இந்த செய்திக் கட்டுரை முதலில் வங்காள மொழியில் எழுதப்பட்டது. பாரியின் கல்விப் பிரிவு மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் எழுதுகிறார்கள்.

எனது தந்தை சங்கர் மொண்டல் மற்றும் தாத்தா சந்தோஷ் மொண்டல் இருவரும் மீன் வளர்ப்பவர்கள். அவர்கள் பல்வேறு வகையான மீன்களை எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மூன்று குளங்களில் வளர்க்கிறார்கள்.

நான் பேலேகாலியில் வசிக்கிறேன். இது சோனாப்பூர் வட்டத்தில் உள்ள கேதாஹாவுக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு. எனது தாத்தா சந்தோஷ் மொண்டல். நான் அவரை தாது என்று அழைப்பேன். அவரது குழந்தைப் பிராயத்தில் வாழ்வாதாரத்திற்காக அரிசி விற்பனை செய்து வந்தார். முப்பது வயதுகளில், அவரும், எனது பாட்டி டெபோலா மொண்டலும், (அவருக்கு தற்போது வயது 66), பேலகாலியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள திவாடா குடியிருப்பில் இருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து இங்கு இடம்பெயர்ந்து வந்தார்கள். அவர் இங்கு நிலம் வாங்கினார். நாங்கள் வசிக்கும் சிறிய 7க்கு 10 அடி அளவுடைய மண் வீட்டை கட்டினார். நாங்கள் பவுந்திரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். (மாநிலத்தில் பட்டியல் சாதியாக பட்டியலிடப்பட்டிருக்கும் சாதி).

பேலக்காலியில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் இருந்த, மனிதர்கள் வெட்டிய மூன்று குளங்களை தாத்தா வாங்கினார். மீன் வளர்ப்பு தொழிலை துவங்கினார். எனது தந்தையும் அவருடன் சேர்ந்து கொண்டார். தற்போது எனது தாய் பாய்சக்தி மொண்டலுடன் சேர்ந்து கவனித்து வருகிறார்.

கொல்கத்தாவின் கிழக்குப்பகுதியில், சுந்தரவனத்துக்கு அருகில் ஈரநிலம் உள்ளது. 12,500 ஹெக்டேர் நிலப்பரப்பு தண்ணீராலும், கழிவுநீர் குளங்களாலும் சூழப்பட்டுள்ளது. அங்கு மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்படுகின்றன. இது தென் கொல்கத்தா ஈரநிலப்பரப்பு என்று குறிப்பிடப்படுகிறது. தெற்கு மற்றும் வடக்கு 24 பார்கனாஸ் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 234 கழிவுநீர் மீன்வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. மீன் வளர்ப்பவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கழிவுநீர் மீன்வளர்ப்பு பண்ணைகளில் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவை நீர்ப்பறவைகள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு வாழ்விடமாகவும் உள்ளன.

கழிவுநீர் கால்வாய்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை குறைந்தளவிலான தண்ணீர், மீன் குளங்களுக்கு திறந்து விடப்படுகிறது. அந்த கழிவுநீரில் உள்ள சத்துகள், மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. இனப்பெருக்கம் துவங்குவதற்கு முன் மீனவர்கள் குளத்து நீரை எலுமிச்சை பழம் வைத்து சுத்தம் செய்கின்றனர்.

எனது தந்தை ஷங்கர் மொண்டல், மீன் வளர்ப்பு மற்றும் மீனபிடி தொழில் செய்கிறார். அவர் பிடிக்கும் மீன்களை அருகில் உள்ள பந்தாலா சந்தையில் விற்கிறார். அவர் அதிகளவிலான மீன்களை பிடிக்க விரும்பும்போது பெரிய வலையை பயன்படுத்துகிறார். அருகிலுள்ள கிராமங்களில் இருந்து தினக்கூலித் தொழிலாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்கிறார்.

