“குரங்குக்கு யாசகம் போடுங்கள். குரங்குக்கு யாசகம் போடுங்கள்“ என்று, ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள சியோகஞ்ச் நகரின் சந்துகளில் தனது சைக்கிளை மிதித்துக்கொண்டு ஜீஜாராம் தர்மிஜி சான்ட் கத்திக்கொண்டே செல்கிறார். “மக்கள் எப்போதும் தங்களிடம் மீதமுள்ள உணவுப்பொருட்களான ரொட்டி, பச்சையான, சமைத்த காய்கறிகள் ஆகியவற்றை உடனடியாக கொடுக்கின்றனர். இங்குள்ள 6 – 7 சந்துகளில் அலைந்து நான் உணவுப்பொருட்களை சேகரித்து, என்னிடம் உள்ள சாக்குப்பையை நிரப்பிக்கொள்வேன்“ என்று அவர் கூறுகிறார். அவரிடம் 15 முதல் 20 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் சாக்கு உள்ளது.

இதுபோல், ஒவ்வொரு ஆண்டும் 8 மாதங்களுக்கு, ஜீஜாராம் தினமும் காலை 8.30 மணி முதல் குரங்குகளுக்கு உணவு வாங்க செல்வதில் பரபரப்பாக இருப்பார். சாக்கு நிறைந்தவுடன், சைக்கிளை நிறுத்திவிட்டு, அதை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணேஷ்வர் மகாதேவ் கோயிலுக்குச் செல்வார். இக்கோயில் தேசிய நெடுஞ்சாலை 62ல், சிஹோரில் டெசில், பல்ரி கிராமத்திற்கு தென்கிழக்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் உள்ளது.

அவர் 11 மணிக்கு கோயிலைச் சென்றடைவார். அங்கு சென்றவுடன், “வா, வா“ என்று குரங்குகளை அழைப்பார். உடனடியாக அங்கு, 200 முதல் 300 குரங்குகள் வந்து, பயிற்சிகொடுத்து நிற்கவைக்கப்பட்ட குழந்தைகள்போல், அழகாக நின்றுகொண்டு, உணவுக்காக அவரை வெறித்து பார்க்கும். அவர் ரொட்டிகளை தூக்கி வீசியவுடன், அவற்றைப்பிடிப்பதற்காக அவை ரொட்டிகள் வீசப்படும் திசையை நோக்கி ஓடும். மேலும் சில குரங்குகளும் சேர்ந்துகொள்ளும் என்று ஜீஜாராம் கூறுகிறார். இந்த வனத்தில் மொத்தமுள்ள 700 குரங்குகளுக்கும் அரை மணி நேரத்தில் உணவளித்துவிடுவதாக அவர் கூறுகிறார். “அவற்றிற்கு உருளைக்கிழங்கு, பிஸ்கட்கள், சுரைக்காய் மற்றும் கேரட்கள் மற்றும் கோடை காலத்தில், ரொட்டி சப்போட்டா ஆகியவை பிடிக்கும்“ என்று அவர் கூறுகிறார்.

இவற்றிற்கு உணவளிக்கு புதிய நபர்கள் அவற்றின் கொடூரமான பார்வைக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் கூறுகிறார். “வெளியாட்களை கண்டால் அவை அச்சம்கொள்ளும். அவற்றின் மீது கல்லெறிபவர்களையும், துன்புறுத்துபவர்களையும் அவை அடிக்கடி எதிர்கொள்ளும். மக்கள் அவற்றை துன்புறுத்துவது கவலையாக உள்ளது. அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்?“ என்று அவர் கேட்கிறார்.

ஜீஜாராம் சான்ட் சைக்கிளைப்பயன்படுத்தி உணவு சேகரித்து, அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கிலோ கணக்கிலான உணவுப்பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்கிறார்

ஜீஜாராம், குரங்குகளை இந்து கடவுள் அனுமனாக பார்க்கிறார். அவற்றிற்கு உணவு வழங்குவதை சேவையாகப்பார்க்கிறார். “ இந்த குரங்குகள் எப்போதும் இங்கு வந்துவிடுகின்றன. இது பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. ஏதாவது காரணங்களால், நான் இரண்டு நாட்களாக வரவில்லையென்றால், மீண்டும் இவை இங்கு வருவதற்கு நீண்ட நாட்களாகும்“ என்று அவர் கூறுகிறார்.

