“என் வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும், நான் செல்லும் குறுக்கு வழியில் செல்லாது. ஒரு நாள் நான் 7 ஆடுகளை இழந்துவிட்டேன். அதுவரை அந்த மந்தையை நான் பாதுகாப்பேன் என்று எனது குடும்பம் நம்பியிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவை திரும்பிவிட்டன!” என்று டேராரூன் மாவட்டத்தில் உள்ள சக்ரத்தா டெசிலில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் மேய்க்கும் 18 வயதான ஹர்பால் சிங் கூறுகிறார்.

இமய மலையின் சிவாலிக் சரகத்தில் மலையும், மலை முடுக்குகள் சார்ந்ததுமான சக்ரத்தா டெசிலில் புல்வெளியும், மேய்ச்சல் நிலங்களும் அதிகம் உள்ளன. ஹர்பால் போன்ற ஆடு மேய்ப்பவர்கள் அங்கு தங்களின் விலங்குகளை மேய விடுகின்றனர். டேராடூன் மாவட்டத்தில் 43.7 சதவீத நிலம் காட்டுப்பகுதியில் வருகிறது. சால் மற்றும் ஊசியிலை மரங்கள் மாநிலத்தின் மேற்குப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

இப்பகுதி முன்பு ஜவுன்சார் பவார் என்று அழைக்கப்பட்டது, இப்பகுதியில் வாழும் அனைவரும் இன்னும் இப்பெயரை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள மொழி ஜவுன்சாரி என்று அழைக்கப்படுகிறது. எனவே அதே பெயரில் தங்களை குறிப்பிடுகிறார்கள். (ஜான்சாரி என்றும் குறிப்பிடப்படுகிறது) 2001ம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜவுன்சாரியை பழங்குடியினர் என்றும், அவர்களின் மொத்த மக்கள்தொகை 88 ஆயிரத்து 664 என்றும் குறிப்பிடுகிறது. இதில் உட்பிரிவான காசாஸ் மற்றும் கோல்டாஸ்(கைவினை கலைஞர்கள்) ஆகிய பிரிவினரும் அடங்குவர். பெரும்பாலான ஜவுன்சாரிகள் மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள். பருவகாலத்திற்கு ஏற்ப தங்கள் மந்தையுடன் இடம்பெயர்கிறார்கள்.

ஹர்பால், கோர்ச்சாவில் உள்ள மேய்ச்சல் விலங்கு வளர்ப்பு குடும்பத்தில் இருந்து வருகிறார். சக்ரத்தா டெசில் உள்ள அந்த கிராமத்தின் மக்கள்தொகை 270 ஆகும். அவரது கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவர், எதிர்காலத்தில் அரசுப்பணி செய்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். “பள்ளியில் எங்கள் ஆசிரியர் எங்களை எப்போதும் வேறு வேலையோ அல்லது நகரத்தில் வேலைக்கோ செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துவார். ஆனால், ஆடு, மாடுகள் மேய்க்கக்கூடாது என்பார்” என்று அவர் கூறுகிறார். 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநில தலைநகர் டேராடூனில்தான் கல்லூரி உள்ளது. அங்கு சென்று படிப்பதற்கு ஆசைப்படுகிறார்.

கால்நடைகள் வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் ஆகியவையே ஒரு காலத்தில் இந்தப்பகுதியில் முக்கிய தொழிலாக விளங்குகிறது. “எங்களுக்கு சமூகத்தில் அதிக மரியாதை உள்ளது” என்று கோர்ச்சாவைச் சேர்ந்த 62 வயதான விவசாயியும், கால்நடைகள் மேய்ப்பவருமான குன்வார் சிங் கூறினார். “நான் இறந்த பின், யாரும் இத்தொழிலுக்கு செல்லமாட்டார்கள், ஏனெனில் இந்த செங்குத்தான மலையில் ஏறவேண்டும். இளம் வயதினருக்கு கால்கள் வலிக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குன்வார் சிங் மற்றும் மற்ற கால்நடைவளர்ப்பாளர்களும், கால்நடை வளர்த்தும், ஆப்பிள் தோட்டம் வைத்தும் பராமரித்தும் வருகின்றனர். “அடுத்த தலைமுறையினர் தோட்டத்தை மட்டுமே சார்ந்திருப்பார்கள்” என்று அவர் கூறுகிறார். கோர்ச்சா மற்றும் குன்வா கிராமங்களில் ஏற்கனவே 15 ஏக்கர் விளை நிலம் ஆப்பிள் தோட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. “ஆப்பிள் விளைவிப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. நாங்கள் மொத்த விற்பனை மண்டிக்கு சென்றால் எங்களை நாற்காலியில் அமரவைத்து தேனீர் வழங்குகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

