அதிகாலை 4.30 மணி. பறவைகளின் சத்தம் கூட கேட்கவில்லை. ஆனால் நீர் விழும் சத்தமும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்டுளின் சத்தமும் அசியாகி கோரவாஸின் பெண்கள் விழித்து  விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தின.

பிரதானத் தெருவின் பொதுக் குழாயிலிருந்து ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கிறார் சுமித்ரா (அவர் இந்தப் பெயரைதான் பயன்படுத்துகிறார்). பாத்திரத்தில் பிடிக்கும் தண்ணீரை பிறகு வரிசையாக இருக்கும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்கள் அல்லது மண் பானைகளில் நிரப்புகிறார்.

எல்லா நாட்களும் பொதுக் குழாயில் தண்ணீர் கிடைக்கும். நேரம் மட்டும் மாறும்.  குடும்பத்துக்கு தேவையான தண்ணீரை ஜதுசனா தாலுகாவின் இந்த கிராமத்தில் பிடிப்பதற்கு சரியான சூழலும் அதிர்ஷ்டமும் பக்கத்து வீட்டாரின் உதவியும் வேண்டும். நீர் தீருவதற்கு முன் அங்குச் சென்றுவிட வேண்டும். பல வேலைகளைச் செய்யும் சுமித்ரா நீர் கிடைப்பதைப் பொறுத்து இரவு 11, அதிகாலை 2 அல்லது 4 மணிகளுக்கு வருவார்.

ஒரு நாள் கூட தவறவிட மாட்டார். பிறர் யாரையும் இந்த வேலைக்காக அவர் சார்ந்திருக்கவும் மாட்டார். சொல்லப்போனால் என் தாய் சம்பாதிக்கவும், சமைக்கவும் குடும்பத்துக்கு உணவளிக்கவும் எவரையும் சார்ந்திருக்கவில்லை.

“நாள் எப்போது தொடங்குகிறது, எப்போது முடிகிறது என்று கூட எனக்குத் தெரிவதில்லை,” என்கிறார் அவர். இடைவிடாத வேலைகள் அவரது முழு நாளையும் இரவின் ஒரு பகுதியையும் நிரப்பி விடுகின்றன. அம்மாவுக்கு வயது 55. நான்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த அண்ணன் ஹரிராமுக்கு வயது 29. மூத்த சகோதரிகள் மஞ்சு குமாரிக்கு 26 வயது, ரிதுவுக்கு 23 வயது. எனக்கு 21 வயது. குடும்பத்திலேயே இளையவள்.

நீர் எடுத்து, கொண்டு வந்து சேர்த்த பிறகு, காலை உணவான சப்பாத்தி மற்றும் கூட்டு ஆகியவற்றை மண் அடுப்பில் செய்யத் தொடங்குகிறார் சுமித்ரா. பிறகு மிச்ச வீட்டு வேலைகளை வேலைக்குக் கிளம்பும் முன் அவசரமாக முடிக்கிறார்.

என்னுடையத் தாயைப் போன்ற தினக் கூலி வேலை பார்ப்பவர்கள் சோம்பலாக இருக்க முடியாது. வேலைகள் வேறு எவருக்காவது சென்று விடும். அவருக்கென போடும் தேநீரைக் கூட ஒரே மடக்கில்தான் வேகமாக குடிக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்களை நோக்கி சத்தம் போட்டு அழைத்து வீட்டை விட்டு அவர் கிளம்பும்போது அவரது குடும்பம் இன்னும் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

பக்கத்து வீட்டிலிருக்கும் 45 வயது சாந்தா தேவி அந்த நாளுக்கான உணவை சமைத்துக் கொண்டிருக்கிறார். என் அம்மாவின் அழைப்பைக் கேட்டதும் அப்படியே மொத்த வேலைகளையும் மகளிடம் ஒப்படைத்துவிட்டு, கூலித் தொழிலாளர்களை அழைத்து வர நிலவுடமையாளர் அனுப்பியிருக்கும் ட்ராக்டருக்கு விரைகிறார். கதவருகே இருக்கும் ஆணியில் தொங்கும் ஓர் ஆண்சட்டையையும் ஒரு துப்பட்டாவையும் எடுத்துக் கொள்கிறார். வேலை பார்க்கும் போது குர்தாவின் மேல் சட்டையைப் போட்டுக் கொள்வார். துப்பட்டாவை தலையில் கட்டிக் கொள்வார்.

