அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுடுமண் பானைகள், பளிச்சிடும் வண்ணப் பொருட்களைக் கண்ட வாடிக்கையாளர் ஒருவர் “அண்ணா, 700 ரூபாய் என்பது மிகவும் அதிகம்” என்கிறார் மண்பாண்ட வியாபாரியான 23 வயது சச்சின் ஷர்மாவிடம். சந்தை விலைக்கு அப்பொருளை வாங்க வைக்க அப்பெண்ணிடம் சச்சின் முயற்சிக்கிறார். ஆனால் அவர் வெறும் கையுடன் திரும்புகிறார். மண்பாண்டங்களுக்கு பின்னால் சிலைகளை அடுக்கியபடி அவர் சொல்கிறார், “முன்பு போல இப்போதெல்லாம் அதிக வாடிக்கையாளர்கள் வருவதில்லை, வருபவர்களும் கடுமையாக பேரம் பேசுகின்றனர், விலையைக் குறைக்காவிட்டால் வாங்காமல் சென்றுவிடுகின்றனர். இந்த பெருந்தொற்று மிகவும் மோசமானது.”

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விளக்கு விற்பனை அதிகமாக இருக்கும் என சச்சின் போன்ற மண்பாண்ட வியாபாரிகள் நம்பியிருந்தனர். ஆனால் ஊரடங்கு அவர்களின் நம்பிக்கைகளை நொறுக்கிவிட்டது. தீபாவளியின்போது லக்னோவின் வெவ்வேறு இடங்களில் நான்கு கடைகளை அவரது குடும்பம் அமைத்தும் விற்பனை மிகவும் மோசமாகவே இருந்துள்ளது. முன்பெல்லாம் மாதம் ரூ.10,000 முதல் 12,000 வரை வருவாய் ஈட்டி வந்த அவர், இப்போது ரூ.5000 தான் பெறுகிறார். “நான் முதலீடு செய்த தொகையில் பாதியைக்கூட திரும்பப் பெற முடியவில்லை. செல்வந்தர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதில்லை, அப்படி வருபவர்களும் மண்பாண்டங்களில் செலவிடத் தயங்குகின்றனர்,” என்று தீபாவளிக்குப் பிறகு நாம் சந்தித்தபோது அவர் தெரிவித்தார். “உணவுப் பொருட்கள் வாங்கினால் ஆறு மாதங்கள் வரை உண்ணலாம். மண்பாண்டங்களை வைத்துக் கொண்டு அவர்களால் என்ன செய்ய முடியும்?” என்கிறார் நகைப்பாக.

ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்திரா நகரில் மண்பாண்ட கடை வைத்திருக்கிறார் 38 வயதாகும் முகமது ஆரிஃப். பொதுவாக தீபாவளி காலத்தில் அவரது அனைத்துப் பொருட்களும் விற்றுவிடும் என்பதால் கூடுதலாக சிலைகள், சுடுமண் பொருட்களை விற்பனைக்கு வாங்குவது வழக்கம். பானையைக் காட்டி அவர் சொல்கிறார்: “கடந்தாண்டு இதை 300-400 ரூபாய் கொடுத்து மக்கள் வாங்கினர். இந்தாண்டு ஒன்றுகூட விற்பனையாகவில்லை. விற்காமல் நிறைய சரக்கு தேங்கியுள்ளன. எனக்கு விநியோகம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்க கடன் வாங்கியிருக்கிறேன்,” எனும் அவர், “நல்ல நாட்களில் 5000 ரூபாய் வரை சம்பாதிப்பேன், இப்போது அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது.”

சின்ஹாட்டின் மண்பாண்ட விற்பனை என்பது ஆண்டுதோறும் நடைபெறும் லக்னோ மகோத்சவ விற்பனை கண்காட்சியை நம்பியே உள்ளது. ஆனால் பொதுமுடக்கத்தினால் 2020ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 15 நாட்கள் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் இடம்பெறும் உள்ளூர் கைவினைப் பொருட்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்பவை. பெயர் சொல்ல விரும்பாத உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஆண்டுதோறும் சின்ஹாட் மண்பாண்டங்கள் 10-15 இடம்பெறும், அன்றாடம் 2-3 லட்சம் மக்கள் அவற்றை கண்டு செல்வார்கள். ஒரு நாளுக்கு ரூ.10,000 – 50,000 வரை அவர்கள் ஈட்டுவார்கள்.”