குன்வாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் 286 பேர் வசிக்கிறார்கள். அதில் ஒருவரான சுமித் சவுகான் (20) கூறுகையில், “நான் ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். நிச்சயம் கால்நடைகள் மேய்ப்பதற்கு அல்ல” என்றார். இந்தொழில் எனக்கு பணம் கொடுக்காது. நகரத்தில் இருந்து வேலை செய்யும்போது எனக்கு பணம் கிடைக்கும். நகரத்தில் வேலைசெய்யும் எனது நண்பர்கள், படித்தும், நான் இன்னும் கால்நடை வளர்ப்பாளனாக இருக்கிறேன் என்று கேலி செய்கிறார்கள். என் குடும்பத்தினர் ஏற்கனவே அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சலுக்கு தேவையான அனைத்தும் சுமித் தனது தாத்தா, 48 வயதான ஜோஹர் சிங்கிடம் இருந்து கற்றிருந்தார். அவரது தாத்தாவின் நாயுடன், மலைகளில் ஏறி, இறங்கி அவர்கள் பயணம் செய்துள்ளனர். காடி மற்றும் பாஷிமா வகையைச் சார்ந்த 60 வெள்ளாடுகள் மற்றும் 10 செம்மறி ஆடுகள் கொண்ட தங்கள் மந்தையுடன் தினமும் 20 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்வார்கள்.

“மேய்ச்சல் தொழில் எனக்கு வருமானம் கொடுக்காது. ஆனால் நகர வாழ்க்கை கொடுக்கும்”

கால்நடை மேய்ப்பாளர்களான ஹர்பால் மற்றும் சுமித் ஆகியோர், இதை ஒரு மரியாதையான அல்லது தேவையான அளவுக்கு பணம் வழங்கக்கூடிய தொழிலாக பார்க்கவில்லை. கால்நடை வளர்ப்பை 6 வயதில் இருந்து செய்து வரும் சுமித்தின் தாத்தா ஜோஹர் சிங் கூறுகையில், “கிராமத்தில் வேலை செய்வது, உணவு, சுத்தமான காற்று மற்றும் தண்ணீரைக்கொடுக்கும். ஆனால், முறையான வருமானத்தைக்கொடுக்காது” என்று கூறுகிறார். 

ஜவுன்சார் பகுதியில், தற்போது வரை பண்டமாற்று முறையே செய்யப்படுகிறது. பணம் கொடுத்து பொருட்களைப் பெருவது மிக அரிதாகவே நடக்கிறது. தானியங்கள் மற்றும் மற்ற விளைபொருட்களே பசாலனா என்ற நடைமுறையின் கீழ் கட்டணமாக செலுத்தப்படுகிறது. “இரும்பு வேலைகள் செய்பவர்கள் முதல் கட்டுமானத்தொழில் செய்பவர்கள் வரை, பாடகர்கள் மற்றும் மேளம்கொட்டுபவர்கள் முதல் நெசவாளர்கள் வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டு முழுவதும் இந்த முறையிலே கட்டணங்கள் வழங்கப்படுகின்றன” என்று குன்வார் சிங் கூறுகிறார்.

எனினும், கடந்த இருபது ஆண்டுகளாக, சஹியா மற்றும் சஹாரன்பூர் மொத்த சந்தையில் காய்கறி விற்பனை, மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம் மற்றும் எல்லை சாலை நிறுவனம் சார்ந்த கட்டுமானம் மற்றும் சாலை சரிபார்ப்பு பணிகளால், பொருளாதாரத்தில் பணம் நுழைந்துவிட்டது.

“மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அதற்கு உங்களுக்கு பணம் வேண்டும் அல்லவா? பள்ளிக்கட்டணம் மற்றும் மற்ற செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது” என்று ஜோஹர் சிங் கூறுகிறார். அவரது குடும்பத்திற்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அது அவருக்கும், அவரது நான்கு சகோதரர்களுக்கும் சொந்தமானது அது. அதில் அவர்கள் அரிசி, கோதுமை, ராஜ்மா, காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் பயிர் செய்கிறார்கள். “விவசாயம் மட்டும் பணம் கொண்டு வராது. சில நேரங்களில் நாங்கள் ராஜ்மாவை சந்தைக்கு விற்பனை செய்ய எடுத்துச்செல்வோம். அங்கு அது கிலோ ரூ.40க்கு விற்கப்படும். அதை நீங்கள் 6 சகோதரர்களுடன் பிரித்துக்கொள்ளும்போது ஒன்றும் கிடைக்காது”  என்று அவர் மேலும் கூறுகிறார்.

“ஆட்டு உரத்திற்கு ஜவுன்சார் விவசாயிகள் மத்தியில் நல்ல விலை கிடைக்கும். வயல்களில் எங்கள் கால்நடைகளை கிடை போடுவதற்கு அழைப்பார்கள். இந்த உரத்திற்கு அதிக தேவை உள்ளது. இப்போது உரம் நகரில் இருந்து கூட வருகிறது” என்று குன்வார் சிங் கூறுகிறார்.

கால்நடைகள் வளர்ப்பு மற்றும் மேய்ச்சல்

70களில் 800 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்ததை நினைவு கூறுகிறார் ஜோகர் சிங், தற்போது இருப்பதைவிட 10 மடங்கு அதிகமான கால்நடைகளை அப்போது வைத்திருந்தார். மேய்ச்சல் தொழில் செய்பவர்களை பார்ப்பதே தற்போது அரிதாகிவிட்டதாக அவர் கூறுகிறார். “முன்பெல்லாம் மலைக்கு மேலே வரை செல்வோம்”  என்று அவரது கிராமத்தில் இருந்து தெரியும் தூரத்தில் உள்ள மலையை காட்டுகிறார். “அந்த சிகரங்களில் தற்போது பசுமையான புல்வெளிகள் இல்லை மற்றும் இருக்கும் புல்வெளிகளிலும், எனது மந்தையை இந்த வயதான காலத்தில் அங்கு அழைத்துச்செல்வதற்கான வலிமையும் என்னிடம் இல்லை” என்று அவர் மேலும் கூறுகிறார்.

70களில் தற்போது உள்ளதைவிட 10 மடங்கு அதிகமாக தாங்கள் வைத்திருந்த 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் குறித்து நினைவு கூறுகிறார் ஜோஹர் சிங்.

குடும்பத்தில் மூத்தவராக உள்ள ஜோஹர் சிங், அவரது தந்தையுடன், மிகச்சிறிய வயதிலேயே கால்நடைகள் மேய்க்கும் வேலையை துவங்கிவிட்டார். பள்ளிக்கு சென்றதேயில்லை. எனினும் அவரது 5 சகோதரர்களும் பள்ளிக்குச் சென்றனர். அவர்கள் தற்போது ஓட்டுனராக, கட்டுமான தொழிலாளராக, உதவியாளராக உள்ளனர். அதில் பட்டம் பெற்ற ஒருவர் வங்கியில் பணிபுரிகிறார்.

“கிராமமே வெறிச்சோடிவிட்டது. எங்கள் வீட்டில் எப்போதும் 50 பேர்கள் வரை ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் இப்போது 6 பேர் மட்டுமே உள்ளனர்” என்று குன்வார்சிங் கூறுகிறார். அவரது வீடு பழங்கால முறையில் கட்டப்பட்டுள்ளது. அது வீட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் சேர்ந்து வசிக்க வசதியாக உள்ளது. தரைதளத்தில் கால்நடைகளும், முதல் தளத்தில் விளைச்சல் பயிர்களை சேமிக்கும் கிடங்கு வசதியும், மூன்றாம் தளத்தில் குடும்பத்தினரும் வசிக்கலாம். 

சக்ரத்தா பகுதிகள் முழுவதிலுமே பனிக்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியசுக்குச் சென்றுவிடும். கால்நடை மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலங்களுக்கு கீழே உள்ள நதி பள்ளத்தாக்குகளுக்கு சென்றுவிடுவார்கள். கோடையில் மேலே உள்ள புல்வெளிக்கு இடம்பெயர்வார்கள். அதில் இளம்பச்சை நிற புற்கள் இருக்கும். அவற்றிற்கும் உருகும் பனிக்கட்டிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும். ச்சாணி என்று அழைக்கப்படும் தற்காலிக தங்குமிடங்களில் தங்குவார்கள்.

