுமார் 3000 ரூபாய் செலவிடுகிறேன். இதற்கு பதிலாக நாங்கள் அவர்களுக்கு[தொழிலாளர்களுக்கு] அறுவடையில் மூன்றில் ஒரு பங்கை தருகிறோம்,” என்று அவர் விளக்கினார்.
விதைக்கும் பணிகளை பெரும்பாலும் டிராக்டர்கள் செய்கின்றன. இதுவும் விவசாயிகளின் செலவை அதிகரிக்கும் காரணி. ராம்சந்தர் சொல்கிறார், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிகா நெல் விதைப்பிற்கு சுமார் 500 ரூபாய் செலவிடுவேன். இப்போது ஒரு ஏக்கர் விதைக்க 700 ரூபாய் தருகிறேன்.” அவரது மொத்த விதைப்பு செலவு பயிருக்கு ரூ.2,800 என அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பதால் இது மேலும் உயரும் என்கிறார் அவர்.
ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளுக்கு போதிய மழையின்மை மற்றும் காலம் தவறிய மழை பொழிவு கூடுதல் சுமையாகிறது. “கூடுதல் மழையால் எங்கள் வயல்வெளிகளில் அடிக்கடி நீர் தேங்குகிறது. பயிர்கள் அழுகுவதை தடுக்க வெள்ளம் தேங்கிய இடங்களில் உள்ள பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்,” என்றார் ராம்சந்தர்.


“கடந்த 8-10 ஆண்டுகளில், மழைக்கு என குறிப்பிட்ட காலம் கிடையாது. வளரும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களுக்கு மழை நல்லது. ஆனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் போது மழை பெய்தால் மகசூலை பாதிக்கும். தண்ணீரை ஏற்கனவே மண் ஈர்த்திருக்கும் என்பதால் மேற்கொண்டு உறிஞ்சாமல் நிறுத்திக் கொள்ளும்,” என்கிறார் 60 வயது யாதவ். ஆர்யன் பாண்டே எடுத்த புகைப்படங்கள்
இப்பகுதியில் சுற்றித் திரியும் நீலான் உள்ளிட்ட கால்நடைகளால் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. பயிர்கள் வளர தொடங்கி அறுவடை முடியும் வரை விவசாயிகள் தங்கள் நிலங்களை காவல் காக்கின்றனர். சிலர் இப்பணியில் தொழிலாளர்களை அமர்த்துகின்றனர்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு மூன்று முறை வழங்கப்படும் ரூ.2000 பெறுவதற்கான தகுதி கிடைக்காதது ராம் சந்தர் போன்ற குத்தகை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. “நில உரிமையாளருக்கு பணம் செல்கிறது. ஆனால் மழை வெள்ளத்தில் பயிர்கள் நாசமடைந்தால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம், நில உரிமையாளர்கள் அல்ல[விளைச்சலால் பலன் பெறுபவர்கள்],” என குறிப்பிடுகிறார் அவர்.
விவசாயிகள் தங்களுக்கு போதிய நெல் கையிருப்பு வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை விற்கின்றனர். “ஒரு மாதத்திற்குள் நான் சுமார் 30 குவிண்டால் நெல் அறுவடை செய்வேன். 15 குவிண்டால் நெல்லை என் குடும்பத்திற்கு வைத்துக் கொள்வேன்,” என்றார் அக்டோபர் மாதம் பேசிய ராம்சந்தர் யாதவ். செலவுகளை சேர்க்காமல் ஒரு குவிண்டால் ரூ.1000 முதல் 1,200 வரை விற்பனையாகும். யாதவிற்கு தோராயமாக ரூ.16-17,000 கிடைக்கும். “ஒரு அறுவடைக்கு நிலத்தை முழுவதுமாக முறையாக உழுவதற்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும்.”
குத்தகை முறையால் வருவாய் இழப்பு ஏற்படுவதால் இருவருமே வாழ்வாதாரத்திற்காக கட்டுமானப் பணியிடங்களில் தினக்கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. “பெருந்தொற்றால் எங்கள் பிரச்சினை இன்னும் மோசமாகிவிட்டது. கோவிட்-19க்கு முன்பு எனக்கு 15-20 நாட்களுக்கு கூலி வேலை கிடைக்கும். இப்போது வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது.” பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா(PMGKAY) கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் 20 கிலோ கோதுமை, 15 கிலோ அரிசி ஆகியவை மனைவி, இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு உணவளிக்க உதவுகிறது.