‘எளிதில் உடையாது என்பதால் மக்கள் சுடுமண் சிற்பங்களை அதிகம் விரும்புவார்கள்,’ என்கிறார் மண்பாண்ட வியாபாரி சச்சின் ஷர்மா. ஒளிப்படம்: கரிமா சாத்வானி

ஆக்ரா, ஜான்சி போன்ற அருகமை நகரங்களிலும், ஜார்கண்ட் போன்ற அண்டை மாநிலங்களிலும் சச்சின் மற்றும் அவரது குடும்பம் கண்காட்சிகளில் ஆண்டுதோறும் கடை வைப்பார்கள். ஆனால் இந்தாண்டு லக்னோவில் ஏற்பட்ட விற்பனை சரிவால் அவர்களுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. “கண்காட்சிகளை நம்பியே ஒருவர் இருக்க முடியாது. கண்காட்சியில் கடை வைக்க இடம் பிடித்துவிட்டால், யாரையும் வாங்காமல் திரும்பவிடுவதில்லை, அவர்கள் கேட்கும் விலைக்கு பொருட்களை கொடுக்க வேண்டி உள்ளது. பணத்தை முதலீடு செய்த பிறகு என்னால் வெறும் கையுடன் [திரும்பி] வர முடியாது,” என்கிறார் சச்சின்.

உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவின் மத்தியப் பகுதியில் சின்ஹாட்டில் உள்ள ஃபைசாபாத் சாலை என்பது ஒரு காலத்தில் மண்பாண்ட பொருட்களுக்கு புகழ்பெற்றது. லக்னோவின் சிறந்த கைவினைகளான ஸரி-ஸரிதோசி, சிக்கன்காரி, அட்டார் ஆகியவற்றுடன் மண்பாண்டங்களும் தரவரிசையில் இடம்பெறுவது வழக்கம். களிமண் அல்லது சுடுமண்ணில் செய்யப்படும் இவ்வகை அலங்கார மண்பாண்டங்களில் சிலைகள், பொம்மைகள், வழிபாட்டு தெய்வங்கள் போன்றவை இடம்பெறும். அவை வெளிர் சிவப்பு, பழுப்பு, பச்சை நிறங்களிலும், நுட்பமான வடிவங்களில் வெள்ளை, ஆரஞ்சு நிறமும் கொண்டு பூசப்பட்டு இருக்கும். “அடர்ந்து, பல அடுக்குடன், எளிதில் உடையாத சுடுமண் சிற்பங்களைத்தான் மக்கள் விரும்புவார்கள். சுடுமண் பற்றி அறிந்தவர்கள் புரிந்துகொண்டு [பாராட்டிவிட்டு] பேரம் பேசாமல் வாங்கிச் செல்வார்கள்,” என்கிறார் சச்சின்.

‘உள்நாட்டின் சிறப்புமிக்க கைவினைகளை ஊக்குவிக்கும்’ வகையில் 2018ஆம் ஆண்டு ஒரு மாவட்டம், ஒரு பொருள் எனும் திட்டத்தை உ.பி. அரசு அறிமுகம் செய்தது. ஆனால் அதில் சிக்கன்காரி, ஸரி-ஸர்தோசி கைவினைகள்தான் இடம்பெற்றன. சின்ஹாட்டின் மண்பாண்டங்கள் சேர்க்கப்படவில்லை.

சின்ஹாட் மண்பாண்டங்கள் நகரின் பிற பகுதிகளிலும் விற்பனையாகும். ஆனால் பொதுமுடக்கத்தினால் எங்குமே விற்பனை நடக்கவில்லை. நகருக்கு வெளியே மவையாவில் விற்பனை செய்யும் தினேஷ் குமார் பேசுகையில், “ஆண்டின் தொடக்கத்தில் வாங்கிய சரக்குகளையே என்னால் விற்க முடியவில்லை. மார்ச் மாத ஊரடங்கிற்கு முன், ஒரு நாளுக்கு 30-40 வாடிக்கையாளர்கள் வருவார்கள், இப்போது வாடிக்கையாளர்கள் 10 பேர் வருவதே அரிதாகிவிட்டது.”