‘கோடை காலத்திற்கும், பனிக்காலத்திற்கும் ச்சாணிகளாக பயன்படுத்துவதற்காக பல வசதியான நல்ல வீடுகளை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் இந்த தொழிலில் இருந்து எல்லோரும் சென்றுவிட்டார்கள்‘

கோர்ச்சாவைச் சேர்ந்த புஷ்பா சவுகான், தனது கணவர் நரேஷ் சிங்குடன் ச்சாணியில் தங்குவார். வீட்டு வேலைகளை செய்துவிட்டு, நெய் தயாரிப்பார். தேன் எடுப்பார். “ நான் அதிகாலை 4 மணிக்கே எழுந்து மாடுகளில் பால் கறந்துவிட்டு, காட்டிற்குச் சென்று சமைப்பதற்கு விறகு சேகரிப்பேன். அப்போது மாட்டுக்கு புல்லும் கொண்டுவர வேண்டும். எங்களிடம் மாடும் உள்ளது. பின்னர் சமைக்கும் நேரம் வந்துவிடும்” என்று அவர் கூறுகிறார்.

ஜோஹர் சிங் கூறுகையில், “ ச்சாணிகளில் தங்கும்போது எனது விலங்குகளின் உரோமங்களை நூற்பதில் நேரத்தை செலவிடுவேன்.  அவற்றில் இருந்து எத்தனை சவுராஸ் (மேலாடைகள்) செய்திருப்பேன் என்று எனக்கு நினைவில்லை” என்கிறார்.

தற்போது இந்த ச்சாணிகள் காலியாகக்கிடக்கின்றன. ஜோஹர் சிங்கும் பனிக்காலத்தில் கிராமத்திலேயே தங்கிவிட முடிவெடுத்துவிட்டார். அருகில் உள்ள புல்வெளியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்துவிட்டார். “கோடை காலத்திற்கும், பனிக்காலத்திற்கும் ச்சாணிகளாக பயன்படுத்துவதற்காக எத்தனை நல்ல வீடுகளை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் இந்த தொழிலில் இருந்து எல்லோரும் சென்றுவிட்டார்கள்” என்று குன்வார் சிங் கூறுகிறார்.

வெப்பமான வானிலை

குன்வார் சிங்கின் குடும்பத்தினர் தற்போது 50 வெள்ளாடுகள், 4 செம்மறியாடுகள், இரண்டு பசு மற்றும் காளை மாடுகள் என 70களில் வைத்திருந்ததில் சிறு பகுதியை மட்டுமே தற்போது வைத்துள்ளனர். ஆயிரம் வெள்ளாடுகள், 500 செம்மறியாடுகள் மற்றும் 10 காளைகள், அவர்களின் நெல் மற்றும் காய்கறிகள் விளைவிக்கும் 2 ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தி வந்தனர். “பனிப்பொழிவு குறைந்துவிட்டது எங்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. புற்களுக்கு நிலத்தில் வளர்வதற்கு ஈரப்பதம் இருக்க வேண்டும். எனது ஆடுகள் நல்ல புற்களை சாப்பிட்டு வளர்ந்து வந்தது. ஆனால், தற்போது அவை எதை வேண்டுமானாலும் உட்கொள்கின்றன” என்று அவர் கூறுகிறார்.

பாரம்பரிய காத்குனி வகையில் கட்டப்பட்ட வீடுகள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் சேர்ந்து வாழ வழி வகுக்கின்றன. தரை தளத்தில் விலங்குகள், முதல் தளத்தில் தானிய கிடங்கு, இரண்டாவது தளத்தில் மனிதர்கள் வசிக்கும் பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது.

குன்வார்சிங்கின் கவலையெல்லாம் தனது விலங்குகளுக்கான புல்வெளிகள் குறைந்து வருவதேயாகும். 2019ம் ஆண்டிற்கான அறிக்கையும், அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றக்குழுவின் பருவ நிலை மாற்றத்தால் உயர்ந்த மலைகள், கடல் மற்றும் பனிமண்டலம் அகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த சிறப்பு அறிக்கையும் அதை உறுதிப்படுத்துகிறது. பனி ஆழமும் 25 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், பனிசார் தாவரங்களும் பாதிக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தியாவதில்லை, அது கால்நடை மேய்ப்பவர்களை பாதிக்கிறது.

“வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். 5 அடி ஆழம் உள்ள பனி மார்ச் மாதம் வரை இருக்கும். ஆழமான பனியால், இரண்டு, மூன்று மாதங்களுக்கு கிராமத்திற்கு வெளியே உள்ள சாலைகள் தடைபடும். அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால், தற்போது இரண்டு நாட்களுக்கு மட்டுமே பனிப்பொழிவு ஏற்படுகிறது. அதை புல்டோசர் அல்லது ஜேசிபி சில மணி நேரங்களில் அகற்றிவிடுகிறது” என்று 48 வயதான சிங் சவுகான் கூறுகிறார். இவர் கோர்ச்சாவில் வசிக்கிறார்.

பனி, அவர்களுக்கு ச்சாவர் வகை நெற்பயிர்களை விளைவிப்பதற்கு உதவியது. இவ்வகை நெற்பயிர் குளிர்ந்த நீரில் மட்டுமே வளரக்கூடியது. இதை ஜவுன்சாரிகள் திருமண நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்துவர். உள்ளூர் கோயில்களுக்கு தானமாக வழங்குவார்கள். “ச்சாவர் பயிரிடுவது  முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. உங்களால் ஒரு விதை கூட எளிதாக பெறமுடியாது. கிராமத்தில் ஒரு குடும்பத்தில் கூட அந்த விதைகள் இருப்பதில்லை. அந்த அரிசியின் வாசம் ஒரு கிலோ மீட்டர் வரை வீசும். ஒரு கிலோவே ஆயிரம் ரூபாய் வரை விற்றது. திருவிழாக்களில் கறிக்குழம்புடன் பரிமாறப்படும்”  என்று சவுகான் கூறினார்.

இமயமலை பகுதிகளில் வெப்பநிலை உயர்வுடன் கூடிய பனியிழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவியல் முன்னேற்றங்கள் பத்திரிக்கையில் 2019ம் ஆண்டு ஜீன் மாதம் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், 1990 முதல் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மெல்லிய ஆடைகள் அணியும் பாரம்பரியம்

இந்த வெப்பமான காலநிலை மாற்றம், ஜவுன்சாரி மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை வளர்ப்பவர்கள் விலங்குகள் வளர்ப்பதை குறைத்து வருகின்றனர். அவைகளுக்கு தேவையான புற்கள் மற்றுத் தீவனம் கிடைப்பது அரிதாகவுள்ளதால் இவ்வாறு செய்கின்றனர். வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் ரோமங்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய கம்பளி ஆடை தொழிலை வெப்பநிலை உயர்வு மாற்றியுள்ளது. “இந்த கம்பளி ஆடைகள் கடும் வெப்பத்தை கொடுக்கக்கூடியவை. அதனால், அவற்றை நாங்கள் அணிந்துகொள்ள மாட்டோம். தோள்களில் போட்டிருப்போம். நவம்பர் மாத துவக்கம் முதல் 2 கம்பளி ஆடைகள் கூட அணிந்திருப்போம்” என்று ஜோஹர் சிங் கூறுகிறார்.

கேசர் சிங் சவுக்கான் (30) கூறுகையில், “கோர்ச்சாவில் உள்ள எனது தாத்தா, நான் டேராடூனில் இருந்து வாங்கிவரும் கம்பளி மேலாடை மற்றும் கேப்பையே அணிய விரும்புகிறார். பாரம்பரிய உடைகளை அணிவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூட ஆர்வம் காட்டுவதில்லை” என்றார்.