பெண் விவசாய தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். நிலத்தை அனைத்து வகையிலும் சுத்தப்படுத்தும் வேலைகளை பெண்கள் செய்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் MNREGA திட்டத்தின் கீழ் ஆண், பெண் என இருவருக்கும் ஒரு நாளுக்கு ரூ.201 கொடுக்கப்படுகிறது. ஆனால் நிலத்தை சுத்தப்படுத்துவது, நாற்று நடுதல், அறுவடை செய்தல், அறுவடையை சுத்தம் செய்து மூட்டை கட்டுவது போன்ற வேலைகளுக்கு அதில் பாதி தொகையான ரூ.100-120 மட்டுமே பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது.
“கோவிட்-19 வந்த பிறகு மாதத்தில் பாதி நாட்கள் எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை. பணமின்றி நாங்கள் வீட்டில் முடங்கியுள்ளோம்,” என்கிறார் விவசாய தொழிலாளியும், ஐந்து மகள்களின் தாயுமான 35 வயது உஷா தேவி. அவருக்கு ராணி பிந்த் என்ற 13 வயது மூத்த மகள் இருக்கிறாள். அவரது கணவர் கட்டுமானப் பணியாளர். வேலை தேடி அலைகிறார். “கோவிட் காரணமாக எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எப்படியோ சமாளித்தோம். பள்ளிகள் மூடப்பட்டதால் என் மகளுக்கு மதிய உணவு கிடைக்கவில்லை,” என்றார் அவர்.
நாற்பது வயதுகளில் இருக்கும் விவசாய தொழிலாளியான பார்வதி தேவி முதலாளிகள் அனைவரும் ஆண்கள் என்பதால் ஆண்களுக்கே அதிக கூலி தருவதாக நம்புகிறார். “பெண்கள் செய்யும் வேலைக்கு யாரும் எவ்வித மதிப்பும் கொடுப்பதில்லை,” என்றார் அவர். பார்வதி தனது வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வயலுக்கு அறுவடை பணிக்கு செல்கிறார். அறுவடை செய்து சுத்தம் செய்வதில் கால் பங்கு தனக்கு கிடைக்கும் என்கிறார் அவர்.


“என் தந்தை விவசாய தொழிலாளியாக இருந்தார், நானும் விவசாய தொழிலாளி, என் பிள்ளைகளும் தொழிலாளர்கள்,” என்கிறார் 81 வயது மனாணி பஸ்வான். அவர் அகார் கிராமத்தில் செங்கல், மண் கொண்டு கட்டிய வீட்டில் வசிக்கிறார். ஒரு நாளுக்கு இருமுறை தனது ஐந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார். பஸ்வான் நிலமற்ற விவசாயி என்பதால் ஆண்டிற்கு ரூ.7000 செலுத்தி ஒரு பிகா நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். “எனது நான்கு மகன்களும் தினக் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்,” என்றார்.
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களும் பல்லியாவில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லை. “விவசாயி ஆக இருந்தால் உங்கள் வயிறு நிரம்பாது. நகரில் தொழிலாளியாக வேலை செய்தால் வேலைக்கு பிறகு பணமாக கூலி கொடுப்பார்கள். ஆனால் இங்கு [விவசாயி] எங்கள் குடும்பத்திற்கான உணவை மட்டுமே சமாளிக்க முடிகிறது,” என்றார் அரை ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான 59 வயது ராமஷங்கர் மிஷ்ரா. ராமஷங்கருக்கு ஆறு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. பெரு நகரத்தில் தனது மகனுக்கு வேலை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.
“ ஒரு வேலை [நகரத்தில்] இருந்தால் பணம் கிடைக்கும். உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் விவசாயத்திற்கு பணம் கிடைப்பதில்லை என்பதால் மக்கள் இதை கைவிட்டுச் செல்கின்றனர்,” என்றபடி அவர் விடைப்பெற்றார்.
பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்
Editor's note
ஆர்யன் பாண்டே டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில ஹானர்ஸ் படிப்பின் இரண்டாமாண்டு மாணவர். பாரி நிறுவன ஆசிரியர் பி.சாய்நாத்தின் உரைகள் வாயிலாக இவர் பாரி பற்றி அறிந்தார். ஆர்யன் சொல்கிறார், “நான் இக்கட்டுரையை எழுத நினைத்தேன். நம் நாட்டின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் நிலையை வெளிக் கொண்டுவர விரும்பினேன். பாரி கல்விக்கு செய்தி சேகரிப்பது மூலம் கிராமப்புற இந்தியா பற்றியும், நம் அமைப்பின் சிக்கல்களையும், உண்மையில் பத்திரிகை என்பது என்ன என்பதையும் உணர முடிகிறது."
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.