மீண்டும் தாமதமானது சாந்தாவை மோசமாக உணர வைக்கிறது. இன்னொரு கடும் உழைப்புக்கான நாள். விதியை நொந்துக் கொள்கிறார். “எல்லா நேரமும் ஓட்டம். சாப்பிட நேரமில்லை. நீர் குடிக்க நேரமில்லை,” என பொதுவாக சொன்னபடி பிற பெண்களுடன் சேர்ந்து ட்ராக்டரில் ஏறுகிறார்.

என் தாய் மற்றும் சாந்தாவுடன் அசியாகி கோரவாஸின் சுன்னோ, ரஜன் தேவி, ஆர்த்தி, லீலாபதி எனப் பல தினக்கூலி பெண்களும் இணைந்தனர். பெருவிவசாயிகளின் நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாகவும் தினக்கூலிகளாகவும் வேலை பார்த்து வாழ்பவர்கள் அவர்கள். வேலைக்கும் பிறகு வீட்டுக்குமென 100 கிலோமீட்டர் தூரம்  அவர்கள் பயணிக்கிறார்கள்.

என்னுடைய கிராமமான அசியாகி கோரவாஸ் தில்லியின் தெற்கே 200 கிலோமீட்டர் தூரத்தில் ரிவார் மாவட்டத்தில் இருக்கிறது. 2,862 பேர் வசிக்கின்றனர். அதில் 1,049 பேர் என் தாய் போல், நிலமில்லா தலித்கள்.

என்னுடைய தந்தையான 63 வயது ராம், காயலான் பொருட்கள் சேகரிக்கும் வேலை செய்தார். மறுவிற்பனை செய்யக் கூடிய வீட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக், இரும்பு முதலியவற்றை சேகரிப்பார். ஜதுசானா ஒன்றியம் முழுவதும் சைக்கிளில் சுற்றிப் பொருட்களை சேகரித்து பிறகு காயலான் கடையில் விற்று விடுவார்.

இரண்டு வருடங்களுக்கு முன் அவர் ஒரு ஏணியிலிருந்து விழுந்து முட்டியில் காயமாகி விட்டது. அப்போதிருந்து அவர் வீட்டில்தான் இருக்கிறார். அவர் ஏதேனும் ஒரு கடையிலேனும் வேலை பார்த்தால் குடும்ப வருமானத்துக்கு உதவியாக இருக்குமென என் தாய் நினைக்கிறார்.

என்னுடைய தாய்க்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு தினக்கூலி வேலை கிடைக்கும். ஆனால் இரண்டு நாட்கள் வேலை கூட கிடைப்பது கஷ்டமென்கிற சூழல்களும் இருக்கின்றன. அத்தகைய நாட்களில் அவர் வீட்டு வேலைகளைச் செய்வார். ஒரு தினக்கூலி வேலை கிடைத்து விடுமென்ற நம்பிக்கையில் இருப்பார்.

அவரைப் போன்ற பெண்கள் சராசரி வருமானமாக 5000லிருந்து 6000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். “உணவு, மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணம், பாடப்புத்தகங்கள் முதலிய வீட்டுச் செலவுகளும் மற்றும் பிற செலவுகளும் மொத்த வருமானத்தையும் எடுத்துக் கொள்கிறது. சேமிக்கவென ஒரு பைசாவும் நிற்பதில்லை. எனவே எங்களுக்கென துப்பட்டாவோ வளையல்களோ வாங்குவது அரிதாகி விட்டது,” என்கிறார் அவருக்கென எதையாவது வாங்குவாரா என்ற என் கேள்விக்கு பதிலாக.