“விழாக்காலங்களில் விருந்தினர்கள் வரும்போது அவர்கள் அமர்வதற்கு வெள்ளாட்டு தோலாலான கர்சா எனப்படும் தரைவிரிப்பையே மக்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், தற்போது சமவெளியில் கிடைக்கும் பிளாஸ்டிக் தரைவிரிப்புகள்தான் ஜவுன்சாரிகளின் அனைத்து வீடுகளிலும் உள்ளது. யாரும் பாரம்பரிய தரைவிரிப்புகளை விரும்புவதில்லை. அதனால் அவை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஒரு காலத்தில் நிறைய கால்நடைகள் இருக்கும். எங்களுக்கு அதிகளவிலான தோல் முடிகள் கிடைக்கும். அவற்றைப்பயன்படுத்தி ஆண்டு முழுவதும் பொருட்களை தயாரித்துக்கொண்டிருப்போம். தற்போது அவை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கின்றன” என்று குன்வாவைச் சேர்ந்த 42 வயதான நெசவாளர் பிங்கியா சிங் கூறினார்.

புற்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதால், கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களிடம் உள்ள விலங்குகளை குறைத்து வருகிறார்கள்.

பிங்கியா சிங் கோல்டா சமூகத்தைச் சார்ந்தவர். அவர்கள் கம்பளி போர்வை மற்றும் ஜம்மக்காள நெசவாளர்கள். அவர்கள் பான்கி, நும்பா, கர்சா (வெள்ளாட்டின் தோல் முடிகளில் இருந்து செய்யப்படும் பருமனான போர்வைகள்) குர்சாவ் ( பனிக்காலத்தில் அணிந்துகொள்ளப்படும் தண்ணீர் புகாத காலணிகள்) மற்றும் சவ்ரா ஆகியவற்றை செய்பவர்கள். “நாங்கள் இலகுவான மரத்தாலான தறியைப் பயன்படுத்துவோம். அவை கையாள்வதற்கு எளிதாக இருக்கும்” என்று பிங்கியா தனது தொழில் குறித்து விளக்குகிறார். “நீங்கள் ஆப்பிள் அல்லது ஆப்ரிகாட் மரங்களை பயன்படுத்தலாம். ஆனால், டியோடர், சிர் போன்ற கடினமான மரங்களை பயன்படுத்தக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியான அளவில் தறி வேண்டும். குர்சவ் எனப்படும் பனிக்காலத்திற்கு பயன்படுத்தப்படும் காலணிகளுக்கு நூல் மற்றும் ஊசி தேவை. சவ்ரா எனும் மேலாடையை நெய்வதற்கு பத்து நாட்களாகும். சமவெளியில் இருந்து கதகதப்பான மேலாடைகள் வரத்துவங்கியதில் இருந்து கையில் நெய்யப்படும் மேலாடைக்கு தேவை படிப்படியாக குறைந்துவிட்டது.

கோர்ச்சா கால்நடை மேய்ச்சல் குடும்பத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி 34 வயதான திக்கம் சிங். அவர் கூறுகையில், “எனது குடும்பத்தில் உள்ள இளம் தலைமுறையினருக்கு ஜவுன்சாரியாய் இருப்பதன் அர்த்தம் தெரியவில்லை. நான் குழந்தையாக இருந்தபோது நடைபெற்ற நிறைய திருவிழாக்களை இப்போது காண முடிவதில்லை. நகரத்தில் இருந்து குழந்தைகள் வந்தால், அவர்கள் நூடுஸ் சாப்பிடவே விரும்புகிறார்கள். சுத்தமான நெயும், அரிசியும்  அவர்களுக்கு ஜீரணமாக மறுக்கிறது. உடல் நிலை பாதிக்கப்படுகிறது. ஜவுன்சாரி என்பது பெயரில் மட்டுமே உள்ளது.

தமிழில்: பிரியதர்சினி.R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர். 

Editor's note

ரித்துஜா மித்ரா 2020ம் ஆண்டு அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாமாண்டு முதுநிலை வளர்ச்சி படிப்பை முடித்தார். ஜவுன்சாரி கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்து தனது ஆராய்ச்சி கட்டுரைக்காக ஆய்வு செய்தார். அவர்களின் பாரம்பரிய அறிவு மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டார். பி.சாய்நாத் அவர்களின் ஆய்வரங்கம், எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பாரியுடனான உரையாடல் ஆகியவை எனக்கு வழிகாட்டியாக இருந்தது. நாங்கள் பாடத்திட்டமாக பார்த்த சமூகவியல், சுற்றுச்சூழல் மற்றும் மானுடவியலில் உள்ள இதழியல் பார்வை குறித்து நான் புரிந்துகொண்டேன்.