ஊரடங்குக்கு முன்னர் ஓனியலுக்கு ஒரு வழக்கம் இருந்தது. “திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாந்த்ரா கோசியத்தில் நான் பயிற்சி கொடுப்பேன். மற்ற நாட்களில் தென் மும்பையில் இஸ்லாம் ஜிம்கானாவில் கடல் பகுதிகளில் இருப்பேன்“ என்று 43 வயதான கால்பந்து பயிற்சியாளர் ஓனியல் கிளாரன்ஸ் கலிச்சரண் கூறுகிறார்.

கோவிட்–19ம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கும் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டது. 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, அனைத்து உடல்ரீதியிலான நடவடிக்கைகளையும் திடீரென நிறுத்தியதால், பயிற்சியளிக்கும் பணியை கிடப்பில் போட்டு, அவரது வீட்டிற்கு திரும்பி அவரது குடும்பத்தொழிலான மீன்பிடியை வாழ்வாதாரத்திற்காக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

“ஊரடங்கால் எனக்கு வேறு வழியில்லை. எனவே ஒரு நாளில் மூன்று முறை மீன்பிடிக்கச் செல்ல துவங்கினேன்“ என்று நாம் அவரை சந்தித்தபோது ஓனியல் கிளாரன்ஸ் கலிச்சரண் கூறினார். ‘மேரி ஆப் நசரத்‘ என்று பெயரிடப்பட்டுள்ள அவரது மரப்படகில் கடல் அலைகள் மோதிச் செல்கின்றன. அப்படகு பாந்த்ரா பகுதியின் அரபிக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

48 வயதான அவரது சகோதரர் சஞ்சயுடன் மும்பையின் ரன்வார் கிராமத்தில் உள்ள மீனவர் குடியிருப்பு பகுதியில் அவர் வசிக்கும் வீட்டில் அரை டஜன் கால்பந்து கோப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அது ஒற்றை அறைகொண்ட சமையலறையுடன் இணைந்த வீடு. அதில் ஒரு சிறிய குளிர்சாதனப்பெட்டியும் உள்ளது. அதில் அவர் பிடித்துவரும் மீனை வைத்துக்கொள்வார்.

அவரது கால்பந்து ஆர்வம் அனைவரும் அறிந்ததே என சொல்லும் ஓனியல் ‘பாந்த்ரா பேக்கர்ஸ்‘ என்ற பெண்கள் கால்பந்தாட்ட குழுவை அவர் 2000மாவது ஆண்டு தனது 16 வயதில் உருவாக்கியதாகக் கூறுகிறார். நான்கு ஆண்டுகள் கழித்து, ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராக அவரது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதபோது. ஓனியலுக்கு ஸ்டார் புரபொஷனல்சில் ஒலித்துறையில் வேலை கிடைத்தது. “அங்கு குறைந்த வருமானத்திற்கு அதிக வேலைகளை வாங்கினார்கள். அங்கு நான்கு ஆண்டுகள் பணி செய்தேன். ஏனெனில் எனக்கு பணம் தேவைப்பட்டது. இறுதியாக 2007ல் நான் முழுநேரப் பயிற்சியாளராக மாறினேன்“ என்று அவர் நினைவு கூறுகிறார்.

அவரது பயிற்சித்திறன் மற்றும் கால்பந்தாட்டம் ஆகியவைதான் அவருக்கு, இஸ்லாம் ஜிம்கானா மற்றும் பாந்த்ரா கோசியம் ஆகிய இடங்களில் வேலை வாங்கிக்கொடுத்தது. “அது கடுமையான பணியாக இல்லை. எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது“ என்று அவர் கூறுகிறார். அவரது வாரப் பயிற்சி  அட்டவணையை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவருக்கு மாதம் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக கூறினார்.

