“என் தந்தை சாலையில் நடந்து சென்றால் மக்கள் அவரை ‘மருத்துவரின் தந்தை‘ என்கின்றனர்.”

விஜய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு ஜோல்னா பை மருத்துவர் – மருத்துவருக்கான அங்கீகாரம் பெறாதவர், அடிக்கடி போலி மருத்துவர் என்று அரசு மற்றும் கல்வி அறிக்கைகளினால் நிராகரிக்கப்படுபவர். “வெளியிலிருந்து மக்கள் என்னை என்ன நினைக்கிறார்கள் என்பது விஷயமில்லை,” என்கிறார் எந்த அவதூறுகளையும் துடைத்தபடி சத்திஸ்கரின் மல்கரோடா வட்டாரத்தைச் சேர்ந்த அந்த 30 வயது இளைஞர்.

ஜோல்னாபை ‘மருத்துவர்’ என்ற பட்டப் பெயர் மருந்துகள் நிறைந்த ஜோலா அல்லது பையை குறிக்கிறது. சாப் அல்லது (அதிகாரப்பூர்வமற்ற) உரிமம் அவரிடம் சிகிச்சைப் பெறும் மக்களின் பார்வையில் அவரை மருத்துவராக கருதச் செய்கிறது. ஏழு ஆண்டுகள் எம்பிபிஎஸ் படித்த மருத்துவருடன் நெருங்கி பணியாற்றியுள்ளதாக விஜய் சொல்கிறார். உயிரியலில் இளநிலை பட்டத்துடன் உரிமம் பெற்ற மருத்துவருடன் நெருங்கி பணியாற்றியதே ஜோல்னா பை ‘மருத்துவராக’ பயிற்சி செய்ய போதுமானது.

வீட்டிலிருந்தபடி விஜயிடம் சிகிச்சைப் பெறும் நோயாளி. ஆயுஷ் மங்கல் எடுத்த புகைப்படம்

இந்திய மருத்துவக் கவுன்சிலின்படி (எம்சிஐ), தகுதியுடன் உரிமம் பெற்ற மருத்துவர் மட்டுமே மருத்துவம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஒரு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபவடுவது அதன் தொழில்சார் அபாயங்களைக் கொண்டுள்ளது. விஜய் போன்ற ஜோல்னா பை மருத்துவர்கள் சட்டத்தைவிட ஒரு படி முன்னே சிந்திக்கின்றனர். அவர்களிடம் தற்செயல் திட்டம் உள்ளது: “எங்கள் மருத்துவ பையை வேகமாக மறைத்துவிடுவோம். இதனால் எங்களை [சட்டவிரோத சேவைகளுக்கு] விசாரிப்பது கடினம்,” என்கிறார் அவர்.

