“விட்டமின் சி எலுமிச்சை சர்பத்!”

53 வயதாகும் தத்தாத்ரேய நைல்கர் எலுமிச்சை சாற்றின் நன்மைகளை தனது நோக்கியா போனில் ஒலிக்கும் பாலிவுட் பாடல் சத்தத்திற்கு மேலாக கூறுகிறார். மேற்கு தொடர்ச்சி மலையின் சகாயதிரி மலையிலிருக்கும் சின்ஹாகாட் கோட்டைக்கு செல்லும் வழியில் இருக்கும் தனது கடையில் மக்கள் கூட்டம் கூடி இருக்கும்போது அவர் அந்த பாடல்களை நிறுத்திவிட்டு அந்தப் பகுதியில் சுற்றிலும் கிடைக்கும் மருந்துகள் மற்றும் பல மூலிகைகள் குறித்த தகவல்களை கூறுகிறார்.

புதிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய்கள், மாம்பழங்கள் மற்றும் அன்னாசி பழங்கள் ஆகியவை தத்தாத்ரேய நைல்கரின் கடை முன் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படம்: அதிதி தின்டோர்கர்

ஒரு முறை (சின்ஹாகாட்) கோட்டையில் மாணவர்கள் முகாம் செய்ய வந்தனர். அவர்களிடம் உணவை கிளருவதற்கு கரண்டி எதுவுமில்லை அதனால் அவர்கள் மரக்கிளையை பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கின்றனர். மறுநாள் அவர்கள் அனைவரது பல்லும் ஆட்டம் கண்டிருக்கிறது. அவர்கள் தத் படி (நச்சினார்) மரக்கிளையை பயன்படுத்தியிருக்கின்றனர் அதன் பொருளே ‘பல்லை விழச்செய்வது!’ என்பதுதான்.”

தத்தாத்ரேயா இப்போது நம் கவனத்தை ஈர்த்தார் மேலும் அவர் அங்கு கூடியிருப்பவர்களிடம் எலுமிச்சைச்சாறு, துண்டுபோடப்பட்ட வெள்ளரிக்காய், மாங்காய் மற்றும் மிட்டாய்களை நீட்டுகிறார்.

“நான் இங்கு ஆடாதோடயை நட்டிருக்கிறேன். உங்களுக்கு இருமல் இருக்கும் போது அதன் இலைகளிலிருந்து நீங்கள் கசாயம் செய்து குடிக்கலாம்,” என்று தத்தாத்ரேயா தனது கடைக்கு அருகில் உள்ள ஆடாதோடை மரத்தை காண்பித்து கூறுகிறார்.

நைல்கர் அவரது கடை ஆரம்பித்ததிலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக சின்ஹாகாட் மலையை ஏறி வருகிறார். இவரிடம் வனத்துறையினருக்கு கூட நல்ல அறிவுரைகள் உள்ளது: “காட்டில் காட்டு மரங்களை வளர்க்க வேண்டும். அவர்கள் தோட்ட மரங்களான மா, எலுமிச்சை, கொய்யா மற்றும் சீதாப்பழம் ஆகியவற்றை இங்கு வளர்க்க முயற்சிக்கின்றனர். இங்கிருக்கும் மூடு பனி மற்றும் குளிர் காரணமாக அவை இங்கு நன்றாக வளராது. அவர்கள் தங்களது திட்டமிடுதலில் தவறு செய்கின்றனர்.”

அவர் தொலைவில் உள்ள ஒரு உயரமான மரத்தை காட்டி இது பூர்வீக மரம் அல்ல இது வெளிநாட்டு மரம். வனத்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு இது இங்கு நடப்பட்டது,” என்று கூறுகிறார். அவர் அந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்த பிரகாசமான ஆரஞ்சு பூக்களை சுட்டிக்காட்டுகிறார். “இவை உண்ணிச் செடியின் மலர்கள் இதன் நடுவில் இருந்து நீங்கள் தேனை உறிஞ்சலாம். இதன் இலைகள் வயிற்றுப் போக்கையும் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.”

அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே நான் அவர் கடையில் வெளியில் வைத்திருப்பதைப் போன்ற ஒரு புளிப்பு மாங்காயை எடுத்து கடித்துவிட்டேன். அவர் இந்த மலையில் காணப்படும் மருத்துவத் தாவரங்களின் பலன்களை பற்றி தொடர்ந்து கூறுகிறார் – நெல்லிமரம், கடுக்காய் மரம், சீந்தில் கொடி “ஆகியவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயன் கொண்ட மூலிகைகள்.” நைல்கர் அவர் தானே நட்டுவைத்த தனது கடையை சுற்றியுள்ள மரம், செடிகளை காண்பித்து: நாவல் மரம், களாகாய் செடி, லகுகர்ணி கொடி, நெல்லி மரம், இங்கு இயற்கையாக கிடைக்கும் சின்ன மற்றும் காட்டு கடுகு ஆகியவை என்கிறார்.

அவருக்கு எப்படி மரங்கள் மற்றும் செடிகள் பற்றி இவ்வளவு அதிகம் தெரிந்திருக்கிறது? “நான் இதை எனது மூதாதையர்கள் இடமிருந்து கற்றுக் கொண்டேன் மேலும் அதை நான் இங்கு நின்று கேட்பவர்களிடம் கூறுகிறேன்,” என்று சின்ஹாகாட் மலையில் ஐந்து தலைமுறையாக வசித்து வரும் நபராகக் கூறுகிறார். தத்தாத்ரேயாவை வழக்கமாக மலையேறுபவர்கள் தத்தா என்று குறிப்பிடுகிறார்கள், அவர்கள் அவரைக் கடந்து செல்லும்போது ‘ராம் ராம்’ என்று வாழ்த்துகின்றனர்.

புதிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய்கள், மாம்பழங்கள் மற்றும் அன்னாசி பழங்கள் ஆகியவை தத்தாத்ரேய நைல்கரின் கடை முன் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படம்: அதிதி தின்டோர்கர்

புனேவில் இருந்து சின்ஹாகாட் கோட்டைக்குச் செல்லும் பார்வையாளர்கள் இந்த இரண்டு வழித்தடங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் – ஆறு கிலோ மீட்டர் பயணம் அல்லது சகாயதிரி மலை வழியாக இரண்டு மணி நேர நடை. இரண்டு மணி நேர நடையை தேர்வு செய்பவர்கள் நைல்கரை காணலாம். மலையேற்றம் செய்பவர்கள் புனே மாவட்டத்தின் ஹவேலி தாலுகாவிலுள்ள கடல்மட்டதிலிருந்து சுமார் 1,440 மீட்டர் உயரத்திலிருக்கும் சின்ஹாகாட் மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில், பாதியில் உடனடி புத்துணர்வுக்காக இவரது கடையில் நிற்கின்றனர். இப்பகுதி மரங்கள், செடிகள் மற்றும் ஆறுகளால் பசுமையாக உள்ளது.