சிரோஹி மாவட்டத்தில் உள்ள பாலாடி ஊராட்சி அருகில் உள்ள அண்டூர் கிராமத்தில் பிறந்தவர் ஜீஜாராம். நாற்பதுகளின் துவக்கத்தில் உள்ள அவர், கடந்த 5 ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வருகிறார். அவருக்கு அனுமன் சேவா சங்க உள்ளூர் சியோகஞ்ச் குழு மாதம் ரூ.4 ஆயிரம் கொடுக்கிறது. “எனக்கு பணம் கிடைத்தாலும், இதை நான் விரும்பியே செய்கிறேன். தொழிலுக்காக செய்யவில்லை. பணமும் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. மேலே உள்ள கடவுளின் கணக்கில் வைக்கப்படுகிறது. இது புண்ணியத்திற்கான வேலை. அவற்றின் (குரங்குகளின்) ஆசிர்வாதம் மகத்தானது. பார்த்துக்கொள்வதன் மூலம் கடவுள் வேண்டுதலுக்கு செவிமடுத்து என்னை ஆசிர்வதிப்பார்“ என்று அவர் கூறுகிறார்.

ஜீஜாராம், ரேபேரி பழங்குடியின வகுப்பைச்சார்ந்தவர் (ராஜஸ்தானில் அது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளது) அவர் ஒரு பாடகரும் கூட. அவரது குடும்பத்தினர் விழாக்களில் பஜனை பாடுவார்கள். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் அருகில் உள்ள துணிக்கடையில் பணி செய்கிறார். மற்றொருவர் 5ம் வகுப்பு படிக்கிறார். அவரது மனைவி அவ்வப்போது கூலி வேலைகளுக்குச் செல்வார். அவரது குடும்பம் மற்றும் அவர்களுடன் வசிக்கும் ஜீஜாராமின் தாயாரையும் கவனித்து வருகிறார்.

குரங்குகளுக்கு உணவு வழங்காத 4 மாதங்களில் ஜீஜாராம் சில நேரங்களில் கட்டுமானத் தொழிலோ அல்லது சீயோகஞ்சின் வீதிகளில் ஐஸ்கிரீம் விற்றோ வருமானம் ஈட்டி வருகிறார். “இவற்றின் மூலம் மாதத்திற்கு நான் ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறேன். சில நேரங்களில் ஒன்றும் கிடைக்காது. எனது மகன் ரூ.4 ஆயிரம் வருமானம் பெறுகிறார். ஏதேனும் குறையிருந்தால், அதையும் அந்த போலேநாத் (சிவன்) பார்த்துக்கொள்வார்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

சுமைகள் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் ஜீஜாராமுக்கு உதவுவதற்காக, அவருடன் சேர்ந்து குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு, அனுமன் சேவா சங்கத்தினரால், மேலும் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பருவமழைக்குப்பின்னர், அவர்கள் இருவரும் சிறிது நாட்களுக்கு இந்த வேலையை நிறுத்துவார்கள். “மழைக்குப்பின்னர் குரங்குகளுக்கு வனத்தில் உணவு அதிகளவில் கிடைக்கும். கடந்த ஆண்டு பருவமழைக்காலம் நன்றாக இருந்தது. அதனால் வனம் பசுமையாக இருக்கிறது “ என்று அவர் நினைவு கூர்கிறார்.

“ஆனால் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காதபோது, குரங்குகள் கூட்டம் இங்கு வந்துவிடும். 5 குரங்குகள் கூட்டம் உள்ளது. அதில் பனிக்காலங்களில் 3 கூட்டங்கள் இங்கு சாப்பிடுவதற்கு வரும். மற்றவை அங்குள்ள மலையை கடந்து செல்லும்“ என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி கூறுகிறார். “கோயிலை தாண்டி கிராமங்கள் உள்ளன. அதனால், அவை அங்கு செல்லும். பனிக்காலங்களில், பெரும்பாலான குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்துவிடும். அவற்றிற்கு அங்கு சாப்பிடுவதற்கு நிறைய கிடைக்கும்.