ஆனால் விஜயை எதுவும் அச்சுறுத்தவில்லை. அவர் செய்வதிலும், சேவை அளிப்பதிலும் நம்பிக்கை கொண்டு மகிழ்ச்சியோடு செய்வதாக அவர் சொல்கிறார். “எங்கள் கிராமத்தில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் நாங்கள் 25 கிலோமீட்டர் பயணம் செய்து வட்டார தலைநகருக்குச் சென்று மருத்துவரை கண்டறிய வேண்டும். நான் இதைப் பார்த்து வளர்ந்தவன். என் கிராம மக்களுக்கு [மருத்துவத் தேவைக்கு] சேவையாற்ற முடிவு செய்தேன்,” என்கிறார் அவர். தகுதியில்லை, உரிமம் இல்லை, சட்டவிரோம் என எந்த விமர்சனத்தையும் ஏற்க மறுக்கும் அவர், தான் வாழும் மக்களிடையே தனக்கு கிடைக்கும் மரியாதையில் கவனம் செலுத்துகிறார். ஐபுப்ருஃபேன், அன்டிபயாடிக்ஸ் அல்லது பாராசிடாமல் போன்ற ஊசிகளை அவர் நம்பியுள்ளார். மல்கரோடா வட்டாரத்தில் உள்ள மக்கள்தொகையில் பாதிபேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்றும் ஜஞ்சிர் சம்பா மாவட்டத்தில் உள்ள மல்கரோடா வட்டாரத்தில் விஜய் மற்றும் பிறர் மருத்துவ தேவைக்கு பயணிக்க வேண்டியுள்ளது – சில சமயங்களில் காடுகள் வழியாக மோசமான சாலைகளில் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டி உள்ளது. “உடனடி நிவாரணம் அளித்து நான் மக்களின் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறேன்,” என்று அவர் குறிப்பிடுகிறார். மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சத்திஸ்கரில் சுமார் 27, 218 கிராம மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது என்கிறது கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள் 2019-2020 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 404 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது, பழங்குடியின பகுதிகளில் 2020 மார்ச் 31ஆம் தேதியின்படி 1,393 மருத்துவ உதவியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வியை அவர் முடித்தபோது, மருத்துவர் பட்டம் வாங்க விரும்பினார். ஆனால் அவரால் அதற்கு செலவு செய்ய முடியவில்லை. “என்னைப் போன்றோருக்கு பி.எஸ்சியேகூட பெரிய சாதனை தான். தினமும் 50 கிலோமீட்டருக்கு மிதிவண்டியில் சென்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரை அவர் படித்தேன்.” மேற்கொண்டு படிப்பதற்கும், தொழில்கள் அமைத்துக் கொள்வதற்கும் வழிகாட்டுவதற்கும், தேர்வு செய்வதற்கு வாய்ப்பின்றி தனது நண்பர்கள் பலரும் பள்ளியில் இடைநின்றதை அவர் நினைவுகூர்கிறார்.

விஜய் பைக்கில் செல்லும்போதே வழியில் அவ்வப்போது நோயாளிகள் மருத்துவ பரிசோதனை செய்யச் சொல்வதுண்டு. அவரது வருகையின் போது கருப்பு நிற பையான ஜோலாவில் மருந்துகள், மழையாடை, பிற கருவிகள் இருக்கும். ஆயுஷ் மங்கல் எடுத்த புகைப்படங்கள்l

மருத்துவர் எங்கே?

“கிராமப்புறங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இல்லாத இடைவெளியை உயிரியல் பட்டதாரிகள் நிரப்புகின்றனர்,” என குறிப்பிடுகிறார் மல்கரோடா வட்டார முன்னாள் எம்எல்ஏவான 46 வயது ரஞ்ஜீத் அஜ்கலே. அவரது கருத்தை 2010 அறிக்கையும் ஆதரிக்கிறது. “…கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்களுக்கான கடும் தட்டுப்பாடு மருத்துவர் அல்லாதவர்கள் ஆரம்ப சுகாதார தேவைகளை அளிப்பதில் முதன்மை வகிக்கின்றனர்.” ‘ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எந்த மருத்துவர்’ என்ற தலைப்பில் தேசிய ஊரக சுகாதார மிஷன் மற்றும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை ஆகியவற்றின் இந்த கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு, மோசமான சாலை வசதி, அடர்ந்த காடுகள், மாநிலத்தில் எப்போதும் மாவோயிஸ்ட் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடிக்கும் அச்சம் ஆகியவை மக்கள் தங்கள் கிராம பாதுகாப்பிலிருந்து வெளியேற ஊக்குவிப்பதில்லை. அருகில் வாழும் ஜோலா சாப்களின் பரிட்சயமான முகமும், எளிதில் அணுகுதலும் ஒவ்வொரு முறையும் கைகொடுக்கிறது. உரிமம் பெறாத பட்டத்துடன் இவர்கள் நோய்களை கண்டறிந்து மருந்தகளை பரிந்துரைக்கும் ஒவ்வொரு முறையும் நோயாளியை ஆபத்தில் வைக்கின்றனர். நோயாளியின் உடல்நிலை மோசமடையாத வரையில், அவர்களின் பாத்திரத்திற்கு ஒரு பொதுவான அனுதாபம் கிடைக்கிறது.