எனது தந்தையின் நாள், காலை 4 மணிக்கே துவங்கிவிடும். எங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள கேதாகா சாலையில் அவர் நடைபயிற்சி செய்வார். அதை முடித்து வீடு திரும்பியவுடன் எனது தாய் தயாரித்த தேநீரை பருகுவார். பின்னர் அவர் குளங்களில் உள்ள மீன்களை பார்க்கச் செல்வார்.

32 வயதான எனது தாய் வீட்டு வேலைகளையும், சமையல் வேலைகளையும் பார்த்துக்கொள்கிறார். உடன் எனது தாத்தாவையும், பாட்டியையும் பார்த்துக்கொள்கிறார். அவர்களுக்கு தற்போது முறையே 72 மற்றும் 66 வயது ஆகிறது. பகல் பொழுதில் அவர் சிறிது நேரம் ஒதுக்கி, மீன்களுக்கு உணவு தயாரிக்கிறார். கோதுமை தானியங்களை ஊற வைத்து, அவற்றை நொதிக்கச்செய்யவிடுகிறார். மீன்பிடிப் பொருட்கள் மற்றும் குளத்தின் கரைகளை சுத்தம் செய்கிறார்.

மதியவேளையில் மீனுக்கு உணவளித்துக்கொண்டிருக்கும் எனது தந்தையை நான் சென்று பார்ப்பேன். ஒரு பெரிய அலுமினியப் பானையில் அவர் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக பிடித்த மீன்களை போட்டு வைப்பார். அது பாதுகாப்பாக அவரது சைக்கிள் கேரியரில் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் பன்டாலா – சோனாப்பூர் நெடுஞ்சாலையில் இருக்கும் சந்தைக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளை ஓட்டிச்செல்வார். சில நாட்களில் அவர் வீட்டிற்கும் சில மீன்களை கொண்டு வருவார். எனது தாய் அதில் சுவையான திலேப்பியா மீன் குழம்பு, முரல் மீன் காரக்குழம்பு, கடுகு மீன் குழம்பு ஆகியவை செய்வார்.

மேலும் எனது குடும்பத்தினர் 15க்கு 20 அடி இடத்தில் ஒரு சிறிய காய்கறி தோட்டத்தையும் பராமரித்து வருகின்றனர். அது எங்கள் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ளது. அம்மாவுக்கு தாவரங்கள் குறித்து நன்றாக தெரியும். எங்கள் தோட்டத்தில் வாழை, மாமரம், லிச்சி, பலா, எலுமிச்சை, வேம்பு, தென்னை, பப்பாளி போன்ற மரங்களும், பல்வேறு வகை காய்கறிகளும், துளசியும் வளர்த்து வருகிறோம். தக்காளி மற்றும் மிளகாய் செடிகளும் வளர்த்து வருகிறோம். அண்மையில் எனது தந்தை எங்கள் தோட்டத்தில் வளர்ந்து வரும் வெள்ளரி கொடிக்கு மூங்கிலை பிளந்து பந்தல் அமைத்தார்.

நாங்கள் செம்பருத்தி மற்றும் அந்திமந்தாரை பூச்செடிகளும் வளர்க்கிறோம். எனது வீட்டைச் சுற்றி கொக்கு, நீர்காகம் போன்ற பறவைகளையும் காண முடியும். கொக்குகள் எங்கள் குளத்திற்கு மீன் தேடி வரும். காகங்கள், குயில்கள், குருவிகள், கிளிகள் மற்றும் பல பறவைகளை இங்கே காண முடியும்.

11 மணியளவில் எனது தந்தை மீன்வளர்க்கும் குளத்திற்கு வந்து பொறி அல்லது ஊற வைத்த கோதுமை போடுவார். பின்னர் குளத்தில் மீன்கொத்தி அல்லது கொக்கு போன்ற பறவைகள் எங்கள் மீன்களை வேட்டையாட வரவில்லை என்பதை உறுதி செய்ய மீண்டும் செல்வதற்கு முன், அந்த குளத்திலே குளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்.