ஏழாம் வகுப்பிற்கு பிறகு நைல்கர் பள்ளியை விட்டு நின்றுவிட்டார், ஆனால் அவர் நிறைய நடைமுறை அறிவை பெற்றுள்ளதாகவும், சின்ஹாகாட்டின் இயற்கை அழகை பராமரிக்க தன்னால் முடிந்ததை செய்வதாகவும் கூறுகிறார். குர்குரே மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு அவரது இளைய தலைமுறை வாடிக்கையாளர்களிடம் அதிகம் தேவை இருந்தபோதும், “மக்கள் அதை சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக்கை தூர எறிந்து இந்த மலையை குப்பை ஆகிவிடுவார்கள் என்று அதை விற்பதற்கு மறுக்கிறார். மற்ற விற்பன்னர்களும் நானும் சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவற்றை விற்பதில்லை ஏனென்றால் அது ஒரு குழுவிடமிருந்து மற்றொருவருக்கு சென்று இந்தக் கோட்டையின் இயற்கை மற்றும் கலாச்சாரத்தை அது சீரழித்துவிடும். அதற்கு பதிலாக மக்கள் ஒரு அமைதியான நாளை இங்கு அனுபவிக்கலாம்,” என்று அவர் கூறுகிறார். அவர் தாகம் தீர்க்க கூடிய ஒரு சில வகை பொருட்களை குறைந்த அளவில் நிச்சயமாக விற்கும் என்பவற்றை மட்டும் விற்கிறார். அவரது கடையில் வெள்ளரிக்காய், நெல்லிக்காய், மாங்காய் (மசாலாவுடன்) மற்றும் அண்ணாச்சி பழம் (புதியதாக வெட்டப்பட்டது) மற்றும் முருகல் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை விற்பனை செய்கிறார். அவர் சில மிட்டாய்களையும் வைத்திருக்கிறார் (மேங்கோ பைட் மற்றும் லாலிபாப் போன்றவை).

இரண்டு மணி நேர நடைபயணம் உங்களை நைல்கரின் புத்துணர்ச்சி கடைக்கு கொண்டு செல்லும். புகைப்படம்: அதிதி தின்டோர்கர்

நைல்கருக்கு இரண்டு வீடுகள் உள்ளன – ஒன்று அவரது சகோதரிக்கு சொந்தமான கேரா சின்ஹாகாட் கிராமத்தில் மலையின் அடிவாரத்தில் இருப்பது மற்றும் அவருக்குச் சொந்தமான மலையில் இருக்கும் வீடு. கேரா சின்ஹாகாட் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 655 மக்களை கொண்ட ஒரு சிறிய கிராமம் ஆகும். பருவம் இல்லாத நேரத்தில் நைல்கர் தனது குடும்பத்துடன் – மனைவி ருக்மினி மற்றும் மூன்று குழந்தைகளான 22 வயதாகும் தீபாலி, 18 வயதாகும் லோகேஷ் மற்றும் 16 வயதாகும் பண்ட்டி ஆகியோசிருடன் வசிக்கிறார். பருவகாலத்தில் கிராமத்தில் வாரம் ஒருமுறை வந்துவிட்டு ஆனால் மீண்டும் மலையில் இருக்கும் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். மலையில் நைல்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். மலையில் அவர்களது வீடு கடைக்கு பின்னால் உள்ளது மேலும் அவர்கள் ஒவ்வொரு வார இறுதியும் இங்கு தங்குவார்கள் ஏனெனில் அவர்களின் கடையில் நிற்கும் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால். “நாங்கள் மலையில் இருப்பதைத்தான் விரும்புகிறோம்,” என்று தீபாலி கூறுகிறார். “எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இயற்கையை நேசிக்கிறோம்.”

நைல்கர் மலைகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். அவர் தனது கால்நடைகளுடன் இங்கு சுற்றித் திரிந்திருக்கிறார். “எங்களிடம் 10 முதல் 15 மாடுகள் மற்றும் எருமைகளை இருந்தது மற்றும் எங்களது சூளையில் கோயா செய்து வாழையிலையில் வைத்து அதை நாங்கள் கிராமத்தில் விற்று வந்தோம்,” என்று அவர் கூறினார். எட்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் கால்நடைகளை விற்றுவிட்டார்கள், “ஏனென்றால் கோடையில் அவற்றின் மேய்சலுக்கு புல்லும் தண்ணீரும் இல்லாமல் போனது. சில நேரங்களில் மலைப்பகுதியில் நடமாடும் சிறுத்தைகளிடமிருந்து கன்று குட்டிகளை பாதுகாக்க வேண்டும். அது ஒரு பெரிய தலைவலி,” என்று அவர் விளக்குகிறார்.

