“குருத்வாராவில் பாடும்போது ஒலிபெருக்கிகள் அணைக்கப்படும் நிகழ்வை பெண்கள் என்னிடம் கூறினர். அவர்களின் தோலக் கருவி வளாகத்துக்கு வெளியே வைக்கப்படும்,” என்கிறார் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கனுவானிலிருந்து இடம்பெயர்ந்து 41 வருடங்களாக தில்லியில் வசித்து வரும் நரிந்தர் கவுர்.

63 வயதான அவர் புது தில்லியில் கீர்த்தனை பாடுபவர்களில் பெயர் பெற்றவர். கீர்த்தனைகள் பாடும் அவர், சீக்கியர்களுக்கான புனித நூலான குரு க்ரந்த் சாஹிபிலிருந்து சீக்கியப் பெண்களுக்கு வழிபாட்டு இசை பயிற்சியும் வழங்குகிறார். அந்த இசையை சபத கீர்த்தனைகள் எனக் குறிப்பிடுவர். குருத்வாராக்களுக்குள்ளும் சுற்றியும் பாடப்படுபவை.

திறமை இருந்தாலும் பிற சீக்கிய பெண்களைப் போலவே, சீக்கிய வழிபாட்டுத் தலங்களில் தன் இசைத்திறன் அங்கீகரிக்கப்படவும் போராடியதாக சொல்கிறார் கவுர்.

தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கமிட்டிக்கான 2022ம் ஆண்டுக்கான விவரப்புத்தகம், கமிட்டியால் நிர்வகிக்கப்படும் குருத்வாராக்களில் பாடி, இசைத்து, புனித நூலின் பாடல்களை பாடுபவர்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. நரிந்தெரின் அனுபவத்தின்படி, 62 பாடகர்களில் ஒரு பெண் கூட இல்லை. கவிஞர்கள் பட்டியல் தேவலாம். 20 இடங்களில் 8 பெண்கள் இருக்கின்றனர்.

“தில்லியின் குருத்வாராக்களில் பணி கிட்டாமல் அடுத்த மாதம் வந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்,” என்கிறார் பீபி ரஜிந்தர் கவுர். 2022ம் ஆண்டு தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட கவிஞர் அவர்.

இடது: நரிந்தெர் கவுர் கீர்த்தனைப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களை ஒருங்கிணைக்கிறார். புகைப்படம் எடுத்தவர் ஹர்மன் குரானா. வலது: தில்லி ஃபதே திவாஸ் நிகழ்வில் கலந்து கொண்ட நரிந்தெர் கவுரும் உறுப்பினர்களும். நன்றி: நரிந்தெர் கவுர்

சீக்கிய மதத்தின் அதிகாரப்பூர்வ நடத்தை விதியான சிக் ரெஹத் மர்யாதாவின்படி ஞானஸ்நானம் செய்து கொண்ட எந்த சீக்கியரும், பாலின பேதமின்றி, குருத்வாராவில் கீர்த்தனை பாட முடியும். வரலாற்றுப் புகழ் பெற்ற குருத்வாராக்களை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரமாக கருதப்படும் ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி கூட பெண்களை சேர்க்க ஒப்புக் கொண்டு விட்டது. இந்த உத்தரவு பஞ்சாப், ஹரியானா,ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் சண்டிகரை சார்ந்த எல்லா குருத்வாராக்களுக்கும் பொருந்தும்.

இத்தகைய அதிகாரப்பூர்வ பின்னணி இருந்தும் பல சீக்கியர்கள் பெண்கள் குருத்வாராக்களுக்குள் நுழைவதை ஏற்பதில்லை. எனவே பல பெண் பாடகர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.

பாலின பேதத்துக்கு எதிராக ஜஸ்விந்தர் கவுர் பேசுகையில், “ஒரு பக்தி நிறைந்த, ஒழுக்கமான, இசைப்பயிற்சி பெற்ற பெண், தங்கக் கோவில் வளாகத்துக்குள் இருக்கும் பிற குருத்வாராக்களில் பாட முடிகிறபோது, பிரதான அரங்கில் பாட ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?” எனக் கேட்கிறார். 69 வயதான அவர் புது தில்லியின் மாதா சுந்தரி கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிகிறார். மாணவர்களுக்கு அவர் மதத்தைப் போலவே பழமை வாய்ந்த குர்மாத் சங்கீதப் பயிற்சியை அளிக்கிறார்.