குறைந்தக் கூலிக்கு என் அம்மா 13 வயதிலிருந்து வேலை பார்க்கிறார். 15 வயதில் திருமணம் முடிந்தபிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் வேலைக்கு செல்வதிலிருந்து விடுப்பு எடுத்தார். மற்றபடி அவரின் நான்கு கர்ப்பக்காலங்களிலும் கூட பணிபுரிந்திருக்கிறார். மூத்தவர் ஹரிராமை கைக்குழந்தையாக  சுமந்தபடியே கூட நிலத்துக்கு சென்று வேலை பார்த்திருக்கிறார்.

திறந்த நிலங்களில் வேலை பார்ப்பதால் கோடை வெயிலுக்கும் குளிர்கால காலைகளுக்கும் தாய் அஞ்சுகிறார். விவசாயத்துக்கான காலம் வருடம் முழுக்க என்னவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஏப்ரல் மாதத்தில் கோதுமை அறுவடையின்போது வெப்பம் அதிகமாக இருக்கும். சிக்கரி அறுவடை செய்யும் மே, ஜூன் மாதங்களில் இன்னும் அதிக வெப்பம் இருக்கும். ஹரியானாவின் வெப்பநிலை இந்த மாதங்களில் 45 டிகிரி வரை தொடும்.

ஜுலை மாதம் நெல் விதைப்பின்போது அதிகாலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வேலை பார்ப்பார். ஒரு மணி நேரம் மட்டும் உணவு இடைவேளை எடுத்துக் கொள்வார். 11 மணி நேரங்களுக்கு அவரின் கால்கள் ஓரடி ஆழ தண்ணீரில் நிலையாக இருக்கும். மொத்த நேரமும் குனிந்தபடி இருப்பார். அவரின் வேலையை விளக்குகையில்: “நெல் விதைக்கும் தண்ணீர் இரண்டு அடி ஆழம் இருக்கும். சகதியாக இருக்கும். எனவே என்னால் தரையைக் காண முடியாது. மேலே இருக்கும் சூரியனும் அதிக வெப்பத்தைக் கொடுக்கும். காலைச் சுற்றி இருக்கும் தண்ணீர் கொதிக்கும்,” என்கிறார். 

ஒரு ஏக்கர் நெல் விதைப்புக்கு 10 வேலையாட்கள் வேண்டும். நிலவுடமையாளர் மொத்தமாக குழுவுக்கு 3500 ரூபாய் கொடுப்பார். ஒருநாளைக்கு ஒருவருக்கு 350-லிருந்து 400 ரூபாய் கிடைக்கும். அம்மாவைப் பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் வேலைவாய்ப்பு குறைவது வெளிப்படையாக தெரிவதாகச் சொல்கிறார். “முதலில் அறுவடை இயந்திரங்கள் வந்தன. சமீபத்தில் பிகாரிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வந்திருக்கின்றனர். மிகக் குறைந்த கூலிக்கும் வேலை பார்க்க அவர்கள் தயாராக இருக்கின்றனர்,” என்கிறார் அவர்.  

நெல் வயல்களில் பணிபுரியும் பெண்கள்

நெல்லும் பருத்தியும் கம்பும் அறுவடை செய்யும் அக்டோபர் மாதம் ரிவாரியில் வேலைகள் மிகுந்த மாதம். சில மாதங்கள் கழித்து, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரியிலெல்லாம் பிற விவசாயத் தொழிலாளர்கள் போல என் தாயும் கோதுமை மற்றும் கடுகுச் செடிக்கு இடையே களை போல் முளைக்கும் பருப்புக் கீரை பறிக்கும் வேலை செய்வார். தொழிலாளர்கள் பருப்புக் கீரையை ஒரு கிலோ 3-5 ரூபாய்க்கு விற்பார்கள். அந்த பணத்தை அவர்கள் வைத்துக் கொள்ள நிலவுடமையாளர்களும் அனுமதிப்பார்கள். ஒருநாளில் 30 கிலோ வரை விற்க முடியும். இந்தப் பருவத்தில் கிடைக்கும் அதிக வருமானம் சிரமமான மாதங்களில் வாழ்க்கையோட்ட அவர்களுக்கு உதவுகிறது.