நைல்கர் இளமையாக இருந்தபோது புனேயில் தினக்கூலியாக வேலை செய்திருக்கிறார். “எனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. எனக்கும் எனது ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே சண்டை ஏற்படும். வேலைக்கு உத்தரவாதம் இல்லாததால் அவர்கள் என்னை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதனால் நான் சொந்தமாக தொழில் தொடங்குவது தான் நல்லது என்று நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.

மலையில் அவர்களது வீடு கடைக்கு பின்னால் உள்ளது. புகைப்படம்: அதிதி தின்டோர்கர்

இப்போது அவர் கடைக்கு மாதாந்திர பொருட்களை வாங்கி வருவதற்கு மட்டுமே புனே செல்கிறார். மார்க்கெட் யார்ட் பகுதிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் அவரது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் கடந்து செல்வதற்கு அவருக்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஊரடங்கினால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் மலையேறுபவர்கள் நிறுத்தப்பட்டதற்கு முன்பு வரை அவரது கடையின் மூலம் மாதமொன்றுக்கு 8,000 ரூபாய் சம்பாதித்து வந்தார். “ஊரடங்கு காலத்தில் நான் கீழே கேரா சின்ஹாகாட்டிற்குச் சென்று வயலில் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று அவர் கூறுகிறார்.

இப்போது அவர் கடையில் 6:30 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் பணியாற்றுகிறார். எல்லாவற்றையும் திறந்ததால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேலும் அவர் தனக்கு மானசீகமான மலையில் இருக்கிறார். “நகரத்தில் (புனேயில்) எனக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. சின்ஹாகாட் திரும்பும் வரை நான் அமைதியற்று இருந்தேன்,” என்று நைல்கர் கூறுகிறார்.

மலைக்கோட்டை செல்லும் பாதை முழுவதும் இவர்களது குடும்பத்தைப் போல பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடை நடத்தி வருகின்றனர். “எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை,” என்று நைல்கர் கூறுகிறார். “உண்மையில், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம். நாங்கள் மலையேற்ற பாதையில் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருப்பதால் நாங்கள் ஒரு தொடர்பு சங்கிலியை உருவாக்கியிருக்கிறோம். உதாரணத்திற்கு யாருக்காவது காயம் ஏற்பட்டால் உதவிக்கான செய்தி எனக்கு மேலிருந்து வரும். என்னிடம் துணி ஸ்ட்ரெச்சர் மற்றும் முதலுதவி பெட்டி இருக்கிறது.”

“மக்கள் இமயமலைக்கு மலையேற்றம் சென்றுவிட்டு வந்து, எல்லாவற்றையும் என்னிடம் கூறுவார்கள். அதனால் நான் இங்கு அமர்ந்து கொண்டே முழு உலகத்தையும் பார்க்கமுடியும்,” என்று மலையின் மூடுபனி காற்றினூடே சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

Editor's note

அதிதி திண்டோர்கர் அசோகா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் படைப்பெழுத்து பயிலும் மாணவி. அவர் தனது சொந்த நகரான புனேவை சுற்றியுள்ள இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை விரும்புகிறார். "என் நகரத்தைச் சுற்றியுள்ள பசுமையை பற்றி நான் எப்போதும் பெருமை கொள்கிறேன் ஆனால் அதைப் பற்றி அங்கு வாழும் மக்களுடன் பேசுவதற்கு நான் ஒருபோதும் நின்றதில்லை. நைல்கருடன் பேசியது எனக்கு காட்டைப் பற்றிய ஒரு புதிய மரியாதையை உருவாக்கியுள்ளது. நான் அவருடைய அறிவு மற்றும் இயற்கையின் மீதான அன்பு குறித்து எப்போதும் பிரமிப்புடன் இருப்பேன்" என்று கூறுகிறார்.

தமிழில்: சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.