கம்பளத் தறியை கட்டி தூர வைத்தாயிற்று. அது இருந்த இடத்தில் இப்போது சகோதரர் முகமதின் குடும்பம் இருக்கிறது. வீட்டுச் செலவுகளை குறைக்கவென அங்கு வந்திருக்கிறார்கள். “என் சகோதரருக்கு தொற்று மே 2021-ல் உறுதியானதும் நெசவு வேலையை நாங்கள் நிறுத்திவிட்டோம்,” என்கிறார் ஃபாத்திமா பேகம். அவரும் அவரின் கணவர் நசிர் அகமது பட்டும் 25 வருடங்களாக கஷ்மீரின் பந்திப்போரே மாவட்ட குண்ட் ப்ராங் கிராமத்திலிருக்கும் அவர்களின் வீட்டில் கம்பளங்கள் நெய்து வருகிறார்கள். 

ஃபாத்திமாவின் 32 வயது தம்பியான முகமது அஷ்ரப் தொற்றுக்கு முன் டாக்சி ஓட்டிக் கொண்டிருந்தார். பொதுமுடக்கம் அவரின் வேலையை நிறுத்திவிட்டது. உள்ளூர் டாக்சி நிறுத்தத்தில் அவர் பணிபுரிந்தார். மாதத்துக்கு 6000 ரூபாய் வருமானம் ஈட்டினார். “பழைய வாகனங்களுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் 2019ம் ஆண்டில் அவரின் டாடா சுமோவை விற்றார்,” என்கிறார் முகமதின் மனைவி ஷசதா. ஏற்கனவே இருந்த ஆஸ்துமா நோயுடன் கோவிட்டும் சேர்ந்து முகமது பேசத் திணறியதால் அவருக்கு பதிலாக அவரின் மனைவி ஷசதா பேசினார்.

டாக்சியை விற்று கிடைத்த 1 லட்ச ரூபாயை வைத்துதான் மார்ச் 2020க்கு பிறகான பொது முடக்க காலத்தை அவர்களால் ஓட்ட முடிந்தது. அவர்களின் மகன்களான 12 வயது முனீர், 10 வயது அர்சலன் மற்றும் 6 வயது அடில் ஆகியோர் ஊரிலிருக்கும் ஒரு முதுகலை பட்டதாரி நடத்தும் ட்யூஷன்களுக்கு தொடர்ந்து செல்கின்றனர். மூவருக்குமான கல்விக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் பென்சில்களோடு சேர்த்து, மாதத்துக்கு 3000 ரூபாய் ஆகிறது.

ஜீலம் ஆற்றங்கரையில் (மண் சேகரிக்கும்) தினக்கூலி வேலையில் வருமானம் ஈட்ட முனைந்தார் முகமது. தினக்கூலி 500 ரூபாய். ஆஸ்துமா இருந்ததால் அவரால் தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. 

மே 21, 2021 அன்று முகமதுக்கு மூச்சுத்திணறத் தொடங்கியதும் ஃபாத்திமா மற்றும் நசிரின் வீட்டுக்கு அருகே இருக்கும் ஷசதா அவர்களிடம் உதவி கேட்டார்.. ஹஜினில் இருந்த உள்ளூர் மருத்துவ மையத்தில் அவசர ஊர்தி அழைக்க யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ”என்னுடைய கணவர், மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது. அதற்கு பிறகுதான் ஒரு வாகனம் கிடைத்து ஹஜின் மருத்துவ மையத்தை அடைந்தார்கள்,” என நினைவு கூர்கிறார் ஃபாத்திமா

ஹஜீனிலிருக்கும் சமூக மருத்துவ மையத்தில் உதவி ஏதும் கிடைக்கவில்லை. முகமதுக்கு தொற்று உறுதியான பிறகும் நிலை இதுதான். 3 லட்ச மக்கள் வாழும் பந்திப்போரே மாவட்டத்தில் இருக்கும் மூன்று சமூக மருத்துவ மையங்களில் ஒன்று அது. “மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அருகே கூட வருவதில்லை,” என்கிறார் நசிர். முகமதுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. உடனே அவரது குடும்பம், பந்திப்போராவில் இருக்கும் ஒரே அரசு மருத்துவமனையான மாவட்ட மருத்துவமனையில் அவரை சேர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள்.

“அவசர ஊர்தியில் செல்லும்போது நான் குரான் வசனங்களை சொல்லிக் கொண்டே வந்தேன். என்னுடைய வாழ்க்கையில் நேர்ந்த மிகவும் கஷ்டமான நீண்ட தூர பயணங்களில் அதுவும் ஒன்று,” என்கிறார் நசீர், மனைவியின் சகோதரர் முகமதுடன் சென்ற 22 கிலோமீட்டர் பயணத்தை குறித்து. 

