
“எங்களின் பல ஆண்டுகள் உழைப்பும், நினைவுகளும் எங்கள் முன்னால் உடைபட்டு கிடக்கிறது“ என்று மகேஷ் ராஜ்வாதா கூறுகிறார்.
அவர் கோரியில் உள்ள தனது வீடு குறித்து கூறுகிறார். அது கிழக்கு டெல்லியில் இருந்து 5 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் ஹரியானா தலைநகரின் எல்லையில் உள்ள பரிதாபாத் மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்டவர்களின் குடியிருப்பு பகுதி.
மகேஷின் வீடு மட்டுமல்ல, கோரியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் பரிதாபாத் நகராட்சி கொண்டு வந்துள்ள புல்டோசர்கள் மூலம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இடித்துத் தள்ளப்படுகின்றன. 2021ம் ஆண்டு ஜுன் 7ம் தேதி, நகராட்சி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள ஆணையில் கோரியில் உள்ள வீடுகளை இடித்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவை சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை ஆரவல்லி காடுகளின் ‘சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகள்’ என்று அழைக்கப்படுகிறது. நீதிமன்றம் அவர்களுக்கு ஆறு வாரம் காலக்கெடு விதித்தது. ஆனால், அக்கெடு அங்கிருந்து அவர்கள் செல்வதற்கு போதிய நேரமாக இல்லை.
காணொளி எடுத்தவர் யாஷ் பிஸ்ட்

44 வயது, தினக்கூலியான மகேஷ் கூறுகையில், “நான் நிலத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சமும் செலவு செய்துள்ளேன். எனக்கு சொந்தமானது எனது வீடு மட்டும்தான். அதுவும் இந்த புல்டோசர்களால் இடிக்கப்படுகிறது” இந்த நிலத்தை வாங்கியபோதும், அதில் வீடு கட்டியபோதும் எங்களுக்கு நிலம் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படுவது குறித்து யாரும் எச்சரிக்கவில்லை. இங்குள்ள நில மோசடி கும்பலுக்கு வனத்துறையுடன் தொடர்பு உள்ளது என அவர் நம்புகிறார் (இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி இதை உறுதி செய்கிறது)..“நான் வீடு கட்ட துவங்கியபோதுகூட யாரும் ஒன்றும் கூறவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மகேஷின் அண்ணன் ரமேசும் (40), அண்மையில் அவரது வீடு இடிக்கப்பட்டதை பார்த்தார். இவ்வாறு அவர்கள் வெளியேற்றியது குறிப்பாக மழைக்காலங்களில் அவர்களை கடுமையாக பாதிக்கும் என்று அவர் கூறுகிறார். “வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து அழிந்துவிட்டது. அவர்களுக்கு எந்த நிழலும் அப்போது கிடைக்கவில்லை“ என்று அவர் கூறுகிறார். கடந்த சில நாட்கள் குறித்து அவர் கூறுகையில், “மின்சாரம், தண்ணீர் ஆகியவை அதிகாரிகளால் துண்டிக்கப்பட்டுவிட்டது. எங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கூட எங்கள் வீட்டில் உணவுப்பொருட்கள் இல்லை. எங்கள் செல்போன்களுக்கு கூட எங்களால் சார்ஜ் போட முடியவில்லை. “ என்று அவர் மேலும் கூறுகிறார். ரமேஷ் எப்போதும் மகேசுக்கு அவரது கூலித்தொழிலில் உதவி பணம் ஈட்டுவார்.