ஊரடங்கினால் எங்கும் விற்பனை பாதித்துவிட்டது; மவையாவில் அனைத்து வடிவங்களிலும் மண்பாண்டங்கள் இக்கடையில் அடுக்கப்பட்டுள்ளன. ஒளிப்படம்: கரிமா சாத்வானி

சின்ஹாட்டில் பிறந்து வளர்ந்த சச்சின் இப்போதும் அங்கு தனது பெற்றோர், மூத்த சகோதரர் மற்றும் அண்ணியுடன் வசித்து வருகிறார். “சந்தை முன்பெல்லாம் பெரிதாக இருக்கும். இங்கிருந்து அங்குள்ள பெட்ரோல் பம்பு வரை கடைகள் இருக்கும்,” என ஃபைசாபாத் சாலையில் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். “பரபரப்பான சாலையில் எதிரிலும் கடைகள் இருக்கும். இப்போது மிக குறைவான கடைகளே உள்ளன. எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியவில்லை, வாழ்வாதாரத்திற்கு வருமானம் கிடைத்தால் போதும் என நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.

சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கும் சச்சின் போன்ற வியாபாரிகள் அன்றைய நாள் வியாபாரம் முடிந்தவுடன் மிஞ்சும் சரக்குகளை கட்டி எடுத்துச் செல்ல வேண்டும். நடைபாதை கடைகள் அகற்றப்படும் அச்சுறுத்தல், பொருளிழப்பு போன்றவற்றால் பல வியாபாரிகள் இங்கு மீண்டும் கடை அமைக்க முன்வரவில்லை.

சாலையின் எதிர்முனையிலிருந்து ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை தனது கூரை வேயப்பட்ட சாலையோர கடையை மாற்றிவிட்டார்: “சில ஷோரூம்காரர்கள் எங்கள் கடைகளை அகற்ற வேண்டும் என [நகராட்சி நிர்வாகத்திடம்] புகார் கொடுத்துவிடுகின்றனர். என் சாலையோர கடையை பாதுகாக்க முயற்சித்தும் முடியவில்லை.” கடைக்குப் பின்னால் உள்ள காலி மனையில் தனது சரக்குகளை அவர் வைத்து பாதுகாக்கிறார். “சிலருக்காக இந்த மனையை நான் கவனித்துக் கொள்கிறேன். அதனால் இங்கு எனது சரக்குகளை வைக்க அனுமதி கிடைத்துள்ளது. விற்பனை செய்யவோ, கட்டடம் கட்டவோ அவர்கள் முடிவு செய்துவிட்டால், வேறு இடம்தான் தேட வேண்டும்,” என்கிறார் அவர்.

கடைக்குப் பின்னால் வண்ணப்பூச்சு கேன்கள், மண் சிற்பங்கள் உள்ளன. “விலங்குகள், மனிதர்களின் சிலைகள், அலங்காரப் பொருட்களுக்கு நான் வண்ணம் பூசுவேன். பிறரைப் பார்த்து நான் கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் நான் செப்பு மற்றும் பொன் நிறத்தை மட்டுமே பயன்படுத்துவேன், இப்போது பல வண்ணங்களையும் பூசுகிறேன்,” என்கிறார் சச்சின்.

சில ஆண்டுகளாக சின்ஹாட்டில் மண்பாண்ட உற்பத்தியும் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் வியாபாரிகள் அருகில் உள்ள ககோரி, கோரக்பூர் பகுதிகளில் இருந்தும் அல்லது அசாமின் சிலிகுரியிலிருந்தும் மண்பாண்டங்களை வாங்கி வருகின்றனர்.

சின்ஹாட்டில் பிறந்து வளர்ந்த 61 வயது இஸ்மத்-உல்-நிசார் தனது குடும்பத்துடன் சேர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்டங்களை செய்து விற்று வருகின்றனர். சச்சினின் கடைக்கு எதிரே சாலையோரத்தில் அவரது கடை உள்ளது. அவரது குடும்பத்தின் சில ஆண்கள் இப்போதும் மண்பாண்டங்களைச் செய்து வருகின்றனர். ஆனால் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதால் ககோரியிலிருந்து பொருட்களை அவர் வாங்கி வருகிறார். “[சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள] மல்ஹாரில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில் என் கணவர் காதிர் வேலை செய்தார். இப்போது அவருக்கு சொந்தமான கிடங்கில் எங்கள் பொருட்களை வைத்துக் கொள்கிறோம்.” நாளின் முடிவில், அவர் பொருட்களை கட்டி பேட்டரி ரிக்ஷாவில் ஏற்றி கிடங்கிற்கு கொண்டு செல்கிறார்.