அந்தப் பறவைகள் மீனைக் கொத்திச் செல்வதை தடுப்பதற்கு எனது தந்தை ஒரு கருவியை செய்துள்ளார். ஒரு மரத்துண்டில் தகர டின்னை கட்டி வைத்துள்ளார். அதை குளத்தின் இடையே இரு கரைகளிலும் கட்டி வைக்கப்பட்டுள்ள கயிற்றில் கட்டி வைத்துள்ளார். கயிறை இழுக்கும்போது, தகர டின் பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். அந்த ஒலியை கேட்டு பறவைகள் பறந்தோடிவிடும்.

அருகில் உள்ள குளத்திற்கு அவர் நள்ளிரவு நேரத்தில் கூட செல்வார். “ஏனெனில் மீன்களை திருட வருபவர்கள் அப்போது தான் வருவார்கள். எனது மீன்கள் திருடுபோனால், அது எனக்கு மிகப்பெரிய இழப்பு. எனவே, நாங்கள் அவற்றை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்“ என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆண்டு கடும் மழை பெய்தபோது, சில மீன்கள் எங்கள் குளத்தில் இருந்து வாய்க்காலுக்கு சென்றுவிட்டன. பிடித்து வைத்திருந்த மற்ற மீன்கள் அழுகிவிட்டன. அது மிகக்கடுமையான ஆண்டாக இருந்தது.

சங்கர் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும், சோனார்பூர் வட்டத்தில் உள்ள கேதாகா குடியிருப்புக்கு அருகில் உள்ள பேலகாலியில் அவர்களுக்கு சொந்தமான மூன்று குளங்களில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து வருகின்றனர். புகைப்படம் எடுத்தவர் ருப்சா மொண்டல்
சங்கர் பாரம்பரிய வலையை குளத்தில் வீசுகிறார். புகைப்படம் எடுத்தவர் ருப்சா மொண்டல்
சங்கர் அன்று பிடித்த மீன்களை பார்வையிடுகிறார். புகைப்படம் எடுத்தவர் ருப்சா மொண்டல்
உள்ளூரில் கிடைக்கும் லிலந்திகா என்ற மீன் அன்று பிடிக்கப்பட்டிருந்தது. புகைப்படம் எடுத்தவர் ருப்சா மொண்டல்
பேலக்காலியில் சங்கர் மற்றும் அவரது தந்தை சந்தோஷ் ஆகியோர் மீன் வளர்க்கும் மூன்று குளங்களுள் ஒன்று. புகைப்படம் எடுத்தவர் ருப்சா மொண்டல்
மற்ற மீனவர்கள் குளத்திலிருந்து வலையை அகற்றுகின்றனர். புகைப்படம் எடுத்தவர் ருப்சா மொண்டல்

The Disappearing Dialogues Collective என்பது சமூகங்களுக்குள்ளும், சமூகங்களுடனும் பணி செய்கிறது. இடைவெளிகளை நிரப்பும் பாலமாக கலையையும், கலாச்சாரத்தையும் பயன்படுத்துகிறது. உரையாடல்களை துவக்கி, புதியவற்றை எடுத்துரைக்கிறது. இதன் நோக்கம் இப்போதுள்ள பராம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க உதவுவதே ஆகும்.

இக்கட்டுரை, கலைகள் காப்பகம் மற்றும் அருங்காட்சியக திட்ட இந்திய அறக்கட்டளையும், பாரியும் இணைந்து முன்னெடுத்த ஈரநிலங்களின் கதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை. புதுடெல்லி மேக்ஸ் முல்லர் பவனில் உள்ள கோத்தே மையத்தின் உதவியால் இது சாத்தியமானது.

Editor's note

ருப்சா மொண்டல், மேற்கு வங்கத்தில் உள்ள கேதாகா உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர். அவருக்கு அவரது தந்தையின் வாழ்க்கை முறையை புகைப்படங்களுடன் ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் அவர் ஸ்மார்ட் போனில் எடுத்த புகைப்படங்கள். “எனது சுற்றுச்சூழல் குறித்த நான் மகிழ்ந்திருந்த விஷயங்களை வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேலும் எனது தந்தையின் வேலையை அங்கீகரிப்பதற்கான வழியாகவும் இருந்தது. எனக்கு புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உதவியது“ என்று ருப்சா கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

பிரியதர்சினி. R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.