வீடுகள் இடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்னர், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி, வெளியேற்றப்பட்டதில் தகுதியுள்ளவர்கள் மறுகுடியமர்த்தம் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பரிதாபாத்துக்கும், டெல்லிக்கும் இடையே கோரி இருப்பதால், சில குடியிருப்புவாசிகள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை டெல்லியில் பதிந்துள்ளனர். இதனால் அவர்கள் ஹரியானா அரசு வழங்கும் மறுகுடியமர்த்தத்திற்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.
கோரி தொழிலாளர் குழுவின் உறுப்பினர் கிஷான் சிங் (கோரியில் தொழிலாளர்களுக்கு சங்கம் உள்ளது) விளக்குகையில், “இங்குள்ள நிலங்கள் மலிவான விலையில் உள்ளதால், மக்கள் அலுவல் ரீதியாக செல்லும் ரசீது இன்றி நிலத்தை வாங்கினார்கள். இங்குள்ள மக்களுக்கு இந்த முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை, பொது விநியோக அட்டை ஆகியவை உள்ளன,“ என்கிறார்.
இங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்தது அசோக் லாலுக்கு போதவில்லை. அவரது வீடும் கோரியில் உள்ளது. அது மட்டுமே அவருக்கு இருந்த ஒரே ஒரு சொத்து. நிலத்திற்கு அவர் பணம் கொடுத்தபோது அதிகாரிகள் ஆவணங்களை பார்த்ததை அவர் நினைவுகூறுகிறார். அவருக்கு தற்போது 28 வயதாகிறது. இந்த குடியிருப்பில் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக வசிக்கிறார். தினக்கூலி கட்டுமான தொழிலாளியான அவர் தனது வீட்டை தானே கட்டினார். அடித்தளம் அமைத்து, மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் சம்பாதித்தும், தனது சேமிப்பில் இருந்தும் அவர் இந்த வீட்டை கட்டினார். “நான் எனது முதலாளியிடம் இருந்து ரூ.3 லட்சம் கடனாகப்பெற்றேன். அதில் எனது வீடு உள்ள இந்த நிலத்தை வாங்கினேன். எனது வாழ்க்கையின் மொத்த சேமிப்பும் இந்த வீடு ஒன்று மட்டும்தான்“ என்று அவர் கூறுகிறார்.
அவரது சகோதரர்கள் சமர் லால் மற்றும் ராமன் லால் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமர் (30) அசோக்குடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ராமன் (33), பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். அவரும் அவரது சகோதரரைப் போல் ஒரு கட்டுமான தொழிலாளி. ராமனும், அவரது மனைவி தாராவும் அருகில் உள்ள நிலத்தை அவர்களுக்கு திருமணம் நடந்த 2015ம் ஆண்டில் வாங்கினர். இந்த சகோதரர்கள் தனியார் ஒப்பந்ததாரருக்காக வேலை செய்வர். சிறிய கட்டுமான வேலைகளுக்காக அவர் இவர்களை அழைத்துச் செல்வார். அவர்களுக்கு வேலை கிடைக்கும்போது செய்வார்கள். தாரா (இந்த பெயரை மட்டும்தான் அவர் பயன்படுத்துகிறார்), வீட்டு வேலை செய்தார். அவரும் தற்போது இவர்களுடன் கட்டுமானப் பணிகளுக்கு செல்கிறார். ”அவர்கள் எங்களுக்கு தண்ணீரை வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். எனவே நாங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழல் ஏற்பட்டது. கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வெளியே செல்லக்கூடாது என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும்தானா… எங்களுக்கு இல்லையா?“ என்று அவர் கேட்கிறார்.

“நாங்கள் எங்களின் அடிப்படை உரிமைகளை கேட்டு போராடினால், எங்கள் வாயை மூடுவதற்காக போலீசார் எங்களை தாக்கி எங்கள் மீது போலி வழக்குகளை போடுவார்கள்“ என்று ராமன் கூறுகிறார். அசோக் மற்றும் ராமன் இருவரின் குடும்பத்தினரும் ஒரு வாரம் பாதையில் வசித்தனர். பின்னர் அருகில் ஒரு தற்காலிக குடிசையை அமைத்துக்கொண்டனர்.
சமருக்கு இந்த ஆண்டு திருமணம் நடப்பதாக இருந்தது. “எங்களுக்கு எதிர்காலம் என்பதே இப்போது கிடையாது. எங்கள் முழு வாழ்வும் அழிக்கப்பட்டது. தற்போது நாங்கள் ஒன்றுமின்றி விடப்பட்டுள்ளோம்“ என்று அவர் கூறுகிறார். வீட்டில் உள்ள இந்த கடினமான சூழ்நிலையால் அவர்களால் சரியாக வேலைக்கும் செல்ல முடியவில்லை. “எங்களின் முதலாளி எங்களை வேலையை விட்டு தூக்கிவிடவில்லை. அவர் எங்களை அடுத்த வேலையில் சேர்த்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அது எப்போது நடக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை“ என்று ராமன் கூறுகிறார்.
Editor's note
பிரியாள் சேத்தி, சோனாபேட்டையில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் படிப்பு படிக்கும் இளங்கலை மாணவி ஆவார். கோரிக்கு அருகில் வசிக்கிறார். கோரியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டபோது, அங்கு என்ன நடக்கிறது என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார்.
“எனக்கு அங்குள்ளவர்களிடம் பேசுவது கடினமாக இருந்தது. அங்கு இருந்த போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்தது. புகைப்படங்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. இக்கட்டுரை எழுதும் பணி, மக்களின் குரல் சக்தி வாய்ந்தது என்பதை தெரிந்தது. நான் நம்மைச்சுற்றி நடப்பது குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், எனக்கு மிக அருகில் உள்ள இடங்களில் நடப்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். நல்ல செய்தியை எழுதுவது ஒரு ஆராய்ச்சிக்கு சமமானது என்பதையும் நல்ல மற்றும் அவசியமான கேள்விகளை கேட்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன்“ என்று அவர் கூறுகிறார்.
யாஷ் பிஸ்ட், நொய்டா பென்னட் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் இளங்கலை கற்கும் மாணவர். பாரி கல்வி 2021ன் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த செய்தியின் வீடியோ பதிவை அவர் செய்துள்ளார். “நாம் செய்திகளை கொடுக்கும்போது நமக்கு சில பொறுப்புகள் உள்ளது. நாம் அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். உண்மை என்ன என்பதை நாம் காண்பிப்பது முக்கியம். நாம் செய்யும் வேலையை மிகக்சிறப்பாக செய்ய வேண்டும்“ என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.
பிரியதர்சினி. R. மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.