சீக்கியர்களின் புனித இடமாகக் கருதப்படும் தங்கக் கோவிலின் கருவறையில் பாட பெண்களுக்கு அனுமதியில்லை. ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டிக்கு பீபி ஜகிர் கவுர் என்கிர பெண் தலைவராக இருந்தும் பல தலைவர்கள் இந்த விஷயத்தில் அமைதி காக்கின்றனர். அப்பிரச்சினையை அவர் 2004-05-ல் எழுப்பி, கீர்த்தனை பாட பெண்களுக்கு அழைப்பு விடுத்தார். வந்த விண்ணப்பங்கள் நன்றாக இல்லை என்பதால் அப்படியே அப்பிரச்சினை முடிந்து போனது என்கிறார் அவர்.

அவரின் நடவடிக்கை,பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய தம்தமி தக்சல் பள்ளியாலும் எதிர்க்கப்பட்டது. சீக்கியர்களுக்கான நடத்தையை முறையாக வடிவமைத்த முதல் குரு அவர்தான். தங்கக் கோவிலில் பெண்களை பாட வைப்பது, குருக்களின் காலத்திலிருந்து ஆண்கள் மட்டுமே பாடி வரும் நடைமுறையை அவமதிப்பது போலாகும் என பள்ளி நம்புகிறது.

இதை மாற்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஞானஸ்நானம் செய்யப்பட்ட சீக்கியப் பெண்களுக்கு கீர்த்தனை பாடும் உரிமையை வழங்கும் முடிவு முதன்முதலாக 1940ம் ஆண்டில் ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியால் எடுக்கப்பட்டது. இந்த உத்தரவு சமீபமாய் 1996ம் ஆண்டில் அகல் தக்தால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் பாலின பேதம் தொடர்கிறது.

2019ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியும் அகல் தக்த்தும் தங்கக் கோவிலின் கருவறையில் பெண்கள் பாட அனுமதிக்கக் கோரும் தீர்மானத்தை பஞ்சாப் விதான் சபா நிறைவேற்றியது. அரசு மதச்சடங்கில் தலையிடுவதாக சொல்லி, சட்டசபையில் அத்தீர்மானம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.


திருமணமாவதற்கு முன், சிம்ரன் கவுர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிற பெண் உறவினர்களுடன் சேர்ந்து, ஹோஷியார்பூர் மாவட்டத்தின் சோஹியான் கிராமத்திலிருக்கும் குரு ரவிதாஸ் குருத்வாராவில் கீர்த்தனைகள் பாடியிருக்கிறார். 27 வயதாகும் அவர் உள்ளூரில் இருக்கும் சந்த் பாபா மீஹான் சிங் குருத்வாராவுக்கு தினமும் செல்வார். அங்கு பெண்கள் பாடுவதை பார்த்திருக்கிறார். அது விநோதமாக அங்கு கருதப்பட்டதில்லை. சிறு குருத்வாராக்கள் ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியுடன் இணைக்கப்படாததால் நிர்வாகம் இறுக்கமாக இல்லை என அவர் கருதுகிறார்.

“கிராமங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் குருத்வாராவை பார்த்துக் கொள்வர். ஆண்கள் காலையிலேயே வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். குருத்வாராவை முதலில் யார் அடைகிறாரோ அவரே முதலில் பயிற்சியை தொடங்கி விடுவார்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் சிம்ரன்.

எல்லா கிராமங்களிலும் இந்த நிலை இல்லாமலிருக்கலாம். ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுரின் அனுபவம் மாறி வரும் சூழலைக் காட்டுகிறது. 19 வயதாகும் இளம் கீர்த்தனை பாடகரான அவர் தாம் தரன் மாவட்டத்தின் பட்டியைச் சேர்ந்தவர். உள்ளூர் குருத்வாராவான பீபி ரஜினி ஜியில் பெண்கள் பாடி பார்த்ததில்லை எனச் சொல்கிறார். குரு கிராந்த் சாகிப்பை பொது வழிபாட்டில் வாசிக்கும் அவர் தந்தைதான், கீர்த்தனைகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார். சிறப்பு நிகழ்ச்சிகளின்போது இப்போது அவர் அங்கு பாடுகிறார்.