ஆனால் இன்னும் ஜூலை கூட முடியவில்லை. நெல் விதைப்பு நடக்கிறது. மதிய நேரத்திலோ அதற்கு சற்றுப் பிறகோ உணவுக்கென அருகே உள்ள மரத்துக்கடியில் பெண்கள் அமர்வார்கள். உணவு டப்பாக்கள் வெளியே வரும். காலையில் செய்த சப்பாத்தியையும் கூட்டையும் பகிர்ந்து கொள்வார்கள். சமையல் முடிக்க முடியாமல் கிளம்பியவ்ர்களுக்கு உணவு கொடுப்பார்கள்.

சீக்கிரம் சாப்பிட்டுவிட்டால், துப்பட்டாக்களை தலையணைகளாக்கி வலி மிகுந்த கால்கள் நீட்டி சற்று படுத்தபடி பேசுவார்கள். செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள். நான் சென்ற நாளன்று முதல் நாள் பெய்த மழைதான் பேசுபொருளாக இருந்தது. தன் வீட்டில் ஒழுகியதை சொல்கையில் லீலாபதி, “வெளியே பெய்த மழைக்கும் உள்ளே பெய்ததுக்கும் வித்தியாசம் இருக்கவில்லை,” என வலி கலந்த நகைச்சுவையுடன் சொன்னார்.

55 வயது லீலாபதி 13 வயதிலிருந்து நிலங்களில் பணிபுரிந்து வருகிறார். நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் அவர் மட்டும்தான் வருமானம் ஈட்டுகிறார். “என்னுடைய கணவர் வீட்டில்தான் இருக்கிறார். என் மகன் எதுவும் செய்ய மாட்டேன் என்கிறான். ஒவ்வொரு நாளும் என்னுடைய கோபத்தை மட்டும் அவன் அதிகரித்து கொண்டிருக்கிறான்,” என்கிறார் லீலாபதி.  அவரின் நிலை ஒன்றும் வித்தியாசமானது அல்ல. இந்தப் பகுதியில் இருக்கும் பல இளைஞர்கள் படிப்பதுமில்லை. வேலைக்கு செல்வதுமில்லை. “நாங்கள் ஏழைகள். சம்பாதித்தால்தான் உணவு. இல்லையென்றால் பட்டினிதான்,” என்கிறார் அவர், ஏன் இந்த வேலையை அவர் செய்கிறார் எனக் கேட்டபோது.

அவருக்கு ஆதரவாக பக்கத்து வீட்டு சுன்னோ சேர்ந்து கொண்டார். “வெளியே வந்து நான் வேலை பார்க்காவிட்டால் எதை நான் சாப்பிடுவது?”. அவரது குடும்பத்தில் அவர் மட்டும்தான் வருமானம் ஈட்டுபவர். அவரின் கணவருக்கு வீட்டுக் காவல் போன்ற வேலை எப்போதேனும்தான் கிடைக்கும். அவரின் 30 மற்றும் 26 வயது மகன்கள் படிக்கவுமில்லை, வேலைக்கும் செல்லவில்லை என்கிறார் அவர். கணவர், இரு மகன்கள், அவர்களின் மனைவிகள், இரண்டு பேரக் குழந்தைகள் என எட்டு பேர் கொண்ட குடும்பத்துக்கு அவர் வருமானம் ஈட்ட வேண்டும். “என்னுடைய மகன்கள் வேலைக்கு போக வேண்டுமென விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.