“கோடை காலங்களில், நான் அதிகளவில் உணவு எடுத்து வர முயற்சி செய்வேன். ஏனெனில் அப்போது உட்கொள்வதற்கு அவை சுற்றித்திரியும் இடங்களில் எங்கும் அதிகளவிலான உணவுப்பொருட்கள் கிடைக்காது. கோடை காலங்களில் பகல் பொழுது நீண்டதாக இருக்கும். காலைப்பொழுதுகளில் குளிர் இருக்காது. அதனால், எனக்கு அதிக நேரம் இருக்கும்போது நான் அதிக உணவுப்பொருட்களை சேகரிப்பேன்“ என்று அவர் குறிப்பிட்டு கூறுகிறார். “அவை கருவேலங்காய்களை உட்கொள்ளாது. ஏனெனில் அவற்றை சாப்பிட முடியாது. சில நேரங்களில் குரங்குகள் கருவேலங்காயில் உள்ள பருப்பு போன்றவற்றை உட்கொள்ளும். பனிக்காலத்தில் இலந்தைப்பழங்கள் நிறைய கிடைக்கும். அவற்றையும் உட்கொள்ளும்“ என்று அவர் கூறுகிறார்.

ஜீஜாராம் கடந்த 5 ஆண்டுகளாக இங்குள்ள குரங்குகளுக்கு உணவு அளிக்கும் வேலையை செய்து வருகிறார். “அதற்கு முன்னர் நான் ஒரு கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது வேறு ஒரு நபர் இங்கு வந்து தினமும் உணவு வழங்கிக்கொண்டிருந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குரங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆட்கள் வேண்டுமானாலும் மாறுவார்கள், ஆனால், அவற்றிற்கு உணவு வழங்கும் வேலை மட்டும் தடைபடாது.“

அவரால் இங்கு வர முடியாத நாட்களில் யார் வந்து இங்கு உதவுவார்கள் என்று கேட்டதற்கு, யாரும் வரமாட்டார்கள், யாரும் இந்த வேலையை செய்வதற்கு விரும்பமாட்டார்கள் என்று கூறுகிறார். அவர்கள் இந்த குரங்குகளை கண்டு அச்சம்கொள்வார்கள். அவை கடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுவார்கள். விலங்குகளும் புதிய மனிதர்களை விரைவில் ஏற்றுக்கொள்ளாது. அவை உங்களையெல்லாம்(பள்ளி மாணவர்கள்) பார்த்தால், உடனடியாக ஓடிவிடும்.

பெரியவர்களோ, குழந்தைகளோ, அவர்களுக்கு நான் கூறுவேன், உங்களால் முடிந்தால் அவைகளுக்கு ரொட்டி கொடுங்கள். இல்லாவிட்டால், ஒன்றும் கொடுக்காதீர்கள். ஆனால் அவற்றை வற்புறுத்தாமல் மட்டும் இருங்கள்.

ஜீஜாராம், மளிகை கடையில் பணிசெய்து வந்தபோது, ஒருமுறை அவரது முதலாளி அவரிடம், குரங்குகளுக்கு உணவு வழங்குவதற்கு ஆள் தேவைப்படுகிறது என்றும், இல்லாவிட்டால் அவை பசியால் இறந்துவிடும் என்றும் என்னிடம் கூறினார். “நீ இந்த கடையில் வேலை செய்யலாம். முதலில் அந்த குரங்குகளுக்கு உணவளித்துவிட்டு வந்து, இங்கும் பணிபுரியலாம் என்று கூறியதையடுத்து, அடுத்த நான்காண்டுகளுக்கு குரங்குகளுக்கு உணவளிக்கும் வேலையை செய்து வந்தார். அதே நேரத்தில் அந்தக்கடையிலும் அவர் பணிபுரிந்து வந்தார். அடுத்த நபர் கிடைத்தவுடன் அவர் குரங்குகளுக்கு உணவளிப்பதை நிறுத்திக்கொண்டார்.