ஒரு பதின் வயதுக்காராக ஓனியல் அவரது குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காக பல்வேறு வேலைகளுக்கு சென்றுள்ளார். “நான் பிறப்பதற்கு முன்னரே எனது தந்தையை இழந்துவிட்டேன். நான் அவரை பார்த்ததேயில்லை“ என்று அவர் கூறுகிறார். அவரது தாய் வீட்டுப் பணியாளர். 3 முதல் 4 வீடுகளில் வேலை செய்து மாதம் ரூ.2 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். அவர் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவரது தாயின் உடல்நிலை மோசமடைந்தும் ஓனியல் பள்ளியை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

1999ம் ஆண்டு, தனது 15 வயதில் அவரது நண்பருக்காக கேபிள் நிறுவனம் ஒன்றில் தனது பணியை துவக்கினார். “எனது நண்பர் கேபிள் குறித்த அனைத்தையும் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் என்னுடைய வருமானம் மாதத்திற்கு ரூ.750. கடைசியில் அது மாதத்திற்கு 2 ஆயிரம் முதல் மூன்றாயிரமாக உயர்ந்தது“ என்று அவர் கூறுகிறார். இது அவர் கால்பந்து பயிற்சியாளராவதற்கு முன்னர் நடந்தது.

கடந்த 20 மாதங்களாக இரண்டு முதல் மூன்று டஜன் சாம்பல் நிற மடவை உள்ளிட்ட மடவை மீன்கள், கெளுத்தி, நண்டு ஆகியவை மீன்வரத்து இருக்கும் நாட்களில் அவருக்குக் கிடைக்கும். அவற்றை அவர் கரில் உள்ள கர் சந்தையில் ரூ.600 முதல் ரூ.800க்கு விற்கிறார். சில நேரங்களில் அவை ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விற்கும். “எங்களுக்கு எவ்வளவு மீன் கிடைக்கும் என்பது தெரியாது, எனவே வருமானமும் அறுதியிட்டு கூற முடியாது“ என்று அவர் எங்களிடம் கூறினார்.

சகோரர்கள் இருவரும் ‘வாகனா என்ற மீன்பிடி முறை‘யை பின்பற்றுகின்றனர்.  அரபிக்கடலில் தண்ணீர் பின்வாங்கும்போது அவர்கள் தங்களின் நைலான் வலையை கடலில் வீசி கம்பு மற்றும் கற்களை வைத்து பொருத்துகின்றனர். அதன் மூலம் வட்டப் பொறியை உருவாக்குகிறார்கள். அலை வரும்போது மீன்கள் வலையில் சிக்குகின்றன. பின்னர் கடல் தண்ணீர் பின்வாங்கும்போது அவர்கள் வலையை அகற்றுகின்றனர்.

இது சிவப்பு அட்டை

ஓனியல் மற்றும் அவரது சகோதரர் 2021ம் ஆண்டு மே மாதத்தில் டக்டே புயல் தாக்கும் வரை இவ்வாறுதான் ஊரடங்கை கழித்து வந்தனர். “நாங்கள் புயலை இதற்கு முன்னர் டிவியில் தான் பார்த்திருக்கிறோம். வாழ்க்கையில் உண்மையாக அனுபவித்ததில்லை. இதுவே முதல் முறை. பாந்த்ராவின் படகு நிறுத்தத்தில் மஹீம் கடற்கரையில் நாங்கள் நங்கூரமிட்டு படகை இருபுறங்களிலும் கட்டி வைத்துவிட்டோம். புயல் கயிற்றை அறுத்து படகை கற்களில் மோதச்செய்து விட்டது. எங்களின் படகு கடுமையாக சேதமடைந்துவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.

சகோதரர்கள் வேலையிழந்து இன்றுடன் 8 மாதங்களாகிறது. ஓனியல், வீட்டிற்கு வண்ணம் பூசுவது மற்றும் சுத்தம் செய்வது போன்ற பல்வேறு வேலைகளை செய்கிறார். அவரது பயிற்சியாளர் பணிகள் துவங்கிவிட்டன. ஆனால், பயிற்சிக்கு வரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அதனால், அவரது வருமானமும் குறைந்துவிட்டது. “இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே 6 மாதங்கள் வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக (ஜுலை மற்றும் ஆகஸ்ட்) ஒரு மாணவர் கூட வரவில்லை. பயிற்சி முற்றிலும் நின்றுவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.