34 வயது ரஜன் பெரும்பாலான பெண்களை விட இளையவர். அவரின் கணவர் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். பக்கவாதம் பாதித்திருந்தது.  ஐந்து வயது மகனுடன் வசிக்கும் அவர் தினக்கூலி வேலைகளில்தான் வருமானம் ஈட்டுகிறார். “(நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும்) கோதுமையை மட்டுமே எங்களால் உண்டு கொண்டிருக்க முடியாது. காய்கறிகள், மசாலா, பால், எண்ணெய், எரிவாயு எனப் பல விஷயங்கள் தேவை,” என்கிறார் அவர். வேலைக்கு அவர் செல்லும்போது உறவுக்காரப் பெண் குழந்தைகளை பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறார்.

30 வயது ஆர்த்தியும் இங்குதான் இருக்கிறார். இந்த வேலைக்கு வருவதற்காக 2 மற்றும் 6 வயதுகளில் இருக்கும் இரு குழந்தைகளை வீட்டில் விட்டு வந்திருக்கிறார். அவரின் கணவர் லக்‌ஷ்மி ஒரு மெக்கானிக்காக இருக்கிறார். படாடி டவுனருகே ஒரு மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். அவர்களின் இரு குழந்தைகளும் கடந்த வருடம் தனியார் பள்ளிக் கட்டணம் உயர்ந்ததால் படிப்பை நிறுத்தி விட்டனர். அதிகக் கட்டணம் அவர்களால் செலுத்த முடியவில்லை. ஆர்த்தி வேலைக்கு செல்கையில் குழந்தைகளை தாத்தா, பாட்டி பார்த்துக் கொள்கின்றனர். 

சூரிய அஸ்தமனத்தின்போது, பெண்கள் ட்ராக்டர் ஏறிவிட்டார்கள். இரவு வேளைக்கு என்ன சமைப்பது என பேசியபடி வீடு திரும்புகிறார்கள். என்னுடைய தாயும் சோர்வாக திரும்புகிறார். 10-12 மணி நேரங்கள் சகதி நிலத்தில் வேலை பார்த்து வருகிறார்.

குடும்பத்துக்கான வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும் தினசரி வீட்டு வேலைகளிலிருந்து இந்தப் பெண்களுக்கு விடுதலை இல்லை. ட்ராக்டரிலிருந்து வந்ததும் இரவு உணவு தயாரித்து, பாத்திரம் கழுவி, குடும்பத்திடன் பேசி, துணிகள் துவைத்து பொதுக் குழாயில் நீர் பிடித்து என மீண்டும் அவர்கள் வேலைகளில் மூழ்கி விடுகின்றனர்.

வளர்ந்த மகள்கள் உதவுகின்றனர். ஆனால் ரஜன் மற்றும் சுன்னோ போன்ற பெண் குழந்தைகள் இல்லாதவர்களும் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களும் எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும். மகன்களின் உதவி கிடைக்காது. “வீட்டுவேலைகள் பெண்களுக்கானவை,” என்பதே பொதுவான சிந்தனை.

என் தாயைப் பொறுத்தவரை, நாங்கள் நால்வரும் அவர் செய்யும் வேலையைச் செய்ய வேண்டியிருக்காது என நம்புகிறார். எங்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க அவர் விரும்புகிறார். என் சகோதரர் பொறியியல் படிப்பு முடித்திருக்கிறார். குடிமைப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதப் படித்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய மூத்த சகோதரி வளர்ச்சிக் கல்வியில் முதுகலை முடித்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தின் கல்வித்துறையில் இயங்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இன்னொரு சகோதரியும் நானும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் கூட அரசு வேலைகள் கிடைக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார்.

என் பெற்றோர் கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். எங்கள் சமூகமும் ஊரும் கேள்விப்பட்டிராத காலத்திலேயே எங்களைத் தனியார் பள்ளிக்கு அனுப்பினர். அதற்காக அவர்கள் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பு சுலபமாக இருக்கவில்லை என்றாலும் அவர்கள் உறுதியோடு இருந்தார்கள்.