முகமதின் மனைவி ஷசதா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார். குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறக்கக் கூடிய நிலை. கணவரை பற்றிய கவலையில் அவர்,” மாவட்ட மருத்துவமனையில் அவரை சேர்த்ததும் என்னுடைய காதணிகளை அடுத்த நாள் விற்றேன். அவை ரூ.8000 மதிப்பு கொண்டவை. ஆனால் வெறும் ரூ.4500க்கு விற்றேன். ஏனெனில் குழந்தைகளுக்கு, வீட்டுக்கு எங்களின் மருத்துவ தேவைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டியிருந்தது,” என்கிறார். குடும்பம் நடத்துவது சிரமமாக இருந்ததால் ஷசதாவும் அவரின் நான்கு மகன்களும் முகமதின் முதிய தாய் ராஜா பேகமும் ஃபாத்திமா மற்றும் நசிர் வாழும் வீட்டுக்கு நகர்ந்தனர். 

இடது: ஷசதா பனோவுக்கு சமூக மருத்துவ மையத்தில் பிரசவ கால பரிசோதனை நடத்தப்படுகிறது. வலது மேல்: பத்து வயது அர்சலன் ஷசதா மற்றும் முகமதின் நான்கு மகன்களில் ஒருவர். கீழே: இரண்டு வயது மகன் அசானுடன் ஷசதா. புகைப்படங்கள்: உமர் பரா

மாவட்ட மருத்துவமனையில் முகமதை கவனித்துக் கொள்ளும் வேலையை நசிர் பார்த்துக் கொண்டிருந்தார். “ஆக்சிஜன் இயந்திரத்துடன் அவரை ஒருவர் குளியலறைக்கு அழைத்து செல்ல வேண்டும். உணவு கொடுக்க வேண்டும். மருந்துகள் கொடுக்க வேண்டும். மருத்துவர்களிடம் பேச வேண்டும்,” என்கிறார் நசிரின் 21 வயது மகன் வசீம். பந்திப்போரின் அரசுக் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் வசீமால் கடந்த மாதம் நடந்த இணைய வழி வகுப்புகளில் ஒரு நாள் கூட கலந்து கொள்ள முடியவில்லை. “என்னுடைய அண்ணன் மஷூக் பத்தாம் வகுப்புக்கு பிறகு குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட படிப்பை நிறுத்தினார். ஜம்ஷீதா (சகோதரி) பார்வையில் குறைபாடு உண்டு. எனவே அவரால் 9ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. என்னுடைய தங்கை ஆசிஃபாவும் நானும் மட்டும்தான் படிக்கவே முடிந்தது,” என்கிறார் அவர்.

முகமதின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியபோது ஷேரி கஷ்மீர் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து அவர் அனுப்பப்பட்டார். அவர் வந்தபிறகும் கூட குடும்பத்தின் பொருளாதாரம் உயரவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மே மாதத்தில் 25000 ரூபாய் கடன் வாங்கினார்கள். உறவினர்களும் உதவினர். “கிட்டத்தட்ட 57000 ரூபாயை மாமாவின் மருத்துமனை கட்டணத்துக்கு மட்டுமே நாங்கள் செலவழித்தோம். இன்னும் பலவை கட்ட வேண்டியிருக்கிறது,” என்கிறார் அவர், கடன் சுமையை பற்றிய கவலையுடன்.

கோவிட்டுக்கு பின்னான நோயாளி பராமரிப்புக்கும் நசிரும் அவரின் குடும்பமும் வழி பார்க்க வேண்டும். “கிராமத்தின் வக்ஃபு வாரியம் ஒரு ஆக்சிஜன் இயந்திரத்தை தானமளித்தது. ஏனெனில் அவருக்கு இரவும் பகலும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு இங்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே 500 ரூபாய் தினசரி வாடகையில் ஒரு ஜெனரேட்டரை எடுத்தோம். அதை இயக்குவதற்கான டீசலுக்கு 1200 ரூபாய் செலவழிக்கிறோம்,” என்கிறார் நசிர்.

நசிரின் மூத்த மகனான 25 வயது மஷூக் தினக்கூலி வேலை செய்கிறார். பெரும்பாலும் கட்டுமான வேலைகள் கிடைக்கும். தினக்கூலியாக 200 ரூபாய் பெறுகிறார். 10 பேர் கொண்ட  அக்குடும்பம் இந்த வருமானத்தையும் உறவினர்களின் உதவியையும் வைத்துக் கொண்டு இயங்க முயலுகிறது. இது ஒரு தினசரி சவால் என்கிறார் ஃபாத்திமா.