நிலமற்ற விவசாயத் தொழிலாளரான ராத்பாய் (மல்கரோடா வட்டாரத்தில் உள்ள அவரது கிராமத்தில் சிரியாக்தினி என்றும் அறியப்படுகிறார்) தங்கள் குடும்பத்தில் யாருக்கும் உடல்நலம் குன்றினாலும் முதலில் ஜோலா சாப்பை தான் பார்ப்போம் என்று தெளிவாக சொல்கிறார். “எங்களிடம் இருசக்கர வாகனம் கிடையாது, எப்படி எங்களால் நோயாளியை [பொது] மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும்?,” என அவர் கேட்கிறார். “மேலும் எங்களிடம் பணமில்லாத நிலையில்கூட ஜோலா சாப்பிடம் கடன் சொல்வோம். நாங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, அவர்கள் எழுதும் [பரிந்துரைக்கும்] பெரும்பாலான மருந்துகளை மருந்து கடைக்கு சென்று வாங்க வேண்டும், அவர்கள் கடன் தர மாட்டார்கள்,” என்கிறார் அந்த 33 வயது பெண்மணி.

மல்கரோடா வட்டாரத்தில் உள்ள 108 கிராமங்களின் மக்கள்தொகை 140,175 (கணக்கெடுப்பு 2011). மாவட்ட புள்ளியியல் அறிக்கை 2014-15ன்படி இங்கு ஒரு மருத்துவமனை, மருந்தகம், ஐந்து ஆரம்ப சுகாதார மையங்கள், 23 துணை சுகாதார மையங்களுக்கு மொத்தமாக நான்கு அலோபதி மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். “கிராமப்புறங்களில் [சுகாதார நிலையங்களில்] மருத்துவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாதது அரசின் வசதிகளை பலவீனப்படுத்துகின்றன,” என்கிறார் மல்கரோடா வட்டார மருத்துவ அலுவலர் (பிஎம்ஓ) டாக்டர் ரவிந்திரா சிதார். “இங்கு ஒரு கிராமத்திற்கு இரண்டு முதல் மூன்று ஜோலா சாப்புகள் என எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரித்து வருகிறது,” என்கிறார் அவர்.

ரத்பாய் (இடது) வீட்டிற்கு வெளியே தனது ஐந்து வயது மகள் பவிஷ்யாவுடன் அமர்ந்திருக்கிறார். வலது: வட்டாரத்தின் முன்னாள் எம்எல்ஏ ரஞ்ஜீத் அஜ்கல்லே (வலது) ஓய்வுப் பெற்ற தையல்காரர் கோண்டுவுடன் (இடது) மல்கரோடா கிராமம் கவுரா சவுக்கில். ரஞ்ஜீத் சொல்கிறார், “கிராமப்புறங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களின் காலியிடங்களை உயிரியல் பட்டதாரிகள் நிரப்பத் தொடங்கிவிட்டனர்.” ஆயுஷ் மங்கல் எடுத்த புகைப்படங்கள்

ஜோலா சாப்களின் எண்ணிக்கை என்பது, அவர்கள் சிகிச்சை அளிப்பதன் மீதான அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. “நாங்கள் எல்லா நேரமும் வருவோம், குறிப்பாக நள்ளிரவு, அதிகாலை போன்ற அசாதாரண நேரங்களில் கூட. எனவே அவர்கள் [நோயாளிகள்] எங்களது வருகையை உறுதியாக நம்புகின்றனர். இது [அரசு அல்லது தனியார்] மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை,” என்கிறார் அருகமை கிராமத்தில் ஜோலா சாப்பாக உள்ள ராஜேஷ்.