15 ஆண்டுகள் அந்தக்கடையில் பணி செய்த நிலையில், அவரது முதலாளியுடன் ஏற்பட்ட ஒரு பிரச்னையல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை விட்டுவிட்டார். பின்னர் கோடை காலம் வந்தபோது, குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு வேறு நபர் தேவைபட்டபோது, அவர் மீண்டும் செய்யத்துவங்கி அப்போது முதல் செய்து வருகிறார்.

“நான் கேள்விபட்டதுண்டு நகரங்களில், மக்கள் மரங்களை வெட்டுவர் மற்றும் விலங்குகளை துன்புறுத்துவர். நீங்களும் கேட்டிருப்பீர்கள் மக்கள் குரங்குகளின் மீது கற்களை வீசுவார்கள் என்று, நீங்கள் என்ன செய்வீர்கள்?“ என்று அவர் நம்மிடம் கேள்வி கேட்கிறார். சிறியவர்களோ, பெரியவர்களோ, உங்களால் முடிந்தால், அவைகளுக்கு ரொட்டி கொடுங்கள் அல்லது ஒன்றும் தர விரும்பவில்லையென்றால், ஒன்றும் செய்யாமல் வேண்டுமானால் கூட இருங்கள். ஆனால், அவற்றை துன்புறுத்தாதீர்கள். நம்மைச்சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பாருங்கள். நமக்கு மற்ற உயிரினங்களை துன்புறுத்துவதற்கு உரிமை கிடையாது.“

ஜீஜாராமும் சியோகன்சை விட்டு ஒருமுறை வெளியேறிவிட வேண்டும் என்று எண்ணினார். அவரது குழந்தைகளும் வெளியேற வேண்டும் என்று விரும்பினார். “நகரைவிட்டு வெளியேறுவது குறித்து, அவர்கள் முடிவெடுக்க வேண்டும். ஆனால், நான் உறுதியாக கூறுகிறேன். நான் நகருக்குச் செல்ல விரும்பவில்லை. எனக்கு வேலை தேடிக்கொண்டு இந்த சேவையையும் செய்யவேண்டும்“ என்று அவர் கூறினார்.

நாங்கள் ஜீஜாராமின் மகன் 19 வயதான தினேஷ்குமாரிடம் (துணிக்கடையில் பணி செய்பவர்) கேட்டோம். அவரது தந்தை செய்யும் இந்த வேலையை செய்ய விரும்புவாரா என்று, “இது ஒரு புனிதமான பணிதான், இதுதான் எனக்கு விதிக்கப்பட்டதென்றால், நான் அதைச்செய்வேன்“ என்று அவர் கூறினார்.

தமிழில்: பிரியதர்சினி.R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Editor's note

இக்கட்டுரை பெங்களூர் ஷிபுமி பள்ளி மாணவர்களின் பள்ளிச்சுற்றுலாவின்போது உருவானது. பள்ளி, பாரி கல்வியை சுற்றுலா செல்வதற்கு முன்னர் தொடர்புகொண்டது. நாம் அங்கு மாணவர்களுக்கான அமர்வை நடத்தினோம். நமது வலைதளத்தில் உள்ள தகவல்களை பயன்படுத்தி, கிராமப்புற ராஜஸ்தானில் உள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார பிரச்னைகள் குறித்து விவரித்தோம். சித் கவேதியா என்ற 10ம் வகுப்பு மாணவன், பள்ளி ஆசிரியர்களின் அனுமதியுடன் தனது பயணத்தில் மாற்றம் செய்துகொண்டு, ஜீஜாராமை தொடர்ந்து சென்று அவரின் வாழ்க்கை முறையை தெரிந்துகொண்டார். நாம் சித் மற்றும் ஷிபுமிக்கு இந்த கட்டுரையை எழுதுவதற்கு உதவினோம். இது 5 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சைக்கிள் மற்றும் மனிதனின் படத்தை வரைந்தவர்: சிரிஷ்டி வைஷ்ணவி குமரன், 10ம் வகுப்பு மாணவர், பெங்களூர். அனைத்து படங்கள்: சித் கவேதியா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன், ஷிபுமி பள்ளி, பெங்களூர். இந்தக்கட்டுரை பாரி வலைதளத்தில் 2019ம் ஆண்டு ஜீன் 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.