“தீபாவளியின் போது நாங்கள் கூடுதலாக பல பொருட்களை விற்போம். அப்போது எல்லாவற்றையும் திருப்பி எடுத்துச் செல்ல முடியாது. இங்கு அனைத்தையும் வைத்துவிட்டு இரவு முழுவதும் இங்கு தங்கிவிடுவோம், ” என்கிறார் அவர். பண்டிகை கால பரபரப்பின்போது இஸ்மத்தின் பேரப் பிள்ளைகளான ஷோயப், சுக்ரா, ஷஃபாஸ் ஆகியோர் விற்பனைக்கு உதவி செய்கின்றனர். ஊரடங்கினால் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் அதிக நேரம் இங்குதான் உள்ளனர்.

இந்த கோடையில் நடைபாதையில் கடை வைத்ததற்காக நகராட்சி அதிகாரிகள் அவரது பொருட்களை அகற்றி, வீசி, உடைத்து அப்புறப்படுத்தியதில் ரூ.3000 இழப்பு ஏற்பட்டுவிட்டது. “எங்களை நடைபாதையில் இருந்து நகராட்சி நிர்வாகம் அகற்ற முயற்சி செய்ததால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர். “பிற வியாபாரிகளுக்கும் இதே நிலைதான். நகராட்சி நிர்வாகம் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதால் பல வியாபாரிகள் மீண்டும் நடைமேடையில் திரும்பவும் கடைபோட முன்வரவில்லை.”

இழப்பு ஏற்படும் என்ற அச்சத்துடன், கடைகளும் அகற்றப்படுவதால் பல மண்பாண்ட வியாபாரிகள் புறநகருக்குச் செல்கின்றனர். ஆனால் இஸ்மத் இங்கே தங்க முடிவு செய்துவிட்டார். “நாங்கள் இங்கு பல ஆண்டுகளாக வியாபாரம் செய்கிறோம். வாடிக்கையாளர்கள் [பழகிப் போனவர்கள்] இங்கு பலவகை  பொருட்கள் கிடைக்கும் என்பதால் அதிகளவில் வருவார்கள்,” என்கிறார் அவர்.

கடந்த காலங்களில் பெருமளவு தயாரிக்கப்பட்ட நீடித்த மாற்றுகளுக்கு எதிராக மண்பாண்ட தயாரிப்புகள் போராடின. “முப்பதாண்டுகளுக்கு முன், மக்கள் செப்பு, களிமண்ணில் செய்த பாத்திரங்கள், பீங்கான்களை பயன்படுத்தினர். பிறகு ஸ்டீல் பாத்திரங்கள் மலிவானதும் அவற்றை அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் களிமண் பாத்திர சந்தை என்பது இழப்பை சந்திக்க தொடங்கியது,” என்கிறார் லக்னோவில் நீண்டகாலமாக உணவு விற்பனை செய்யும் லலித் சாத்வானி.

இஸ்மத்தின் மகன் முகமது ஆரிஃப் பேசுகையில்: “ எந்த வசதியும் இல்லாததால் எங்கள் தொழில் சரிந்து வருகிறது. மண்பாண்டத்திற்கான சுண்ணாம்பும் எளிதாக கிடைப்பதில்லை. பிற இடங்களில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்தாலும், வழியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். ஒருவேளை உணவிற்காக தான் சாலையோரம் கடை வைக்க வேண்டி உள்ளது.”

Editor's note

கரிமா சத்வானி சென்னையில் உள்ள ஏசியன் காலஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டயம் படித்து வருகிறார். கைவினை தலைப்பு முதலில் எனக்கு ஒதுக்கியபோது சிக்கன்காரி பற்றி எழுதவே நினைத்தேன், ஆனால் லக்னோவில் பிற பாரம்பரிய கைவினைகள் குறித்து ஆராய்ந்தேன்.எனும் அவர்: “மண்பாண்டங்கள் நகர்புறங்களின் பெருமையாக இல்லாமல் போகலாம், ஆனால் இப்போதும் அது பல குடும்பங்களின் வாழ்வாதாரமாகத் தான் இருக்கிறது. அவர்களின் கதைகளைச் சொல்வது மிகவும் முக்கியமானது. அரசு மற்றும் அதிகாரிகளால் அவர்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு கதைக்கும் எத்தனை வகையான இழைகள் உள்ளன என்பதை உணர பாரி கல்வி எனக்கு உதவியது. ஒருமுறை சந்தித்துவிட்டு இத்துறையின் துன்பங்கள் குறித்து எழுத முடியாது. சச்சின், இஸ்மத்தை சந்திக்க நான் ஐந்து முறை சின்ஹாட் சென்று வந்தேன், இதனால் அவர்களின் கதை மட்டுமல்ல, அவர்களின் தொழில் குறித்த என் புரிதலும் செறிவூட்டப்பட்டது.

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார்.