மாநிலத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பதை அபாயகரமான சுகாதார கணக்கீடுகள் காட்டுகின்றன: 1000 மக்கள் தொகைக்கு 8.6 பேர், இங்கு கிராமப்புற மரணங்கள், சிசு மரணங்களின் எண்ணிக்கை சராசரி 42. இது நாட்டின் சராசரியான 1000 பேருக்கு 36 பேர் எனும் எண்ணிக்கையைவிட அதிகம் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகத்தின் 2021 மே மாத கிராமப்புற சுகாதார புள்ளிவிவர அறிக்கை. 2020ஆம் ஆண்டில் நாட்டின் மலேரியா மரணங்களில் அதிக அளவாக சத்திஸ்கரில் 18 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசமான சாலைகளில் 20 கிலோமீட்டர் பயணித்து காடுகள் வழியாகச் சென்றால் ஒற்றை அறை மாடி வீட்டின் முன்பக்கம் அமைக்கப்பட்டுள்ள ‘சிகிச்சை மையத்திற்கு’ வந்தடையலாம். மழைக்காலம் என்பதால் மண் சாலைகள் வழுக்கும் நிலையில் இருந்தன. எங்களது இரு சக்கர வாகனம் சறுக்கி கீழே விழும் ஆபத்து ஏற்பட்டதால், அதை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம்.

‘சிகிச்சை மையம்‘ நடத்தி வரும் ராஜேஷ் பள்ளிப் படிப்பிற்கு பிறகு இளநிலை அறிவியலில் சேர்ந்து முழுமையாக முடிக்கவில்லை. “என் குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாக இல்லை. நான் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மருத்துவர் ஒருவரிடம் மருத்துவ உதவியாளராக நான் பணியைத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். பிறகு என்னால் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை, “நான் ஏற்கனவே பயிற்சி பெற்றுவிட்டேன் என்பதால் கல்லூரிக்குச் செல்வதில் பயனில்லை என உணர்ந்தேன்,” என்கிறார் அவர். அவர் சொல்கிறார் மாதம் ரூ.12,000-18,000 வரை சம்பாதிப்பதாகவும், “இங்கு செலவும் குறைவு என்பதால் பெரும்பாலானவற்றை சேமித்துவிடுகிறேன். நகரில் சுமார் 25,000 வரை சம்பாதிக்க முயும், ஆனால் செலவுகளும அதிகமாக இருக்கும்.”

ராஜேஷின் பணியிடத்தில் ஸ்ஃபைக்மோமனோமீட்டர் (இரத்த அழுத்தத்தை அளவிட செய்யும் இயந்திரம்) கடன் வாங்கிய பதிவேடு, அலமாரி நிறைய மருந்துகள், ஊசிகள், அளவீட்டு கருவி உள்ளிட்ட பலவும் உள்ளன. ஆயுஷ் மங்கல் எடுத்த புகைப்படங்கள்

நோயாளியைp பார்க்கும் ராஜேஷ். நன்றாக உடையணிந்து மேஜையில் அமர்ந்துள்ளார். நோயாளி இருக்கையில் அமர்கிறார். நோயாளியின் உறவினர்களுக்காக அறையில் கூடுதலாக சில நாற்காலிகள், ஊசி போடுவதற்கும், டிரிப் ஏற்றவும் மர கட்டில், எடை பார்க்கும் கருவி போன்றவை இருக்கின்றன. ஒரு மேஜையில் ஸ்பைக்மோமனோமீட்டர் (இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி), பெட்டி நிறைய மருந்துகள், ஊசிகள் உள்ளன. மேஜை நாள்காட்டிகள், ஆண்டு நாட்குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அவர் சொல்கிறார், “கடன் விவரங்களை நான் குறித்துக் கொள்வேன்.” அவரது நோயாளிகளில் பலராலும் உடனடியாக கட்டணத்தை செலுத்த முடியாது என்கிறார். “சந்தை நாள் அல்லது அறுவடை வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