உரிமம் புதுப்பிக்கப்படாததால் ஓனியலுக்கும், அவரது சகோதரருக்கும் சேதமடைந்த படகுக்கு எவ்வித இழப்பீடும் கிடைக்கவில்லை. “பெரும்பாலான மீனவர்களுக்கு அவர்களின் படகுகளின் பதிவு எண்ணுடன் செல்லக்கூடிய உரிய ஆவணங்கள், காப்பீடு ஆவணங்கள் ஆகிய அனைத்தும் அரசின் எவ்வித வசதியையும் பெறுவதற்கு தேவை என்பதும், காப்பீட்டுக்கும் அது தேவை என்பதும், ஆவணங்களுக்கு காலாவதி தேதிகள் உள்ளது என்பதும் தெரியாது“ என்று ஓனியல் சார்ந்துள்ள மீனவர் சங்கத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு மீனவர் கூறினார்.

“பதிவு எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது. அந்த விவரம் தெரியவந்தபோது காலம் கடந்துவிட்டது“ என்று ஓனியல் கூறுகிறார். “எங்களுக்கு தெரிந்தவர்கள் கொடுத்த பணம் மற்றும் அவர்கள் செய்த உதவிகள் மூலம் எங்கள் கடினமான காலத்தை நாங்கள் கடந்தோம். சிலர் எங்களுக்கு பருப்பும், சுண்டலும் வழங்கினார்கள். படகின்றி மீனவர்களான நாங்கள் எவ்வாறு வாழ முடியும்“ என்று அவர் கேட்கிறார்.

பயிற்சியாளரான ஓனியல் தன்னை தற்போது ஒரு மீனவர் என்று கூறிக்கொள்கிறார்.

இந்த செய்திக்கட்டுரை ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த தொடர் செய்திகளில் ஒன்று. பாரி-கல்வி குழு, மும்பை செயின்ட் சேவியர் தன்னாட்சி கல்லூரியின் பேராசிரியர்கள் அக்ஷரா பாதக் ஜாதவ் மற்றும் பெரி சுப்ரமணியம் ஆகிய இருவரையும் இந்த இணைந்த முயற்சிக்கு வித்திட்டதற்காக நன்றி தெரிவிக்கிறது.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

ருத்துஜா கைதானி மற்றும் ஷிரிஷ்டி முரளி, இருவரும் மும்பை செயின்ட் சேவியர் தன்னாட்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை மாணவிகள். அவர்கள் படிப்பின் ஒரு பகுதியாக பாரி-கல்வி பிரிவுடன் இணைந்து, ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பது குறித்து எழுதும் விதமாக அவர்கள் இருவரும் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள மீனவர்கள், கோவிட் – 19 காலத்தில் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து எழுதவேண்டும் என்று எண்ணினார்கள். “நாங்கள் பாரியுடன் இணைந்து பணியாற்றுபோது இதழியலுக்கு எவ்வாறு எழுவது என்பதை மட்டும் கற்றுக்கொள்வோம் என்று எண்ணினோம். ஆனால் பாரி அதையும் கடந்து எங்களுக்கு கற்றுக்கொடுத்தது. குறிப்பிட்டு கூறும்படியாக நாம் செய்தியாக்க நினைக்கும் மனிதர்களை எவ்வாறு பேச வைப்பது என்பது குறித்து தெரிந்துகொண்டோம்“ என்று ருத்துஜா கூறுகிறார். “உண்மையை கண்டுபிடிப்பது மட்டும் தான் இதழியல் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். அது ஒரு செய்திக்கு தகவல் தேடுவது மட்டுமல்ல, மக்களை தேடுவதும்தான். இது எங்களுக்கு வாழ்க்கையை அடுத்தவர்களின் பார்வையில் இருந்து புரிந்துகொள்வது எப்படி என்று அறியவைத்தது“ என்று ஷிருஷ்டி மேலும் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R. 

பிரியதர்சினி. R. ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.