மூன்று அறைகளில் ஓரறையில் இருந்த தறி, முகமதின் குடும்பம் வந்த பிறகு பத்து பேரும் தங்குவதற்கு ஏதுவாக எடுக்கப்பட்டுவிட்டது. ஃபாத்திமாவும் நசிரும் செய்த கம்பள நெசவு வேலை நின்று போனது. “கடந்த வருடத்தில் கம்பளம் செய்யத் தொடங்கினோம். செய்து முடித்து அதை கொடுக்கும்போதுதான் எங்களுக்கு பணம் கிடைக்கும்,” என்கிறார் அவர். அக்கம்பளத்தால் அவர்களுக்கு 28000 ரூபாய் கிடைக்கும். ஸ்ரீநகரில் இருக்கும் கடைக்காரருடன் அவர்களுக்கு ஒப்பந்தம் இருக்கிறது. ஸ்ரீநகரிலிருந்ந்து காரில் வந்து வடிவங்களையும் நூலையும் கம்பளியையும் சாயத்தையும் கொடுத்துச் செல்வார்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் முழுக்க, வாரத்துக்கு ஆறு நாட்களும் நாளுக்கு எட்டு மணி நேரங்களும் ஃபாத்திமாவும் கணவரும் உழைத்தால்தான் ஐந்துக்கு ஆறு அடி கம்பளத்தை நெய்ய முடியும் என்கிறார் ஃபாத்திமா. “திருமணம் செய்ததும் நசிரிடமிருந்து கற்றுக் கொண்டேன். எனக்கு அப்போது 15 வயது. அவருக்கு 16 வயது,” என நினைவுகூர்கிறார் ஃபாத்திமா. “ஒரு நாளுக்கு ஐந்து ரூபாய் கூலி எனக் கொடுக்கப்பட்ட காலத்திலிருந்து நான் கம்பளம் நெய்து கொண்டிருக்கிறேன். இப்போதும் எங்களுக்கு கிடைக்கும் (நாளுக்கு ரூ.80) பணமும் போதவில்லை,” என்கிறார் நசிர்.

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஃபாத்திமாவும் நசீரும் வசிக்கும் பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஹஜன் டவுனில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பிரதானமானவை கம்பளங்கள் ஆகும். எனினும் கம்பளம் நெய்யும் அவரின் குடும்பம் போன்ற குடும்பங்களுக்கு வாழ்க்கையோட்டக் கூட போதுமான அளவு வருமானம் கிடைப்பதில்லை. செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் பருவம் தொடங்கியதும் விவசாயக் கூலியாக வேலை பார்க்கத் தொடங்கி விடுகிறார் நசிர். தினக்கூலியாக 400 ரூபாய் கிடைக்கும். ஆனால் அந்த வேலையும் 10 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதே அளவு வருமானத்தை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஐந்தாறு நாட்களுக்கு நெல் விதைத்தும் அவர் ஈட்டுகிறார்.

நசிர் மற்றும் ஃபாத்திமா ஆகியோரின் நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல், மருத்துவத்துக்காக வாங்கிய கடன்களால் இன்னும் மோசமாகி இருக்கிறது. அவர்களுக்கு இருந்த ஒரே நிலையான வருமானமான நெசவும் இடமில்லாத காரணத்தால் நின்றுவிட்டது. கிடைத்த உதவிகளுக்கும் கணவரை மருத்துவமனையிலிருந்து திரும்ப கொண்டு வந்ததற்கும் ஷசதா நன்றி பாராட்டுகிறார். முகமது வீட்டுக்கு திரும்பி, தற்போது ஷசதாவுக்கு குழந்தை பிறக்கப் போகும் சூழலில், கடன்கள் இன்னும் அதிகரிக்கவே போகின்றன.

Editor's note

உமர் பரா, இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இதழியல் இளங்கலை படிப்பின் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். சில வருடங்களாக புகைப்படக் கலையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். “PARI வாழ்க்கைகளை சொல்லும் முறை எனக்கு பெரும் கற்றலை வழங்குகிறது. சிறு சிறு விஷயங்களும் முக்கியமானவை என்பதை புரிந்து கொண்டேன். ஒருவரின் பெயரிலிருந்து அவரின் கிராமம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடம்பெற்றிருக்கிறதா என்பது வரை எல்லா விஷயங்களையும் நான் சரி பார்க்கிறேன். ஒரு வாழ்க்கைக் கதைக்கு உண்மைத்தன்மையை சேர்க்க இத்தகைய தரவுகளை கண்டறிவது முக்கியமான பாடம்,” என்கிறார் அவர்.

தமிழில்: ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்