ஜோலா சாப்புகளின் ‘தொழிலில்‘ கடனுக்கு மருத்துவம் பார்ப்பது நோயாளிகளை தக்கவைக்க உதவுகிறது. விஜய் சொல்கிறார், “நான் கடனுக்கு வேலை செய்யாவிட்டால், எனக்கு தொழிலே இருக்காது. 300 ரூபாய் கட்டணம் என்று நான் கேட்டால், அவர்கள் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, வருமானம் வந்த பிறகு மிச்ச பணத்தை கொடுப்பார்கள்.” கட்டண கடன் மட்டுமே ரூ.2.5 லட்சம் வரை உள்ளதாகவும், அவர் சொல்கிறார், “அதில் 50,000 ரூபாய் தான் திரும்ப வரும். மிச்ச பணம் கிடைக்காது,” என்கிறார். பணத்தை மீட்பதற்கு அதிக கட்டண வசூல் செய்வது, மருந்துகளுக்கு அதிக கட்டணம் வைப்பது எனும் உத்திகளை அவர் கையாளுகிறார்.

இங்குள்ள சில எம்பிபிஎஸ் தகுதிப் பெற்ற மருத்துவர்களும் நகர்புற பதவிகளை விரும்புகின்றனர். “அரசின் கிராமப்புற பணி கட்டாயமில்லை என்றால், கிராமங்களில் நான் இரண்டு ஆண்டுகள் சேவையாற்றிருக்க மாட்டேன்,” என்கிறார் மல்கரோ வட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் (சிஎச்சி) இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர் நளினி சிங் சந்திரா. “எம்பிபிஎஸ் மருத்துவருக்கு கிராமப்புறங்களில் சமூக மற்றும் பொருளாதார உதவிகள் கிடைப்பதில்லை. தனி நபராக இங்கு இருக்கலாம், குடும்ப வாழ்க்கையைத் தொடங்க நினைத்தால் சரி வராது,” என்கிறார் அவர்.

மாநில அரசால் நியமிக்கப்படும் சந்திரா போன்ற மருத்துவர்களையும், அனைவரும் நன்கறிந்த ஜோலா சாப்புகளையும் உள்ளூர் மக்கள் ஒப்பிடுகின்றனர். அண்டை கிராமத்தில் ஜோலா சாப் ஒருவரை எதிர்கொண்ட அனுபவத்தை அந்த மருத்துவர் நினைவுகூர்கிறார். கிராம மக்கள் தன்னையும் புலனாய்வுக் குழுவையும் குறைத்துப் பேசியதாக சந்திரா சொல்கிறார், “பார், இவர்கள் நாம் பெற்றுவரும் நல்ல மருத்துவ சேவையை இழுத்து மூடுகின்றனர். நாம் உடல்நலம் குன்றினால் இனிமேல் 20 கிலோமீட்டர் கடந்து மல்கரோடா செல்ல வேண்டும். எம்பிபிஎஸ் மருத்துவர்கள் நம்மை பரிசோதிக்க வரமாட்டார்கள், ஆனால் ஜோலா சாப்புகள் வருவார்கள்,” என்று.

மல்கரோடாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் மருத்துவர் நளினி சந்திரா (இடது). ஆயுஷ் மங்கல் எடுத்த புகைப்படம்ndra

ஜோலா சாப்புகளுக்கு நோயாளிகளிடையே இரக்கம் நிறைந்துள்ளது. உடல்நலக் குறைவால் தனது தினக்கூலியை இழந்த ஒருவர் அவரிடம் சொல்கிறார், ‘டாக்டர், நான் சீக்கிரம் நலமடைந்து, வேலைக்குத் திரும்ப வேண்டும்.’ தனது நிபுணத்துவத்தை, அக்கறையைக் காட்ட ஒரு ஊசி போதுமானது என்று கூறி சிரிஞ்சை வேகமாக எடுக்கிறார் விஜய்.