இடது: சிம்ரன் கவுரின் உறவினர், அவரது மகளுடன் 2006ம் ஆண்டில் குரு ரவிதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கீர்த்தனை பாடுகிறார். நன்றி: ஜஸ்விந்தர் கவுர். வலது: சிமர்னின் கீர்த்தனை பாடுதல், திருமணத்துக்கு பின் நின்று போனது. ஆனால் அருகாமை குருத்வாராவில் பாடத் துவங்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். புகைப்படம் ஜஸ்விந்தர் கவுர்

100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பத்தான்கோட் நகரத்தில் இருக்கும் குரு சிங் சபா குருத்வாராவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கீர்த்தனைகளையும் சில மணி நேரங்களுக்கு பிரார்த்தனைகளையும் பெண்கள் செய்வதாக 54 வயது தில்பக் சிங் கூறுகிறார். விழாக்களுக்கு சென்று பாடும் பெண்கள் குழுக்களும் அவர்களிடம் இருக்கின்றன.

25 வயதாகும் சுக்தீப் கவுர், சீக்கியக் கல்வியிலும் மதக் கல்வியிலும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இரட்டை முதுகலைப் பட்டங்கள் பெற்றிருக்கிறார். பஞ்சாபின் சங்க்ரூர் மாவட்டத்திலிருக்கும் லசோய் கிராமத்தில் அவர் வசிக்கிறார். பாலின பேதத்துக்கு ஆண்களை குறை சொல்வது சரியல்ல என நினைக்கிறார். குருத்வாராவில் முழு நேரப் பணிகளை எடுத்துக் கொள்வது பெண்களுக்குக் கடினமாக இருக்கிறது என்பது அவரின் வாதம். ஒரு பெண் பிரார்த்தனை பாடல்கள் பாடுவதை விட குழந்தைகளையும் வீட்டையும்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென அவர் நினைக்கிறார்.

பெண்களால் எல்லாம் செய்ய முடியுமென நரிந்தெர் கவுர் நம்புகிறார். குருத்வாராவில் பாட விரும்பி சில மணி நேரங்கள் அர்ப்பணிக்க விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து 2012ம் ஆண்டில் குர்பானி விர்சா சம்பல் சத்சங் ஜதா என்ற குழுவை அவர் தொடங்கினார். “குழந்தைகளையும் வீடுகளையும் அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களின் சேவை சீக்கிய ஆணை விட இரு மடங்கு அதிகமானது,” என்கிறார் அவர். 

சீக்கிய கல்லூரிகளில் இருக்கும் குழுக்கள்தாம் குர்மாத் சங்கீத் பயிற்சியை சீக்கிய மாணவர்கள் பெறும் இடங்கள். தற்போது கிர்பா கவுர் என அழைக்கப்படும் காஜல் சவ்லா 2018ம் ஆண்டு குரு கோபிந்த் சிங் கல்லூரியில் பொருளாதாரப் படிப்பில் இளங்கலை முடித்துள்ளார். 24 வயதாகும் அவர், கல்லூரியில் படிக்கும்போது விஸ்மாத் என்கிற குழுவில் உறுப்பினராக இருந்தார். இப்போதும் அக்குழுவில் தொடரும் அவர் சொல்கையில், “எல்லா பின்னணிகளிலிருந்தும் எங்கள் உறுப்பினர்கள் வருகின்றனர். கீர்த்தனை, கவிதை பாடவும் உரைவீச்சுகளுக்கும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். கல்லூரி விழாக்கள் எங்களை உருவாக்கி தன்னம்பிக்கையை வளர்க்கின்றன.