தாய் சுமித்ராவுடன் ராமன்

நான்காம் வகுப்பு படித்தபோது என்னுடைய சகோதரர் சில சமயம் பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். அதை என் தந்தை கேள்விப்பட்டபோது கடும் கோபத்துக்குள்ளானார். என் சகோதரருக்கு அடி விழுந்தது. பள்ளிப் படிப்பை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றார் என் தந்தை. அதற்குப் பிறகு என் சகோதரர் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததே இல்லை. அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரை என் பெற்றோர் அணுகி, அவர் படிவம் நிரப்பிக் கொடுத்ததன் பேரில் ரிவாரியிலுள்ள நவோதயா பள்ளியில் (கிராமப்புறத்தைச் சேர்ந்த திறமையான குழந்தைகள் படிக்க ஏதுவாக விடுதி வசதியுடன் இருக்கும் பள்ளி) சகோதரர் சேர்க்கப்பட்டார். கொஞ்ச காலத்தில் அவரை நாங்களும் பின் தொடர்ந்தோம்.

கல்வி கிடைத்திருந்தால் தன் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என என் தாய் எப்போதும் சொல்வதுண்டு. என் தந்தை 8ம் வகுப்பு வரை படித்தார்.  அதற்குப் பிறகு தினக்கூலி வேலை பார்க்கத் தொடங்கிவிட்டார். இத்தகைய சூழலில், அவரும் என் தாயும் தினக்கூலி வேலை பார்க்கும் நிலைக்கு எங்களை விட்டதே இல்லை. அதே நேரத்தில் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்ட நினைவும் எனக்கு இல்லை. எங்களின் வாழ்வில் கல்வி முக்கியம் என்பதை புரிந்து கொண்டோம். எனவே நாங்களாகவே படித்தோம். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து திரும்பியதும் நாங்களாகவே வீட்டுப் பாடம் செய்யத் துவங்கி விடுவோம்.

எங்களுக்கு, குறிப்பாக மகள்களுக்கு அளிக்கும் சுதந்திரத்தால் என் தாய் பல வருடங்களுக்கு ஏச்சையும் பேச்சையும் ஜாதவ் (பட்டியல் சாதி சமூகம்) மக்களிடமும் உறவினரிடமும் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. அவரைப் போல் இளம்வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வறுபுறுத்தாமல், கல்வி பற்றியக் கனவுகளை உருவாக்கவும் பின்பற்றவும் எங்களை ஆதரித்தார். ஊக்குவித்தார். ஆனால் அவர் பள்ளிக்கு சென்றதே இல்லை.

“என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது நான் செய்து கொண்டிருக்கும் எல்லாமும் உங்களுக்காகதான். நீங்கள் வேறு வாழ்க்கையை, மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பதற்குத்தான்,” என்கிறார் அவர் இரவுநேரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது.

”என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது.”

Editor's note

ராமன் ரிவாரியா பெங்களூருவின் அசிஸ் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு படிக்கிறார். அவர் PARI கல்வியில் 2021ம் ஆண்டு பயிற்சிப் பணியில் இருந்தபோது இக்கட்டுரை எழுதினார். “விளிம்புநிலை கிராமப்புற பெண்களின் போராட்டங்கள் ஊடகத்தில் மிகக் குறைவாகவே சொல்லப்படுகின்றன. அவர்களின் வாழ்க்கைகள் மிக வித்தியாசமானவை. என்னுடைய அம்மாவின் வாழ்க்கையைச் சொல்ல வேண்டுமென நான் முடிவெடுத்தேன். ஏனெனில் அவர்தான் எனக்கான வழிகாட்டி. PARI இந்த வாய்ப்பை வழங்கி அவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்த உதவியது,” என அவர் கூறுகிறார்.
 
தமிழில்: ராஜசங்கீதன்
 
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்