இதுபோன்ற சிகிச்சைகள் தகுதிப் பெற்ற மருத்துவர்களை கோபமடையச் செய்கிறது. “புற நோயாளிகள் பலரும் ஊசி போட்டுக் கொண்டு இங்கு வருவதை காண்கிறேன். அவர்கள் சொல்கின்றனர் ஊசி போட்டால் தான் நோயிலிருந்து விடுபடலாம் என்று,” என்கிறார் டாக்டர் சந்திரா. “நோயாளிகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் ஊசிப்போடும் ஜோலா சாப்புகளால் தான் மக்களின் மனநிலை இப்படி மாறியுள்ளது,” என்று இப்போக்கின் மீது அவர் அதிருப்தி தெரிவிக்கிறார்.

ஜோலா சாப்புகளுக்கு கிடைக்கும் மரியாதை

“சிலவற்றை நாங்கள் சர்காரி கேஸ் [அரசு மருத்துவமனை கேஸ்] எனக் கூறி சிகிச்சை அளிப்பதில்லை, தொழுநோய், டிபி, காலரா, பேதி, மலேரியா, டெங்கு, கர்ப்பம், பிரசவம் போன்றவை,” என்று ஜோலா சாப் மருத்துவர்கள் இடையே சில தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை, தொடுவதில்லை என எழுதப்படாத விதிகள் உள்ளதை விஜய் விளக்குகிறார். “நாங்கள் இதுபோன்ற நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுவோம். இந்த விஷயத்தில் அரசு மிகவும் கடுமையாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்தால் லஞ்சம் கொடுத்துக் கூட தப்பிக்க முடியாது,” என்று எதார்த்தத்தைச் சொல்கிறார் அவர்.

தொடர் சளி மற்றும் இருமல் உள்ளவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் கோவிட் பரிசோதனைக்கு மல்கரோடா வட்டார சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி விடுகிறார். பாசிடிவ் என்று சோதனையில் தெரியவந்தால் ஜோலா சாப்புகள் பின் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். கோவிட் அதிகரிப்பால், தனது குடும்பம் பற்றி விஜய் கவலை கொண்டார்: “என் மனைவி கர்ப்பமாக இருந்தபோது கவலையாக இருந்தது. பிறந்த குழந்தைக்கு வைரஸ் தொற்றிவிடும் என்று என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். மகள் பிறந்தபோது தொலைவில் இருந்துதான் பார்த்தேன்.”

தனது சிகிச்சை மையத்தில் நோயாளிக்கு சிகிச்சை தரும் ராஜேஷ். ஆயுஷ் மங்கல் எடுத்த புகைப்படம்

நோயாளிகளுடன் நெருக்கமான உறவைk கொண்டிருந்தாலும் அவர்களின் வேலைக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதில்லை. “பதிவுபெற்ற மருத்துவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எங்கள் வேலைக்கு கிடைப்பதில்லை. மருத்துவருக்கு ஏதும் நிகழ்ந்தால் அரசு இழப்பீடு தருகிறது. சமூகத்தின் பார்வையில் அவர்கள் பிரபலமானவர்கள் ஆகின்றனர். ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. எனக்கு ஏதும் நடந்தால் என் குடும்பம் கூலித் தொழிலுக்குத் தான் செல்ல வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம்,” என்கிறார் விஜய்.

Editor's note

ஆயுஷ் மங்கல் பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரவியலில் முதுநிலை இறுதியாண்டு படிக்கிறார். 2021 கோடையில் அவர் பாரியின் பயிற்சி மாணவராக இருந்தார். சத்திஸ்கரில் உள்ள இவர் ஜோலா சாப்ஸ்கள் குறித்து ஆராய விரும்பினார். அவர் சொல்கிறார், “ஜோலா சாப் மருத்துவர்களுக்கும், அவர்கள் சேவையாற்றும் சமூகத்திற்கும், கிராமப்புறங்களில் அவர்களின் பொது மருத்துவ சேவைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை நான் காண்கிறேன். இந்த சிக்கல்களை புரிந்துகொண்டு இப்பகுதிகளில் மருத்துவ சேவையை மேம்படுத்தும் அளவிலான கொள்கையை வகுக்க வேண்டும்.”
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.