இடது: 25 வயது சுக்தீப் கவுர், சீக்கிய வரலாற்றுச் சம்பவங்களை சொல்லும் காலட்சேபகராக விரும்புகிறார். நன்றி: சுக்தீப் கவுர். வலது: சிமர்சீத் கவுர் ஃபரிதாபாத் பள்ள்யில் கற்பிக்கிறார். நன்றி: சிமர்ஜீத் கவுர். கீழே: நரிந்தெர் கவுர் மற்றும் குழு நிகழ்வில். நன்றி: நரிந்தெர் கவுர்

”அதிகமாக பயிற்சி பெறுபவர்கள், மேடையை ஆளுவார்கள்,” என்கிறார் தில்லிப் பல்கலைக்கழகத்தின் ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி கல்சா கல்லூரிக் குழுவில் தபலா வாசிக்கும் 24 வயது பக்‌ஷந்த் சிங். இங்கிருக்கும் மாணவர்கள் தில்லியிலுள்ள குருத்வாராக்களில் சென்று பாடுகின்றனர். பிற மாநிலங்களுக்கும் பயணிக்கின்றனர்.

ஆனால் இளம் சீக்கியர்களின் உற்சாகம் நல்ல பொறுப்பாகவும் அங்கீகாரமாகவும் மாறுவதில்லை. “குருத்வாராக்களில் பல பெண்கள் கீர்த்தனைகள் பாடினாலும், ஒரு பெண் கூட உயர்ந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு நான் பார்க்கவில்லை,” என்கிறார் தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கமிட்டியின் முன்னாள் உறுப்பினரான 54 வயது சமன் சிங்.

”குருத்வாராக்களின் நிர்வாகக் கமிட்டிகளில்தான் அதிகாரம் இருக்கிறது. ஒரு பொதுவிழாவையோ தனிப்பட்ட நிகழ்வையோ அவர்கள் ஒருங்கிணைக்கும் போது பிரபலமான கலைஞர்களையே ஏன் அழைக்கிறார்கள்? இளம் மாணவர்களையும் பெண்களையும் உற்சாகமூட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற அழைக்கலாமே?,” எனக் கேட்கிறார் தில்லியைச் சேர்ந்த பரம்ப்ரீத் கவுர்.

32 வயதான அவர் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றிருக்கிறார். குர்மாத் சங்கீதத்தில் முதுகலை பெற்றிருக்கிறார். அவரின் குரல், பிற இளம்பெண்களின் குரல்களைப் போலவே பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. குருத்வாராக்களின் வழிபாட்டுத் தலங்களில் பெண்களின் குரலும் எதிரொலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ਭੰਡਹੁ ਹੀ ਭੰਡੁ ਊਪਜੈ ਭੰਡੈ ਬਾਝੁ ਨ ਕੋਇ ॥

ਨਾਨਕ ਭੰਡੈ ਬਾਹਰਾ ਏਕੋ ਸਚਾ ਸੋਇ ॥

பெண்ணிலிருந்து பெண் பிறக்கிறாள்

பெண்ணின்றி யாருமில்லை

குரு கிரந்த் சாகிபின் மெஹ்லா 1-ல் வரும் இப்பத்தி அசா ராகத்தில் பாடப்படுவது.

பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்

Editor's note

ஹர்மன் குரானா, மும்பையின் சோஃபியா கல்லூரியில் சமூக தொலைத்தொடர்பு ஊடகத்துக்கான இளங்கலைப் பட்டத்தை சமீபத்தில் முடித்தவர். இந்த பணியை அவர், சீக்கிய மத நிறுவனங்களுக்குள் பெண்களுக்கான பங்கை ஆராய்வதற்கான கருவியாக பார்க்கிறார்.

அவர் சொல்கையில்: “சமத்துவ அடித்தளம் கொண்ட நிறுவனங்களிலும் பாலின பேதம் எப்படி ஊடுருவுகிறது என அவதானிக்கும் வாய்ப்பை செய்தி சேகரிக்கும் அனுபவம் எனக்குக் கொடுத்தது. இதழியலும் படமாக்கமும் இணையும் பணியில் நான் இயங்கியது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கேமரா நபராகவும் செய்தியாளராகவும் நானே பணியாற்றுகையில் இப்பிரச்சினை பற்றி பெண்கள் கொண்டிருக்கும் உணர்வுகளை பற்றிய உளப்பூர்வமான உரையாடல்கள் ஏற்பட முடிந்தது. அவர்களின் நம்பிக்கைதான் என்னை அதிகம் ஈர்த்தது.”

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்